Thursday, October 28, 2010

உயிர் காக்கும் மருந்துகள் மீதான காப்புரிமை கட்டுப்பாடுகள்

ரோச் (Roche) என்கிற பன்னாட்டு நிறுவனம் Erlotinib Hydrochloride (இதன் வணிக பெயர் Tarceva) என்னும் புற்று நோய்க்கான மருந்தை காப்புரிமை பெற்று விற்பனை செய்து வருகிறது. எனவே இம்மருந்தை மேட்ரிக்ஸ் (Matrix) என்ற நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யக்கூடாது  என்று செப்டம்பர் 2010-இல் சென்னை  உயர் நீதிமன்றதில் வழக்கு தொடுத்துள்ளது.[1] இந்த வழக்கில் ரோச் நிறுவனத்திற்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜேஸ்வரன், ரோச் நிறுவனத்தின் வழக்கிற்கு முகாந்திரம் (Prima Facie) உள்ளதாக கூறி மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் பதிலைக்கூட கேட்டறியாமல் ஒருதலையான (Ex-Parte) இடைக்கால தடைவிதித்துள்ளார். இதுபோன்ற ஆணைகள் ஜெனிரிக் (Generic)  மருந்துகள் என்று அழைக்கப்படுகின்ற மலிவுவிலை உயிர்காக்கும் மருந்துகளின் உற்பத்தியை தடை செய்யும் என்கிற அச்சம் சமூக ஆர்வலர்களிடத்தே ஏழுந்துள்ளது. 

மருந்துகள் தொடர்பான காப்புரிமை சட்ட  பிரிவுகள்  :  

மனித உயிர்காக்கும் மருந்துகள் இந்திய காப்புரிமை சட்டப்படி கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன. எனவே எல்லாவித மருந்துகளும் காப்புரிமை (Patent) பெற தக்கவையே. காப்புரிமை என்பது காப்புரிமை பெற்ற பொருளை, அந்த உரிமையை பெற்றவர்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஏகபோக (Monopoly) உரிமையாகும்.   

இன்று நடைமுறையில் உள்ள இந்திய காப்புரிமை சட்டம் 1970, காலனி கால காப்புரிமை சட்டம் 1911-இல் உள்ள மக்களுக்கு எதிரான பல அம்சங்களை அகற்றிவிட்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் முடிவுபொருளுக்கான காப்புரிமை (Product Patent), செய்முறைக்கான காப்புரிமை (Process Patent) என இரண்டு காப்புரிமைகளை வழங்குகிறது. 

 இச்சட்டம்,  காலனிய சட்டம் போல் இல்லாமல், மருந்து மற்றும் உணவு தொடர்பான பொருட்களுக்கு செய்முறைக்கான காப்புரிமை (Process Patent) மட்டுமே வழங்கியது.[2] காரணம் மருந்துகளுக்கு முடிவுபொருளுக்கான காப்புரிமை வழங்குகின்ற போது அது மருந்து உற்பத்தியையே தடை செய்யும் விதமாக அமைந்துவிடுவதுதான். மருந்துகளின் செய்முறைக்கான காப்புரிமை வழங்குகின்ற போது அது வேறு செய்முறையில் அதே மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கின்றது. ஆனால் முடிவுப்பொருளுக்கான காப்புரிமை என்பது எந்த செய்முறையிலும் காப்புரிமை பெற்ற நபர்/ நிறுவனம் தவிர்த்து வேறு யாரும் உற்பத்தி/விற்பனை செய்வதை முழுவதுமாக தடை செய்கின்றது. 

விளக்கமாக கூற வேண்டும் என்றால், செய்முறைக்கான காப்புரிமை என்பது காப்புரிமை பெற்ற ஒரு மருந்தை வேறு ஒருவர், அதே முறையில் தயாரிப்பதை மட்டுமே தடைசெய்கின்றது. அதே பொருளை வேறு முறைகளில் அதே தன்மையுடன் (Bioequivalent)  தயாரித்து விற்பதையோ/பயன்படுத்துவதையோ தடுக்கவில்லை. இதன் காரணமாக விலை உயர்ந்த வெளிநாட்டு மருந்துகளை உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் பல்வேறு முறைகளில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பை பெற்றனர். ஒரே மருந்தை பல நிறுவனங்கள் தயாரிக்கும் நிலை பெருகியது. இத்தகைய மருந்துகளே ஜெனிரிக் மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை மருந்துகளும் தரத்துக்கான பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தான் விற்பனைக்கு வருகின்றன. 

மேலும் இச்சட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் உணவு பொருட்கள் மீதான காப்புரிமை காலம் 7 ஆண்டுகள் மட்டுமே. அதன் பின்னர் வேறு யாரும் அந்த மருந்தை உற்பத்தி செய்யலாம். இதன் காரணமாகவே இந்திய மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் பிற நாடுகளை ஒப்பிடும் போது மலிவாக கிடைத்து வந்தது. மேலும் இச்சட்டத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் தேவை அதிகம் உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததால் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஏழை மக்களும் பெருத்த அளவில் பயன்பெற்றுவந்தனர். 

உலகமயமாக்கலுக்கு பின் காப்புரிமை சட்டம் : 

உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organisation) ஒரு பகுதியான TRIPS (Trade  Related Intellectual Property Rights Agreement)  ஒப்பந்தத்தில் 1995-இல் இந்தியா கையொப்பம் இட்டது. TRIPS ஒப்பந்தம் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசனைப்படி அமெரிக்க அரசால் 1987-இல் நடந்த “காட்” (GATT) மாநாட்டில் கொண்டு வரப்பட்ட ஒன்று. 

TRIPS ஒப்பந்தம் இந்திய காப்புரிமை சட்டத்திற்கு எதிராக இருந்தது. மருந்துகளுக்கு முடிவுப்பொருளுக்கான காப்புரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்று TRIPS ஒப்பந்தம் கூறியது.[3] TRIPS ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இந்தியா காப்புரிமை சட்டத்தை மாற்றி மருந்துகளுக்கு முடிவுபொருளுக்கான காப்புரிமை வழங்கலாம் என்கிற சட்ட திருத்தத்தை (Patent Amendment Act 2005) கொண்டுவந்தது.  இந்த சட்ட மாற்றங்கள் 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய காலத்தில் நடந்தது. மேலும் மருந்துகளுக்கான காப்புரிமை ஆண்டு காலமும் 7 ஆண்டிலிருந்து 20 ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டது.[4] 

1995- ஆம் ஆண்டில் TRIPS ஒப்பந்தம் கையெழுத்தான போதே இந்த ஒப்பந்த   சரத்துகளை உறுப்பு நாடுகள் அமல்படுத்த 10 ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டது.[5] TRIPS ஒப்பந்தம் மீது மக்களிடம் இருந்த எதிர்ப்பு உணர்வு காரணமாகவே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது.  இந்த 10 ஆண்டு கால இடைவெளியில் முடிவுபொருளுக்கான காப்புரிமைக்கு நிகரான பிரத்யேக சந்தைப்படுத்தும் உரிமை (Exclusive Marketing Right)யை வழங்க வேண்டும் என்றும் முடிவானது. இந்த பிரத்யேக சந்தை உரிமை காப்புரிமையை விட பலமான ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கியது. உதாரணமாக நோவார்டிஸ் நிறுவனம் இந்த உரிமையின் கீழாக பதிவு செய்த வழக்கை பற்றி பார்ப்போம். 

நோவார்டிஸ் நிறுவன வழக்கு : 

 2004 ஆம் ஆண்டு நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் (Imatinib Mesylate) இதன் வணிகப்பெயர் கிளிவெக் (Glivec, Gleevec) என்ற மருந்திற்கான பிரத்யேக சந்தை உரிமையை தாம் மட்டுமே பெற்றிருப்பதாக கூறி  ஆதர்ஸ்  (Adarsh Pharma) என்கிற இந்திய நிறுவனம் உற்பத்தி செய்வதற்கு எதிராக  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் மேற்படி மருந்தை ஆதர்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய தடை விதித்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி பாலசுப்ரமணியம்.[6] நோவார்டிஸ் நிறுவனத்திற்காக அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வாதிட்டார். 

ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. மெகர் (Mehar Pharma) என்கிற நிறுவனத்திற்கு எதிராக மேற்கூறிய காரணங்களில் இமாடினிப் மெஸிலேட் மருந்தை உற்பத்தி செய்வதை தடை விதிக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கிட்டது நோவார்டிஸ். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு  சரியாக ஆராயாமல் (not properly considered) கொடுக்கப்பட்டுள்ளது என்று கருந்து கூறிய மும்பை நீதிமன்றம், மெகர் நிறுவனம் இமாடினிப் மெஸிலேட்   மருந்தை உற்பத்தி செய்வதற்கு தடைவிதிக்க மறுத்தது.  மேலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.[7] 

இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுப்பாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால்  காப்புரிமை சட்டவிதி 3(d) யின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டில் தங்களுக்கு காப்புரிமை மறுக்கப்பட காரணமாக இருந்த காப்புரிமை சட்ட பிரிவு 3(d) அரசியல் அமைப்புச் சட்டதிற்கு எதிரானது என்று கூறியது. காரணம் இந்த சட்ட பிரிவு TRIPS ஒப்பந்திற்கு எதிரானது என்று விளக்கம் கூறியது. மேல் முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[8] இதுவும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் உள்ளது. சட்ட பிரிவு 3(d)  காப்புரிமை பெற்ற ஒருபொருளை சிறிய மாற்றம் அல்லது புதிய பயன்பாடு என்னும் காரணம் கூறி மீண்டும் காப்புரிமை கொடுக்கப்படுவதை தடை செய்கிறது. இதன் மூலம் காப்புரிமை காலம் தொடர்ந்து நீடிக்கப்படுவது தடை செய்யப்படுகிறது. 

இமாடினிப் மெஸிலேட் மருந்து மீதான நோவார்டிஸ் நிறுவனத்தின் காப்புரிமை கோரிக்கை பலத்த ஏதிர்ப்புக்குள்ளானதன் காரணம் தற்போதைய நிலையில் பல இந்திய நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும். நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1000 விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.1,20,000 தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

ரோச் நிறுவன வழக்கு :  

இந்த பின்னணியில்தான் ரோச் இப்பொழுது பதிவு செய்துள்ள வழக்கை ஆராய வேண்டியுள்ளது. ரோச் நிறுவனம் மேற்கூறிய Erlotinib Hydrochloride மருந்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது.  ரோச் நிறுவனம் சிப்லா (Cipla) என்னும் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு  எதிராக  டில்லி உயர் நீதிமன்றத்தில்  மேட்டிரிக்ஸ் எதிரான வழக்கு போலவே காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிப்லாவிற்கு எதிராக இடைக்கால தடைவிதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் மீது மேல் முறையீடு செய்தது ரோச். இந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த டில்லி உயர்நீதிமன்றம் அபராதமாக 5,00,000 ரூபாயை சிப்லாவிற்கு வழங்க உத்தரவிட்டது. ரோச்சின் காப்புரிமையே விதி மீறலானது என்ற சிப்லாவின் வாதத்தை ஏற்றுக் கொண்ட டில்லி உயர்நீதிமன்றம், ரோச் நிறுவனத்தின்  Erlotinib Hydrochloride ஒரு மாத்திரையின் விலை ரூ.4,800 என்றும் அதே மருந்தை சிப்லா நிறுவனம் ரூ.1,600 என்று விலை நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளது. ஒரு நோயாளி சிப்லாவிடம் ரூபாய் 46,000 செலுத்தி பெரும் அதே மருந்திற்கு ரோச்சிடம் ரூ.1,40,000 செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்நிலையில் ரோச்சின் வழக்கு அனுமதிக்கப்பட்டால் அது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளை தடுக்கும் விதமாக அமைந்துவிடும் என்றும் கூறியுள்ளது.[9] இந்த தீர்ப்புக்கு ஏதிராக மேல்முறையீடு செய்த ரோச் உச்ச நீதி மன்றத்திலும் தோல்வியையே தழுவியது.[10] 

இந்த பின்னணியில் சென்னை உயர் நிதீமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். மேலும் டில்லி உயர் நீதிமன்றம் பொதுமக்களின் நலன் இந்த வழக்கில் அவசியம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ரோச் நிறுவன கூற்றுப்படியே மேட்டிரிக்ஸ் நிறுவனம் Erlotinib Hydrochloride மருந்திற்கான  ஜெனிரிக் மருந்தின் தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக மட்டுமே கூறியுள்ளது. அதாவது மேட்டிரிக்ஸ் நிறுவனம் இன்னும் மருந்து உற்பத்தியில் இறங்கவே இல்லை. வெறும் ஜெனிரிக் மருந்தை தயாரிக்கும் எண்ணத்திற்கே இடைக்கால தடை என்பது உள்நாட்டு ஜெனிரிக் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இறுதியாக சில பகிர்வுகள் :              

            2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை சுமார்  3488  முடிவுபொருளுக்கான காப்புரிமை பல்வேறு மருந்துகளுக்கு கொடுக்கப்பட்டதாக காப்புரிமை அலுவலகம் கூறுகிறது.[11] இதன் பொருள் இவற்றுக்கான ஜெனிரிக் மருந்துகளை வேறு யாரும் இனி தயாரிக்க முடியாது என்பதுதான். இத்தகைய காப்புரிமையை பெற்றிருப்பது சில நிறுவனங்கள் மட்டுமே. இந்த சட்ட நெருக்கடிக்கள் பல இந்திய நிறுவனங்களை மூடச் செய்துள்ளது அல்லது பன்னாட்டு நிறுவனங்களோடு இணைய செய்துள்ளது. இதன் விளைவு மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

-மு.வெற்றிச்செல்வன்
குறிப்புகள்:
[1] The Economic Times, dated 23.09.2010
[2] Section 5, Patent Act ,1970
[3] Article 27.1, TRPIS Agreement
[4] Section 53, Patent Act, 1970
[5] Article 65, TRIPS Agreement
[6] 2004 (29) PTC 108 (Mad)
[7] 2005 (30) PTC 160 (Bom)
[8] (2007) 4 MLJ 1153
[9] FAO (OS) 188/2008
[10] SLP (Civil) No.20111/2008
[11] www.patentoffice.nic.in

Monday, October 25, 2010

ஊழல் குறித்த தகவல் கொடுப்போரை பாதுகாக்கும் சட்டம், ஊழலை ஒழிக்குமா?


 (25-10-2010 முதல் 1-11-2010 வரை ஊழல் ஒழிப்பு வாரம்..!!??)

ந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஊழல்களில் சுமாராக எவ்வளது தொகை புரளும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

ஒரு ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் ஊழல்களில் கையாளப்படும் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டிவிட்டதாக ஒரு அண்மை புள்ளிவிவரம் கூறுகிறது!

எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் அல்ல. எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறவில்லை என்று கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கும்.

நாட்டின் முக முக்கியமான துறையாக கருதப்படும் ராணுவத்தில் பணியாற்றி போரில் மரணம் அடையும் வீரர்களை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டியைகூட சொந்தமாக செய்வதற்கு திறனின்றி, அதையும் வெளி நாடுகளில் வாங்கி அதிலும் ஊழல் செய்த நாடு பாரத நாடு! சவப்பெட்டி வாங்குவதில்கூட ஊழல் என்றால் ஆயுதங்கள் உள்ளிட்ட மற்றவற்றில் எவ்வளவு ஊழல் நடக்கும்?

தமிழ்நாடோ சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில்கூட ஊழல் செய்து அரசியல் பண்பாட்டை பாதுகாத்த நாடு. அதற்கு காரணமாக கூறப்பட்ட நபர், கட்சி மாறிவிட்டால் அவரது பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கி புனிதர் பட்டமும் தருவதற்கு தயங்காத அரசியல் சூழல்!

இந்தியாவில் ஒரு குடிமகன் பிறப்பது முதல் அவன் இறப்பது வரை லஞ்சத்தின் நிழல் படாமல் அவன் வாழவே முடியாது. 
***

த்யேந்திர குமார் துபே என்ற இளைஞருக்கு வயது 30. பிஹார் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்த துபே எம்.டெக். பட்டம் பெற்றவர்.  மத்திய அரசு நிறுவனமான இந்திய தேசிய நெடுங்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றினார்.

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் அவர் பணியாற்றினார். பிஹாரில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்க நாற்கரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கான ஒப்பந்தம் புகழ்பெற்ற லார்சன் அன்ட் டோப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இதில் நடந்த ஊழல்களை சத்யேந்திர குமார் துபே, அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேய்-க்கு அனுப்பி வைத்தார். அந்தப் புகாரை சத்யேந்திர குமார் துபே பணியாற்றிய துறையின் உயர் அதிகாரிகளுக்கே அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். இதைத் தொடர்ந்து அவர் உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி சத்யேந்திர குமார் துபே சர்ச்சைக்குரிய வகையில் கொல்லப்பட்டார். 

இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. விசாரணை வளையத்துக்குள் இருந்த இருவர் மர்மமான முறையில் இறந்தனர். சுமார் 6 வருட விசாரணைக்குப் பிறகு சத்யேந்திர குமார் துபேவிடம் வழிப்பறி செய்யும் போது கொலை செய்ததாக 4 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

***

லக அரசியலின் நாடி- நரம்புகளாக லஞ்சமும், ஊழலுமே ஓடிக் கொண்டிருக்கின்றன. எனினும் ஊழலுக்கு எதிராகவே சாமானிய மக்களின் மனநிலை இருக்கிறது. இதில் சற்றுத் துணிச்சல் மிகுந்தவர்கள் இந்த ஊழலுக்கு எதிரான குரல்களை எழுப்புகின்றனர், சத்யேந்திர குமார் துபேவைப் போல! சத்யேந்திர குமார் துபேக்கள் அரசுப் பணிகளில் மட்டும் இருப்பதில்லை! பத்திரிகையுலகில், சமூக ஆர்வலர்களில், வழக்கறிஞர்களில், ஏனைய துறைகளில் எத்தனையோ சத்யேந்திர குமார் துபேக்கள் இருக்கின்றனர்.

பல நாடுகளில் ஊழலுக்கு எதிரான அமைப்புகள் மிகுந்த வலிமையோடும், நேர்மையோடும் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையிலும் ஊழலுக்கு எதிரான விருப்ப உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஊழலில் ஈடுபடுவர்களை தண்டிக்கவும், அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யவும் ஐ.நா.வின் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை  இந்தியா கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு கையெட்டுள்ள போதிலும், இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை நிறைவேற்ற இதுவரை முன்வரவில்லை.

ஆனாலும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் முன்னிலை வகிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான நிலையே! குறிப்பாக சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களின் வலியுறுத்தலுக்கும், ஐக்கிய நாடுகள் அவையின் அழுத்தத்திற்கு இணங்கியும் ஊழல் குறித்து தகவல் கொடுப்பவர்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்த சட்டத்திற்கு, “பொதுநலனுக்காக அம்பலப்படுத்தல் மற்றும் அம்பலப்படுத்துபவரை பாதுகாப்பதற்கான சட்டம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் விசில் புளோயர்ஸ் ஆக்ட் என்று சொல்கின்றனர்.

இந்த சட்டத்திற்கான முன் வடிவம் பொதுமக்களின் கருத்துகளுக்காக அண்மையில் வெளியிடப்பட்டது.  இந்த சட்டம் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு படைகள், சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகள், தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்கு பொருந்தாது. அதாவது இந்த துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.

இந்தச் சட்டத்தின்படி ஊழல் குறித்த புகார்களை விசாரிக்கும் பொறுப்பு மத்திய கண்காணிப்பு ஆணையரிடமோ அல்லது இந்தப்பணிக்காக மத்திய அரசு நியமிக்கும் அதிகாரியிடமோ இருக்கும்.

அரசுத்துறைகளில், அல்லது அரசுடைமையான நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அவற்றின் பணியாளர்கள் புகார் செய்ய விரும்பினால் இந்த சட்டத்தின்படி  மேற்கண்ட அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.  புகார் அளிப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களும் அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. அதை மீறி புகார் அளிப்பவர் குறித்த ரகசியங்கள் வெளியானால் அதற்கு காரணமானவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மீதான விசாரணை நடைபெறத்தேவையான கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி, புகார்தாரரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்வார். மேல் அதிகாரிகள் மீது புகார் கொடு்த்ததற்காக, புகார் கொடுத்தவர்மீது அவரது துறை சார்ந்த அதிகாரிகள் அலுவல்ரீதியான  தொல்லைகளையோ, தண்டனையோ வழங்கக்கூடாது என்று இந்த சட்ட முன் வடிவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் புகார் உண்மையிலேயே பொதுநலன் கருதி அளிக்கப்பட்டுள்ளதா அல்லது தனிப்பட்ட விரோதம் அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரணை அதிகாரி விசாரித்து முடிவு எடுத்தபின்னரே புகார் மீதான விசாரணை நடைபெறும். குறிப்பிட்ட ஒரு புகார் உரிய ஆதாரம் இன்றி தவறாகவோ, சித்தரிக்கப்பட்டதாகவோ இருந்தால் அந்தப் புகாரை அளித்தவருக்கு இரண்டு ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

புகார் விசாரணைக்கு ஏற்கப்பட்டாலும்கூட சில குறிப்பிட்ட சூழல்களில் புகார் அளித்தவரின் விவரத்தை வெளியிடுவது அவசியம் என தலைமை கண்காணிப்பு ஆணையரோ அல்லது அரசால் இதற்காக நியமிக்கப்படு்ம் அலுவலரோ கருதினால் புகார் தாரரின் விவரம் வெளியிடப்படலாம். அப்போது புகார்தாரரின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது புரியவில்லை.

***

இந்தியாவில் நடைபெறும் ஊழல்களின் நடைமுறை குறித்தோ, அதை தவிர்க்கும் முறை குறித்தோ எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஊழல்கள் குறித்த புகார்களை விசாரிப்பது குறித்தும், புகார் அளிப்பவரை பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கும் இந்த சட்டமுன் வடிவும் ஒரு கண்துடைப்பு அம்சமாகவே தோன்றுகிறது.

ஏனெனில் ஊழல் குறித்த செய்திகளை வெளிக்கொணர்வதில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பங்கேற்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்பது முதல் பலவகையான செயல்பாடுகள் ஊழலை கண்டுபிடிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் கையாளப்படுகின்றன. இவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த இந்த சட்டத்தில் ஏதுமில்லை.

நடைமுறையில் அரசியல்வாதிகள்மீது ஊழல்புகார்கள் ஏராளமாக கூறப்பட்டாலும்கூட, ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் குறிப்பிடத்தக்க அளவில் யாருமில்லை. ஊழல் குறித்து விசாரிக்க வேண்டிய சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளும், மத்திய கண்காணிப்பு ஆணையம் போன்ற அதிகார மையங்களும் ஆளுங்கட்சிக்கு இடுக்கண் ஏற்படாவண்ணம் நடந்து கொள்வதையே நடைமுறையாக வைத்திருக்கின்றன. நீதிமன்றங்களும்கூட சாமானிய மனிதர்களுக்கு கண்டிப்பான அணுகுமுறைகளையும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வேறுமாதிரியான அணுகுமுறைகளையும் கையாள்கின்றன.

இந்த நிலையில் ஊழலை ஒழிப்பதற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்துவதும்,  ஊழல் குறித்த விசாரணைகளை நியாயமாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை வழங்குவதுமே மிக அவசியமான நடவடிக்கைகளாகும். இதை சரியாக செய்தாலே ஊழல் குறித்த தகவல் தெரிவிப்பவருக்கு தேவையான பாதுகாப்பு தானாகவே கிடைத்துவிடும்.

ஆனால் இதைச் செய்ய மனமில்லாமல், “பொதுநலனுக்காக அம்பலப்படுத்தல் மற்றும் அம்பலப்படுத்துபவரை பாதுகாப்பதற்கான சட்டம்” போன்ற கண்துடைப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை.

உண்மையில் அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற மக்களை ஏமாற்றும் அணுகுமுறைகளே, சாமானிய மக்களை தீவிரவாதத்தின் பாதையில் செலுத்தும் மிகவும் ஆபத்தான பணியை செய்கின்றன. 

-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)

Tuesday, October 12, 2010

கல்வி உரிமைச் சட்டம் – உண்மையில் கல்விக் கண்ணை திறக்குமா?

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் சுமார் 18 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து சுதந்திரப் பொன்விழாவை கொண்டாடிய 1997ம் ஆண்டில் 50 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். அதாவது இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்திய மக்கள் தொகையில் சரிபாதியினருக்கு தொடக்கக் கல்விகூட கிடைக்காத நிலையில்தான் இந்தியா இருந்தது.  இந்த புள்ளிவிவரங்கள் கூறும் கல்வி அறிவு என்பது பல்கலைக்கழக பட்டம் போன்ற உயர்கல்வி அல்ல. பத்து வருட பள்ளிக்கல்வி நிறைவு பெற்றவர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65.38 சதவீத இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர். ஆண்களில் 75.85 சதவீதத்தினரும், பெண்களில் 54.16 சதவீதத்தினரும் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர். இந்த நிலையிலும் கடந்த 2009 ம் ஆண்டில், இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையான 8 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்று அரசின் புள்ளி விவரங்களே மதிப்பிட்டிருக்கிறது.

கல்வி உரிமைச் சட்டம் 2009

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்கான  கல்வி உரிமைச் சட்டம் 2009இந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டம் உண்மையிலேயே மக்களுக்கு பயன் அளிக்குமா? அல்லது வழக்கம் போல, மக்களிடம் கனவுகளை விதைத்து அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அறுவடை செய்யும் மலிவான யுக்திதானா? என்பதை பார்க்கும் முன் இந்த சட்டம் குறித்த வேறு சில அம்சங்களை பார்ப்போம்.

இந்த சட்டத்திற்கான முயற்சிகளில் பல்வேறு தரப்பினரும் இந்தியா சுதந்திரம் பெற்றதுமுதல் 60 ஆண்டுகாலமாக ஈடுபட்டிருந்தனர். அரசுத்தரப்பில் கடந்த 2002ம் ஆண்டு அலுவல்ரீதியான பணிகள் தொடங்கின.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 3 திருத்தங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, பல தரப்பினரிடமும் ஆலோசனைகளும், மக்கள் கருத்தறியும் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கல்வி உரிமைக்கான சட்டம் 2005ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது மொத்தம் 250 உறுப்பினர்களில் 54 பேர்தான் அவையில் இருந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு, தங்களை தேர்ந்தெடுத்த மக்கள் மீது அந்தளவுக்கு அக்கறை! எந்த விவாதமும் இன்றிக் குரல் வாக்கு (voice vote) மூலம் கல்வி உரிமைச் சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவசக்கல்வியை கட்டாயமாக வழங்குவது மத்திய மாநில அரசுகளின் கடமையாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும். தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இலவச கட்டாய ஆரம்ப கல்வி என்பதை இந்த சட்டம் கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறது:  

6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள்.

ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும். 

இந்த திட்டத்திற்கு சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மற்ற கட்டமைப்புகளுக்கான மதிப்பீடுகள் குறித்து செய்திகள் இல்லை. 

இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 

இந்தியாவில் இருக்கும், இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் எளிய, சாமானிய மக்களை மட்டுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அதிகாரத்தில் இருப்பவர்கள், வசதி மிக்கவர்களை இந்த சட்டம் எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறது என்பது அன்றாட செய்திகளிலேயே பதிவு செய்யப்படுகிறது. 

இதற்கு உதாரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை கூறலாம். நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் இயற்றும் சட்டங்களை அரசுத்துறைகளே போட்டிபோட்டு மீறுவது அன்றாட நடவடிக்கையே. இது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படும்போது நீதிமன்றமும், வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் சூழல் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் விடுகிறது. இதுபோன்ற பிரசினைகளில், சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய அரசு சட்டத்தை மீறினால் அதனால் பாதிக்கப்படுபவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கேள்விக்கு இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள்கூட பதில் அளிக்க முடியாது. 

இந்த நிலையில்தான் இந்திய அரசு குடிமக்களின் தொடக்கக்கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 

கனவுகள் நனவாகுமா?

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கனவுகள் நனவாகுமா என்பது கேள்விக்குறியே! ஏனெனில் கல்வி என்பது பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர் சாரந்த விவகாரம் மட்டும் அல்ல என்றும், ஒட்டுமொத்த சமூகச்சூழலுமே அந்த சமூகத்தின் கல்வி நிலையை தீர்மானிக்கும். 

இவற்றில் முதன்மையானது கல்வி பயில வேண்டிய குழந்தைகளின் குடும்பச்சூழலே அந்த குழந்தையின் கல்வியை தீர்மானிக்கும் பிரதான அம்சமாகும். உயர் மட்ட குடும்பங்களும், மேல் நடுத்தர குடும்பங்களுக்கும் கல்வி என்பது எந்த விலை கொடுத்தேனும் வாங்கப்படும் ஒரு அம்சமாக மாறிவிடுகிறது. இதில் பிரசினைகளை சந்திப்போர் கீழ் நடுத்தர குடும்பங்களும், வறுமையில் வாழ்வோரும்தான். இவர்களது குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத்தான் கல்வி என்பது எட்டாக்கனவாகிறது. 

இந்தியாவில் தொடக்கக்கல்வியில் சேரும் குழந்தைகளில் சுமார் 35 சதவீதம் பேர் தொடக்கக்கல்வியை பாதியிலேயே நிறுத்திவிடுவதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் வறுமையில் வாழ்வோர் மற்றும் கீழ்நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். 

இந்தப் பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்வியை தீர்மானிப்பதில் அக்குழந்தைகளின் பெற்றோர்களின் தொழில், கல்விநிலை, உடல்நலம், மதுப்பழக்கம், போக்குவரத்து வசதிகள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற எண்ணற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன. 

இந்திய அரசு இன்று நடைமுறைப்படுத்தி வரும் சமூக, பொருளாதார கொள்கைகளோ வறுமையில் வாழும் குடும்பங்களையும், கீழ் நடுத்தர வர்க்க மக்களையுமே குறிவைத்து தாக்கும் வகையில் உள்ளன. இம்மக்களின் வேலைவாய்ப்பை பறித்து, அவர்களின் இருப்பிடங்களை பறித்து, உடல்நலத்தையும் பொருளாதார வளத்தையும் சூறையாடி, மதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமையாக்கி அவர்களை சின்னாபின்னப்படுத்துவதில் அரசின் கொள்கை முடிவுகளே முக்கிய இடம் வகிக்கின்றன. 

இயற்கை விவசாயத்தை முடக்கி வணிகமயப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் விவசாயத்தை ஊக்குவித்தல், சிறு தொழில்களை திட்டமிட்டு நசுக்கி பெருந்தொழில்களின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்தல், கிராமங்களையும் வனப்பகுதிகளையும் திட்டமிட்டு அழித்து நகரமயமாக்குதல் போன்றவற்றையே நவீன பொருளாதாரக் கொள்கையாக மத்திய, மாநில அரசுகள் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் நகரங்களை அலங்கரித்தல் என்ற பெயரில் குடிசைப்பகுதிகளை அப்புறப்படுத்தல்: அங்கு வாழ்வோரை நகரிலிருந்து வெகு தொலைவிற்கு துரத்துதல் போன்றவை அம்மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக் குறியாக்குகின்றன.

இது போன்ற அனைத்து சமூக அவலங்களுக்கும் முதல் பலியாவது அச்சமூக சிறுவர்களின் கல்விதான். 

இதை உணராமல், உணர்ந்தாலும் அதை ஏற்காமல் கல்வி உரிமைச் சட்டம் 2009போன்ற நடைமுறைக்கு உதவாத, கவர்ச்சித் திட்டங்களை சட்டமாக அறிவித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது. 

இந்த நிலையில் சிறுவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதே, தொடக்க கல்வியை பரவலாக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக இருக்கமுடியும். அதை செய்ய விரும்பாத அரசு, தேர்தல் வாக்குறுதி போன்ற, நடைமுறைப்படுத்த சாத்தியமற்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி மக்களை ஏமாற்ற முனைகிறது. 

இது அரசு மற்றும் பாதிக்கப்படும் மக்களின் பிரசினை என்று மற்றவர்கள் சும்மா இருந்துவிட முடியாது. உரிய கல்விக்கு வழியற்ற இளைஞர்களே, வேலைவாய்ப்பிற்கும் லாயக்கற்று சமூகவிரோதிகளிடம் சிக்குகின்றனர். அனைத்து சட்டவிரோத செயல்பாடுகளிலும் இந்த இளைஞர்களே முக்கிய பங்கு வகுக்கின்றனர். இந்த போக்கு அதிகரித்துவரும் நிலையில் சமூகத்தில் பாதுகாப்பு என்பது எட்டாக்கனியாகிவிடும். எனவே சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கான ஒரு பிரசினை அந்த பிரிவை மட்டுமே பாதிக்கப்போவதில்லை. முழு சமூகத்தையுமே இந்த பிரசினை பாதிக்கும் என்பதை சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும் சிந்திக்க வேண்டும். 

தீர்வுதான் என்ன?

இதுபோன்ற கண்துடைப்பு சட்டங்களை நிறைவேற்றி மக்களை ஏமாற்றுவதைவிட இந்திய அரசியல் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அரசு நடைமுறைப்படுத்தினாலே கல்வி மட்டுமல்ல மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் மக்கள் தாமாகவே பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். 

இதை வலியுறுத்தும் அரசியல் செயல்பாடுகளே காலம் நமக்கு இடும் கட்டளையாகும்!

-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)