Thursday, September 27, 2012

பொ. ரத்தினம் : மதராசி வக்கீல்


களத்தில் இறங்கி மக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு சமூகப் போராளியின் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் ஒருபோதும் 'நான்’ என்பது துருத்திக்கொண்டு நிற்காது. எந்தச் சூழலிலும் அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவது இல்லை. 68 வயதாகும் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அப்படி ஓர் அற்புதம்!

மணிக்கணக்காகப் பேசினாலும் உரையாட லில் ஓர் இடத்தில்கூட 'நான்’ என்று ஒரு தடவைகூட உச்சரிக்க மாட்டார். திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் கடந்த 45 ஆண்டுகளாக ரத்தினம் ஆற்றி வரும் களப் பணிகள்... ஆர்வம் உள்ள எல்லோருக்கும் அரிச்சுவடி. மேலவளவு படுகொலை, அத்தியூர் விஜயா, மனித மலத்தை வாயில் திணித்த திண்ணியம் வன்கொடுமை... இப்படி ஒடுக்குமுறைகள் நிகழும் இடங்களில் இவரைக் காணலாம். நைந்த செருப்பு, ஒரு பழைய சூட்கேஸ்... இவைதான் ரத்தினத்தின் உடைமைகள். இவற்றோடு நீதிக்கான நீண்ட பயணத்தை நிகழ்த்தும் மனிதர்.
''விருத்தாசலத்தில் முருகேசன் என்ற தலித் பையன், கண்ணகி என்ற வன்னியர் பெண்ணைக் காதலிக்கிறார். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து, அந்தப் பெண்ணைத் தன் உறவினர் வீட்டில் தங்கவைக்கிறார். பெண்ணைக் காணவில்லை என்றதும் தேடுகின்றனர். முருகேசன் மீது சந்தேகம் வந்து, அடித்துச் சித்ரவதை செய்கிறார் கள். அவர் வலியைப் பொறுத்துக்கொண்டு, 'எனக்குத் தெரியாது’ என்கிறார். உடனே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தோண்டிவைத்திருந்த 300 அடி ஆழக் குழிக்குள் முருகேசனைக் கயிற்றில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடுகின்றனர். உயிர் பயத்தில் உண்மையைச் சொல்கிறார். உடனே, உறவினர்கள் சென்று கண்ணகியை அழைத்து வருகிறார்கள். அந்த இடைவெளியில் ஊரில் விறகுகள் அடுக்கி எரிப்பதற்கு மயானம் தயார் செய்யப்படுகிறது. பெண்ணை அழைத்து வந்தது முருகேசனின் சித்தப்பா. அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, மற்றவர்கள் சேர்ந்து முருகேசனுக்கும் கண்ணகிக்கும் வாயில் விஷத்தை ஊற்றுகின்றனர். அவர்கள் குடிக்காமல் துப்பவே, காதில் விஷத்தை ஊற்றி இருவரையும் கொல்கிறார்கள். கண்ணகியை மட்டும் வன்னியர் சுடுகாட்டில் எரித்துவிட்டு, முருகேசனை வேறு ஓர் இடத்தில்வைத்து எரிக்கிறார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த கூட்டம் கலைந்து செல்கிறது. எதுவுமே நடக்காததுபோல அடுத்த நாளில் இருந்து இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.

இது ஏதோ கற்காலத்தில் நடந்தது அல்ல. சில வருடங்களுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் நடந்தது தான். முருகேசனும் கண்ணகியும் செய்த தவறு என்ன? காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் அவ்வளவு பெரிய குற்றமா? முருகேசன் இன்ஜினீயரிங் படித்தவர். கண்ணகி பி.காம். படித்தவர். ஒரு கிராமப்புற தலித் குடும்பத்துப் பையன் இன்ஜினீயரிங் வரை படிப்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. கடைசியில் சாதி வெறி முருகேசனைக் காவு வாங்கிவிட்டது. படித்துவிட்டால் சாதி இழிவு நீங்கிவிடும் என்று சொல்வது எத்தனை அபத்தமானது?'' - ரத்தினத்தின் குரலில் கோபம் தெறிக்கிறது.

தமிழ்நாட்டு தலித்துகள் மீதான மிக மோசமான அடக்குமுறைக்குச் சான்றாக இருக்கும் சம்பவம் மேலவளவு முருகேசன் படுகொலை. தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட மேலவளவு ஊராட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதும் வெற்றிபெற்றதும்தான் முருகேசன் செய்த ஒரே தவறு. விளைவு... உள்ளூர் ஆதிக்கச் சாதி வெறியர்களால் முருகேசனும் இன்னும் ஐந்து தலித்துகளும் பட்டப்பகலில் பேருந்தை வழி மறித்து வெட்டிக் கொல்லப்பட்டார்கள். வெட்டி எடுக்கப்பட்ட முருகேச னின் தலையை ஒரு கிலோ மீட்டர் தள்ளி வீசினார்கள். மொத்த இந்தியாவையும் அதிரவைத்த இந்தப் படுகொலையில் தலித் மக்களுக்காகக் களம் இறங்கி உச்ச நீதிமன்றம் வரையிலும் சட்டப் போராட்டம் நடத்தி 17 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தவர் ரத்தினம். தற்போது மதுரையில் இருந்து செயல்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் என்ற கிராமம்.

''என் அப்பா ஒரு சிறு விவசாயி. திருச்சி தேசியக் கல்லூரியில் பி.காம். படித்தேன். பாடப் புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் படிக்கப் படிக்க... மக்களுக்காக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. வீட்டில் என்னை எம்.பி.பி.எஸ். படிக்கவைக்க ஆசைப்பட்டார்கள். எனக்குச் சட்டம் படிக்க ஆசை. 'இரண்டையும் படித்துவிட்டு மக்களுக்காக உழைப்போம்’ என்ற எண்ணத்தில் சென்னைக்கு சட்டம் படிக்கப் போனேன். அங்கு சமூக அக்கறையுடன் செயல்படும் பல தோழர்கள், அமைப்புகளின் தொடர்பு கிடைத்தது. நிறையப் பேசுவோம், எழுதுவோம். 'புது நிலவு’ என ஒரு பத்திரிகை நடத்தினோம். பாக்கெட் சைஸில் 'சுட்டி’ என்ற பத்திரிகை நடத்தி, அது 22 ஆயிரம் பிரதிகள் விற்றது.

சட்டக் கல்லூரியில் தமிழில் பாடத்திட்டம் கொண்டுவரச் சொல்லி சட்டமன்றத்தில் போய்ப் போராடினோம். உடனே, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, 'தமிழில் பாடம் நடத்தப்படும். ஆனால், தேர்வுகள் ஆங்கிலத்தில் நடக்கும்’ என்றார். எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்?! மறுபடியும் அதற்குப் போராடி தமிழிலேயே தேர்வும் எழுதலாம் என அறிவிக்கவைத்தோம்.

குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தப்படுவதற்கு எதிராக வேலைகள் பார்த்தோம். இப்போது வள்ளுவர் கோட்டம் இருக்கும் இடம் ஒரு குடிசைப் பகுதிதான்.

கல்லூரி முடிந்ததும் வீட்டில் திருமணப் பேச்சு நடத்தினார்கள். 'நான் சொத்து சேர்க்கும் வக்கீல் கிடையாது. நான் இப்படித்தான் இருப்பேன். யாராவது சம்மதித்தால் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.

அதன் பிறகு, தருமபுரி பகுதியில் வால்டர் தேவாரத்தின் மோசமான மனித உரிமை மீறல் களுக்கு எதிராக வேலை பார்த்தோம். பல வழக்குகள், போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் என மாநிலம் முழுவதும் சுற்றித் திரிந்தேன். பிறகு, நண்பர்கள் அழைப்பின் பெயரில் குஜராத் துக்குச் சென்றேன். அங்கு, பரோடாவுக்கும் சூரத்துக்கும் நடுவே ப்ரூச் மாவட்டத்தில் ஒரு மலைக் கிராமத்தில் பழங்குடி மக்களிடையே
வேலை பார்த்தோம். காவல் துறையும் வனத் துறையும் சேர்ந்துகொண்டு பழங்குடி மக்கள் மீது விருப்பம்போல பொய் வழக்குகளைப் போடுவார்கள். ஒருமுறை, புதிதாகத் திருமணம் முடித்திருந்த ஒரு பழங்குடிப் பெண்ணைக் காவல் துறையினரும் வனத் துறையினரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிவிட்டார்கள். 

அடிமைகளைப் போல ஒடுக்கப்பட்டுஇருந்த பழங்குடி மக்களுக்கு, இதற்கு எதிராகப் போராடி நியாயம் பெறலாம் என்று நம்பிக்கை தந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தோம். அந்த வழக்கு குஜராத்திலும் டெல்லியிலும் பெரிய அளவுக்குப் பேசப்பட்டது. என்னை 'மதராசி வக்கீல்’ என்று சொன்னார்கள். ஐந்து போலீஸ்காரர்களுக்கு 10 வருடங்கள் தண்டனை வாங்கிக்கொடுத்தோம். நான்கு வருடங்கள் குஜராத்தில் இருந்துவிட்டு மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன்!'' நினைவுகள் அழைத்துச் செல்லும் திசையில், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டே போகிறார் ரத்தினம்.
''
நம் நாட்டின் சாதிய அமைப்பு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கிறது. எல்லா சாதிக்காரர்களும் தனக்கும் கீழே ஒரு சாதி இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகச் சாதி ஒழிந்தால்தான் அந்த இழிவு போகுமே தவிர, தனக்கு மேலே இருக்கும் சாதி ஆதிக்கத்தை மட்டும் தனியே ஒழிக்க முடியாது. இப்போது உள்ள ஒடுக்கப்பட்டோர் கட்சிகள் எல்லாமே, தலித் மக்களை வைத்து அரசியல் செய்து பிழைக்கின்றன. உண்மையில் அந்தக் கட்சிகள் சாதி இருப்பதை விரும்புகின்றன. சாதி ஒழிந்துவிட்டால், அவர்களால் பிழைக்க முடியாது. தலித்துகளின் வாயில் மனித மலத்தைத் திணித்த திண்ணியம் வழக்கில் குறைந்தபட்சத் தண்டனையோடு குற்றவாளிகள் வெளியே வந்துவிட்டனர். அதற்கு எதிரான மேல் முறையீடு செய்ய தலித் அமைப்புகளே முட்டுக்கட்டை போட்டுவிட்டன. இத்தகைய பிழைப்பு வாதக் கட்சிகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அரசியல் கிரிமினல்களை ஒழித்துக்கட்டி, மக்களின் மீது உண்மையான கரிசனம் உள்ள புதிய அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னலமற்ற அமைப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்'' என்கிற ரத்தினம், மாநிலம் முழுவதும் உள்ள சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து 'சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்’ என்ற பெயரில் செயல்படுகிறார். 'புத்தர் பாசறை’, 'சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு’ போன்றவை யும் இவர் உருவாக்கியவையே.

ரத்தினத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் புகழ் பெற்றவை. நீதிமன்றங்களையும் நீதிபதிகளை யும் வழக்கு நடக்கும்போதே நேருக்கு நேர் விமர்சிப்பார். ஆனாலும் இதுவரை 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு’ இவர் மீது பாய்ந்தது இல்லை.

''ஏனெனில் உண்மை என் பக்கம் இருக்கிறது. என்னை 'ஒன் மேன் ஆர்மி’ என்பார்கள். நான் ஜூனியர்கள் வைத்துக்கொள்வது இல்லை. கூட்டத்தைத் திரட்டுவது இல்லை. உண்மையை மட்டுமே சொல்கிறேன். அச்சம் இல்லாமல் சொல்கிறேன். எதற்கு அஞ்ச வேண்டும்? 'தலித்துகள் எல்லாம் ஃப்ராடுகள்’ என்று ஓப்பன் கோர்ட்டில் ஒரு நீதிபதி சொல்கிறார். அவருக்கே அச்சம் இல்லை. நாம் எதற்குப் பயப்பட வேண்டும்? நீதிபதிகள் எல்லோரும் மக்கள் ஊழியர்கள்தான். நமது வரிப் பணத்தில்தான் அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், நீதிமன்றங்கள்பற்றிய மிகையான பெருமிதமும் அச்சமும் மக்களுக்கு இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணய்யர் ஓய்வுபெறும்போது, 'நான் நிறையத் தவறுகள் செய்துவிட்டேன்போல் இருக்கிறது. நீதிமன்றத்தின் மீது மக்களுக்குப் பெரிய நம்பிக்கையை உருவாக்கிவிட்டேன்’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார். மக்களின் நம்பிக்கை ஒரு பக்கம் இருக்க... 90 சதவிகித வழக்கறிஞர்களே இன்னமும் 'மை லார்டு’ என்றுதான் சொல்கிறார்கள். நீதிபதிகள் அதை விரும்பவில்லை என்றாலும் வக்கீல்கள் கைவிட மறுக்கிறார்கள். நாம் இவை அனைத்தையும் கடந்துதான் பாதிக்கப்படும் மக்களுக்கான நீதியைப் பெற வேண்டி இருக்கிறது!''

-பாரதி தம்பி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி: ஆனந்தவிகடன், 03 அக்டோபர் 2012


Friday, August 3, 2012

காவல் நிலையத்தின் கதை!


ந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம்... அங்குள்ள காவல் நிலையம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்... நம்புங்கள்... பத்திரப் பதிவுத் துறை, விற்பனை வரித் துறைகளைவிட காவல் துறையில் 'மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை... வாருங்கள் காவல் நிலையத்துக்கு ஒரு விசிட் அடிப்போம்.

 தமிழகத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள், சுமார் 250 ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர்கள்... பிரமாண்ட ஆலமரமாகக் கிளை பரப்பி இருக்கும் காவல் துறையில் கட்டப் பஞ்சாயத்தும் லஞ்சமும்கூடப் பிரமாண்டம்தான். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்?

ஃபர்ஸ்ட் இன்கம் ரிப்போர்ட்!
முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்... போலீஸாரைப் பொறுத்தவரை பொன் முட்டையிடும் வாத்து. காவல் நிலைய நடைமுறைகளில் முதல் நடைமுறையே எஃப்.ஐ.ஆர். பதிவுதான். அதில் இருந்தே தொடங்குகிறது வசூல் வேட்டை. காவல் நிலையத்தில் ஒருவர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வேண்டும். புகாரின் தன்மையைப் பொறுத்து அன்றைய தினமே எஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? புகாரைப் பெற்றுக்கொண்டு உடனே புகாரில் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பை அழைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். புகார்தாரர், எதிர்த் தரப்பு... இவர்களில் யாரிடம் அதிக பேரம் நடக்கிறதோ, அவர்களுக்குச் சாதகமான வகையில் புகார் பதிவு செய்யப்படும் அல்லது பதிவுசெய்யப்படா மலேயே போகும். ஒருவேளை போலீஸ் வற்புறுத்தியும் புகார்தாரர் புகாரை வாபஸ் வாங்க மறுத்தால், அதற்கெல்லாம் அசரவே மாட்டார்கள். எதிர்த் தரப்பிடம் ஒரு புகாரை வாங்கி, ஒரிஜினல் புகார் கொடுத்தவர் மீதே வழக்குப் பாய்ச்சி அதிரவைப்பார்கள். 'ஏன்தான் காவல் நிலையத்துக்குச் சென்றோமோ’ என்று விரக்தியில் நொந்தேபோவார் புகார்தாரர்.  இந்த எஃப்.ஐ.ஆரை எப்படியும் வளைக்கலாம். அது நிலையத் தின் அனுபவசாலிக்குக் கைவந்த கலை. உதாரணமாக, ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்ஷன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்ஷன் 506 (1)ல் பதிவுசெய்தால் ஸ்டேஷனில் இருந்து கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினாலே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.
கைதுக்கும் காசு!
பதிந்த எஃப்.ஐ.ஆர். மீது குற்றம்சாட்டப் பட்டவரைக் கைதுசெய்யவும் கைது செய்யாமல் இருக்கவும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்க வேண்டும். புகார்தாரர், குற்றம்சாட்டப்பட்டவர் இருதரப்பில் யாரிடம் அதிக பேரம் படிகிறதோ, அவருக்குச் சாதகமாக நடவடிக்கை பாயும். குற்றம்சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்தால், அதை ஆட்சேபிக்காமல் இருக்கவும் பணம் வேண்டும்.

ரெக்கவரி ரீல்!
மேற்கண்ட வகை வருமானம் எல்லாம் சட்டம் - ஒழுங்கு போலீஸாருக்கு மட்டும்தான். இவர்களுக்கு அன்றாட வருமானம் என்றால், குற்றப் பிரிவு போலீஸாருக்கு இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறைதான் வருமானம். ஆனால், செம லம்ப் வருமானம். திருடு போன சொத்துகளை மோப்பம் பிடித்து, துப்புத் துலக்கி மீட்கும் கடமைஆற்றும் போலீஸாருக்கு ஒவ்வொரு வழக்கும் புதையல் வேட்டைதான். 100 பவுன் திருடு போய்விட்டதாகப் புகார் அளித்தால், உடனே எஃப்.ஐ.ஆர். போட மாட்டார்கள். ஆனால், உடனடியாக வியர்க்க விறுவிறுக்க தேடுதல் வேட்டை நடத்துவார்கள். எந்தத் திருடன், எந்த ஏரியாவில், எந்த ஸ்டைலில் தேட்டை போடுவான் என்பதெல்லாம் ஸ்டேஷன் காவலர்களுக்கு அத்துப்படி. திருடனை அமுக்கிப் பிடித்து, 'சிறப்பு விசாரணை’ மூலம் நகையை எங்கே பணமாக்கினான் என்று ஆதியோடு அந்தமாக உண்மையைக் கறந்துவிடுவார்கள். அண்ணா நகர், அமைந்தகரை தொடங்கி ஆம்பூர் வரை தான் கைவரிசை காட்டிய இடங்களை அவன் பட்டியல் இடுவான். அப்போது போலீஸ் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியா காவல் நிலையத்திலும் அவன் மீது தனித்தனி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். அந்தந்த நிலைய விசாரணை அதிகாரி, அவரது எல்லையில் திருடுபோன சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.
ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? திருடன் நகையை விற்ற நபர்களிடம் அதட்டி மிரட்டி தங்கத்தை மீட்பார்கள். இப்படி 10 வழக்குகளுக்கான மொத்த திருட்டுச் சொத்தையும் ஒன்றுதிரட்டினால், 200 பவுனுக்குக் குறையாமல் கிடைக்கும். பிறகு, புகார்தாரரைக் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுவார்கள்.
''அந்தப் பய எல்லாத்தையும் வித்து சாப்புட்டுட்டான். உங்களப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. அதுவும் அடுத்த மாசம் பொண்ணுக்குக் கல்யாணம்கிறீங்க... நாங்க வேணா ஒண்ணு செய்யறோம். வேற கேஸ்ல கொஞ்சம் நகை சிக்கி இருக்கு. அது முப்பது பவுன் தேறும். நீங்க ஒரு அமவுன்ட் கொடுத்தா, அதை எடுத்து உங்களுக்குச் சரிக்கட்டிடலாம்'' என்பார்கள். ஆட்களின் வசதியைப் பொறுத்து, லட்சங்களையோ ஆயிரங்களையோ பெற்றுக் கொண்டு... கட்டக் கடைசியாகத்தான் எஃப்.ஐ.ஆர். பதிவார்கள். 100 பவுனுக்கு 30 பவுன் திருடுபோனதாகப் பதிவுசெய்து... அதையும் வெற்றிகரமாக மீட்டுக் கொடுத்ததாக பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுப்பார்கள். லாபம், 170 பவுன் ப்ளஸ் சில லட்சங்கள்! நாம் இதை நம்ப முடியாமல் பழுத்த அனுபவம் உள்ள சில கிரிமினல் லாயர்களிடம் விசாரித்தபோது, 'இது அனைத்தும் 100 சதவிகிதம் உண்மைதான்!’ என்றுஆமோதித்தார்கள். அட... ஆண்டவா!

ஏன் இந்தக் கொள்ளை?
காவல் நிலையங்களில் ஏன் இந்த அடாவடி வசூல்? இதில் ஒரு சின்ன உண்மை என்ன வென்றால், தங்கள் சுயலாபத் துக்கு மட்டுமே காவலர்கள் இப்படி வசூல் வேட்டை நடத்துவது இல்லை. காவல் நிலையத்தின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்று நேர்மையாகச் செயல்படும் பல காவலர்களே சொல்கிறார்கள்.  

விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், ஸ்டேஷனில் இருக்கும்வரை அவருக்கு உணவு, காபி, டீ முதலிய அத்தனையும் அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்புதான். இப்படி விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபரின் மூன்று வேளை உணவுச் செலவுக்கென அரசு வழங்கும் தொகை 10 ரூபாய் மட்டுமே.
குற்றவாளியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற போக்குவரத்துச் செலவுக்கு அரசு பஸ் கட்டணம் மட்டுமே அரசின் அளவுகோல்.

விழிபிதுங்கும் கூட்ட நெரிசலில் நகரப் பேருந்துகளில் அக்யூஸ்டை அழைத்துச் செல்ல முடியுமா? ஆட்டோ தான் ஒரே வழி. கடைநிலைக் காவலர்கள் தங்கள் கைக்காசு மூலம்தான் அதைச் சமாளிக்க வேண்டும்.

இதைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், உயர் அதிகாரிகள் இழுத்துவிடும் செலவுதான் பலரை மூச்சு முட்ட வைக்கும். உயர் அதிகாரி துப்பு துலக்கவோ... மோப்பம் பிடிக்கவோ ஏரியாவுக்கு வந்தால், அந்த ஊரின் நட்சத்திர ஹோட்டல் அறை, அவரது போக்குவரத்துக்கு ஏ.சி. கார், சாப்பாடு, சரக்கு முதல் 'மேற்படி’ச் செலவு வரை அனைத்துமே அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்புதான்.

காவல் நிலைய ஜீப்புக்கு அரசு மாதம் ஒன்றுக்கு 160 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்கிறது. இதை அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசு பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பிக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிலையத் தின் உயர் அதிகாரிகள் தனது சொந்த வாகனத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பின் பதிவு எண்ணைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக்கொள்வார். அப்படியெனில் ஸ்டேஷன் ஜீப்புக்கு? ஏரியா பெட்ரோல் பங்க்கில் மாமூலுக்குப் பதில் டீசல். இதுவும் இன்ன பிறவுமாக அனுதினமும் குவியும் செலவுகளைச் சமாளிக்கவே காவலர் கள் இப்படி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வசூல் மேளா நடத்துவதாக நியாயம் கற்பிக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் சொல்லும் கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அந்தச் செலவுகளெல்லாம் போலீஸார் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவிகிதம்கூட இல்லை.

பட்டையைக் கிளப்பும் வசூல் பேட்டை.  
சென்னையின் பரபரப்பான இடத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் நாள் ஒன்றின் 'மேல்’ வருமானமே இரண்டு, மூன்று லட்சங்களைத் தொடும். மற்ற நகரங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு லட்சத்துக்குக் குறையாது. தமிழகம் முழுக்க அப்படி வசூலில் பட்டை கிளப்பும் சில பேட்டைகள் இங்கே...
வணிக நிறுவனங்கள் மற்றும் 'அண்டர்கிரவுண்ட் பஜார்’கள் காரணமாக சென்னையில் பூ மணக்கும் ஸ்டேஷனும் யானையே கவிழ்ந்த ஸ்டேஷனும் வருமானத்தில் நம்பர் ஒன்.

காஞ்சிபுரத்தில் 'கூடு வா’ என்று அழைக்கும் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு கார் நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் தொழிலும் களைகட்டுவதால், அடிபிடி வருமானம். மதுரை யில் 'இந்த’க் காவல் நிலையத்துக்கு மட்டும் 'திடீர் திடீர்’ என யோகம் அடிக்கும். ஸ்டார் ஹோட்டல்கள், மது பார்கள், பேருந்து நிலையம் ஆகியவையே காரணம். நெல்லையில் காற்றாலை தொழில் கொடிக் கட்டிப் பறக்கும் 'மான்’ காவல் நிலையத்தில் கொட்டுது பணம். சேலத்தில் 'பள்ளத்து’ ஸ்டேஷன், பெரிய மாரியம்மன் லிமிட்டில் இருக்கும் இன்னொரு ஸ்டேஷனுக்கு வசூலில் செம டஃப் கொடுக் கிறது. கோவையில் ரெண்டு எழுத்து மேட்டில் உள்ள ஸ்டேஷன் காவலர்களின் பாக்கெட்டில் ஐந்நூறுக்குக் குறைந்து கரன்ஸியைப் பார்க்க முடியாது. திருப்பூரில் வடக்கு பார்த்த திசைக்குத்தான் மவுசு அதிகம்.  
காவல் நிலையங்களைப் பொறுத்தவரை யார், எவராக இருந்தாலும் காசேதான் கடவுளடா!  

காக்கியும் சில கையூட்டு உண்மைகளும்!
 தமிழக அரசியல் களத்தையே மிகச் சமீபத்தில் உலுக்கிய கொலை வழக்கு அது. இப்போது வழக்கு விசாரணை இன்னொரு பிரிவு போலீஸாரிடம் சென்றுவிட்டது. ஒருவேளை சி.பி.ஐ-க்கு வழக்கு செல்வதாக இருந்தால், தடயம், துப்பு, சாட்சி என எதையும் விட்டுவைக்கக் கூடாது என்று மேலிடத்தில் இருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.

 தென் மாவட்டத்தின் அதிமுக்கிய கனிம நிறுவன உரிமையாளரின் மகன் மீது மூன்று கிடுக்கிப்பிடி வழக்குகளைப் பாய்ச்சத் தயாரானது போலீஸ். நேர்மையான அதிகாரி ஒருவர் அந்தப் பணிகளை முன்னெடுத்துச் செய்த போதுதான் தடாலடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஊரை விட்டுக் கிளம்பிய மறுநாளே, அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். இதற்குக் கனிம அதிபர் செலவு செய்தது ஒன்றேகால் கோடி!

 தமிழக முதல்வரே கடுமையாக அர்ச்சித்த அந்தத் தென் மாவட்டப் புள்ளி, தற்போது மதுரை டு தொண்டி வரையிலான 80 கோடி மதிப்பு சாலை ஒப்பந்தப் பணிகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்காக போலீஸ் மற்றும் ஆளும் கட்சியினருக்கு மட்டும் அவர் வாரி இறைத்தது திட்ட மதிப்புத் தொகையில் 10 சதவிகிதமாம்.

 இன்றைய தேதியில் அந்தச் சாமியார் தமிழக போலீஸாருக்குப் பணம் காய்க்கும் மரம். கடந்த மாதம் சாமியாரின் தென் மாவட்ட ஆசிரமம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாமியாரின் சிஷ்யர்கள் வீசிய செருப்பு பெண் போலீஸார் மீது விழுந்தது. அதற்காக சாமியார் மீது வழக்கு போடாமல் இருக்க கைமாற்றப்பட்ட தொகை 17 லட்சமாம். அதற்கு முன் மிக நெருக்கடியான நேரத்தில் சாமியார் வெளிமாநிலத்தில் இருந்து தென் மாவட்டம் வந்தார். அப்போது அவரது லைனுக்கு வந்த தென் மாவட்ட போலீஸார், 'வெளிமாநில போலீஸார் உங்களைக் கைதுசெய்ய அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள். அவர்களைத் திசை திருப்பி அனுப்பலாமா அல்லதுஉங்களை பேக் செய்து அவர்களிடம் அனுப்பலமா?’ என்று கேட்டு இருக்கிறார்கள். வெலவெலத்துப் போன சாமி, உடனடியாக தனது காரில் இருந்த பெட்டியில் இருந்து 10 லட்சத்தை 'ஹாட் கேஷாக’க் கொடுத்து அனுப்பினாராம். பிறகு, தலைமறைவாகப் பயணித்துத் தன் இருப்பிடம் சேர்ந் ததும்தான் அவருக்குத் தெரிந்ததாம், வெளி மாநில போலீஸ் யாரும் தன்னைக் கைது செய்ய வரவில்லை என்று. உலகத்துக்கே உட்டாலக்கடி வித்தை காட்டியவருக்கே டேக்கா கொடுத்தது அந்த 'ரணகள பூமி’யைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும்.


விலையும் மிக அதிகமே!
காவலர்கள் அனைவருமே ஊழல் புரிவது இல்லை. ஆனால், காவல் பணியை தங்கள் உயிர் மூச்சாக நினைத்துச் செயல்படுபவர்கள் சுமார் 30 சதவிகிதத்தினர் மட்டுமே. அதுவும் இன்றைய சூழலில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே, அதுவும் ஓரளவுதான் சாத்தியம். ஒரு ஆய்வாளர் தன் அளவில் மட்டுமே நேர்மையாக இருக்க முடியும். மற்றபடி தனது காவல் நிலைய எல்லைக்குள் போலீஸார் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அந்தப் பணம்தான் ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்கும் என்கிற யதார்த்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கும்.  

போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத்துக்கு மிகச் சொற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்வார் கள். காக்கிச் சட்டையின் கம்பீரத்துக்கும் அங்கீகாரத்துக்கும்... அதற்கு மேல் கிடைக்கும் வருமானத்துக்கும் இவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகமே.


-டி.எல்.சஞ்சீவிகுமார்
ஓவியங்கள் : பாலமுருகன்

நன்றி: ஆனந்தவிகடன், 01-08-12

Thursday, May 3, 2012

கைது செய்யப்படும் நபர்களுக்கு உரிமைகள் உண்டா..?



மனித மனம் விந்தையானது.

பேருந்து நிலையம் ஒன்றில் நாம் ஒரு குறிப்பிட்ட பேருந்திற்காக காத்து நிற்கும்போது அந்த பேருந்து நிற்காமல் சென்றுவிட்டால் அதன் ஓட்டுனரை திட்டித்தீர்த்து விடுவோம். ஆனால் அதே பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது அந்தப்பேருந்து, பயணிகள் காத்து நிற்கும்போதும் ஒரு பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்லும்போது நாம் அற்ப மகிழ்ச்சி அடைவோம்.

இது ஒரு எளிய உதாரணம்தான்! இதேபோல வாழ்வின் பல நிகழ்வுகளிலும் நாம் இரட்டை அளவுகோல்களை, அதன் தீவிரத்தன்மை தெரியாமலே பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறான நிகழ்வுகளில் கைது சம்பவங்களையும் சேர்க்கலாம்.

நமக்கு தெரிந்த ஆனால் பிடிக்காத வேறு ஒருவர் கைது செய்யப்படும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். நமக்கு தெரியாத ஒரு நபர் கைது செய்யப்படும்போது எந்த உணர்ச்சிகளும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நமது வீட்டிற்கு ஒரு காவலர் வந்தால் நாம் கலங்கி விடுவோம். அதிலும் வரும் காவலர் நம் வீட்டில் உள்ள ஒருவரையோ அல்லது நம்மையோ கைது செய்வதற்கு வருவதாக தெரிந்தால் நம் நிலை மிகவும் பதற்றமாகிவிடும்.

ஆகவே, குற்றவியல் சட்டத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அம்சம் கைது!

முன்னாள் முதல்வர்களை சில்லறை காரணங்களுக்காக நள்ளிரவில் கைது செய்து இழுத்துச் செல்வதும், கொலை வழக்கில் சிக்கிய மடாதிபதியை கவுரவமாக வீட்டுச்சிறையில் வைத்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற நீதிபதியே கேள்வி எழுப்புவதும் நாம் அறிந்ததுதான்.

எனவே நமக்கு வேண்டியவரோ, வேண்டாதவரோ கைது செய்யப்படும்போது, கைது செய்யப்படுவதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கவனிப்பதும், கண்காணிப்பதும் மிகவும் அவசியம்.

கைது செய்யப்படும் நபர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்தான். எனவே அவர் குற்றவாளி என சட்டப்படி தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்வரை அவரை நிரபராதியாகவே கருத வேண்டும். தவிர்க்க இயலாத சம்பவங்களில் ஒரு நபரை கைது செய்ய நேரிட்டாலும், அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் கருத்தளவில் தெளிவாகவே இருக்கிறது.

மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய திரு. திலிப் குமார் பாசு என்பவர், பணி ஓய்வு பெற்ற பின்னர் மேற்கு வங்க சட்டப்பணி சேவை மையம் என்ற அமைப்பை நிர்வகித்து வந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோதிலும் காவல் நிலைய வன்முறைகள் மிகவும் அதிகமாக  நடைபெறுவதை கவனித்த (ஓய்வு பெற்ற) நீதிபதி திலிப் குமார் பாசு, இந்த பிரசினை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 26-08-1986 அன்று கடிதம் ஒன்றை எழுதினார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற காவல் நிலைய வன்முறைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை இணைத்திருந்த நீதிபதி டி.கே.பாசு, காவல் நிலையங்களில் நடைபெறும் வன்முறைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங் மற்றும் ஏ.எஸ். ஆனந்த் ஆகியோர் பொதுநல வழக்காக ஏற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் (AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் கைது சம்பவம் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

மேலும் அந்தத் தீர்ப்பில் கைது சம்பவத்தின்போது பின்பற்றவேண்டிய மிகவும் முக்கியமான 11 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  

1. கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2.      ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின்போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3.            கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4.    கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5.    கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6.    கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்படவேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்படவேண்டும்.

7.   கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8.    கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9.    கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10. கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின்போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11.          நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். 



ஆனால் நடைமுறையில் நாட்டில் உள்ள எந்த காவல்நிலையத்திலாவது இந்த உச்சநீதிமன்ற உத்தரவு எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து தெளிவான சட்டம் இல்லாத நிலையில் அந்த அம்சம் குறித்த நீதிமன்ற தீர்ப்பே சட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சட்டமாகும். ஆனால் இந்த சட்டத்தை மதிப்பதில் எந்த மாநில அரசும் குறைந்த அளவு அக்கறைகூட காட்டவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மேற்கூறப்பட்டவாறு டி.கே.பாசு வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்மொழியில் எழுதி வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ காலக்கெடு எதுவும் விதிக்காமல் பயனற்ற தீர்ப்பு ஒன்றை வழங்கியது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதிலோ, மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதிலோ சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உள்ள ஆர்வத்திற்கு இந்த வழக்கு உதாரணமாகும்.

இதற்கிடையில் கைது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மிக விரிவான விவாதங்களை நடத்தியது. நாடு முழுதும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட்ட கைது சம்பவங்கள் குறித்தும், அதில் இருந்த சட்டமீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக 2005ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ என்று உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. இதன்படி

(1)  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.

(2)  மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

(3)  கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

(4)  கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும்போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கூறியவாறு காவல்துறையினரோ, குற்றவியல் நடுவரோ செயல்பட்டால் கைது செய்யப்படும் நபரின் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் கைது செய்யப்படுபவரின் உரிமைகள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் உயர்நீதிமன்றமே ஆர்வம் காட்டாத நிலையில், உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் செயல்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், கைது செய்யப்படுபவரின் உரிமைகளை பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே!

எனினும் மனித உரிமை என்பதே அதை பயன்படுத்தும் விழிப்புணர்வுடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் முழுமை அடையும். எனவே கைது செய்யப்படுவோரின் உரிமைகள் குறித்த முழுமையான விழிப்புணர்வும், இதை வலியுறுத்தும் செயல்பாடுகளுமே நீதிமன்றத்தையும் சட்டத்தின்பாதையில் செலுத்தும்.
கைது செய்யப்படும் நபர்களின் உரிமைகள் இது மட்டுமல்ல. சட்டரீதியாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் இன்னும் ஏராளமான உரிமைகள் (கருத்தளவில்  மட்டுமே) உள்ளன.

அவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

Tuesday, April 10, 2012

கைது – ஏன்? எதற்கு? எப்படி?


குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும் பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.

நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைதுதான்.


குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் – குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும், குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது ஆகும்.

ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல், அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல் புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள்தான்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில் உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.

இதை தீர்க்கதரிசனத்துடன் கணித்திருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், இந்திய அரசியல் சட்டத்திலேயே கைதுகள் குறித்தும் எழுதியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது.

ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும். இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில் இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.

எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள் குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும் தவிர்க்க முடியும்,

சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்:

இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.

எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.

சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.

கைது நடைமுறைகள்:

கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம். (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்.

பெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும். எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும் கைது செய்யலாம்.

பொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால் அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

கைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும், உச்சநீதிமன்றமும்  ஏற்படுத்தியுள்ளன. அவை குறித்து அடுத்து பார்க்கலாம். 

Monday, April 2, 2012

உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்...!

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான். காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான். எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது. 

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். செல்வாக்கு மிக்கவர்களால் அனுப்பப்படும் புகார்களை புறக்கணித்தால், காவல்துறையினருக்கு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறில்லாத நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை. 

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 

 இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது. 
  
இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. 

 ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது. 

 இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.  இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும். 

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். 

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது. 

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். 

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும். 

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. இந்த கைது குறித்து அடுத்து பார்ப்போம்...!