Friday, June 13, 2014

ஒரு கழிப்பறையின் கதை!

பொதுச்சுகாதாரத்தை பேணுவதில் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏழை நாடுகளின் குடிமக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை செய்து தருவதில் ஐக்கிய நாடுகள் அவை ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவிலோ பாதுகாப்பான கழிப்பறை இல்லாததால் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக செய்திகள் கூறுகின்றன.
  
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு கழிவறையின் கதையை பார்ப்போம்.


அதற்கு முன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் குறித்து ஒரு சிறு அறிமுகம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. இதில் சாமானிய வழக்கறிஞர்களுக்கானது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (Madras High Court Advocates Association). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரியும் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராகலாம்.

இதே உயர்நீதிமன்றத்தில் உள்ள மற்றொரு வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோஸியேஷன். சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த சங்கம் மிகவும் முக்கியமான சங்கமாகும். இந்த சங்கத்தில் உறுப்பினராவது அவ்வளவு எளிதல்ல. இந்த சங்கத்தில் சுமார் 1000 உறுப்பினர்களே உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாமானியர்கள் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராவது குறித்து யோசித்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கடினமான விதிமுறைகள் இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150வது ஆண்டுவிழாவை கொண்டாடியது. இந்த 150 வருட காலத்தில், பெரும்பாலான காலம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தது. அப்போது சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு எதிராகத்தான் இந்த நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். இதையும் சேர்த்துத்தான் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டாடியது. இதே மனோபாவத்துடன்தான் மெட்ராஸ் அசோஸியேஷனும் தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடியது.


மெட்ராஸ் பார் அசோஷியனின் உறுப்பினர்களுக்கும் சமூக உணர்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தமது தொழிலை மட்டுமே பார்ப்பவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். மக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அரசு அமைப்புகளுக்கும், அதற்கு பின் புலமாக இருக்கும் வர்த்தக்கழகங்களுக்கும் தேவையான சட்ட உதவிகளை இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் உறுப்பினர்களே செய்வார்கள். சமூகநீதியில் இடஒதுக்கீடின் முக்கியத்துவம் போன்ற பல அம்சங்களுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களாகவே இந்த சங்கத்தின் உறுப்பினர்களும், அவர்களுடைய ஜூனியர்களும்கூட இருப்பார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாகும் பலர்  இந்த சங்கத்தின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். இதோடு வேறு மாநிலங்களிலிருந்து வரும் நீதிபதிகளும் இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் விசேஷ கவனிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு அறிவியல் ரீதியான வழிமுறையே இல்லாதநிலையில், மர்மமான வழியில் நீதிபதி பதவி பெறுபவர்கள், நீதிபதிகளை உருவாக்கும் ஒரு சங்கத்திற்கு நன்றிக்கடன் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.

இந்த சங்கத்தின் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்தான் உள்ளது. ஆனாலும் இந்த சங்கத்தின் ஆளுகைக்குள் இருக்கும் இடங்கள் அனைத்தும் ஆலயங்களின் கருவறை போன்றது. இந்தியாவின் பிற இடங்களுக்கு பொருந்தும் சட்டங்கள், இந்த இடத்திற்கு பொருந்தாது.

இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்காக தனியார் கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதை இந்த சங்கத்தில் உறுப்பினராக தகுதி இல்லாத வழக்கறிஞர்கள் பயன்படுத்த முடியாது. இத்தகைய பெருமை வாய்ந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷன் அலுவகத்தின் பின்புறத்தில், அதாவது உயர்நீதிமன்றத்தின் 6வது நீதிமன்ற அறையின் அருகில் ஒரு கழிப்பறை உள்ளது. இது கழிப்பறை என்பதற்கான எந்த அடையாளமோ, அறிவிப்போ இருக்காது. நீதிமன்ற அலுவலகம் போன்ற அமைப்புள்ள இந்த கழிப்பறையை மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் பெண் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

இந்த கழிப்பறையை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லோகநாயகி என்பவர் முயற்சித்தபோது அங்கிருந்த உதவியாளர், “இந்த கழிப்பறை மெட்ராஸ் பார் அசோஸியேஷனுக்கு சொந்தமானது. எனவே அதன் உறுப்பினர்கள் மட்டுமே இந்த கழிவறையை பயன்படுத்தமுடியும்” என்று கூறி வழக்கறிஞர் லோகநாயகிக்கு அனுமதி மறுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் லோகநாயகி, உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புகார் செய்துள்ளார். எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட அந்தப் புகாரில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகவும், அரசியல் சட்டக் கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டிய நீதிமன்றத்தின் வளாகத்திலேயே நடைபெறும் இந்த சமூக அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்புகாரில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடியது! ஆம், அந்த கழிவறை பூட்டப்பட்டது.

சட்டம் படித்த ஒரு பெண் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை அகற்ற வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன் முன் வந்தார். உடனடியாக ஒரு பொதுநல வழக்கு (W.P. No. 15144/2014) பதிவு செய்யப்பட்டு, பல முயற்சிகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (13-06-2014) அன்று சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கும் நீதியரசர் அக்னிஹோத்ரி எடுத்த எடுப்பிலேயே மிகுந்த கோபத்துடன், “இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்யப் போகிறேன், மேலும் அபராதமும் விதிக்கப்போகிறேன்!” என்றார். இதற்கு சளைக்காத வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன், முதலில் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க அனுமதிக்குமாறு வேண்டி, தன் வாதத்தை தொடங்கினார். இடையில் குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் போக்கும், தீர்வும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீதித்துறையிலும், வழக்கறிஞர் தொழிலும் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு உதாரணமாகவே இந்த சம்பவத்தை பார்க்கலாம்.

நீதித்துறையில் உள்ளவர்களுக்கு சமூகம் குறித்தும், சமூக சமத்துவம் குறித்தும் குறிப்பாக அரசியல் சட்டம் குறித்தும் உள்ள அறிவை, அக்கறையை, பார்வையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இந்தச் செய்தி ஊடகங்களிலும்கூட இருட்டடிப்பு செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை...!