Tuesday, August 14, 2007

மூன்று தலைமுறைகளுக்கு ஆபத்து!

சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் எல்லைகள், எண்ணிக்கைகள் ஆகியவற்றை வரையறுக்கும் வகையில் 1952 ஆம் ஆண்டு மத்திய அரசு ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம்' இயற்றியது. தொகுதி மறுசீரமைப்புச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய அரசால் இயற்றப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு, இதுவரை நான்கு முறை தனியே சட்டம் இயற்றியுள்ளது.

முதல் இரண்டு பொதுத் தேர்தலின்போதும் நடைமுறையில் இருந்த ‘இரட்டை வாக்குரிமை' முறை நீக்கப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ள தனித்தொகுதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002' அடிப்படையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்டும், மத்திய தலைமை தேர்தல் ஆணையரையும், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரையும், மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அய்வரையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அய்வரையும் உறுப்பினர்களாகக் கொண்டு ‘தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்' செயல்படுகிறது.


தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனித்தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், தற்பொழுதுள்ள பல தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. எல்லைகளும் மாநிலம் முழுவதும் பரவலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

‘பட்டியல் சாதியினருக்கான தனித்தொகுதி, மாநிலம் முழுவதும் பரவலாக ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், அந்தந்த பகுதிகளில் பட்டியல் சாதியினர் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் அதிகமாகவும் இருக்கும் தொகுதியாக இருக்க வேண்டும்’ என்று தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002 கூறுகிறது. ஆனால், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கருத்துரையில் – பட்டியல் சாதியினருக்கான 7 நாடாளுமன்ற (தனித்) தொகுதிகளும், தமிழகம் முழுவதும் பரவலாக ஒதுக்கீடு செய்யப்படாமல் (திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம்) வட மாவட்டங்களில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் அமைந்துள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில், தனித் தொகுதிகள் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.



தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிராக, தற்போதைய ஒதுக்கீடு அமைந்துள்ளது. சமமின்மையை ஈடுசெய்து, நாடெங்கும் நிலவும் சமமற்ற நிலையை அகற்றுவதே இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கை. தமிழகத்தில் வசிக்கும் 19 சதவிகித பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், குவியலாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில் தனித்தொகுதியானது, மாநிலம் முழுவதும் பரவலாக அமையப் பெறுவதே இயற்கை நீதி. தனித் தொகுதி முறை இந்திய அரசியல் சாசனத்தால், பட்டியல் சாதியினருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளில் தலையாயதாகும். அதன் அடிப்படையில் பட்டியல் சாதியினர் அரசியலில் பங்கேற்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தனித் தொகுதி முறை பட்டியல் சாதியினருக்கு அடிப்படை உரிமையே அன்றி எவரும் மனம் கசிந்து வழங்கும் சலுகை அல்ல.


தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் தமிழக அளவிலான கருத்துரை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவத்தை சீர்குலைப்பதுடன் சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் ஏனைய அடிப்படை மதிப்பீடுகளையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழும் பட்டியல் சாதியினரைப் பொருத்தவரையில், இந்திய அரசியல் சாசனத்தின் விதிகள் 14 மற்றும் 21 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

அரசியல் அமைப்புச் சட்டம் பட்டியலின மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யும் வகை யில் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படை யில் உருவாக்கப்பட்டதே தனித் தொகுதி முறை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்துப் பட்டியலின பிரிவு மக்களும் பங்கேற்பு செய்ய இயலாத வகையில், அனைத்துத் தொகுதிகளையும் ஒரே பகுதியில் மட்டுமே ஒதுக்கியுள்ளது ஓர் உரிமைப் பறிப்புச் செயலன்றி வேறென்ன?


தற்போது, தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் தனித் தொகுதிகளான ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் தென்காசி (தெற்கு) பொள்ளாச்சி, ராசிபுரம் (மேற்கு), நாகப்பட்டினம் (கிழக்கு), பெரம்பலூர் (மத்தி) சிதம்பரம், திருப்பெரும்புதூர் (வடக்கு) என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பட்டியல் சாதியினருக்கும் பிரதிநிதித்துவ வாய்ப்பளிப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் பொது விசாரணை நடைபெறும் என்றும் அதில் வரும் கருத்துகள், ஆலோசனைகள், கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கண்துடைப்பிற்காக தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அறிவித்தது.



அந்த அடிப்படையில் 4 மாவட்டங்களுக்கு மொத்த கால அளவு 3 மணி நேரம் (சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 45 நிமிடங்கள் மட்டுமே) ஒதுக்கப்பட்டது. மேலும் 8 மாவட்டங்களுக்கு ஒரே இடத்தில் வைத்து பொது விசாரணை நடைபெற்றதன் காரணமாக, அனைத்துப் பகுதி மக்களும் அதில் பரவலாக பங்கேற்க முடியாமல் போனது.

பொது விசாரணை முடிந்த பிறகு மாநில அளவில் இணைந்த உறுப்பினர்களுடன் அமர்ந்து கலந்தாலோசித்து, இறுதியாக குடியரசுத் தலைவரது ஒப்புதலுடன் செப்டம்பர் மாதம் அரசிதழில் இறுதியறிக்கை வெளியிடப்படும் என தேசிய தேர்தல் ஆணையர் அறிவிப்பு செய்துள்ளார். அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதியறிக்கையை இந்திய நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்த முடியாது என இச்சட்டமும், இந்திய அரசியல் சாசனமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாகக் கூறுகின்றன. அடுத்து 2026 இல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதிகள் மறு சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் வசிக்கும் பட்டியல் சாதியினரில் மூன்று தலைமுறையினர் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


இச்சட்டத்தில் தனித் தொகுதிகளின் சுழற்சி முறை குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் எதிராக, தற்போது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் தமிழக அளவிலான கருத்துருவானது திரும் பப் பெறப்பட்டு, தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பட்டியல் சாதியினர் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், மாநிலத்தின் தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக நாடாளு மன்றத்தின் (தனித்) தொகுதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.


(நன்றி:

ஜூன், 2007)



-இராபர்ட் சந்திர குமார்

2 comments:

Anonymous said...

தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தவறான தலைவர்களிடம் அதிகாரம் சென்றடைந்தால் அது தலித் மக்களுக்கு எந்த நன்மையையும் தராது.
தலித் சகோதரர்களுக்கு தற்போது தேவை பார்ப்பனிய எதிர்ப்பு கலாச்சாரமும், முதலாளித்துவ எதிர்ப்பு பொருளாதாரக் கொள்கைகளும்தான்.
இந்த அம்சங்களே தலித் சகோதரர்களின் வாழ்வை மேம்படுத்தும். கட்டுரையாளரின் கருத்துகள் திமுக, அதிமுக போன்ற மக்கள் விரோத சக்திகளுக்கே உதவி செய்யும்.

Anonymous said...

சுதந்திரதின வாழ்த்துகள்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!