Showing posts with label மனிதஉரிமை. Show all posts
Showing posts with label மனிதஉரிமை. Show all posts

Tuesday, May 13, 2014

மூன்றாம் பாலினம்

நிறம், இனம், பால், பிறப்பு, மொழி போன்றவைகளை முன்னரே தீர்மானித்து எவரும் இப்புவியில் பிறப்பதில்லை. அதுபோலவே, தான் ஒரு திருநங்கையாகப் பிறக்க வேண்டும் என எவரும் விரும்பி, பிறப்பதில்லை. எப்படி பெண், ஆண் பிறப்போ அதுபோலத்தான் ‘திருநங்கை’ பிறப்பும். அதற்கு எவரும் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஆனால் இங்கே, தன் சக ஆண் பெண்ணைப் போல எந்த உரிமையையும் திருநங்கைகளால் அனுபவிக்க இயலாத துர்பாக்கிய நிலையே நீடித்து வருகிறது.


“மொழி, இனம், நிறம், பிறப்பு, பால், சமயம், சாதி, போன்றவைகளின் அடிப்படையில் எவ்வித பாகுபடுத்தலும் கூடாது” என தனிச்சரத்தை இந்திய அரசியலைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது கடந்த 64 ஆண்டுகள் பூர்த்தியான பிறகும் இன்றளவும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதற்கு நம் கண்முன்னர் நிற்கும் காட்சியே, சமூகத்தில் திருநங்கைகள் குறித்த ஒதுக்கலாகும்.

சமூகத்தில் ஒரு பெண் கேலிக்குள்ளாக்கப்படும் போது சிலரேனும் உடனே தட்டிக் கேட்கும் நிலை காணப்படும் சூழலில் திருநங்கைகள் பொது இடங்களில் வைத்து பாலியல் சீண்டல்களுக்கே உள்ளாக்கப்பட்டாலும் எவரும் அதை பொருட்படுத்துவதில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அதேபோல, விலங்குகளுக்குக் கூட இங்கே அளித்து வரும் காப்பீட்டுத் திட்டங்கள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுதற்கு எண்ணற்றத் தடைகள் உள்ளன.

ஆனால், திருநங்கைகள் தற்போது மெல்ல மெல்ல, ஊடகம், திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த துவங்கிவிட்டனர். இருப்பினும் அவர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பது திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். 

இந்நிலையில், தேசிய சட்டப் பணிகள் மையம் மற்றும் உரிமை ஆர்வலர் லக்‌ஷ்மி நாராயண் திரிபாதி மற்றும் திருநங்கைகள் சிலர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், “நாங்கள் இரு பாலினத்திலும் சேராததால் எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை மறுக்கப்படுகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசின் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. காவல்துறையினரால்   காரணமில்லாமல் துன்புறுத்தப்படுகிறோம். எனவே, அரசியல் சட்டப்படி எங்களுக்கும் வாழ உரிமை உண்டு என்பதால், எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர். 

அந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய குழுமம் கடந்த ஏப்பிரல் மாதம்   ம் நாள், “அரசியல் சட்டப்படி வாழும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும், உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது. இந்தியாவில், பழங்காலம் தொட்டே இரு பாலினத்திலும் சேராதவர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்கள் “ஹிஜ்ரா, அரவாணி, திருநங்கை” போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் முந்தைய காலங்களில் திருநங்கைகள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால் தற்போது அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதுடன், பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.  ஒருவர் மருத்துவ ரீதியாக தன் பாலினத்தை மாற்றிக் கொண்டால், மாற்றப்பட்ட பாலினத்தில் இருக்கும் உரிமை அவருக்கு உண்டு. அவ்விதம் மாறியவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். எனவே, ‘மூன்றாம் பாலினம்’ என்ற பிரிவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறோம்.

திருநங்கைகளை சமூகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதி, உரிய சலுகைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு இதர பிற்படுத்தபட்டோர் பிரிவில் சேர்த்து உரிய இட ஒதுக்கீடு போன்றவைகளையும், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்பட அனைத்துச் சலுகைகளையும் நடுவணரசும், மாநில அரசுகளும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நடுவணரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது  அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்க வேண்டும். அவற்றை நடுவணரசும், மாநில அரசுகளும் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். மேலும், மருத்துவரீதியாக அவர்களை பாலின சோதனைக்கு உட்படுத்துவது சட்ட விரோதம் என்றும், தன்பாலின சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு  தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென ஒரு ஆணோ, பெண்ணோ திருநங்கையாக உருமாற்றம் அடைந்து விடுவதில்லை. உடல்ரீதியாக ஆணாக, பெண்ணாக இருந்துகொண்டு மனரீதியாக, உணர்வுரீதியாக எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்பவர்களே திருநங்கைகள். தங்கள் பருவவயதை அடையும்போது இதர ஆண், பெண்ணிடமிருந்து தான் வேறுபட்டுள்ளோம் என்றும், எதிர்பாலினத்திற்குரிய உணர்ச்சிகளைக் கொண்டுள்ளோம் என்றும் உணர்கிறார்கள். ஆணின்/பெண்ணின் உடலில் சிறைபடுத்தப்பட்டு பெண்ணாக/ஆணாக உணர்பவர்கள் திருநங்கைகள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் சிலரும், பிறரும் இது திருநங்கை என்பதற்கான சரியான விளக்கமல்ல என்று கூறுகின்றனர். திருநங்கைகள் பெரும்பாலும் ஆணாகவே பிறப்பதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே கருப்பை கிடையாது. அதன் காரணமாய் அவர்களால் மறு உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது.

பெரும்பாலான திருநங்கைகள் ஆணாகப்பிறந்து பெண்ணாக உணர்பவர்களே. குடும்ப உறுப்பினர்களால் கண்டறியப்பட்டு, திருநங்கையாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது தாங்கள் எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்வதை அறிந்தவுடன் வீட்டில் சொல்ல பயந்து வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதன்காரணமாக திருநங்கைகள் அனைவராலும் தான் பிறந்த குடும்பத்துடனும், உள்ளூரிலும் வாழ இயலாமல் வெளியூருக்குச் சென்று வாழ வேண்டிய நிர்பந்தச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். புனே, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுர், கோழிக்கோடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

 பொதுத்தளங்களில் தொழில் மறுப்பு, உழைப்பு மறுப்பு காரணமாக பிச்சையெடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடல், உணவுவிடுதிகள், திருமண நிகழ்வுகளில் நடனமாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருவதனுடன் அதன் மூலமான வருவாயினைக் கொண்டு ஆணாக தொடர்ந்து வாழ்ந்திட விருப்பமில்லாமல் “தாயம்மா” எனும் சடங்கின் வாயிலாகவும், அங்கீகாரம் இல்லாத பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவும் பெண்ணாக மாறி தங்கள் விருப்பம் போல வாழத் துவங்குகின்றனர். திருநங்கைகள் பலர் ஒன்றிணைந்து “ஜமாத்” என்ற பெயரில் பெரும் குழுவாக நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆண், பெண்ணாக உருமாற்றம் அடைவது இந்தியப் புராணங்களில் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாகும். நாரதர் ஒரு குளத்தில் குளித்துவிட்டு கரையேறும் போது பெண்ணாக மாறினார் என்றும், கானகத்தில் உள்ள ஒரு விருட்சக மரத்தின் நிழலில் உறங்கி எழுந்த இளவரசன் பெண்ணாக மாறிவிட்டான் என்றும், மகாபாரதக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டது ஐயப்பன் கதையிலும் இடம்பெற்றுள்ளது. அர்ச்சுனன் கிருஷ்ணருடன் ஒரு முறையாவது பாலுறவு கொள்ளவேண்டும் எனும் நோக்கில் 'அர்ச்சுனி' என்ற பெயரில் உருமாற்றம் கொண்டான் என்கிறது பத்மபுராணம். பீஷ்மரை யுத்தத்தில் கொள்ளும் 'சிகண்டி' என்பவர் ஒரு திருநங்கைதான். அதுபோலவே வனவாசத்தில் அர்ச்சுனன் 'பிருகன்னளை' என்ற பெயரில் திருநங்கையாக வாழ்ந்ததாகவே கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்த கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான அலாவுதீன் கில்ஜி (1296–1316)-ன் ஆட்சிக்காலத்தில் டில்லியில் முக்கியப்பதவிகள் வகித்த அனைவரும் திருநங்கைகளே. கில்ஜியின் அந்தப்புரத்துப் பெண்களாக இருந்தவர்களில் பெரும்பாலனோர் திருநங்கைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். அடிமையாக இருந்து பின்னர் அலாவுதின் கில்ஜியால் 1000 தினார் விலைக்கு வாங்கப்பட்டு பின்னாளில் அவரது படைத்தளபதியான மாலிக்கபூர், அடிமைவம்சத்தை நிறுவிய பால்பனின் ஆட்சியில் முதல்வராகப் பொறுப்பு வகித்த இமாதுதீன் ரேயான், கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான குதுப்தீன் முபாரக்கின் பிரியத்திற்குரிய அடிமையும், ஆட்சியில் முக்கிய பொறுப்பும் வகித்த குஷ்ருகான், சுல்தான் பெரோஸ் துக்ளக்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சுல்த்தான் முகமது ஆட்சியில் முக்கியப்பொறுப்பு வகித்த கருப்பினத்தைச் சேர்ந்த க்வாஜா ஜெகான் மாலிக் சர்வார் என்பவரும் திருநங்கையே என்பதும் வரலாற்றின் வாயிலாக அறியவருகிறது.

 பாலியல் சிறுபான்மையினரான திருநங்கைகள் குறித்து கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் 'அன்னகர்' என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இசுலாம் சமூகத்தில் பிறந்து பின்னர் வரலாற்றில் வெற்றியாளர்களாய் திகழ்ந்த மாலிக்காபூர், குஸ்ருகான், ஜலாவுதீன்கான் போன்றோர் திருநங்கைகளே. முகலாயர் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1526-1665) அந்தப்புர காவலர்களாக திருநங்கைகளே நியமிக்கப்பட்டுள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'சீவகசிந்தாமணி'யிலும் வாத்ஸ்யான‌ரின் 'காமசூத்திரத்திலும்' திருநங்கைகள் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

புராணக்கதையான மகாபாரதத்தில் யுத்தம் துவங்கியபோது பாண்டவர்கள் தங்களின் வெற்றிக்காக ஒரு சுத்தவீரனை பலி கொடுக்க வேண்டி அர்ச்சுனனுக்கும், நாகவம்சத்தைச் சேர்ந்த உலுபி என்ற பெண்ணுக்கும் பிறந்த திருநங்கையைத் தேர்வு செய்தபோது அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்பாக இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட விரும்பியபோது, அவர் திருநங்கை என்பதால் அவருக்கு எவரும் பெண் கொடுக்க முன்வராத சூழலில் கிருஷ்ணர் பெண் உருவம் எடுத்து அவரை மணக்கிறார். மறுநாள் திருநங்கை களப்பலி கொடுக்கப்பட்டதும் பெண் உருவிலிருந்த கிருஷ்ணர் தாலி அறுக்கிறார் என்ற புராணக் கதையின் நிகழ்வுதான் அரவாணத் திருவிழாவின் மையமாகும்.

பாலின உணர்ச்சியானது ஆணிலிருந்து பெண்ணுக்கு எவ்வாறு வேறுபடுகிறதோ அதே போலவே திருநங்கைகளுடைய பாலின உணர்ச்சி வேறுபட்டது. இதன் காரணமாக திருநங்கைகள் ஆண்/பெண்ணைவிட குறைவானவர்கள் என்று எவரும் கருதி விடமுடியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 திருநங்கைகளுடனான மற்றும் திருநங்கைகளுக்கு இடையேயான புணர்ச்சியானது இயற்கைக்கு முரணான புணர்ச்சியாக, தண்டனைக்குரிய குற்றமாகவும் காண்கிறது. இதற்கு முரணாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு பிறகு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பினை   சீராய்வு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட மனு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு பிறந்து, பெண்கள் பள்ளியில் படித்த நங்கை என்பவர் பெண்கள் பிரிவில் காவல்துறையில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு 2011 ஆம் ஆண்டு காவலர் பணி வழங்கப்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், அவர் பெண்ணல்ல, திருநங்கை என்று கூறி பணியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நங்கை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தனர். பாலினம் பற்றி குறிப்பிடும் போது அவர் தன்னை பெண் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பிறப்பு சான்றிதழிலும் பெண் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, அவரை  மீண்டும் வேலையில் தொடர அனுமதிக்குமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து மூன்று தினங்களுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் 18 ம் நாள் இத்தீர்ப்பு பகரப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக இனி இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாது என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

துரதிருஷ்டவசமாக திருநங்கைகள் அவர்களது உரிமைகளை பெறுவதற்கான சட்டங்கள் நமது நாட்டில் இன்னும் இயற்றப்படாமல் உள்ளன. நேபாளம், பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, திருநங்கைகள் பாதுகாக்கப்படுகின்றனர். பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. ஆகையால் சர்வதேச நாடுகளில் திருநங்கைகளுக்கு அளிக்கப்படும் உரிமைகள் இந்தியாவிலும் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.


திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்ட, சமூக ரீதியாக அங்கீகரித்தல், அயல்நாடுகளில் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு வாய்ப்புகள் உள்ளதுபோல இங்கும் வாய்ப்புகள், தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படல், பெயர், மதம் மாற்றுவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் இருப்பது போல பாலினம் மாற்றுவதற்கும் சட்ட அங்கீகாரம் அளித்தல் என்பது போன்ற திருநங்கைகள் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளுக்கு அடிப்படையான தனி சட்டத்தினை நடுவணரசும், மாநில அரசுகளும் விரைவில் இயற்றி அது தொடர்பான பணிகளை   முன்னெடுத்தலின் மூலமாக மட்டுமே, திருநங்கைகள் வாழ்வு மேம்படும்.

-இ. இ. இராபர்ட் சந்திரகுமார்

Tuesday, April 10, 2012

கைது – ஏன்? எதற்கு? எப்படி?


குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது” சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும் பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.

நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைது”தான்.


குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் – குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும், குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது” ஆகும்.

ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல், அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல் புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள்தான்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில் உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.

இதை தீர்க்கதரிசனத்துடன் கணித்திருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், இந்திய அரசியல் சட்டத்திலேயே கைதுகள் குறித்தும் எழுதியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்”.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது”.

ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும். இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில் இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.

எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள் குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும் தவிர்க்க முடியும்,

சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்:

இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.

எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.

சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.

கைது நடைமுறைகள்:

கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்”.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம்”. (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்”.

பெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும். எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும் கைது செய்யலாம்.

பொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால் அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

கைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும், உச்சநீதிமன்றமும்  ஏற்படுத்தியுள்ளன. அவை குறித்து அடுத்து பார்க்கலாம்.