Thursday, August 30, 2007

சர்வதேச வட்டி நிறுவனங்களின் முற்றுகையில் தமிழக மாநகராட்சிகள்

ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மூலமும், பர்சனல் லோன் மூலமாகவும் தனி நபர்களை சுரண்டுவதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஆனால் அரசின் ஒரு துறையான மாநகராட்சிகளே இத்தகைய வங்கிகளிடம் சிக்குவதையும், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச சதிவலைப் பின்னலையும் மருத்துவர் ரமேஷ் அம்பலப் படுத்துகிறார். மாஸ்டர் பிளான் என்ற இந்த திட்டங்களுக்கான கருத்தாய்வு கூட்டமோ, கலந்தாய்வு கூட்டமோ மாநகராட்சியின் சமூக நல கூடங்களில் நடப்பதில்லை. அனைத்தும் தனியாருக்கு சொந்தமான குளிர்பதன வசதி செய்யப்பட்ட தனியார் விடுதிகளில்தான் நடைபெறுகின்றன.
இந்த செலவும் நம்மிடம்தான் வசூலிக்கப்படுகிறது. மருத்துவர் ரமேஷின் கட்டுரையை படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்:

நன்றி: சமூக விழிப்புணர்வு, கீற்று
-மக்கள் சட்டம் குழு

Wednesday, August 29, 2007

கிரெடிட் கார்டு வழக்கு நிலவரம்

சென்னையைச் சேர்ந்த சமூக-பொருளாதார நீதிக்கான மையம், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கில் கீழ்க்கண்ட அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

(அ) அனைத்து வங்கிகளிலும் பிராந்திய அளவில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் அமைப்பு நிறுவவேண்டும்.

(ஆ) ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கை குறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும்.

(இ) கிரெடிட் கார்டின் விதிமுறைகள், பில் விவரங்கள் ஆகிய அனைத்து விவரங்களயும் தமிழில் வழங்க வேண்டும்.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் நேற்று (28ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஜூன் 14 அன்று அனுப்பிய கடிதத்திற்கு, ஆகஸ்ட் 23ம் தேதி (இந்த வழக்கு தொடர்ந்த பின்) ரிசர்வ் வங்கி பதில் கடிதம் அனுப்பியிருப்பதாக கூறி அதன் நகல்களை நீதிபதிகளிடம் கொடுத்தார்.

அந்த (7 வரி) கடிதத்தை பார்த்த நீதிபதிகள், "இந்த கடிதத்தை ஏற்க முடியாது, நீங்கள் (இந்திய ரிசர்வ் வங்கி) இந்த வழக்கில் வலியுறுத்தப்பட்ட விஷயங்களை அமல்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அது குறித்து இந்த நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினர். மேலும் இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்பதால் வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு இந்த வழக்கை மாற்றவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, தானும் அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது கிரெடிட் கார்டு கேட்டதாகவும், அதற்கு வங்கி சார்பில், சட்டம் படித்தவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கமுடியாது என்று கூறிவிட்டதாகவும் நகைச்சுவையாக கூறினார். அப்போது குறுக்கிட்ட மற்றொரு வழக்கறிஞர், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், விபரம் தெரிந்த-கேள்வி கேட்கக்கூடிய வழக்கறிஞர்; காவல்துறையினர்; செய்தியாளர்கள்; அரசியல்வாதிகள் ஆகிய அனைவருக்கும் கிரெடிட் கார்டு வழங்குவதில்லை என்று கூற நீதிமன்றம் சிரிப்பால் அதிர்ந்தது.

ரிசர்வ் வங்கி எழுதிய கடிதத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்களுக்காக அதை மீண்டும் தருகிறோம்.

August 23, 2007

Dear Sir,

Credit Card operation of Banks

We thank you for your letter dated 14th June, 2007 on the captioned subject forwarding us certain suggestions/issues on the credit card operations of banks in India.

2. In this connection, we would like to convey that Reserve Bank of India is presently conducting a study on the entire credit card operations of banks based on complaints received. Suggestions/ issues forwarded by you are being examined as a part of the study. On completion of the same, appropriate guidelines , if any, will be issued to banks by our regulatory department.

Yours sincerely,

(Sujatha Elizabeth Prasad)

General Manager.

பின் குறிப்பு: கடிதம் எழுதியதற்கு எந்த பலனும் இல்லாத நிலையில், அது குறித்து வழக்கு தொடர்ந்த பின் கடமை உணர்வுடன் (மிகச்சரியாக 60ம் நாளிலேயே) பதில் கடிதம் அனுப்பிய ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு நன்றி.

-மக்கள் சட்டம் குழு

Monday, August 27, 2007

குற்றவாளி சஞ்சய் தத்துக்கு “கட்டிப்பிடி வைத்தியம்” செய்த போலிஸ் (டாக்டர்கள்..!!??) பதவி நீக்கம்.

செய்தி:

சஞ்சய் தத்துடன் கைகுலுக்கிய கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்; 8 போலீஸாரிடம் விசாரணை

மும்பை, ஆக 27: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள எரவாடா சிறையிருந்து இந்தி நடிகர் சஞ்சய் தத், ஜாமீனில் வெளியே வந்தபோது அவரிடம் கைகுலுக்கிய ஒரு கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் மற்ற 8 பேரிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சஞ்சய் தத்திடம், போலீஸ் சீருடையில் இருந்த கான்ஸ்டபிள்கள் மற்றும் அதிகாரிகள் கைகுலுக்கியது தவறு இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்குமாறு மாநில துணை முதல்வரும் போலீஸ் துறை அமைச்சருமான ஆர்ஆர் பாட்டீல் மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்

நன்றி: தினமணி 27-08-07


விமர்சனம்:


ஒரு நபர் விசாரணைக்கைதியாக சிறைச்சாலைக்குள்ளோ,
காவல்நிலையத்திற்குள்ளோ சென்று விட்டால் அவர் ஆசனவாய்க்குள் கூரிய ஐஸ்குச்சி திணிக்கப்படலாம். அவரே பெண்ணாக இருந்தால் வேறு ஏதாவது திணிக்கப்படலாம்.

ஆனால், “உள்ளே” செல்பவர் திரைப்பட நட்சத்திரமாகவோ, அவரது குடும்பத்தினர் ஆளுங்கட்சியின் எம்.பி.யாக இருந்தாலோ, அவர் சிறைக்குள்ளேயே சிகரெட் பிடிக்கலாம், சிகப்பு கம்பள விரிப்பில் நடக்கலாம். இடைக்கால ஜாமீனில் அவர் வெளியே வந்தால் அத்தனை போலீசும் அணிவகுத்து நிற்கும். அயல் நாட்டு அதிபரை வழியனுப்புவதுபோல கட்டிப்பிடிக்கும்; கையை குலுக்கும்; கண்ணீர் மல்க விடையும் கொடுக்கும்!


சாமானிய மனிதன் என்றால், அவனது ஜாமீன் மனு விசாரணைக்கு வரவே பல காலம் ஆகும். அப்படியே ஜாமீன் கிடைத்தாலும் அதிலும் பல சிக்கல் இருக்கும். வெளியே வந்த நபர், “உள்ளே” போனபோது கொண்டுசென்ற அனைத்து உடல் உறுப்புகளோடும் இருக்கிறாரா என்பதை சோதனை செய்ய வேண்டும்.

சஞ்சய் தத்துக்கு கொடுத்த மரியாதையை குறை சொல்லவில்லை. ஆனால் அந்த மரியாதையில் ஆயிரத்தில் ஒரு பங்காவது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

இந்த சம்பவத்தின்போது சஞ்சய் தத்தை கட்டிப்பிடித்து, கைகுலுக்கிய
சாதாரண போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்! நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத்துக்கு ஆதரவாக, பொறுப்பு மிக்க மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி, திருவாய் மலர்ந்தாரே. அவர்மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?-த. லிங்கேஸ்வரன்
(lingeshwaran@lawyer.com)

தொலைவழிக் கல்வியில் படிக்கிறீர்களா? உஷார்!!

முழுநேரக்கல்வியில் படிப்பதற்கு தேவையான வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் கல்வியை தொடருவதற்கு அஞ்சல் வழிக்கல்வி என்ற முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த முறையில் படித்து முன்னேறியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில் இணையம் மூலமாகவும் இந்த கல்வி வழங்கப்படுகிறது. நாட்டில் தொலைவழிக்கல்வியை வழங்காத பல்கலைக்கழகமே இல்லை எனலாம்.

மக்களுக்கு கல்விச்சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முறை, தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்களின் பொருளீட்டும் வழியாக மாறிவிட்டது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த பல்கலைக்கழகங்களில் அரசுத்துறை பல்கலைக்கழகங்ளும் அடங்கி விடுகின்றன.

இவ்வாறு தொலைதூர கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக தொலைக்கல்வி குழு (DISTANCE EDUCATION COUNCIL) அமைக்கப்பட்டது.

தொலைநிலைக்கல்வியை தரமுள்ளதாக்கும் இந்த திட்டத்தின்கீழ் கல்வித்திட்டங்களுக்கான தரநிர்ணயம் செய்யப்பட்டது. உதாரணமாக தொலைநிலைக்கல்வி மையத்தில் இருக்க வேண்டிய பேராசிரியர்களின் எண்ணிக்கை முதலானவை இந்த திட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வணிக மேலாண்மை(MBA), கணிப்பொறியியல் (MCA) போன்றவற்றில் மேல்நிலை பட்ட வகுப்புகளை மூன்றாண்டுகள் நடத்த வேண்டும் என்றும் அவற்றில் இடை நிலைத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற திட்டங்களும் வலியுறுத்தப்பட்டன.

ஆனால் எந்த நல்லத்திட்டங்களையும் போல, இந்த திட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் என்ன முடிவு என்பதற்கு எந்த விவரமும் இல்லை.

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், தொலைவழிக்கல்வி வழங்குவதற்குமுன், இந்த தொலைக்கல்வி குழுவிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களை எச்சரிக்கும் விதமாக பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.


எனினும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த தொலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், சேலம் வினாயகா மிஷன் பல்கலைக்கழகமும் மட்டுமே அவற்றின் அனைத்து தொலைக்கல்வி படிப்புகளுக்கும் இந்தக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியத்துறை (B. Ed) பட்டப்படிப்புக்கு மட்டும் தொலைநிலைக்கல்வி குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் எதுவும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் பட்டங்களை கூவிக்கூவி விற்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை.

இப்போதைய நிலையில் இந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்கள் பட்டயங்கள் பட்டங்கள் செல்லுமா? செல்லும் என்றால் தொலைநிலை கல்விக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு என்ன அர்த்தம்? அந்தப்பட்டங்கள் செல்லாது என்றால் பல்கலைககழகங்களும், அவற்றை கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவும், அரசும் என்ன செய்யப்போகின்றன?
-மக்கள் சட்டம் குழு

Friday, August 24, 2007

போலி டாக்டருக்கு படிக்கணுமா? தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகம் வாங்க!

மருத்துவம் என்பது சேவை என்பதிலிருந்து வணிகமாகிவிட்ட நிலையில் சாமானிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை எட்டாக்கனியாகி விட்டது. இதை பயன்படுத்தி முறையான பயிற்சி பெறாத பலரும் “போலி மருத்துவர்”களாக சிகிச்சை அளிப்பது நம் நாட்டின் அவலம்.

இந்த சட்ட விரோத செயலுக்கு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அரசு பல்கலைக்கழகமும் உதவி செய்வது காலத்தின் கோலம்.

(தினத்தந்தி, திருச்சி பதிப்பு : 29-07-07)

இந்த விளம்பரத்தில் பல்கலைக்கழகத்தின் முகவரியோ, வேறு எண்களோ, இணையதள முகவரியோ இல்லை. பதிலாக சமையல் கலை கற்றுத்தரும் கல்லூரிகளின் முகவரிகள்தான் உள்ளன.

மருத்துவ கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் மருத்துவ பயிற்சி அளிக்க முடியும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் (INDIAN MEDICAL COUNCIL).

சித்த மருத்துவ கல்வியை அங்கிகரிக்க இருக்கிறது இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE).

தமிழகத்தில் மருத்துவ கல்வியை அங்கிகரிக்க வேண்டியது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் (DR. MGR MEDICAL UNIVERSITY).

தொலைநிலை கல்வியை அங்கிகரிக்க வேண்டியது மத்திய அரசின் தொலைநிலை கல்விக்குழு (DISTANCE EDUCATION COUNCIL).

இந்த அமைப்புகளின் அங்கிகாரம் இல்லாமல் ஒரு பல்கலைக்கழகம் மருத்துவ கல்வியை "தொலைநிலை கல்வி"யில் வழங்குகிறது, சமையல் கலை கல்லூரிகள் வழியாக.

எனவே மருத்துவ கல்லூரியில் பல்லாயிரம் ரூபாய்களை கொட்டி, ஐந்தாண்டுகளை செலவு செய்து இனி யாரும் மருத்துவம் படிக்க வேண்டாம். வீட்டிலிருந்தபடியே தொலைநிலைக்கல்வியில் ஒரே ஆண்டிலேயே மருத்துவம் படித்து மருத்துவர் ஆகலாம்.

வாருங்கள் தமிழர்களே, மருத்துவம் படிப்போம்! நமக்கே உடற்கோளாறு என்றால் வேறு நல்ல டாக்டராக பார்ப்போம்!

-மக்கள் சட்டம் குழு

Thursday, August 23, 2007

மோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...!


செய்தி: இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உட்பட்டபோது அதில் பயணம் செய்த 90 பேரில் 26 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து அப்பேருந்தை இன்ஸ்யூர் செய்திருந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர், பி.கே. பாலசுப்ரமணியம் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

இந்த தீர்ப்பில், பேருந்தில் 42 பயணிகளை மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி உள்ளது. இதை மீறி 90 பேர் அந்த பேருந்தில் பயணம்
செய்தது தவறு. எனவே அந்த பேருந்தில் பயணம் செய்த 90 பேருக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை. எனினும் அதிகபட்ச இழப்பீட்டுக்குரிய முதல் 42 பேருக்கான இழப்பீட்டுத்தொகையை 90 பேருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மனுதாரர்கள் கோரும் மீதத்தொகையை பேருந்தின் உரிமையாளர்தான் வழங்க வேண்டும். அந்த தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டியதில்லை என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.விமர்சனம்: சட்டப்படி பார்த்தால் இந்த தீர்ப்பு சரியானது போல தோன்றலாம். தமிழ்நாட்டிலும் சென்னை உட்பட பலபகுதிகளில் பேருந்தின் படிக்கட்டில் பயணம செய்பவர்களை பிடித்து தண்டிக்கும் நிலை உள்ளது.
விடலைப்பருவத்தில் உள்ள சில இளைஞர்களைத்தவிர வேறு யாரும் படிக்கட்டுப் பயணத்தை விரும்ப மாட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் முதியவர்கள், பெண்கள் உட்பட பலரும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது இயல்பாகவே உள்ளது.


இது பயணிகளின் தவறுதானா? பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும், அலுவலகங்களில் பணியாற்றுவோரும் பேருந்து கிடைக்கவில்லை என்பதால் தாமதமாக செல்வதை யாராவது அனுமதிப்பார்களா?

இந்த பேருந்துகளை இயக்குவது அல்லது கட்டுப்படுத்துவது அரசுதான் என்ற நிலையில் “படிக்கட்டு பயணம்” என்ற குற்றச்செயலுக்கான முழு காரணமும் அரசிடமே உள்ளது. இந்த குற்ற செயலுக்கு காரணமான அரசே, பாதிக்கப்படும் பொதுமக்களை தண்டிக்கவும் செய்வது இரட்டை தண்டனை (DOUBLE JEOPARDY) ஆகும்.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காவலர்கள் நடந்துகொள்ளும் முறை மிகவும் அநாகரீகமானது. வேறு வழியின்றி பேருந்தின் படிக்கட்டில் தொங்கிகொண்டு செல்பவர்களை, திருடர்களை போல கையாள்வதும், அவர்களை அடிப்பதுமாக காவலர்களின் “ஜபர்தஸ்து” அரங்கேற்றப்படுகிறது.

இதே போன்ற தவறான கண்ணோட்டம்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் நிலவுகிறது. காரணம் என்னவென்றால் சாதாரண நகரப்பேருந்துகளில் பயணம் செய்து படிப்பவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகக்கூட பணியாற்ற முடியாது என்ற நிலை நிலவுவதே.மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறையாக சட்டம் படிப்பவர்களுக்கே அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்கள் யாரும் நகரப்பேருந்தில் ஏறிப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர்களின் கண்ணோட்டத்தில் பேருந்து பயணிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும், கீழானவர்களாகவுமே தெரிவார்கள்.

இவர்கள்தான் “மக்களுக்காக சட்டம்” என்பதை மறந்துவிட்டு, “சட்டத்திற்காக மக்கள்” என்ற நிலையை நடைமுறைப்படுத்துகின்றனர். இதன் விளைவாகவே மேலேக் கூறப்பட்டதைப்போன்ற தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. 42 பேர் மட்டுமே செல்லக்கூடிய பேருந்தில் 90 பேர் பயணம் செய்ய வேண்டிய அவல நிலையை ஏற்படுத்திய குற்றவாளியான அரசு எந்தவிதமான விசாரணையும் இன்றி தப்பி விடுகிறது.

நீதித்துறையிலும் இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டு அரசுப்பள்ளியில் படித்து, பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி ஆனால்தான் இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கான நீதிமன்றங்களாக இருக்கும்.-சுந்தரராஜன்
(Sundararajan@lawyer.com)

Tuesday, August 21, 2007

கிரெடிட் கார்ட் அராஜகம் - சிக்கியது SBI-GE கூட்டணி

சென்னை, ஆக.21-

சென்னை கிரெடிட் கார்டு ஏஜென்சி ஊழியர் கைது செய்யப்பட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு விவகாரங்களை "ஜி.ஈ. கண்ட்ரிவைடு" என்ற ஏஜென்சி நிறுவனம் கவனித்து வருகிறது. கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தாதவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுப்பது இந்த நிறுவனத்தின் வேலையாகும். இந்த நிறுவனம் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ளது.

நேற்று இந்த நிறுவனத்திலிருந்து டெலிபோனில் பேசி பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை அமீனா கார்த்தி என்பவரை மிரட்டியுள்ளனர். அமீனா கார்த்தி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.15 ஆயிரத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை வசூலிப்பதற்காக சென்னை வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் பேசுவதாக போனில் பேசி மிரட்டியுள்ளார். இதுபற்றி அமீனா கார்த்தி வடக்கு கடற்கரை போலிசில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார். துணை கமிஷனர் சூடேஸ்வரன், உதவி கமிஷனர் ராஜகோபாலன் (பொறுப்பு) ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்ட்ர் செல்வமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இன்ஸ்பெக்டர் பெயரில் மிரட்டியதாக "ஜி.ஈ. கன்ட்ரிவைடு" ஏஜென்சியின் ஊழியர் கவுதம் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 மிரட்டல் ஊழியர்களை போலிசார் தேடி வருகிறார்கள். பணத்தை வசூல் செய்வதற்காக போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரை தவறாக பயன்படுத்தியதாக இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

***

சிக்கியது யானையின் வாலில் உள்ள சிறு மயிர்தான். கிரெடிட் கார்டு வணிகம் முழுமையாகவே இது போன்ற மோசடி மற்றும் மிரட்டல் முறையிலேயே நடைபெறுகிறது.

பொதுமக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இதுபோன்ற சமூக அநீதிகளை கட்டுப்படுத்தும்.

-மக்கள் சட்டம் குழு


Monday, August 20, 2007

அவுட்சோர்சிங் - (வங்கி) நிர்வாகங்களின் துருப்புச் சீட்டு

பிரிட்டனில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக உள்ள விதவைக்கு வங்கிப் பணி முக்கியமா, மலேசியாவிலோ, இந்தோனேசியாவிலோ குடும்பத்தில் வருமானத்தை ஈட்ட சக்தி உள்ள ஒரே நபரான இளம் பெண்ணுக்கு அந்தப் பணி முக்கியமா? இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது இத்தாலியில் நடந்த ‘ஒர்க்ஷாப்’ பில். ‘அவுட்சோர்சிங்’ கிற்குள் இத்தனை விஷயமிருக்கிறது. இந்தியர்கள் ஏன் வேறு நாட்டுத் தொழிலாளர்கள் பணிகளைத் தாம் செய்ய முன்வரவேண்டும் என்று மேற்கத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டனர்.


-பி. இந்திரா, துணைத் தலைவர், சிஐடியு - தமிழ்நாடு
(இத்தாலி பயண அனுபவக் குறிப்புகளிலிருந்து)


வளர்ந்துவிட்ட தொழில் யுகத்தில் லாபத்தைப் பெருக்கக் கையாளப்படும் வழிமுறைகளில் OUTSOURCING என்பது தற்சமயம் உலகெங்கிலும் பிரதானமாக வியாபித்துள்ளது. ஒரு நிறுவனம் அதனுடைய சில பணிகளையும் தானே மேற்கொள்ளாமல் அதை வெளி அமைப்புகள், நிறுவனங்கள் மூலம் முடித்துக் கொள்வதுதான் OUTSOURCING என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்பை உறிஞ்சி தங்களுடைய லாப வேட்டையை பெருக்குவதற்குப் பயன்படுத்துகிறது.


உதாரணத்திற்கு அமெரிக்காவில் கால் சென்டர்களில் பணிபுரிவோருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 525/- கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே பணிக்கு இந்தியாவில் ரூ. 45/- கொடுத்தால் போதுமானது. வேலை வாய்ப்பு என்ற எலும்புத்துண்டை வீசிவிட்டு எத்தகைய உழைப்பு சுரண்டல் அமோகமாக அரங்கேறுகிறது பாருங்கள்.


இதில் மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளேயே போட்டி வேறு, இந்திய வங்கித்துறையை சுபளீகரம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் அந்நிய நிதி நிறுவனங்களின் வசதிக்காக மத்தியிலுள்ள அரசு சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரால் பல சீரழிவு வேலைகளில் இறங்கியது.

ஆனால் ஏதோ நல்ல காலமாகத் தொடர்ந்து வந்த அரசுகளுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததாலும் இடது சாரிகளின் பலத்த எதிர்ப்பினாலும் தான் நினைத்த வேகத்தில் காரியங்களை நேரடியாக நகர்த்த முடியாமல் தவிக்கிறது. அதனால் கொல்லைப் புற வழியாக இந்திய பொதுத்துறை வங்கிகளின், தனித்துவத்தைத் தகர்க்கும் முகமாக பல வேலைகளில் ஒன்றாகத்தான் OUTSOURCINGஐ நுழைக்க முற்படுகிறது.


ஏற்கனவே பல வங்கிகள் தங்களது பல்வேறு துறை வேலைகளை-உதாரணத்திற்கு காசோலை பட்டுவாடா, தானியங்கி பராமரிப்பு- பணம் வைப்பது உட்பட, CREDIT CARD வசதியை தனியாக ஒரு நிறுவனம் மூலம் செய்வது போன்ற பல பணிகளை-தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. சில வங்கிகளில், பணி நியமனம் இல்லாத நிலையில், கிராமப்புற கிளைகளில் சொற்ப தொகுப்பூதியத்தில் வேலையில்லா இளைஞர்களை வங்கிப் பணியில் ஈடுபடுத்துவது நடக்கிறது. இவர்களுக்கு எந்த வித பணிப் பயன்களோ, பணிப் பாதுகாப்போ கிடையாது. மேலும் தற்சமயம் கிராமப்புற கிளைகள் வரை கணினி மயமாக்கப்பட்ட பிறகு இவர்கள் பல சமயங்களில் நிரந்தர ஊழியர்களின் கணினி ரகசிய குறியீட்டில் (PASSWORD) வேலை செய்வது என்பது சாதாரண நிகழ்வு. இதனால் ஏற்படும் அபாயத்தை ஊழியர்கள் உணராமல் இது நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் கொடுமை, சில கிராமிய வங்கிகளில் வேலை பளு தாங்காமல் ஊழியர்களே தங்களுடைய சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வெளியாட்களுக்குக் கொடுத்து சில பணிகளை முடித்துக் கொள்ளும் அவல நிலையும் உள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிற சூழலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செல்லும் போது அந்த இடத்தை நிரப்ப சொற்ப தொகுப்பூதியத்திற்கு அவர்களை தொழிலாளர்களுக்கெதிராக திருப்பவும் வசதியாக உள்ளது.


1980 களில் கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது கரூரில் உள்ளூர் இளைஞர்களைத் திரட்டிக் ‘கொடுக்கிற சம்பளத்திற்கு வேலை செய்யத் தயார்' என்று கோஷமிட வைத்து ஊழியர்களை மிரட்டும் சதிமுயற்சி நடந்தது. 2003 ஜூலை 2 அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் போது ரூ. 4000 சம்பளத்திற்குப் புதிய ஆட்களை பணியில் நியமித்தது மாநில அரசு. சமுதாயத்தில் வேலையில்லாதவர்களை வேலையில் உள்ளவர்களுக்கெதிராக அணி திரட்டுவதற்கு OUTSOURSING என்கிற ஆயுதம் நிர்வாகங்களுக்கு உள்ள துருப்புச்சீட்டு.


வங்கிகளின் தொழில் நுட்ப மேம்பாட்டின் ஒரு அங்கமாக CBS என அழைக்கப்படும் CORE BANKING SOLUTIONS தற்போதைய வடிவம். இதற்குண்டான மென்பொருளை பல வங்கிகள் ரூ.500 கோடி, 600 கோடி கொடுத்து பல மென்பொருள் நிறுவனங்களிடமிருந்து பெறுகிறது. (வங்கித்துறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டும் ஊழியர்களை வைத்தே மென்பொருளை உருவாக்கி வெகு சிறப்பாக இயங்குகிற நிலையில், மற்ற வங்கிகளில் சாத்தியமில்லையா என்கிற கேள்வி எழுவது இயற்கையே. ஆக இந்த கோடிகள் எந்த விழலுக்கு இறைக்கின்ற நீராகப் போகின்றது என்பது புரியாத புதிர்) இருப்பினும் ஊழியர்களின் அனுபவமோ கசப்பாகவும் சோகமாகவும் உள்ளது. இதை பயன்படுத்தும் வங்கித்துறையில் OUT SOURCING ஐ துரிதப்படுத்தும் அரசின் கொள்கையை நிறைவேற்றுமுகமாக வங்கிகளின் வங்கியாக உள்ள ரிசர்வ் வங்கி பல துறைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டது. பல கேந்திரமான துறைகள் மூடப்பட்டுவிட்டன.


இது இந்திய நாட்டிற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் இந்திய வங்கித்துறையை மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்தையே மறைமுகமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் சக்திகளின் ஏற்பாடேயாகும்.

இதன் தொடர்ச்சியில்தான் ரிசர்வ் வங்கி 2006 ஜனவரியில் அனைத்து வங்கிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில் வங்கிகள் BUSINESS FACILITATOR மற்றும் BUSINESS CORRESSPONDENTகளை நியமித்து கொள்ளலாம் என்றும், யார் யாரை எப்படி நியமித்துக் கொள்ளலாம். அவர்களின் பங்கு பாத்திரம் என்ன என்றெல்லாம் பற்றி தெளிவாகக் கூறியுள்ளது.

அதற்கு ஈடாக அந்த வங்கிகள் ஒரு நியாயமான கமிஷன் மற்றும் கட்டணம் கொடுக்கவும் கூறியுள்ளது.

அத்தகைய நிறுவனங்கள் ஏறக்குறைய அனைத்து வங்கிப் பணிகளையும் கையாளுவதற்கு வழி வகை செய்கிறது. அதாவது ஒரு இணையான வங்கி நிர்வாகமே எந்தவித பொறுப்புமின்றி நடத்தப்படுவதற்கு உதவி செய்கிறது. ஆனால் இந்த ஏற்பாட்டின் மூலம் வாடிக்கையாளரின் முகத்தையே பார்த்திராத வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை இந்த நிறுவனங்களின் செயல்களுக்கு பொறுப்பாக்குகிறது.


இதன் நோக்கம் மிகவும் தெளிவு. இந்த நிர்ப்பந்தங்களின் மூலம் நிரந்தர ஊழியர்களைப் பணியை விட்டு விரட்டுவதற்கான ஏற்பாடுதான். வங்கி ஊழியர்கள் முறையாக அணி சேர்ந்துள்ளதும் அதன் பால் அவர்களின் கூட்டு பேர உரிமையும் ஆட்சியாளர்களுக்குக் பெரும் தடைகளாக உள்ளன. அதை சிதைப்பதற்கான ஒரு வழியாகவும் இது இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

ரிசர்வ் வங்கியின் இந்தத் தாக்கத்தின் தொடர்ச்சியாக பாரத ஸ்டேட் வங்கி இத்தகைய ஏஜென்சிகளை நியமிப்பதற்கு ஒரு வழிமுறையைத் தொகுத்து சுற்றுக்கு விட்டுள்ளது. ஆகவே இந்த நோய் விரைவில் மற்ற வங்கிகளையும் பிடித்து வங்கித்துறையை ஒரு குழப்பத்தில் தள்ளி ஒட்டுமொத்த வங்கித்துறையையே சீர்குலைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன.


இதைத்தான் அந்நிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும், எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் வங்கி ஊழியர்களின் நிலைமையும் ஒட்டுமொத்த வங்கித்துறையின் எதிர் காலமும் பெரும் கேள்விக்குறியாக மாறும் என்பது திண்ணம். ஆகவே வங்கி ஊழியர்களின் மற்ற கோரிக்கைகளைக் காட்டிலும் அவுட்சோர்சிங் எதிர்ப்பு எந்த வடிவிலும் வங்கித்துறையில் நுழைய அனுமதி மறுப்பது, அதற்கான இயக்கங்களை கட்டுவது என்பது வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் முன்னால் உள்ள ஆகபெரும் கடமையும் சவாலுமாகும்.-ஜீ.ஆர்.ரவி
நன்றி :

ஜூலை, 2007

மோசடிகளின் முழு உருவமாக மாறிவரும் தனியார் வங்கிகள்.

வங்கியின் பணம் பெறுவதற்கு கட்டணம் வசூலிப்பார்களா? இந்தியாவில் பெருகி வரும் தனியார் வங்கிகளின் கேஷ் கவுன்டர்களில் பணம் செலுத்தினால் அதை பெற்றுக்கொள்ள கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஆமாம். கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பில் தொகையை பணமாக செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகையை செக்காக செலுத்த வசதி வைத்துள்ளார்களாம்; எனவே கவுண்டரில் பணமாக செலுத்தினால் கட்டணம் வசூலிப்பார்களாம். செக்காக செலுத்தினால் என்ன ஆகும்? உங்கள் கடனை கட்டுவதற்கு கடைசி நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக செக்கை கலெக்ஷன் பாக்ஸில் போட வேண்டுமாம். அப்படியென்றால் கடைசி நாள் என்பதற்கு என்ன அர்த்தம்? சரி. செக்காக செலுத்தலாம் என்றால் அதற்கு ரசீது கிடையாது. எனவே நீங்கள் செக் கொடுத்ததற்கு அத்தாட்சி கிடையாது. எனவே அவர்கள் சவுகரியப்பட்டபோது (தாமதமாக) அந்த செக்கை கலெக்ஷனுக்கு அனுப்புவார்கள்.

பிறகு தாமதக்கட்டணம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பார்கள். ஆக மக்களிடம் கொள்ளை அடிப்பது ஒன்றே லட்சியம். ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள், அவர்களிடமிருந்து எத்தனை கோடி ரூபாய்கள் இவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்று எண்ணிப்பாருங்கள்.

இவ்வாறு மக்கள் மீது சுமத்தப்படும் கொடுஞ்சுமையால் மக்கள் கடன் தவணை கட்டத்தவறும் போது நடக்கும் அராஜகங்கள் அனைவருக்கும் தெரியும்.

இதற்கான தீர்வுதான் என்ன? இந்த தீர்வை அடைவதில் உங்கள் பங்கு என்ன?

-மக்கள் சட்டம் குழு

Friday, August 17, 2007

பிரபல வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு...???!!!

நாணயம் விகடன் ஆகஸ்ட் 31 இதழில் வெளிவந்த செய்தி:சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் பிரபல வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கி அதன் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டதால் எந்த நேரத்திலும் வங்கியில் பணம் எடுக்க முடியும்.

வாசகரின் தங்கைக்கு காலேஜ் பீஸ் கட்டணம் கட்டுவதற்காக 2,000 ரூபாயை எடுத்து கொடுத்தனுப்பியுள்ளனர். அந்த தொகையில் ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி ஏற்க மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். வேறு 500 ரூபாயை கொடுத்துவிட்டு வங்கிக்கிளையில் போய் புகார் செய்யப்போனார், வாசகர். “இந்த நோட்டு எங்க ஏடிஎம்-மில் எடுத்த நோட்டுங்கறதுக்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டுள்ளனர் வங்கி அதிகாரிகள். கோபத்தில் அந்த கள்ள நோட்டை கிழித்து எறிந்துவிட்டு நாணயம் விகடன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார், வாசகர்.

நாணயம் விகடன் செய்தியாளர் உடனே அந்த வங்கிக்கிளைக்கு சென்று விசாரித்தபோது, “இந்த விஷயத்துக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது சார். அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு வர வாய்ப்பில்லை என்பதுதான் எங்கள் பதில்” என்று வங்கி அதிகாரிகள் முடித்துக் கொண்டனர்.

நாணயம் விகடனின் விசாரணையில், சார்பதிவாளர் அலுவலக வட்டாரம் ஒன்றின் அருகே உள்ள வங்கி ஏடிஎம்-மிலும் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழங்குவதாக தெரிய வந்துள்ளது.

நாணயம் விகடன் செய்தியாளர், இந்த விசாரணையின்போது இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் துணை பொது மேலாளர் சுசித்ரா சவுத்ரியையும் சந்தித்திருக்கிறார். வங்கி ஏடிஎம்-களில் கள்ள நோட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் உறுதியாக மறுக்கவில்லை. மேலும், “வங்கி ஏடிஎம்-களில் கள்ளநோட்டு கிடைத்து, அதை வங்கி மறுத்தால் போலிஸில் புகார் கொடுக்கலாம். நேரடியாக ரிசர்வ் வங்கியிலும் புகார் கொடுக்கலாம். தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று சுசித்ரா சவுத்ரி கூறியுள்ளார்.

மற்றொரு நண்பர் ஒருவர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல ஐந்தெழுத்து வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். 1500 ரூபாயை எடுக்க அவர் முயற்சி செய்தபோது வெறும் 500 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. ஆனால் கணக்கில் 1500 ரூபாய் குறைந்து விட்டது. டெலிபாங்கிங் மூலமாகவும், நேரிலும் சென்று புகார் செய்தும் பலனேதும் இல்லை. காவல்துறையில் புகார் செய்ய முயற்சித்தால் அவ்வளவு பெரிய வங்கி 1000 ரூபாயை திருடுமா? கம்ப்யூட்டர் பொய் சொல்லுமா? என்று கேள்வி கேட்டு நண்பரை கிண்டல் செய்து அனுப்பி விட்டனர்.

இது போன்ற பிரசினைகளில் நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ சிக்கியிருக்கக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டால் ரிசர்வ் வங்கியை அணுகி இந்த பிரசினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ள முடியும்.-மக்கள் சட்டம் குழு

ICICI அராஜகங்கள்

யாதய்யா ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆந்திர பிரதேச அரசின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையின் (`டி’ பிரிவு) எலெக்ட்ரீஷியன். ரூபாய் 15,000 அற்பக் கடனுக்காக உயிரைப் பறிகொடுத்து விட்டார். இல்லையில்லை, அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக ஐசிஐசிஐ வங்கியின் `வசூல் ராஜாக்கள்’ அவர் உயிரை பலி வாங்கி விட்டனர்.


இந்த மே மாதம் 22ம் தேதியன்று எலைட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆசாமிகள் யாதய்யாவைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அவர் வேலைக்குப் போய்விட்டதை அறிந்து, அவரது புகைப்படத்தை வாங்கிக் கொண்டு நண்பகல் நேரத்தில் அலுவலகத்தில் அவரைக் கண்டுபிடித்துத் தமது அலுவலகத்திற்கு ‘தூக்கி’ வந்து விட்டனர்.


15,000 ரூபாய் கடனுக்காகத் தாம் மிரட்டப்படுவதாக மனைவி சுனந்தாவை தொலைபேசியில் அழைத்துச் சொல்லி, எப்படியாவது ‘பணத்தைத் திரட்டு’ என்று புலம்பி இருக்கிறார் யாதய்யா. அவர் அதற்காக அலைந்து கொண்டிருக்கும்போது 2 மணி போல மைத்ரி மருத்துவமனையில் இருந்து ‘யாதய்யா இறந்துவிட்ட’ செய்தி வருகிறது சுனந்தாவிற்கு. அந்த பேதைப் பெண் என்ன துடிதுடித்திருப்பாள் பாருங்கள்.


ஐசிஐசிஐ ஏஜெண்டுகள் தமது கணவனைக் கொன்று விட்டனர் என்று அவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், பஞ்சகட்டா காவல் நிலைய ஆய்வாளர் ஜி. நரசய்யா, எலைட் நிறுவனத்தின் பங்குதாரர் ராஜாவையும் அவனுடன் சென்ற இன்னும் 3 பேரையும் கைது செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், குற்றத்தை ஐசிஐசிஐ வங்கி மூடி மறைக்கப் பார்க்கிறது. யாதய்யா பணத்தைச் செலுத்த எலைட் அலுவலகம் வந்ததாகவும், திடீரென்று ‘வலிப்பு’ வந்து கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டுவிட்டதாகவும், மருத்துவமனைக்கு விரைவாக அவரை அழைத்துச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஜோடிக்கின்றனர் ஐசிஐசிஐ வங்கியும் ‘எலைட்’ வசூல் கும்பலும்.

ஐசிஐசிஐ நிர்வாகத்தின் ‘டார்ச்சர்’ கதை புதியதல்ல. இணையதளத்திற்குள் சென்றால் இவர்கள் செய்யும் ‘ராவடி வேலை’ வெட்ட வெளிச்சமாகும். இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் தினசரிகளில் பெயரே சொல்லாமல் ஒரு ‘தனியார் வங்கி’ என்றுதான் இத்தகைய செய்திகள்- இந்தச் செய்தி உள்பட-வருகின்றன. செல்வாக்கு உள்ளவர்களைக் காப்பாற்றும் பத்திரிகை தர்மம் போலும்!

புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஆட்டோ, உருட்டுக்கட்டை சகிதம் வசூல் ஏஜெண்டுகளை நியமிப்பது பலமுறை வெளியாகி கடும் கண்டனத்திற்கு ஆளாகியும் அவர்கள் திருந்துவதாக இல்லை.உச்சநீதிமன்றத்தில் 06.02.07 அன்று நீதியரசர்கள் ஏ. ஆர். லட்சுமணன், அல்த்மஸ் கபீர் இருவரடங்கிய ‘பெஞ்ச்’, இப்படியான குண்டர் முறை கடன் வசூல் முறைகளைக் கடுமையாக எச்சரித்து முடிவிற்குக் கொண்டுவர பணித்தது. உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் இந்த வழக்கில் ஐசிஐசிஐ வங்கி உயர் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கும் பதிவாகியுள்ளது என்று BEFI-TN பொதுச் செயலாளர் அ. ரெங்கராஜன் குறிப்பிடுகிறார்.


28/6/07 அன்று அவர் விடுத்துள்ள பத்திரிகை குறிப்பில், யாதய்யா கொல்லப்பட்டிருக்கும் ஹைதரபாத் நகரில் மட்டுமே இந்த வங்கிக்கு எதிராக 160 புகார்கள் பதிவாகி உள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. ‘ஏஜெண்டுகள் செய்வதற்குத் தாம் பொறுப்பில்லை’ என்று இவர்கள் கை கழுவுவதை விட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கும் ரெங்கராஜன், கோடி கோடியாய் வங்கிக் கடன் ஏய்க்கும் பெரும்புள்ளிகள் சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் இருப்பதும், சொற்பத் தொகைக்காக கீழ்மட்ட மனிதர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதும் அராஜகமானது என கொதிக்கிறார்.


யாதய்யா கொலையுண்ட செய்தி அறிந்து அடுத்த நாளே பெங்களூரில் ஐசிஐசிஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கும் `கிரெடிட் கார்டு வைத்திருப்போர் சங்க’ பொதுச் செயலாளர் சி.வி. கிதப்பா இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து' செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார். சங்கத்தின் ஹைதராபாத் கிளையின் தலைவர் பிவிஎஸ்பி சவுத்ரியும் கண்டித்திருக்கிறார். ஆந்திரபிரதேச மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பி. சுபாஷன் ரெட்டி பத்திரிகை செய்திகளை வைத்தே விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.


வங்கித்துறை சீர்திருத்தம் பற்றி புளகாங்கிதம் அடைந்து புல்லரிப்போர்க்கு இதெல்லாம் பொருட்டாகத் தெரிவதில்லை. கடுமையான நடவடிக்கையை ஜனநாயக சக்திகளே போராடி உறுதி செய்யமுடியும். யாதய்யாவின் மரணம் இன்னொரு செய்தியாகிப் போய்விடக்கூடாது.-எஸ்.வி.வி


நன்றி:
ஜூலை 2007

Thursday, August 16, 2007

நிஜமான என்கவுன்டர் – நீங்களும் நிகழ்த்தலாம்...??!!

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள்.

ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்கு பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.

வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதை பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது.

ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

சட்டம் வழங்கும் தற்காப்புரிமை

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது.

இந்த உரிமையை பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத்தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல் தற்காப்புரிமை

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை
பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள
உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.

பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-

(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.

2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால்,-

(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது.

காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மை கைது செய்தால் அது நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்த செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும்.

ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும்.

வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.

மரணம் விளைவிக்கலாமா?

பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.
\
1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,

2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,

3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,

4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,

5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,

6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.

பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப்பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும்.


எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன் படுத்தலாம்.

அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத்தெரியும் போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது.

தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல.

இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக்கண்டு தப்பியோடும்போது அவரைப்பிடித்து தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முடற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்துவைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

சொத்து தற்காப்புரிமை

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.

பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.

பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.

திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.

குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.

இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.


பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது.

இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான்.

பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.

இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.
-சுந்தரராஜன்

Wednesday, August 15, 2007

வழக்குகள் சந்திக்கும் வன்கொடுமை!

இந்திய நாட்டின் விடுதலை - அரசியல் விடுதலை என்றபோதிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் முதலில் அது ஒரு சமூக விடுதலையைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதினார் அம்பேத்கர். எனவேதான் ‘தீண்டாமைக்கு எதிரான உரிமை' என்பதை அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பகுதியில் (பிரிவு 17) இணைத்தார். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் அம்பேத்கர் இடம் பெறாமல் இருந்திருந்தாலோ, தமது சட்ட அறிவின் வலிமையினால் இது குறித்து வலியுறுத்தாமல் இருந்திருந்தாலோ, இவ்வுரிமை அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காது.‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு, அதன் நடைமுறை வடிவங்கள் யாவற்றுக்கும் தடைவிதிக்கப்படுகிறது; தீண்டாமை அடிப்படையில் எந்த குறைபாட்டையும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 கூறுகிறது. தீண்டாமை ஒழிப்பு வெற்றுப் பிரகடனமாக மாறிவிடாமல் இருக்கவும் அதை நடைமுறைப்படுத்திடவும் 1955 இல் நாடாளுமன்றம் ‘தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை' நிறைவேற்றியது. பின்னர், இது 1976 இல் ‘குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.தீண்டாமையை ஒரு சமூகக் குற்றம் என்ற அளவில்தான் இச்சட்டம் கருதியது. பொது இடங்களைப் பயன்படுத்துதல், பொதுக் கிணறு, நீர்நிலைகளிலிருந்து நீர் எடுத்தல் போன்றவற்றில் ஒடுக்கப்பட்டோருக்கு சம உரிமை வழங்கிடும் விதமாக, இதுபோன்ற நடவடிக்கைகளில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதை குற்றமாகக் கருத வேண்டும் என்றும், அக்குற்றத்தை இழைப்பவருக்கு 1 மாதத்திற்கு குறையாத 6 மாத காலம் வரையிலான சிறைத் தண்டனை, ரூ. 100க்குக் குறையாத ரூ. 500 வரையிலான அபராதம் விதிக்கலாம் என்றும் இச்சட்டம் கூறியது. சாதிய ஒடுக்குமுறையைக் கடைப்பிடிப்பவர் களை எளிய/குறைந்த தண்டனையைக் காட்டி மனமாற்றம் செய்வதன் மூலம் - தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் கொண்டு வரப்பட்டதுதான் இச்சட்டம்.ஆனால், பன்னூறு ஆண்டுகளாக வேர்விட்டுத் தழைத்தோங்கியிருக்கும் இந்து மனம், இச்சட்டம் போன்ற சில வெந்நீர்த் துளிகளால் துவண்டுவிடாமல் புதிய உத்திகளின் மூலம் பல்வேறு வன்கொடுமைகளைத் தொடர்ந்து இழைத்து வருகின்றது. இந்நிலையில்தான், 1989 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் - ‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை' இயற்றியது. இச்சட்டத்தின் நோக்கங்கள் பகுதியில் இடம் பெறும் கீழ்க்கண்ட வாசகங்கள், மனசாட்சி யுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனை யும் முகத்திலறையச் செய்யவல்லன:‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரிடையே கல்வி போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அவர்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தும் முயற்சியில் துணைபுரிந்துள்ளது என்றாலும், அது மற்றவர்களால் மிக தன்மையாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தும்போதும், அவர்களுக்கு எதிராக தீண்டாமை கடைப்பிடித்தலை எதிர்க்கும்போதும் அல்லது சட்டப்படியான குறைந்தபட்ச கூலியை கேட்கும்போதும் அல்லது கொத்தடிமை மற்றும் கட்டாய வேலை செய்ய மறுக்கும்போதும் ஆதிக்க சக்திகள் அவர்களை அடிபணியச் செய்யவும், மிரட்டவும் முயல்கின்றனர். அவர்கள் தங்கள் சுயமரியாதையையோ, தங்கள் பெண்களின் மானத்தையோ காத்துக் கொள்ள முயல்வதும், வலிமை வாய்ந்தவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைகிறது. அரசு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிலங்களைப் பயன்படுத்துவதும், பயிரிடுவதும்கூட வெறுப்புணர்வுடன் பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், பல நேரங்களில் இம்மக்கள் ஆதிக்கச் சக்திகளின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.‘சமீப காலமாக, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை மனித மலம் போன்ற உண்ணத் தகாதவைகளை உண்ணச் செய்வது, தாக்குதலுக்குள்ளாக்குவது, பிரிவு எண்ணிக்கையில் கொலை செய்வது மற்றும் இச்சாதியைச் சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற குறிப்பிட்ட வன்கொடுமைகள் அதிகரித்து வரும் போக்கினை காண்கிறோம். இச்சூழ்நிலையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 1976 போன்ற சட்டங்களும், இந்திய தண்டனைச் சட்டத்தின் சாதாரண பிரிவுகளும் இவ்வகையான குற்றங்களைத் தடுக்கும் அளவிற்குப் போதுமானவையாக இல்லை. எனவேதான், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரல்லாத நபர்கள் இழைத்திடும் குற்றங்களைத் தடுக்கவும், அச்சுறுத்தவும், ஒரு சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது."1955 ஆம் ஆண்டு சட்டத்தைப் போல் எளிய தொனியில் இல்லாமல் 1989 ஆம் ஆண்டு சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான 22 வகையான சாதிய வன்செயல்களை ‘வன்கொடுமை' என்று வரையறுத்து கடுமையான தண்டனையைப் பரிந்துரைக்கிறது. இச்சட்டம் குறிப்பிடும் வன்கொடுமையை இழைக்கும் பட்டியலினத்தவரல்லாத, பழங்குடியினரல்லாத நபர் - 6 மாதங்களுக்குக் குறையாத 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை, மரண தண்டனை வரையிலான தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கடவர். இச்சட்டம் ஒரு சிறப்புச்சட்டம் என்பதால், இச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, மாவட்ட நீதிமன்றத் தகுதியிலான அமர்வு நீதிமன்றத்தை சிறப்பு நீதிமன்றமாக நியமித்து, சிறப்பு கவனம் செலுத்த பிரிவு - 14 வலியுறுத்துகிறது.


பிரிவு 15 இன்படி, இவ்வழக்குகளை நடத்த சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் குறிப்பாகக் கோரும் பட்சத்தில் புகழ்மிக்க, தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞரை சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞராக அரசு நியமிக்க வேண்டும் என்றும் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள, 1995 ஆம் ஆண்டு விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இவ்வகை வழக்குகளை புலன் விசாரணை செய்யும் அலுவலர், காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அலுவலராக இருக்க வேண்டும் என்கிறது.இச்சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 7 ஆம் விதி, அப்படி நியமிக்கப்படும் காவல் துணைக் கண்காணிப்பாளரும், அவருடைய கடந்தகால அனுபவம், பணியில் அவருக்குள்ள கடமையுணர்வு ஆகிய தகுதிகள் வாய்க்கப் பெற்றவராக இருக்க வேண்டும் என்கிறது. அதனடிப்படையில் பார்த்தால், இச்சட்டத்தின் கீழ் வரப்பெறும் புகார்களை புலன் விசாரணை செய்யத் தகுதிவாய்ந்த அலுவலர் அரிதாகவே கிடைக்கப் பெறுவர். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட வன்கொடுமைத் தடுப்புக் கண்காணிப்புக் குழுவும் பெயரளவில்தான் உள்ளது.ஆனால், வன்கொடுமைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பாக, தமிழகம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினர் - ‘இச்சட்டத்தில் பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக' தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சட்டத்தின் கீழ் பொய்வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், அச்சட்டத்தையே நீக்க வேண்டும் என்பதுதான் சரியான தீர்வு என்றால், இந்தியாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் அனைத்துச் சட்டங்களும் நீக்கப்பட வேண்டியவைதான்! குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை விடுவித்து நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள், அவ்வழக்கை ஏதோ ஒரு விதத்தில் பொய்யாகத் தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதிதான் விடுதலை வழங்கு கின்றன என்பதைப் பார்க்கும்போது - இந்த வாதம் எவ்வளவு அபத்தமானது, விஷமத்தனமானது என்பது புரியும்.1989 ஆம் ஆண்டு சட்டத்தைப் பற்றி விவரிக்கவும், விவாதிக்கவும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையும், நீதிபரிபாலனம் செய்ய வேண்டிய நீதித்துறையும் - சாதிய மேலாண்மைத் தாக்கத்தால், இச்சட்டத்தைச் செயலிழக்க வைக்கக் கையாளும் சட்ட மீறல், நீதி பிறழ்வு பற்றியதை மட்டுமே இங்கு குறிப்பிடலாம்.இச்சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று - வன்கொடுமைக் குற்றம் புரிந்ததாகக் கூறுப்படும் நபருக்கு எதிர்பார்ப்புப் பிணை (முன் ஜாமீன்) வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக (பிரிவு 18) கூறப்படுகிறது. இதன்படி, வன்கொடுமைக் குற்றம் சாட்டப்படும் நபர் கொடியதொரு சமூகக் குற்றம் புரிந்துள்ளவராகக் கருதப்படுகிறார். பொதுவான சட்டவிதியிலிருந்து விலகியிருக்கும் நிலை இது. இப்பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி, வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களால் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ‘மத்தியப் பிரதேச அரசு - எதிர் - ராம்கிருஷ்ணயா பலோத்ரா' (AIR 1995 SC 1198) வழக்கில் உச்ச நீதிமன்றம், இறுதியாக இப்பிரிவின் அரசியலமைப்புத் தகைமையை உறுதி செய்தபோது இவ்வாறு கருத்துரைத்தது:‘தீண்டாமை வழக்கில் வரலாற்றுப் பின்னணியையும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக இழைக்கப்படும் இவ்வகைக் குற்றங்களின் சமூக எண்ணத்தையும் பார்க்கும்போது, இவ்வகை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தாம் பெறும் எதிர்பார்ப்புப் பிணையைத் தவறாகப் பயன்படுத்தி, வழக்கில் பாதிக்கப்பட்ட நபரை பயமுறுத்தவும் முறையான புலன் விசாரணையைத் தடுக்கவும் செய்வார்கள் என்ற அச்சம் நியாயமானது. இந்த அடிப்படையில்தான் பிரிவு 17 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21அய் எவ்விதத்திலும் பாதிப்பதாகக் கருத முடியாது.”இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றமும் இச்சட்டத்தின் பிரிவு 18 அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதல்ல என்று ‘தவம் - எதிர் - அரசு' (1998 (1) crimes 310) வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், புகாரில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் (Allegations) அடிப்படையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் ஈர்க்கப்படாத சூழலில் - அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையினை அடிப்படை ஆய்வு செய்து, எதிர்பார்ப்புப் பிணை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உட்பட, ஒரு சில உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. ஆனால், ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் புதுப்புது உத்திகளைக் கையாள்வது, சாதி இந்துக்களுக்கு கைவந்த கலை. சாதிய மனம் படைத்த அனைத்து அரசு எந்திரங்களும், ஏன் நீதித்துறையும்கூட, ஆதிக்க சாதியினருக்குத் துணை புரியவே தவம் கிடக்கின்றன என்பதற்குப் பல முன்னுதாரணங்களைக் கூற முடியும்.அப்படிப்பட்ட ஓர் உத்திதான், ‘விசாரணை நீதிமன்றத்தில் தோன்றும் தினத்திலேயே பிணை மனு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் பெறப்படும் உத்தரவாகும். இப்படி ஓர் உத்தரவு எந்தவித சட்ட (அல்லது தீர்ப்பு) அடிப்படையுமின்றி, உயர் நீதிமன்றத்தின் பெரும்பாலான நீதிபதிகளால் வழங்கப்பட்டு வருகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், இப்படி ஓர் உத்தரவு எந்தவித அடிப்படை விசாரணையுமின்றி ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு' என்றாலே வழங்கப்பட்டு வருகிறது. மனித மலத்தை தலித்துகளின் வாயில் திணித்த ‘திண்ணியம் வன்கொடுமை' வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்றம், அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு இப்படி ஓர் உத்தரவை வழங்கியது.பாதிக்கப்பட்டோர் சார்பாக இக்கட்டுரையாளர், அவ்வாறு உத்தரவு வழங்குவது - வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கும், அதனை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் எதிரானது என்றும், இவ்வுத்தரவு 1989 ஆம் ஆண்டுச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடைசெய்துள்ள எதிர்பார்ப்புப் பிணை வழங்குவதற்கு ஒப்பாகும் என்றும் (அம்மனுவை விசாரித்தபோது) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால், இம்மாதிரியான உத்தரவு, எதிர்பார்ப்பு பிணை உத்தரவு அல்ல என்றும், வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணை மனுவை அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் தோன்றும் தினத்திலேயே சட்டப்படி முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுவது மட்டுமே என்றும் கூறி, வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக உத்தரவு வழங்கப்பட்டது. இது ஒரு துளிதான். நாள்தோறும் இவ்வாறான உத்தரவுகள் சட்டப் பிரச்சனைகளின்றி வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலை குறித்து நீதிபதிகளுக்குத் தக்கபடி அறிவுறுத்தி, சுற்றறிக்கை அனுப்பி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் நலன் காக்க சமூக அக்கறையுள்ள, மனித உரிமையில் அக்கறையுள்ள வழக்குரைஞர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தணிகாசலத்திடம் மனு அளித்தனர். ஆனால், அதன் பேரில் இன்று வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.வன்கொடுமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முதல் தடைக்கல்லாகத் திகழ்வது காவல் துறையே. முதலில் புகாரைப் பெற்று பதிவு செய்வது என்பது மிகப் பெரும் சுமை, தேவையற்ற வேலை என்று இத்துறையினர் கருதுகின்றனர். அப்படிப் பதிவு செய்யப்படும் புகார்களும் வன்கொடுமைக் குற்றங்களின் ஒரு சிறு எண்ணிக்கையே. பெறப்படும் புகார்களும் வழக்கை வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே பதிவு செய்யப்படுகின்றன. பல நேர்வு களில் வன்கொடுமை குற்றம் செய்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் முதலில் புகார் கொடுத்தாலும், காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து அவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்ப்புகார் தரச் செய்து, அதை முதலில் பதிவு செய்து, வன்கொடுமைப் புகாரை வலுவிழக்கச் செய்கின்றனர்.இத்தகு மோசடியான புகார்கள் மீது விசாரணை என்ற பெயரில் ‘சமரசம்' செய்தும், ஒத்துழைக்காத புகார்தாரரின் புகார் பொய்யானதெனப் புலன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லியும் நடவடிக்கையை முடித்துக் கொள்கின்றனர். அதற்குமேல் புகார்தாரர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பெரிய அளவில் பலன் தருவதில்லை. பெரும்பாலான வழக்குகளில் இதையும் மீறி சட்ட நடவடிக்கையை வலியுறுத்தும் பாதிக்கப்பட்டோரை - அலைக்கழிக்கும் விதமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யாமல் - அவர்களுக்கு அரசும், காவல் துறையும் அரணாக செயல்படுகின்றன.இதுபோன்ற சூழலில்தான், வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, தங்களுக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புகார் பொய்யானது என்றும், அதன்பேரில் தாம் கைது செய்யப்படலாம் என்றும், எனவே விசாரணை நீதிமன்றத்தில் தாம் தோன்றும் (சரணடைதல் என்று சட்ட ரீதியாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவதில்லை) நாளிலேயே தங்கள் பிணை மனு மீது உத்தரவு பிறப்பித்திட, விசாரணை நீதிமன்றத்திற்கு மனு செய்கின்றனர். இவ்வகையான மனு உயர் நீதிமன்றத்தில், எவ்வளவு கொடூரமான வன்கொடுமை வழக்காக இருந்தபோதிலும் அரசுத் தரப்பில் ஆட்சேபம் ஏதுமின்றி, மிக எளிதாக அனுமதிக்கப்பட்டு விடுகிறது. விதிவிலக்காக ஓரிரு நீதிபதிகள் மட்டுமே இதுவரை இதுபோன்ற மனுக்களை ஏற்க மறுத்துள்ளனர். மற்ற மாநிலங்கள் எதிலும் இதுபோன்ற ஒரு நடைமுறை இருப்பதாகத் தீர்ப்புகள் ஏதுமில்லை. சாதாரண, சிறு வழக்குகளிலெல்லாம் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் காவல் துறையினரும், பிணை மனுவுக்கே கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசும், குற்றத்துறை வழக்குரைஞர்களும் இவ்வகை மனுக்களை கிஞ்சித்தும் ஆட்சேபிப்பதில்லை.மேற்படி மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தின் கீழ் (Inherent Power) ஏற்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. இவ்வதிகாரத்தை உயர் நீதிமன்றம் மிகச் சில நேர்வுகளில் மட்டுமே (Sparingly) பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலப்பல வழக்குகளில் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான மிகச் சில நேர்வுகளும் நீதியின் நோக்கத்தையும் சட்டத்தின் நோக்கத்தையும், உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்திடவுமே அமைந்திடல் வேண்டும் என்கிறது, குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 482 ஆம் பிரிவு.ஆனால், இந்நெறிமுறைகளில் எந்தவொன்றையும் சார்ந்திராத நிலையிலும் மேற்குறிப்பிட்ட மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு சட்ட அடிப்படையோ, தீர்ப்பு அடிப்படையோ இல்லை. இதுபோன்ற உத்தரவின் அடிப்படையில், வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வன்கொடுமைச் சட்டத்தையே கேலிக்குள்ளாக்குகின்றனர். எந்த ஒரு செயலை நேரடியாகச் செய்ய சட்டம் தடை செய்துள்ளதோ, அச்செயலை மறைமுகமாகவும் செய்வதை சட்டம் அனுமதிக்காது என்பது சட்டத்தின் அடிப்படை விதி. இவ்விதியும் மீறப்படுகிறது.‘ஒரு பறையன் ஒரு மீட்பராக ஏன் மாறினான் என்பதற்கு, ஆளும் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் என்பதுதான் ஒரே காரணமாகத் தோன்றுகிறது” - The only reason why a pariah becomes a messiah appears to be the change in the ruling pattern. இப்படி யாராவது ஒரு தனிமனிதர் கூறியிருந்தால், அதற்கு எவ்விதமான எதிர்வினை இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் என்பதை கற்பனைகூட செய்ய இயலவில்லை. ஆனால், அண்மையில் 11.10.2006 அன்று, இந்தியத் தலைமை நீதிமன்றம் ஒரு வழக்கில் (எபுரு சுதாகர் - எதிர் - ஆந்திரப்பிரதேச அரசு (2006) 8 SCC 161) வழங்கிய தீர்ப்பில் மேற்கூறிய வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து இதே வாசகத்தை உள்ளடக்கி ‘தி இந்து' நாளிதழில் செய்தி வெளியானபோது, அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் உள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள் பற்றி வழங்கிய தீர்ப்பு அது. அரசியல் காரணங்களுக்காக தண்டனைக் குறைப்பு வழங்கிய ஆந்திர ஆளுநரின் உத்தரவிற்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குதான் அது. இந்தப் பொருளில் அது மிக முக்கியமான தீர்ப்பும்கூட.ஆனால், மேற்கண்ட வாசகம் எந்த அளவிற்கு தலைமை நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர்களின் மனத்தில் சாதியம் குடிகொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றுவரை இதற்கு எவ்விதக் கண்டனத்தையும் எந்த தலித் அமைப்பும், பொது நலவாதிகளும் தெரிவிக்கவில்லை. ‘பறையன்' என்பது பட்டியல் சாதியினரைக் குறிப்பது; அவ்வாறு பிறரை அழைப்பது - ‘பறையன்' என்ற சொல்லையே இழிச்சொல்லாகப் பயன்படுத்துவதாகும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியாது என்றால், அதை நாம் நம்ப இயலுமா? இதைத்தான் நீதித்துறையின் சாதிய மேலாதிக்கம் என்கிறோம்.மேற்கண்ட அநீதிகளெல்லாம் இழைக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம், அண்ணல் அம்பேத்கர் கூறியது போல தலித்துகள் சமூக உணர்வு கொள்ளாததுதான். சமூக உணர் வுடன் அதிகார மய்யத்தை நோக்கி குரலெழுப்பும்போதுதான் - இதுபோன்ற அநீதிகளையும் வன்கொடுமைகளையும் ஒழிக்க முடியும்.


நன்றி :
பிப்ரவரி 2007
-சு. சத்தியச்சந்திரன்


Tuesday, August 14, 2007

மூன்று தலைமுறைகளுக்கு ஆபத்து!

சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் எல்லைகள், எண்ணிக்கைகள் ஆகியவற்றை வரையறுக்கும் வகையில் 1952 ஆம் ஆண்டு மத்திய அரசு ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம்' இயற்றியது. தொகுதி மறுசீரமைப்புச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய அரசால் இயற்றப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு, இதுவரை நான்கு முறை தனியே சட்டம் இயற்றியுள்ளது.

முதல் இரண்டு பொதுத் தேர்தலின்போதும் நடைமுறையில் இருந்த ‘இரட்டை வாக்குரிமை' முறை நீக்கப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ள தனித்தொகுதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002' அடிப்படையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்டும், மத்திய தலைமை தேர்தல் ஆணையரையும், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரையும், மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அய்வரையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அய்வரையும் உறுப்பினர்களாகக் கொண்டு ‘தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்' செயல்படுகிறது.


தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனித்தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், தற்பொழுதுள்ள பல தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. எல்லைகளும் மாநிலம் முழுவதும் பரவலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

‘பட்டியல் சாதியினருக்கான தனித்தொகுதி, மாநிலம் முழுவதும் பரவலாக ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், அந்தந்த பகுதிகளில் பட்டியல் சாதியினர் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் அதிகமாகவும் இருக்கும் தொகுதியாக இருக்க வேண்டும்’ என்று தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002 கூறுகிறது. ஆனால், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கருத்துரையில் – பட்டியல் சாதியினருக்கான 7 நாடாளுமன்ற (தனித்) தொகுதிகளும், தமிழகம் முழுவதும் பரவலாக ஒதுக்கீடு செய்யப்படாமல் (திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம்) வட மாவட்டங்களில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் அமைந்துள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில், தனித் தொகுதிகள் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிராக, தற்போதைய ஒதுக்கீடு அமைந்துள்ளது. சமமின்மையை ஈடுசெய்து, நாடெங்கும் நிலவும் சமமற்ற நிலையை அகற்றுவதே இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கை. தமிழகத்தில் வசிக்கும் 19 சதவிகித பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், குவியலாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில் தனித்தொகுதியானது, மாநிலம் முழுவதும் பரவலாக அமையப் பெறுவதே இயற்கை நீதி. தனித் தொகுதி முறை இந்திய அரசியல் சாசனத்தால், பட்டியல் சாதியினருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளில் தலையாயதாகும். அதன் அடிப்படையில் பட்டியல் சாதியினர் அரசியலில் பங்கேற்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தனித் தொகுதி முறை பட்டியல் சாதியினருக்கு அடிப்படை உரிமையே அன்றி எவரும் மனம் கசிந்து வழங்கும் சலுகை அல்ல.


தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் தமிழக அளவிலான கருத்துரை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவத்தை சீர்குலைப்பதுடன் சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் ஏனைய அடிப்படை மதிப்பீடுகளையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழும் பட்டியல் சாதியினரைப் பொருத்தவரையில், இந்திய அரசியல் சாசனத்தின் விதிகள் 14 மற்றும் 21 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

அரசியல் அமைப்புச் சட்டம் பட்டியலின மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யும் வகை யில் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படை யில் உருவாக்கப்பட்டதே தனித் தொகுதி முறை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்துப் பட்டியலின பிரிவு மக்களும் பங்கேற்பு செய்ய இயலாத வகையில், அனைத்துத் தொகுதிகளையும் ஒரே பகுதியில் மட்டுமே ஒதுக்கியுள்ளது ஓர் உரிமைப் பறிப்புச் செயலன்றி வேறென்ன?


தற்போது, தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் தனித் தொகுதிகளான ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் தென்காசி (தெற்கு) பொள்ளாச்சி, ராசிபுரம் (மேற்கு), நாகப்பட்டினம் (கிழக்கு), பெரம்பலூர் (மத்தி) சிதம்பரம், திருப்பெரும்புதூர் (வடக்கு) என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பட்டியல் சாதியினருக்கும் பிரதிநிதித்துவ வாய்ப்பளிப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் பொது விசாரணை நடைபெறும் என்றும் அதில் வரும் கருத்துகள், ஆலோசனைகள், கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கண்துடைப்பிற்காக தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அறிவித்தது.அந்த அடிப்படையில் 4 மாவட்டங்களுக்கு மொத்த கால அளவு 3 மணி நேரம் (சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 45 நிமிடங்கள் மட்டுமே) ஒதுக்கப்பட்டது. மேலும் 8 மாவட்டங்களுக்கு ஒரே இடத்தில் வைத்து பொது விசாரணை நடைபெற்றதன் காரணமாக, அனைத்துப் பகுதி மக்களும் அதில் பரவலாக பங்கேற்க முடியாமல் போனது.

பொது விசாரணை முடிந்த பிறகு மாநில அளவில் இணைந்த உறுப்பினர்களுடன் அமர்ந்து கலந்தாலோசித்து, இறுதியாக குடியரசுத் தலைவரது ஒப்புதலுடன் செப்டம்பர் மாதம் அரசிதழில் இறுதியறிக்கை வெளியிடப்படும் என தேசிய தேர்தல் ஆணையர் அறிவிப்பு செய்துள்ளார். அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதியறிக்கையை இந்திய நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்த முடியாது என இச்சட்டமும், இந்திய அரசியல் சாசனமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாகக் கூறுகின்றன. அடுத்து 2026 இல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதிகள் மறு சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் வசிக்கும் பட்டியல் சாதியினரில் மூன்று தலைமுறையினர் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


இச்சட்டத்தில் தனித் தொகுதிகளின் சுழற்சி முறை குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் எதிராக, தற்போது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் தமிழக அளவிலான கருத்துருவானது திரும் பப் பெறப்பட்டு, தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பட்டியல் சாதியினர் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், மாநிலத்தின் தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக நாடாளு மன்றத்தின் (தனித்) தொகுதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.


(நன்றி:

ஜூன், 2007)-இராபர்ட் சந்திர குமார்

Monday, August 13, 2007

உயர் நீதித்துறையில் மறுக்கப்படும் பிரதிநிதித்துவம்
சனவரி 14, 2007 - சுதந்திர இந்திய வரலாற்றில் குறித்து வைக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான், இந்தியா சுதந்திரம் பெற்ற 59 ஆண்டுகள் கழித்து, குடியரசாகி 57 ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் தொடங்கி 56 ஆண்டுகள் கடந்து, முதன்முறையாக ஒரு தலித் (கே.ஜி. பாலகிருஷ்ணன்), இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க முடிந்தது. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் போதிய பணிமூப்பும், திறமையும் பெற்றிருந்தும் அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதில் அப்போதிருந்த தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் காட்டிய சுணக்கமும், டாக்டர் கே.ஆர். நாராயணன் அவருக்கு எழுதிய கோப்புக் குறிப்புகளும்கூட, இந்தத் தலைமைப் பதவியை இன்று நீதிபதி பாலகிருஷ்ணன் பெற்றதற்கு ஒரு காரணம்.

பல்வேறு துறைகளைப் போலவே, இந்திய நீதித்துறையிலும் தலித்துகளுக்கு எதிரான மனநிலை என்பது வரலாறு அறிந்த ஒன்று. சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக அ. வரதராஜன் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது (1973), அப்போதிருந்த பெரும்பான்மை வழக்குரைஞர்களான பார்ப்பனர்களில் பலர் - அவரை நீதிபதியாக ஏற்க மறுத்து, அவருடைய வழக்கு மன்றத்தைப் புறக்கணித்ததை மறந்துவிட முடியாது. இந்தப் பின்னணியில்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகிய உயர் வழக்கு மன்றப் பதவிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. குடியரசு என்பது குடிகளால் அமையும் அரசாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மை மக்களான தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண்களை ஒதுக்கி வைப்பது, குடியரசுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்குவதாகும். அரசு என்பது சட்டத் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டதாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், உயர் நீதித்துறையில் மட்டும் (உயர் வழக்கு மன்றங்களான உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்) இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க மறுப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி என்றே கூறலாம்.
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் பிடி இறுகிவரும் இன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் - இவற்றின் தாக்கத்திற்கு நீதித்துறை மட்டும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் ஒடுக்கப்பட்டோரின் நலன்களைப் பாதுகாக்க, உயர் வழக்குமன்றங்களில் பிரதிநிதித்துவம் (இடஒதுக்கீடு) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். டாக்டர் கே.ஆர். நாராயணன், உயர் வழக்கு மன்ற நீதிபதிகளை நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் பெற்றவர் என்ற முறையில், நீதிபதிகள் நியமனத்தில் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அப்போது குடியரசுத் தலைவர் தனது மரபை மீறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நீதித்துறை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 12 இன்படியான ‘அரசு' எந்திரமல்ல என்றும், தகுதி அடிப்படையில் மட்டுமே உயர் வழக்கு மன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், அதில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது, நீதித்துறையின் தரத்தைக் குறைத்துவிடும் என்றும் பல்வேறு புனைவுகள் சொல்லப்படுகின்றன. இந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவைதானா என்பதை ஆய்வு செய்யும் முன், தற்போது நடைமுறையிலிருக்கும் நியமன முறையைப் பற்றி சற்று பார்ப்போம்.
‘நீதித்துறை சுதந்திரம்' இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக, உச்ச நீதிமன்றத்தால் 1973 ஆம் ஆண்டு "கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு' (AIR 1973 SC 1461) என்ற வழக்கில் அடையாளம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல் ‘நீதிபதிகள் வழக்கிலும்' (எஸ்.பி. குப்தா எதிர் இந்திய ஒன்றியம் AIR 1982 SC 149) பின்னர் வந்த இரு வழக்குகளிலும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசிடமிருந்து உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதற்கு முன்னர் அரசுக்கு இருந்த இறுதி அதிகாரத்தை, இவ்வழக்குகளின் தீர்ப்புகள் வழியாக உச்ச நீதிமன்றம் தனதாக்கிக் கொண்டது.

தற்போதுள்ள நியமன முறை முற்றிலும் கமுக்கமானதாகவும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கே அதிர்ச்சி தரும் நியமனங்களை செய்து வருவதாகவும் உள்ளது. இவ்வாறு நடைபெறும் நியமனங்களில் நியமன அதிகாரம் பெற்ற மூத்த நீதிபதிகளிடையே பேரங்கள், விட்டுக் கொடுத்து பெற்றுக் கொள்ளுதல், சார்புத் தன்மை, நீதித்துறை மற்றும் பொது மக்கள் நலன்களைக் கருத்தில் கொள்ளாதது, லஞ்சம் போன்றவை அன்றாடம் கவனத்திற்கு வந்து கொண்டுதான் உள்ளன. நீதிபதி தேர்வில் ஏற்கனவே நீதிபதியாக இருந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அல்லது நியமனத்திற்குப் பரிந்துரைக்கும் நீதிபதியின் தொழிற்பழகுநராக (Junior) இருத்தல் அல்லது அந்நீதிபதியின் சாதியைச் சேர்ந்தவராக இருத்தல் என்ற மூன்று அடிப்படைக் கூறுகளில் ஒன்றை - எந்தவொரு நியமனத்திலும் பெரும்பாலும் காணலாம்.
மேலும், அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகும் நீதித்துறை செயல்பாடு குறித்த செய்திகளும் உயர்வழக்கு மன்ற நீதிபதிகளின் மனப்போக்குகளை தெரிவிப்பதாக அமைகின்றன. வழக்குத் தரப்பினர், அவர்களுக்காகச் செயல்படும் வழக்குரைஞர்கள் ஆகியோரின் சமூக, அரசியல் செல்வாக்கு அடிப்படையிலேயே பெரும்பாலும் தீர்ப்புகள் அமைவதாக மக்கள் பரவலாக உணர்கின்றனர்.தற்போது மாவட்ட நீதிபதி வரையிலான பதவிகளில் இடஒதுக்கீடு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இவை அரசுப் பணியிடங்களாகக் கருதப்பட்டு, மாநில தேர்வாணைக் குழுக்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டாலும், அந்தந்த உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே இத்தேர்வு குறித்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பதவியில் அமர்த்துவது மட்டுமல்ல, பணியின் போது ஏற்படும் குறைபாடுகளுக்கான துறைசார் நடவடிக்கைகூட, உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்தக் கீழமை நீதித்துறை (Subordinate Judiciary) சில குறைபாடுகளுடன் இருந்தாலும், இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதால் மட்டுமே குறையுடையதாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.
கீழமை நீதித்துறையின் தீர்ப்புகளும் தீர்ப்புகளாகவே வழக்குத் தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நீதித்துறையின் அடித்தளமாக இயங்குகின்ற கீழமை நீதித்துறையே அனைத்து விதமான வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கி கையாள்கிறது. கீழமை நீதித்துறையின் செயல்பாடுகளை நீதித் துறையின் இந்தியத் தலைமையே பல்வேறு தருணங்களில் பாராட்டியுள்ளது. மாறாக, உச்ச நீதிமன்றத்தால் அடிக்கடி கண்டனம் பெறுபவை பெரும்பாலும் உயர் நீதிமன்றங்கள்தாம். எனவே, இடஒதுக்கீடு அளிப்பதால், நீதித் துறையின் செயல்பாடு குறைந்துவிடும் என்ற வாதம் தவிடுபொடியாகிறது.

உயர் வழக்கு மன்றங்கள் ‘அரசு' என்ற வரையறைக்குள் வராததால், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை / முடியாது என்ற வாதமும் போலியானதே. உச்ச நீதிமன்றம் இந்திய ஒன்றிய நீதித்துறை எனவும், உயர் நீதிமன்றம் மாநில நீதித்துறை எனவும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 124, 214 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில, ஒன்றிய நடவடிக்கைகளில் நிர்வாகத்தில் திறமையைப் பராமரிப்பதற்கு இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்கத்தக்கதே. ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி பதவிகள் ஒரு நூறுக்கும் குறைவே. ஆனால், அம்மாநிலத்தில் தொழில் செய்யும் வழக்குரைஞர்கள் பல்லாயிரம். எனவே, இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டால் தகுதியான நபர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்."ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் விவகாரங்கள் தொடர்பான பணியிடங்களுக்கும் பதவிகளுக்கும் நியமனங்களிலும், நிர்வாகத்திலும் திறமையைப் பராமரிப்பதற்கு முரணில்லாத வகையில் - தலித் மற்றும் பழங்குடியினரின் கோரிக்கைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்'' என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 335 கூறுகிறது. மேற்கூறிய பின்னணியில், இந்தியாவின் முதல் தலித் தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவியேற்றுள்ளது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்திய நீதித்துறையின் தலைமைப் பீடத்திலிருந்து அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் பல. நீதித் துறையின் தேசிய அளவிலான கொள்கை முடிவுகளை தலைமையேற்று எடுத்திடும் பொறுப்பும் அவரிடமுள்ளது. சாதியத் தாக்கத்தின் உச்சத்திலிருக்கும் உயர் வழக்கு மன்றங்களில் வரவேற்கத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவரும் அளவிற்கு, நீண்ட காலம் (3 ஆண்டுகள் 4 மாதங்கள்) பதவியில் இருக்கும் வாய்ப்பும் அவருக்குள்ளது. இந்த உயரிய பதவியை ஏற்கும் தருணத்தில் அவர் அளித்துள்ள நேர்காணலில் தனக்கு முன்பிருந்த தலைமை நீதிபதி போலல்லாமல், "இந்தியத் தலைமை நீதிபதியையும் தேசிய நீதித்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தனக்கு உடன்பாடானதே'' (‘இந்து' 3.1.2007) என்று கூறியிருப்பது, அவரது முற்போக்கான, மக்களாட்சி தத்துவத்தின் மீது அவர் கொண்டுள்ள மாண்பை வெளிப்படுத்துகிறது.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின நீதிபதியான தர்குட் மார்ஷல், தனது அறிவாழமிக்க சட்ட நுணுக்கத்தால் - அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் நிறப் பாகுபாட்டின் கொடூரத்தை உணரச் செய்தார். வழக்குரைஞராக இருந்த போது அவர் வாதிட்ட ‘பிரவுன் எதிர் கல்வி வாரியம்' (Brown Vs - Board of Education) வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு', கறுப்பின மக்களுக்கு காலங்காலமாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தது.

அதே போல், புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவரும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தகுதியிலும், திறமையிலும் தன்னிகரற்று விளங்கியவருமான ஆந்திரத்தைச் சேர்ந்த தலித் நீதிபதியான கே. ராமசாமி, இந்தியாவில் தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை பற்றிய ஆய்வுடன் கூடிய மிகச் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார் (அப்பு பாலு இங்காலே - எதிர் - கர்நாடக அரசு - AIR 1993 SC 1126). மேலும், இவர் ‘இந்தியாவில் கடைப் பிடிக்கப்படும் தீண்டாமை, இனப்பாகுபாடு அல்ல' என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிலைப்பாடு எடுத்தபோது, தென் ஆப்பிரிக்கா - டர்பனில் நடைபெற்ற இனப்பாகுபாட்டிற்கெதிரான மாநாட்டில், ‘தீண்டாமை இனப்பாகுபாடே' என்று (அப்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்) உரத்த குரலில் முழக்கமிட்டு, உலகின் கவனத்தை ஈர்த்தார். மண்டல் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதற்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கிலும் (இந்திரா சகானி - எதிர் - இந்திய ஒன்றியம் AIR 1993 SC 477) இடஒதுக்கீட்டின் தேவை குறித்து நீதிபதி கே. ராமசாமி வழங்கிய தனித்த தீர்ப்பு குறிப்பிடத்தகுந்தது.


மேலும், ‘மாதுரி பாட்டீல் - எதிர் - மகாராட்டிர அரசு' (AIR 1995 SC 94) வழக்கில் பட்டியல் சாதியினர் - பழங்குடியினரல்லாத நபர்கள் போலி சான்றிதழ்கள் மூலம், இடஒதுக்கீட்டை அபகரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி என்று வழங்கிய தீர்ப்பு, இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றதன் தொடக்கப்புள்ளியாகும். நீதிபதி கே. ராமசாமி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அளித்த பங்களிப்பைவிட கூடுதலாகப் பங்களிப்பு செய்யும் வாய்ப்பு, இந்தியத் தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு உள்ளது.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மனித உரிமைப் போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர், பாலகிருஷ்ணன் இத்தலைமைப் பதவியை ஏற்றபோது தனது அறிக்கையில், "அவருடைய இன்றைய நிலையை வரலாறு அவருக்கு வசமாக்கியுள்ளது. பாலகிருஷ்ணன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கானது என்பதை மனதில் கொண்டு செயல்பட்டு, அவருடைய பதவிக் காலத்தை ‘பாலகிருஷ்ணனின் காலம்' என்று மக்கள் அழைக்கும்படி சிறப்புறச் செய்வார். இந்திய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற பெரிய சக்திகளுக்கு ஆட்படாமல் மக்கள் நீதிபதியாகத் திகழ்வார்'' என்று தெரிவித்திருந்த நம்பிக்கையை கண்டிப்பாக அவர் காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.


(நன்றி :
மார்ச், 2007)-சு. சத்தியச்சந்திரன்

Friday, August 10, 2007

கிரெடிட் கார்டு - பொதுநல வழக்கு - ரிசர்வ் வங்கிக்கு நோட்டிஸ்

கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் அனைத்திலும் நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கவேண்டும் என்றும், கிரெடிட் கார்டு விதிமுறைகள், பில் விவரங்கள் அனைத்தும் தமிழ் உட்பட மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பதிவு செய்யப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு அஜித் பிரகாஷ் ஷா மற்றும் நீதிபதி திரு ஜோதிமணி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். பின்னர் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்டு, 27ம் தேதி நடைபெறும்.


-மக்கள் சட்டம் குழு

Thursday, August 9, 2007

கிரெடிட் கார்டு - வழக்கு மனு விவரம்

சென்னையைச் சேர்ந்த சமூக-பொருளாதார நீதிக்கான மையம், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொநல வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கிற்கான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக-பொருளாதார நீதிக்கான மையம் சார்பில் www.CreditCardWatch.org என்ற இணையதளம் மூலமாகவும், பொதுநிகழ்ச்சிகள், பத்திரிகைகள் வாயிலாகவும் கிரெடிட் கார்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இதன்மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தில் கிரெடிட் கார்டு குறித்த பல பிரசினைகளுக்கும், கிரெடிட் கார்டின் விதிமுறைகள் குறித்து மக்களுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படாததே காரணம் என்று தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பலருக்கும் ஆங்கிலமோ, இணையதளமோ அதிகம் அறியப்படாத ஒன்றாக உள்ளது.

எங்கள் ஆய்வில் வங்கிப்பணிகள நெறிப்படுத்தும் அதிகாரம் படைத்த இந்திய ரிசர்வ் வங்கி, கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்த முதன்மை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கிரெடிட் கார்டை விற்பனை செய்தல், கணக்குகள் பராமரித்தல், வட்டி மற்றும் இதர கட்டணங்களை உரியமுறையில் தெரிவித்தல், தவறான பில்களை அகற்றுதல், விற்பனை மற்றும் வசூல் முகவர்களை பயன்படுத்தல், நுகர்வோர் தனிமையையும் ரகசியத்தையும் பாதுகாத்தல், முறையான கடன் வசூல் முறைகள், குறைதீர்க்கும் வசதி உள்ளிட்ட நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அம்சங்களயும் நடமுறைப்படுத்துவது அனைத்து வங்கிகளுக்கும் கட்டாய கடமையாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் கிரெடிட் கார்டு வணிகத்தின் நடைமுறையின் பெரும்பகுதி அவுட்சோர்ஸிங் முறையில் வேற்று நபர்களின் பொறுப்பில் விடப்படுகிறது. அந்த அவுட்சோர்ஸிங் நிறுவனத்தின் பணியாளர்கள் விற்பன/வசூல் இலக்கை அடைவதற்காக கிரெடிட் கார்டு குறித்த அரைகுறையான மற்றும் தவறான தகவல்களை நுகர்வோர்களுக்கு வழங்குகின்றனர். கிரெடிட் கார்டின் விதிமுறைகள் அனைத்தும் மிகவும் சிக்கலான மொழிநடையில், மிகவும் மங்கலான வண்ணத்தில், மிகச்சிறிய எழுத்தில் விண்ணப்பத்தின் பின்புறத்திலேயே அச்சிடப்படுகிறது. விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டபின் அது வங்கி நிர்வாகத்திடம் சென்று விடுவதால் அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நுகர்வோர் அறிய முடிவதில்லை.

கிரெடிட் கார்டு பில்களை சாமானியர்கள் புரிந்து கொள்ளமுடிவதில்லை. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யாத பல செலவினங்கள் பில்லில் இடம் பெறுகின்றன. இது குறித்த புகார்களை யாரிடம் தெரிவிப்பது என்பது யாருக்கும் தெரிவதில்லை. தொலைபேசி மூலம் புகார் செய்தால் அடையாளம் சொல்லாத சில நபர்கள் புகார்கள விசாரிக்கின்றனர். எனினும் புகார்கள பதிவு செய்ய எந்த முறையான அமைப்பும் இல்லாத நிலையில் வாடிக்கையாளர்களின் நியாயமான குறைகளை தீர்க்க வழி இல்லாமல் போகிறது.

கிரெடிட் கார்டு வணிகத்தின் இறுதிக் கட்டமான கடன் வசூல் நடவடிக்கையே பல வாடிக்கயாளர்களின் மோசமான அனுபவமாக மாறிவிடுகிறது. கிரெடிட் கார்டு வசூலுக்காக நியமிக்கப்படும் குண்டர்கள் வாடிக்கயாளர்களின் வீடுகளில் அத்துமீறி நுழைதல், மிரட்டுதல், ஆட்கடத்தல், சட்டவிரோதமாக அடைத்துவைத்தல், பெண்களின் கண்ணியம் குறையும் வகையில் நடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த தொல்லை காரணமாக சில வாடிக்கையாளர்கள் தற்கொலை முடவை தேர்ந்தெடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கிரெடிட் கார்டு கடன் தவணையை ஒரு வாடிக்கையாளர் கட்டத்தவறிவிட்டால் அவரது பெயரை சிபில் என்ற கடன் தகவல் மையத்திற்கு வங்கிகள் அனுப்பி விடுகின்றன. பிறகு அந்த நுகர்வோர் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. சிபில் அமைப்பில் ஒரு வாடிக்கையாளரின் பெயரை பதிவு செய்யுமுன் அந்த வாடிக்கையாளருக்கு அது குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அது நிறைவேற்றப்படுவதில்லை. மேலும் வாடிக்கையாளரின் நியாயமான குறைகளை தீர்க்க வழியில்லாத நிலையில் ஒரு வாடிக்கையாளரின் பெயரை சிபில் அமைப்பில் பதிவு செய்து அவருக்கு மற்ற வங்கிகளில் கடன்பெற முடியாத நிலையை ஏற்படுத்துவது சமூக அநீதியாகும்.

வங்கித்துறைகளுக்கு பொறுப்பான மத்திய நிதி அமைச்சகம், நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், வங்கிகள் சர்ச்சைக்கிடமான வகையில் விதிக்கும் தாமத கட்டணம், கடன் எல்லை தாண்டியதற்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கும் 4% சேவை வரி விதிக்கிறது. ஏற்கனவே வங்கிகளின் நியாயமற்ற கட்டணங்களால் அல்லலுறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வரி கூடுதல் சுமையாகிறது.

விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் கடன் அளிக்க மறுக்கும் இந்த வங்கிகள் மத்தியதர வர்க்கத்தினருக்கு கடன்களை வாரிவாரி வழங்குவதே அவர்களிடம் அநியாய வட்டி வசூலித்து பெரும் லாபம் ஈட்டவே என்று கருத இடமுள்ளது.

எனவே,

(அ) அனைத்து வங்கிகளிலும் பிராந்திய அளவில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் அமைப்பு நிறுவ வேண்டும்.

(ஆ) ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கை குறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும்.

(இ) கிரெடிட் கார்டின் விதிமுறைகள், பில் விவரங்கள் ஆகிய அனைத்து விவரங்களயும் தமிழில் தர வேண்டும்.

(மனுவின் முழுமையான ஆங்கில வடிவத்திற்கு www.CreditCardWatch.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்)

-மக்கள் சட்டம் குழு.