Saturday, August 4, 2007

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் (நிறைவுப்பகுதி)

நிலவியல் குறியீடூகளுக்கான சட்டம் (GEOGRAPHICAL INDICATION ACT) 1999

திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் தேயிலை, சேலம் மாம்பழம் போன்ற பொருட்கள் அவை தயாராகும் இடத்தின் காரணமாகவே புகழ்பெற்றவை. இவற்றிற்கான குறியீட்டு உரிமையை பதிவு செய்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் நமது பாரம்பரிய செல்வங்களான வேப்பமரம், மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றை பாதுகாத்திட முடியும் என்றும், நம் விவசாயிகளின் உரிமைகளை இச்சட்டம் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உன்மையில் ஏராளமான இயற்கை வளம் மிகுந்த நாட்டில் அத்தனை பொருட்களையும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளையும் அல்லது தயாரிக்கப்படும் பொருளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, அப்பகுதி சார்ந்த மக்களுக்கான சிறப்புரிமையாக வழங்கப்படவில்லை. ஒரு புகழ்பெற்ற பொருளை அப்பகுதியில் தயாரிக்கும் யாரும் அதற்கான உரிமையை பதிவு செய் முடியும்.

உதாரணமாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று காஞ்சிபுரத்தில் தறி அமைத்து காஞ்சிப்பட்டுக்கோ, ஈரோட்டில் உற்பத்தி நிலையம் அமைத்து பவானி ஜமக்காளத்திற்கோ, திருநெல்வேலியில் உணவகம் அமைத்து திருநெல்வேலி அல்வாவிற்கோ இந்த சட்டத்தின் கீழ் பதிவு பெறமுடியும். இந்தியாவின் பாசுமதி அரிசியை பல வெளிநாட்டு நிறுவனங்கள் “டாசுமதி, காசுமதி” போன்ற பெயர்களில் காப்புரிமை பெற்றுள்ளனர். இத்தகைய மோசடிகளுக்கு எதிராக இந்த சட்டத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை.





உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT) 2001

நம் நாட்டின் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை (TRADITIONAL KNOWLEDGE) பாதுகாத்திடவும், பல்உயிரின ஒப்பந்தத்தின் (CONVENTION FOR BIO-DIVERSITY) அடிப்படையில் அமைந்ததே உயிரினவகை வேறுபாட்டு சட்டம். காப்புரிமை போன்ற சட்டங்களினால் நம்நாட்டு வளங்கள் பறிபோவதை தடுப்பதற்கு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சில கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டினுடைய இயற்கை வளங்களையும் இன்னும் பல வளங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை முழுவதுமாக தடைசெய்கிறது.

அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கமிட்டியின் கீழ் பாதுக்காக்கப்படும் இடங்களுக்குச்சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கைவளங்களின் மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. நம் விவசாயிகளின் பழமை வாய்ந்த பயிர்வகைகளையும் வேறுசில தாவர வகைகளையும் ஆராய்ச்சி செய்யவும் இச்சட்டம் அனுமதி அளிக்கின்றது. மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்தகு இச்சட்டம் உதவுவதோடல்லாமல் இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்ளையும் மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது.




நிறைவுரை

பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நலன் காக்கும் சட்டங்களை அமல்படுத்த பலவகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உலக வங்கி மூலம் கொடுக்கும் நிர்பந்தம் ஒரு முறை; அமெரிக்கா போன்ற “அமைதியின் காவலர்கள்” மூலம் கொடுக்கும் நெருக்கடி மற்றொரு முறை; ஏழை நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது மற்றொரு முறை.

இந்தோனேஷியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு பலவித பெயர்களில் கட்டணம் செலுத்தியதாக மான்சான்டோ நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் இத்தகைய செயல்கள் நடைபெறாது என்று யாரும் உறுதிகூற முடியாது. ஆனால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மாண்பு குறைந்துவிடாமல் பாதுகாப்பதற்காக பலவிதமான மனித உரிமை மீறல்கள் மறைக்கப்படுவதைப்போல இந்த லஞ்ச-ஊழல் குற்றங்களும் மூடிமறைக்கப்படலாம்.

இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூக பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விலகி நிற்க முடியாது.





-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)

7 comments:

Anonymous said...

யோவ் ரஜினி, ஷ்ரேயா, தல, த்ரிஷா இப்படி எழுதினா யாராவது படிப்பாங்க. இதையெல்லாம் மனுஷன் படிப்பானா...
போய்யா..போ..போய் உருப்படற வழியைப்பாரு..

Anonymous said...

Serious post & keep it up, I do not understand why anony is making a comment like this.
Venkat
Singapore.

மாலன் said...

சட்டங்கள் குறித்த உங்கள் பதிவுகளைப் படித்தேன். நல்ல முயற்சி.

WTO ஒப்பந்தங்களை அடுத்து, வேளாண் துறையை பாதிக்க்கும் வகையில் சுமார் 60 சட்டங்கள் அடுத்தடுத்து இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில கொடுமையானவை. உதாரணம் விதைச் சட்டம். அவை குறித்து அநேக விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. ஊடகங்களும் அவை குறித்து அதிகம் பேசுவதில்லை. (நான் என்னளவில் மூன்று நான்கு மாதங்களுக்கு முன், ஊராட்சித் தலைவர்கள் கருத்தரங்கொன்றில், பல்லுயிர்ப் பெருக்கச் சட்டம் பற்றி எடுத்துக் கூறினேன்) இந்தப் பின்னணியில் உங்கள் பணி பாராட்டத் தக்கது.

நான் சார்ந்திருக்கும் அமைப்பொன்றின் உந்துதலில் நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வேளாண் தகவல் மையம் ஒன்று ஐந்து கிராம மக்களுக்கு வேளாண்மை குறித்த செய்திகளை எடுத்துச் சொல்லி வருகிறது.(உ-ம்: இயற்கை வேளாண்மை)
உங்கள் குழுவினர் இந்தச் சட்டங்கள் குறித்து அந்த மையத்தின் மூலமாக வேளாண் மக்களுக்கு எடுத்துரைக்க முடியுமா? நீதி மன்றம் விடுமுறையில் இருக்கும் நாள்களில் வந்தால் கூடப் போதும்.

இயலுமென்றால் நான் அவர்களுக்கு எழுதி ஏற்பாடு செய்கிறேன்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாதலால் இங்கு எழுத வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்
அன்புடன்
மாலன்

Anonymous said...

வலை பதிவர் பட்டறையில் திரு.மாலன் உங்கள் பதிவை பெயர் குறிப்பிடாமல் பேசினாலும் நான் கண்டுபிடித்து உங்கள் வலைப்பதிவை பார்த்தேன்.

வலைப்பதிவு ஆரம்பிக்க விரும்பும் எனக்கு உங்கள் வலைப்பதிவு நல்ல முன்னுதாரணமாக உள்ளது.

அனைத்து கட்டுரைகளும் அருமை.

குறிப்பாக என்னைப்போன்று தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்காக எழில்நிலா இணைப்பு தந்தது பயனுள்ளதாக அமைந்தது.

விரைவில் எனது வலைப்பதிவை ஆரம்பித்து விட்டு சொல்கிறேன். தொழில்நுட்ப சந்தேகங்களும் கேட்பேன். நன்றி.

அன்புடன்,

சந்தியா

Anonymous said...

//அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கமிட்டியின் கீழ் பாதுக்காக்கப்படும் இடங்களுக்குச்சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கைவளங்களின் மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை.//

ஐயா,

பலமுறை பட்ட பின்பும் (உ.ம், பாசுமதி, மஞ்சள் காப்புரிமை வழக்குகள்) நாம் நம்முடைய அறிவுசெல்வங்களை இன்னமும் பாதுகாக்காமல் இருந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றில் பயனடையவே நினைக்கும்.

இந்த உலகமயமாக்கப்பட்ட காலத்தில் அச்சத்தோடு கதவை சாத்திக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டிராமல் நாம்தான் கதவுக்கு தாள் போடவேண்டும். அந்த வகையில் இச்சட்டம் வரவேற்கப்படவேண்டியதே.
Something is better than nothing.

இன்று, ஸ்காட்ச் விஸ்கி எனப்படும் மது பானம் ஸ்காட்லாந்து பகுதியில் தயாரிக்கப்பட்டால் மட்டுமே அவை ஸ்காட்ச் என அங்கீகரிக்கப்படும். ஏன் என்றால் அவை 'geographically exculsive' என அங்கீகரிக்கப்பட்டவை. அமெரிக்கவிலோ, பிற ஐரோப்ப நாடுகளிலோ, ஆசிய நாடுகளிலோ எங்கு விற்றாலும், அது ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். ஆனால், பல ஸ்காட்ச் ப்ராண்டுகள் பன்னாட்டு நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன. சமீபத்தில், யுனைடெட் ப்ரூவரீஸ் என்ற இந்திய நிறுவனம் கூட 'white & mckay' என்ற ஸ்காட்ச் விஸ்கி தயாரிக்கும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. ஆனால், அங்கு யாரும் இதைப்பற்றி பயம் கொள்ளவில்லை. இதுபோன்ற வர்த்தகத்தை தடை செய்யவில்லை.


ஆகவே, இன்றைய முக்கியத் தேவை, உடனடித்தேவை நமது மரபுவழி அறிவுசெல்வங்களை ஆவணப்படுத்துதலே, அவற்றிற்கு அங்கீகாரம் அளிப்பதே. இதை அரசாங்கம் மட்டுமே செய்யவேண்டும் என நினையாமல் பொது மக்களும் பங்கேற்க வேண்டும், முனைந்து பணியாற்ற வேண்டும். அப்பொழுதுதான் நமது செல்வங்களை பாதுகாக்க முடியும்.

Anonymous said...

காலத்திற்கேற்ற அவசியமான பதிவு. அறிவுத்துறையனரும், அறிவியல்துறையினரும் அவசியம் படிக்கவேண்டிய கருத்துகள்.



ராஜேஷ் குமார்

Anonymous said...

Your ignorance on the biodiversity act is appaling. Please dont spread false information and try to understand the issues. Your posts on intellectual property rights lack credibility as you
are trying to create scare than
explain the law and legal issues.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!