குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய
நினைவுக்கும் வருவது “கைது” சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை
தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும்
பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.
நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன்,
அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று
நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைது”தான்.
குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் –
குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும்,
குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின்
கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது” ஆகும்.
ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல்,
அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல்
புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும்
வழக்கமான நிகழ்வுகள்தான்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில்
உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும்
இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட
பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.
இதை தீர்க்கதரிசனத்துடன் கணித்திருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின்
தலைவர் அம்பேத்கர், இந்திய அரசியல் சட்டத்திலேயே கைதுகள் குறித்தும்
எழுதியுள்ளார்.
இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள
விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட
சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக்
காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான
காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால்
தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான
தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி
வழங்கப்படவேண்டும்”.
இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து
காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24
மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும்.
அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல்
நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை
சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி
இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது”.
ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின்
பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும்
அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த
மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும்.
இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த
தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில்
இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட
தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.
எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை
எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள்
குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத
கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும்
தவிர்க்க முடியும்,
சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்:
இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க
அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும்
என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு
முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு
காட்டுகின்றனர்.
எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே
செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட
சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத
கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில்
கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து
உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே
உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல்
நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.
சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள்,
உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான
வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.
கைது நடைமுறைகள்:
கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம்
செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது
செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது
செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல்
கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை
நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத
வகையில் காவலில் வைக்கலாம்”.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய
நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து
தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது
நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம்”. (அதாவது தப்பியோட
முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும்
தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)
கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ
அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம்
சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை
விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண
தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக
சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க
முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட
வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)
கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால்
சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே
கைது செய்ய வேண்டும்”.
பெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும்.
எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும்
கைது செய்யலாம்.
பொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால்
அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில்
சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை
அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற
அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து
உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய
அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல
பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.
கைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது
சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும்,
உச்சநீதிமன்றமும் ஏற்படுத்தியுள்ளன. அவை
குறித்து அடுத்து பார்க்கலாம்.
5 comments:
அய்யா... சட்டப்படி கைது சம்பவத்தை பற்றி சொல்லுறீங்க, சரி இதை எத்தனை மாஜிஸ்திரேட்டுகள் பின்பற்றுகின்றனர். கைதிகளின் உரிமையை காப்பாற்றும் பொறுப்பு மாஜிஸ்திரேட்டிடம்தான் அதிக அளவில் உள்ளது. ஆனால் தன் அதிகாரங்களை அந்த மாஜிஸ்திரேட் பயன்படுத்துகின்றனரா? ஒரு வழக்கில் ஒருவரை கைது செய்யும் போலீசார், பல நாட்கள் சட்ட விரோதமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மாட்டை அடிப்பது போல் அடித்து துன்புறுத்தி, ஒரு வழியாக, தாங்கள் விரும்பும் நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். அப்போது கைது செய்யப்பட்டவரின் உடல் முழுவதும் படுகாயம் இருக்கும். ரத்தம் வடியும். ஆனால் அதை சில மாஜிஸ்திரேட்டுகள் கண்டு கொள்வதில்லை. சிலர் யார் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூட பார்க்காமல், ரோபோ போல் சிறையில் அடைக்க உத்தரவிடுகின்றனர்.
அந்த நேரத்தில், கூண்டில் நிற்கும் நபரின் உடலில் எப்படி காயம் வந்தது? என்று கேள்வி எழுப்பி, ரிமாண்ட் ரிப்போட்டில் அதை பதிவு செய்தால், போலீசாருக்கு ஒரு பயம் வரும். அந்த கைதி, மாஜிஸ்திரேட் பதிவு செய்ததை வைத்து, தன்னை சட்ட விரோதமாக துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?
ஆனால் அப்படி எந்த மாஜிஸ்திரேட் செய்கிறார்?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்கில் ஒருவரை ரத்தம் சொட்ட சொட்ட சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அந்த நபர் தன்னை போலீஸ் சித்ரவதை செய்ததை சொல்லி கதறி அழுதார். மாஜிஸ்திரேட் கண்டுக் கொள்ளவே இல்லை. கோர்ட்டை விட்டு வெளியில் வந்ததும், அந்த நபரை மீண்டும் போலீசார் நன்றாக கவனித்தனர்.
கரூரில் அகதிகள் முகாமில் உள்ள ஒரு பெண்ணை அழைத்து சென்று போலீசார் மானபங்கம் செய்தனர். பின்னர் முகாம் திரும்பியதும், மானம் தாங்காமல்அந்த பெண் தீ குளித்தார். ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட் அந்த பெண்ணிடம் மரண வாக்குமூலம் வாங்குகிறார். போலீசாருக்கு சாதகமான வாக்குமூலத்தை பதிவு செய்கிறார். உடனே ஐகோர்ட்டில் சிலர் மனு தாக்கல் செய்கின்றனர்.
அன்று இரவே அதே மாஜிஸ்திரேட் 2வது முறையாக மரண வாக்குமூலம் பெறுகிறார். அது முதலில் வாங்கியத்தில் இருந்து மாறுப்பட்ட வாக்குமூலமாக உள்ளது. இப்படிப்பட்ட மாஜிஸ்திரேட்டுகள், சராசரி குடிமகனுக்கு அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை பாதுகாக்க, போலீசுக்கு எதிராக தன் சுண்டு விரல்களை கூட நீட்ட மறுக்கும்போது, கைது நடவடிக்கையில் எத்தனை விதமான சட்டம் கொண்டு வந்தாலும், அது எத்தனை மனிதர்களுக்கு பயன்படும்?
நீதித்துறை இந்த லட்சணத்தில் இருக்கும்போது, போலீஸ் காரர்கள் மீது என்ன குறை சொல்ல முடியும்? நம்ம ஊரில் சட்டம் எல்லாம் புத்தக வடிவில்தான் இருக்கும். அதை தேவைப்படும் போது பின்பற்றுவார்கள்.
சரி, கைது பற்றி நீண்ட விளக்கம் அளிக்கும் உங்களை திசைத்திருப்ப விரும்பவில்லை. உங்கள் கட்டுரையை தொடர்ந்து படித்து, விபரம் தெரிந்துக் கொள்ள ஆசை.
நல்ல தகவல்களும், சட்ட விழிப்புணர்வுகளும், பாமர மக்களை சென்றடைவது எப்போது?
please mention General Indian penal codes
Naan oru kallooriyil lecturer aga velai seigiraen..Naan satta kallooriyil padikka virumbukiraen lecturer thozhilai vidamal..idhu panathirkaga illai. ezhaigaluka mattum vadhaada mattumeyy...Appadi padika Vaaipu irukka...
by Rajesh
nice but act rules share
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!