Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Saturday, August 21, 2010

பெண்ணுரிமையும், திருமண வயதும் ..!

குடும்ப அமைப்புமுறையை சிறந்ததொரு முன்மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.



ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன.

திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற குழந்தைத் திருமண முறையானது, வெகுகாலமாகவே நம் சமூகத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

“சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட, இராஜா ராம்மோகன்ராய் 1828ம் ஆண்டில் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்ற அமைப்பின் வாயிலாக, குழந்தைத் திருமண முறையை எதிர்த்தல், பெண் கல்வி, விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் பெண் விடுதலையை ஆதரித்தல், பலதார மணம் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். மேலும் தனது சிறு வயதில், தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்திய தனது மூத்த சகோதரனின் மனைவி, அவரது கணவனின் மறைவுக்குப்பிறகு உறவினர்களால், வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டதால் மிகவும் மனமொடிந்து போனார். இக்கொடிய நிகழ்வினை ஒழிக்கவேண்டி அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாகவே, 1829ம் ஆண்டில் வில்லியம்பெண்டிங் பிரபுவால், ‘‘சதி எனும் உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிப்புச்சட்டம்’’ இயற்றப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பொறுப்புக்கு வந்த, கேசவ சந்திர சென்னின் முயற்சியால் 1872ம் ஆண்டு, “சிறப்புத் திருமண சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சாதி மறுப்புத் திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த நிகழ்வுகளை ஆதரித்தது. மேலும் அச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணமும், பலதார மணமும் ஒழிக்கப்பட்டது.

சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், சமூகத்தில் குழந்தைத் திருமண முறையானது தொடர்ந்து நீடிக்கவே செய்தது. இன்றளவும் சமூகத்தில் அரசியல், சட்டம், சுதந்திரம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முன்மாதிரியாக விளங்கும், தேசப்பிதா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1883ல் தனது 13ஆவது வயதில் 13 வயதே கஸ்தூரிபா அவர்களையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1897ல் தனது 14ஆவது வயதில் 7 வயதே ஆன செல்லம்மா அவர்களையும், பெரியார் ஈ.வெ. இராமசாமி 1898ல் தனது 19ஆவது வயதில் 13வயதே ஆன நாகம்மை அவர்களையும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் 1906ல், தனது 15ஆவது வயதில் 9 வயதே ஆன இராமாபாய் அவர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்படியாகக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரையிலும், குழந்தைத் திருமண முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பான ஒன்றாகவே விளங்கியிருக்கிறது என்பது இதன் மூலமாகப் புலனாகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், 1929ம் ஆண்டு, “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது. இச்சட்டத்தில் 1940ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது. 18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்குத் துணைபுரியும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

“குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 1929”க்குப் பதிலாக, 2006ஆம் ஆண்டில், “குழந்தைத் திருமண தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று உறுதி செய்யப்பட்டது. ஒருவேளை குழந்தைத் திருமணம் ஏற்கனவே நடந்திருந்தால், திருமணமான பெண் தனது 18 வயதை அடைந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், அந்த திருமணம் குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், அந்த திருமணமானது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்யும். ஏற்கனவே நடந்த திருமணத்தின் வாயிலாக குழந்தை ஏதேனும் பிறந்திருந்தால், அந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கூறப்பட்டுள்ளது போல, தேவையின் பொருட்டு அந்த பெண்ணிற்கு அவரது கணவன் அல்லது பெற்றோர் பராமரிப்புத் தொகையும், ஊக்கத்தொகையும் மற்றும் தேவையினைப் பொருத்து குடியிறுப்பு வசதியும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.

“இந்துத் திருமண சட்டம்” 1955ன் படியும், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிவு 7அ வின் படி, சுயமரியாதை மற்றும் சீர்திருத்தத் திருமணங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் “இந்திய தண்டனைச் சட்டம், 1860” ஆனது, பெண்ணானவள் ஆணின் சொத்து என்றே கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950” பிரிவு 21ன் படி, வாழ்வுரிமையானது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதபடுத்தப் பட்டுள்ளது. உறிய வயதை அடைவதற்கும் முன்பாகவே திருமணம் செய்வதன் மூலமாக, மகப்பேறு காலத்தில் போதிய அளவுக்கு உடல் வளர்ச்சியடையாமல் இருக்கும் காரணத்தால், தாய் மற்றும், கருவின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.

18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து கொடுப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள, தான் விரும்பியவரையே தன் வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், குழந்தைப்பருவத்தை அனுபவிக்கும் உரிமையும், பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநிறுத்தம் ஏற்படுவதன் மூலமாகக கல்விபெறும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டின், மத்திய ‘மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்’ தேசிய செயல்திட்டத்தின் ஒரு இலக்கானது, 2010ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணமுறைக்கு முழுமையாக முடிவுகட்டுதல் என்பதாகும். ஆனால் தற்போது 2010ல் பாதி ஆண்டை கடந்துவிட்டோம். குழந்தைத் திருமணமுறை இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலக்கு மட்டும் திட்ட வடிவில் அப்படியே உள்ளது.

‘அய்.நா.வின் சிறுவர் நிதியம்’ என்ற அமைப்பு 2009ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் நிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில், உலகில் மகப்பேறு காலத்தில், 20 முதல் 24 வயதையுடைய தாய்மார்களின் இறப்பு விகிதத்தில் இந்திய பெண்கள் 47% பேர். அதில் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் முடித்தவர்களில் 56% பேர் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். வாழ்க்கையின் போக்கை உணர அதற்குரிய வயதை அடையவேண்டியது அத்தியாவசியமானது ஆகும். அறியாப்பருவத்தில் நடக்கும் திருமணத்தால் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது இயற்கையானதாகும்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் ‘பிறன்மனைப் புணர்தல்’ குறித்துக் கூறும் பிரிவு 497 ஆனது, பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பொருள்படக் கூறுகிறது. இந்த பிரிவின் படி, பிறன்மனைப் புணர்தல் சந்தர்பத்தில் அந்த மனைவி உடந்தைக் குற்றவாளியாகத் தண்டிப்பதற்கு உரியவராக மாட்டார். தொடர்புடைய மனைவிக்கு வழக்கு தொடுக்கும் உரிமை ஏதும் கிடையாது என்றும் ஆணுக்கு மட்டுமே வழக்கு தொடுக்கும் உரிமையானது உள்ளது என்றும் கூறுகிறது.

பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், பிரிவு 375ன் 5ஆவது உள்விதியானது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொண்டால்தான் அது ‘வன்புணர்ச்சி’ என்று கூறுவதோடு மட்டுமின்றி, ஒருவர் தம் மனைவியோடு, அந்த மனைவி 15 வயதுக்குட்பட்டவாராக இல்லாதபோது கொள்ளும் உடலுறவு, வன்புணர்ச்சி அல்ல என்றும் கூறுகிறது.

‘வன்புணர்ச்சிக்கான தண்டனை’ குறித்துக் கூறும் பிரிவு 376 ஆனது, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணானவர், அதைச்செய்தவரின் சொந்த மனைவியாகவும், 12 வயதிற்கும் கீழ்படாதவராகவும் இருந்தால், அதில் ஈடுபட்ட எவருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. இதன்படி பார்த்தால் குழந்தைத் திருமண முறையும், திருமணம் வாயிலான வன்புணர்ச்சியும் இங்கே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

2008ஆம் ஆண்டின், கட்டாய திருமணப் பதிவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே திருமணப் பதிவின் போது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமாய் குழந்தைத் திருமண முறையானது சட்ட ரீதியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். “குழந்தைத் திருமண தடைச் சட்டம்-2006” மதச்சார்பான சட்டங்களின்படி நடக்கும் திருமணங்களைக் குறித்துத் தெளிவாக எதுவும் கூறவில்லை. குழந்தைத் திருமணம் செல்லாது என சட்டத்தில் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறுவதற்குப் பதிலாக, பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணே மனு செய்து, அத்திருமணத்தைச் செல்லாது என அறிவிப்பு செய்ய வேண்டும் என போராட வேண்டிய சூழலே நிலவுகிறது.

உரிய வயதை அடைந்த பிறகு, ஏற்கனவே நடந்த திருமணமானது செல்லாது என்று அறிவிக்க சமூகத்தில் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் தயக்கத்தை தவிர்க்கவும், அவர்களை திடப்படுத்தி ஊக்குவிக்கவும் அரசு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதன் மூலமாகவும், குழந்தைத் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் உறுதிபடுத்தப்படும் சூழல்களில், அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் வாயிலாகவும்தான், சட்ட ரீதியாக பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக உத்தரவாதபடுத்தப்படும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்
( robertckumar@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Wednesday, August 12, 2009

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா?

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் (Tamil Nadu Agricultural Council Act) என்ற பெயரிலான சட்டத்தி்ற்கான முன்வடிவு ஒன்றை 23 ஜூன் 2009 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், "தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்" என்ற அமைப்பு நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை, மனையியல், உயிர்தொழில் நுட்பம், வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை தகவல் தொழில் நுட்பம், உயிர் தகவலியல், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்தும் பொறியியல், வேளாண் வர்த்தக மேலாண்மை ஆகியதுறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மன்றத்தில் பதிவு செய்ய முடியும்.

.

வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இத்தகைய பட்டம் பெற்றவர்கள் உரிய ஆலோசனைக்குப்பின்னர் இந்த மன்றத்தில் உறுப்பினராக அனுமதிக்கப்படுவர்.

.

இந்த மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள், சட்ட முன்வடிவின் 29வது அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி:

.

29. பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர் ஒருவர் நீங்கலாக வேறு நபர் எவரும், தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளாக வேளாண்மை ஆலோசகராக தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப்பணிகளை ஆற்றுவதோ கூடாது.

.

விளக்கம்:- வேளாண்மைப் பணி என்றால்,-

(அ) பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழி்ல்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்திகள், களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலான பரிந்துரைக்குறிப்பு வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பம், வேளாண்மை உயிரியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேளாண்மைப் பணிகளைச் செய்தல்;

.

(ஆ) தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வேளாண்மைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் வேளாண்மைத் திட்டங்களில் கையொப்பமிடுவது, அல்லது அதிகாரச் சான்றளித்தல் மற்றும் உரிய முறையில் தகுதி பெற்ற வேளாண்மை தொழிலாற்றுநர் ஒருவரால் சட்டத்தின்படி கையொப்பமிடப்பட வேண்டியதான அல்லது அதிகாரச் சான்றளிக்கப்பட வேண்டியதான மதிப்பீட்டுச் சான்றிதழை வழங்குதல்;

.

(இ) மண் மற்றும் நீரின் பண்புகளையும், இயற்கை மற்றும் இரசாயன உரங்களின் அளவையும் கணிப்பதிலும், பயிர்களுக்கு அழிவு செய்யும் பூச்சிகளையும், நோய்களையும் இனங்கண்டு தீர்வழி நடவடிக்கைகளை வகுத்துரைப்பதிலும் பல்வேறு மண் தரநிலைகளுக்கும், வேளாண் தட்பவெப்ப கூறுகளுக்கும் ஏற்ற வகையில், பயிரிடுதல் தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதை முறைப்படுத்தி உதவி செய்வதிலும், சிறு தோட்டம் அமைத்தல், மலர்செடி வளர்த்தல் மற்றும் நெடுநாள் இருக்கிற தோப்புகளை மேம்பாடு செய்தல் ஆகிய வற்றில் உயரிய தொழி்ல்நுட்ப பண்ணை முறைகளை மேற்கொள்வதிலும் குடியானவர்களுக்கு உதவுவதற்கு வேளாண்மைப்பணிமனைகளையும் ஆய்வுக்கூடங்களையும் நடத்துதல்;

என பொருள்படும்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், தம்மை இம்மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரித்து பணியாற்றினால் அவர் முதல் முறை சிக்கும்போது ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை சிக்கினால் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் தண்டனையும் வழங்க வகை செய்கிறது மேற்கூறிய சட்டம்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளை செய்யக்கூடாது என்று இந்த சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் இந்த மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரிக்காமல், மேற்கூறப்பட்ட இந்தப்பணிகளை எவரேனும் செய்தால் அவருக்கு என்ன தண்டனை என்பது தெரியவில்லை.

.

மருத்துவத் தொழிலையும், சட்டத் தொழிலையும் நெறிப்படுத்த இந்திய மருத்துவ மன்றமும், இந்திய வழக்குரைஞர் மன்றமும் இருப்பதுபோல வேளாண்மைத் தொழிலை நெறிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

.

மருத்துவம் படித்தவர்களில் ஏறக்குறைய அனைவருமே மருத்துவத் தொழிலையே செய்து வருகின்றனர். சட்டம் படித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால் வேளாண்மை படித்தவர்களில் எத்தனைப் பேர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர் என்று கேள்வி எழுப்பினால் பதிலைக் காணோம். வேளாண் பட்டதாரிகள் அனைவரும் அரசுப்பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்தான் பணியாற்ற விரும்புகின்றனர். யாரும் சொந்தமாக விவசாயம் செய்யத் துணிவதில்லை. ஏனெனில் அவர்கள் பெற்ற கல்வியின் மீது அவ்வளவு நம்பிக்கை!

.

சரி! ஏன் இந்த சட்டம்?

.

இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவும், இந்தியாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், அமெரிக்க வேளாண் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது.

.

இந்த ஒப்பந்தத்தின் பயனாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களோடு, இந்தியாவின் உணவு இறையாண்மைக்கு எதிரான சட்டங்களும் இந்தியாவில் அமல்படுத்தப் படுகின்றன.

.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருமளவில் பரவி வருகிறது. முன்னோடி விவசாயிகளும், சில பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபடுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

.

சொந்த நாட்டுக்குடிமகன் தொழில் தொடங்கினால் ஆயிரம் தடங்கல்களை ஏற்படுத்தும் மத்திய மாநில அரசுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் சலுகை விலையில் நிலம், மின்சாரம், மனிதவளம் ஆகியவற்றைத் தருகின்றன. இந்த வரிசையில் இந்திய வேளாண்மையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

.

பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், ஆய்வு உதவித் தொகை என்ற பெயரில் வழங்கும் நிதியால் இயங்கும் வேளாண்மை பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற மாணவர்கள்தான் அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக, மிக விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் அமைக்கப்படுவதாக இயற்கை வேளாண் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

.

கேரளா போன்ற அண்டை மாநிலங்கள், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கு மட்டுமல்ல: அனைத்து சமூகத்திற்கும் எதிரானதாக இருக்கிறது.

.

பல்லாயிரமாக ஆண்டுகளாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனுபவத்தில் வளர்த்தெடுத்த, சமூகத்தில் லாப நோக்கற்று பகிர்ந்து கொண்ட தமிழர்களின் வேளாண் அறிவை புறக்கணிக்கும் சட்டம் இது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

.

தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மை என்பது ஒரு தொழிலாக பார்க்கப்பட்டதில்லை. அது சமூகத்திற்கு உணவளிக்கும் ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் தவறான கொள்கைகள் காரணமாகவே வேளாண்மை என்பது லாபமற்ற அம்சமாக மாறியது. இதனால்தான் விவசாயிகள் பலரும் அந்த தொழிலை விட்டு விலகினர்.

.

வேளாண்மை பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகள் மூலமாகதான் எண்ணெய்ப் பனை, எண்ணெய் ஆமணக்கு எனப்படும் ஜாட்ரோஃபா போன்ற பயிர்களை இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தின பல தனியார் நிறுவனங்கள். அந்த நிறுவனங்களையும் தற்போது காணவில்லை. அதில் பணியாற்றிய வேளாண்மை பட்டதாரிகளையும் தற்போது காணவில்லை. அந்த பயிர்களை விளைவித்து ஓட்டாண்டிகளான விவசாயிகள்தான் இப்போது பெருநகரங்களில் பிச்சைக்காரர்களாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.

.

இந்த நிலையில்தான் மீதமுள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவும், விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றுவதற்கும் ஏற்ற ஒரு ஏற்பாட்டை தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் என்ற பெயரில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

.

இந்த மன்றம் வேளாண் நிலங்களை மட்டும் குறிவைக்கவில்லை. உங்கள் வீட்டுத் தொட்டத்தையும், பூச்செடிகளையும்கூட குறிவைக்கிறது. நீண்டகாலமாக இருக்கும் தோப்புகளையும் இந்த சட்டம் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்த தோட்டங்களும், தோப்புகளும்கூட இனி இந்த மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும்.

.

தமிழர்களின் பாரம்பரிய அறிவுச் சொத்துகளை திட்டமிட்டு அவமானப்படுத்தி புறக்கணிக்கும் இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன?

.

தமிழ்நாட்டின் வேளாண் துறையை பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் வீழ்த்துவதை தவிர வேறென்ன இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும்!

.

வேளாண்துறையை நெறிப்படுத்த(!) இருக்கும் இந்த அமைப்பில் ஒரு விவசாயிகூட இருக்க மாட்டார்.

.

இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவதற்கு பல்வேறு தரப்பினரரும் தயாராகி வருகின்றனர்.

.

உங்களிடம் ஆதரவு கேட்டு போராட்டக்காரர்கள் வரக்கூடும். வழக்கம் போல சலிப்படையாதீர்கள்.

.

ஏனென்றால் நாம் உட்கொள்ளும் உணவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யமுடியாது. கம்யூட்டரின் சாப்ட்வேர் எழுதியும் தயாரிக்க முடியாது. விளைநிலங்களில் விவசாயிகளின் உழைப்பினால் மட்டுமே அது சாத்தியம். இதுவரை விவசாயிகள் குறித்து மற்றவர்களின் அக்கறையின்மையே ஆண்டுக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலை நோக்கி தள்ளியது. இந்த நிலை தொடர்ந்தால் உணவிற்காக போரிட்டு நாமும் அழிய நேரிடும்.

.

விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவளித்து நன்றி செலுத்த இது தக்க தருணம். பயன்படுத்துவோம்!

Thursday, October 23, 2008

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் மணவிலக்கு என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க மணவாழ்வுரிமை மீட்பு சட்டம் பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை
என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,

4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,

7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,

8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்


ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.


இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.


கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.


கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,

2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,

3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),

4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,

5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,

6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,

7. ஆண்மையற்று இருந்தாலோ

... மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.


இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.


இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே தலாக் எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.


இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி


  1. நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,

  1. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,

  1. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,

  1. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,

  1. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...

...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.


இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.


இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.


எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள். அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு...!

- சுந்தரராஜன் . பி

(sundararajan@lawyer.com)

Tuesday, October 21, 2008

பிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா?

ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.


பெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும், பணியாற்றும் நிறுவனமும், ஊதியமும் நிர்ணயிக்கிறது என்பதை மறுக்க முடியாது. காதலின்போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும்போது ஒரு நாளின் சில மணிநேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும்போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குபின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும்போது தெரிந்து விடுகிறது.

திருமணத்திற்குபின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும்போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரியவைக்கும்போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.

கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.

மணவாழ்வுரிமை மீட்பு சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.

மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.

சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.

இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.

அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக்கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.


மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.

பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத்தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.

சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.

சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.

- சுந்தரராஜன் . பி

Wednesday, October 8, 2008

திருமணப்பதிவு ஏன்? எப்படி?

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.


இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.


எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது.

மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.


இந்து திருமணத்தை பதிவு செய்தல்.


இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம்.

மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம்.

மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள் வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.


கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது.

உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.


அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.


அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.


இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.


இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.


இஸ்லாமியத் திருமணங்கள்


இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.


இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.


(குறிப்பு: மிகவிரிவான ஒரு தலைப்பு, மிகச்சுருக்கமாக எழுதப்பட்டு்ள்ளது. ஐயங்களை மறுமொழிப்பெட்டியில் இட்டால் உரிய பதில்களை தேடி வழங்குவதற்கு முயற்சிக்கிறேன்)


-பி. சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)


பார்வைக்கு: தமிழக பதிவுத்துறையின் வலைப்பக்கம்