Thursday, June 24, 2010

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்?

தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது வழக்கு தொடுப்பது, வழக்கு மறுப்பது, விசாரணை நடைமுறைகள், தீர்ப்பு வழங்கல் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் நடைபெறலாம் – நடைபெறுகிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை
.

ஆனால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்துவதில் பல சர்ச்சைகள் உள்ளன. இது குறித்து பெரும்பாலான நீதிபதிகளும், உயர் குலத்தோர் என்று குறிப்பிடப் படுபவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் பொருள் பொதிந்த மவுனம் சாதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பட்டியலில் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

அரசியல் பார்வையற்ற சராசரி குடிமகனுக்கு மேற்கூறப்பட்ட வாக்கியம் அதிர்ச்சி அளிக்கலாம். தமிழாய்ந்த முதல் அமைச்சருக்கு, தமிழை நீதிமன்ற மொழியாக்குவதில் தடை என்ன இருக்கக்கூடும் என்ற கேள்வி எழலாம். உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் ஏற்காத ஒரு பிரச்சினைக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்ற எண்ணமும் வரலாம். ஆனால் அது முழுமையான சிந்தனையாகாது.

எந்த ஒரு அரசிலும், அதை மக்கள் நேயமுள்ள ஒரு தலைவர் வழி நடத்தினாலும் அந்த ஆட்சியில் சிலர் பாதிக்கப்படுவது இயல்பானதே! அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குறைபாடுகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பது மக்களாட்சியின் வரம்புக்குள் அடங்கும் அம்சமே ஆகும்.

காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானாலோ, மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினாலோ அந்த பிரசினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தீராத பிரசினைகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அதையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு அந்தப் பிரசினையை தீர்க்க முயலும் பக்குவம் அந்த தலைவர்களுக்கு இருந்தது.

அண்மைக்கால ஆட்சிகளிலோ மக்களின் எந்த நியாயமான கோரிக்கைகளும் போராட்ட வடிவம் எடுக்கும் வரை கேட்காமலே புறக்கணிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே தவிர்கக இயலாமல் நடக்கும் போராட்டங்களையும் அரசின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக கருதாமல், தமது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வாக ஆட்சியாளர்கள் கருதுவதும், அதனால் கதிகலங்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவதும் வாடிக்கையாகி வருகிறது. மக்களுடைய போராட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமலிருக்கும் வகையில் ஊடக நிறுவனங்கள் சரிக்கட்டப் படுகின்றன. எதிர்க் கட்சிகள் வெளியிடும் கோரிக்கைகள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன. அரசின், ஆட்சியாளர்களின் புகழ்பாடும் கருத்துகளே ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கப் படுகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்களின் நியாயமான உரிமைகளை எடுத்துப் பேசும் களமாக நீதிமன்றம் அமைகிறது. மக்கள் பிரசினைக்காக வழக்கு தொடுக்கும்போது அந்த பிரசினை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் சென்றடைவதோடு, அந்த பிரசினை குறித்து பதில் அளிக்கும் நிர்பந்தமும் அரசுக்கு ஏற்படுகிறது. நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படுகின்றவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, மக்களின் பாதிப்பு குறித்து விவாதிப்பதற்கு ஒரு களம் உருவாகிறது என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் கூடுதல் நற்பலனே.

மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மட்டுமே தொடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் என்பது வெகு தொலைவில் இருக்கும்போது அன்றாட பிரசினைகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்றமே அருகில் உள்ளது. இவ்வாறு மக்களின் நியாயமான பிரசினைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு மொழியும் ஒரு தடையாகிறது. ஆங்கிலம் நன்று கற்ற வழக்கறிஞர்கள் பொருளீட்டும் வழக்குகளில் முழுமையாக ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துவிடுவதால் அவர்களில் பலருக்கும் சமூகம் குறித்த உணர்வுகள் விரைவில் அற்றுப்போய்விடுகிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றுவோருக்கு அரசு அமைப்புகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் – அநீதிகளையும் நியாயப்படுத்த வேண்டிய “தொழில் தர்மம்” வந்து விடுகிறது.

இந்நிலையில் மக்களின் பிரசினைகளை முழுமையாகவும், அனுபவ பூர்வமாகவும் புரிந்து கொண்டு அந்தப் பிரசினைக்கு சட்டரீதியாக தீர்வு காண முனைபவர்கள் முழுமையான ஆங்கிலப் புலமை இல்லாமல் (ஆங்கிலப் புலமை வேறு: சட்ட அறிவு, சமூக உணர்வு வேறு!) சாமானியனின் வாழ்வை வாழும் சாதாரண வழக்கறிஞர்களே. இந்த வழக்கறிஞர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் மனு அளித்தல், தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் கோருதல் போன்றவையே அரசை பல்வேறு அம்சங்களிலும் முட்டுச்சந்தில் நிறுத்தி விடுகின்றன.

தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியே அரசையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கலங்கடிக்கும் இந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதில் அவர்களுக்கு தடையாக இருப்பது மொழி மட்டுமே. இந்தத் தடையை தவிர்ப்பதற்காகவே, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக மக்கள் சார்பு வழக்கறிஞர்களாலும், சமூக பொறுப்புள்ளவர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிப்பது என்பது, தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதைப் போன்ற சாதாரணமான அம்சம் அல்ல என்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தால் கிடைக்கும் வாழ்த்துகளுக்கு எந்த பொருள் மதிப்பும் இல்லை என்பதும், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுகளால் பொருள் ரீதியான பெரும் இழப்பு ஏற்படும் என்பதும் பொருள்முதவாதிகளான தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகவேத் தெரியும். எனவேதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு இணையான இந்த செயலை செய்வதற்கு அவர்களுக்கு துணிவில்லை.

தமிழை நீதிமன்ற மொழியாக்குவதற்கு தேவையான சட்ட நூல்கள் தமிழில் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் நீதிபதிகளாலும், பெரும்பான்மை வழக்கறிஞர்களாலும் எழுப்பப்படுகிறது. அண்டை நாடான இலங்கையில் மருத்துவம் தமிழ் வழி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பொறியியலை தமிழ்வழி கற்பிப்பதற்கான பாடநூல்கள் வெளியாகிவிட்டன. தமிழில் வாதாடும் வழக்கறிஞர்கள் பெருகும் நிலையில் சட்டநூல்களும் தேவையான அளவுக்கு வெளியாகும். தமிழை வளர்ப்பதற்காக இல்லை என்றாலும், வணிக நோக்கத்திலாவது தமிழில் தரம் வாய்ந்த சட்ட நூல்கள் வெளியாகும்.

தமிழில் வாதாடும் வாய்ப்பு கிடைத்தால் பொதுமக்களே நேரடியாக வழக்கை நடத்த முன் வந்து விடுவார்கள்: வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கருத்தும் சில வழக்கறிஞர்களிடம் உள்ளது. ஒரு வழக்கை நடத்த வெறும் சட்ட நூல்கள் (Bare Act Books) மட்டுமே போதாது என்பது வழக்கு நடத்தி அனுபவம் பெற்ற அனைத்து மக்களுக்கும் தெரியும். ஒரு வழக்கை வெற்றிகரமாக நடத்த அந்த விவகாரம் குறித்து நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்புகளும், வேறு பல அம்சங்களும் தேவை என்ற உண்மை சாதாரண மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் வழக்கு நடத்தினால், வழக்கு நடத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற வழி பிறக்கும். இது வழக்காடும் மக்களுக்கு நல்லதே. இதனால் நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படபோவதில்லை.

எனவே நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிப்பதில் சாதாரண மக்களுக்கு நன்மையே ஏற்படும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆளும் வர்க்கமாகவே இருக்கும். ஆட்சியில் இருப்போர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரே தமிழ் நீதிமன்ற மொழியாவதில் முதன்மையாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

மக்களின் உழைப்பை சுரண்டி திரட்டப்பட்ட பொது நிதியை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் கவர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வாக்குகளை அள்ள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாவதால் சிக்கல்கள் ஏற்படலாம். அரசின் பொறுப்பற்ற போக்கை, தொலைநோக்கற்ற குறுகிய அரசியல் பார்வைகளை, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் சீர்கேட்டை பொதுநல வழக்கு என்ற பெயரில் பொதுமக்கள் கேள்வி கேட்டால், அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களுக்கு வரும். தங்களை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, போற்றுதலுக்கு மட்டுமே உரியவர்களாக கருதிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்படுவதை எப்படி அனுமதிப்பார்கள்? எனவே இந்த அரசியல்வாதிகள், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பகல் கனவே!

இதையடுத்து உயர்குலம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்படும் வழக்கறிஞர்களும், ஆங்கிலம் அறிந்த காரணத்தாலேயே தம்மையும் உயர் குலத்தவராக கருதிக் கொள்ளும் வழக்கறிஞர்களும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பதால் பாதிக்கப்படுபவர்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகை வழக்கறிஞர்களின் ஆதிக்கத்தில் நீதித்துறை இருப்பதாலேயே ஏராளமான வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.

சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை இல்லாததால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களை நாடும் நிலை உள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களின் பணிச்சுமை அதிகரித்து பாதிக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை உடனே பெற்றுத்தராமல், அம்மக்களை அந்த அநீதிக்குள் பல காலம் வாழுமாறு நிர்ப்பந்தப் படுத்துகிறது.

இந்த அவல நிலையை மாற்றவதில், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கும் செயல் முக்கிய பங்கு வகிக்கும். தமிழ் நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து வழக்கறிஞர்களும் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். எனவே மக்கள் நலன் நாடும் வழக்குகளில் தேவையின்றி காலநீட்டிப்பு (வாய்தா) பெற வேண்டிய அவசியம் இருக்காது. தாமதித்து வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வசனம் பேசிக்கொண்டே அந்த அநீதியை தொடர்ந்து இழைத்து வரும் நீதித்துறை திருந்தும் காலம் வரும்.

சுருக்கமாக கூறினால் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மொழி வளர்ச்சிக்கான செயல்பாடு மட்டுமே அல்ல. இது கடைக்கோடி மனிதனுக்கும் சமூக நீதி உள்ளிட்ட மனித உரிமைகளை கொண்டு சேர்க்கும் அருமையான வாய்ப்பாகும். அரசின் கடப்பாடுகளை வலியுறுத்தி உரிமைகளை பெறவும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டமைக்கவும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமான செயல்பாடாகும்.

இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே மக்களுக்காக, மக்களால் கட்டமைக்கப்பட்ட குடியரசு என்பது உண்மையானால் தமிழ் மட்டுமல்ல – அனைத்து மாநில மக்களும் அந்தந்த மாநில மொழிகளை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்.

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Monday, June 14, 2010

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம் ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் .

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing) என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009 என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது.

-மு.வெற்றிச் செல்வன்
(Vetri @Lawyer.Com)

Friday, June 11, 2010

அணுஉலை விபத்து இழப்பீட்டு சட்டம் – சொந்த செலவில் சூனியம்

உலகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழலியலும், அது சார்ந்த சட்டவியலும் பெரு வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படை அம்சங்களாக முன்னெச்சரிக்கை கோட்பாடு” (Precautionary Principle) மற்றும் சீரழிப்பவரே இழப்பீடு செலுத்த வேண்டும்” (Polluter Pays) ஆகிய கோட்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியதும், சூழலை மாசுபடுத்தக்கூடியதுமான பல தொழில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டுக்கு பிறகு ஒரு புதிய அணுஉலைகூட அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அழியா ஆற்றல் மூலங்களான சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கும் வழிமுறைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் நடைமுறையில் பின்பற்றப் படுவதில்லை. இதற்கு உதாரணமாக போபால் விஷவாயு விபத்தைக் கூறலாம். 1984ஆம் ஆண்டில் நடந்த இந்த விபத்தின் காரணமாக சுமார் 15 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தனியாக நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று கூறிய மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அரசே வழக்கு தொடுக்கும் என்று அறிவித்தது. ஆயினும் இம்மக்களுக்கான தீர்வு விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் முழுமையாக கிடைக்கவில்லை. இறையாண்மை மிக்க இந்தியாவின் நாடாளுமன்றமுமம், நீதி மன்றை அமைப்புகளும், பிற அதிகார அமைப்புகளும் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமே இழைத்து வருகின்றன. போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் வாரிசுகளும் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினால் தடியடிகளும், சிறைத்தண்டனைகளுமே பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த விபத்திலிருந்து இதுவரை இந்தியா எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. நாட்டிலுள்ள அணுமின் நிலையங்களும் போபாலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. ஆபத்து மிகுந்த இந்த அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவையோ, சிக்கனமானவையோ, ஆற்றல்மிகுந்தவையோ அல்ல என்பதை சூழலியல் நிபுணர்கள் பலமுறை நிரூபணம் செய்துள்ளனர். எனினும் இந்த அணுஉலைகளை தொடர்ந்து இயக்குவதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இன்றைய நிலையில் அணுமின் நிலையங்களில் விபத்தே ஏற்படாது என அரசு உட்பட யாரும் உறுதி கூற முடியாது. அணுமின் நிலையங்கள் இயங்குவது நிகழ்கால ஆபத்து. அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகள் எதிர்காலத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கான ஆபத்தாக விளங்கும். இதை அணுசக்தி ஆதரவாளர்கள் யாரும் மறுப்பதும் இல்லை. இவ்வளவு ஆபத்தான அணுசக்தி தேவைதானா? என்ற கேள்விக்கு நேரடியான பதில் அளிப்பதும் இல்லை.

இந்நிலையில் அணுமின் உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு அளிப்பது குறித்த சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மனிதர்களுக்கு பாதிப்பே இல்லாத வகையில் மின்சக்தி தயாரிக்கும் வழியை கண்டுபிடிப்பதைவிட்டு இழப்பீடு தருவதற்காக ஒரு சட்டமா என்று சினம் கொள்ளாதீர்கள். இது நீங்கள் நினைப்பதைப்போல பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான சட்டம் அல்ல.

அதற்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் நயவஞ்சக திட்டத்தை, ஒரு சட்டமாக மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இதற்கான தேவை குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் இயங்கும் அனைத்து அணு உலைகளையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்திக் கழகம் என்ற அமைப்பே இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளோ, நிறுவனங்களோ இணைந்து செயல்படுகின்றன. இவற்றில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகம் முதலீடு செய்வதற்கு முனைந்து செயல்படுகிறது. இந்த முதலீட்டுத் தொகையும், அதற்குரிய லாபமும் சிறிதும் குறையாமல் கிடைக்கவேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதன் மூலம் தங்கள் வருவாய்க்கு இழப்பு ஏற்படக்கூடாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே விபத்துகளுக்கான இழப்பீடு வழங்குவதிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்தன.

இதையடுத்து, “The Civil Liability for Nuclear Damage Bill, 2010” என்ற பெயரிலான அணுஉலை விபத்து இழப்பீட்டு வரம்பு நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டத்தின் 6வது அம்சம் அணு உலை விபத்துக்கான இழப்பீட்டிற்கான உச்சவரம்பு அதிகபட்சமாக சுமார் ரூபாய் இரண்டாயிரத்து நூறு கோடி (2100 கோடி ரூபாய்) என்று நிர்ணயம் செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் இதைப்போல சுமார் 23 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த 2100 கோடி ரூபாயிலும் வெறும் 500 கோடி ரூபாயை மட்டும் அந்த அணுஉலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள் செலுத்தினால் போதுமானது. (அதையும் அந்த நிறுவனங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் வசூலித்துவிடும் என்பது வேறு கதை!) மீதித் தொகையான சுமார் 1587 கோடி ரூபாயை இந்திய அணுசக்தி கழகம் என்ற பொதுத்துறையின் பெயரால் இந்திய அரசு வழங்கி விடும். இதற்கான தொகை எங்கிருந்து வரும் என்று கேட்கிறீர்களா இந்திய குடிமக்கள் கட்டும் பல்வேறு வரிகளிலிருந்து திரட்டப்படும் அரசு நிதிதான், இந்தியர்களுக்கு பேரழிவு ஏற்படும்போது வெளிநாட்டு நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கத்தில் செலவழிக்கப்படும்.

இது போன்ற பேரழிவுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களே காரணம் என்று நிரூபிக்கப்பட்டால்கூட அந்த நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையும் இந்திய குடிமக்களுக்கு இந்த சட்டத்தின் வாயிலாக மறுக்கப்படுகிறது. (பிரிவு 17)

உண்மையைச் சொல்லப்போனால் இந்த சட்டம், அணு உலை விபத்து ஏற்படும் பட்சத்தில் அது குறித்து விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய நீதிமன்றங்களிடம் இருந்தே பறித்து விடுகிறது. (பிரிவு 35)

விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிப்பதற்காக அணு உலை பாதிப்பு இழப்பீடு ஆணையம் அமைக்கப்படும். இதன் ஆணையர்கள் மேற்கொள்ளும் முடிவுகளே இறுதியானவை. இதற்கு எதிராக நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஒரு அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதன் தீய விளைவுகள் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும். இம்மாதிரியான விளைவுகள் குறித்து இதுவரை எந்த முழுமையான ஆய்வும் இதுவரை நிறைவு பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கோருவதற்கு வெறும் பத்தாண்டு காலத்தை மட்டுமே காலக்கெடுவாக விதிக்க இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. அதாவது அணுஉலை விபத்து ஏற்பட்ட தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மட்டுமே இழப்பீடு கோர முடியும் என்று இந்த சட்டம் வரம்பு விதிக்கிறது. (பிரிவு 18) விபத்து ஏற்பட்டு அதன் விளைவான தீய விளைவுகள் 10 ஆண்டுகள் கழித்து தெரியவந்தால் அதற்காக இழப்பீடு கோர முடியாது என்பதுதான் இந்தப் பிரிவின் கருப்பொருள்.

இது போன்று இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச கடமைகள் ஏதும் இந்தியாவிற்கு இல்லை என்ற போதிலும் அமெரிக்க எஜமானர்களுக்கு அடிபணிந்து நடக்கும் இந்திய ஆட்சியாளர்களின் பணிவு வேட்கையே இத்தகைய சட்டத்தை இங்கு கொண்டு வரமுயற்சிக்கிறது.

இந்த சட்டத்திற்கான முன்வடிவை பரிசீலனை செய்த பிரபல அரசியல் அமைப்புச் சட்டநிபுணர் சோலி சொராப்ஜி, “இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் பல முன்மாதிரி தீர்ப்புகளுக்கும் எதிரான இந்த சட்டத்திற்கான தேவை எதுவும் இன்று இல்லை: இந்த சட்டம் யாருடைய நிர்பந்தத்தில் கொண்டு வரப்படுகிறது என்பதும் புரியவில்லை!” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அணுசக்தி தொடர்பான பல்வேறு வர்த்தகங்களை செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் கொண்டுவர முயற்சிக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தைப்போல ஐரோப்பிய நாடுகளிலோ, வேறு வளரும் நாடுகளிலோகூட எந்த சட்டமும் இல்லை.

சாமானியர்களுக்கும் சட்டத்துக்கும் தொடர்பில்லை என்ற தவறான கருத்து சமூகத்தில் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தை பயன்படுத்துகின்றனரே தவிர, சட்டத்தை உருவாக்கும் பணி சாமானிய மக்களின் பெயரால், மக்களின் பிரதிநிதிகளால்தான் நடைபெறுகிறது. எனவே சமூக ஆர்வம் கொண்ட எவரும் சட்டத்தை திறனாயும் நோக்கத்தில் படித்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்! மேலும் மக்களுக்கு எதிரான இது போன்ற சட்டங்களை அனைத்து தளங்களிலும் எதிர்ப்பது, நமது சந்ததிகளுக்கு நாம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையாகும்!


-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
நன்றி: சட்டப் பாதுகாப்பு, ஜூன் 2010