Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Thursday, December 10, 2009

மரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்


மரபணு மாற்றுப் பயிர்களை நிலத்தில் பயிரிட்டு கள ஆய்வு செய்யும்போது மற்ற பயிர்களிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளிவிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் Aruna Rodrigues & others V/s Union of India என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மரபணு மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பாசில்லஸ் துரெஞ்சரிஸ் என்ற நச்சுத்தன்மை கொண்ட புரதத்தை தாவரத்தின் மரபணுவுக்குள் புகுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அருகாமைப் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் மற்றப் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக மரபணு மாசு பரவ வாய்ப்பிருப்பதால் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இப்படி மரபணுமாற்று பயிர்கள் மற்ற பயிர்களோடு கலப்பதால் நம் பாரம்பரிய பயிர் வகைகள் அதன் தன்மையை இழந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையும் மாசுபடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே மரபணுமாற்று பயிர்களை பிற பயிர்களிடம் இருந்து உரிய அளவில் பாதுகாப்பான தொலைவில் பயிரிடவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. ஆனால் மரபணுமாற்று தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்களும் கண்காணிப்பு அமைப்புகளும் அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியாகவே இருக்கிறது.
மரபணுமாற்று தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் அமைப்புகள்
மரபணுமாற்று தொழில் நுட்பத்தை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் மரபணு மாற்று உயிர்கள் உற்பத்தி - பயன்படுத்தல் - இறக்குமதி - ஏற்றுமதி - சேமித்தல் தொடர்பான விதிமுறைகள் (Rules for the Manufacture Use Import Export And Storage of Hazardous Micro-Organism and Genetic Engineered Organisms or Cell 19890), என்கிற சட்ட விதியை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உயிரியல் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அரசின் கீழாக இயங்கும் மரபணு மாற்று தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (Recombinant DNA Advisory Committee - RDAC).மரபணுமாற்று ஆராய்ச்சிகளை கண்காணிக்க மற்றும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப சீராய்வுக் குழு (Review Committee on Genetic Manipulation - RCGM). ஆராய்ச்சி நிறுவனங்களில் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் ஆய்வுமைய உயிரிப்பாதுகாப்புக் குழு (Institutional Bio-Safety Committee - IBSC). மரபணுமாற்று ஆராய்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கண்காணிக்கும் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee - GEAC). மாநில அளவில் இயங்கக் கூடிய மாநில உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு (State Biotechnology Co-Ordination Committee -SBCC) மற்றும் மாவட்ட அளவில் இயங்கூடிய மாவட்ட உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழு. இந்த இரண்டு குழு க்களும் மாநில அரசின் கீழ் இயங்குபவை.
மரபணுமாற்று ஆராய்ச்சிக்கான விதிமுறைகள்
மரபணுமாற்று பயிர்கள் ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்யப்படுவது முதல், திறந்த வெளியில் பயிர் செய்யப்படும் வரை பின்பற்ற வேண்டிய விதிகளும் மேற்கூறிய அமைப்புகளால் வகுக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி கூடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள் (Recombinant DNA Safety Guidelines, 1990)மரபணுமாற்று பயிர்களின் நச்சுத் தன்மையை கண்டறியும் சோதனையில் பின்பற்ற வேண்டிய மரபணுத் தாவரங்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை மதிப்பிடுதல் விதிமுறைகள் (Revised Guidelines for Research in Transgenic Plants & Guidelines for Toxicity and Allergenicity Evaluation of Transgenic Seeds, Plants and Plant Parts, 1998) மரபணுமாற்று பயிர்களை திறந்தவெளியில் அல்லாமல் மூடிய பாதுகாப்பான ஆய்வு கூடத்தில் சோதனை முறையாக பயிர் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய மரபணு களப்பரிசோதனையை நெறிப்படுத்தும் விதிமுறைகள் (Standard Operating Procedures (SOPs) for Confined Field Trials of Regulated, GE Plants), மரபணுமாற்று பயிர்களின் இருந்து பெறப்படும் உணவுகளை ஆராயும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் (Guidelines for the Safety Assessment of Foods Derived from Genetically Engineered Plants), மரபணுமாற்று உணவுக்கான பொதுவான ஆய்வு முறைகள்(Protocols for Food and Feed Safety Assessment of GE crops) போன்றவை மேற்குறிப்பிட்ட குழுக்களால் இயற்றப்பட்டுள்ளன.
மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கண்காணிக்க மேற்கூறப்பட்ட அதிகார அமைப்புகளும், விதிமுறைகளும் இருந்தாலும் அவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் அனுமதித்தே தீருவது என்று அரசு முடிவு மேற்கொண்டுள்ளதால் இந்த அமைப்புகள் அனைத்தும் அரசின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப துறையின் முன்னோடியும், உச்ச நீதிமன்றத்தால் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவில் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணுமாற்று பயிர்கள் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் ஆய்வறிக்கைகளை GEAC கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உணவு குறித்த கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி கேரளம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், தங்களுக்கு மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் தேவையில்லை என்று கூறியுள்ளன.
மரபணு மாற்றத்தொழில் நுட்பத்திற்கு அனுமதி வழங்குவதில், பலமுனை முடிவுகள் மேற்கொள்ளப்படுவதால் தேவையற்ற காலதாமதம் ஆவதாக கருதும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க ஒற்றை அதிகார அமைப்பு தேவை என்று வலியுறுத்தி வந்தன.
இதை ஏற்று மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராகவும் வழக்கம்போல் திருவாளர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களே நியமிக்கப்பட்டார். இக்குழுவின் பரிந்துரையின்படி, மரபணு மாற்று அங்கீகாரக்குழுவிற்கு பதிலாக தேசிய உயிர்த்தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (National Bio-technology Regulatory Authority) என்று புதிய அதிகார மையம் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட ஒரு அறிவியல் நிபுணர் இருப்பார். சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பே மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் உள்ளிட்ட உயிர்த்தொழில்நுட்ப விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும். இந்த முடிவு நாடு முழுவதற்கும் விதிவிலக்கில்லாமல் பொருந்தும். அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றே ஆகவேண்டும். இந்த அமைப்பின் முடிவை ஏற்க முடியாது எந்த மாநிலமும் புறக்கணிக்க முடியாது. இந்த முடிவுகளில் மத்திய சுகாதார அமைச்சகமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோகூட தலையிட முடியாது. மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தோ, மரபணு மாற்றம் தொடர்பான சூழல் சீர்கேட்டிற்கு காரணமான வர்த்தக நிறுவனங்களை விசாரிக்கும் அதிகாரமோ இந்த அமைப்பிற்கு இல்லை.
- வழக்குரைஞர் மு.வெற்றிச்செல்வன்

Wednesday, August 12, 2009

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா?

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் (Tamil Nadu Agricultural Council Act) என்ற பெயரிலான சட்டத்தி்ற்கான முன்வடிவு ஒன்றை 23 ஜூன் 2009 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், "தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்" என்ற அமைப்பு நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை, மனையியல், உயிர்தொழில் நுட்பம், வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை தகவல் தொழில் நுட்பம், உயிர் தகவலியல், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்தும் பொறியியல், வேளாண் வர்த்தக மேலாண்மை ஆகியதுறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மன்றத்தில் பதிவு செய்ய முடியும்.

.

வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இத்தகைய பட்டம் பெற்றவர்கள் உரிய ஆலோசனைக்குப்பின்னர் இந்த மன்றத்தில் உறுப்பினராக அனுமதிக்கப்படுவர்.

.

இந்த மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள், சட்ட முன்வடிவின் 29வது அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி:

.

29. பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர் ஒருவர் நீங்கலாக வேறு நபர் எவரும், தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளாக வேளாண்மை ஆலோசகராக தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப்பணிகளை ஆற்றுவதோ கூடாது.

.

விளக்கம்:- “வேளாண்மைப் பணி” என்றால்,-

(அ) பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழி்ல்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்திகள், களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலான பரிந்துரைக்குறிப்பு வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பம், வேளாண்மை உயிரியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேளாண்மைப் பணிகளைச் செய்தல்;

.

(ஆ) தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வேளாண்மைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் வேளாண்மைத் திட்டங்களில் கையொப்பமிடுவது, அல்லது அதிகாரச் சான்றளித்தல் மற்றும் உரிய முறையில் தகுதி பெற்ற வேளாண்மை தொழிலாற்றுநர் ஒருவரால் சட்டத்தின்படி கையொப்பமிடப்பட வேண்டியதான அல்லது அதிகாரச் சான்றளிக்கப்பட வேண்டியதான மதிப்பீட்டுச் சான்றிதழை வழங்குதல்;

.

(இ) மண் மற்றும் நீரின் பண்புகளையும், இயற்கை மற்றும் இரசாயன உரங்களின் அளவையும் கணிப்பதிலும், பயிர்களுக்கு அழிவு செய்யும் பூச்சிகளையும், நோய்களையும் இனங்கண்டு தீர்வழி நடவடிக்கைகளை வகுத்துரைப்பதிலும் பல்வேறு மண் தரநிலைகளுக்கும், வேளாண் தட்பவெப்ப கூறுகளுக்கும் ஏற்ற வகையில், பயிரிடுதல் தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதை முறைப்படுத்தி உதவி செய்வதிலும், சிறு தோட்டம் அமைத்தல், மலர்செடி வளர்த்தல் மற்றும் நெடுநாள் இருக்கிற தோப்புகளை மேம்பாடு செய்தல் ஆகிய வற்றில் உயரிய தொழி்ல்நுட்ப பண்ணை முறைகளை மேற்கொள்வதிலும் குடியானவர்களுக்கு உதவுவதற்கு வேளாண்மைப்பணிமனைகளையும் ஆய்வுக்கூடங்களையும் நடத்துதல்;

என பொருள்படும்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், தம்மை இம்மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரித்து பணியாற்றினால் அவர் முதல் முறை சிக்கும்போது ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை சிக்கினால் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் தண்டனையும் வழங்க வகை செய்கிறது மேற்கூறிய சட்டம்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளை செய்யக்கூடாது என்று இந்த சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் இந்த மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரிக்காமல், மேற்கூறப்பட்ட இந்தப்பணிகளை எவரேனும் செய்தால் அவருக்கு என்ன தண்டனை என்பது தெரியவில்லை.

.

மருத்துவத் தொழிலையும், சட்டத் தொழிலையும் நெறிப்படுத்த இந்திய மருத்துவ மன்றமும், இந்திய வழக்குரைஞர் மன்றமும் இருப்பதுபோல வேளாண்மைத் தொழிலை நெறிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

.

மருத்துவம் படித்தவர்களில் ஏறக்குறைய அனைவருமே மருத்துவத் தொழிலையே செய்து வருகின்றனர். சட்டம் படித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால் வேளாண்மை படித்தவர்களில் எத்தனைப் பேர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர் என்று கேள்வி எழுப்பினால் பதிலைக் காணோம். வேளாண் பட்டதாரிகள் அனைவரும் அரசுப்பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்தான் பணியாற்ற விரும்புகின்றனர். யாரும் சொந்தமாக விவசாயம் செய்யத் துணிவதில்லை. ஏனெனில் அவர்கள் பெற்ற கல்வியின் மீது அவ்வளவு நம்பிக்கை!

.

சரி! ஏன் இந்த சட்டம்?

.

இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவும், இந்தியாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், அமெரிக்க வேளாண் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது.

.

இந்த ஒப்பந்தத்தின் பயனாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களோடு, இந்தியாவின் உணவு இறையாண்மைக்கு எதிரான சட்டங்களும் இந்தியாவில் அமல்படுத்தப் படுகின்றன.

.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருமளவில் பரவி வருகிறது. முன்னோடி விவசாயிகளும், சில பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபடுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

.

சொந்த நாட்டுக்குடிமகன் தொழில் தொடங்கினால் ஆயிரம் தடங்கல்களை ஏற்படுத்தும் மத்திய மாநில அரசுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் சலுகை விலையில் நிலம், மின்சாரம், மனிதவளம் ஆகியவற்றைத் தருகின்றன. இந்த வரிசையில் இந்திய வேளாண்மையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

.

பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், ஆய்வு உதவித் தொகை என்ற பெயரில் வழங்கும் நிதியால் இயங்கும் வேளாண்மை பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற மாணவர்கள்தான் அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக, மிக விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் அமைக்கப்படுவதாக இயற்கை வேளாண் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

.

கேரளா போன்ற அண்டை மாநிலங்கள், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கு மட்டுமல்ல: அனைத்து சமூகத்திற்கும் எதிரானதாக இருக்கிறது.

.

பல்லாயிரமாக ஆண்டுகளாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனுபவத்தில் வளர்த்தெடுத்த, சமூகத்தில் லாப நோக்கற்று பகிர்ந்து கொண்ட தமிழர்களின் வேளாண் அறிவை புறக்கணிக்கும் சட்டம் இது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

.

தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மை என்பது ஒரு தொழிலாக பார்க்கப்பட்டதில்லை. அது சமூகத்திற்கு உணவளிக்கும் ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் தவறான கொள்கைகள் காரணமாகவே வேளாண்மை என்பது லாபமற்ற அம்சமாக மாறியது. இதனால்தான் விவசாயிகள் பலரும் அந்த தொழிலை விட்டு விலகினர்.

.

வேளாண்மை பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகள் மூலமாகதான் எண்ணெய்ப் பனை, எண்ணெய் ஆமணக்கு எனப்படும் ஜாட்ரோஃபா போன்ற பயிர்களை இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தின பல தனியார் நிறுவனங்கள். அந்த நிறுவனங்களையும் தற்போது காணவில்லை. அதில் பணியாற்றிய வேளாண்மை பட்டதாரிகளையும் தற்போது காணவில்லை. அந்த பயிர்களை விளைவித்து ஓட்டாண்டிகளான விவசாயிகள்தான் இப்போது பெருநகரங்களில் பிச்சைக்காரர்களாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.

.

இந்த நிலையில்தான் மீதமுள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவும், விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றுவதற்கும் ஏற்ற ஒரு ஏற்பாட்டை தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் என்ற பெயரில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

.

இந்த மன்றம் வேளாண் நிலங்களை மட்டும் குறிவைக்கவில்லை. உங்கள் வீட்டுத் தொட்டத்தையும், பூச்செடிகளையும்கூட குறிவைக்கிறது. நீண்டகாலமாக இருக்கும் தோப்புகளையும் இந்த சட்டம் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்த தோட்டங்களும், தோப்புகளும்கூட இனி இந்த மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும்.

.

தமிழர்களின் பாரம்பரிய அறிவுச் சொத்துகளை திட்டமிட்டு அவமானப்படுத்தி புறக்கணிக்கும் இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன?

.

தமிழ்நாட்டின் வேளாண் துறையை பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் வீழ்த்துவதை தவிர வேறென்ன இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும்!

.

வேளாண்துறையை நெறிப்படுத்த(!) இருக்கும் இந்த அமைப்பில் ஒரு விவசாயிகூட இருக்க மாட்டார்.

.

இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவதற்கு பல்வேறு தரப்பினரரும் தயாராகி வருகின்றனர்.

.

உங்களிடம் ஆதரவு கேட்டு போராட்டக்காரர்கள் வரக்கூடும். வழக்கம் போல சலிப்படையாதீர்கள்.

.

ஏனென்றால் நாம் உட்கொள்ளும் உணவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யமுடியாது. கம்யூட்டரின் சாப்ட்வேர் எழுதியும் தயாரிக்க முடியாது. விளைநிலங்களில் விவசாயிகளின் உழைப்பினால் மட்டுமே அது சாத்தியம். இதுவரை விவசாயிகள் குறித்து மற்றவர்களின் அக்கறையின்மையே ஆண்டுக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலை நோக்கி தள்ளியது. இந்த நிலை தொடர்ந்தால் உணவிற்காக போரிட்டு நாமும் அழிய நேரிடும்.

.

விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவளித்து நன்றி செலுத்த இது தக்க தருணம். பயன்படுத்துவோம்!

Monday, June 16, 2008

"மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்" - கருத்தரங்கம் : ஊடகங்களின் பார்வையில்...

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த செய்தி:




மரபணு மாற்று விவசாயம்: இயற்கைக்கு விரோதமான போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல - ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு
.
சென்னை, ஜூன். 16-
.
மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார்.

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்' என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
.
உணவே மருந்து
.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர், உணவு கொடுக்கும்போது அவரது குணம் சாப்பிடுபவருக்கும் வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் உணவுக்கும், மனித உறவுகளுக்கும் அப்படியொரு முக்கியத்துவம் இருந்தது.
.
``மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்-ஊறுபாடு இல்லை உயிர்க்கு'' என்ற திருக்குறளில், உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறளும் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல இந்த திருக்குறள் அமைந்துள்ளது.
.
நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல
.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டே எல்லா விஞ்ஞானமும் உள்ளது. மனித உடலில் இந்த ஐம்பூதங்களும் உள்ளன. தசை, நரம்பு நிலமாகவும், பசி நெருப்பாகவும் இருக்கிறது. உடலில் நீர் ஓடுகிறது. மனிதன் இறக்கும்போது நிலத்தில் புதைக்கின்றனர். எரித்து சாம்பலை கரைக்க வேண்டுமானால் அதற்கு நெருப்பும், நீரும் தேவைப்படுகிறது. எல்லாமே மறுசுழற்சி முறையில்தான் அமைந்துள்ளன. எனவே, மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.
.
மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
.
இவ்வாறு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.
.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகம் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:-
.
உணவுத் தட்டுப்பாடு
.
உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக் குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030-ம் ஆண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
.
நம் நாட்டில், 1980-ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 டன் (5 ஆயிரம் கிலோ) நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களும் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளும் வருவதில்லை.
.
சமுதாய விவாதம்
.
எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.
.
இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.
இந்த கருத்தரங்கில் பூவலகின் நண்பர்கம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கு.சிவராமன், டெக்கான் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் பி.வி.சதீஷ், கிரேன் அமைப்பின் மண்டல திட்ட அதிகாரி ஷாலினி புட்டானி, வக்கீல் எம்.வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் வரவேற்றார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையத்தின் பிரதிநிதி வக்கீல் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
.

நன்றி: தினத்தந்தி
.
மரபணு மாற்றத்துக்கு எதிர்ப்பு: இயற்கைக்கு மாறாக போவது நல்லதல்ல
.
சென்னை, ஜூன் 16: இயற்கைக்கு மாறாக போவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று மரபணு மாற்றத்திற்கு எதிரான கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.
மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சென்னையில் நேற்று "மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்: என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் மோகன கிருஷ்ணன் வரவேற்றார். டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி செயலாளர் சத்தீஷ், வெற்றிச்செல்வன், க்ரெய்ன் பிராந்திய திட்ட அலுவலர் ஷாலினி புட்டானி ஆகியோர் பேசினர்.
.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவானவன் மனிதன். இறுதியில் பஞ்சபூதத்திடமே சென்று சேர்கிறோம். இதற்கு எதிராக இருப்பதுதான் மரபணு மாற்றம். இயற்கைக்கு மாறாக போவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது இல்லை. உலகநாடுகள் மாநாட்டுத் தீர்மானத்தின்படி, எந்தவித அறிவியல் கண்டுபிடிப்பும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உறுதிசெய்யப்படும் வரை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.
.
தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் நம்மாழ்வார் பேசியது:
உலகில் உணவுத் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 88 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. உணவு உற்பத்தியை மேலும் 50 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே 2030ல் உலகின் உணவுப் பொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பசுமைப் புரட்சி என்ற பெயரால் மேலைநாட்டு தொழில்நுட்பம் இந்தியாவில் புகுந்ததால் இந்தியாவில் விவசாயம் பாழ்பட்டுள்ளது. 1980ல் ஒரு ஏக்கரில் 5 டன் உற்பத்தி இருந்தது. ஆனால் அது தற்போது 800 கிலோவாக குறைந்துள்ளது. உரமும், பூச்சிக் கொல்லி மருந்தும் நம் உடலை நஞ்சாக மாற்றிவருகின்றன.
.
எந்த அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை சமுதாயத்தில் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். மரபணு மாற்றத்தால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளை இழந்துள்ளோம். நிலம், விவசாயி, மக்கள் என அனைத்துத் தரப்பையும் பாதிக்கும் மரபணு மாற்றத்தால் கிடைக்கும் எதையும் ஏற்கக் கூடாது. இவ்வாறு நம்மாழ்வார் பேசினார்.
.
மனித உரிமை சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த பி. சுந்தரராஜன் நன்றி கூறினார்.
.
நன்றி: தினகரன்

"கம்பெனி' ஆதிக்கம் ஒழியவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி
.

சென்னை, ஜூன் 15 : இந்தியாவில் இன்னும் கம்பெனி ஆதிக்கம் ஒழியவில்லை. சுதந்திரத்துக்கு முன் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின் மரபணு மாற்று தொழில்நுட்பக் கம்பெனிகள் ஆதிக்கம் உள்ளது. இது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.


மனித உரிமை சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்" கருத்தரங்கில் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
.
நகரில் உள்ளவர்களிடம் அரிசி என்றால், அது எந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கிறது என்பார்கள். என் குழந்தைகளிடம் நெல் எங்கு விளைகிறது என்றால், முருகன் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் என்கிறார்கள். அந்த அளவுக்கு உணவு முறைகள் மாறிவிட்டன.
.
இந்தியர்களின் வாழ்க்கை முறை "உணவே மருந்து, மருந்தே உணவு" என இருந்தது. உணவைக் கடவுளாக போற்றினார்கள். உடல் மட்டும் உணவால் அமைந்தது அல்ல. எண்ணங்களும் உணவால் உருவாகின்றன.
.
திருவள்ளுவர் உழவு பற்றி அதிகாரம் வகுத்தார். பயிருக்கு அதிகாரம் கொடுத்தார். ஆனால் உணவு என்பதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மருந்து என அதிகாரம் கொடுத்தார்.
.
மரபணு மாற்றம் பற்றி இப்போது பேசுகிறோம். ஆனால் அன்றைக்கே வள்ளுவர் கூறிவிட்டார். மாறுபாடு இல்லாத உண்டி, ஊறுபாடு இல்லை உயிருக்கு என்றார். மாறுபாடு இல்லாத உண்டி என்றால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு, மரபணு மாற்று இல்லாத உணவு எனப் பொருள்படும்.
.
உலகம் தோன்றியற்கு சுழற்சி முறைதான் அடிப்படை உண்மை. எந்தப் பொருளை எடுத்தாலும் அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களுக்குள்தான் வருகிறது. இதில் நமது உடலுக்கும் தொடர்பு உள்ளது. பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் உருவான உடலை இறந்த பின்னர் நிலத்தில் புதைக்கிறோம் அல்லது நெருப்பில் எரித்து சாம்பலைத் தண்ணீரில் கரைக்கிறோம்.
.
இந்த சுழற்சி முறைக்கு எதிரானதுதான் மரபணு முறை. இதனுடைய போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல. மரபணு மாற்று முறையில் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் பற்றி குறிப்பிட்டார்கள். 1948க்கு முன் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் இருந்தது. இப்போது வேறு கம்பெனிகளின் ஆதிக்கம் வந்துள்ளது. கம்பெனி ஆதிக்கம் என்பது பழகிவிட்ட ஒன்றாகிவிட்டது என்றார் நீதிபதி ராமசுப்பிரமணியன்.
.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன், தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் கோ.நம்மாழ்வார், கு.சிவராமன், பி.பி.சதீஷ்வெற்றிச்செல்வன், ஷாலினி புட்டானி, பி.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
.
"மரபணு மாற்றம்: 200 வகை பறவை இனம் அழிவு"
.
சென்னை, ஜூன் 15 : மரபணு மாற்ற முறையால் 200 வகையான பூச்சி தின்னும் பறவை இனங்கள் அழிந்து விட்டன என தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் கோ.நம்மாழ்வார் கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கருத்தரங்கில் நம்மாழ்வார் பேசியதாவது: உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பெரிய பிரச்னையாக உள்ளது. 300 கோடி பேருக்கு உண வுக்கு உத்தரவாதம் இல்லை. 88 கோடி பேர் பட்டினி கிடக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடி அதிகரிக்கும்.
33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. தற்போதைய உணவு உற்பத்தியில் மேலும் 50 சதவீதம் அதிகரித்தால்தான் 2030ல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என ஆய்வு கூறுகிறது.
.
"பசுமைப் புரட்சி' என்ற பெயரால் மேலை நாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் புகுத்துவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தின் வளம் கெட்டு விட்டது. 5 ஆயிரம் ஆண்டுகளாக இருந்த நில வளம் 60 ஆண்டுகளில் கெட்டு விட்டது.
.
அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு. இதுதான் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. நெல்லின் அடிப்பகுதியை நிலத்துக்கும், நடுப்பகுதியான வைக் கோல் மாட்டுக்கும், நெல்மணிகளை வீட்டுக்கும் கொண்டு சென்றோம். இதைப் பின்பற்ற தவறியதால் உற்பத்தி அளவு குறைந்து விட்டது. உணவுப் பழக்க வழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் உணவை நஞ்சாக்கி வருகின்றன. சில கம்பெனிகளின் சுய லாபத்துக்காக உணவை நஞ்சாக்கும் போக்கைத் தடுக்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டும்.
.
மரபணு மாற்றத்தால் 200 வகையான பூச்சி தின்னும் பறவைகள் இனத்தை இழந்துள்ளோம். நிலம், விவசா யிகள், மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் மரபணு மாற்றத்தின் மூலம் கிடைக்கும் எதையும் ஏற்கக் கூடாது என்றார் நம்மாழ்வார்.
.
நன்றி: தினமணி
.


மரபணு மாற்று விவசாயம் நல்லதல்ல: நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பேச்சு

.
சென்னை, ஜூன் 16-

.

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பேசினார்.

.

மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

.

அப்போது அவர் கூறியதாவது:

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

.

உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின்,அவரது உயிர்க்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறள் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல் இந்த திருக்குறள் அமைந்துள்ளது.

.

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.

.

மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

.

இவ்வாறு நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் கூறினார்.

.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:

.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேசன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழி மறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக்குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030ம் ஆண்டில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

.

நம் நாட்டில் 1980ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம் நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்கள் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்றுப் பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகள் வருவதில்லை.சமுதாய விவாதம்எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடை முறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

.

இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.

நன்றி: தீக்கதிர்
.
"மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடந்தது. அதி்ல் பேசுகிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அதை வீடியோவில் பதிவு செய்கிறார் ஒரு பெண்"



நன்றி: தமிழ்முரசு

.

இந்த கருத்தரங்கில் தமிழ் வலைபதிவர்கள் சார்பில் தோழி லிவிங்ஸ்மைல் வித்யா கலந்து கொண்டார். அவருக்கு எங்கள் நன்றி.

.

-மக்கள் சட்டம் குழு

Thursday, June 12, 2008

“மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்” -கருத்தரங்கம்

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?

நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?

ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?

பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?

பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?

இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?

இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....

இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.

நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

(இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னை பதிவர் சந்திப்புக்கு செல்லலாம்)

சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல. சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.

தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.

அனைவரும் வருக!

Wednesday, February 13, 2008

வேளாண்மையில் ஒர் அணுகுண்டு ஒப்பந்தம் (இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்)

சுதந்திர இந்தியாவின் வயது 60-ஐ தாண்டியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 57 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் கொடியேற்றி உரையாற்றும் தேசத்தலைவர்கள் வறுமையை ஒழிக்க உறுதி ஏற்கின்றனர்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் இந்தியா பல மடங்கு முன்னேறியுள்ளதாக கூற/நம்பப் படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த இந்தியாவில்தான், அரை மணிக்கு நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்ளும் அவல நிலை நிலவுகிறது. மத்திய அரசு அமைப்பான தேசிய குற்றத்தகவல் ஆவண மையம் (National Crime Record Bureau) அளிக்கும் தகவலின்படி கடந்த 1997 முதல் 2006ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 304 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசுத்துறை புள்ளி விவரம் அளிக்கும் தகவல் இது என்றால் உண்மையான புள்ளிவிவரத்தை நாமே அனுமானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இந்த நிலையில்தான் புதிய ஒரு அணு குண்டாக, “இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்” அறிமுகம் ஆகியுள்ளது.

இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ்-உடன் கூட்டாக கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்களுக்கான கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அவற்றில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மட்டுமே இடதுசாரிகள் உள்பட பல அரசியல் கட்சிகளும், செய்தி ஊடகங்களும் எதிர்த்தும், ஆதரித்தும் பேசி வந்தன.

ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சற்றும் குறையாமல் நாட்டின் உணவு இறையாண்மையையும், பல கோடி விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறி ஆக்கியிருக்கும் “இந்திய -அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்த”த்தை, பற்றி யாரும் சிறு மூச்சுகூட விட்டபாடில்லை.

“இந்திய-அமெரிக்க வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, சேவை மற்றும் வணிகதொடர்பிற்கான அறிவு முனைப்பு” (INDIA-UNITED STATES KNOWLEDGE INITIATIVE ON AGRICULTURAL EDUCATION, RESEARCH, SERVICE, AND COMMERCIAL LINKAGES) என்கிற இந்த ஒப்பந்தம் முதலாம் “பசுமைப் புரட்சியின்” (GREEN REVOLUTION) வெற்றியை(!?) தொடர்ந்து “என்றென்றும்-பசுமைப் புரட்சியை” (EVERGREEN-REVOLUTION) ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டுள்ளது.

ஆனால் பழைய பசுமைப் புரட்சி போல முற்றிலும் அரசே ஏற்று நடத்தாமல், இந்தப்புதிய “என்றென்றும்-பசுமைப் புரட்சி”யானது தனியாருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வால்-மார்ட் (WAL-MART), மான்சான்டோ (MON SANTO) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (RELIANCE) நிறுவனம் வரை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

விவசாயத்தோடு மட்டும் நில்லாமல் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் தொடரும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாக இரண்டு அம்சங்களைக் கூறலாம்:

· மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (GENETIC ENGINEERING) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல்

· வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துததல்.

விதையற்ற பழங்கள், குஞ்சு பொரிக்காத முட்டைகள், மலட்டு விதைகள் மற்றும் விஷமாக பூக்கும் பருத்தி என பல சாதனைகள்(?!) படைத்திருக்கும் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு இந்த ஒப்பந்தம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள், பட்டினிச் சாவுகள் போன்றவற்றை மரபணுமாற்று தொழில்நுட்பத்தினால் தடுத்துவிடலாம் எனவும் இவ்வொப்பந்தம் மறைமுகமாக நமக்கு ஆசை காட்டுகிறது.

இயற்கைவளங்களை கொள்ளைபோக அனுமதித்தல்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர்..

இதுபோன்ற இயற்கைவளங்கள் “முதலாம் பசுமைப் புரட்சி” காலகட்டங்களில் அமெரிக்காவால் திட்டமிட்டு கொள்ளை அடிக்கப்பட்டன. ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் பாரம்பரிய தாவர வளங்களை எடுத்துச்சென்ற அமெரிக்கா, பின்னர் மஞ்சள், வேம்பு, புளி, பாசுமதி போன்றவற்றுக்கு காப்புரிமை கோரியதை இதற்கு சான்றாக கூறலாம்.

மூன்றாம் உலக நாடுகளிருந்து இயற்கைவளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கைவளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை (UNITED NATIONS) தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்கின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை உள்ளடங்கிய பல்உயிரின ஒப்பந்தம் (CONVENTION FOR BIODIVERSITY) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

இன்று வரை இந்த ஒப்பந்தத்தை ஏற்காத அமெரிக்காவிடமிருந்து, இந்தியா எப்படி தன்னுடைய வளங்களை காக்க போகிறது என்பதை காலம்தான் கூற வேண்டும்.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் நாட்டின் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களையும் (TRADITIONAL KNOWLEDGE) பாதுகாத்திட, உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT,2002) இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களாக இரண்டினை கூறலாம்:

· நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை முழுவதுமாக தடைசெய்வது.

· நம் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை ஆராய நினைப்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் அமைந்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இப்படி அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (BENEFIT SHARING).

மறைமுகமாக இந்த சட்டம் நம் இயற்கைவளங்கள் கொள்ளை போவதை அனுமதித்தாலும் குறைந்தபட்சம் மக்களுக்கு இழப்பீடு என்ற கருத்தையாவது ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்விரு முக்கிய அம்சங்களையும் கண்டுகொள்ளாத இந்திய-அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தம் குறைந்தபட்ச இழப்பீடு கூட மக்களுக்கு கொடுக்க மறுக்கிறது.

இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் முக்கிய பகுதியாக இரு நாடுகளை சார்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூட்டாக சேர்ந்து இயற்கைவளங்களின் உயிரியல் மரபணு(GENE)வை ஆராய போகின்றன. அமெரிக்காவின் இயற்கை வளங்களை இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்வதற்கான வழிகள் எதுவும் ஒப்பந்தத்தில் இல்லாத நிலையில் இந்தியாவின் இயற்கைவளங்களே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை கூறத் தேவையில்லை.

இந்த ஆராய்ச்சி செய்கின்ற போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கொண்ட பல்உயிரின ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு வரி கூட இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் இல்லை.

இப்படி நம்நாட்டு சட்டங்கள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்தகளுக்கு எதிராக இயற்கை வளங்களை எளிதில் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளிப்பதன் மூலம் காலம்காலமாக இவற்றை பாதுகாத்து வரும் நம் மக்களிடமிருந்து இவற்றை அமெரிக்கா கொள்ளையடிக்க இந்த ஒப்பந்தம் துணைபோகிறது. அது மட்டுமல்லாமல் இப்படி ஆராய்ந்து(!?) கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவதன் மூலம் தற்போது பொதுச்சொத்தாக உள்ள இயற்கை வளங்களை, அமெரிக்க மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் தனிச்சொத்தாக மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.

நிறுவனமயமாகும் வேளாண்மை

இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் வேளாண்மை துறையை வணிகமயமாக்க, அறிவுசார் சொத்துரிமையின் தேவையை முன்வைக்கிறது. குறிப்பாக வேளாண்மை துறையில் காப்புரிமையின் அவசியத்தை கட்டாயமாக்குகிறது.

இது குறித்த விவரங்களை, “மாறும் சட்டங்களும் விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்” பகுதி 1, 2, 3, 4 ஆகிய பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் நம் நாட்டு வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயம் செய்ய மட்டுமல்ல; எப்படி காப்புரிமை பெறுவது என்பதையும் கற்றுக் கொடுக்க போகிறது. காப்புரிமை பெறுவது மட்டுமல்ல அதனை பன்னாட்டு மற்றும் இந்நாட்டு நிறுவனங்களிடம் எப்படி விற்பது என்பதையும் கற்றுக் கொடுக்கப்போகிறது.


இதற்காக அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம்(INDIAN COUNCIL FOR AGRICULTURAL RESEARCH)கூட அறிவு சொத்துரிமைக்கான மேலாண்மை (INTELLECTUAL PROPERTY MANAGEMENT) என்ற சிறப்புப் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காப்புரிமை உள்ளிட்ட அறிவு சொத்துரிமைச் சட்டங்கள் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்க இந்தியா அமெரிக்கா இடையே ஒரு தனி ஒப்பந்தமும் (MEMORANDUM OF UNDERSTANDING) 2006 ஆம் ஆண்டு கையெழுத்து ஆகியுள்ளது.

ஆக, இந்திய விஞ்ஞானிகள், நம்நாட்டு விதைகளை எடுத்து அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து புதிய பொருட்களை கண்டறிந்து, அதற்கு காப்புரிமை பெற்று அமெரிக்க நிறுவனங்களிடம் விற்பதற்கான இந்த ஒப்பந்தத்திற்கு, நம் நாட்டு மக்களிடம் பெற்ற வரிப்பணம் சுமார் 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தகுதி- திறமையின் அடிப்படையில் பயின்ற இந்த விஞ்ஞானிகளின் தேசப்பற்றை நிச்சயம் நாம் இந்த இடத்தில் நன்றியோடு நினைக்க வேண்டும்.


முடிவுரை

இந்த ஒப்பந்தம், வேளாண்மை நிறுவனமயமாவதற்கு மட்டுமே உதவும். மரபணுமாற்று பயிர்களை பெரு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பயிரிட்டு ரிலையன்ஸ் பிரஷ், வால்-மார்ட் போன்ற விற்பனை கூடங்களுக்கு விற்பனைக்கு வைக்கபோகின்றன. பல மாதங்கள் ஆனாலும் கெடாமல் இருக்க செயற்கையாக நிறமூட்டப்பட்ட இந்த காய்கறிகளைத்தான் இனி நாம் உண்ணப்போகிறோம். இந்த விவசாய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விவசாயம் செய்ய புதிய வகை விவசாய கூலிகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தபோகிறது.

காப்புரிமை பெற்ற இப்பயிர்களை விவசாயிகள் அதிக விலைகொடுத்து பயிர் செய்யவேண்டும், மேலும் மலட்டுதன்மை மிக்க இந்த பயிர்கள் மீது விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இருக்க போவதில்லை. ஆக உணவு உற்பத்திக்கே நாம் இனி நிறுவனங்களை தான் நம்பியிருக்க வேண்டும்.

இத்தகைய புரட்சிகரமான இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தத்தின் இந்திய அரசுத்தரப்பு கவுரவ ஆலோசகர் (Honorary Adviser) எம். எஸ் சுவாமிநாதனுக்கும் ஒரு சிறப்பு நன்றியை கூறிக்கொள்வோம்.


-மு. வெற்றிச்செல்வன்

Thursday, October 11, 2007

பாலைவனமாகும் தேரிக்காடும் கலைஞர் மறந்த திருக்குறளும்

30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது.

டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள் வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்?


இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில் கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம் வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள் வாழ்க்கை என்னவாகும்?


தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா?

கருணாநிதி தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள் இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத் தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது. தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும் கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும் தந்துகொண்டிருக்கிறது.


டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம் பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம் என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும்.

டாடாவின் திட்டந்தான் என்ன?

டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன் தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான் டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம் 15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை நகரின் பரப்பைவிடப் பெரியதாகும்.

இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை. டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.


டைட்டானியம் என்றால் என்ன?
டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு. டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன. ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile) என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன. ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது. ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது.

டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது. அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின் காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட. அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


சொல்லப்படாத செய்திகள்
டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது.


இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின் திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால் தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல் தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தோரியம் என்ற பூதம் என்னவாகும்?

இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும் கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித் துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள். தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள் கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில் கவலைக்குரியதாகும்.


சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய்

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான அபாயங்கள் பரவலாக இருக்கின்றன.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.


நிர்வாணமாகும் பூமி

டைட்டானியம் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில் வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம் பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும்.

நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் தேரிகளையே நம்பியுள்ளது.


நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும். அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.



தாதுக்களைச் சுத்தம் செய்தல்
தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல் கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது. அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது.


டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி
வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில் நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன் வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட் முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும் குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது.



இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.


இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில் நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப் பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன.


டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்

வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும். எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர முடியாது.

2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம் பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று அவர்கள் போராடுகின்றனர்.

எது பெரியது?

எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும் பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார் தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும்.

எது பெரியது? எது முக்கியம்?

டைட்டானியமா? நீரா?

எவர் முக்கியமானவர்?

டாடாவா? மக்களா?



டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், நீரின்றி அமையாது உலகு.



-நித்தியானந்த் ஜெயராமன்




(கட்டுரை ஆசிரியர் தொழில்நிறுவனங்கள் இழைக்கும் குற்றங்கள் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்தும் எழுத்தாளர். சுதந்திரமான பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை இது. [தமிழில்: ப்ரேமா ரேவதி])


நன்றி:

அக்டோபர் 2007