செய்தி: இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உட்பட்டபோது அதில் பயணம் செய்த 90 பேரில் 26 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து அப்பேருந்தை இன்ஸ்யூர் செய்திருந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர், பி.கே. பாலசுப்ரமணியம் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இந்த தீர்ப்பில், பேருந்தில் 42 பயணிகளை மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி உள்ளது. இதை மீறி 90 பேர் அந்த பேருந்தில் பயணம்
செய்தது தவறு. எனவே அந்த பேருந்தில் பயணம் செய்த 90 பேருக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை. எனினும் அதிகபட்ச இழப்பீட்டுக்குரிய முதல் 42 பேருக்கான இழப்பீட்டுத்தொகையை 90 பேருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மனுதாரர்கள் கோரும் மீதத்தொகையை பேருந்தின் உரிமையாளர்தான் வழங்க வேண்டும். அந்த தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டியதில்லை என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
விமர்சனம்: சட்டப்படி பார்த்தால் இந்த தீர்ப்பு சரியானது போல தோன்றலாம். தமிழ்நாட்டிலும் சென்னை உட்பட பலபகுதிகளில் பேருந்தின் படிக்கட்டில் பயணம செய்பவர்களை பிடித்து தண்டிக்கும் நிலை உள்ளது.
விடலைப்பருவத்தில் உள்ள சில இளைஞர்களைத்தவிர வேறு யாரும் படிக்கட்டுப் பயணத்தை விரும்ப மாட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் முதியவர்கள், பெண்கள் உட்பட பலரும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது இயல்பாகவே உள்ளது.
இது பயணிகளின் தவறுதானா? பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும், அலுவலகங்களில் பணியாற்றுவோரும் பேருந்து கிடைக்கவில்லை என்பதால் தாமதமாக செல்வதை யாராவது அனுமதிப்பார்களா?
இந்த பேருந்துகளை இயக்குவது அல்லது கட்டுப்படுத்துவது அரசுதான் என்ற நிலையில் “படிக்கட்டு பயணம்” என்ற குற்றச்செயலுக்கான முழு காரணமும் அரசிடமே உள்ளது. இந்த குற்ற செயலுக்கு காரணமான அரசே, பாதிக்கப்படும் பொதுமக்களை தண்டிக்கவும் செய்வது இரட்டை தண்டனை (DOUBLE JEOPARDY) ஆகும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காவலர்கள் நடந்துகொள்ளும் முறை மிகவும் அநாகரீகமானது. வேறு வழியின்றி பேருந்தின் படிக்கட்டில் தொங்கிகொண்டு செல்பவர்களை, திருடர்களை போல கையாள்வதும், அவர்களை அடிப்பதுமாக காவலர்களின் “ஜபர்தஸ்து” அரங்கேற்றப்படுகிறது.
இதே போன்ற தவறான கண்ணோட்டம்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் நிலவுகிறது. காரணம் என்னவென்றால் சாதாரண நகரப்பேருந்துகளில் பயணம் செய்து படிப்பவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகக்கூட பணியாற்ற முடியாது என்ற நிலை நிலவுவதே.
மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறையாக சட்டம் படிப்பவர்களுக்கே அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்கள் யாரும் நகரப்பேருந்தில் ஏறிப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர்களின் கண்ணோட்டத்தில் பேருந்து பயணிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும், கீழானவர்களாகவுமே தெரிவார்கள்.
இவர்கள்தான் “மக்களுக்காக சட்டம்” என்பதை மறந்துவிட்டு, “சட்டத்திற்காக மக்கள்” என்ற நிலையை நடைமுறைப்படுத்துகின்றனர். இதன் விளைவாகவே மேலேக் கூறப்பட்டதைப்போன்ற தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. 42 பேர் மட்டுமே செல்லக்கூடிய பேருந்தில் 90 பேர் பயணம் செய்ய வேண்டிய அவல நிலையை ஏற்படுத்திய குற்றவாளியான அரசு எந்தவிதமான விசாரணையும் இன்றி தப்பி விடுகிறது.
நீதித்துறையிலும் இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டு அரசுப்பள்ளியில் படித்து, பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி ஆனால்தான் இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கான நீதிமன்றங்களாக இருக்கும்.
-சுந்தரராஜன்
(Sundararajan@lawyer.com)
3 comments:
//நீதித்துறையிலும் இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டு அரசுப்பள்ளியில் படித்து, பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி ஆனால்தான் இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கான நீதிமன்றங்களாக இருக்கும்.
//
100% சரி
*************************
. 42 பேர் மட்டுமே செல்லக்கூடிய பேருந்தில் 90 பேர் பயணம் செய்ய வேண்டிய அவல நிலையை ஏற்படுத்திய குற்றவாளியான அரசு எந்தவிதமான விசாரணையும் இன்றி தப்பி விடுகிறது.
*************************
உண்மை. . . .
Thank You for your informative blog. My response to the above post can be found in
http://marchoflaw.blogspot.com/2007/08/blog-post_26.html
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!