Thursday, December 9, 2010

சட்டத்தொழில் புரிவோர் சட்டம், 2010

ந்திய நீதித்துறையின் செயல்பாடுகளில் பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பொருள் வசதி படைத்த சிறுபான்மையினருக்கு மட்டுமே சட்டரீதியான தீர்வுகள் சாத்தியமாகும் நிலை உள்ளது. நாட்டில் உள்ள பெரும்பான்மையினருக்கு இந்தியாவின் சட்டங்கள் என்பது ஒரு அடக்குமுறை கருவியாகவே தோன்றும்.

இதற்கு காரணம், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள் எந்த விமர்சனமும் இல்லாமல் இன்று வரை தொடர்வதும், புதிதாக வரும் சட்டங்கள் ஆங்கிலேயர் கொண்டுவந்த சட்டங்களைவிட மோசமாக இருப்பதுமே ஆகும்.

இந்தியாவின் பருவகாலத்திற்கு எந்த வித பொருத்தமும் இல்லாத சீருடை உள்ளிட்ட பலவிதமான முரண்பாடுகளுடன் இயங்கும் நீதித்துறை மக்களுடைய விமர்சனத்திற்கு இலக்காவது இயல்பானதே!

இந்தியாவில் சட்டங்களை இயற்றும் பணியை மேற்கொள்வது நாடாளுமன்றமும், சட்டமன்றங்களுமே ஆகும். இதையடுத்து நிர்வாக ரீதியிலான விதிமுறைகளை இயற்றுவது அதிகார வர்க்கமாகும். இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவது அரசியல்வாதிகள். எனவே இந்தியாவின் அரசியல்வாதிகளால்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு இயற்றப்படும் சட்டங்களுக்கு பொருள் சொல்லும் வாய்ப்பு மட்டுமே நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. இந்த நீதிமன்றங்களும் பெரும்பாலான நேரங்களில் அரசின் நோக்கத்தை ஒட்டிய வகையிலேயே தீர்ப்பு வழங்குகின்றன.  

எனவே இந்தியாவில் நீதித்துறை மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு அரசியல்வாதிகளே முழுமையான பொறுப்பேற்க வேண்டும்.

---

நீதித்துறை மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்போதெல்லாம் பல்வேறு திசைதிருப்பும் வழிமுறைகளை செயற்படுத்துவதில் நமது அரசியல்வாதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரான வகையிலேயே ஆட்சி செய்வது: கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகளையோ, சட்டங்களையோ அறிவிப்பது: பின் அதையும் செயல்படுத்தாமல் மறந்து விடுவது போன்றவற்றை நமது அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அரசியல்வாதிகளின் இந்த மெத்தனப்போக்கை அவ்வப்போது சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பும் பணியை சில சட்டவியல் அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இதை தடுக்கும்விதத்தில்  வழக்கறிஞர்களின் சுயச்சார்புத்தன்மையை சிதைக்கும் நோக்கத்தில் சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010 (Legal Practitioners (Regulation and Maintenance of Standards in Profession, Protecting the Interest of Clients and Promoting the Rule of Law) Act, 2010) என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

சட்டத்தொழிலின் தரத்தை மேம்படுத்துவதிலோ, வழக்காடும் பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பதிலோ, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சட்டத்தொழிலின் தரத்தை கண்காணிக்கவும், மேம்படுத்தவும், வழக்காடும் பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கவும் பார் கவுன்சில் என்ற அமைப்பு இருக்கிறது.

வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு நிர்வாகம் செய்யப்படும் இந்த பார்கவுன்சில் அமைப்பே சட்டக்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்தல், சட்டத்தொழிலின் அறங்களை நிர்ணயம் செய்தல், அவற்றை கண்காணித்தல், அவற்றை மீறுவோருக்கு தண்டனை அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மத்திய அரசோ, மாநில அரசோ புதிய சட்டங்களை கொண்டுவரும்போது இந்த பார் கவுன்சிலிடம் கலந்து ஆலோசித்தே அந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உலக நடைமுறை. ஆனால் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்குமே தெரியாமல் சட்டங்கள் அமலாகும் நிலையில் பார்கவுன்சிலிடம் ஆலோசனை நடத்துவது என்பதெல்லாம் பகல் கனவாகவே உள்ளது.

இந்த பார்கவுன்சிலின் தேர்தலும் கூட மக்கள் மீதோ, வழக்கறிஞர் தொழில் மீதோ அக்கறை கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, பணமும் அதிகார ஆசையும் கொண்ட வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு நடைமுறையாகவே உள்ளது. கட்சி அரசியல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தும் இந்த பார் கவுன்சில் அமைப்பு அதன் உரிமைகளையோ, கடமைகளையோ உணர்ந்து செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியே!
 
இந்த சூழலை பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலை நெறிப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டிய பார் கவுன்சிலை அதிகாரம் இல்லாத பொம்மை அமைப்பாக்கிவிட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் லீகல் சர்வீஸஸ் போர்ட் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010 என்ற புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த லீகல் சர்வீஸஸ் போர்டின் தலைவரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அனைத்திந்திய பார் கவுன்சில் தலைவர் ஆகியோரை ஆலோசித்து, குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார்.

இவரையடுத்து ஒரு உறுப்பினர்-செயலர் நியமனம் செய்யப்படுவார்.  இவரையடுத்து மத்திய அரசு நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இவர்களில் ஐந்து பேர் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள மாநில பார்கவுன்சிலின் தலைவர்களாக இருப்பார்கள்.

வழக்கறிஞர் தொழிலின் நெறிமுறைகள், சட்டக்கல்வி உள்ளிட்ட விவகாரங்களை இந்த லீகல் சர்வீஸஸ் போர்ட் தீர்மானிக்கும். இதைத் தவிர சட்டத்தொழில் தொடர்பான இதர விவகாரங்கள் குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு.

இந்த அமைப்பின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அமைக்கப்படும். குறைதீர்ப்பாளர் ஒருவரும் நியமிக்கப்படுவார். வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர்கள் (வழக்காடுவோர்) கூறும் புகார்களை இந்த குறைதீர்ப்பாளர் விசாரித்து தீர்வு காண்பார்.


இந்த லீகல் சர்வீஸஸ் போர்டின் செலவுகளுக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களிலும் மற்ற நீதித்துறை அமைப்புகளிலும் சமர்ப்பிக்கும் வக்காலத்துடன் ரூ.25 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒன்றை இணைக்க வேண்டும்.

இவ்வாறு பார் கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கும் விதத்திலேயே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு அமைப்பும், அரசியல்வாதிகளும் செய்யும் தவறுகளை உடனுக்குடனே தட்டிக்கேட்பதற்கான வாய்ப்புள்ள ஒரே தொழிலாக வழக்குரைஞர் தொழில் மட்டுமே விளங்குகிறது. எனவே வழக்குரைஞர்களையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்த சட்டம் அறிமுகப்படுத்துவதாக கருதலாம்.

மக்கள் உரிமைகளையும், தங்கள் உரிமைகளையும் பாதுகாக்க விரும்பும் வழக்கறிஞர்களோடு, மனித உரிமையில் நம்பிக்கை கொண்ட பொதுமக்களும்  அரசின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 

-மக்கள் சட்டம் குழு

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!