Monday, May 16, 2011

இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் !

சுனாமி காரணமாக ஜப்பானில் புக்கூஷிமா நகர அணுஉலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அணுக் கதிரியக்க கசிவுகள் வெளியாகி மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தங்களுடைய அணுசக்தி கொள்கை குறித்து மறுபரிசீலனை செய்யத் துவங்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய அணு உலைகள் குறித்தான பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார்.
கல்பாக்கம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

இங்கே நாம் முதன்மையாக கவனிக்கவேண்டியது இயற்கை சீற்றத்தையும் அதன் காரணமாக விளையக்கூடிய விபத்துகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ளும் ஜப்பானின் அவசர தயாரிப்பு நிலை (Emergency Preparedness) தான். அணுக்கதிர்கள் மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்னும் காரணத்தால் அணுஉலையின் சுற்றுப்புறத்தில் (சுமார் 25 கி.மீ.) வசித்து வந்த மக்களை சில மணிநேரத்தில் வெளியேற்றியுள்ளது ஜப்பான் அரசு. இந்தியா இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம் நாம் அறிந்ததே. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய  அளவிற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா என்கிற கேள்வி இப்பொழுது மிகவும் அவசியமானது.

இந்திய அணுசக்தி துறை

1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) துவங்கப்பட்டது. பின்பு 1954 ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை (Department of Atomic Energy) செயல்படத் துவங்கியது. அணுசக்தி ஆணையம் இதன் கீழாக செயல்பட்டு வந்தது.  அணுசக்தித் துறையே அணுஉலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக அணுசக்தி நெறிப்படுத்தும் வாரியம் (Atomic Energy Regulatory Board) செயல்படுகிறது. இந்த அமைப்பை தற்சார்பு உடைய அமைப்பாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை இப்பொழுது எழுந்துள்ளது. அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பான பல ஆராய்ச்சி மையங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. Nuclear Power Corporation of India Ltd உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த சுமார் ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. தற்போது அணுசக்தித் துறை கீழாக 18 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 8 அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன.

அணுஉலைகளின் கட்டுமானங்கள்

பலவிதமான அபாயங்கள் நிறைந்தவையாக அணுஉலைகள் உள்ள காரணத்தால் இவை கட்டப்படுகின்றபோது கடைப்பிடிக்க வேண்டிய பலவித கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அணுஉலைகளின் செயல்பாட்டை இடத்தேர்வு, கட்டுமான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் செயல்நிறுத்தம் எனப் பிரிக்கலாம்.

இடத்தேர்வு : இயற்கை சீற்ற ஆபத்து உள்ள பகுதியில் அணுஉலை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது விதி. ஜனத்தொகை குறைவான பகுதியே அணு உலை கட்டுமானத்திற்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் விதி. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய உயிரின பாதுகாப்பு பகுதியாகவும் அது இருக்கக் கூடாது என்றும் விதியுள்ளது. இந்தியாவில் தற்போது இயங்கும் எல்லா அணு உலைகளும் நிலநடுக்கம் வரக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அணுஉலைகள் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் சுனாமி ஆபத்தும் உள்ளது.

மேலும் இடத்தேர்வில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று இருக்க வேண்டும். அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி அளிக்கப்படுவதில் பொதுமக்களின் கருத்துகளும் அவசியம் கேட்கப்பட வேண்டும்.

கட்டுமான வடிவமைப்பு : அணு உலை கட்டப்படுவதிற்கான பல நெறிமுறைகளை அணுசக்தித் துறை வகுத்துள்ளது. குறிப்பாக அணு உலை கட்டுவதற்கு தேர்வு செய்யக்கூட வழிமுறைகளை Monograph on Siting Of Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான நெறிமுறைகளை Geotechnical Aspects and Safety of Foundation for Buildings and Structures Important to Safety of Nuclear Power Plants வழங்குகிறது. அணுக்கதிர் வெளியேறாமல் இருக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறையை Radiation Protection Aspects in Design for Pressurised Heavy Water Reactor Based Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான தரத்திற்கான நெறிமுறைகளை Quality Assurance in Nuclear Power Plants வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட எல்லா நெறிமுறைகளும் 2000-ம் ஆண்டுக்கு பின்பாக இயற்றப்பட்ட காரணத்தால் புதிதாக கட்டப்படும் அணு உலைகளுக்கு மட்டுமே இவை பெருந்தும். தற்போது இயங்கி வரும் பல அணு உலைகள் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மேலும் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றித்தான் அணு உலைகள் கட்டப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு தற்சார்பு உடைய அமைப்புகள் இந்தியாவில் கிடையாது.

அணு உலை செயல்பாடு : யுரேனிய அணுக்கள் பிளக்கப்படும்போது, 3500- 4000 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்துடன் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அணு உலையில் இதே அணு பிளப்பின்போது நியூட்ரான் விழுங்கிகளைத் (Neutron Absorbers) தக்க சமயத்தில் நுழைவித்து, வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பசக்தி காரணமாக வெளியாகும் நீராவி கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு உலையில் அணுகதிர் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவை மனிதர்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்களை உண்டாக வல்லது. எனவே இவை அணு உலையைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒரு அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை (Radioactive Spent Fuel Wastes) உண்டாக்கும். இவையும் அணுக்கதிர் உடையவை. இவற்றை அழிக்க முடியாத காரணத்தால் இவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பாதுகாக்க வேண்டும்.

செயல்நிறுத்தம் : ஒரு அணு உலையின் மொத்த ஆயுட்காலமே 40-50 வருடங்கள்தான். அதன்பிறகு அதை அப்படியே பெரிய, பெரிய கான்கிரீட் தொட்டியின் மூலம் பூமிக்கடியில் புதைத்துவிடவேண்டும். இப்படி அணு உலைகளை மூடுவதற்கு De-Commissioning என்று சொல்வார்கள். அதன்பிறகு அந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு நாற்பதாண்டுக்கும் ஒரு தடவை அணு உலைகளை இடம்மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அணு உலை விபத்துகள்

1979இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டியன.

இந்திய அணு உலைகளில் விபத்துகளே நேர்ந்தது இல்லையா என்றால் பல விபத்துகள் நிகழ்ந்து உள்ளன என்பதே பதில். இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.

அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அணுசக்தித் துறை சார்பாக பல விளக்கங்கள் கூறப்பட்டது. மேலும் அணுஉலை பாதுகாப்பு என்பதே அணுசக்தி சட்டப் பிரிவு 18 கீழ் இரகசியமானது என்றும் உயிர் நீதிமன்றத்தில் பார்வைக்கு மட்டும் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயார் என்று கூறியது அணுசக்தி துறை. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் நம் நாட்டு அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து பிரிவு 18 –யை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது [PUCL vs UOI (2004) 2 SCC 476].

கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித் துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

வெளிப்படையற்றதன்மை தான் இந்திய அணுசக்தி கொள்கையாக உள்ளது. எனவே அணு உலை விபத்துகள், அது குறித்த பல தகவல்கள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அணுசக்தி:

சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station). ‎ இந்த உலையின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலை 1983 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது. இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் அணுமின் உலைகள் ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன் இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றது இந்த உலை. இந்த உலை இந்திய வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளைக் கொண்டுள்ளது. உலையின் பாதுகாப்புக்காக இவ்வாலையைச் சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அவசர தயாரிப்பு நிலை

1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

அணுசக்தி சட்டம் மூலமாக சில விதிகள் இயற்றப்பட்டுள்ன. அதில் Atomic Energy (Safe Disposal of Radioactive Wastes) Rules, 1987 கதிரியக்க எருக்கழிவை பாதுகாப்பைப் பற்றி கூறுகிறது. மேலும் அணுசக்தி கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான [Atomic Energy (Radiation Protection) Rules, 2004] சட்ட விதியும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிதி அணுவிபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்புநிலைக்கான (Emergency Preparedness) செயல்பாடுகளைப் பற்றி திட்டம் வரையப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Convention on Assistance in the Case of a Nuclear Accident or Radiological Emergency ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

அணுவிபத்து நேருகின்ற போது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை செயல்பாடுகளைப் பற்றிய திட்டமும் (Site Emergency Preparedness Plans) மற்றும் அணு உலை சுற்றுப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை குறித்த திட்டமும் (Off-site Emergency Preparedness Plans) ஒவ்வொரு அணுஉலை சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டவிதி கூறுகிறது. இந்த தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authourity) அணு உலை விபத்து குறித்த அவசர தயாரிப்பு நிலைக்கான திட்ட அறிக்கையை (Management of Nuclear and Radiological Emergencies) 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தயாரிப்பு நிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் சாமானிய மக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இதற்கு பின்பாகவும் நிலைமை மாறியுள்ளதா? மேற்கூறிய அவசர தயாரிப்பு திட்டப்படி விபத்தை எதிர்கொள்ள கூடிய அளவில் கல்பாக்கம் அணு உலை உள்ளதா என்பதைக் காண்போம்.

(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.

(ii) அடுத்து கல்பாக்க சுற்றுப்புற மக்களிடம் அணு உலையின் ஆபத்து மற்றும் அணுக்கதிர் ஆபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே ஒரு விபத்து நேருகின்றபோது தாமாகவே பாதுகாப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இம்மக்களிடம் குறைவு.

(iii) அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

(iv) கல்பாக்க பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதற்கான சரியான தொலைத்தொடர்பு வசதியும் இல்லை. வட்டார அரசு அதிகாரிகள் மூலமாக மக்கள் எச்சரிக்கை செய்யப்படுவர் என்று அணுசக்தித் துறை கூறுகிறது. நடைமுறையில் இது எந்த அளவிற்கு உதவக் கூடும் என்பது கேள்விக்குறியே.

(v) விபத்து பின்பாக மக்களை குடியமர்த்தக் கூடிய மாற்றுப் பகுதியும் இதுவரை கண்டறியப்படவில்லை. அணு உலை விபத்து பின்பாக ஜப்பான் அரசு இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இத்தகைய பண்பு நம் அரசுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.

அணு உலை விபத்து காரணமாக வெளியேறக் கூடிய அணுக்கதிர்கள் இவ்வளவு தொலைவு தான் பயணிக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. ஆக கல்பாக்கத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் அது 25 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் தொகை மிகுந்த மாமல்லபுரம், 75 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை போன்ற இடங்களைத் தாக்கக் கூடும்.

முடிவாக...

அணு உலை விபத்து என்று இல்லாமல் கல்பாக்க பகுதி மக்கள் பல நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணு உலை சுற்றுப்புற பகுதிகள் தொடர்ச்சியாக அணுசக்தித் துறையினால் ஆய்வு மேற்கொள்ள அணுசக்தி சட்டம் வலியுறுத்துகின்ற போதும் இத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவே இல்லை. கல்பாக்கம் அருகே உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை சரியான மின்சார வசதி இல்லை என்பதே யாதார்த்த நிலை. அணு உலை இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே அணு உலைகள் கட்டப்படுவதற்கான முக்கிய காரணம். இந்தியாவின் வல்லரசுக் கனவு காரணமாக உண்டான கதி இது. மேலும் அணு உலை கட்டுமான செலவுத்தொகைக்கு எவ்வித தணிக்கை கட்டுப்பாடுகளும் இல்லை. இதில் மின்சார தயாரிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய். இழப்புகள்தான் அதிகம். இறுதியில் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.
- மு.வெற்றிச்செல்வன் 
( m.vetriselvan@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

3 comments:

Sundararajan P said...

அணுக்கதிரியக்கம் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை அறிய http://www.kalpakkam.net/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Sundararajan P said...

ஆனந்தவிகடன் இதழில் வெளியான "தமிழகத்தின் செர்னோபில் கல்பாக்கம்?!" என்ற கட்டுரையை படிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்: http://poovulagu.blogspot.com/2011/05/blog-post.html

கூடல் பாலா said...

அணு சக்தியின் தீமைகளை விபரமாக அறிந்தவர்கள் தங்களை போல் மிகச்சிலரே உள்ளனர் .எனவே அடிக்கடி இது போன்ற இடுகைகளை இடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .பதிவு அருமை .!

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!