Sunday, September 30, 2007

‘விதை'யின் பிடியில் உலகம் (இனி பேரழிவு ஆயுதங்கள் தேவை இல்லை; விதைகளே போதுமானவை!)

மகாராட்டிர மாநிலம் யோவத்மல் மாவட்டத்தின் சீங்காபூர் கிராமத்திலிருந்து கடந்த ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மிகவும் விசித்திரமான ஓர் அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்கள் இருவரையும் அந்த கிராமத்தில் நடைபெற இருந்த விழாவை தொடங்கி வைக்க வருமாறு, அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். விவசாயம் பொய்த்துப் போன சூழலில், கடன்களைக் கட்ட இயலாமல், தங்கள் பசியைப் போக்க கதியற்று அந்த கிராமத்தினர் அனைவரும் தங்களுடைய சிறுநீரகத்தை விற்க முன்வந்தனர்.


அந்த விழாவை தொடங்கி வைக்கத்தான் அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அவர்கள் அழைத்திருந்தனர். அந்த அழைப்பு புது தில்லியை சென்றடைந்த நேரம், அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கும் 60ஆவது சுதந்திரநாள் கொண்டாட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.


மகாராட்டிர மாநிலம் வார்தா மாவட்டத்து டோர்லி கிராமத்தின் மரங்களிலும், ஊர் எல்லையிலும் பரவலாக அறிவிப்புகள் : ‘கிராமம் விற்பனைக்கு உள்ளது’. அடுத்த கிராமமான ஷவானி ரேகிலாப்பூரில் மொத்த கிராமமும் தங்களை கூட்டுத் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது. பஞ்சாபில் உள்ள மல்சீங்வாலா கிராமத்தினர் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய மொத்த தொகை ரூபாய் அய்ந்து கோடி. கந்து வட்டிக்காரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூபாய் 2.5 கோடி. இதைக் கட்ட முடியாத அந்த பஞ்சாயத்து ஒன்று கூடி, கிராமத்தின் மொத்த 1800 ஏக்கரையும் ஏலம் மூலம் விற்க ஆயத்தமானது.


கர்நாடகாவுக்கு அருகில் உள்ள ஆந்திரத்தின் வழியில் தற்கொலை விகிதத்தில் உயர்வு காணப்படுகிறது. இரு மாநிலங்களும் கணினி மென்பொருள் தொழில் நோக்கி சாய்வு கண்டிருப்பதால், அவற்றின் கண்களுக்கு இந்த சாவுகள் ஒரு பொருட்டே அல்ல. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்தான் இந்த நூறு கோடி மக்களின் பசியைப் போக்குபவர்கள். பசியைப் போக்கும் நடவடிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் 1,50,000 விவசாயிகள் பூச்சிக் கொல்லி அருந்தி தங்களை மாய்த்துக் கொண்டனர். இருப்பினும் எந்தப் பாடமும் கற்காத நம் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தொண்டாற்றுவதில் அதிதீவிரமாக செயல்படுகின்றன.


1985 இல் கிடைத்த விலையில் பெரிய மாற்றம் எதுவும் விளைபொருட்களுக்கு கிடைத்திடவில்லை. ஆனால், இடு பொருட்களின் விலை 34 மடங்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவில் விவசாயிகளுக்கு அந்த அரசுகள் மானியத்தை வழங்கியிருக்கின்றன. ஆனால், அந்த நாடுகளிலிருந்து இந்தியா நோக்கி வரும் பரிந்துரைகள் ‘மானியங்கள் கூடாது' என உத்தரவிடுகின்றன. பசுமைப் புரட்சியின் பெயரால் ரசாயனக் கழிவுகளை கடந்த 40 ஆண்டுகளாக நம் பூமியில் கொட்டி, மொத்த நிலத்தின் வளத்தையும் பாழடித்து விட்டார்கள். நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து, மண் செத்துக் கிடக்கிறது. செத்த மண்ணுடன் உரையாடும் விவசாயியும் சாகிறான்.


1986 இல் ‘பம்பர்ஸ் சட்டத்திருத்தம்' (Bumper’s Amendment) அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, உலக அளவில் நடக்கும் விவசாயம் தொடர்புடைய ஆய்வுகளுக்கு, அது வரையிலும் வழங்கப்பட்ட அமெரிக்க நிதியுதவியை நிறுத்த வழிவகுக்கும் சட்டம் அது. விவசாய நூல்களைப் பதிப்பித்தல், மாநாடுகள் நடத்துதல் என ஏராளமான நடவடிக்கைகள் உலகெங்கிலும் பாதி வழியில் திசை அறியாது நின்றன. இவை அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுத்திடும் என்பது அவர்களது வாதம். இந்த சட்டத்திற்குப் பிறகு, அமெரிக்காவை சேர்ந்த 20 நிறுவனங்கள் மட்டுமே உலகளவில் இத்துறையில் கோலோச்ச வழி செய்தது.


உலகின் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெயை தன் வசப்படுத்திய பிறகு, தற்பொழுது அமெரிக்காவின் மொத்த பார்வையும் உணவு சந்தையை நோக்கி திசை திரும்பி உள்ளது. உலகத்தின் பசியைப் போக்க கிளம்பிய புதிய தேவதூதராக காட்சியளிக்கிறார் ஜார்ஜ் புஷ். பசியைப் போக்கும் அருமருந்துடன் அவர் உலகை வலம் வரத் தொடங்கி விட்டார். அவரது கைகளில் மரபீனி மாற்றம்(GENETIC ENGINEERING) செய்யப்பட்ட விதைகள் உள்ளன. இந்த ‘விதை'களில்தான் உலகின் பசியை, வறுமையைப் போக்கும் மந்திரம் பொதிந்துள்ளதாக அவர் கூறுகிறார்.


ஆயுத நிறுவனங்களைத் தொடர்ந்து ஜார்ஜ் புஷ் அலுவலகத்தில் அதிக செல்வாக்கு செலுத்துபவை, உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் உலகின் பல நாடுகளில் நுழைய முடியாமல் தவிக்கின்றன. அய்ரோப்பா அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு தங்கள் திசை பக்கம் வரக் கூடாது என அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் கதிகலங்கியுள்ளன. அமெரிக்க அரசின் தொழில் பிரதிநிதி ரோபர்ட் சோலிக், இந்தத் தடை அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், இறுதியாக அய்ரோப்பாவின் இந்தத் தடை உலகில் பட்டினியை அதிகரிக்கும் என்றும் மிரட்டுகிறார். உலகின் மொத்த விதைகளையும் இந்த நிறுவனங்கள் திருடி தங்கள் வசம் வைத்துள்ளன.


இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 1,50,000 நிலைத்திணை வகைகள், அமெரிக்க உயிரியல் ஆய்வுக் கூடங்களில் உள்ளன. அமெரிக்க அரசின் விவசாய அமைச்சகமும், உயிரியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏராளமான இந்தியத் தொண்டு நிறுவனங்களைப் பணியில் அமர்த்தினர். கடந்த அய்ந்தாண்டுகளாக இந்தியா முழுவதிலும் இந்த 1,50,000 செடி வகைகள் குறித்த மரபான அறிவை சேகரித்து வருகிறார்கள். இந்த திட்டங்களுக்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான தொகையை ஒதுக்கி வருகின்றன. அதில் குறிப்பாக ‘போர்டு' நிறுவனம் விதைகள் பற்றிய தகவல்களை இரு தலைப்புகளில் சேகரித்து வருகிறது.


1. ‘பயோடெக்' சார்ந்த அறிவியல் தகவல்கள்

2. வாய்மொழி வரலாற்றில் இருக்கும் தகவல்களை, நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளின் மூலம் பெறுவது.


எனவே, உங்கள் கிராமங்களை நோக்கி வரும் ஆய்வாளர்களிடம், ‘யாருக்காக இந்த ஆய்வை செய்கிறீர்கள்?' என்ற கேள்வியை முதலில் எழுப்புங்கள். இந்த 1,50,000 நிலைத்திணை வகைகளை அமெரிக்காவிற்கு கள்ளக் கடத்தல் செய்தவர்கள், இந்தியாவின் உயர் பதவிகளில் சொகுசாய் வாழ்ந்து வருகிறார்கள். அடிமைகள் இருக்கும் வரை ஏகாதிபத்தியம் செழித்தோங்கும் என்பதில் அய்யமில்லை.


கலிபோர்னியாவின் சேக்ரமென்டோ டவுன் டவுனில் சூன் 23-25, 2007இல் ஒரு மாநாடு நடைபெற்றது. அமெரிக்க விவசாயத் துறை செயலர் ஆன் வெனேமன் விடுத்த அழைப்பின் பெயரில், 180 நாடுகளை சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தரும் நன்மைகள், லாபங்கள் குறித்த விவாதங்கள் இங்கு நடைபெற்றன. உலகின் பட்டினியை, பசியைப் போக்க தவம் செய்து வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால், அரசியல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.


இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து வைத்துள்ள மரபீனி மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஒட்டுமொத்தமாக எல்லா நாடுகளும் அனுமதிக்கவில்லை. எனவே, ஆத்திரத்தில் அலையும் இந்த நிறுவனங்கள் தற்காலிக இடைவெளிகளை கண்டுபிடித்துள்ளன. பட்டினியால் வாடும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவு உதவி அளிக்கப் போவதாகக் கூறி, இந்த விலை போகாத சரக்கை ஏற்றுமதி செய்கிறார்கள். அய்.நா. உலக உணவுக் கழகம், செஞ்சிலுவை சங்கம் என அனைத்து நிறுவனங்களும் இனி தங்கள் திட்டங்களுக்கு, உயிரியல் தொழில் நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.


ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத் திட்டங்களில் இனி மரபீனி மாற்று உணவுகள்தான் வழங்கப்படும். தன் சொந்த தேசம் உண்ண மறுக்கும் தானியங்களை, மற்றவர்கள் மீது திணிப்பது உலகின் மிகப் பெரிய மனித உரிமை மீறல். அப்படி எந்த தேசமும் இனி இந்த நிறுவனங்களை அனுமதிக்க மறுத்தால் ஈராக், ஆப்கானிஸ்தான் கதிதான். பேரழிவு ஆயுதங்கள் அல்ல; விதைகளே போதுமானவை. இவை போக புதிய மரபீனி மாற்று விளை பொருட்கள் அங்காடியை ‘ராக்பெல்லர் பவுன்டேஷன்' மற்றும் மேடிசன் நிறுவனம் தொடங்கியுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இவர்கள் தங்கள் புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள்.


எய்ட்ஸ் நோயால் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புற ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. விவசாயக் கூலிகளின் பற்றாக்குறையை போக்கும் அந்த நாடுகளை, மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள். இந்த விதைகளைப் பயன்படுத்தினால் அதிக பூச்சிக் கொல்லி அடிக்க வேண்டியதில்லை, வேலை குறைவு என கதை அளந்து வருகிறார்கள். இவர்களின் இந்த ‘பி.டி.' ரக விதையை பயன்படுத்திதான் விதர்பா, ஆந்திரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து, தெளித்து இறுதியில் கடன்களை சமாளிக்க முடியாமல் மிச்ச மீதி பூச்சிக்கொல்லியை தாங்களே குடித்து மாண்டனர். மேடிசன் நிறுவனத்தின் அடுத்த இலக்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள். இவர்களின் வேலை புள்ளி விவரங்களைத் தயாரிப்பது, பஞ்சங்களை ஏற்படுத்துவது (யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை).


அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, இந்தியா தனது கதவுகளை அகலத் திறந்துள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரபீனி மாற்று விதைகளை ஆய்வு நோக்கில் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். எராளமான காய்கறி, எண்ணெய் வித்துக்கள் என உணவு வகை ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஆய்வுகள் முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. இந்திய தட்பவெப்ப சூழலுக்கு இவை உகந்ததா? நம் மண்ணில் இவை விளையுமா? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் நம்முன் விடையின்றி நிற்கும்போது, நம் விஞ்ஞானிகள் மற்றும் அரசு செயலர்கள் இந்த விதைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இதில் சமீபத்திய வேடிக்கை உயிரியல் தொழில் நுட்பத் துறையின் செயலர், ஜி.எம். உருளைக்கிழங்கில் 40 சதவிகிதம் புரதச்சத்து இருப்பதாக பேட்டியளித்தார். மறு நாள் அது 2.5 சதவிகிதம்தான் என ஆய்வு நிறுவனம் அறிவித்தது. இது போல் இனி எல்லா மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் குறித்த கட்டுக் கதைகளும் மடை திறந்த வெள்ளமாய் வரும். குடிமைச் சமூகமே எச்சரிக்கை!


இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட எல்லா இடங்களிலும் நடந்த முறைகேடுகள் தற்பொழுது வெளிவருகின்றன. இந்த ஆய்வுக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வயல்களில், அந்த வயலின் உரிமையாளர்களிடம் என்ன ஆய்வு நிகழ்த்தப்படுகிறது என தெரிவிக்கப்படுவதில்லை. அண்டை வயல் உரிமையாளர்களிடம் இந்தத் தகவல்கள் பரிமாறப்படவில்லை. அந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெறுவதில்லை. மரபீனி தொடர்புடைய இந்த ஆய்வுகளை கண்காணிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி தொழில்நுட்ப அனுமதி குழு உருவாக்கப்பட்டுள்ளது (Genitic Engineering Approoval Committee- GEAC). இக்குழுவின் அனுமதியின்றி எந்த ஆய்வும் நிகழாது. இக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் முன்பே பஞ்சாயத்துக்களில் அனுமதி பெற வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் இனி இந்த அதிகாரத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


கோக்கோகோலா நிறுவனத்தை பிளாச்சிமடாவிலிருந்து விரட்டியடித்ததில் அந்த பஞ்சாயத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் எல்லையோரத்தில் கேரளாவுக்குள் அமைந்துள்ள கிராமம் பிளாச்சிமடா. அங்கு கோக்கோ கோலா ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிளாச்சிமடா மக்களும் அந்த பஞ்சாயத்தும் விழித்துக் கொண்ட பிறகு, அந்தப் பன்னாட்டு நிறுவனத்தால் ஆலை நடவடிக்கைகளை தொடர இயலவில்லை. இந்திய அளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பாளர்கள், முன்னணித் தலைவர்கள் பலரும் பிளாச்சிமடாவுக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாக நடந்து வந்த மக்கள் இயக்கத்திற்கு வலு சேர்த்தாலும், பிளாச்சிமடா பஞ்சாயத்து அந்த ஆலையை ரத்து செய்த முடிவுதான் இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய பலம். உச்ச நீதிமன்றம்கூட பஞ்சாயத்தின் தீர்மானத்தை மாற்ற முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. இதுபோலவே கங்கைகொண்டானில் சிவகங்கையிலிருந்து விரட்டப்பட்ட கோக் நிறுவனத்தை நிறுவ முயன்றபோதும், அங்கு பல்வேறு மக்கள் இயக்கங்கள் களமிறங்கிப் போராடினர். இதில் பங்கேற்ற பஞ்சாயத்து தலைவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இனி இத்தகைய ஆய்வுகளுக்காக எந்த பஞ்சாயத்திலும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அனுமதி கோரினால், உடனடியாக கிராம அவை கூட்டப்பட வேண்டும். அதில் இந்த விதைகள் குறித்த ஆபத்துகள், தீமைகள் குறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும். அந்த விதிமுறைகள், எச்சரிக்கைகளைத் தெரிந்து கொண்டு, ஆய்வு நடக்கும் காலங்களில் அண்டைய வயல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம். மரபீனி மாற்றம் செய்ய நடைபெற்ற பயிற்சிகள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிதான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும். இந்த வயலில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் இதே பயிரின் மரபான ரகம் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. எனவே, இந்திய பஞ்சாயத்துகள் விழிப்போடு இருந்தால், நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கக் கூடிய நிறுவனங்களை கால் பதிக்க விடாமல் விரட்டியடிக்க முடியும்.


தினமும் 32 கோடி பேர் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நாடு இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6.5 கோடி டன் உணவு தானியங்கள் உபரி கையிருப்பாக இருந்த தேசமிது. ஒரிசாவின் காலாஹந்தி பகுதி மக்கள் தங்கள் கண் முன்னால் அரசு கிடங்குகளில் அரிசி அழுகி நாற்றமெடுப்பதை காண்கிறார்கள். ஓராண்டில் ஆறு மாதத்திற்கு ஒரு நேரம் மட்டுமே உண்ணுகிறார்கள். 6.5 கோடி டன் உபரி உணவு தானியங்களால் இந்தியாவின் பசியை, பட்டினியைப் போக்க இயலாதபொழுது -மரபீனி மாற்று தானியங்கள் மட்டும் எப்படி உலக மக்களின் பசியைப் போக்கும்?


உயிர்க்கொல்லிகள்


பூமிப்பந்தின் மேல் சில அங்குல அளவே படிந்துள்ள ‘மேல் மண்' (Top Soil) தான் நாகரிகங்கள் தோன்ற அடிப்படையாக இருந்து வந்துள்ளது. இந்த மேல் மண் உருவாக பூமியின் பரிணாமத்தில் பூகோள ரீதியான பல அம்சங்கள் துணை புரிந்துள்ளன. இயற்கையான அரிமானத்தின் அளவை புதிய மண் உருவாவது மிஞ்சும்பொழுதுதான் மேல் மண் உருவாகிறது. இந்த மேல் மண்தான் பூமியில் உள்ள அத்துணை தாவரங்களையும், மரங்களையும் தன் சிசுவாய் வளர்த்தது. இதற்கு கைமாறாக இந்தச் செடிகளும், மரங்களும் மண் அரிமானத்தை தடுத்து உதவுகின்றன. மனித நடவடிக்கைகள், இந்த ஆயிரம் ஆண்டு பந்தத்தை சீர்குலைத்து விட்டன. உலக சாகுபடி நிலத்தில் முக்கால் பங்கு ‘மேல் மண்'ணை இழந்து விட்டது. கண்மூடித்தனமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இந்த கதி ஏற்பட மூலகாரணமாகும். உலகத்தை மீண்டும் நுண்ணுயிர்களுடன் கூடிய சத்தானதாக மாற்ற, வட்டார அளவிலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை எதற்கும் அரசு உதவி என்பது கிஞ்சித்தும் இல்லை.-அ. முத்துக்கிருஷ்ணன்


நன்றி:

செப்டம்பர் 2007

Thursday, September 27, 2007

மண்ணிலிருந்து ‘பிரித்தெடுக்க’ப்படுகிறார்கள் மக்கள்

அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன. இருந்தாலும், இன்றைய தேரிக்காட்டு மக்கள் அரேபியாவின் மூதாதைகளைப் போல அத்தனை ஏழைகளல்லர்!1908 ஆம் ஆண்டு அரேபியாவில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தான் குளத்தைப் போலவே அந்தக் கண்டுபிடிப்பை அம்மக்கள் முதலில் கண்டு கொள்ளவில்லைதான். 1930-களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட படையெடுத்தபோது மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தையே தீர்மாணிக்கும் அளவிற்கு அரேபியாவின் பெட்ரோல் வளம் வளர்ந்தது. உலக வல்லரசுகள் இன்றுவரை இந்தப் பகுதியில் உள்ள நாடுகளைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அமெரிக்க அரசு இன்றளவும் துவம்சம் செய்து வருவது அங்கிருக்கும் பெட்ரோல் வளத்திற்காகத்தான் என்பதை பிறந்த குழந்தையும் அறியும்.பாலைக் காட்டிலும் வெண்மை நிறம் கொண்டது டைட்டானியம். இந்தத் கனிமத்தை 1791 ஆம் ஆண்டில் மனித இனம் முதன்முதலாக அறிந்து கொண்டது. 1795 ஆம் ஆண்டில் இதற்கு “டைட்டானியம்” என்ற பெயரை அது சூட்டியது. எனினும் அதனை சுத்தமான உலோகமாக மாற்றக் கற்றுக் கொண்டது என்னவோ 1910 ஆம் ஆண்டில்தான்! இல்மனைட் மற்றும் ரூட்டைல் என்ற கனம் கூடிய கனிமங்களில் இருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறைகள் இதன் பின்னரே கண்டறியப் பட்டன. 1946 ஆம் ஆண்டு வரையிலுமே டைட்டானியத்தை பரிசோதனைக் கூடங்களால் மட்டுமே உருவாக்க முடிந்தது. அந்த வருடத்தில்தான் டைட்டானிய உலோகத்தினை பெரிய அளவில் உருவாக்க முடியும் என்பதைக் “கிரால்” என்பவர் கண்டு பிடித்தார். அவரால் முன்மொழியப்பட்ட அந்த முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது.ஆங்கிலேய அரசினருக்குக் கீழிருந்த “இந்திய நிலவியல் துறை”க்குத் தென்னிந்தியாவின் “தேரி”யிலும், கடற்கரைகளில் உள்ள “கருமணலிலும்” இல்மனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற “கனத்த” கனிமங்கள் இருப்பது தெரிந்து தான் இருந்தது. இருப்பினும் அன்றைய உலக சந்தையில் அவற்றிற்கு மதிப்பில்லை. எனவே இந்தக் கனிமங்களை வெள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் நம்மிடமே விட்டுச் சென்று விட்டார்கள்.மற்ற உலோகங்களைக் காட்டிலும் டைட்டானியம் எடை குறைந்தது. அதே நேரத்தில் எஃக்கைக் காட்டிலும் உறுதி மிக்கது. எந்த உலோகத்துடனும் எளிதில் சேரும் சிறந்த தன்மையையும் கொண்டது. இந்தத் தன்மைகள் சோவியத் ஒன்றியத்தின் விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தன. தம் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த உலோகத்தினை அவர்கள் பெரிதளவில் உபயோகப்படுத்தத் தொடங்கினர். இதுவே டைட்டானியத்தின் புகழை 1950--60-களில் எட்டுத்திக்கும் பரவச் செய்ததது. சோவியத் விஞ்ஞானிகளின் போக்கைக் “கன்னம்” வைத்து அறிந்து கொண்ட அமெரிக்க அரசு துடித்துதான் போனது. இருப்பினும் உடனடியாக சுதாரித்தும் கொண்டது. டைட்டானிய உலோகத்தை “இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம்” என்று அறிவித்து, அதனை சேமித்து வைக்கும் பணியில் உடனடியாக ஈடுபடத் தொடங்கியது. தான் உருவாக்கும் போர் விமானங்களில் மிக அதிக அளவில் டைட்டானிய உலோகத்தினை உபயோகிப்பது என்ற முடிவை எடுத்தது.மேற்கூறிய தன்மைகளே டைட்டானியக் கனிமத்தின் தீராப் புகழுக்குக் காரணம். என்றாலும் கூட, இன்றைய தேதியில் மனித இனத்தை அதன் அப்பழுக்கற்ற வெண்மை நிறமே அதிகம் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் டைட்டானியக் கனிமத்தில் 95% இந்த வெண்மை நிறத்திற்காகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை!டைட்டானியம் கனிமம் இல்லையேல் வெள்ளை பெயிண்ட்,, வெள்ளைக் காகிதம், (அ.இ.அ.தி.மு.க-வால் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு தமிழ்நாடு அரசியல்வாதிகள் அனைவரையும் தொற்றிக் கொண்ட “அரசியல்வாதி வெள்ளை யூனிபார்ம்” தைக்கத் தேவையான) வெள்ளைத் துணி, வெள்ளை பிளாஸ்டிக், பற்பசை, சலவைப் பவுடர், சூயிங்கம் போன்றவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் வெண்மை நம்முடன் இரண்டறக் கலந்து போயிருக்கிறது.இந்தக் கவர்ச்சியே ரத்தன் டாட்டாவை சாத்தான்குளத் தேரியை நோக்கிப் பாய்ந்தோடி வரச் செய்தது.குட்டம், நவ்வலடி கடற்கரை மணலிலும், சாத்தான் குனத்தின் தேரிக் காட்டிலும் மேற்கூறிய கனிமங்கள் பெரிதளவில் உள்ளன என்பதை 1980-களில் இருந்து கல்லூரி ஆய்வாளர்கள் பலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன. 1989 ஆம் ஆண்டில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை நகரத்தில் வி.வி.மினரல்ஸ் என்றொரு நிறுவனம் இயங்கத் தொடங்கியது. குட்டம், நவ்வலடிப் பகுதிகளில் கடற்கரைக் கருமணலுக்காக எப்பேற்பட்ட இழி செயலையும் செய்ய அது துணிந்தது.கடலை அம்மையாக வணங்கும் மீனவ மக்கள் அந்த நிறுவனத்தின் கொடூர லாபப் பசியின் துவம்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அரசியல் செல்வாக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்தமையால் ஏழை மீனவர்களால் அநீதியைத் தின்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை. நிறுவனத்தின் அடாவடி ஆட்டம் இன்று ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இல்மனைட் கனிமத்தை உற்பத்தி செய்யும் “மதிப்பு மிக்க” நிறுவனமாக அதை “உயர்த்தியிருக்கிறது!”1998 ஆம் ஆண்டில் இந்தியக் “கனிம மணல்” தொழிலில் உலக முதலாளிகள் எவரும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிவித்த போதுதான் டாட்டாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. டூ பாண்ட் போன்ற பகாசுர டைட்டானிய வெள்ளை நிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக நினைத்தார் ரத்தன் டாட்டா. 2000 ஆம் ஆண்டில் தேரி மணலைத் தோண்டுவதற்கான அப்ளிக்கேஷனை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே அவருக்கு பதில் கிடைத்தது. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) தேரி நிலத்தில் உள்ள மணலைத் தோண்டுவதற்கும், மணலில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கும், பிரித்தெடுத்த கனிமங்களைக் கூடுதல் மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவதற்குமான “உத்தேச” உரிமத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஜீன் 27 ஆம் தேதியன்று இதில் சுமார் 25%-ஆன 5000 ஏக்கர் நிலத்திற்கான “உத்தேச உரிமத்தை” வழங்கவே தமிழ்நாடு அரசு முன்வந்திருந்தது. வேறு வழியின்றி இந்த உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் ரத்தன் கையெழுத்திட்டார்.கவலை வெகு நேரம் நீடிக்கவில்லை. தேரியின் சிவந்த நிறம் ரத்தனை சிலிர்க்க வைத்தது. மும்பையின் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களால் கொடுக்க முடியாத பேரானந்தத்தை சாத்தான்குளத்துத் தேரியின் வறண்ட காற்று அவருக்கு அளித்தது. உப்பு முதல் புல்டோசர் வரை முக்கித் திணறி வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து உற்பத்தி செய்து ஈட்டிய லாபத்தை சில வருடங்களுக்குள்ளேயே இந்தத் தேரியிலிருந்து கறந்துவிட முடியும் என்ற கனவுகள் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின.சுட்டுவிரல் ஆட்டத்தில் அனைத்தும் நடந்தேறின. இந்திய அணுசக்தித் துறையைத் துவங்கிய டாக்டர்.ஹோமி பாபாவை 1944 ஆம் ஆண்டில் இந்தியப் பிரமுகராக உருவாக்கியதே ரத்தனின் தாத்தா சர்.தோராப்ஜி டாட்டா அவர்களின் அறக்கட்டளைதான் அல்லவா? தேரியைப் பரிசோதிக்கத் தேவையான அணுசக்தித் துறையின் “சான்றிதழ்” கிடைப்பதில் இம்மியும் சிரமமிருக்கவில்லை. காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் உடனடியாகக் கிடைத்தது.தேரியின் வளத்தைப் பரிசோதிக்க உலக நிபுணர்கள் ஓடோடி வந்தார்கள். பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக் -ஆலன்-ஹோல்ட், இந்தியாவின் எல்&டி நிறுவனங்களில் இருந்து வந்த அந்த வெள்ளை நிபுணர்கள் இரவு பகல் பாராது தம் பரிசோதனைகளை நடத்தினர். கிடைக்கும் கனிமங்களை இனம் வாரியாகப் பிரிப்பதற்கும், மதிப்பு கூட்டுவதற்கும் தேவையான திட்டங்களைத் தீட்ட ஆஸ்திரேலிய நாட்டின் ஜிஞீவிமி, இந்தியாவின் தஸ்தூர்கோ நிறுவனங்களை ரத்தன் கேட்டுக் கொண்டார்.தேரியின் பரிசோதனைக்காக செலவிட்ட 15 கோடி ரூபாய் மன நிறைவை அளிப்பதாக அமைந்தது. நிம்மதியில் பெருமூச்சு விட்டார் ரத்தன்.


ஆடு புலி ஆட்டம்


2006 மார்ச் மாதம் அனைத்து பரிசோதனைகளும், திட்டங்களும் நிறைவடைந்தன. தண்ணீர் மட்டும்தான் பிரச்சினை. நாள் ஒன்றுக்கு சுமார் 546 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவை என்றார்கள் நிபுணர்கள். தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பது முந்தைய திட்டம். குடிநீருக்கே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் மணல் குவாரிக்குத் தண்ணீரைக் கொடுக்க எந்த அரசுதான் முன்வரும்? வேறு வழியின்றி குலசேகரப் பட்டணத்தில் இதற்காக “கடல் நீர் உப்பகற்றி ஆலை” ஒன்றை நிறுவுவது என்று முடிவானது. உப்பகற்றி ஆலையோடு சேர்த்து 30 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் ஒன்றையும் அமைத்தால் உப்பகற்றி ஆலைக்கு ஆகும் செலவு குறையும். மேலும் திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தையும் குறைந்த விலையில் பெற்றிட முடியும் என்று ஆலோசனை கூறப்பட்டது. இவ்வாலைகளை நிறுவுவதற்காக குலசேகரப் பட்டணத்தில் சுமார் 213 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் 2007 ஜீன் மாதம் பழைய ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பித்தது. ஜீன் 28 ஆம் தேதியன்று இந்தப் புதிய ஒப்பந்தத்தில் டாட்டாவும், தமிழக அரசும் கையெழுத்திட்டன. இதன்படி டாட்டாவின் திட்டத்திற்காக முதல் முதலில் கோரப்பட்ட 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) நிலத்தில் (கிட்டத்தட்ட) சரி பாதியான 9828.78 ஏக்கர் தேரிக் காட்டை தமிழக அரசே கையகப் படுத்திக் கொடுக்கும் என்று முடிவானது.இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தன. இவ்வெதிர்ப்பின் காரணம் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கியது. நிலத்தை டாட்டா நிறுவனமே பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியது. “ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடியும். வறண்ட தரிசு நிலமான தேரிக்கு இதுவே அதிகம்“, என்றது டாட்டா நிறுவனம். கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அமைச்சர் ஒருவரின் தலைமையில் பகுதியைப் பாரிவையிட்டு ஆய்வறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏக்கருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுக்கலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது.திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது தமிழ்நாடு அரசு.“எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தாங்கள் சந்திக்கத் தயார். திட்டத்தை விட்டு விலகுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை” என்ற அதிரடி அறிக்கையை டாட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.டைட்டானிய ஆலை வந்தால் நிலத்தை விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேரிக்காட்டை நோக்கி செல்லும் காவடிக் கூட்டம் என்றும் கிண்டலடித்திருக்கிறார். தமிழக அரசும் திட்டத்தின் நன்மைகளை விளக்கி அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியுமா என்ற சந்தேகத்தை எழுப்பவே அவர்களின் மேற்கூறிய நடவடிக்கைகள் இன்றளவும் உதவியிருக்கின்றன.திட்டத்தின் உண்மை நிலவரத்தை முதல்வரிடம் விளக்கும் பொறுப்பு டிட்கோ அதிகாரிகளுடையது. அவர்கள் அப்பணியை சரிவரச் செய்யவில்லை போலும். அவர்களின் அரை வேக்காட்டுப் பேச்சை நம்பித்தான் கலைஞர் திட்டம் குறித்துத் தவறான கருத்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறாரோ?இல்லை ‘‘வேறு’’ எதுவும் காரணமோ? தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் திட்டம் குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள்


இந்தத் திட்டத்தினால் மூன்று மக்கள் குழுக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இரண்டுவகை நிலப்பகுதிகளும், அவற்றில் வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.


1. திட்டத்திற்காக நிலத்தை விற்கப் போகும் மக்கள்


2. திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மின் நிலையத்தையும், நல்ல நீரைக் கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையையும் ஏற்றுக் கொள்ளவிருக்கும் குல சேகரப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராம மக்களும், மீனவர்களும்


3. திட்டம் வரவிருக்கிற “சாத்தான் குளத் தேரி”யை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்


4. சாத்தான்குளம் தேரியைச் சுற்றியுள்ள நிலப் பகுதி


5. குலசேகரப்பட்டணத்தை அடுத்துள்ள கடற்கரையும், கடலும், அவற்றில் வாழும் உயிரினங்களும்.ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது.குலசேகரப் பட்டணம் மற்றும் அதை அடுத்துள்ள மணப்பாடு போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாவ்வாதாரங்களும் கடல் நீர் உப்பகற்றி ஆலையின் இயக்கத்தாலும், மின் நிலையத்தின் செயல்பாட்டாலும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.


இப்பாதிப்புகள் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது உடனடி அவசியம். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டத்திற்காக டாட்டா நிறுவனம் மேற்கொண்ட அனைத்து ஆய்வறிக்கைகளையும் மக்கள் முன் வைத்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.திட்டத்திற்கான “சுற்றுச் சூழல் தாக்கீட்டு அறிக்கை”யையும், “சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அறிக்கை”யையும் புது தில்லியைச் சேர்ந்த “மின்-மெக்” என்ற நிறுவனம் செய்திருப்பதாக திட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கைகளை உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.அதுபோல பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக்-ஆலன்-ஹோல்ட், ஆகிய நிறுவனங்களும், ஆஸ்திரேலிய நாட்டின் TZMI, நிறுவனமும் திட்டம் குறித்து முன்வைத்த அனைத்து தொழில்நுட்ப அறிக்கைகளையும் உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வறிக்கைகளின் அடிப்படையில்தான் இப்பகுதி மக்களும், உயிரினங்களும் எதிர்நோக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமான இவ்வறிக்கைகளை டாட்டா நிறுவனம் இன்றுவரை வெளியிடாதது ஏன்? டாட்டாவின் இந்தக் கயமைத் தனத்தைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்காமல் இருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள?தென்மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு என்றும், நாட்டின் வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டு இத்திட்டம் பற்றி ஒன்றுமே தெரியாமல், அதைத் தவிர்த்து ‘எல்லாம் தெரிந்து’ அறிக்கை விடும் அரசியல் தலைவர்களிலிருந்து திட்டத்திற்கான நிலம் திருநெல்வேலிக்கு தெற்கே இருக்கிறதா?, நாகர்கோவிலுக்குத் தெற்கே இருக்கிறதா? என்பதுகூடத் தெரியாமல் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கை விடும் அறிவு ஜீவிகள் வரை அனைவரும் யோசிக்க வேண்டும்.எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், ஒருவனை அவன் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலிருந்து அகதியாக அவனை இன்னொரு இடத்துக்கு துரத்துவது கொடுமையானது. ஆனால், அதைச் செய்வதற்கு தற்பொழுது அனைவரும் ஒன்று திரண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பகுதியை ஏதோ பாலைவனம் போலவும் இவர்கள் அதை மிதமிஞ்சிய வளர்ச்சிப் பகுதியாக மாற்ற டாடாவின் டைட்டானியம் ஆலை உதவும் என்று காரணம் கூறிக் கொண்டிருக்கிறனர்.திட்டத்தில் இருந்து டாட்டாவிற்குக் கிடைக்கப் போகும் லாபம் மிகப் பெரியது. 2005-06 ஆம் வருடத்தில் டாட்டா குழுமத்தின் ஒட்டுமொத்த வர்த்தகமே 97 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால் சாத்தான்குளத் தேரியின் டைட்டானியத் திட்டமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு லாபத்தைக் கொடுக்க வல்லது. ஆனால், அதற்காக தமிழ் மக்கள் கொடுக்கும் விலையோ மிகவும் அதிகம்.இன்னொரு சிலப்பதிகாரமோ?“என் தலையின் மீது நீங்கள் துப்பாக்கியையே வைத்தாலும்பயத்தில் தலையை அசைத்துடுவேன் என்று கனவு காணவேண்டாம்” என்று நான் பலமுறை கூறியுள்ளேன்

-ரத்தன் டாட்டா, மேற்கு வங்காளம், சிங்கூர் பிரச்சனையை ஒட்டி கூறியது


“எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டோம். டைட்டானியம் ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

-டாடா நிறுவன மேலாளர் முத்துராமன்15.8.07


“யார் என்ன சொன்னாலும் டைட்டானியம் ஆலை அமைப்பதைத் தடுக்க முடியாது. டைட்டானியம் ஆலை அமைவது உறுதி”

-தமிழக அமைச்சர் ஆற்காடு வீரசாமி28.9.07 தினத்தந்தி.


திட்டம் குறித்த தகவல்களை “ஒளித்து” வைத்திருப்பதன் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொடுக்கப்போகும் நிலத்தை வெறும் 50 கோடி ரூபாய்க்கு விலை பேசி முடிக்க டாட்டா முயற்சி செய்கிறது. தமிழ்நாடு அரசோ செங்கோலைப் பிடித்து நீதியை வழங்கத் தயங்கிறது.


“கள்வனுக்கே” பரிந்து பேசவும் அது துணிந்திருக்கிறது. தொன்மை வாய்ந்த இந்தத் தமிழ் மண்ணின் மனதில் “இது இன்னொரு கொலைக்களத் காண்டமோ?” என்ற பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறது.


வாழ்வாதாரத்தை இழந்து துடித்திட்ட கண்ணகியை நினைவுபடுத்துகின்றனர், சாத்தான்குளத் தேரியின் மைந்தர்கள்!


மீண்டும் ஒரு முறை சிலம்பின் அவல முடிவை நாம் சந்தித்துதான் ஆக வேண்டுமா?.
-அசுரன்-மருத்துவர் இரமேஷ்-கு.காமராஜ்
நன்றி:
செப்டம்பர், 2007
இந்த விவகாரம் குறித்து மேலும் தகவலுக்கு பார்க்கவும்:
www.tatatitanium.blogspot.com,
www.tatatitanium.wordpress.com

Tuesday, September 18, 2007

இந்திய உச்ச நீதிமன்றமும், நார்வே நாட்டு நீலப்பெண்ணும்…!

குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்தில் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “புளூ லேடி” என்ற கப்பலை உடைக்க உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனிந்த அதிர்ச்சி?

சுற்றுச்சூழல் குறித்த வழக்குகளில் உச்சநீதி மன்றமும், ஏனைய நீதிமன்றங்களும் இரட்டை அளவுகோலை கையாள்வதை யாரும் உணரமுடியும். பொதுவான தீர்ப்புகளில் மிகவும் முற்போக்கான தீர்ப்புகளையும், கருத்துகளையும் முன்வைக்கும் இந்த நீதிமன்றங்கள் – குறிப்பான பிரசினை குறித்த தீர்ப்புகளில் மிகவும் பிற்போக்கான தீர்ப்புகளை வழங்குவதை பார்க்கலாம்.

பாதிக்கப்படும் பொதுமக்களின் வாழ்க்கையைவிட சட்டத்தின் மூலக்கூறுகளில் ஆழ்ந்த விவாதம் நடத்தும் இந்த நீதிமன்றங்கள், பொதுவாக பாதிக்கப்படும் மக்களுக்கு எதிரான தீர்ப்புகளையே வழங்குகின்றன.

இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பாகதான் இந்த தீர்ப்பும் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தீர்ப்பைக்கண்டு அதிர்ச்சி அடைய நியாயமில்லை. எனினும் இவ்வளவு போராட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் பிறகும் நீதிமன்றங்களின் போக்கில் மாற்றமில்லை என்பதை உணரும்போது அதிர்ச்சியாகத்தான் உள்ளது.
நீலப்பெண்ணின் வரலாறு..!

எஸ்எஸ் பிரான்ஸ் என்ற பெயருடன் 1960ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த கப்பல் 316 மீட்டர் நீளமும், 46ஆயிரம் டன் எடையும் கொண்டது இதில் 11 அடுக்கு தளங்கள் உள்ளன.
டைட்டானிக் திரைப்படத்தில் காட்டப்பட்டதைப்போல ஒரு ஆடம்பர கப்பலுக்கு உரிய அனைத்து வசதிகளும் கொண்ட இந்த கப்பல் 1960 மே 11ம் தேதியன்று போப் (ஆண்டவர்) நான்டெஸ்-ன் ஆசியுடன் வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள், சினிமா தாரகைகள் உள்ளிட்டோருக்கான உல்லாச தலமாக விளங்கிய இந்தக்கப்பலில் கிறிஸ்துமஸின்போது பயணிப்பது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகவும் விளங்கியது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக விளங்கி எஸ்எஸ் பிரான்ஸ்-இன் இயக்கத்தை 1972ம் ஆண்டுடன் நிறுத்திக் கொள்வது என்று பிரான்ஸ் அரசு முடிவு செய்தது.

சுமார் 8 ஆண்டுகள் ஓய்வெடுத்த இந்த கப்பலை 1980ம் ஆண்டில் நார்வே நாட்டின் கப்பல் நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி சுமார் 8 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் செப்பனிட்டு எஸ்எஸ் நார்வே என்று பெயரை மாற்றி இயக்கியது.

2003 மே 25ம் தேதி இந்த கப்பலின் கொதிகலன் வெடித்ததில் ஏழுபேர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சேதம் அடைந்த கொதிகலனை சீரமைக்க முடியாது என்பதால் இந்த கப்பலை தொடர்ந்து இயக்குவதில்லை என்று நார்வே நாட்டு கப்பல் நிறுவனம் 2004 மார்ச் 23ம் தேதி அறிவித்தது.


பேசல் ஒப்பந்தம் (BASEL CONVENTION)

இதற்கிடையில் 1989ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டின் பேசல் (BASEL) நகரில் ஐநா சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் பன்னாட்டு விவாதம் ஒன்று நடைபெற்றது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் நச்சுக்கழிவுகளை வளர்ச்சி அடையாத நாடுகளில் கொட்டுவதை தவிர்ப்பதற்கான இந்த விவாதத்தில் கப்பல் உடைப்பு தொழில் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பயன்படுத்தியபின் ஒதுக்கப்படும் கப்பலில் உள்ள கதிரியக்கம் உருவாக்கும் பொருட்கள், அஸ்பெஸ்டாஸ் உள்ளிட்ட நச்சுப்பொருட்களை அகற்றிய பிறகே இந்த கப்பல்களை உடைக்கும் தளத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து நாடுகளும் 1992ம் ஆண்டில் ஒப்புக்கொண்ட இந்த ஒப்பந்தம் பேசல் ஒப்பந்தம் என்று பன்னாட்டு சட்டமாக அங்கீகரிக்கப் படுகிறது. (எனினும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பெரியண்ணன் அமெரிக்கா, வழக்கம் போல இந்த சட்டத்தையும் இதுவரை ஒத்தேற்று அங்கீகரித்து அமல் (RATIFICATION) செய்யவில்லை என்பது வழக்கம்போல தனிக்கதை!)

எஸ்எஸ் நார்வே கப்பலிலும் ஏராளமான (சுமார் 1240 மெட்ரிக் டன்) அஸ்பெஸ்டாஸ் இருப்பதால், அந்த கப்பல் நின்று கொண்டு இருந்த ஜெர்மன் கடற்கரையிலிருந்து அந்த கப்பலை வெளியே எடுப்பது கடினமாக இருந்தது.

இந்நிலையில் அந்த கப்பலை ஆசியாவிற்கு கொண்டு சென்ற செப்பனிட்டபின், ஆஸ்திரேலியாவில் இயக்க இருப்பதாக கப்பல் உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கப்பல் ஜெர்மன் கடற்கரையை விட்டுவிலக அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த கப்பல் அமெரிக்க கப்பல் உடைக்கும் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு, இந்த கப்பல் லைபீரியா நாட்டு நிறுவனம் ஒன்றிடம் கைமாறி “புளூ லேடி” என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. இந்த புளூ லேடி தற்போது ஹரியானா கப்பல் உடைப்பு நிறுவனம் என்ற தனியார் நிறுவனத்திடம் வந்து சேர்ந்துள்ளது.

இந்த கப்பலை ஏற்க பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டதால் இந்த கப்பல் தற்போது, குஜராத் மாநிலம் அலாங் கப்பல் உடைக்கும் துறைமுகத்தில் நிறுத்தப் பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் “மனிதாபிமானம்”..!

இதற்கிடையில் சுற்றுச்சூழல் ஆர்வலரான கோபால் கிருஷ்ணா என்பவர், இந்த கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த கப்பலில் உள்ள சுமார் 1240 மெட்ரிக் டன் அளவுள்ள அஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை தூண்டக்கூடியது என்றும், இந்த கப்பலில் உள்ள பாலி குளோரினேட்டட் பைபினல்ஸ் (POLYCHLORINATED BIPHENYLES) மனிதனின் மூளை உட்பட நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்றும் அவர் வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்குர் ஆகியோர், “மனிதாபிமான அடிப்படை”யில் இந்த கப்பல் குஜராத் மாநில அலாங் கப்பல் உடைப்பு துறைமுகத்தில் நிற்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த கப்பலை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கப்பல் உடைப்புக்கான தொழில்நுட்ப வல்லுனர் குழுவிற்கு உத்தரவு அளித்தார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர் பிரதிப்தோ கோஷ் தலைமையிலான இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், சென்னை ஐஐடி-யின் பேராசிரியர் வி. அனந்த சுப்ரமணியன் உட்பட 12 வல்லுனர்கள் இடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் அரசுப்பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வல்லுனர்கள் குழு, கடந்த 2006 ஆகஸ்ட் 2ம் தேதியன்று தனது அறிக்கையை அளித்தது. எதிர்பார்த்தபடியே இந்த கப்பலை உடைப்பதால் எந்த அழிவும் ஏற்படாது என்று அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், எஸ்.ஹெச்.கபாடியா ஆகியோர் புளூ லேடி கப்பலை உடைக்க எந்த தடையுமில்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை (ஏற்கனவே நாம் பார்த்தபடி) பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏன் இந்த அதிர்ச்சி? என்று பார்ப்பதற்கு முன், கப்பல் உடைக்கும் தளங்கள் எவ்வாறு இயங்குகின்றன? என்பதை பார்த்துவிடலாம்.

கப்பல் உடைக்கும் தொழில்...!!!???

கப்பல் கட்டுவதை தொழிலாகக் கூறலாம். ஆனால் கப்பலை உடைப்பது தொழிலாகுமா? என்ற கேள்வி எழலாம். உடைக்கப்படும் கப்பலில் சுமார் 95% தரமான இரும்பு கிடைக்கிறது. இதை சேகரிப்பதுதான் தொழில் என்னும்போது இதன் முக்கியத்துவம் புரியும். மிகச்சிறிய ஒரு கப்பலே சுமாராக 10 ஆயிரம் டன் எடை உள்ளதாக இருக்கும். இந்த கப்பலில் உள்ள சுமார் 500 கிலோ கழிவுப்பொருட்களை கழித்துவிட்டால் மீதமுள்ள 9 ஆயிரத்து 500 கிலோ இரும்பு சேகரிக்கப்படுகிறது. (முதல் படத்தி்ல் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கப்பலை உடைப்பவர் இந்திய தொழிலாளி. மற்ற புகைப்படங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கப்பல் உடைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்ற நாட்டுத் தொழிலாளிகள்)

நாட்டில் உள்ள அனைத்து கப்பல் உடைக்கும் தளங்களும் அரசியல் செல்வாக்கு உள்ள தொழில் அதிபர்களால் நிர்வகிக்கப் படுகிறது. இப்பகுதியில் பணியாற்றும் காவல்துறையும், கூலிப்படைகளும் கரம் கோர்த்து செயல்படுகின்றன. எனவே சட்டத்தின் ஆட்சி என்பது இப்பகுதிகளில் வேறு அர்த்தம் பெறுகிறது. அதாவது அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகி விடுகிறது.

குஜராத் மாநிலத்தின் அலாங் கப்பல் உடைக்கும் துறைமுகத்தில் கடந்த 2000ம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தினர் கணக்கில் எடுக்கப்படவில்லை. இந்த மக்கள் தொகை இன்றைய நிலையில் மேலும் 40% அதிகரித்திருக்கலாம்.

லாபம் சிலருக்கு; நஷ்டம் அனைவருக்கும்..!

கப்பல் உடைக்கும் பணியில் கல்வி-அறிவில்லாத ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களே பெருமளவில் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஆண்களுக்கு 100 ரூபாய் வரையிலும், பெண்களுக்கு 60 ரூபாய் வரையிலும் தினக்கூலி வழங்கப்படுகிறது.

இந்த தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் கப்பல் உடைப்பது என்பது ஒரு தொழில். உடைந்த கப்பலில் உள்ள உருப்படியான பொருட்களை வேறு பயன்பாடுகளுக்கும், உருப்படியல்லாத பொருட்களை மறு உருவாக்கத்திற்கோ அல்லது வேறு பயன்பாட்டுக்கோ அனுப்பப்படுவது மட்டுமே தெரியும்.

உடைக்கப்படும் கப்பலில் இருக்கும் உலோகங்கள் என்னென்ன? என்பதோ; மற்ற வேதிப்பொருட்கள் என்னென்ன? என்பதோ; அவற்றில் எந்தெந்த பொருட்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை? என்பதோ; அந்த நச்சுப்பொருட்கள் தொழிலாளர்களுக்கு என்னென்ன நோயை கொண்டு வரும்? என்பதோ அவர்களுக்கு தெரியாது.

ஒரு கப்பலின் 95% உயர் தர இரும்பினால் செய்யப்பட்டது. மீதமுள்ள 5%த்தில் இரும்பு அல்லாத உலோகங்கள், வண்ணப்பூச்சுகள், மின் பொருட்கள், ஒயர்கள், இதர கட்டுமான பொருட்கள் அடங்கும். இந்த 5% மற்ற பொருட்களை நீக்கிவிட்டு மீதமுள்ள 95% சதவீதப்பொருட்களை சேகரிப்பதுதான் இந்த தொழிலின் அடிப்படை.

புள்ளிவிவரக்கணக்கில் 5% என்பது குறைவாக தெரியலாம். ஆனால் புளூ லேடியின் மொத்த எடை சுமார் 45 ஆயிரம் டன் எடை எனக்கொள்ளும்போது, கழிவுகள் சுமார் 2250 டன் என்பதை மறந்துவிட முடியாது.

இந்த கழிவுகளில் அஸ்பெஸ்டாஸ், தாமிர ஆக்ஸைடு, துத்தநாக குரோமேட், பாதரசம், ஆர்சனிக், TBT (tributyl tin), TBTO (tributyl tin oxide), TBTCl (tributyl tin chloride) உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்களும் அடக்கம்.

இந்த பொருட்களை எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறுங்கையால் கையாளும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய், ஆஸ்துமா, இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகள், பாலுறுப்புகளின் செயல்திறன் குறைதல் உட்பட பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.

கப்பல் உடைக்கும் பணி கடற்கரைப்பகுதிகளில் நடைபெறுவதால் இந்த நச்சு ரசாயனங்களின் உபயத்தால் கடற்கரை நீர் மாசுபட்டு நீர்வாழ் உயிரிகளும், அவற்றை உட்கொள்ளும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். பெயிண்ட் போன்ற வண்ணப்பூச்சுகளை அகற்றுவதற்காக அவை எரிக்கப்படுகின்றன. அப்போது காற்று மாசுபடுகிறது. இது அப்பகுதியில் உயிர்வாழும் அனைத்து உயிர்களையும் நேரடியாக பாதிக்கும்.

கப்பல் உடைப்புத் தொழிலில் முன்பொரு காலத்தில் இங்கிலாந்து, தாய்வான், ஸ்பெயின், மெக்ஸிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன. ஆனால் மேற்கூறப்பட்ட சீர்கேடுகளை உணர்ந்த அந்த நாடுகள் தற்போது கப்பல் உடைக்கும் தொழிலை ஆசிய நாடுகளின் தலையில் கட்டிவிட்டுள்ளன.

தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமாராக 700 கப்பல்கள் உடைக்கப் படுகின்றன. அவற்றில் 70 சதவீதம், அதாவது சுமார் 500 கப்பல்கள் இந்தியாவில் உடைக்கப்படுகின்றன. மீதம் உள்ள கப்பல்களை, பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா ஆகிய நாடுகள் பங்கிட்டுக் கொள்கின்றன. உலக வங்கியின் புண்ணியத்தில் இந்த புனிதத்தொழிலில் தற்போது வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் தள்ளப்படுகின்றன.

கேட்கப்படாத கேள்விகள்...!

இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மக்களுக்கு தேவையற்ற பல விவகாரங்களை மிகவும் ஆழமாக விவாதிக்கின்றன. ஆனால், மக்களின் வாழ்வுரிமையை பறிக்கக்கூடிய பல அம்சங்களை பரிசீலிக்கவே தவறிவிடுகின்றன.

குறிப்பாக இந்திய அரசியல் சட்டம், அதன் குடிமக்களுக்கு வழங்கும் பல்வேறு அடிப்படை உரிமைகள் இப்பகுதி வாழ் மக்களுக்கு சட்டபூர்வமாக மறுக்கப்படுகின்றன. முதலாளிக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டும் நீதிமன்றங்கள், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களை மனிதர்களாகவே கருதவில்லை.

ஏனென்றால், இந்த தொழிலில் ஈடுபடும் முதலாளிகள், இந்த தொழிலை கண்காணிக்கும் அரசு அமைப்புகளின் நிர்வாகிகள், அதிகாரிகள், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் ஆகிய யாரும் – இந்த தொழிலால் சீரழியும் பகுதிகளில் வாழப்போவதில்லை.

இது சட்டம் மட்டுமே சார்ந்த விவகாரம் இல்லை.

என்ன செய்யப் போகிறோம்?-சுந்தரராஜன்(புகைப்படங்கள் அனைத்தும் கிரீன்பீஸ், விக்கிபீடியா உள்ளிட்ட இணையங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

Wednesday, September 12, 2007

BPO பணியாளர்களும், மனித உரிமைகளும்.

இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு எந்த தொழில்நுட்ப கல்வியும் பெற்றிருக்க வேண்டியதில்லை.

நுனிநாக்கு ஆங்கிலமும் சிறிதளவு கணிப்பொறி அனுபமும் இருந்தாலே போதும்; இவர்கள், தங்களுக்கு முந்தைய தலைமுறை கனவிலும் கண்டிடாத தொகையை சம்பாதிக்கலாம். “BPO” என்று அழைக்கப்படும் அவுட்சோர்சிங் (OUTSOURCING) நிறுவனங்களே இத்தகைய வாய்ப்புகளை வழங்குகின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளின் வங்கி, ஆயுள்காப்பீடு, மருத்துவம், சட்டம், நுகர்பொருள் விற்பனை உள்ளிட்ட துறைகளின் வாடிக்கையாளர் சேவைகளை இந்தியாவிலிருந்தே செய்யும் இந்தத்துறை இந்தியாவின் பொருளாதார, சமூக சூழ்நிலைகளை மிகவும் மாற்றி அமைக்கிறது. இந்நிறுவனங்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக மத்தியதர மக்களிடத்தே ஒரு புதிய மேல்தட்டு வர்க்கமே உருவாகியுள்ளது எனலாம்.
...
மருத்துவம், கல்வி, சட்டம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பெற்றவர்கள் கனவிலும் நினைக்கமுடியாத ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய பொருளாதாரமே இவர்களை நம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
...
பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறுநகரங்களையும் ஆக்கிரமிக்கும் இந்த தொழில் நிறுவனங்கள், இன்றைய இளைஞர்களின் கனவு உலகமாக விரிகிறது. பச்சைப்பசேலென்று இருக்கும் அவரைப்பந்தலைப்போல கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த துறையின் உள்ளே பார்த்தால் தூண்கள் அனைத்தும் இற்றுப்போய் இருக்கின்றன.

இந்தத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் அனைவரும், ஆங்கிலம் கற்றிருந்தாலும், அபரிமிதமான ஊதியம் பெற்றாலும், பொது அறிவில் சற்று பின் தங்கியே உள்ளனர். குறிப்பாக தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இவர்களிடம் அறவே இல்லை என்று கூறலாம். இவர்களின் இந்த நிலையை பயன்படுத்தி அரசுத்துறை அமைப்புகளும், பிற தனியார் அமைப்புகளும் இவர்களை சுரண்டி கொழுக்கின்றன.

இந்திய அரசியலமைப்பு சட்டம், ஒரு குடிமகனுக்கு சமூக, பொருளாதார, கலாசாரம் தொடர்பான பல்வேறு உரிமைகளை உறுதி செய்துள்ளது (படிக்காத பாமர மக்கள் பெருவாரியானவர்களுக்கு இவ்வுரிமைகள் கிடைக்கவில்லை என்பது வேறு கதை). ஆனால், மெத்தப்படித்து ஆங்கில கல்வி பெற்ற காரணத்தாலேயே வேலைவாய்ப்பையும் பெற்ற BPO பணியாளர்களுக்கு இந்த உரிமைகள் கிடைக்கிறதா? என்று பார்த்தால், “இல்லை!” என்ற பதிலே நமக்கு கிடைக்கக்கூடும்

ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, போதிய விளக்கம் பெறாமல் அல்லது போதிய அவகாசம் கொடுக்காமல் ஒருவரை தண்டிப்பதோ, பணியிருந்து நீக்குவதோ இயற்கை நீதிக்கு (NATURAL JUSTICE) எதிரானது. ஆனால் அனைத்து BPO-களிலும் தாரகமந்திரமாக இருப்பது HIRE AND FIRE என்னும் கொள்கையே.

BPO நிறுவனங்களில் பணியில் சேர, ஒருவர் தன்னுடைய ஒட்டுமொத்த உரிமைகளையும் பறித்துக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவேண்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் சட்டத்திற்கு முன் செல்லுமா என்ற கேள்வி எழுப்பப்படாமலே பலரும் இந்த ஒப்பந்த சரத்துகளுக்கு பலியாகின்றனர். ஒப்பந்தம் காலம் முடியும் முன்பே, ஒரு பணியாளர் அப்பணியிலிருந்து விலகினால் அதற்கான அபராதம் நிர்ணயிக்கப்பட்டு அது காசோலையாக பெறப்படுகிறது. இந்த உளவியல் ரீதியான மிரட்டல் காரணமாகவே பலர் பணியிட உரிமை மீறல்களை வெளியில் சொல்வதில்லை. (அந்த காசோலையை சட்டரீதியாக பயன்படுத்த முடியாது என்பது பலருக்கும் தெரிவதில்லை)

“8 மணி நேரம் மட்டுமே வேலை” என்ற உரிமையை போராடி பெற்ற அமெரிக்கர்களின் பணிகளை செய்வதற்கு, நமது இந்திய இளைஞர்கள் 12 முதல் 14 மணி நேரம் வரை உழைக்கின்றனர்.

எப்பொழுதும் நோட்டமிடுகின்ற கேமிராவின் தீவிர கண்காணிப்பிலேயே இவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. இதுவும் கூட ஒருவித மனித உரிமை மீறலே. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கின்ற வகையிலேயே இவர்கள் பணியாற்றும் சூழல் உள்ளது. குடும்ப உறவுகளுக்கு போதிய நேரம் ஒதுக்காமை, உடல்நலம் குறித்த கவனமின்னம போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். இதன் விளைவுகளை மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும், வழக்கறிஞர்களுமே அறுவடை செய்கின்றனர்.

செல்ல பிராணிகளுக்கு அணிவிக்கின்ற கழுத்துபட்டி போல இவர்களும் தங்கள் முழு ஜாதகமே அடங்கிய அட்டையை அணிகின்றனர். ஒவ்வொருமுறை இவர்கள் அலுவலகதிற்கு உள்ளே/வெளியே செல்ல இந்த அட்டையை பயன்படுத்த வேண்டும். அதாவது இவர்கள் பணியாற்றும் ஒவ்வொரு மணித்துளியும் கணக்கிடப்படுகின்றன. ஆனால் ஊதியமாக இவர்களுக்கு வழங்கப்படுவது லாபத்தில் மிக சொற்பமான தொகை மட்டுமே.

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைப்பதற்கான உரிமை இவர்களுக்கு வழங்க படுவதில்லை. முக்கியமாக, தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

ஒரே விதமான வேலையை செய்பவர்களுக்கு ஒரே அளவிலான ஊதியம் (EQUAL PAY FOR EQUAL WORK) வழங்கப்பட வேண்டும் என்னும் சட்டம் இங்கு செல்லுபடி ஆவதில்லை.
BPO- களில் பணியாற்றும் பெண்களின் நிலை இன்னும் சோகம் நிறைந்தது. பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளது. பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பதிவு செய்வதற்கான அமைப்பை அனைத்து தொழிலகங்களிலும் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் இயற்றிய சட்டம் பலபெண்களுக்கும் தெரியாமலே உள்ளது. மகப்பேறுக்கால விடுமுறை, பணிபுரியும் இடங்களில் குழந்தை பராமரிப்பு வசதிகள் என பெண்களுக்கான சிறப்பு உரிமைகளை எந்த BPO நிறுவனமும் வழங்குவதில்லை.

இந்தியர்கள் தற்போது மிகஅதிகமாக ஈடுபடும் BPO துறையில் கவனம் செலுத்த சீனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்காக போட்டியிடுகின்ற அந்நாட்டின் முக்கிய இரண்டு அரசியல் கட்சிகளும், அவுட்சோர்சிங் மூலம் உள்ளூர் அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளன.

இந்த நிலையில் இந்திய BPO நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிதான். இந்த வேலை வாய்ப்பு பறிபோனால் இந்த இளைஞர்கள் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது சமூகத்தில் குற்றத்தின் அளவை அதிகரிக்கக்கூடும் என்பதை சமூகவியல் உண்மை.


என்ன செய்யப் போகிறோம்?-மு. வெற்றிச்செல்வன்
(Vetri@lawyer.com)

Saturday, September 8, 2007

மருத்துவ மாணவர்களின் நாட்டுப்பற்று! கிராமப்புற விவசாயிகளின் கதி என்ன?

பயிற்சி முடித்த மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் அறிவிப்பு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

தங்களுடைய கல்விக்காலத்தை மேலும் ஓர் ஆண்டு நீடிக்கக்கூடாது என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: தினமணி, 8 செப்டம்பர் 2007

மாணவர்களின் கோரிக்கைக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் இடதுசாரிகளின் கருத்தை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


நன்றி: தினமலர், 8 செப்டம்பர் 2007

இந்தப்பிரசினை மருத்து மாணவர்கள், இடதுசாரிகள், தமிழக முதலமைச்சர் மட்டுமே சார்ந்த விவகாரம் அல்ல. கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார பிரசினை.

விவசாயத்திற்கான மானியங்கள் வெட்டு, மின்வெட்டு, நீர் ஆதார பிரசினைகள், மரபணு தொழில் நுட்பத்தின் படையெடுப்பு, மணல் கொள்ளை போன்ற பலவித பிரசினைகளில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்கும் அத்தியாவசிய தேவைகளையும் கிடைக்கவிடாமல் செய்வதில்தான் நம் அரசியல் தலைவர்களுக்கு எத்தனை ஆர்வம்?


பசுமை விகடன் இதழில் வெளிவந்த அந்த விவசாயிகளின் குரலை சற்று கேட்போமா?
ச்சும்மா சிரிச்சிட்டு போயிடாதீங்க சித்தப்பு.... சிந்திங்க!


ஓவியம்: ஹரன் (HARAN)
நன்றி:


செப்டம்பர் 25, 2007

மருத்துவ மாணவர்களுக்கு பரிந்து பேசும் இந்த அரசியல் தலைவர்கள், விவசாயிகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

-மக்கள் சட்டம் குழு

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவப்படிப்பு – கிணறு தோண்ட பூதம்.

மருத்துவ பல்கலைக்கழகமும், மருத்துவ கல்லூரிகளும் மட்டுமே தொடங்க வேண்டிய மருத்துவம் தொடர்பான கல்வியை தொலைதூரக்கல்வி மையம் மூலம் வழங்குவதாக தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் போலிமருத்துவர்கள் அதிகரித்து, மக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் அஞ்சல் வழி மருத்துவ கல்விக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையம், பாடத்திட்டங்கள் குறித்த கையேட்டை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மூலிகை அறிவியல், மருத்துவ மூலிகை அழகுக்கலை, மரபு மருத்துவ உணவு முறைகள் ஆகிய பாடத்திட்டங்களும் உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய மூலிகை, இயற்கை உணவு, இவற்றின் மூலமான அழகுக்கலை ஆகியவற்றை மீட்டெடுக்க தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

ஆனால் இந்த ஆர்வம் எல்லை மீறி சித்த மருத்துவ பட்டயப் படிப்புவரை செல்லக்கூடாது என்பதே நமது கவலை. இந்த பட்டய படிப்பில் (1) சித்த மருந்தறிவியல் அறிமுகம், (2) மருந்தியல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துகளின் தரநிர்ணயம் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடங்களை மட்டுமே கொண்ட கல்வித்திட்டம் மருத்துவ கல்வி ஆகிவிடாது.
மருத்துவ கல்வியில் உடற் செயலியல், நோய்க்குறி ஆய்வியல், மருந்தியல் ஆகிய அனைத்து பாடங்களும் அடங்கும். சித்த மருந்துகளைப்பற்றி மட்டுமே பயிற்றுவிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்திற்கு சித்த மருந்தாளுனர் (SIDDHA PHARMACY) போன்ற பெயரில் தமிழ்ப்பலைக்கழகம் சான்றிதழோ, பட்டயமோ வழங்குவதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை. அதையும் இந்திய மருந்தாளுனர்களுக்கான கவுன்சிலில் (Pharmacy Council of India) பதிவு செய்து வேலைவாய்ப்புக்கான முழுமையான தகுதியாக வழங்கலாம்.


சித்த மருத்தவத்துறையில் தற்போதைய சித்த மருத்துவ (Bachelor of Siddha Medicine and Surgery) இளங்கலை பட்டப்படிப்பு, சில காலம் முன்பு வரை Bachelor of Indian Medicine என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரை ஒட்டியுள்ள Diploma in Siddha Medicine என்ற பெயர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த பட்டயப்படிப்பில் படிப்பவர்கள் மருத்துவம் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


ஏழாவது தலைமுறையாக சித்தமருத்துவம் செய்வதாக கூறி ஒரு சிறுவனையும் மருத்துவராக முன்னிலைப்படுத்தும் நிறுவனங்களும்,. அதையும் கேள்வி கேட்காமல் விளம்பரம் செய்யும் பத்திரிகைகளும் உள்ள நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் Diploma in Siddha Medicine கல்வி பெரும் கேடுகளையே விளைவிக்கும்.

இந்த விவகாரம் குறித்த ஆய்வில் நாம் ஈடுபட்டபோது, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களும் வழங்கப்படுவதாக தெரியவந்தது.
இந்தப் பட்டங்களையாவது இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழுவோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமோ அங்கீகரித்துள்ளதா எனப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த பட்டங்களை அங்கீகரிக்கவோ, இந்த பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் அல்லது விரிவுரையாளராக பணியில் அமர்த்தவோ மேற்கண்ட அமைப்புகள் இதுவரை முன்வரவில்லை. எனவே இந்த பட்டங்களும் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டதைப்போன்ற பொருளற்ற அலங்கார பட்டங்களாகவே உள்ளதாக தோன்றுகிறது.எனவே இந்த ஆய்வு முனைவர் மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.05-09-2007
சென்னை


அனுப்புனர்,


பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.

பெறுனர்,


பதிவாளர்,
(பொதுத்தகவல் அதிகாரி)
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.

ஐயா,

பொருள்: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 6ன் படி
தகவல் கோருதல்.
---
தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ துறையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெறுவதாக அறிகிறேன். ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய பட்டங்களுக்கான ஆய்வுகளும் நடைபெறுவதாக அறிகிறேன். இதுகுறித்த கீழ்க்கண்ட தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?

2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?


3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?

4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?

5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?

அரசுத்துறை அலுவலகங்களில் பொதுத்தகவல் அலுவலர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும், அது குறித்து இணையதளம் உள்ளிட்ட வழிகளில் பொது அறிவிப்புகள் கொடுக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 4 வலியுறுத்துகிறது. எனினும் தங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அலுவலர் குறித்த அறிவிப்பு இல்லை என்பதால், பதிவாளரான தங்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது.

மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.

நன்றி.
தங்கள் உண்மையுள்ள,(பி. சுந்தரராஜன்)


இந்த மனு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வினைகளும் பதிவு செய்யப்படும்.


-மக்கள் சட்டம் குழு
Wednesday, September 5, 2007

கிரெடிட் கார்டு - தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான மனு.

செப்டம்பர் 5, 2007
சென்னை

அனுப்புனர்
பி. சுந்தரராஜன்,
நிர்வாக அறங்காவலர்,
சமூக-பொருளாதார நீதிக்கான மையம்,
1- P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.

பெறுனர்
துணை ஆணையர் 1,
(பொதுத்தகவல் அலுவலர்)
உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத்துறை,
எழிலகம், 4வது தளம்,
சேப்பாக்கம், சென்னை – 600 005.

ஐயா,

பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6ன் படி தகவல்
கோரும் மனு.
---

தங்கள் துறை சார்பாக கடந்த 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன் அட்டையால் நுகர்வோருக்கு பலனா? அல்லது சுமையா?” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்த கீழ்க்கண்ட தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? ஆம் எனில் எந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது? (இலவசமாக “இன்றைய நிகழ்ச்சி” பகுதியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தவிர)

2. இந்த நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு?

3. சென்னையில் அரசுக்கு சொந்தமான அரங்குகளும், மாநகராட்சிக்கு சொந்தமான அரங்குகளும் பல இருக்கும் நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏன்?

4. கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2007 ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட முதன்மை சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் நிகழ்ச்சியில் 2005ம் வருடத்திய (பழைய) சுற்றறிக்கையை வழங்கியது ஏன்?

5. கருத்தரங்கம் முடிவடைந்த பின் அரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களிலிருந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் தீர்மானங்கள், நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமானது?

6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் உங்கள் துறை பணியாளர்கள் எத்தனை பேர்? வங்கிகளின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர்?

7. இந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட பயன் என்ன? இந்த நிகழ்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதா? ஆமெனில் பெரும்பான்மையானோர் என்ன கருத்து தெரிவித்தனர்? இல்லை எனில் ஏன் அவ்வாறு கருத்து கேட்கப்படவில்லை?

8. இந்த கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பிரசினை குறித்து தங்கள் துறை சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டம் என்ன?

மேலேக்கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.

நன்றி.தங்கள் உண்மையுள்ள,(பி. சுந்தரராஜன்)


இந்த பதிவு புரியவில்லை என்பவர்கள் முந்தைய பதிவை படித்தபின் இந்த பதிவை படித்தால் புரியும். இந்த மனு இன்று அனுப்பப்படுகிறது. இந்த மனுவிற்கான எதிர்வினைகளும் பதிவு செய்யப்படும்.
-மக்கள் சட்டம் குழு

Tuesday, September 4, 2007

கிரெடிட் கார்டு - தமிழக அரசுத்துறை நடத்திய (கருத்தரங்க) கேலிக்கூத்து.

தமிழ் நாடு நுகர் பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் கடந்த 29-08-2007 அன்று, கடன் அட்டை: நுகர்வோருக்கு பயனா? அல்லது சுமையா? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு தெரிவிக்க உருப்படியான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. சில தினசரிகளின் இன்றைய நிகழ்ச்சி பகுதியில் இலவசமாக செய்தி வெளியிடப்பட்டதைத்தவிர. சென்னையில் தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் சொந்தமான பல இடங்கள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள மெரினா டவர்ஸ் என்ற தனியார் ஓட்டலின் குளிரூட்டப்பட்ட அரங்கில் நடந்தது.


அரங்கில் நுழைந்த உடன் பெயர் பதிவு செய்தவுடன், கையில் பிளாஸ்டிக் பைல் ஒன்று வழங்கப்பட்டது. அதில் கிரெடிட் கார்டு சேவை குறித்த நுகர்வோர் அமைப்புகளின் புகார்கள், அவற்றை களைய வேண்டிய முறைகள், வாடிக்கையாளருக்கான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை கூறியபின் ஆலோசனை செய்து தயாரிக்க வேண்டிய பரிந்துரைகள் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டது யாருக்கும் முரண்பாடாக தெரியவில்லை.


அந்த பைலில், கிரெடிட் கார்டு வணிகம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை (2005ம் வருடத்தியது) ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதே ரிசர்வ் வங்கி 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இதைவிட மேம்பட்ட சுற்றறிக்கைகளை முதன்மை சுற்றறிக்கை என்ற பெயரில் வெளியிட்டது பற்றியோ, அது ஏன் வழங்கப்படவில்லை? என்றோ ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உட்பட யாரும் கேள்வி எழுப்பவில்லை.


அரங்கம் ஓரளவு நிறைந்தே இருந்தது. சரியான விளம்பரம் இல்லாமலே இவ்வளவு கூட்டமா? என்று விசாரித்தபோதுதான், தமிழ் நாடு நுகர் பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் பணியாளர்களால் அரங்கு நிறைந்திருந்த ரகசியம் தெரியவந்தது.


முதலில் சிறப்புரையாற்ற வந்த ரிசர்வங்கியின் மக்கள் குறைகேட்பு அதிகாரி (ஆம்புட்ஸ்மேன்) ஹர்மேஷ் கண்ணா, “கடன்அட்டை குறித்தான ரிசர்வங்கியின் வழிகாட்டுதல், மக்கள் குறைகேட்பு ஆணையத்தில் உள்ள கடன் அட்டை குறித்தான வழக்குகள்” போன்றவற்றை குறிப்பிட்டு பேசினார். பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது போலவே, “கிரெடிட் கார்டு வணிகம் குறித்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலை மீறும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ‘உறுதிபட’ தெரிவித்தார். ஆனால் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்ட அம்சங்களில் ஒன்றைக்கூட தனியார் வங்கிகள் அமல்படுத்தவில்லை என்பதையும், அதற்காக ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட மறந்து விட்டார்.

மிகக்குறைந்த அளவிலேயே நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள், வங்கிகளின் பிரநிதிகளை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர். அவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுக்கான வழியை கூறமுடியாமல் விழி பிதுங்கிய வங்கிகளின் பிரநிதிகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகக்கழக ஆணையர் விஜயராகவன், தாமாக முன்வந்து மக்களை சமாதானப்படுத்தி காப்பாற்றினார். சிட்டி பேங்க் (CITI BANK) சார்பாக வந்திருந்த பட்டிமன்ற புகழ் பாரதிபாஸ்கர், வங்கி பணியாளர்கள் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போடும் மக்களின் அறிவின்மையே பிரச்சனைகளுக்கு காரணம் என வங்கிகளுக்கு வக்காலத்து வாங்கினார். வந்திருந்த எல்லா வங்கி பிரநிதிகளும் தங்களுடைய இணையதளத்தில் எல்லா தகவல்களும் உள்ளது என ஒன்று போல (பொய்) கூறினர்.


ஆங்காங்கே சில நுகர்வோர் அமைப்புகளும் தென்பட்டன. அரசின் சிறப்பு அழைப்பால் வந்திருந்த இவர்கள், “ஏன் வங்கிகள் கடன்அட்டை குறித்தான ரிசர்வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை” ? என்னும் கேள்வியை தவிர்த்து மற்றதெல்லாம் கேட்டனர்.


முதியவர் ஒருவர் பேசும்போது, எல்லா வங்கிகளும் நுகர்வோர்களை கடனாளிகளாக மாற்றவே விரும்புகின்றன என உண்மையை போட்டு உடைத்தது சற்று ஆறுதலாக இருந்தது.


இறுதியாக மேடையெறிய, கடன் அட்டை தொடர்பாக வங்கிகளுக்கு எதிராக பொது நல வழக்கை தொடர்ந்துள்ள நாம் மேடையேறி, “கடன் அட்டை பொறுத்தவரை வங்கிகளே மக்களை மோசடி செய்கின்றன என்பதையும், நுகர்வோர் தங்கள் குறைகளை கூற எந்த வங்கியிலும் குறைதீர்ப்பு அமைப்புகள் இல்லை என்பதையும், கடன் வசூலில் சட்டத்திற்கு உட்பட்டு எந்த வங்கிகளும் செயல்படுவதில்லை என்பதையும், பிரச்சனைகளுக்கான மூலக்காரணங்களையும்” கூறவே பேச்சை விரைவில் முடிக்கச் சொல்லி துண்டுசீட்டு வந்தது.

இந்த கருத்தரங்கிற்கு பின் இயற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் காலையிலேயே அச்சிடப்பட்டு நமக்கு தரப்பட்டுவிட்டதால் நாம் அரங்கை விட்டு வெளியேறினோம்.


மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுத்துறை ஒன்று, மக்களுடைய பிரசினை குறித்து - மக்களுக்கு உரிய முறையில் தகவல் தராமல், தனியார் ஓட்டல் ஒன்றில் கருத்தரங்கு நடத்தியுள்ளது. இது குறித்து எந்த பத்திரிகையிலும் கேள்வி எழுப்பப்படவில்லை. வாழ்க ஜனநாயகம்! வளர்க பத்திரிகை சுதந்திரம்!!

-மக்கள் சட்டம் குழு

Monday, September 3, 2007

மனித உரிமை வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் மறைவு

தமிழகத்தில் அரசு அமைப்புகள், அதன் கடமையை சரிவர செய்யாத நிலையில்; மக்களின் குறைகளை ஜனநாயக முறையில் எடுத்துச்சொல்லியும் அக்குறைகள் தீர்க்கப்படாத நிலையில் நக்சல்பாரி இயக்கம் தமிழகத்தில் வேரூன்றியது.

நக்சல்பாரிகள் பிறக்கும்போதே ஆயுதங்களோடு பிறந்ததுபோலவும், அவர்களை அவ்வாறு உருவாக்கியதில் தங்களுக்கு எந்த தொடர்புமே இல்லை என்பது போலவும் அனைத்து துறையினரும் ஒதுங்கியபோது, மனிதாபிமானமுள்ள வழக்கறிஞராக அந்த நக்சல்பாரிகளுக்காக வாதாடியவர் பி.வி. பக்தவச்சலம்(71).

பி.வி.பக்தவச்சலம் 1936ம் ஆண்டு அக்டோபர் 13ந் தேதி வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பொன்னேரியில் பிறந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான மோகன் குமாரமங்கலத்திடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர் திருப்பத்தூரில் வழக்கறிஞராக தொழில் புரிந்தார். பீடி தொழிலாளர்கள், டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவராக பணியாற்றினார்.

1971/72 ஆம் ஆண்டுகளில் நிலமீட்சி போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். மிசா சட்டத்தின் கீழும் அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

75ஆம் ஆண்டு மக்கள் உரிமை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அகில இந்திய அளவில் மனித உரிமை மாநாட்டையும் புதுடெல்லியில் நடத்தினார். 78ஆம் ஆண்டுகளில் வட ஆற்காட்டில் நக்சலைட்டுகள் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து அவர் இயக்கம் நடத்தினார்.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகளாக இருந்த நூற்றுக் கணக்கானோரை வழக்கு மூலம் மீட்டார். அவருடைய இந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் கொத்தடிமை மீட்புக் குழுவில் உயர்நீதிமன்றத்தின் சார்பில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட போது, அவருக்கு ஆதரவாக வழக்காட உலகம் முழுவதும் வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்த போது, இந்தியாவின் சார்பில் பி.வி.பக்தவச்சலம் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நக்சல்பாரி இயக்கத்தில் பங்கேற்று செயல்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி வந்தார். 1965 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர் 1975 இல் மக்கள் உரிமைக் கழகத்தில் தீவிரப் பங்கெடுத்து செயல்பட்டார்.


1980 இல் காவல்துறையுடன் மோதல் என்று இளைஞர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்ததால், தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து ஈழத் தமிழர் அகதிகள் மீது அன்றைய ஜெயலலிதா ஆட்சி கட்டவிழ்த்துவிட்ட உரிமை பறிப்புகளை எதிர்த்ததற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


எனினும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இவருக்கு உள்ள பொறுப்பு காரணமாக எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் தமது பணியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.


இவரைவிட தகுதியும், திறமையும் குறைந்தவர்கள் எல்லாம் அரசு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர், நீதிபதி உள்ளிட்ட பல உயர்வுகளை பெற்றபோதும் அதுகுறித்து சிறிதும் கவலையின்றி “மக்கள் பணிக்கு அந்த பதவிகளால் எந்த பயனும் இல்லை” என்பதை தமது சேவைகள் மூலம் நிரூபித்தார்.


மனித உரிமை – சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தார். இந்த அமைப்பின் சார்பில் 2007 ஜனவரி மாதத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு நடத்திய விவாத அரங்கத்தில் கலந்து கொண்டு வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன் எழுதிய, "மாறும் சட்டங்களும் பறிபோகும் விவசாயிகளின் உரிமைகளும்" என்ற நூலை வெளியிட்டார்.
மார்ச் மாதம் 18ம் தேதி நுகர்வோர் தினத்தை முன்னிட்டு "சமூக-பொருளாதார நீதிக்கான மையம்" நடத்திய "கிரெடிட் கார்டு பயன்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கான பொதுவிசாரணை"யிலும் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை கூறினார். வழக்கறிஞர் சுந்தரராஜன் எழுதிய, "கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பு சட்டங்கள்" என்ற நூலை வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தினார்.

வயது முதிர்ந்த காலத்திலும் மக்கள்பணியில் அயராது ஈடுபட்ட அவர் 02-09-2007 மாலை இயற்கை எய்தினார். அவரது மறைவால் ஏற்படும் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் விட்டுச்சென்ற பணிகள் ஏராளம் இருப்பதால் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து செயல்பட மனித உரிமை-சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு உறுதி ஏற்கிறது.

-மக்கள் சட்டம் குழு

Saturday, September 1, 2007

போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு!

தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் ஒரே ஆண்டில் சித்தமருத்துவம், "சமையல் கலைக்கல்லூரிகள்" மூலமாக கற்றுத்தர இருப்பதாக வந்த செய்தி நம்மை திகைப்பில் ஆழ்த்தியது.

சித்தமருத்துவம் என்றாலே காட்டுவாசிகளின் மருத்துவமுறை என்று சிலர் கருதி புறக்கணிக்கும் நிலை பரவலாக உள்ளது. வேறு சிலரோ உரிய கல்வித்தகுதி இல்லாத நபர்களிடம் சிகிச்சை பெற்று பணத்தையும், உடல் நலத்தையும் இழக்கும் நிலையும் நிலவுகிறது.


இந்த நிலையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் இன்னும் அதிக போலி மருத்துவர்கள் உருவாகிவிடக்கூடும் என்று அஞ்சினோம். எனவே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பும், ஆரம்பிக்க உள்ள சித்தமருத்துவ பட்டய படிப்பும் சட்டவிரோதம் என்று பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பினோம்.

இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வராத நிலையில், அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நாளேடுகளிலும், தொலைபேசி குறுந்தகவல் சேவை (SMS) யிலும் விளம்பரங்கள் அதிகரித்தன.இந்நிலையில் வேறு வழியின்றி, உரிய அனுமதியின்றி தொடங்க உள்ள அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினோம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. தனபாலன், இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழு ஆகிய அமைப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


நன்றி: தினகரன், 01-09-2007.

நன்றி: தினமலர், 01-09-2007.

சித்தமருத்துவத்தை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் கடந்த பல வருடங்களாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல், நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் செயலற்று உள்ளது.

இதன் விளைவாகவே தொலைக்காட்சிகளிலும், செய்தி பத்திரிகைகள், நாளேடுகளிலும் உரிய கல்வித்தகுதி பெறாத பல போலி மருத்துவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகின்றனர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஊடகங்கள், பத்திரிகை சுதந்திரம் பற்றி உரிமையுடன் பேசும் பத்திரிகை ஆசிரியர்கள், சமூகப்பொறுப்போ - அடிப்படை சட்ட அறிவோ இன்றி இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
அவற்றில் சில விளம்பரங்கள், சாமானியரின் சாதாரண அறிவால் கூட ஏற்க முடியாதவை. கீழே உள்ள விளம்பரத்தில் 7 தலைமுறைகளாக வைத்தியம் செய்து வருவதாக ஒரு குடும்பம் ஏழாவது தலைமுறை வைத்தியராக பச்சிளம் பாலகன் ஒருவன் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த சிறுவன் வைத்தியம் பார்ப்பது உண்மை என்றால் அது பகுத்தறிவுக்கும், மருத்துவ நெறிமுறைகளுக்கும், சட்டத்திற்கும் எதிரானது.


இந்த சின்ன விஷயத்தைக்கூட ஆராயாமல் ஏறக்குறைய அனைத்து பத்திரிகைகளும் இந்த விளம்பரத்தை வெளியிட்டு வருகின்றன.

கொள்ளை லாபமே குறிக்கோளாக உள்ள இந்த போலி மருத்துவர்களிடமோ, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அதிபர்/ஆசிரியர்களிடமோ இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இது போன்ற சமூக அவலங்களை அகற்ற உதவும்.-மக்கள் சட்டம் குழு