Monday, April 2, 2012

உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்...!

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான். காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான். எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது. 

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். செல்வாக்கு மிக்கவர்களால் அனுப்பப்படும் புகார்களை புறக்கணித்தால், காவல்துறையினருக்கு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறில்லாத நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை. 

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 

 இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது. 
  
இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. 

 ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது. 

 இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.  இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும். 

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். 

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது. 

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். 

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும். 

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. இந்த கைது குறித்து அடுத்து பார்ப்போம்...!

13 comments:

KUMARAN said...

nadavadikai edukkiranga illa mudalla namakku theva oru vizhipunarvu athuku intha valai pakkam romba udaviyaa irukku....
nanri!!! nanri!!!!!!!! nanri!!!!!!!!!!

நெருப்பு said...

அப்படியே .. வழக்கறிஞருக்கான கட்டணம் குறித்த தகவல்களையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும் ..!

Dinesh said...

Thanks for practially nailing down the police station realities

Anonymous said...

ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.
When the police is not ready to accept the petition the affected person is approaching the court.No evidence is necessary to prove this.(if the petition is sent by RPD)What kind of departmental action can be taken by the police officer who have not done his duty?
இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது
If the court refused or not taking action when the petitioner is approaching?Again in this situation what kind of departmental action can be taken over the magistrate who have not done his duty?

Anonymous said...

good

Anonymous said...

Thanks for your service.. All the Best

Anonymous said...

hollow sir

you website is very nice,

Sir tamila kakkalama , Tamil Law Book engu keedaikum ,Tamil Law Book PDF Filela Erukkanu sollunga, Eruntha Atha eppadi Download Panrathunu sollunga, allathu, tamil law booksa search panna free web site Allathu Software eruntha sollunga please, Thayauoo saithu enakku mail pannunga Ennoda ID Balan60013@yahoo.com

தெம்மாங்குப் பாட்டு....!! said...

ஐயா,
ஒரு சாலை விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நபரை, நாம் உடனடியாகக் காப்பாற்ற முயற்சிக்கலாமா? அல்லது நாம் ஏதெனும் தடயத்தை அழித்து விட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டு விடுவோமா? ஒரு வேளை அந்த நபர் இறந்து, நமக்கு, விபத்துப் பற்றிய எந்தத் தகவலும் தெரிய வில்லை என்றால் அதனை (நம்மை) காவல் துறை எவ்வாறு கையாளும்?

மேலும், முகனூல் பக்கங்களில், ஒரு தகவல் பார்த்தேன், விபத்தில் அடிபட்டுக் கிடப்பவரை யார் வேண்டுமென்றாலும் காப்பாற்றலாம் என்றும், அவர்களைக் காவல்த்துறை விசாரணை என்கிறப் பெயரில் அலைக்கலிக்கக் கூடாதென்பதாக, உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளதாக செய்தி ( டெல்லி பாலியல் கொலை சம்பவத்திற்கு முன்பே). அது உண்மையா?

உண்மையில் சட்டம் என்ன சொல்கிறது? தயவு செய்து விளக்குங்கள்.

நன்றி.

தெம்மாங்குப் பாட்டு....!! said...

ஐயா,

இந்தியக் காவல் துறை, first police commission 1861ன் படிதான் இன்றும் செயல்பட்டு வருகிறதா? 1977 ல் ஜனதா கட்சி ஆட்சியின் போது அமைக்கப் பட்ட இரண்டாவது போலீச் கமிசனின் பரிந்துரைகளை, எந்த மானிலமும், செயல்படுத்த்வில்லையா? நாம் இன்னமும் வெள்ளைக் காரர்கல் தங்களது வசதிக்காகக் கொண்டு வந்த நடை முறைகளைத்தான் பயன்படுத்தி வருகிறோமா?

நன்றி.

Anonymous said...

நானும் ஏர குரய இரன்டு மாதங்களுக்குமுன் காவல் நிலயத்தில் புகார் ஒன்றை கொடுத்தேன்.அது மேலே நீங்கள் சொன்னமாதிரிதான் நடந்தது. புகாரினை பதிவுசெய்ய மருநாளைக்கு வரச்சொன்னார்கள்.அப்படியே செய்தேன்.மருனாள்போனா, வும்மீது அவர் புகார் கொடுத்துள்ளார் என்று பயமுர்தினார்கள்.நான் பேசாமல் வந்துவிட்டேன். நீங்கள்சொல்லுவதெல்லாம் 100/100 வுன்மை.

Anonymous said...

காவல்துறை மட்டுமல்ல....... எல்லாத் துறைகளிலும் இதே கதைதான்....

Ramadevan said...

குற்றமே நடக்காத சமுதாயத்தை உருவாக்க நினைக்கின்றேன் , சட்டம் எனக்கு பாதுகாப்பு வழங்குமா ? , வழி முறைகள் யாது ?,

Anonymous said...

1.தமிழ் நாட்டில் உடனடி சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமெண்றால் என்ன வழிகளில் முயற்ச்சி செய்யவேண்டும்.?

அதற்க்கான வழிமுறைகள் என்ன ?

2.எந்த சூல்நிலையில் நீதிமன்றம் ஒரு சமூகநல வழக்கை அல்லது பொது பிரச்சனை வழக்கிள் உடனடி தீர்வு கொடுக்கப்படும் ?

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!