Friday, August 17, 2007

ICICI அராஜகங்கள்

யாதய்யா ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆந்திர பிரதேச அரசின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையின் (`டி’ பிரிவு) எலெக்ட்ரீஷியன். ரூபாய் 15,000 அற்பக் கடனுக்காக உயிரைப் பறிகொடுத்து விட்டார். இல்லையில்லை, அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக ஐசிஐசிஐ வங்கியின் `வசூல் ராஜாக்கள்’ அவர் உயிரை பலி வாங்கி விட்டனர்.


இந்த மே மாதம் 22ம் தேதியன்று எலைட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆசாமிகள் யாதய்யாவைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அவர் வேலைக்குப் போய்விட்டதை அறிந்து, அவரது புகைப்படத்தை வாங்கிக் கொண்டு நண்பகல் நேரத்தில் அலுவலகத்தில் அவரைக் கண்டுபிடித்துத் தமது அலுவலகத்திற்கு ‘தூக்கி’ வந்து விட்டனர்.


15,000 ரூபாய் கடனுக்காகத் தாம் மிரட்டப்படுவதாக மனைவி சுனந்தாவை தொலைபேசியில் அழைத்துச் சொல்லி, எப்படியாவது ‘பணத்தைத் திரட்டு’ என்று புலம்பி இருக்கிறார் யாதய்யா. அவர் அதற்காக அலைந்து கொண்டிருக்கும்போது 2 மணி போல மைத்ரி மருத்துவமனையில் இருந்து ‘யாதய்யா இறந்துவிட்ட’ செய்தி வருகிறது சுனந்தாவிற்கு. அந்த பேதைப் பெண் என்ன துடிதுடித்திருப்பாள் பாருங்கள்.


ஐசிஐசிஐ ஏஜெண்டுகள் தமது கணவனைக் கொன்று விட்டனர் என்று அவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், பஞ்சகட்டா காவல் நிலைய ஆய்வாளர் ஜி. நரசய்யா, எலைட் நிறுவனத்தின் பங்குதாரர் ராஜாவையும் அவனுடன் சென்ற இன்னும் 3 பேரையும் கைது செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், குற்றத்தை ஐசிஐசிஐ வங்கி மூடி மறைக்கப் பார்க்கிறது. யாதய்யா பணத்தைச் செலுத்த எலைட் அலுவலகம் வந்ததாகவும், திடீரென்று ‘வலிப்பு’ வந்து கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டுவிட்டதாகவும், மருத்துவமனைக்கு விரைவாக அவரை அழைத்துச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஜோடிக்கின்றனர் ஐசிஐசிஐ வங்கியும் ‘எலைட்’ வசூல் கும்பலும்.

ஐசிஐசிஐ நிர்வாகத்தின் ‘டார்ச்சர்’ கதை புதியதல்ல. இணையதளத்திற்குள் சென்றால் இவர்கள் செய்யும் ‘ராவடி வேலை’ வெட்ட வெளிச்சமாகும். இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் தினசரிகளில் பெயரே சொல்லாமல் ஒரு ‘தனியார் வங்கி’ என்றுதான் இத்தகைய செய்திகள்- இந்தச் செய்தி உள்பட-வருகின்றன. செல்வாக்கு உள்ளவர்களைக் காப்பாற்றும் பத்திரிகை தர்மம் போலும்!

புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஆட்டோ, உருட்டுக்கட்டை சகிதம் வசூல் ஏஜெண்டுகளை நியமிப்பது பலமுறை வெளியாகி கடும் கண்டனத்திற்கு ஆளாகியும் அவர்கள் திருந்துவதாக இல்லை.உச்சநீதிமன்றத்தில் 06.02.07 அன்று நீதியரசர்கள் ஏ. ஆர். லட்சுமணன், அல்த்மஸ் கபீர் இருவரடங்கிய ‘பெஞ்ச்’, இப்படியான குண்டர் முறை கடன் வசூல் முறைகளைக் கடுமையாக எச்சரித்து முடிவிற்குக் கொண்டுவர பணித்தது. உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் இந்த வழக்கில் ஐசிஐசிஐ வங்கி உயர் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கும் பதிவாகியுள்ளது என்று BEFI-TN பொதுச் செயலாளர் அ. ரெங்கராஜன் குறிப்பிடுகிறார்.


28/6/07 அன்று அவர் விடுத்துள்ள பத்திரிகை குறிப்பில், யாதய்யா கொல்லப்பட்டிருக்கும் ஹைதரபாத் நகரில் மட்டுமே இந்த வங்கிக்கு எதிராக 160 புகார்கள் பதிவாகி உள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. ‘ஏஜெண்டுகள் செய்வதற்குத் தாம் பொறுப்பில்லை’ என்று இவர்கள் கை கழுவுவதை விட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கும் ரெங்கராஜன், கோடி கோடியாய் வங்கிக் கடன் ஏய்க்கும் பெரும்புள்ளிகள் சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் இருப்பதும், சொற்பத் தொகைக்காக கீழ்மட்ட மனிதர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதும் அராஜகமானது என கொதிக்கிறார்.


யாதய்யா கொலையுண்ட செய்தி அறிந்து அடுத்த நாளே பெங்களூரில் ஐசிஐசிஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கும் `கிரெடிட் கார்டு வைத்திருப்போர் சங்க’ பொதுச் செயலாளர் சி.வி. கிதப்பா இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து' செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார். சங்கத்தின் ஹைதராபாத் கிளையின் தலைவர் பிவிஎஸ்பி சவுத்ரியும் கண்டித்திருக்கிறார். ஆந்திரபிரதேச மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பி. சுபாஷன் ரெட்டி பத்திரிகை செய்திகளை வைத்தே விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.


வங்கித்துறை சீர்திருத்தம் பற்றி புளகாங்கிதம் அடைந்து புல்லரிப்போர்க்கு இதெல்லாம் பொருட்டாகத் தெரிவதில்லை. கடுமையான நடவடிக்கையை ஜனநாயக சக்திகளே போராடி உறுதி செய்யமுடியும். யாதய்யாவின் மரணம் இன்னொரு செய்தியாகிப் போய்விடக்கூடாது.-எஸ்.வி.வி


நன்றி:
ஜூலை 2007

8 comments:

Prof Pandiyan said...

Good effort. Keep it up.

பங்காளி... said...

ICICIன் நீண்ட கால வாடிக்கையாளன் என்கிற முறையில் சொல்கிறேன்....நிச்சயமாக அவர்களின் அணுகு முறை மாறவேண்டும் அல்லது அதற்கான விலையை அவர்கள் தரவேண்டும்.

வெங்கட்ராமன் said...

நல்ல முயற்சி நண்பர்களே,

தொடருங்கள்

பிரபு ராஜதுரை said...

சட்டங்களைக் குறித்தான செய்திகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்தப் பதிவினை, திரு.மாலனின் உரையின் மூலம் அறிந்தேன், சட்டத்தினைக் குறித்தான பதிவுகள் அதிகம் வர வேண்டும் என்ற நெடுநாள் ஆதங்கத்தின் விளைவாக, எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்

பிரபு ராஜதுரை
வழக்குரைஞர்
http://marchoflaw.blogspot.com/

Senthil Alagu Perumal said...

இது மிகவும் வருத்தம் தரக் கூடிய செய்தி. அவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும். பெரும்புள்ளிகள் கோடி கோடியாய் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுகிறார்கள், பாவம் ஏழைகளையோ இப்படி சிறிய தொகைக்காக துன்புறுத்துகிறார்கள். ஐசிஐசிஐ தனது அனுகுமுறையை மாற்ற வேண்டும் அல்லது மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து ஐசிஐசிஐ வங்கியை புறக்கணிக்க வேண்டும்!!

மாசிலா said...

உங்களது பதிவை நேற்றே பார்த்தேன். பதிலிட முடியாமல போய்விட்டது.

அருமையான சமூக சேவை செய்து வருகிறீர்கள். அதற்கு மிக்க நன்றி.

இன்றைய காலங்களில் வியாபாரிகள் ஆகட்டும் வங்கிகள் ஆகட்டும் இவ்வனைவரும் பொது மக்களான நுகர்வோர் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதல்லாமல் இவர்களின் இரத்தத்தை உறிந்தும் வருகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ளது போல் "Group actions" இந்தியாவிலும் வரவேண்டும். மிக விரைவில் பிரான்சிலும் இது அமலாகப் போகிறது.

அல்ப 15.000 ரூபாய்க்காக யாதய்யாவின் உயிரை சூறையாடிய இரவுடிக் கூட்டங்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.

ICICI இதில் சம்பந்தப்பட்டு இருக்குமேயானால், அதற்கு என் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் சட்டம் ஆசிரியர் குழுவினருக்கு எனது நன்றி மேலும் ஆதரவினை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு மிகப்பெரிய போராட்டத்தின் ஆரம்பமே இது.

நுகர்வோர்கள் தங்களது உரிமைகளை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் விழிப்புடன் இருந்து முதலாளி வர்க்கங்கள் நமது உயிர்களை பலி வாங்காமல் இருக்க பாதுகாப்புடன் எச்சரிக்கையாக இருப்போம்!

கலெக்சன் கண்ணாயிரம் said...

ஐசிஐசிஐ மட்டும் இல்ல நைனா, இன்னும் நெறயா பாங்க்லயும் இந்த பிரச்ன இருக்கு. நீதான் நைனா பொது நல வழக்கு மாதிரி எதுனா போட்டு அந்த கொலகார பாவிகள கட்டுப்படுத்தனும்.

Anonymous said...

இந்த பதிவுக்கு பதிலாக "வங்கி கடனை கட்டாத நல்லவர்களே?" என்று வேறொரு பதிவில் விவாதம் கிளம்பி உள்ளதே! உங்கள் பதில் என்ன?

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!