Showing posts with label நீதித்துறை விமரிசனம். Show all posts
Showing posts with label நீதித்துறை விமரிசனம். Show all posts

Sunday, July 31, 2016

தமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்

தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துகளை பதிவு செய்கிறார். 



தற்சமயம் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, ஆர்.கே.ஆனந்தின் தீர்ப்பின் வெளிச்சத்தில் பரிசீலிப்போம். உயர் பதவிகளில் உள்ளவர்களும், இருந்தவர்களும், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்களும் கடும் குற்றம் புரிந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; இது என் கருத்து. ஆனால், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் தண்டிக்கப்படுகின்றனரா? : சாட்சியை விலை கொடுத்து வாங்கிய ஆர்.கே.ஆனந்த் கடந்த, 1999 ஜன., 1ம் தேதி, டில்லியில் பெரும் செல்வந்தரின் மகன் சஞ்சீவ் நந்தா என்பவர், பி.எம்.டபிள்யூ., காரை கவனக்குறைவாகவும், அதி வேகமாகவும் ஓட்டி விபத்தை நிகழ்த்தினார். அதில், ஆறு பேர் உயிர் இழந்தனர்; ஆறு பேரில், மூவர் காவல்துறையினர். விபத்தை நிகழ்த்திய பின் நிற்காமல் சென்றுவிட்டார். அவர் காரை ஓட்டியபோது, மதுவும் அருந்தி இருந்தார் என்பது காவல்துறையின் வழக்கு. குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. குற்றவியல் நீதிமன்றத்தில், சஞ்சீவ் நந்தாவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த்; அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ.யு.கான். இந்த நிலையில், வழக்கின் நேரடி சாட்சியான சுனில் குல்கர்னியுடன் மேற்சொன்ன ஆர்.கே.ஆனந்த் மற்றும் ஐ.யு.கான் சந்தித்து, சாட்சியை பெரும் தொகை கொடுத்து வாங்குவது என்ற நிகழ்ச்சியை, 'என்டிடிவி' சேனல், 2007 மே, 30ம் தேதி ஒளிபரப்பியது. இது டில்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. அந்த சேனல் இப்படி ஒரு முறைகேட்டை ஒளிபரப்பாமல் இருந்திருந்தால், இது வெளி உலகத்தின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கே வந்திருக்காது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : இந்த நிலையில், டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் மற்றும், இருவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. உயர் நீதிமன்றத்தின், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. இதை எதிர் கொண்ட ஆர்.கே.ஆனந்த், பல இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தார்; அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த விபரங்களுக்குள் நான் செல்லவில்லை.

அவர் எழுப்பிய, ஒரு முதல் நிலை எழு வினா பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவர், 'என்டிடிவி -தான் குற்றவியல் விசாரணையில் தலையிடும் வகையில் ஒளிபரப்பு செய்தது; எனவே, அதன் மீது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்' என்று ஆட்சேபனையை எழுப்பினார்; அந்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆர்.கே.ஆனந்திற்கு வழங்கப்பட்ட தண்டனை : அவர் சாட்சியை விலை பேசிய தன் மூலம், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட்டு நீதிமன்ற மாட்சிமையை குலைத்து அவமதிப்பு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதாக, 2008 ஆக., 21ல், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது; அவருக்கு கீழ்கண்ட தண்டனைகளை விதித்தது.

1) டில்லி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும், நான்கு மாதங்களுக்கு அவர் வழக்கறிஞர் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அவர் மற்ற வழக்கறிஞர் வேலைகளை, - ஆலோசனை, அறிவுரை, விளக்கவுரை, கருத்துகளாகச் செய்யலாம்.
2) மூத்த வழக்கறிஞர் பதவி பறிக்கப்பட்டது.
3) 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஆர்.கே. ஆனந்தின் மேல்முறையீடு : இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை, 2009 ஜூலை, 29ல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்று கூறி, 'அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது?' என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவிப்பு அனுப்பியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்ய, 'அமீக்கஸ் க்யூரி'யாக, இரு வழக்கறிஞர்களை நியமித்தது. அவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம் மற்றும் நாகேஸ்வர ராவ். அதன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தின், இருவர் அமர்வின் மூத்த நீதிபதி, தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என்றும், வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். அமர்வுக்கு தலைமை தாங்கிய அந்த நீதிபதியின் மேல் கடும் குற்றச்சாட்டுகளை கூறினார். அவரது மனு, நீதிபதியை மிரட்டுவதாக இருந்தது. அந்த மனு, தலைமை தாங்கிய மூத்த நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

நீதிபதியின் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், மற்றொரு நீதிபதி மனுவின் மீது எந்த உத்தரவும் போடவில்லை. ஆனால், அமர்வில் எந்த பங்கும் வகிக்க மறுத்து விட்டார். இதை பயன்படுத்தி, மேற்சொன்ன உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். தலைமை நீதிபதி, அமர்வின் இளைய நீதிபதியை மாற்றி மற்றொரு இளைய நீதிபதியை கொண்ட அமர்வை ஏற்படுத்தினார். 'பழைய அமர்வே மறுபரிசீலனை மனுவை விசாரிக்க வேண்டும்' என்று ஆர்.கே.ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
புதிய அமர்வு, மறுபரிசீலனை மனுவை, தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை, அமர்வின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைய நீதிபதி, உத்தரவு எழுதினார். அதற்குப்பின் அந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் அனைத்தையும் இளைய நீதிபதியே எழுதினார்.

இறுதியில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை 29ல் தள்ளுபடி செய்கையில், ஆர்.கே.ஆனந்திற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்றும், அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கும், நான்கு மாதங்களுக்கும் மேலாக, நீண்ட காலத்திற்கு வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க கோரியது.

ஆர்.கே.ஆனந்திற்கு அதிக தண்டனை அளிக்கப்பட்டதா? : கடந்த, 2010 ஜன., 13ல் அவர், உச்ச நீதிமன்றத்தில் அவரது விளக்கத்தை அளித்தார். அதில், அவர் மன்னிப்பு கோரியும், நடவடிக்கையை கைவிடுமாறும் கோரினார். அந்த விளக்கத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த தவறுக்கு அவர் வருந்தியதாக தெரியவில்லை என்றது. இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவுடன், 2011 மே 4ல், கூடுதல் ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை, 29ல் தீர்ப்பில் கூறிய அனைத்தையும் ஒப்புக்கொள்வதாகவும், முந்தைய விளக்கத்தில் கூறிய ஆட்சேபகரமான பகுதியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

பின், 2012 செப்., 24ல் மேலும், ஒரு ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், அவர் இந்திய பார் கவுன்சிலுக்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்க ஒப்புக் கொள்வதாகவும், ஒரு ஆண்டுக்கு டில்லி இலவச சட்ட மையத்தில் ஏழைகளுக்காக வழக்கு நடத்த ஒப்புக் கொள்வதாகவும், 'இந்த ஓராண்டில், வழக்கறிஞர் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன்' என்றும் கூறி இருந்தார். அவர் செய்த கடும் குற்றத்திற்கு சிறை தண்டனை தான் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை பதிவு செய்தாலும், அதிக தண்டனை வழங்கவில்லை.

அவருக்கு, 69 வயது ஆவதாக வும், அவர், 2007 முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும், அவரது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், 21 லட்சம் ரூபாய் பார் கவுன்சிலுக்கு நன்கொடை அளிப்பதையும், ஓர் ஆண்டு இலவச சட்ட உதவி மைய வழக்குகளை நடத்த ஒப்புக் கொள்வதையும் அதிக தண்டனை வழங்காத தற்கு காரணங்களாக அடுக்கியது. இறுதியில், 2012 நவ., 2012ல் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு கூறியது.

ஆர்.கே.ஆனந்திற்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை என்பது, ஒரு பொருட்டே அல்ல. அவர், 21 கோடி ரூபாய் கொடுத்தால் சிறை தண்டனையில் இருந்து விடுபடலாம் என்றால், அதையும் கொடுக்கும் வசதி படைத்தவர். ஆனால், சாதாரண வழக்கறிஞர்கள் என்ன செய்வது? இப்படி, ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்து, தண்டனையில் இருந்து சுலபமாக தப்பிக்க இயலுமா? விசாரணைக்குப் பின் தண்டனை என்பதற்கு மாறாக, விசாரணையை நிலுவையில் வைத்தே பல மாதங்கள் தமிழக வழக்கறிஞர்களை தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாமா? ஆறு மாதங்களுக்கும் மேலாக, ஒன்பது மாதங்கள் வரையில் கூட வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தமிழக வழக்கறிஞர்கள் செய்த தவறுகள், ஆர்.கே.ஆனந்த் செய்த தவறுகளை விட கூடுதலானதா? ஆர்.கே.ஆனந்த் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டப் பிரிவு - 34ன் கீழ் விதி ஏதும் செய்யவில்லை. எனவே, ஆர்.கே.ஆனந்த் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனையாக, 'சஸ்பென்ஷன்' அல்லது வழக்கறிஞர் பதிவில் இருந்து நீக்கம் என்ற தண்டனையை அளிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.

அந்த வாதத்தை, உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் உதவி செய்ய நியமித்த, இரு மூத்த வழக்கறிஞர்களும் ஆதரித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் இதற்கு முன் வழங்கிய தீர்ப்பில், 'சஸ்பென்ஷன் மற்றும் பதிவில் இருந்து நீக்கம் என்பதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையாக அளிக்க முடியாது' என்று கூறி இருப்பதை, தீர்ப்பின் பத்தி - 138ல், கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளது. இந்த சூழலில், உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களையும் வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை உண்டாக்கச் சொன்னது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் நபரை, அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதில் இருந்து விலக்கி வைக்க வகை செய்துள்ளது. எனவே, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய விதிகள் தேவையற்றவை. இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை உண்டாக்குவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கைத் தான் சுட்டிக் காட்டுகிறது. ஏற்கனவே உரிய விதிகள் இருப்பதால் இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது என் கருத்து. பார் கவுன்சிலும், ஒழுங்கு நடவடிக்கையை ஒட்டி நடைபெறும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, சஸ்பென்ஷனோ அல்லது பதிவு நீக்கமோ செய்யலாமே ஒழிய, விசாரணை நிலுவையில் இருக்கும்போது செய்ய முடியாது.

இதை, இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மன்னன் குமார் மிஸ்ராவே, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆணை உறுதி உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், நான் ஓய்வு பெற்றபோது ஆற்றிய உரையில், 'பார் கவுன்சில் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்' என்றேன்.

மேலும், ஆர்.கே.ஆனந்த் வழக்கில், உச்ச நீதிமன்றம், 'நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, பார்கவுன்சில் சஸ்பென்ஷன் செய்ய இயலும்' என்றது. இத்தீர்ப்பின் பத்தி - 138ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், பத்தி - 136ல், நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் (இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி) வாதத்தை உச்ச நீதிமன்றம் கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளது.எனவே, பார் கவுன்சிலுக்கு விசாரணையை நிலுவையில் வைத்து சஸ்பென்ஷன் செய்யும் அதிகாரம் இல்லை. 'பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வன்முறை செய்த வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் சஸ்பென்ஷன் செய்ய மாட்டேன்' என்று கூறும் மன்னன் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மேல் மட்டும் சீறி பாய்வதேன்? சமீபத்தில், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கோல்கட்டாவிலும் வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய போது, அவர் இன்று வரை மவுனமாக இருப்பது ஏன்; தமிழகத்தில் மட்டும் வேறுபட்ட நிலைப்பாட்டை அவர் கொள்வதற்கு காரணம் என்ன?

கடுமையான குற்றம் இழைத்த, ஆர்.கே.ஆனந்திற்கு சிறை தண்டனை இல்லை. அவர் மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்தார். ஆனால் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் நிலை என்ன? உயர் நீதிமன்றத்தின், முதலாவது அமர்வு முன், தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும் என்று அமைதியான முறையில் பதாகையை துாக்கிப் பிடித்தாலும், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக தான் கொள்ள வேண்டும். ஆனால், அந்த அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதும் தொடரவில்லை. ஆனால் அவர்கள், ஒரு மாதம் சிறையில் இருந்தனர். அவர்களை, ஏழு மாதம் சஸ்பென்ஷனில் வைத்தது பார் கவுன்சில்; அதையே தண்டனையாகவும் அளித்தது. அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்தில் விசாரணையை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்றதற்காக, பல வழக்கறிஞர்களை பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்தது. அவர்களில் சிலரின் சஸ்பென்ஷன், ஒன்பது மாதங்களுக்கு மேலாகி யும், இன்னும் தொடர்கிறது. சி.ஐ.எஸ்.எப்., சம்பந்தப்பட்ட வழக்கிலும், பல வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலால் விசாரணை இன்றி, பல மாதங்கள் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த இறுதி பகுதியை வெளியிடும் நேரத்தில், 105 தமிழக வழக்கறிஞர் தலைவர்களை, இந்திய பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்துள்ளதாக, ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதை, மன்னன் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. மன்னன் குமார் மிஸ்ரா தமிழக வழக்கறிஞர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏனோ? இதற்கு பின்புலமாக யார் இருக்கின்றனர் என்பதை தமிழக வழக்கறிஞர்கள் அறிவர்.

உயர் நீதிமன்றம் புதிய விதிகளை உடனே திரும்ப பெறவேண்டும்; பார் கவுன்சில் அனைத்து சஸ்பென்ஷன்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். இதுவே நிரந்தர அமைதிக்கான தீர்வாக இருக்கும்.

வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் யார்? 

உச்சநீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி, இன்று தமிழகத்தில் வழக்கறிஞர் மத்தியில் பேசப்படுகிறது. எனவே, அத்தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பது அவசியம்; காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தற்காலிக பணி நீக்கத்தையும், உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிகளையும், அத்தீர்ப்பின் அடிப்படையில் பரிசீலிக்கலாம். மேற்சொன்ன தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பதற்கு முன், யார் இந்த ஆர்.கே.ஆனந்த் என்ற சிறு விபரத்தை தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.

ஆர்.கே.ஆனந்த், டில்லியில் மிக பிரபலமான மூத்த வழக்கறிஞர். மூன்று, இந்திய பிரதமர்கள் அவருக்கு கட்சிக்காரர்கள். அவர்களின் வழக்குகளை நடத்தி வெற்றி பெற்றவர்.

இந்திரா, பிரதமராக இருந்த போது, அவரது மகன் சஞ்சய், 1980-ல், விமான விபத்தில் இறந்தார். அவர் மனைவி மேனகா, நீதிமன்றம் மூலமாக, சஞ்சயின் உயிலின் அடிப்படையில் சொத்து உரிமை கோரினார். அதை எதிர்த்து, இந்திராவுக்காக, டில்லி உயர்நீதிமன்றம் வரை வெற்றிகரமாக வழக்காடியவர் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த். இந்திராவுக்கு உயில் எழுதிய வழக்கறிஞரும் அவரே. இந்திரா, 1984ல் பிரதமராக இருந்தபோது கொல்லப்பட்டார்; ராஜிவ் பிரதமர் ஆனார். அந்த உயிலின் அடிப்படையில் ராஜிவுக்காக வழக்கு நடத்தியவரும் ஆர்.கே.ஆனந்த் தான்.

அடுத்து, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், மூன்று ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டபோது, அவருக்கு விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வெற்றி பெற்று தந்தவரும், ஆர்.கே.ஆனந்த் தான். இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்கள் மேல் நடந்த வன்முறை தாக்குதல் பற்றி அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா விசாரணை கமிஷன் முன், மத்திய அரசுக்காக ஆஜரான வழக்கறிஞரும் இவரே. மேற்சொன்ன விபரங்கள், ஆர்.கே.ஆனந்த் பிரபல மூத்த வழக்கறிஞராக இருந்தவர் என்பதை தெளிவாக்கும்.

பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் தலைவர் மேலும், அவர் டில்லி பார் கவுன்சில் உறுப்பினராக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். இருமுறை, அதன் தலைவராகவும் இருந்தார்.

அரசியல் செல்வாக்கு அவர் மிகுந்த அரசியல் செல்வாக்கும் உடையவர். 2000 மார்ச் மாதம், ராஜ்யசபாவிற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்துஎடுக்கப்பட்டார்.

கடந்த 2004-, லோக்சபா தேர்தலில், டில்லி தெற்கு தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு தோற்றார். மீண்டும், 2014- தேர்தலில் பாரிதாபாத் லோக்சபா தொகுதியில், இந்திய தேசிய லோக்தளத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். கடந்த ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் காங்., ஆதரவுடன் அரியானா மாநிலத்தில் போட்டியிட்டார். காங்., கலக சட்டசபை உறுப்பினர்கள், அவருக்கு ஓட்டு போடாததால் தோற்றுப் போனார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, ஆர்.கே.ஆனந்த் பேரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அவர் அதை மறுத்து வழக்காடினார். அவர் கடுமையான குற்றம் புரிந்தார் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது; அவருக்கு தண்டனையும் அளித்தது. அதை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவானது என்றும், அதிக தண்டனையை ஏன் வழங்கக்கூடாது என்று காரணம் காட்டுமாறு அறிவிப்பு அளித்தது. ஆனால், அதிக தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் செய்த கடும் குற்றம் என்ன, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்த தீர்ப்பு என்ன, அவர் அவமதிப்பு வழக்கிலும், மேல்முறையீட்டு வழக்கிலும் நடந்துகொண்ட முறை என்ன போன்ற விபரங்களை பிரதான செய்தியில் படிக்கவும்.


அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி
இ - மெயில்: hariparanthaman@gmail.com

தினமலர் நாளிதழில் 27-07-2016 அன்று வெளியான கட்டுரை

Thursday, February 10, 2011

பார் கவுன்சில் தேர்தல் – வாக்களிக்கும் முன் சிந்திப்போம்...!

சட்டத்தொழில் குறித்த நெறிகளை வகுக்கும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சிலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர்ந்து ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து வேட்பாளர்களும் தத்தம் வசதிக்கு ஏற்ப பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். சீருடைத் துணி முதல் அலுவலகத்திற்கு குளிர்சாதனப் பெட்டிவரை ஏராளமான அன்பளிப்புகள் உலா வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இவ்வாறெல்லாம் அன்பளிப்புகளை அளித்து பதவிக்கு வரும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் என்ன செய்யப்போகின்றனர்? எதற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடமும் இந்த கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்றாலும், அந்த தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. எனவே பாமரரும் வாக்களிக்கும் தேர்தலில் முட்டாள்தனமாக வாக்களிப்பவர்களைப் பார்த்து கோபப்படாமல் பரிதாபப்படலாம்.

ஆனால் பார் கவுன்சில் தேர்தலோ குறைந்த பட்சம் இரண்டு பட்டங்களைப் பெற்று கற்றுணர்ந்த வழக்கறிஞர்கள் வாக்களித்து, தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல். இந்த தேர்தலிலும் கேள்விகள் கேட்கப்படாமல் வாக்களிப்பதை ஏற்க முடியாது: ஏற்கக்கூடாது!

சமூகப் பொறுப்புள்ள ஒரு நல்ல வழக்கறிஞர், தமது வாழ்க்கையில், மக்களுக்கு பிரசினைகள் இல்லாத சமூகத்தை வடிவமைக்கும் பொறியாளனாக சமூக நோய் தீர்க்கும் மருத்துவனாக புதிய அம்சங்களை சோதித்துப் பார்க்கும்  ஆராய்ச்சியாளனாக அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆசிரியனாக வாழ முடியும்.

            அரசு அமைப்பின் மக்கள் விரோத செயல்பாடுகள், அதிகாரிகளின் செயலற்ற நிலை, சமூகத்தின் அவலம் குறித்து பேசுவதற்கான சுதந்திரம் மருத்துவர்களுக்கோ, பொறியாளர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ, பிற துறை சார்ந்தர்களுக்கோ முழுமையாக இல்லை. ஆனால் இது குறித்து பேசுவதற்கான உரிமையும், தளமும் வழக்கறிஞர்களுக்கு உள்ளது.

உதாரணமாக இந்திய சுற்றுச்சூழல் சட்டவியலில் சரித்திரம் படைத்த எம்.சி. மேத்தா என்று அழைக்கப்படும் மகேஷ் சந்தர் மேத்தாவைக் கூறலாம். இன்று இந்தியாவின் அரசியல் சட்டத்தை படிக்கும் எந்த மாணவரும் எம். சி. மேத்தாவை புறக்கணித்துவிட்டு அரசியல் சட்டத்தில் தேர்வு பெற முடியாது.

ஒரு தனிப்பட்ட வழக்கறிஞரே இவ்வாறு பொருள் பொதிந்த வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்றால், இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சில் என்னென்ன செய்ய முடியும்?

சட்டக்கல்வியையும், வழக்கறிஞர் தொழில் நடத்தைகளையும் இன்றைய நிலையில் பார் கவுன்சிலே முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

ஆனால் சட்டக்கல்வியின் தரமோ, வழக்கறிஞர்களின் தொழில் திறனோ நடத்தை நெறிமுறைகளோ பாராட்டத்தக்க அளவில் இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பினால் ஏமாற்றமே மிஞ்சும்!

எந்தவிதமான அடிப்படைத்தகுதிகளும் இல்லாதவர்களுக்கு சட்டக்கல்லூரி ஆரம்பிப்பதற்கு சர்ச்சைக்குரிய விதத்தில் அனுமதி அளிப்பது; அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய சட்ட அறிவு இல்லை எனக்கூறி பார் கவுன்சில் சார்பாக தனித்தேர்வு நடத்துவது போன்ற இரட்டை வேடத்தையே பார்கவுன்சில் போடுவதாக தோன்றுகிறது.

கல்லூரி செயல்படும் மாநிலத்திலேயே வசிக்காமல், வேறு மாநிலங்களில் வசித்துக் கொண்டு பட்டம் பெறும் வழக்கறிஞர்கள் நேர்மையாக வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

            சட்டக்கல்வி, வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகளை கட்டுப்படுத்துவதோடு பார் கவுன்சிலின் பணிகள் நிறைவடைவதில்லை.

            புதிய சட்டங்கள் இயற்றுவதிலும், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதிலும், நீதித்துறையில் செய்யப்படும் மாற்றங்களிலும் பார் கவுன்சில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

            உலகமய பொருளாதாரச் சூழலில் இந்தியர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் விதத்திலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் பல்வேறு சட்டங்கள் அறிவுச் சொத்துரிமை உள்ளிட்ட துறைகளில் இயற்றப்படுகின்றன.

மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் குடிமக்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை மீறும் பல்வேறு கருப்புச் சட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

            இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சிற்பி மாமேதை அம்பேத்கரின் நோக்கங்களுக்கும், அரசியல் அமைப்புச் சட்ட கருதுகோள்களுக்கும் எதிராக இந்திய அரசு பலமுனைகளிலும் செயல்படுவதாலேயே வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் பரவி வருகிறது. இது குறித்து விரிவான விவாதங்களை முன்னெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பார் கவுன்சிலுக்கு உள்ளது. ஆனால் இது போன்ற விவகாரங்களில் பார்கவுன்சில் அமைப்புகள் எந்த கருத்தையும் கூறியதாக தெரியவில்லை.

            இது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதங்களை முன்னெடுத்து, மக்கள் நலன்களை பாதுகாப்பதும் பார் கவுன்சிலின் கடமையே. உலகில் பல்வேறு முன்னேறிய நாடுகளில் உள்ள பார் கவுன்சில் அமைப்புகள் இது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

            ஆனால் இந்தியாவிலோ இந்திய பார் கவுன்சிலின் தலைவரே, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும் இருக்கும் விநோதமான நிலை நிலவுகிறது. மக்கள் விரோத சட்டங்களை அரசு நிறைவேற்றினாலும் அதை ஆதரிக்கும் கடமை கொண்ட இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரே, இந்திய பார் கவுன்சிலுக்கும் தலைவராக இருப்பதால், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்படும்போது,  அது குறித்து நடுநிலையாக விமர்சிக்கவோ, விவாதிக்கவோ பார் கவுன்சில் முன் வருவதில்லை.

            இந்திய பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும், சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010 போன்ற சட்டங்களின் மூலம் சுயேச்சையாக தொழில் புரிய வேண்டிய வழக்கறிஞர்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சித்தாலும், இந்திய பார் கவுன்சில் செயலற்று இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

            எந்த ஒரு உயிரோ, அமைப்போ தனது இயக்கம் மூலமாகவே தான் செயல்படும் தளத்தை விரிவு படுத்தும். ஆனால் பார் கவுன்சில் அமைப்போ செயலற்று இருப்பதன் மூலமாகவே செயல்படும் தளத்தை சுருக்கிக்கொள்கிறது.

            இந்தச் சூழலில்தான் தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் மேற்கூறப்பட்ட அம்சங்கள் குறித்து எந்த விவாதமும் நடத்தாமலேயே வாக்கு கேட்கும் பணி உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெறுகின்றன.      

உலகின் பல நாடுகளிலும் சமூக ரீதியான மாற்றங்களும், அரசியல் ரீதியான மாற்றங்களும் அந்தந்த நாட்டு வழக்கறிஞர்களால்தான் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரப்போரை முன்னெடுத்தவர்களிலும் பலர் சட்டம் பயின்று, சட்டத்தொழில் புரிந்தவர்களே!

ஆனால் இன்று நாடு இரண்டாவது சுதந்திரப் போரை முன்னெடுக்க வேண்டிய சூழலில், அதற்குரிய அரசியல் விழிப்புணர்வு இல்லாமலோ, அல்லது வேறு காரணங்களாலோ வழக்கறிஞர்கள் பின்னடைந்து இருந்துவிடக்கூடாது. ஒரு சமூகத்தில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சூழலை கணக்கிட்டு முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டிய சமூகக்கடமை சட்டத்தொழில் புரிவோருக்கே உள்ளது.

இவ்வாறு சமூகமாற்றத்தின் ஊக்கியாக செயல்படவேண்டிய வழக்கறிஞர் சமூகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சில், மேற்கூறிய அம்சங்கள் குறித்து எந்த கொள்கையும் இல்லாதவர்களின் கைகளில் சிக்குவது சமூகத்தை சீரழிக்கவே உதவும்.

எனவே பார் கவுன்சில் தேர்தல் வேட்பாளர்களிடம் மேற்குறிப்பிட்ட அம்சங்களில் அவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்புவோம்! வேட்பாளர்களின் தகுதி அறிந்து வாக்களிப்போம்!! சட்டத்தொழிலின் மேன்மை காத்து, சமூக மாற்றத்தை முன்னெடுப்போம்!!!

-சுந்தரராஜன்
(Email: sundar@LawyerSundar.net)

Sunday, October 18, 2009

நீதிமன்றத்தில் “மை லார்ட்” என்று சொல்ல வேண்டாம்! -நீதிபதி சந்துரு

நீதிமன்றங்கள் என்றாலே கருப்பு கோட்டும், கவுனும் அணிந்த வழக்ககறிஞர்கள் "மை லார்ட்" என்று கூவும் காட்சியே நமது நினைவுக்கு வரும். இவ்வாறுதான் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட காட்சி அல்ல.

ஒரு வாக்கியத்தை பேசுவதற்குள் ஏழெட்டுமுறை "மைலார்ட்" என்று சொல்லும் வழக்கறிஞர்களை உயர்நீதிமன்றத்தில் பார்க்கலாம்.

"லார்ட்" என்பது இங்கிலாந்து நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். பிரபுக்கள் நீதி வழங்கியபோது உருவாக்கப்பட்ட நடைமுறை. நீதி என்பது குடிமக்களுக்கு பிரபுக்கள் வழங்கும் சலுகையாக கருதப்பட்ட காலத்தில் உருவாகிய பழக்கம். ஆனால் தற்போது நீதி என்பது சலுகையாக அல்லாமல், உரிமையாக மாறியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று அந்த சுதந்திரத்திற்கு பொன்விழா கொண்டாடும் நேரத்தில் சுயமரியாதை கொண்ட சில வழக்கறிஞர்கள், நீதிபதிகளை "மை லார்ட்" என்று அழைக்கும் அடிமைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய வழக்குரைஞர் மன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை "யுவர் ஹானர்" அல்லது "ஹானரபிள் கோர்ட்" என்று அழைத்தால் போதும்; "மை லார்ட்" என்று அழைக்கத் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை, "ஐயா" என்று அழைத்தால் போதும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இதை செயல்படுத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பலகாலமாக மைலார்ட் என்று சொல்லிப்பழகியவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதை மாற்ற விரும்பிய இளம் வழக்கறிஞர்களுக்கோ நடைமுறையில் பெரும் தயக்கம். எதிர் தரப்பில் இருப்பவர்கள் "மை லார்ட்" என்று அழைக்கும்போது தாம் அவ்வாறு அழைக்காவிட்டால் நீதிபதி என்ன நினைத்துக் கொள்வாரோ? தீர்ப்பு என்னவாகுமோ? நமது கருத்துகளை நிலைநிறுத்துவதற்காக கட்சிக்காரரின் நலனை பலி கொடுப்பதா? என்பது போன்ற குழப்பங்கள் இருப்பதால் யாரும் இதனை செயல்படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில்தான் நீதிபதி சந்துரு கடந்த 15-10-2009 அன்று ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். அவரது நீதிமன்றத்தில் யாரும் தம்மை 'மை லார்ட்' என்று அழைக்கக்கூடாது என்று அறிவிக்கையை தமது நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

அனைவரும் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது. இதை மற்ற நீதிபதிகளும் பின்பற்றினால் நீதித்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.

இந்திய வழக்கறிஞர்கள் அணியும் சீருடையும்கூட இங்கிலாந்து நீதித்துறையின் வழக்கம்தான். இன்று இங்கிலாந்திலும், இங்கிலாந்திடம் அடிமையாக இருந்த நாடுகளிலும் மட்டுமே கருப்பு கோட் மற்றும் கவுனை வழக்கறிஞர்கள் அணியும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மற்ற நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. அடிமைச்சின்னமாக உள்ள இந்த சீருடையை புறக்கணிப்பது குறித்தும் விவாதங்கள் உருவாக வேண்டும்.

இதேபோல நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும்போது நீதி வேண்டி பிரார்த்திப்பதாக மனு கொடுக்கப்படுகிறது. உரிமைகளை கோருவதில் தவறில்லை. ஆனால் நீதி வழங்குமாறு பிரார்த்திக்க வேண்டும் என்பதை ஏற்கக்கூடாது. உரிமைகளை கோருவதும் ஒரு அடிப்படை உரிமையே. அதைக்கோருவதில் சுயமரியாதை இழக்கும் நிலை இருக்கக்கூடாது. நீதி என்பது அதை வழங்குவோரின் விருப்புரிமையாகவும் இருக்கக்கூடாது. எனவே இதற்கும் வேறு வார்த்தைகளை பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் உருவாக வேண்டும்.

இந்த விவாதங்களை சட்டத்துறையினர்தான் முன்னெடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியர்களின் இறையாண்மை குறித்து அக்கறை கொண்ட யாரும் இந்த விவாதங்களை அவர்களுக்கு வாய்ப்புள்ள களங்களில் உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் முன்வரவேண்டும்.

ஏனெனில் சட்டம் என்பது சட்டத்துறையினரும், வழக்கறிஞர்களும் மட்டும் தொடர்புடைய ஒரு அம்சம் அல்ல. அது அவ்வாறு இருக்கவும் கூடாது.

-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Saturday, October 10, 2009

கிராம நீதிமன்றங்கள் தேவைதானா? -ஒரு பார்வை


விரைவான நீதி என்பது அடிப்படையான மனித உரிமைகளில் முக்கியமானது. காலத்தில் வழங்காமல் தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பது புகழ்வாய்ந்த சட்ட முதுமொழி. இந்தியாவின் நீதித்துறை என்பது ஆமை வேகத்தில் பயணி்ப்பது உலகறிந்த ரகசியம்தான்.
.
விரைவான நீதியை வழங்கச் செய்வதில் அரசு, நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய நான்கு தரப்பினரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
.
நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப்பணியிடங்களை நிரப்புவதும், அதிகரிப்பதுமே வழக்குகளை குவியவிடாமல் தடு்க்கும் என்பது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்ட கருத்து. ஆனால், இந்த கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசோ, நீதிமன்ற நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சொல்லாமலே புரியும்.
.
இந்த நிலையில், விரைவான நீதியை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, கிராம நீதிமன்றங்களை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்த செலவு, விரைவான நீதி என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
.
இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்த தண்டனை விதிக்கத்தக்க குற்றவியல் வழக்குகளையும், அதற்கு சமமான சிவில் வழக்குகளையும் இந்த நீதிமன்றங்கள் விசாரிக்கும். இந்த நீதிமன்றங்கள் கிராமப் பஞ்சாயத்து அளவிலும், தேவைப்படும் இடங்களில் நடமாடும் நீதிமன்றமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
.
முதல்வகுப்பு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் அந்தஸ்துள்ள கிராம நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். சிவில் வழக்குகளில் வழக்கின் இரு தரப்பினரும் பேசித்தீர்க்கும் இசைவுத்தீர்ப்பு முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
.
இந்த கிராம நீதிமன்றங்களின் ஆள்வரைக்குள் வரக்கூடிய வழக்குகள் வேறு நீதிமன்றங்களில் இருந்தால், அந்த வழக்குகளை உரிய அறிவிப்புக்கு பின்னர் இந்த கிராம நீதிமன்றங்களுக்கு மாற்றி உத்தரவிடப்படும்.
.
இதன் மூலம் நீதிமன்றங்களி்ல் வழக்குகள் தேங்கி கிடக்கும் நிலை மாறும் என்று அரசு நம்புகிறது.
.
ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் பிரசினைகள் இருக்கும் நிலையில், அந்த பிரசினைகளை திருத்தியமைப்பதைவிட புதிய அமைப்புகளை நிர்மாணிப்பதில் ஆட்சித்தலைமைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த புதிய அமைப்புகள் சீரிய முறையில் செயல்படுமா என்று ஆய்வு செய்வதைவிட, புதிய அமைப்புகள் நிர்மாணிப்பதை தங்கள் ஆட்சியின் சாதனைகளாக விளம்பரம் செய்வதில் ஆட்சியாளர்கள் காட்டும் அதீத ஆர்வமே இதற்கு காரணம்.
.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப்புகள் புதிய திட்டங்களை வடிவமைக்கும்போது பங்காளிகளாக கருத வேண்டிய பொதுமக்களை பயனாளிகளாக சுருக்குவதும், அரசின் கடமையாகவும், மக்களின் உரிமையாகவும் கருதவேண்டிய அம்சங்களை சலுகையாகவும் செய்யும் போக்கு நிலவுகிறது. எனவே எந்த பிரச்சினையிலும் (உலக வங்கி போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக) யாரையும் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக திட்டங்களை அறிவிக்கின்றன. நீதித்துறையின் முக்கிய இயங்கு சக்திகளான வழக்குரைஞர் சமூகத்தை ஆலோசிப்பது குறித்து இந்திய அரசோ, சட்ட அமைச்சகமோ யோசிப்பதே இல்லை.
.
நீதிமன்ற நிர்வாகம் என்பது நீதிபதிகளின் கையில் உள்ளதாலும், அவர்களின் கருத்து என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாததாலும் இந்த பிரசினையில் அவர்களின் நிலை கருத்து கூற முடியவில்லை.
.
வழக்கறிஞர்கள் மத்தியில் கிராம நீதிமன்றங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பே நிலவுகிறது. கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்துவோருக்கு எதிரான வழக்குகளில், ஆதிக்கசக்தியினருக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படும் நிலையில் நீதித்துறை அலுவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய சாட்சிச் சட்டத்தை உறுதியாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஆதிக்க சக்தியினருக்கு சாதகமாக பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதைவிட முக்கியமாக இந்த கிராம நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக ஒருமுறை மட்டுமே மேல்முறையீடு செய்யலாம் என்ற வரையறை வழக்கிடும் மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
.
இதற்கு மாற்றாக வழக்கறிஞர்கள் தரப்பில், ஏற்கனவே உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப் பணியிடங்களை நிரப்பினாலே வழக்குகள் விரைவில் நடத்த முடியும் என்று கூறுகின்றனர். அந்த காலியிடங்களை நிரப்பாமல் அங்கு தேங்கியுள்ள வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றுவது என்பது நடைமுறையில் பயன்தராது: வழக்கு தேங்கி நிற்குமிடம் மாறுமே தவிர, வழக்கு முடிவுக்கு வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
.
இந்த கிராம நீதிமன்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற புறக்கணிப்பு என்ற வழக்கமான போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
.
எந்த நியாயமான காரணத்துக்காகவும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சமூகத்தின் எந்த பிரிவும் மருத்துவர்களை மன்னிக்காது. மருத்துவத்துறைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நீதித்துறையில் ஏற்கனவே ஏராளமான விடுமுறைகள் இருக்கும்போது, வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களும் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தும். எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
.
மேலும் சட்டத்துறையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மக்களை எவ்விதமாக பாதிக்கும் என்பதையும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துறைக்கும் பணியும் வழக்கறிஞர்களிடமே உள்ளது. ஆனால் வழக்கறிஞர்கள் இந்த அணுகுமுறையை இதுவரை உரிய முறையில் கையாண்டதில்லை.
.
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு பதிலாக வழக்கறிஞர் மன்றங்(BAR COUNCIL)களையும், வழக்கறிஞர் சங்கங்(BAR ASSOCIATION)களையும் வலுப்படுத்தி புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தும்போதும், புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தும்போதும் வழக்கறிஞர் சமூகத்திடம் அரசு அது குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுப்பதை நிர்பந்திக்கலாம்.
அரசியலிலும், ஆட்சித்துறையிலும் சட்டம் படித்தவர்கள் நிறைந்துள்ள இன்றைய நிலையில், இதுபோன்ற திட்டங்கள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
.
சட்டம் என்பது இனியும் வழக்கறிஞர்களும், சட்டத்துறையினரும் மட்டுமே தொடர்புடைய அம்சமாக இருக்க முடியாது. அனைத்துத் துறை சட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய அம்சங்கள் மிகுந்த சர்ச்சைக்குரியவைகளாக இருக்கின்றன. உதாரணமாக அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் அறிமுகமாகும் சட்டங்கள் நமது வேளாண்மை, மருத்துவம், கல்வி என அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமிக்கின்றன. நமது பாரம்பரிய அறிவுச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தும் நோக்கத்தில் இவை இருக்கின்றன.
.
வழக்கறிஞர் சட்டத்தில் திட்டமிடப்படும் திருத்தங்களும் மிக ஆபத்தானவை. வெளிநாட்டு வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் குழுமங்களையும் இந்தியாவில் தொழில் செய்வதற்கு அனுமதிப்பதற்கான நேரத்திற்காக அரசு காத்துக்கொண்டுள்ளது.
.
இந்த பிரசினைகள் குறித்து மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டியதே வழக்கறிஞர்களின் முக்கியமான பணி. இது போன்ற மக்கள் சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், மக்களுக்கான திட்டங்களை தீட்டுமாறு அரசு அமைப்புகளை வலியுறுத்துவதுமே வழக்கறிஞர்களின் நிலையை மட்டுமல்லாது, நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகளையும் செம்மைப்படுத்த உதவும்.
-சுந்தரராஜன்
(புதிய தலைமுறை [15-10-2009] வார இதழில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்)

Tuesday, August 18, 2009

சட்டமெனும் இருட்டறை! (நன்றி: தினமணி)

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.



ஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.


இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் "மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே? இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?


தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?


பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.


இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.


அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.


இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.


இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.


விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.

நன்றி: தினமணி, 18-08-2009

Thursday, August 14, 2008

ரூ. 23 கோடியும், 26 நீதிபதிகளும்....!

ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் கடைசி நம்பிக்கையாகச் சொல்லப்படுவது, நீதித்துறையே! ஆனால், நீதித்துறையின் வரலாற்றைப் பார்த்தோமானால், அதிலும் மேற்சொன்ன நம்பிக்கையை குலைக்குமளவிற்கு செயல்பாடுகள் நடந்து வந்துள்ளன. செய்தி ஊடகங்கள் செய்தித்தாள், தொலைக்காட்சி, வலைத்தளம் எனப் பெருகியுள்ள இப்போதைய நிலையில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இத்தகைய ஊடகங்களில் கவனிக்கத்தக்க அளவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன.
.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நீதிபதி (திரு.V.ராமசாமி) மீது, அவருடைய ஊழல் காரணமாக பதவியிருந்து நீக்க பாராளுமன்றத்தில் பதவியிழக்கச் செய்யும் நடவடிக்கை (IMPEACHMENT PROCEEDINGS) 1990ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் நீதிபதிகள் விசாரணைச் சட்டப்படி (THE JUDGES INQUIRY ACT 1968) 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மக்களவைத் தலைவரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்தபின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையும் அக்குறிப்பிட்ட நீதிபதி ஊழலில் ஈடுபட்டார் என்பதை உறுதிசெய்த பின்னரே பதவியிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும், அப்போது வீசிய அரசியல் சார்புக்காற்று காரணமாக இந்த நடவடிக்கை முடக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
.
இதுபோல் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பல்வேறு வகையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நீதிபதிகள் மீது சொல்லப்படுவதும், அவற்றுள் பெரும்பான்மை உண்மையாக இருந்து விடுவதும் அனைவரும் அறிந்ததே.
.
குறிப்பாக, நீதித்துறையில் மலிந்து வரும் ஊழல் (கையூட்டு) அல்லது நீதி சார்ந்த ஆதாயம் மட்டுமே ஊழல் என்று பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. ஆனால் தனக்கு வேண்டியவர்களுக்கு (NEPOTISM) வழங்கப்படும் உத்தரவு, தீர்ப்பு போன்றைவையும் ஊழல் சார்ந்தவையே அண்மைக்காலங்களில் கவனத்தையும், சமூகத்தில் பெருங்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
.
இருபதாண்டுகளுக்கு முன், மத்திய சட்ட அமைச்சராகவும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுமாக இருந்த திரு பி.சிவசங்கர் நீதித்துறையின் செயல்பாடுகள் கவலையளிப்பவையாக உள்ளதெனவும், உயர்நீதித் துறையிலும்கூட (higher judiciary) மலிந்துவரும் விரும்பத்தகாத போக்கையும் சுட்டிக்காட்டினார்.
.
பத்தாண்டுகளுக்குமுன் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.பி.பரூச்சா, நாட்டிலுள்ள நீதிபதிகளில் 20 விழுக்காட்டினர் ஊழல்வாதிகளாக இருக்கும் அதிர்ச்சிச் செய்தியை வெளிப்படுத்தினார். இதன்படி பார்த்தால், நீதிபதிகளில் ஐவரில் ஒருவர் ஊழல்வாதி என்றாகிறது. இந்தப் புள்ளிவிவரம் புதுப்பிக்கப்படுமானால் விகிதம் தலைகீழாக மாறியிலிருந்தாலும் வியப்பதற்கில்லை.
.
2007, ஜனவரியில் பதவியேற்குமுன் “தி இந்து” பத்திரிகைக்கு 03-01-07 அன்று அளித்த பேட்டியில் தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதித்துறையில் ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன (அவை நிரூபிக்கப்படவில்லை) என்று நெத்தியடியாகச் சொன்னார்.
.
திரு. ஜே.எஸ்.வர்மா, இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்தபோது 1997ம் ஆண்டில் உயர்நீதித் துறையினர் ஊழல் புகார்களுக்கு இடம்கொடா வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்று நீதிபதிகளுக்கான நடத்தை நன்னெறிகள் (Code of Conduct for Judges) வகுக்கப்பட்டது. அதன் ஓர் அம்சம் - நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்கை தலைமை நீதிபதியிடம் அளிக்க வேண்டும் என்பது. இவ்வாறு அளிக்கப்படும் விபரங்களும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதிகளை சொத்துக்கணக்கு காட்டச் சொல்வது நீதிபதிகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றும், நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைப் பெற தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்றும் திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதும் கூட இதன் அடிப்படையில்தான் என்று கூறலாம்.
.
இப்படியெல்லாம் கருத்து தெரிவித்த திரு கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர்நிதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் பத்துபேர், மாவட்ட நீதிபதிகள் பத்துபேர், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் இருவர் என 26-நீதிபதிகள் ரூ.23 கோடியை சுருட்டிய ஊழல் வழக்கு, தன்னிடமே விசாரணைக்கு வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
.
இவ்வழக்கின் முழுவிபரம் நம்மிடம் தற்போது இல்லை, எனினும், இவ்வழக்கு விசாரணை குறித்து செய்தித்தாள்களில் வெளியான விபரங்களின் அடிப்படையில் வழக்கின் பின்னணி தரப்படுகிறது. மேலும் விபரங்கள் பின்னர் தரப்படும்.
.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிபதிகள் 26 பேரும், மற்ற உயர்பதவி வகிக்கும் அலுவலர்களும் நான்காம் நிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து ரூ.23 கோடி அளவிலான பணத்தை பொய்யான பெயர் விபரங்கள் அளித்து கையாடல் செய்தது அப்பகுதி நீதித்துறையினரிடையே பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது “காசியாபாத் நீதிபதிகள் ஊழல்” என்று பரவலாக அறியப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிடவேண்டுமென்று கோரி நஹர்சிங் யாதவ் என்ற வழக்குரைஞர், “அதிவக்த கல்யாண்” என்ற அறக்கட்டளையின் தலைவர் மற்றும் காசியாபாத் வழக்குரைஞர் சங்கம் ஆகியோர் மனுதாரர்களாக இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
.
அம்மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து நீதித்துறை மீது படிந்துள்ள இந்தக் கறையை போக்க வேண்டுமெனில் இந்த ஊழல் தொடர்பான விசாரணை சி.பி.ஐ-யால் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே வழக்கின் ஒரே முக்கிய கோரிக்கை. வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் உயர்நீதித்துறையில் இருப்பதால், சி.பி.ஐ மூலமான விசாரணையே சரியானதாக இருக்கும் என்பது அம்மனுதாரர்களின் கோரிக்கை.
.
இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி திரு பி.சதாசிவம் மற்றும் நீதிபதி திரு கே.எம்.பஞ்சால் ஆகியோர் அடங்கிய ஆயத்தின்முன் முதன்முதலில் 07.07.2008 அன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தனித்தன்மை கருதி தலைமை நீதிபதியின் தனியறையில் (Chambers) அடுத்த கட்ட விசாரணையை நடத்த உத்திரவிடப்பட்டது. 14.07.2008 அன்று நடைபெற்ற தனியறை விசாரணையின் போது மத்திய அரசின் வழக்குரைஞர் (Solicitor General of India) இவ்வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடத்தினால் அது நீதித்துறைக்கு வலு சேர்க்கும் என்று அவர் விடு்த்த வேண்டுகோளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். தனியறை விசாரணையின்போதே தங்களையும் வழக்கில் ஒரு தரப்பினராகக் சேர்த்துக் கொள்ள வழக்குரைஞர் திரு பிரசாந்த் பூஷண் வழியாக TRANSPARENCY INTERNATIONAL என்ற அமைப்பு மனுச் செய்தது.
.
இந்த வழக்கின் புலனாய்வை சி.பி.ஐக்கு மாற்றக் கோரியுள்ள நிலையில் உச்சநீதிமன்ற ஆயம், குற்றச்சாட்டிற்கு ஆளான நீதிபதிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கமான முறையில் நேரடியாக சந்தித்து விசாரிப்பதை விரும்பவில்லை. அதற்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளிடம் புலன்விசாரணை மேற்கொள்வதற்காக சி.பிஐ அதிகாரிகள் கேட்க விரும்பும் கேள்விகளை எழுத்து மூலமாக வழங்கி, அந்நீதிபதிகள் எழுத்து மூலம் வழங்கும் பதில்களின் அடிப்படையிலேயே விசாரணை தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
.
இவ்வழக்கில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு, கடைநிலை ஊழியர்களின் சேமநல நிதியை பொய்யான பெயர்களைக் குறிப்பிட்டு ரூ.23 கோடி அளவில் இந்த நீதிபதிகள் கையாடல் செய்துள்ளார்கள் என்பதாகும். இந்தச் செய்தி வெளிவரக்காரணமே, இந்த வலைப்பின்னலின் சங்கிலிகளில் ஒருவராக செயல்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், இந்தக் குற்ற முறையை தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியதுதான். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளிடம் எழுத்துமூலமான கேள்விகள் அளித்து பதில்களை பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமைப்பதிவாளர், காசியாபாத் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதினார்.
.
இந்த சலுகை அடிப்படையிலான நடைமுறைக்கு 17.07.2008 அன்று நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் திரு பிரசாந்த் பூஷண் கடும் ஆட்சேபணை தெரிவித்தார். அதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஏற்க மறுத்ததுடன், தன்னுடைய நிர்வாக ரீதியான உத்திரவை கேள்விக்குட்படுத்தினால், இவ்வழக்கை விசாரணை செய்யும் ஆயத்தில் தான் பங்கேற்க முடியாது என்று தனது கருத்தை கோபத்தின் உச்சத்தில், உறுதிபட தெரிவித்தார். வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
.
ஒரு குற்றவியல் வழக்கின் புலன் விசாரணை என்பது அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை நேரடியாக விசாரணை செய்து குற்றத்தின் பின்புலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, அதில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான். இதைத் தான் சட்டம் வலியுறுத்துகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களாகக்கூட முதல் தகவல் அறிக்கையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் காட்டப்படவில்லை என்பதும், அவர்களிடம்கூட புலன்விசாரணை செய்ய மறைமுகத்தடை என்பதும் மிகவும் வருந்தத்தக்க சூழ்நிலையாகும். இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதிக்கோட்பாட்டை மீறுவதாகவே மக்கள் உணர்வர்.
.
“நீதி வழங்கப்படுவது என்பதும், வழங்கப்படுவது நீதிதான் என்பதும் வெளிப்படையாகத் தெரிய வேண்டியது அவசியம்” என்கிறது சட்டச்சொற்றொடர் (JUSTICE SHOULD NOT ONLY BE DONE BUT ALSO SEEM TO BE DONE). ஆனால், நீதிபதிகள் விஷயத்தில் மட்டும் இச்சொற்றொடர் பலநேரங்களில் பொருந்துவதாக இருப்பதில்லை.
.
கடந்த 2003ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மைசூரி்ல் நீதிபதிகள் சிலர் தங்கள் தகுதிக்குக் குறைவான விரும்பத்தகாத செயல்களில் ஈடுப்பட்டார்கள் என்று வெளியான செய்திகள் தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்கள் மீது கர்நாடக உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக (SUO-MOTU) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் காரணமானது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில் இக்குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதிகள் குழுவின் அறிக்கை நகலை வழங்கக் கேட்டு மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய்த மனு, விசாரணை அறிக்கை இரகசியமானது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
.
“வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பதற்கேற்ப நீதித்துறையின் தனித்தன்மையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டே நீதித்துறையின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படையற்ற தன்மையை பின்பற்றுவதும் ஊக்குவிப்பதுமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலை சிறிதளவேனும் மாற வேண்டும் இல்லையெனில், Howsoever high you may be; the law is above you என்பது பொய்யாகி விடும் அபாயமுள்ளது.

-சு. சத்தியச்சந்திரன்
(advsschandran@gmail.com)

Monday, July 28, 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 6

வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டுமெனக் கூறியது. அதனடிப்படையில் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத் தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிப் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது.
.
இதுநாள் வரை தங்களுக்கு கீழே இருந்த தலித்துகள் தங்களுக்கு மேலே வந்துவிடுவார்களோ என்று, ஒரு தலித்தை தலைவராக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலிருந்த ஆதிக்க சாதியினர், இது குறித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இருப்பினும், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள தலித் மக்கள் ஆர்வம் காட்டினர். தி.மு.க.வைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் 10.9.1996 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் அவர்களை மிரட்டவே, அவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
.
மேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், ஆதிக்க சாதியினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். அச்சத்தால் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 28.12.96 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலை தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்க சாதியினர் இத்தேர்தலைப் புறக்கணிக்க, தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து, இறுதியில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.
தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆதிக்க சமூகத்தினர் முருகேசனுடன் தந்திரமாகப் பழகி, ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். முதன்முறையாக 10.9.1996 அன்று முருகேசனும் மற்ற தலித் மக்களும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தலித் மக்களின் மூன்று குடிசைகளுக்கு தீ வைத்தனர் ஆதிக்க சாதியினர். முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வந்தபிறகு தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.
.
இது குறித்து நிவாரணம் கோரி 30.6.1997அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர்.
.
மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைபாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.
.
பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
.
25.9.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல்துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப்பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்ததால், கைதானவர்களை பிணையில் தவிர்க்க முடியாமல் விடுவித்தாக வேண்டும் என்பது சட்டவிதி). குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.
.
1998 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் பெரும்பான்மையினருக்குப் பிணை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலவளவிற்குத் திரும்பியதால், தலித் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வாக்குள்ள முக்கியமான ஓரிருவர் சம்பவ சாட்சிகளான தலித் மக்கள் சிலரிடம் மறைமுக மிரட்டலில்ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக இது குறித்து அவர்களால் நேரடியாக ஒன்றும் செய்ய இயலவில்லை. முருகேசனின் தம்பி கருப்பையா இச்சூழ்நிலையை விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்தார். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
.
இத்தகவல்களைக் கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பொ. ரத்தினமும், இக்கட்டுரையாளரும், மற்ற சக வழக்குரைஞர்களும் இச்சூழ்நிலை குறித்துப் பெரும் கவலையடைந்தனர். 1998 ஏப்ரல் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போதிருந்த மன்மோகன் சிங் லிபரான் (பாபர் மசூதி இடிப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தற்பொழுது உள்ளார்) அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கி, இச்சூழலால் வழக்கில் சாட்சிகளாக உள்ள தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 75 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனுவை உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரப்படி நடவடிக்கை எடுக்க, இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் விசாரணைக்கு அம்மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.
.
ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயராம் சவுத்தா மற்றும் பி. பக்தவச்சலு ஆகியோர், மனுதாரர்களான வழக்குரைஞர்கள் வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களோ, அரசோ அல்லர்; அவர்கள் வழக்கிற்கு மூன்றாம் தரப்பினர். எனவே, அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று இவ்வகையில் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று அதிரடித் தீர்ப்பு வழங்கினர்.
.
இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் பொ. ரத்தினம் (முதலாம் மனுதாரர்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பிணை ரத்து குறித்த குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை ஆய்ந்து அளித்த தீர்ப்பு, மிகவும் முன்னோடித் தீர்ப்பாக இன்று வரை அறியப்படுகிறது. அதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள், “ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை குற்றவியல் வழக்கைத் தொடுத்து நடத்தும் அரசோ அல்லது அவ்வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்றிருந்த நிலையை மாற்றி, வழக்கில் நேரிடையாகத் தொடர்பற்ற ஆனால் அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையில் உண்மையான, நேர்மையான அக்கறையுள்ள நபர்களும் பிணை ரத்து மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் (ரத்தினம்-எதிர்-அரசு (2000) 2SCC 391) சட்ட விளக்கமளித்தது.
.
இத்தீர்ப்பின் காரணமாக மேலவளவு படுகொலை வழக்கு, சட்டரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததால், இதற்குப் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வட்டாரத்தில் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய வழக்கு என்ற தனிக்கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்னொரு செய்தியையும் இங்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நீதிமன்றத்தை எவ்விதம் அணுகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையும்.
.
மேலவளவு வழக்கின் விசாரணை மதுரையிலேயே நடத்தப்பட்டால், மதுரை மற்றும் பிற தென்மாவட்டங்களில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆதிக்க சாதியின மக்களே பெரும்பான்மையினராக இருப்பதால், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சியளிக்க பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்துதல், சாட்சிகளை விலை பேசுதல் போன்றவை நிகழ்ந்ததாலும் வழக்கு விசாரணையை வேறு வட மாவட்டத்திற்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு செய்யப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னரே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தது. எனவே, வழக்கு விசாரணை மதுரையிலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
.
வழக்கு விசாரணையை சேலத்தில் நடத்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞரான நியமனம் செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசு உத்ததரவு ஏதும் பிறப்பிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனுவம் தாக்கல்செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலவளவு வழக்கை நடத்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அவருடன் மற்றொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையை திறமிக்க வகையில் நடத்தினார். பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 26.7.2001 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
.
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு நிலுவையிலிருக்கும் காலத்திற்கு தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்கள், முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல் வழங்கியது, மனித உரிமை மற்றும் தலித் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

-காயங்கள் தொடரும்

-சு. சத்தியச்சந்திரன்

Tuesday, May 20, 2008

கோல்ட் குவெஸ்ட் நிறுவனமும், "ஏமாந்த" மக்களும்...!

குற்றங்களைப் பற்றியும் குற்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களைப் பற்றியும் பொதுமக்களிடம் பல்வேறு கருத்துகள் உள்ளன. பங்கேற்பவர்கள் என்பது குற்றத்தை செய்பவர்களை மட்டுமல்ல; அதனால் பாதிக்கப்படுபவர்களையும் சேர்த்ததே.

அரசு மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரிடம் உள்ள பொதுவாக கருத்தியல், ஏழை மற்றும் படிப்பறிவற்ற மக்கள் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்பதே. இதன்படி குற்றத்தில் தொடர்புள்ளவரின் சாதியும், தோல் நிறமும் கூட மிகமுக்கியமானவை. இந்த கருத்தியலின்படியே பொதுவாக காவல்துறையும், பல நேரங்களில் நீதித்துறையும் செயல்படுகின்றன.

அதேபோல ஏழை மக்களைப் பொறுத்தவரை, அதை வெளிப்படையாக சொல்லும் துணிச்சல் இல்லாவிட்டாலும்கூட, பணக்காரர்கள் செய்வதே குற்றமாக கருதப்படுகிறது. எனவேதான் சாலை விபத்து போன்ற சந்தர்ப்பங்களில் நடந்தோ, சைக்கிளிலோ செல்பவரின் தவறால் விபத்து ஏற்பட்டால்கூட அதற்கு மோட்டார் வாகனத்தில் செல்பவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது.

இந்த அடிப்படை மனோபாவம் பலநேரங்களில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலமாகவும் பரப்பப்படுகிறது.

ஊடகங்களில் பணிபுரிவது என்பது மிகவும் சுவாரசியமானது. உண்மையான உண்மைகள் நமக்கு தெரிந்தாலும், மக்களுக்கு தேவையான உண்மைகளை மட்டுமே வழங்கும் பணி சில நேரங்களில் சவாலானதும்கூட. ஏனென்றால் உண்மையான உண்மைகளை வெளிப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

சில ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் “போலி கள்ள நோட்டு” மாற்ற முயன்ற சிலர் பிடிபட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளராக பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பிடிபட்ட குற்றவாளிகள் கட்டுக்கட்டாக கருப்பு வண்ண காகிதங்களை வைத்திருந்தனர். அவர்களின் அருகே ஒரு பாத்திரத்தில் திரவமொன்றும் இருந்தது. செய்தியாளர்கள் அனைவரும் வந்தவுடன், காவல்துறை அதிகாரியின் அறிமுகவுரை முடிந்தவுடன் குற்றச்சம்வத்தின் செயல்முறை விளக்கம் நடத்திக்காட்டப் பட்டது.

“குற்றவாளிகள்” கட்டுக்கட்டாக இருந்த கருப்பு வண்ணக் காகிதங்களில் சிலவற்றை எடுத்து அந்த திரவத்தில் கரைத்தனர். அது ரூபாய் நோட்டாக மாறியது. இந்த செயல்முறை விளக்கத்தை பாதிக்கப் பட்டவர்களிடம் அவர்களது வீட்டில் குற்றவாளிகள் செய்துகாட்டி அவர்களை ஏமாற்றிவிட்டதாக கூறப்பட்டது.



“ஏமாந்தவர்கள்” அனைவரும் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் கொடுத்து அதற்கு இரட்டிப்பு மடங்கில் கள்ளநோட்டு வாங்க முயற்சி செய்திருந்தனர். ஆனால் கள்ள நோட்டை கொடுத்த குற்றவாளிகள் சென்றபின்னர், அவர்கள் கொடுத்த கருப்பு வண்ண காகிதத்தை எந்த திரவத்தில் போட்டாலும் அது ரூபாய் நோட்டாக மாற மறுத்துவிட்டது.

இந்த "நூதன மோசடி"யால் "பாதிக்கப்பட்டவர்கள்" அனைவரும் பொங்கி எழுந்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர புலனாய்வில் குற்றவாளிகள் பிடிபட்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் வழக்கறிஞர்களும் இருந்தனர். அப்போது காவல்துறை அதிகாரியிடம், “இந்த கருப்பு வண்ண காகிதங்கள் கள்ளநோட்டாக மாறாததால் இவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அவை அனைத்தும் கள்ள நோட்டாக மாறியிருந்தால் அப்போது யார் குற்றவாளி?” எனக் கேட்டோம்.
அதற்கு மழுப்பலான சிரிப்புடன் பதிலளித்த அந்த அதிகாரி, “இருதரப்பும்தான்” என்று கூறினார். பாதிக்கப்பட்டதாகக்கூறி புகாருடன் வந்தவர்களையும் நமது கேள்வி குற்றவாளிகள்தானே என்று சுட்டிகாட்ட - "பாதிக்கப்பட்டவர்"களும், அவர்களின் வழக்கறிஞர்களும் இந்த எதிர்பாராத கேள்வியினால் திகைக்க இயல்பு நிலை திரும்ப சற்று நேரமானது.




குற்றவியல் தத்துவங்கள் அனைத்தும் குற்றச்செயலைவிட குற்ற மனப்பாங்கை(Mens Rea)யே பெரும் தீங்காகப் பார்க்கின்றன. இந்த அடிப்படையில் கள்ளநோட்டு மாற்ற ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்ட அனைவருமே குற்றவாளிகள்தான். அவர்களின் முயற்சி நிறைவேறவில்லை என்பதால் அவர்களை அப்பாவிகளாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் பார்க்கக்கூடாது.

சன்டே இந்தியன் வாரஇதழின் செய்தியாளர் திரு.சந்திரன் என்னை தொடர்பு கொண்டு, “கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள்” குறித்து கேட்டபோது இந்த சம்பவத்தைக் கூறி, கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டதாக கூறிக்கொள்பவர்களையும் இந்தப்பார்வையிலேயே பார்ப்பதாகவும் கூறினேன். இது அப்படியே அச்சாகவும், பல நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு எதிராகவும் நான் பேசுவதாக அதிர்ச்சியை தெரிவித்தனர். அதற்கு பதிலாக இந்த பதிவெழுத நேர்ந்தது.


இந்த “அப்பாவிகள்” குறித்து முதலில் சில விஷயங்களை தெளிவு செய்து கொள்வது நல்லது.

இவர்கள் கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தில் இந்த அப்பாவிகள் யாரும் முதலீடு செய்யவில்லை. அந்த நிறுவனம் அறிவித்த ஒரு திட்டத்தில் உறுப்பினராகதான் சேர்ந்தனர். அந்த திட்டத்திற்கான விதிமுறைகளை புரிந்து கொள்ளாதது உறுப்பினர்களின் தவறே. உறுப்பினர்கள் அதைக் கேட்டும் நிறுவனம் சொல்லாவிட்டால் அதுவும் தவறே.


சுமார் 30 ஆயிரம் ரூபாய் தொகையைப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம், வெறும் 3 கிராம் தங்கத்தை மட்டுமே கொடுத்தது என்பதையும் புலம்புவதில் அர்த்தமில்லை. ஏனெனில் அந்த அளவு தங்கத்தை மட்டுமே தருவதாக அந்த நிறுவனம் தெளிவாகவே தெரிவித்திருந்தது. அது உலகிலேயே மிகக்குறைவான அளவில் தயாரிக்கப்பட்ட அரிய வகை நாணயம் என்பது மிகச்சிறந்த நகைச்சுவை. அதை நம்பியது அதைவிட நகைச்சுவை.


ஆக இந்த கோல்ட் குவெஸ்ட் விவகாரத்தில் உறுப்பினரானவர்கள் யாரும் தெரியாமல் மாட்டிக் கொண்டதாக தெரியவில்லை. தெரிந்தே உறுப்பினராகியுள்ளனர்.

அவர்களுக்கு சந்தேகங்கள் தோன்றியபோதெல்லாம் நிதியமைச்சரின் மனைவி மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வழங்கிய சட்ட சான்றிதழ், உறுப்பினர்களுக்கு தெம்பூட்டியுள்ளது. மக்கள் ஏமாந்ததாக கூறப்படுவதற்கு இதுவே முழுமையான காரணம் அல்லவென்றாலும், இதுவும் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.

இந்த வலைப்பின்னல் வணிகத்தொழிலில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் உட்பட சமூகத்தில் படித்தவர்கள் எனக்கருதப்படும் பலரும் இணைந்துள்ளனர்.

இந்த வலைப்பின்னல் எங்கோ ஒரு இடத்தில் அறுந்துபோகும் என்பது யாருக்குமே தெரியாதா? அவ்வாறு அந்த இழை அறுந்து போவதற்குள் நாம் சம்பாதித்து விடுவோம்! மற்றவர்களைப்பற்றி நமக்கென்ன கவலை என்ற குறுகிய எண்ணத்தில்தானே இந்த திட்டத்தில் ஏராளமானோர் சேர்ந்துள்ளனர்?

உழைக்காமல், குறுகிய காலத்தில் பணம் சேர்க்கும் எண்ணமே இதுபோன்ற நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்பாக அமைகிறது.


சமூகத்தின் பொதுக்கருத்தில் ஒருவர் செல்வந்தரா? என்பது மட்டுமே கேள்விக்குள்ளாகிறது. அவர் எந்த தவறான வழியில் பணம் சேர்த்தாலும் அது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்யும் கலை, சாமர்த்தியம் என்று போற்றப்படுகிறது.

உலகமயமாதல் பொருளாதார சூழ்நிலையில், வாழ்க்கை அறங்கள் அனைத்தும் பொருளற்று கொள்ளை லாபம் ஒன்றே வாழ்வின்/வணிகத்தின் லட்சியமாக மாறிவிட்ட நிலையில் மக்களின் அறம் சார்ந்த கோட்பாடுகளும் பொருள் இழந்து வருவதையே இது காட்டுகிறது.

அரசியல்வாதிகள், வணிகக்கழகங்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செய்தித்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருமே இந்தப்போக்கில்தான் செயல்படுகின்றனர். இதிலிருந்து விலகிநிற்க முனையும் சிலர் கோமாளிகளாகவும், பிழைக்கும் சாமர்த்தியம் இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு ஏமாளிகளாகவும், கோமாளிகளாகவும் இருக்க முடியாமல், என்ன செய்தாவது பொருளீட்டும் ஆர்வத்தில் கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தில் இணைந்தவர்கள்தான் இன்று பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

ஒரு வாதத்திற்காக அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களை ஏமாற்றியது கோல்ட் குவெஸ்ட் நிறுவனம் மட்டும்தானா? என்பதே நம் கேள்வி.
-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)