Monday, August 13, 2007

உயர் நீதித்துறையில் மறுக்கப்படும் பிரதிநிதித்துவம்




சனவரி 14, 2007 - சுதந்திர இந்திய வரலாற்றில் குறித்து வைக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான், இந்தியா சுதந்திரம் பெற்ற 59 ஆண்டுகள் கழித்து, குடியரசாகி 57 ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் தொடங்கி 56 ஆண்டுகள் கடந்து, முதன்முறையாக ஒரு தலித் (கே.ஜி. பாலகிருஷ்ணன்), இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க முடிந்தது. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் போதிய பணிமூப்பும், திறமையும் பெற்றிருந்தும் அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதில் அப்போதிருந்த தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் காட்டிய சுணக்கமும், டாக்டர் கே.ஆர். நாராயணன் அவருக்கு எழுதிய கோப்புக் குறிப்புகளும்கூட, இந்தத் தலைமைப் பதவியை இன்று நீதிபதி பாலகிருஷ்ணன் பெற்றதற்கு ஒரு காரணம்.





பல்வேறு துறைகளைப் போலவே, இந்திய நீதித்துறையிலும் தலித்துகளுக்கு எதிரான மனநிலை என்பது வரலாறு அறிந்த ஒன்று. சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக அ. வரதராஜன் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது (1973), அப்போதிருந்த பெரும்பான்மை வழக்குரைஞர்களான பார்ப்பனர்களில் பலர் - அவரை நீதிபதியாக ஏற்க மறுத்து, அவருடைய வழக்கு மன்றத்தைப் புறக்கணித்ததை மறந்துவிட முடியாது. இந்தப் பின்னணியில்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகிய உயர் வழக்கு மன்றப் பதவிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. குடியரசு என்பது குடிகளால் அமையும் அரசாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மை மக்களான தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண்களை ஒதுக்கி வைப்பது, குடியரசுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்குவதாகும். அரசு என்பது சட்டத் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டதாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், உயர் நீதித்துறையில் மட்டும் (உயர் வழக்கு மன்றங்களான உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்) இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க மறுப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி என்றே கூறலாம்.




தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் பிடி இறுகிவரும் இன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் - இவற்றின் தாக்கத்திற்கு நீதித்துறை மட்டும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் ஒடுக்கப்பட்டோரின் நலன்களைப் பாதுகாக்க, உயர் வழக்குமன்றங்களில் பிரதிநிதித்துவம் (இடஒதுக்கீடு) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். டாக்டர் கே.ஆர். நாராயணன், உயர் வழக்கு மன்ற நீதிபதிகளை நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் பெற்றவர் என்ற முறையில், நீதிபதிகள் நியமனத்தில் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அப்போது குடியரசுத் தலைவர் தனது மரபை மீறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நீதித்துறை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 12 இன்படியான ‘அரசு' எந்திரமல்ல என்றும், தகுதி அடிப்படையில் மட்டுமே உயர் வழக்கு மன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், அதில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது, நீதித்துறையின் தரத்தைக் குறைத்துவிடும் என்றும் பல்வேறு புனைவுகள் சொல்லப்படுகின்றன. இந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவைதானா என்பதை ஆய்வு செய்யும் முன், தற்போது நடைமுறையிலிருக்கும் நியமன முறையைப் பற்றி சற்று பார்ப்போம்.




‘நீதித்துறை சுதந்திரம்' இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக, உச்ச நீதிமன்றத்தால் 1973 ஆம் ஆண்டு "கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு' (AIR 1973 SC 1461) என்ற வழக்கில் அடையாளம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல் ‘நீதிபதிகள் வழக்கிலும்' (எஸ்.பி. குப்தா எதிர் இந்திய ஒன்றியம் AIR 1982 SC 149) பின்னர் வந்த இரு வழக்குகளிலும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசிடமிருந்து உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதற்கு முன்னர் அரசுக்கு இருந்த இறுதி அதிகாரத்தை, இவ்வழக்குகளின் தீர்ப்புகள் வழியாக உச்ச நீதிமன்றம் தனதாக்கிக் கொண்டது.





தற்போதுள்ள நியமன முறை முற்றிலும் கமுக்கமானதாகவும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கே அதிர்ச்சி தரும் நியமனங்களை செய்து வருவதாகவும் உள்ளது. இவ்வாறு நடைபெறும் நியமனங்களில் நியமன அதிகாரம் பெற்ற மூத்த நீதிபதிகளிடையே பேரங்கள், விட்டுக் கொடுத்து பெற்றுக் கொள்ளுதல், சார்புத் தன்மை, நீதித்துறை மற்றும் பொது மக்கள் நலன்களைக் கருத்தில் கொள்ளாதது, லஞ்சம் போன்றவை அன்றாடம் கவனத்திற்கு வந்து கொண்டுதான் உள்ளன. நீதிபதி தேர்வில் ஏற்கனவே நீதிபதியாக இருந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அல்லது நியமனத்திற்குப் பரிந்துரைக்கும் நீதிபதியின் தொழிற்பழகுநராக (Junior) இருத்தல் அல்லது அந்நீதிபதியின் சாதியைச் சேர்ந்தவராக இருத்தல் என்ற மூன்று அடிப்படைக் கூறுகளில் ஒன்றை - எந்தவொரு நியமனத்திலும் பெரும்பாலும் காணலாம்.




மேலும், அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகும் நீதித்துறை செயல்பாடு குறித்த செய்திகளும் உயர்வழக்கு மன்ற நீதிபதிகளின் மனப்போக்குகளை தெரிவிப்பதாக அமைகின்றன. வழக்குத் தரப்பினர், அவர்களுக்காகச் செயல்படும் வழக்குரைஞர்கள் ஆகியோரின் சமூக, அரசியல் செல்வாக்கு அடிப்படையிலேயே பெரும்பாலும் தீர்ப்புகள் அமைவதாக மக்கள் பரவலாக உணர்கின்றனர்.



தற்போது மாவட்ட நீதிபதி வரையிலான பதவிகளில் இடஒதுக்கீடு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இவை அரசுப் பணியிடங்களாகக் கருதப்பட்டு, மாநில தேர்வாணைக் குழுக்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டாலும், அந்தந்த உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே இத்தேர்வு குறித்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பதவியில் அமர்த்துவது மட்டுமல்ல, பணியின் போது ஏற்படும் குறைபாடுகளுக்கான துறைசார் நடவடிக்கைகூட, உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்தக் கீழமை நீதித்துறை (Subordinate Judiciary) சில குறைபாடுகளுடன் இருந்தாலும், இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதால் மட்டுமே குறையுடையதாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.




கீழமை நீதித்துறையின் தீர்ப்புகளும் தீர்ப்புகளாகவே வழக்குத் தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நீதித்துறையின் அடித்தளமாக இயங்குகின்ற கீழமை நீதித்துறையே அனைத்து விதமான வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கி கையாள்கிறது. கீழமை நீதித்துறையின் செயல்பாடுகளை நீதித் துறையின் இந்தியத் தலைமையே பல்வேறு தருணங்களில் பாராட்டியுள்ளது. மாறாக, உச்ச நீதிமன்றத்தால் அடிக்கடி கண்டனம் பெறுபவை பெரும்பாலும் உயர் நீதிமன்றங்கள்தாம். எனவே, இடஒதுக்கீடு அளிப்பதால், நீதித் துறையின் செயல்பாடு குறைந்துவிடும் என்ற வாதம் தவிடுபொடியாகிறது.





உயர் வழக்கு மன்றங்கள் ‘அரசு' என்ற வரையறைக்குள் வராததால், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை / முடியாது என்ற வாதமும் போலியானதே. உச்ச நீதிமன்றம் இந்திய ஒன்றிய நீதித்துறை எனவும், உயர் நீதிமன்றம் மாநில நீதித்துறை எனவும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 124, 214 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில, ஒன்றிய நடவடிக்கைகளில் நிர்வாகத்தில் திறமையைப் பராமரிப்பதற்கு இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்கத்தக்கதே. ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி பதவிகள் ஒரு நூறுக்கும் குறைவே. ஆனால், அம்மாநிலத்தில் தொழில் செய்யும் வழக்குரைஞர்கள் பல்லாயிரம். எனவே, இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டால் தகுதியான நபர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.



"ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் விவகாரங்கள் தொடர்பான பணியிடங்களுக்கும் பதவிகளுக்கும் நியமனங்களிலும், நிர்வாகத்திலும் திறமையைப் பராமரிப்பதற்கு முரணில்லாத வகையில் - தலித் மற்றும் பழங்குடியினரின் கோரிக்கைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்'' என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 335 கூறுகிறது. மேற்கூறிய பின்னணியில், இந்தியாவின் முதல் தலித் தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவியேற்றுள்ளது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்திய நீதித்துறையின் தலைமைப் பீடத்திலிருந்து அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் பல. நீதித் துறையின் தேசிய அளவிலான கொள்கை முடிவுகளை தலைமையேற்று எடுத்திடும் பொறுப்பும் அவரிடமுள்ளது. சாதியத் தாக்கத்தின் உச்சத்திலிருக்கும் உயர் வழக்கு மன்றங்களில் வரவேற்கத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவரும் அளவிற்கு, நீண்ட காலம் (3 ஆண்டுகள் 4 மாதங்கள்) பதவியில் இருக்கும் வாய்ப்பும் அவருக்குள்ளது. இந்த உயரிய பதவியை ஏற்கும் தருணத்தில் அவர் அளித்துள்ள நேர்காணலில் தனக்கு முன்பிருந்த தலைமை நீதிபதி போலல்லாமல், "இந்தியத் தலைமை நீதிபதியையும் தேசிய நீதித்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தனக்கு உடன்பாடானதே'' (‘இந்து' 3.1.2007) என்று கூறியிருப்பது, அவரது முற்போக்கான, மக்களாட்சி தத்துவத்தின் மீது அவர் கொண்டுள்ள மாண்பை வெளிப்படுத்துகிறது.



அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின நீதிபதியான தர்குட் மார்ஷல், தனது அறிவாழமிக்க சட்ட நுணுக்கத்தால் - அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் நிறப் பாகுபாட்டின் கொடூரத்தை உணரச் செய்தார். வழக்குரைஞராக இருந்த போது அவர் வாதிட்ட ‘பிரவுன் எதிர் கல்வி வாரியம்' (Brown Vs - Board of Education) வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு', கறுப்பின மக்களுக்கு காலங்காலமாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தது.





அதே போல், புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவரும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தகுதியிலும், திறமையிலும் தன்னிகரற்று விளங்கியவருமான ஆந்திரத்தைச் சேர்ந்த தலித் நீதிபதியான கே. ராமசாமி, இந்தியாவில் தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை பற்றிய ஆய்வுடன் கூடிய மிகச் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார் (அப்பு பாலு இங்காலே - எதிர் - கர்நாடக அரசு - AIR 1993 SC 1126). மேலும், இவர் ‘இந்தியாவில் கடைப் பிடிக்கப்படும் தீண்டாமை, இனப்பாகுபாடு அல்ல' என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிலைப்பாடு எடுத்தபோது, தென் ஆப்பிரிக்கா - டர்பனில் நடைபெற்ற இனப்பாகுபாட்டிற்கெதிரான மாநாட்டில், ‘தீண்டாமை இனப்பாகுபாடே' என்று (அப்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்) உரத்த குரலில் முழக்கமிட்டு, உலகின் கவனத்தை ஈர்த்தார். மண்டல் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதற்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கிலும் (இந்திரா சகானி - எதிர் - இந்திய ஒன்றியம் AIR 1993 SC 477) இடஒதுக்கீட்டின் தேவை குறித்து நீதிபதி கே. ராமசாமி வழங்கிய தனித்த தீர்ப்பு குறிப்பிடத்தகுந்தது.


மேலும், ‘மாதுரி பாட்டீல் - எதிர் - மகாராட்டிர அரசு' (AIR 1995 SC 94) வழக்கில் பட்டியல் சாதியினர் - பழங்குடியினரல்லாத நபர்கள் போலி சான்றிதழ்கள் மூலம், இடஒதுக்கீட்டை அபகரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி என்று வழங்கிய தீர்ப்பு, இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றதன் தொடக்கப்புள்ளியாகும். நீதிபதி கே. ராமசாமி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அளித்த பங்களிப்பைவிட கூடுதலாகப் பங்களிப்பு செய்யும் வாய்ப்பு, இந்தியத் தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு உள்ளது.



உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மனித உரிமைப் போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர், பாலகிருஷ்ணன் இத்தலைமைப் பதவியை ஏற்றபோது தனது அறிக்கையில், "அவருடைய இன்றைய நிலையை வரலாறு அவருக்கு வசமாக்கியுள்ளது. பாலகிருஷ்ணன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கானது என்பதை மனதில் கொண்டு செயல்பட்டு, அவருடைய பதவிக் காலத்தை ‘பாலகிருஷ்ணனின் காலம்' என்று மக்கள் அழைக்கும்படி சிறப்புறச் செய்வார். இந்திய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற பெரிய சக்திகளுக்கு ஆட்படாமல் மக்கள் நீதிபதியாகத் திகழ்வார்'' என்று தெரிவித்திருந்த நம்பிக்கையை கண்டிப்பாக அவர் காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.


(நன்றி :
மார்ச், 2007)



-சு. சத்தியச்சந்திரன்

4 comments:

Anonymous said...

நல்ல பதிவு

Anonymous said...

நல்ல பதிவு

Anonymous said...

சுதந்திர தின வாழ்த்துகள்

Anonymous said...

சட்டத்துறையில் இவ்வளவு பிரசினைகளா? வெளி உலகிற்கு தெறியாத பல உண்மைகளை வெளிக்கொணரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.


ராஜேஷ் குமார்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!