Thursday, December 9, 2010

சட்டத்தொழில் புரிவோர் சட்டம், 2010

ந்திய நீதித்துறையின் செயல்பாடுகளில் பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பொருள் வசதி படைத்த சிறுபான்மையினருக்கு மட்டுமே சட்டரீதியான தீர்வுகள் சாத்தியமாகும் நிலை உள்ளது. நாட்டில் உள்ள பெரும்பான்மையினருக்கு இந்தியாவின் சட்டங்கள் என்பது ஒரு அடக்குமுறை கருவியாகவே தோன்றும்.

இதற்கு காரணம், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள் எந்த விமர்சனமும் இல்லாமல் இன்று வரை தொடர்வதும், புதிதாக வரும் சட்டங்கள் ஆங்கிலேயர் கொண்டுவந்த சட்டங்களைவிட மோசமாக இருப்பதுமே ஆகும்.

இந்தியாவின் பருவகாலத்திற்கு எந்த வித பொருத்தமும் இல்லாத சீருடை உள்ளிட்ட பலவிதமான முரண்பாடுகளுடன் இயங்கும் நீதித்துறை மக்களுடைய விமர்சனத்திற்கு இலக்காவது இயல்பானதே!

இந்தியாவில் சட்டங்களை இயற்றும் பணியை மேற்கொள்வது நாடாளுமன்றமும், சட்டமன்றங்களுமே ஆகும். இதையடுத்து நிர்வாக ரீதியிலான விதிமுறைகளை இயற்றுவது அதிகார வர்க்கமாகும். இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவது அரசியல்வாதிகள். எனவே இந்தியாவின் அரசியல்வாதிகளால்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு இயற்றப்படும் சட்டங்களுக்கு பொருள் சொல்லும் வாய்ப்பு மட்டுமே நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. இந்த நீதிமன்றங்களும் பெரும்பாலான நேரங்களில் அரசின் நோக்கத்தை ஒட்டிய வகையிலேயே தீர்ப்பு வழங்குகின்றன.  

எனவே இந்தியாவில் நீதித்துறை மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு அரசியல்வாதிகளே முழுமையான பொறுப்பேற்க வேண்டும்.

---

நீதித்துறை மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்போதெல்லாம் பல்வேறு திசைதிருப்பும் வழிமுறைகளை செயற்படுத்துவதில் நமது அரசியல்வாதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரான வகையிலேயே ஆட்சி செய்வது: கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகளையோ, சட்டங்களையோ அறிவிப்பது: பின் அதையும் செயல்படுத்தாமல் மறந்து விடுவது போன்றவற்றை நமது அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அரசியல்வாதிகளின் இந்த மெத்தனப்போக்கை அவ்வப்போது சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பும் பணியை சில சட்டவியல் அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இதை தடுக்கும்விதத்தில்  வழக்கறிஞர்களின் சுயச்சார்புத்தன்மையை சிதைக்கும் நோக்கத்தில் சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010 (Legal Practitioners (Regulation and Maintenance of Standards in Profession, Protecting the Interest of Clients and Promoting the Rule of Law) Act, 2010) என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

சட்டத்தொழிலின் தரத்தை மேம்படுத்துவதிலோ, வழக்காடும் பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பதிலோ, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சட்டத்தொழிலின் தரத்தை கண்காணிக்கவும், மேம்படுத்தவும், வழக்காடும் பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கவும் பார் கவுன்சில் என்ற அமைப்பு இருக்கிறது.

வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு நிர்வாகம் செய்யப்படும் இந்த பார்கவுன்சில் அமைப்பே சட்டக்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்தல், சட்டத்தொழிலின் அறங்களை நிர்ணயம் செய்தல், அவற்றை கண்காணித்தல், அவற்றை மீறுவோருக்கு தண்டனை அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மத்திய அரசோ, மாநில அரசோ புதிய சட்டங்களை கொண்டுவரும்போது இந்த பார் கவுன்சிலிடம் கலந்து ஆலோசித்தே அந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உலக நடைமுறை. ஆனால் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்குமே தெரியாமல் சட்டங்கள் அமலாகும் நிலையில் பார்கவுன்சிலிடம் ஆலோசனை நடத்துவது என்பதெல்லாம் பகல் கனவாகவே உள்ளது.

இந்த பார்கவுன்சிலின் தேர்தலும் கூட மக்கள் மீதோ, வழக்கறிஞர் தொழில் மீதோ அக்கறை கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, பணமும் அதிகார ஆசையும் கொண்ட வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு நடைமுறையாகவே உள்ளது. கட்சி அரசியல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தும் இந்த பார் கவுன்சில் அமைப்பு அதன் உரிமைகளையோ, கடமைகளையோ உணர்ந்து செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியே!
 
இந்த சூழலை பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலை நெறிப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டிய பார் கவுன்சிலை அதிகாரம் இல்லாத பொம்மை அமைப்பாக்கிவிட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் லீகல் சர்வீஸஸ் போர்ட் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010 என்ற புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த லீகல் சர்வீஸஸ் போர்டின் தலைவரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அனைத்திந்திய பார் கவுன்சில் தலைவர் ஆகியோரை ஆலோசித்து, குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார்.

இவரையடுத்து ஒரு உறுப்பினர்-செயலர் நியமனம் செய்யப்படுவார்.  இவரையடுத்து மத்திய அரசு நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இவர்களில் ஐந்து பேர் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள மாநில பார்கவுன்சிலின் தலைவர்களாக இருப்பார்கள்.

வழக்கறிஞர் தொழிலின் நெறிமுறைகள், சட்டக்கல்வி உள்ளிட்ட விவகாரங்களை இந்த லீகல் சர்வீஸஸ் போர்ட் தீர்மானிக்கும். இதைத் தவிர சட்டத்தொழில் தொடர்பான இதர விவகாரங்கள் குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு.

இந்த அமைப்பின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அமைக்கப்படும். குறைதீர்ப்பாளர் ஒருவரும் நியமிக்கப்படுவார். வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர்கள் (வழக்காடுவோர்) கூறும் புகார்களை இந்த குறைதீர்ப்பாளர் விசாரித்து தீர்வு காண்பார்.


இந்த லீகல் சர்வீஸஸ் போர்டின் செலவுகளுக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களிலும் மற்ற நீதித்துறை அமைப்புகளிலும் சமர்ப்பிக்கும் வக்காலத்துடன் ரூ.25 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒன்றை இணைக்க வேண்டும்.

இவ்வாறு பார் கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கும் விதத்திலேயே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு அமைப்பும், அரசியல்வாதிகளும் செய்யும் தவறுகளை உடனுக்குடனே தட்டிக்கேட்பதற்கான வாய்ப்புள்ள ஒரே தொழிலாக வழக்குரைஞர் தொழில் மட்டுமே விளங்குகிறது. எனவே வழக்குரைஞர்களையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்த சட்டம் அறிமுகப்படுத்துவதாக கருதலாம்.

மக்கள் உரிமைகளையும், தங்கள் உரிமைகளையும் பாதுகாக்க விரும்பும் வழக்கறிஞர்களோடு, மனித உரிமையில் நம்பிக்கை கொண்ட பொதுமக்களும்  அரசின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 

-மக்கள் சட்டம் குழு

Tuesday, December 7, 2010

காவல்நிலையத்தில் எந்தப் புகாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்?

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்துப் புகார்களையும் சமமாக விசாரிக்க மாட்டார்கள். உடனே கொடுப்பதை கொடுத்தால்தான் விசாரிப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.

காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரிப்பது குறித்து சட்டரீதியான நெறிமுறைகளே உள்ளன. சட்ட ரீதியாக குற்றச்செயல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எளிமையாக கூறவேண்டுமானால், உடனடியாக பிணையில் விடக்கூடிய சிறு குற்றங்கள், பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்கள். கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பாலியல் வன்முறை, பயங்கரவாத செயல்பாடுகள் போன்றவை பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்களாக கருதப்படுகிறது. சட்டவிரோதமாக கூடுவது, வாய்ச்சண்டை, சிறு காயங்களை உண்டாக்குதல் போன்றவை சிறு குற்றங்களாக கருதப்படுகிறது. 


இவற்றில் பெருங்குற்றங்களை பிடியாணை வேண்டாக் குற்றங்கள் (Cognizable offences) என்று சட்டவியல் வார்த்தையில் கூறுவர். இத்தகைய குற்றங்களை செய்ததாக கருதப்படுபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலேயே ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்யமுடியும். இவ்வளவு தீவிரத்தன்மை இல்லாத சிறு குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்கள் (Non- Cognizable offences)  என்று அழைக்கப்படும். பிடியாணை என்பதை அரெஸ்ட் வாரன்ட் என்றால் சுலபமாக புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்களாகவும், மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்களாகவும் பிரிக்கப்படுகிறது எனக்கூறலாம்.

இதில் பிடியாணை வேண்டாக்குற்றங்களை விசாரிப்பதற்கு காவல்துறையினருக்கு நீதிமன்றத்தின் முன் அனுமதி தேவையில்லை. எனவே காவல்துறை அதிகாரியே விசாரணையை தொடங்கலாம். குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்யலாம்.

பிடியாணை வேண்டும் குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது. ஆனால் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்க முடியும்.

***

காவல்நிலையத்திற்கு வரும் புகார்களில் குற்றத்தன்மையில் தீவிரத்தன்மை வாய்ந்த புகார்களுக்கே முன்னுரிமை கிடைக்கும். அது நியாயமானதும்கூட! அதே நேரம் தீவிரத்தன்மை குறைந்த புகார்களை விசாரிப்பதில் காவல்துறை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாமே தவிர அவற்றை விசாரிக்க மறுக்கக்கூடாது.

தீவிரத்தன்மை வாய்ந்த கொடுங்குற்றங்களில் காவல்துறையினர் உடனடியாக தலையிடாவிட்டால் இழப்புகள் அதிகரிக்கலாம்: குற்றவாளி தப்பிவிடலாம்: சாட்சிகளும், சான்றுகளும் கலைக்கப்படலாம். இதனால் சமூக ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும். எனவே தீவிரத்தன்மை வாய்ந்த குற்றங்களில் காவல்துறையினர் கவனம் செலுத்தும்போது அதற்கு இடையூறு செய்யாமல் இருப்பதுடன் அந்த விசாரணைகளுக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டியதும் நம் கடமையாகும்.

***

பிடியாணை வேண்டாக் குற்றம் குறித்தப் புகார் ஒன்று காவல் நிலையத்தில் பெறப்பட்டால் உடனடியாக அதை முதல் தகவல் அறிக்கை(First Information Report)யாக பதிவு செய்ய வேண்டும். இந்த முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகல் புகார்தாரருக்கும், மற்றொரு நகல் அந்தப் பகுதியின் குற்றவியல் நடுவருக்கும் (Judicial Magistrate), மற்றொரு நகல் மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும் அனுப்பப்படவேண்டும்.

இதையடுத்து காவல்துறையின் புலன் விசாரணை தொடங்கும். ஒரு காவல்துறை அதிகாரி குற்ற நிகழ்வு குறித்த சாட்சியத்தை திரட்டுவதே புலனாய்வு என்று குற்றவியல் நடைமுறை சட்டம் வரையறை செய்கிறது.

ஒரு குற்றம் குறித்த புலன்விசாரணை என்பது (1) குற்ற நிகழ்விடம் சென்றடைவது (2) வழக்கின் பொருண்மைகளையும், சூழ்நிலைகளையும் உறுதி செய்வது (3) குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல், கைது செய்தல் (4) குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது (5) குற்றம் நிகழ்ந்த இடத்தையும், அது தொடர்பான மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல் (6) சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது எனில், அதற்குரிய குற்றப்பத்திரிகை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது போன்றவற்றை உள்ளடக்கியது.  

மேற்கூறியவற்றை புலன் விசாரணை அதிகாரி செய்யத் தவறும்போது, அது குற்றமிழைத்தவருக்குச் சாதகமாக அமைகிறது. எனவே, ஒரு குற்றவியல் வழக்கில் புலன் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

(வாசகர்களின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கேற்றபடி அடுத்த அத்தியாயங்கள்....
...தொடரும்)

Monday, December 6, 2010

மனித உரிமைகளை கொல்லும் மத்திய, மாநில அரசுகள்!

ஒரு தேசத்திற்கு இறையாண்மை எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு அந்நாட்டு குடிமக்களுக்கு மனித உரிமைகளும் முக்கியமானது. குடிமக்களின் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத ஒரு நாடு எவ்வளவு ஆயுதங்களை வைத்திருந்தாலும் இறையாண்மை பெற்ற நாடாக செயல்பட முடியாது.

மனித உரிமை என்ற விரிந்த பொருளைக் கொண்டது. ஆனால் பொதுமக்கள் மனித உரிமைகளை முழுமையாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மனித உரிமைகள் குறித்த கருத்துகள் மக்களை சென்றடைய விடாமல் தடுப்பதில் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக நிற்பதே மனிதஉரிமை ஆர்வலர்களின் செயல்பாடு என்ற கருத்து ஆட்சியில் இருப்போராலும், பெரும்பாலான ஊடகங்களாலும் மக்களிடம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதையடுத்து மனித உரிமைகள் என்ற கருத்து சமூகத்தில் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் மனிதர்கள் தோன்றிய நாள் முதலாகவே மனித உரிமை கருத்தியல் வெவ்வேறு மனித இனங்களிலும், மனிதக் குழுக்களிலும்  பேசப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலக்கியத்திலும்கூட  பல்வேறு இடங்களில் மனித உரிமைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் மிக எளிய உதாரணமாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற திருக்குறளைக் கூறலாம்.

எனினும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே மனித உரிமைக் கோட்பாடுகளின்  அரசியல்ரீதியான முக்கியத்துவத்தை உலகம் அறிந்து கொண்டது. 

உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்களில் சாமானிய மக்கள் படும் அவஸ்தைகளை கண்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கினர். அங்கு நடந்த நீண்ட விவாதங்களின் விளைவாக 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் நாள் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த பிரகடனத்தின்படி, மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.

மனித குல வரலாற்றின் இந்த முக்கியமான அம்சத்தை உள்வாங்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கார், இந்த பிரகடனத்தில் உள்ள ஏராளமான அம்சங்களை இந்திய அரசியல் சட்டத்திலேயே இணைத்துள்ளார்.

எனினும் இன்றுவரை இந்தியாவையும், இந்தியாவின் மாநிலங்களை ஆட்சி செய்த அரசுகள் அம்பேத்கார் திட்டமிட்ட இந்தியாவை உருவாக்குவதில் பத்து சதவீதம்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. சமூக, பொருளாதார உரிமைகள் குறித்த விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக செயல்படும் இந்த அரசுகள், அடிப்படை உரிமைகளைக்கூட திட்டமிட்டு மீறியே வருகின்றன.

உதாரணமாக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 20(3)ன் படி குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரிவு 20(1), சட்டப்படி குற்றம் எனக்கருதப்படும் செயலுக்காக, அந்த சட்டத்தை மீறிச் செய்ததற்காக அன்றி, எந்த நபரும் தண்டிக்கப்படக்கூடாது. அந்த குற்றத்துக்காக சட்டப்படி விதிக்கப்பட்ட தண்டனையைவிட அதிகமான தண்டனையை விதிக்கக்கூடாது! என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு அரசு இயங்கவேண்டிய விதத்தை கூறவேண்டிய அரசியல் அமைப்புச் சட்டம் எதற்காக இதுபோன்ற விவகாரங்களை விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அரசு அமைப்புகள் இவ்வாறுதான் இயங்கும் என்பது நமது அரசியல் சட்ட சிற்பிகளுக்கு அன்றே தெரிந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபரை, தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டமே எச்சரித்துள்ளது. ஆனால், ஒரு குற்றச்செயலை செய்ததாக சந்தேகப்படும் அல்லது அகப்படும் நபர்களை சித்திரவதை செய்து அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவதே அனைத்துக் காவல்நிலையங்களிலும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அதேபோல குற்றநிகழ்வுகளில் குற்றம் சாட்டப்பட்டோரையும் அரசு அமைப்புகளை விமர்சனம் செய்வோரையும் விசாரணையின்றியே என்கவுண்டர் போன்ற முறைகளில் தீர்த்துக்கட்டும் சட்டவிரோதப் போக்கும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.

குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதை முதன்மை கடமையாக மேற்கொள்ள வேண்டிய அரசே, மனித உரிமைகளை மறுக்கும் மீறும் முதன்மை அமைப்பாக இருப்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மையான உலக நாடுகளில் வழக்கமாக உள்ளது.  இந்நிலையை மாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கொண்ட மிகநீண்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் கடந்த 1993ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தேசிய மற்றும் மாநில உரிமை ஆணையங்களை அமைப்பது இந்த சட்டத்தின்படி வலியுறுத்தப்பட்டது. அரசு அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அமைப்புகளை நாடி தீர்வு பெறுவதற்கு வழிவகை செய்யும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இந்த அமைப்பு எந்தவிதமான அதிகாரங்களும் அற்று, பதவி ஓய்வு பெற்ற சிலருக்கு மறுவாழ்க்கை கொடுக்கும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது.

மனித உரிமை ஆணையங்களுக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை ஆயுதப்படையினரின் அத்துமீறல்கள் குறித்த புகார்களே! ஆனால் அந்தப் புகார்களை விசாரிப்பதற்கு காவல்துறையினரையே பயன்படுத்த வேண்டிய நிலையில்தான் மனித உரிமை ஆணையங்கள் இருக்கின்றன.

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தலைமை  ஏற்று நடத்தும் இந்த ஆணையங்களின் அதிகாரம் மிகவும் சொற்பமானவை. மனித உரிமை மீறலில் ஒரு அதிகாரி ஈடுபட்டார் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால்கூட அவர்களை தண்டிக்கும் அதிகாரம் இந்த ஆணையங்களுக்கு கிடையாது. அவர்களை தண்டிக்குமாறு அவர்கள் பணியாற்றும் துறைகளுக்கு இந்த மனித உரிமை ஆணையங்கள் பரிந்துரை செய்யலாம். அதை ஏற்பதும், மறுப்பதும் அந்தத்துறையின் விருப்புரிமையே.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட பொடா சட்டத்தை அதன் துவக்க நிலையிலேயே தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் கருத்தை மத்திய அரசு எந்த அளவுக்கு கருத்தில் கொள்கிறது என்பதற்கு இதையே உதாரணமாக கொள்ளலாம்.

அதேபோல சர்ச்சைக்குரிய என்கவுண்டர் மரணங்கள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் திட்டவட்டமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி அனைத்து என்கவுண்டர் சம்பவங்கள் குறித்தும் முறைப்படியான கொலை வழக்கை தொடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விதிவிலக்கான மிகச்சில சம்பவங்களைத் தவிர நாடு முழுவதும் நடைபெறும் என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் கண்துடைப்பு விசாரணைகளோடு முடிக்கப்படுகின்றன.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். இவர்களோடு மனித உரிமை கோட்பாடுகளில் அறிவும், ஈடுபாடும் கொண்ட மேலும் இருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. அரசு சாராத மனித உரிமை ஆர்வலர்களை மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக்கவே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனஆல் நடைமுறையில் அரசுக்கு இணக்கமாக பணிபுரிந்த உயர் அதிகாரிகளுக்கு  மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களுக்கு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. இதன் உச்சகட்டமாக தேசிய மனித உரிமை  ஆணையத்தில் கடந்த 2004ம் ஆண்டு பி.சி.சர்மா என்ற ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மனித உரிமைகளை ஒடுக்குவதாக அதிக அளவில் புகாருக்கு உள்ளாகும் காவல்துறையில் இருந்து ஒரு உயரதிகாரியை தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு அவருக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதோடு, கடந்த 2009ம் ஆண்டு அவருடைய ஐந்தாண்டு பணிக்காலம் முடிந்தவுடன் மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 1996ம் ஆண்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இங்கும் மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபடும் உண்மையான ஆர்வலர்கள் யாருக்கும் உறுப்பினர் வாய்ப்பளிக்கப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கே உறுப்பினர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்காலத்திலோ மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர்களே நியமிக்கப்படாமல் அந்த ஆணையம் முடக்கப்பட்டது.

மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த புகார்களை விசாரிக்கும் பொறுப்பு காவல்துறையினரிடமே ஒப்படைக்கப்படுகிறது. அந்த  காவல்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறையினரிடம் சித்திரவதையின் சான்று தெரியாமல் எச்சரிக்கையாக செயல்படுமாறு - அதாவது வெளிக்காயம் படாமல் சித்திரவதை செய்யுமாறு அறிவுரை கூறுவதை வழக்கமாக  கொண்டுள்ளனர் என்று  கூறப்படுகிறது.

தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவும் மற்ற வழிமுறைகள் வாயிலாகவும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

தேசிய மனித உரிமை ஆணையமோ, மனித உரிமைகளை மீறும் அரசுத்துறையினருக்கே ஏதேதோ பயிற்சிகளை கொடுப்பதாக இணையதளம் மூலம் கூறுகிறது. மக்களிடம் பணியாற்றுவதற்கான திட்டங்கள் அந்த அமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.

தமிழ்நாடு அரசோ மனித உரிமை என்ற சொல்லையே தடை செய்யும் முயற்சியில் உள்ளது. மனித உரிமை என்ற சொல்லை பயன்படுத்தி யாரும் அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது: இதுவரை அந்தப் பெயரில் செயல்பட்டு வரும் அமைப்புகளும் பெயரை உடனடியாக மாற்றவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளிடம் தவறாக நடப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. நியாயமாக நடந்துகொள்ளும் எந்த துறையும், எந்த அதிகாரியும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளே, அம்மக்களின் மனித உரிமைகளை மீறும்போது சமூக ஆர்வம் கொண்ட குடிமக்கள் திரண்டு மனித உரிமை அமைப்புகளை உருவாக்கி மனித உரிமை கலாசாரத்தை வளர்த்தெடுப்பது இயல்பானது. இத்தகைய முயற்சிகளை அரசு அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்து ஆதரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ மனித உரிமை கோட்பாட்டின் மாண்புகள் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மனித உரிமை என்ற பெயரைத் தாங்கிய அமைப்புகள் செயல்படக்கூடாது என்பது போன்ற கருப்புச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

குடிமக்களின் மனித உரிமைகளை வழங்க மறுக்கும் ஒரு அரசு குடியரசாக செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அவ்வாறான அரசுகள் மற்ற நாட்டு அரசுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், மற்ற சக்திகளுக்கும் குற்றேவல் புரியும் கூலிப்படை அமைப்புகளாகவே செயல்படும். எனவே ஒரு நாட்டின் இறையாண்மையை தீர்மானிக்கும் அம்சங்களில் முக்கிய அம்சமாக அந்நாட்டு குடிமக்களுக்கு அனுமதிக்கப்படும் மனித உரிமைகளே முக்கிய அளவுகோலாகும்.

மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு அரசுகள் விதிக்கும் தடைகளை எல்லாம் தாண்டி மனித உரிமைக் கோட்பாடுகளை கற்றுக்கொள்வதும், மனித உரிமைக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதுமே நமது உரிமைகளை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மை கடமையாகும்.

பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)

Wednesday, December 1, 2010

இதுதாண்டா போலிஸ்..!

சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ். பட்டதாரி. ஒரு தனியார் விடுதியில் பணியாற்றுகிறார்.

அன்று பணிமுடிந்து மிகவும் அசதியுடன் வீடு திரும்பியவர், இரவு உணவு முடித்துவிட்டு இலவச வண்ணத் தொலைக்காட்சியில் பொது அறிவை வளர்க்கும் ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் கதவருகில் இரு நபர்கள் நின்று அவருடைய தங்கையிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரென்று பார்ப்பதற்காக ரமேஷ் வெளியே சென்றார். அவர்கள் இருவரும் ரமேஷிடம் கேட்டனர்: நீதான் கணேசனின் அண்ணனா?”

ஆமாம்! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று சொல்ல வந்த ரமேஷ், "ஆமாம்!" என்பதை மட்டுமே சொல்ல முடிந்தது. அடுத்த கணத்தில் அவர் உடல் முழுவதும் மூங்கில் தடியால் தாக்கினர், அவ்விருவரும். 

வலி தாங்க முடியாத நிலையிலும், அவர்களிடம் எதற்காக தாக்குகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் நேரடியாக பதில் தராவிட்டாலும் அவர்கள் இருவரும் காவல்துறை துணை ஆய்வாளர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவ்விருவரும் மதுபோதையில் இருந்தனர். "எதற்காக இந்த தாக்குதல்? என்ன எதிர்பார்க்கிறார்கள்?" என்பது போன்ற எந்த தகவலும் தெரியாத நிலையில், நடக்கும் சம்பவத்தை பார்த்த ரமேஷின் தாயும், தங்கையும் அலறியவாறு ரமேஷின் மேல் விழுந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அவர்கள் மீதும் விழுந்த தடியடியில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அதற்குள் அக்கம் பக்கத்தவர்கள் அங்கே கூடிவிட்டாலும் யாருக்கும், நடக்கும் சம்பவத்தை தட்டிக்கேட்கும் தைரியம் வரவில்லை. இதற்குள் அவ்விருவரும் வைத்திருந்த மூங்கில் தடி முறிந்திருந்தது. தடியே முறிந்திருந்தால் ரமேஷின் உடலில் எவ்வளவு காயம் பட்டிருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

இதற்குள் ரமேஷின் தம்பி கணேசன் வீட்டிற்கு வந்தார். தம் அண்ணன் ரமேஷ் யாராலோ மிகக்கொடுரமாக வீட்டிலேயே தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ந்துபோய் ஓடி வந்து விசாரித்தார். ரமேஷை தாக்கியவர்கள் நீ யார் என்று கேட்டபோது, நான் ரமேஷின் தம்பி. என் பெயர் கணேசன்! என்று அவர் கூறினார்.

இதைக் கேட்ட அவ்விருவரிடமும் ஒரு கணம் அதிர்ச்சி ஏற்பட்டது. தாக்குதல் நிறுத்தப்பட்டது. நாம் தேடி வந்த கணேசன் இவன் இல்லை! என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் ரமேஷை வேறு உடை அணியச்சொல்லி ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த யாருக்கும் அந்த இருவரிடமும் எதுவும் கேட்கும் தைரியம் வரவில்லை. இதற்குள் ஆட்டோ கிளம்பிவிட்டது.

காவல் நிலையம்! ரமேஷ் எங்கு வேலை செய்கிறார் போன்ற விசாரணைகள் நடந்தன. பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் தவறுதலாய் தாக்கிவிட்டதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, அதற்கான கட்டணத்தை ரமேஷே செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டார். பிறகு சில அன்பான வார்த்தைகளுடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிகாலை நேரத்தில் வீடு திரும்பிய ரமேஷை அவர் வீட்டார் எதிர் கொண்டனர். வீடே மிகப்பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. தாயும், தங்கையும் அழுது கொண்டிருந்தனர். தம்பி குழப்பத்தில் அமர்ந்திருந்தார். உடல் வலி பொறுக்கமுடியாத ரமேஷ், தாயாரிடம் சுடுதண்ணீர் போடுமாறு கூறிவிட்டு அதில் குளித்தார். பின்னர் படுத்தனர். ஆனாலும் யாருக்கும் தூக்கம் வரவில்லை.

அடுத்தநாள் காலையில் ரமேஷ் ஒரு நண்பர் ஒருவரிடம் தமக்கு ஏற்பட்ட அவலத்தை பகிர்ந்து கொண்டார். ரமேஷூக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் சில நாட்கள் படுக்கையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டது.

இதற்கிடையில் ரமேஷ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமக்கு ஏற்பட்ட துர்சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்தப் புகார் முறைப்படி சம்பவம் நடந்த காவல்நிலையத்திற்கு வந்தது.
காவல்துறை உயர் அதிகார்கள் விசாரணைக்காக ரமேஷை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். ரமேஷ் அங்கு சென்றபோது தவறாக நடந்த ஒரு செயலை பெரிதுபடுத்த வேண்டாம்! என்று அவருக்கு அறிவுரை கூறப்பட்டது.

இதற்கிடையில் ரமேஷிற்கு நடைபெற்ற திருமண ஏற்பாடுகள், காவல்துறையில் ரமேஷ் சிக்கியதன் காரணமாக நின்று போயிற்று.

காவல்துறை அதிகாரிகளின் மெத்தனத்தை உணர்ந்த ரமேஷு்க்கு உதவ முன்வந்தார் மனித உரிமை அமைப்பை சேர்ந்த நண்பர் ஒருவர். அவரது வழிகாட்டுதலின்படி ரமேஷை காரணமின்றி தாக்கிய இரு துணை ஆய்வாளர்கள் மீதும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற மனு பதிவுத்தபால் மூலமாக உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, ரமேஷ் பணியாற்றிய நிறுவனத்தில் காவல்துறையின் தலையீடு காரணமாக அவர் சற்று அச்சுறுத்தப்பட்டார். உரிய சட்ட ஆலோசனைக்கு பின் அந்த பிரசினை தீர்க்கப்பட்டது.

எனினும் ரமேஷை தாக்கிய அந்த காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

எனவே ரமேஷ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரித்து தவறு செய்த காவல் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்றும், காரணமில்லாமல் தாக்கப்பட்டு உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்பட்ட இளைஞர் ரமேஷுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

---

இது யாரோ ஒரு ரமேஷுக்கு நடக்கும் அசாதாரண சம்பவம் அல்ல. 

தமிழ்நாட்டில் படிப்பறிவோ, சமூக அந்தஸ்தோ இல்லாத சாமானிய பொதுமக்கள் யாருக்கும் நிகழக்கூடிய சம்பவமே.

ஆனால், இதனால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களது விதியை நொந்தபடியோ, காவல்துறையை எதிர்த்து நிற்க பயந்தோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவே காவல்துறையின் அராஜகத்திற்கு மேலும் ஆதரவளிக்கிறது.

இதையெல்லாம் மீறி காவல்துறை மீது புகார் கொடு்த்தால் அந்தப் புகாரையும் காவல்துறைதான் விசாரிக்க வேண்டும். (மனித உரிமை ஆணையத்தில்கூட காவல்துறையின் மீதான புகாரை காவல்துறையினரே விசாரிக்கும் குரூர நகைச்சுவைதான் நடக்கிறது) அவ்வாறு காவல்துறை மீது புகார் கொடுக்கும் ஒரு நபரை, காவல்துறையினர் வேறு வழக்குகளில் சிக்கவைத்து சின்னாபின்னப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதையெல்லாம் மீறி இளைஞர் ரமேஷ் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளின் விளைவாக அவரைத் தாக்கிய துணை ஆய்வாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அரசுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ளது. ரமேஷுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன் மாதிரியாக ஏராளமான உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

திரைப்படங்களை பார்த்துவிட்டு, அதில் உள்ள மலிவான காட்சிகளையும், வசனங்களையும் ரசித்துவிட்டு என்கவுண்டர் படுகொலைகாரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் சூழலில் நாட்டில் உள்ள பெரும்பாலோர் இருக்கின்றனர். இந்நிலையிலும் இளைஞர் ரமேஷைப் போன்ற ஒரு சிலர் காவல்துறைக்கு எதிராக நியாயமான சட்டரீதியான செயற்பாடுகளை செய்ய துணிவதற்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். மக்கள் சட்டம் குழு, இளைஞர் ரமேஷுக்கு சட்டரீதியான ஆதரவு அளிப்பதோடு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


(இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது. வழக்கு முடிவடையும்போது புகைப்படங்களுடன் அனைத்து விவரங்களும் வெளியாகும்)

காவல் நிலையத்தில் புகார் – குற்ற விசாரணையின் முதல் படி!

ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப்புள்ளியாகும். 



சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.

எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம்.

புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல்நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல படிநிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுகலாம். அதை பிறகு பார்ப்போம்)

குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ வேறுவகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது. தாக்குதல் நடந்திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்படவேண்டும்.

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.

தாக்குதல் போன்ற சம்பவங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியம். எனவே அவர்களை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம்.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.

இவ்வாறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரித்து தகுதியுடைய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நேர்வுகளில் நீதிமன்றம் இந்தமுறையை ஏற்றுக் கொள்கிறது.

***

புகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடைய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசாரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது.

ஆனால் நடைமுறையில் காவல்துறையில், காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நன்மை செய்யும் புகார்களைத் தவிர வேறு புகார்களை ஏற்க மறுக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.  குறிப்பாக தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் குறிப்பிட்ட குற்ற நிகழ்வு நடக்கவில்லை என்பது போன்ற புறக்கணிக்கத்தக்க காரணங்களைக் கூறி புகார்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் என்ன செய்வது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(வாசகர்களின் கருத்துகளும், கேள்விகளும், அனுபவப் பகிர்வுகளுமே இந்த தொடரின் நோக்கத்தை வெற்றியடையச் செய்யும். எனவே உங்கள் எதிர்வினை மூலமே நாங்கள் உங்களுக்கு அதிக அளவில் பயன்தரத்தக்க தகவல்களை வழங்க முடியும் மக்கள் சட்டம் குழு)