Showing posts with label தகவல் உரிமைச் சட்டம். Show all posts
Showing posts with label தகவல் உரிமைச் சட்டம். Show all posts

Friday, July 18, 2008

தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே முதன்மையானது. இங்கு மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நமக்கு புகார்கள் வரவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதற்காக மருத்துவக்கல்லூரியின் இணையதளத்தை தேடினோம்.

அவ்வாறு இணையதளம் எதுவும் நமக்கு புலப்படாத நிலையில் நமது முதல் கேள்வியே மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் இணையதளம் குறித்ததாக அமைந்தது. கேள்விகள் 25-06-2008 அன்று அனுப்பப்பட்டது. அதற்கான பதில் 11-07-2008 அன்று கையெழுத்தாகி 18-07-2008 அன்று நம்மை வந்தடைந்தது. இந்த பதில்கள் அடங்கிய கடிதத்தில் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், பொது தகவல் அதிகாரியுமான Dr. S.கீதாலட்சுமி , MD அவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்.

இனி கேள்வியும், பதில்களும்.

கேள்வி 1. தங்களது கல்வி நிறுவனத்திற்கு இணையதளம் ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதன் பெயரை தெரிவிக்கவும். இணையதளம் இல்லையென்றால் அவ்வாறு இணையதளத்தை அண்மையில் ஆரம்பிக்கும் உத்தேசம் உள்ளதா?

பதில் : இணையதளம் உள்ளது! http://www.mmc.org/
(தவறான தகவல்! இந்த இணைய தளம் இங்கிலாந்திலுள்ள Maine Medical Centre என்ற அமைப்பினுடையது)

கேள்வி 2. தங்கள் துறைக்கு பொதுத்தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகள் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்த விவரங்கள் அந்த இணையதளத்தில் இடம்பெறச் செய்வீர்களா?

பதில் : இணையதளம் இல்லாததால் இந்த பிரசினை எழவில்லை!
(முதல் கேள்வியில் இணையதளத்தின் பெயரை எவ்வாறு கொடுத்தார்கள்?
அடுத்த கேள்வியிலேயே இணையதளம் இல்லை என்பதை எவ்வாறு உணர்ந்தார்கள்? தலை சுற்றுகிறது!)

கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எத்தனைப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன? எந்தெந்த பிரிவுகளில் அவை நடத்தப்படுகின்றன? அவை அனைத்தும் இந்திய மருத்தவுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளனவா?

பதில் : பட்டமேற்படிப்பு கல்விகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவை – 34 எண்ணிக்கை. (M.D)
( M.S. என்ற பெயரில் நடத்தப்படும் படிப்புகள் குறித்து துணை முதல்வருக்கே தெரியாது போலும். அவை எந்தெந்த துறைகளில் நடத்தப்படுகிறது என்ற தகவலை எங்கே, யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் தெரியவில்லை)

கேள்வி 4 . பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்? அவர்களது பெயர், கல்வித்தகுதி, பதவி ஆகியவற்றை வழங்கவும். இவற்றில் எத்தனை நிரப்பப்படாமல் உள்ளன? அந்த காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? துறைவாரியான தகவல்களை தரவும்.

பதில் : 586. பணிமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் மருத்துவ கல்வித்துறை இயக்குனரிடமும் உள்ளது.
(கேள்வியை முழுமையாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் அளவுக்கு துணை முதல்வருக்கு கல்வி அறிவு இல்லை போலுள்ளது!)

கேள்வி 5. பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? துறை வாரியான தகவல்களை தரவும்.

பதில் : 439 தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
(துறை வாரியாக கணக்கெடுக்கும் அளவிற்கு ... என்னத்தை சொல்றது..போங்க!)

கேள்வி 6. மருத்துவ பட்ட மேற்படிப்பு எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? வகுப்பறை கல்வி, செய்முறை கல்வி, மருத்துவமனை கல்வி வழங்கப்படுவதற்கான கால அட்டவணையை வழங்கவும்.

பதில் : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது.
(அந்த விதியைதாங்க கேட்டோம். அதைச் சொல்லுங்க!)

கேள்வி 7 முதல் 18 வரை உள்ள கேள்விகளை முதல்வர், அரசு பொது மருத்துவமனை, சென்னை-3 என்ற முகவரிக்கு அனுப்பவும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
(தகவல் உரிமைச் சட்டம், பிரிவு 6(3)ன் படி கோரப்படும் தகவல் வேறொரு அதிகார அமைப்பிடம் இருக்கும்போது தகவல் கோரும் விண்ணப்பத்தை , அது எந்த துறைக்கு செல்லவேண்டுமோ அந்தத்துறைக்கு
5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இந்த தகவலை மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த சட்டவிதிகள் பின்பற்றப் படாததோடு, மனுவைப் பெற்று சுமார் 15 நாட்களுக்கு பிறகு பதில் தயாரிக்கப்பட்டு ,கையெழுத்தாகி அதன்பிறகு ஒரு வாரம் கழித்தே அந்த பதில் நம்மை வந்தடைந்தது)

மேற்கண்ட விவகாரங்களை விளக்குமாறு மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பப் பட்டுள்ளது. அதற்கான பதில்களும், தொடர் நடவடிக்கைகளும் இங்கு வெளியிடப்படும்.


-மக்கள் சட்டம் குழு

Wednesday, July 2, 2008

தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில் நடத்தப்படுகின்றன.
.
இந்தப் பல்கலை கழகத்தில் பல ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், மற்ற பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவதாகவும், பணி உத்தரவாதம் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும் செய்திகள் வந்ததை அடுத்து, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அதிகாரி குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், பொதுத்தகவல் அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு, 01-04-2008 அன்று கேள்விப் பட்டியல் அனுப்பப்பட்டது.

ஏப்ரல் முதல் தினத்தன்று அனுப்பப்பட்ட கேள்விப்பட்டியலுக்கு, 15-05-2008வரை பதில் வராத நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கு மேல்முறையீட்டு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து 26-05-2008 அன்று பதில் அனுப்பினார்கள்.
நமது கேள்விகளும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதில்களும்...

கேள்வி 1: அண்ணா பல்கலைக் கழகத்தில் எத்தனை ஆசிரியர்களும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணி புரிகின்றனர்?

பதில் :
பேராசிரியர்கள் - 115, துணைப் பேராசிரியர்கள் – 137, விரிவுரையாளர்கள் – 220
அமைச்சுப்பணியாளர்கள் – 297, தினக்கூலி அடிப்படையில் – 260, தொகுப்பூதியம் அடிப்படையில் – 52.

தொழில்நுட்ப பணியாளர்கள் – 661, தினக்கூலி அடிப்படையில் – 4.

(கேள்வியைவிட கூடுதல் தகவல்கள் தரப்பட்டுள்ளன)

கேள்வி 2: முழு நேரம் மற்றும் பகுதி நேர அடிப்படையில் எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் எந்த அடிப்படையில் (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) பணியமர்த்தப்பட்டனர்?

பதில்: 1 துணைப் பேராசிரியரும், 100 விரிவுரையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். மேலும் 40 பேர் விசிட்டிங் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர்.

அமைச்சுப் பணியாளர் பணியிடங்களில் 177 நிரப்பப்படாமல் உள்ளது.
தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களில் 361 நிரப்பப்படாமல் உள்ளது.

(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை. நிரந்தர ஆசிரியர்கள் குறித்த தகவலோ, நிரந்தர ஆசிரியரல்லாத பணியாளர்கள் குறித்த தகவலோ இல்லை)

கேள்வி 3: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எத்தனை பேர் பணி புரிகின்றனர்? அவர்கள் பணியமர்த்தப்பட்ட தன்மையை (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) கூறவும்?

பதில்: பொருந்தாது.
(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை.)

கேள்வி 4: அண்ணா பல்கலைத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் எவ்வளவு?

பதில்: 128 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

( இந்த கேள்விக்கான பதிலின் சில பகுதிகள் 2ம் கேள்விக்கான பதிலில் இடம் பெற்றுள்ளன. அதை நீங்கள்தான் தேடிப்படித்து புரிந்து கொள்ள வேண்டும்)

கேள்வி 5: இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை தரவும்?

பதில்: (பதில் அளிக்கப்படவில்லை)

(சமூக நீதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை போலுள்ளது. மாணவர்கள் தேர்வில் சில கேள்விகளை Choice-ல் விடுவது போல பல்கலைக்கழகம் இந்த கேள்வியை தவிர்த்துள்ளது)

கேள்வி 6: தொழிலாளர் நலத்திட்டங்களான சேமநலநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டங்களின்கீழ் எத்தனை ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்?

பதில்:
1-4-2003க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பொதுசேமநல நிதி மற்றும் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள். அந்த தேதிக்கு பின் சேர்ந்தவர்கள் பொதுசேமநலநிதி திட்டத்தில் பயன்பெறும் தகுதி அற்றவர்கள்.

(பல்கலைக் கழகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிக்கை தெரியாது போலிருக்கிறது.)

கேள்வி 7: ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களில் சிலர் பொது சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி போன்ற திட்டங்களில் பயன் பெறுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தால் எந்த சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் விலக்கப்பட்டனர்?

பதில்: 01-04-2003க்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்கள் பங்கீட்டு ஒய்வூதிய திட்ட(Contributory Pension Scheme)த்திற்கு மட்டுமே தகுதி பெற்றவர்கள்.

(கேள்வியை படித்து புரிந்து கொள்ளவோ அல்லது உரியமுறையில் பதில் அளிக்கவோ தேவையான கல்வித்தகுதி பொதுத்தகவல் அதிகாரிக்கு இல்லை என்பது புரிகிறது)

கேள்வி 8: ஆசிரியர்களில் எவருக்கேனும் பல்கலைமானியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லையாயின், அவர்களுக்கு சேமநலநிதி திட்டம் பொருந்துமா?

பதில்:
அனைத்து ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆசிரியரல்லாத அமைச்சுப்பணியாளர்களுக்கு மாநில அரசு ஊதிய விகிதங்களின் கீழ் ஊதியம் வழங்கப்படுகிறது.

(நிரந்தர பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படலாம். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவோருக்கு எந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை.)


பல்லாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தையும், அதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் ஒரு முக்கிய பல்கலைக்கழகத்தின் செயல்பாடு இந்த அளவில்தான் உள்ளது.


மேலும் விளக்கம் கேட்டு மீண்டும் ஒரு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு வரும் பதில்களும் வெளியிடப்படும்.
-சுந்தரராஜன்

Tuesday, October 16, 2007

தமிழ்ப் பல்கலைக் கழகம் - சித்த மருத்துவக் கல்வி - தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அஞ்சல் வழியில் சித்தமருத்துவம் கற்றுத்தருவதாக வந்த விளம்பரத்தை அடுத்து நாம் மேற்கொண்ட விசாரணையில், இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழு உள்ளிட்ட அதிகார அமைப்புகளிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பணம் பண்ணும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிந்தது. இதையடுத்து இந்த கோர்ஸுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுவதாக தெரியவந்தது. ஆனால் இந்தப் பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழுவோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமோ அங்கிகரிக்க வில்லை என்பதும் தெரியவந்தது. எனவே இந்த பட்டங்களின் அந்தஸ்து குறித்து சில தகவல்களை தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 05-09-2007 அன்று கேட்டோம்.

இம்மனுவைப் பெற்றுக்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். க. பாஸ்கரன் அவர்கள் பதில் அனுப்பி உள்ளார். அதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் சித்த மருத்துவ பட்டய படிப்பை எதிர்த்து நாம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நாம் கேட்டுள்ள விவரங்களை தெரிவிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

மேலும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் துணைவேந்தரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நல் வாய்ப்பொன்றை வழங்கி உள்ளார். எனவே நாம் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி உள்ளோம். அதன் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
16-09-2007
சென்னை

அனுப்புனர்,

பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்பு செட்டி தெரு,
சென்னை-600 001.

பெறுனர்,

துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 613 010.

ஐயா,

பொருள்: தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 19ன் கீழான மேல் முறையீட்டு மனு

---

கடந்த 05-09-2007 அன்று, தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு பொதுத்தகவல் அதிகாரியான பதிவாளருக்கு மனு அனுப்பினேன்.

அக்கேள்விகள் கீழ் வருமாறு:

1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
.
2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?
.
3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?
.
4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?
.
5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?
.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பொதுத்தகவல் அதிகாரியும், பதிவாளருமான முனைவர் க.பாஸ்கரன் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
.
அதில், 2007-08ஆம் கல்வி ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்கக வழி, சித்த மருத்துவப் பட்டயக் கல்வி பயிற்றுவிப்பதற்கு எதிராகத் தாங்கள் சென்னை, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிள்ள நிலையில், கேட்கப் பட்டுள்ள விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு அஞ்சல் வழியில் வழங்கப்படும் சித்த மருத்துவப் பட்டயக்கல்வி குறித்ததே. அந்த வழக்கில் தங்கள் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி அல்லாத முறைகளில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2007 அக்டோபர் முதல் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது தங்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அம்சம் குறித்த - தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8ன் படி தகவல் அளிக்க விலக்கு அளிக்கப்பட்ட அம்சங்களில் சேர்க்கப்படாத தகவலை அளிக்க மறுப்பது, தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 20ன் கீழ் தண்டனைக்கு உரியது.

எனவே, மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.
நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
.
(பி. சுந்தரராஜன்)
.
இந்த மனுவிற்கு வரும் பதிலும் மக்கள் சட்டம் வலைப்பூவில் பதிவாக இடம் பெறும்.

மக்கள் சட்டம் வலைப்பூவின் இதுபோன்ற சமூக செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நீங்களும் தேவைப்படும் இடங்களில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் தூக்கத்தை கலையுங்கள்.
-மக்கள் சட்டம் குழு

Saturday, October 6, 2007

கிரெடிட் கார்டு - தகவல் உரிமைச் சட்டம் - அரசின் பதில்

தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன் அட்டையால் நுகர்வோருக்கு பலனா? அல்லது சுமையா?” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் சில தகவல்களை கேட்டு மனு அளிக்கப்பட்டது.

அந்த கேள்விகளும், அதற்கு அத்தறையின் தகவல் வழங்கும் அலுவலர் திருவாளர் சி. கோதண்டன் அளித்த பதில்களும்.
...
கேள்வி 1. இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? ஆம் எனில் எந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது? (இலவசமாக “இன்றைய நிகழ்ச்சி” பகுதியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தவிர)

பதில்: இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படவில்லை.
...
கேள்வி 2. இந்த நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு?

பதில்: இந்த நிகழ்ச்சிக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.72,388/- ஆகும்.
...
கேள்வி 3. சென்னையில் அரசுக்கு சொந்தமான அரங்குகளும், மாநகராட்சிக்கு சொந்தமான அரங்குகளும் பல இருக்கும் நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏன்?

பதில்: இந்த துறை மூலம் நுகர்வோர் நலன் தொடர்பாக நடத்தப்படும் கருத்தரங்குகளின் பொருளினை பொறுத்து கூட்ட அரங்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த துறையால் நடத்தப்பட்ட, ரியல் எஸ்டேட் தொடர்பான கருத்தரங்கு சேவை வழங்குபவர் அரசுத்துறை மற்றும் தனியாளர்கள் என்ற முறையில் அரசுக்கு சொந்தமான அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திலும், மருந்துகள் விற்பனை தொடர்பான கருத்தரங்கு சமூக சேவை நிறுவனத்தின் அரங்கான ஆஷா நிவாஸிலும் நடத்தப்பட்டது. கடன் அட்டைகள் தொடர்பான கருத்தரங்கினை பொறுத்த மட்டில் சேவை வழங்குபவர்கள் அரசுடைமை/ தனியார் / பன்னாட்டு வங்கிகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் என்ற முறையிலும் கடன் அட்டையைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் சமூகத்தில் நடுத்தர மற்றும் மேல்நிலை வாழ்க்கைத்தரத்தில் உள்ள நிலையிலும் இக்கருத்தரங்கினை தனியார் ஓட்டலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
...
கேள்வி 4. கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2007 ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட முதன்மை சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் நிகழ்ச்சியில் 2005ம் வருடத்திய (பழைய) சுற்றறிக்கையை வழங்கியது ஏன்?

பதில்: இத்துறை வாயிலாக கருத்தரங்கின்போது வழங்கப்பட்ட விவரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இருந்தும் இத்துறையில் பதிவு செய்துள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் வாயிலாகவும் பெற்று தொகுத்து வழங்கப்பட்டன. அதில் கூடுதல் விவரங்கள் மற்றும் நுகர்வோர்க்கான தெளிவுரைகள் வழங்கவே இந்த கருத்தரங்கிற்கு ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மேன் அலுவலர் சிறப்பு அழைக்கப்பட்டிருந்தார். அவர் வாயிலாக ரிசர்வ் வங்கியின் தற்போதைய நெறிமுறைகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டன.
...
கேள்வி 5. கருத்தரங்கம் முடிவடைந்த பின் அரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களிலிருந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் தீர்மானங்கள், நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமானது?

பதில்: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் / புகார்கள் தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க தொகுக்கப்பட்டன. மனுதாரர் கூறியவாறு தீர்மானங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக இத்துறையின் இணை ஆணையாளர் வாயிலாக கருத்தரங்கின் ஆலோசனைகள் தொகுத்து வழங்கப்பட்டன.
...
கேள்வி 6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் உங்கள் துறை பணியாளர்கள் எத்தனை பேர்? வங்கிகளின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர்?

பதில்: நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள்---60 பேர்
வங்கியை சேர்ந்தவர்கள்---12 பேர்
இத்துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் மற்றும்
கருத்தரங்கு தொடர்பாக பணிபுரிந்த பணியாளர்கள்---14 பேர்
இத்துறை மற்றும் இதர அரசுதுறைகளை சார்ந்த கடன்
அட்டை உபயோகிப்பாளர்கள், பிற நலசஙக
பொறுப்பாளர்கள் & பத்திரிகையில் "இன்றைய நிகழ்ச்சி"
வாயிலாக அறிந்து வருகை புரிந்த பொதுமக்கள்---59 பேர்
பத்திரிகை & தொலைக்காட்சி ஊடகப்பணியாளர்கள்---10 பேர்

மொத்தம் --- 155 பேர்
...

கேள்வி 7. இந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட பயன் என்ன? இந்த நிகழ்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதா? ஆமெனில் பெரும்பான்மையானோர் என்ன கருத்து தெரிவித்தனர்? இல்லை எனில் ஏன் அவ்வாறு கருத்து கேட்கப்படவில்லை?

பதில்: இக்கருத்தரங்கு குறித்த விவரம் முன்னமே தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களது கருத்துகள் / புகார்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்று தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க கொடுக்கப்பட்டன. இவ்விவரங்கள் சம்பந்தப்பட்ட சேவைகள் வழங்கும் வங்கிகளின் அலுவலர்கள், ரிசர்வ் வங்கியின் அலுவலர் மற்றும் கூடியிருந்த அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு அமர்விலும் கடன் அட்டை உபயோகிப்பவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி வாயிலாக கூடுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டுவர தக்க பரிந்துரைகள் இத்துறை வாயிலாக அனுப்பப்படுகின்றன.
...
கேள்வி 8. இந்த கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பிரசினை குறித்து தங்கள் துறை சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டம் என்ன?

பதில்: இத்துறை கடன் அட்டைகள் சேவை உட்பட பொதுமக்கள் "நுகர்வோர்" என்ற முறையில் பெறும் அனைத்து சேவைகளிலும் நேர்மையற்ற வணிக முறைகளில் சிக்கி அல்லல் அடையாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் கருத்தரங்குகள் நடத்தி வருகிறது. இத்தகைய கருத்தரங்குகளுக்கான பொருட்கள் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில்தான் முடிவு செய்யபடுகின்றன. மேற்படி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட தீர்மானங்களை ரிசர்வ் வங்கி வாயிலாக ஆணைகளாக பெறத்தக்க பிரேரணைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
...

இந்த பதில்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவற்றையும் அடுத்த மனுவில் கேட்கவிருக்கிறோம். இந்த நடவடிக்கை உங்கள் கருத்துகளையும், உங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் எழுதினால் அவற்றையும் அடுத்த மனுவில் சேர்க்க முடியும்.

அடுத்த சுற்று ஆட்டத்துக்கு நாங்க ரெடி! நீங்க ரெடியா?

Saturday, September 8, 2007

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவப்படிப்பு – கிணறு தோண்ட பூதம்.

மருத்துவ பல்கலைக்கழகமும், மருத்துவ கல்லூரிகளும் மட்டுமே தொடங்க வேண்டிய மருத்துவம் தொடர்பான கல்வியை தொலைதூரக்கல்வி மையம் மூலம் வழங்குவதாக தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் போலிமருத்துவர்கள் அதிகரித்து, மக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் அஞ்சல் வழி மருத்துவ கல்விக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையம், பாடத்திட்டங்கள் குறித்த கையேட்டை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மூலிகை அறிவியல், மருத்துவ மூலிகை அழகுக்கலை, மரபு மருத்துவ உணவு முறைகள் ஆகிய பாடத்திட்டங்களும் உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய மூலிகை, இயற்கை உணவு, இவற்றின் மூலமான அழகுக்கலை ஆகியவற்றை மீட்டெடுக்க தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

ஆனால் இந்த ஆர்வம் எல்லை மீறி சித்த மருத்துவ பட்டயப் படிப்புவரை செல்லக்கூடாது என்பதே நமது கவலை. இந்த பட்டய படிப்பில் (1) சித்த மருந்தறிவியல் அறிமுகம், (2) மருந்தியல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துகளின் தரநிர்ணயம் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடங்களை மட்டுமே கொண்ட கல்வித்திட்டம் மருத்துவ கல்வி ஆகிவிடாது.
மருத்துவ கல்வியில் உடற் செயலியல், நோய்க்குறி ஆய்வியல், மருந்தியல் ஆகிய அனைத்து பாடங்களும் அடங்கும். சித்த மருந்துகளைப்பற்றி மட்டுமே பயிற்றுவிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்திற்கு சித்த மருந்தாளுனர் (SIDDHA PHARMACY) போன்ற பெயரில் தமிழ்ப்பலைக்கழகம் சான்றிதழோ, பட்டயமோ வழங்குவதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை. அதையும் இந்திய மருந்தாளுனர்களுக்கான கவுன்சிலில் (Pharmacy Council of India) பதிவு செய்து வேலைவாய்ப்புக்கான முழுமையான தகுதியாக வழங்கலாம்.


சித்த மருத்தவத்துறையில் தற்போதைய சித்த மருத்துவ (Bachelor of Siddha Medicine and Surgery) இளங்கலை பட்டப்படிப்பு, சில காலம் முன்பு வரை Bachelor of Indian Medicine என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரை ஒட்டியுள்ள Diploma in Siddha Medicine என்ற பெயர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த பட்டயப்படிப்பில் படிப்பவர்கள் மருத்துவம் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


ஏழாவது தலைமுறையாக சித்தமருத்துவம் செய்வதாக கூறி ஒரு சிறுவனையும் மருத்துவராக முன்னிலைப்படுத்தும் நிறுவனங்களும்,. அதையும் கேள்வி கேட்காமல் விளம்பரம் செய்யும் பத்திரிகைகளும் உள்ள நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் Diploma in Siddha Medicine கல்வி பெரும் கேடுகளையே விளைவிக்கும்.

இந்த விவகாரம் குறித்த ஆய்வில் நாம் ஈடுபட்டபோது, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களும் வழங்கப்படுவதாக தெரியவந்தது.
இந்தப் பட்டங்களையாவது இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழுவோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமோ அங்கீகரித்துள்ளதா எனப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த பட்டங்களை அங்கீகரிக்கவோ, இந்த பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் அல்லது விரிவுரையாளராக பணியில் அமர்த்தவோ மேற்கண்ட அமைப்புகள் இதுவரை முன்வரவில்லை. எனவே இந்த பட்டங்களும் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டதைப்போன்ற பொருளற்ற அலங்கார பட்டங்களாகவே உள்ளதாக தோன்றுகிறது.



எனவே இந்த ஆய்வு முனைவர் மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.



05-09-2007
சென்னை


அனுப்புனர்,


பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.

பெறுனர்,


பதிவாளர்,
(பொதுத்தகவல் அதிகாரி)
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.

ஐயா,

பொருள்: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 6ன் படி
தகவல் கோருதல்.
---
தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ துறையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெறுவதாக அறிகிறேன். ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய பட்டங்களுக்கான ஆய்வுகளும் நடைபெறுவதாக அறிகிறேன். இதுகுறித்த கீழ்க்கண்ட தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?

2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?


3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?

4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?

5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?

அரசுத்துறை அலுவலகங்களில் பொதுத்தகவல் அலுவலர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும், அது குறித்து இணையதளம் உள்ளிட்ட வழிகளில் பொது அறிவிப்புகள் கொடுக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 4 வலியுறுத்துகிறது. எனினும் தங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அலுவலர் குறித்த அறிவிப்பு இல்லை என்பதால், பதிவாளரான தங்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது.

மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.

நன்றி.




தங்கள் உண்மையுள்ள,



(பி. சுந்தரராஜன்)






இந்த மனு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வினைகளும் பதிவு செய்யப்படும்.


-மக்கள் சட்டம் குழு




Wednesday, September 5, 2007

கிரெடிட் கார்டு - தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான மனு.

செப்டம்பர் 5, 2007
சென்னை





அனுப்புனர்
பி. சுந்தரராஜன்,
நிர்வாக அறங்காவலர்,
சமூக-பொருளாதார நீதிக்கான மையம்,
1- P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.

பெறுனர்
துணை ஆணையர் 1,
(பொதுத்தகவல் அலுவலர்)
உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத்துறை,
எழிலகம், 4வது தளம்,
சேப்பாக்கம், சென்னை – 600 005.

ஐயா,

பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6ன் படி தகவல்
கோரும் மனு.
---

தங்கள் துறை சார்பாக கடந்த 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன் அட்டையால் நுகர்வோருக்கு பலனா? அல்லது சுமையா?” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்த கீழ்க்கண்ட தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? ஆம் எனில் எந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது? (இலவசமாக “இன்றைய நிகழ்ச்சி” பகுதியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தவிர)

2. இந்த நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு?

3. சென்னையில் அரசுக்கு சொந்தமான அரங்குகளும், மாநகராட்சிக்கு சொந்தமான அரங்குகளும் பல இருக்கும் நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏன்?

4. கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2007 ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட முதன்மை சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் நிகழ்ச்சியில் 2005ம் வருடத்திய (பழைய) சுற்றறிக்கையை வழங்கியது ஏன்?

5. கருத்தரங்கம் முடிவடைந்த பின் அரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களிலிருந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் தீர்மானங்கள், நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமானது?

6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் உங்கள் துறை பணியாளர்கள் எத்தனை பேர்? வங்கிகளின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர்?

7. இந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட பயன் என்ன? இந்த நிகழ்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதா? ஆமெனில் பெரும்பான்மையானோர் என்ன கருத்து தெரிவித்தனர்? இல்லை எனில் ஏன் அவ்வாறு கருத்து கேட்கப்படவில்லை?

8. இந்த கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பிரசினை குறித்து தங்கள் துறை சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டம் என்ன?

மேலேக்கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.

நன்றி.



தங்கள் உண்மையுள்ள,



(பி. சுந்தரராஜன்)


இந்த பதிவு புரியவில்லை என்பவர்கள் முந்தைய பதிவை படித்தபின் இந்த பதிவை படித்தால் புரியும். இந்த மனு இன்று அனுப்பப்படுகிறது. இந்த மனுவிற்கான எதிர்வினைகளும் பதிவு செய்யப்படும்.
-மக்கள் சட்டம் குழு

Monday, July 30, 2007

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

அரசின் செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க உதவும் என்று கூறப்படும் "தகவல் உரிமைச் சட்ட"த்தின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள்.

எங்கள் பார்வைகளை வைக்கிறோம். தொடர்ந்து விவாதிப்போம்.