Monday, July 30, 2007

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

அரசின் செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க உதவும் என்று கூறப்படும் "தகவல் உரிமைச் சட்ட"த்தின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள்.

எங்கள் பார்வைகளை வைக்கிறோம். தொடர்ந்து விவாதிப்போம்.

Friday, July 27, 2007

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்..!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...


நினைவில் நிறுத்துங்கள்

கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)

நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது.


கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)

கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே !


நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.


வங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது.

இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.

உங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம் !

உங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம். வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் “குற்றமுறு அத்துமீறல்” புரிந்ததாக கூறப்படுவார்.

இவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது.

வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442)

ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)


அவதூறாக பேசுதல் !
உங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே.

ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)

இன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)

அச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல் !
கடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே.

ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம். பிரிவு 503

குற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். பிரிவு 506

அநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.

பெண்களை அவமதித்தல் !
ஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக்கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 509)

அரசுப்பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல் !
அரசுப்பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான்.

அரசுப்பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)

ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல் !
கிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையெனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான்.

ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)

ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக்கூறப்படுகிறது (பிரிவு 339)

ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச்செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறைவைத்தல் என்பர். (பிரிவு 340)

மறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)

முறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)

முறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)

தாக்குதல் !
கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான்.

எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்;
அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்;
அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,
(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது
(ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)

ஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).

குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).


வங்கி அதிகாரிகளும் குற்றவாளிகளே !
வசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.

குற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்...
முதலாவதாக :– அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது
இரண்டாவதாக :– அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது
மூன்றாவதாக :– செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல்
- ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)

எந்தக்குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர் அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.


தற்காப்புரிமை !
கிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.

உடல் தற்காப்புரிமை – தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)
முதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை.
இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)

உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.
1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,
2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,
3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,
4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,
5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,
6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது.

எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.
கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது ?

கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.

அந்தப்புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.

காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.

காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.

மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள்.

கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.

கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.
-சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)

Wednesday, July 25, 2007

பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்தியாவின் இறையாண்மை !

நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் ஆகிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.

நாடாளுமன்றம் – சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் வருடக்கணக்கில் விவாதம் (மட்டுமே) நடத்திவரும் நமது அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலோ, வேறு எந்த அவையிலோ எந்த விதமான விவாதமும் நடத்தாமல் உலக வர்த்த கழகத்தில் இந்தியாவை உறுப்பு நாடாக பதிவு செய்தனர். உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எம்.பி.க்களுக்கே தெரியாமல், அதிகாரிகளே இதற்கான (டங்கல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான அனுமதியை அளித்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்.

இந்த கொள்கைகளுக்கு அன்று எதிர்ப்புகளும் இருந்தன. ஆனாலும் இதிலிருந்து விலகினால் பொருளாதார ரீதியாக பேரழிவுகள் ஏற்படும் என்றும், நாட்கள் செல்லச்செல்ல இந்த புதிய பொருளாதார கொள்கைகள் நல்ல பலன்களை கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சமாதானம் கூறினர்.

இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதி-இறக்குமதி, வரிச்சட்டங்கள், வங்கிச்சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் உள்ள மக்கள் சார்பு அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன.

இவை இந்தியர்களின் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது. எந்தத் தொழிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதையே இலக்காக கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஆக்கிரமித்ததால் இந்தியர்களின் நல்வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் என்ற மருந்தை கிளிவெக் (GLIVEC, GLEEVEC) என்ற வணிகப்பெயரில் தயாரித்து வருகிறது.

இம்மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக சந்தை உரிமை (EXCLUSIVE MARKETING RIGHT)யை காப்புரிமை சட்டம் மூலம் இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு பெற்றது. ஆனால் இம்மருந்தை வேறு செய்முறைகளில், வேறு பெயர்களில் சில நிறுவனங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தன.

இதை தடை செய்யக்கோரி சென்னை மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் நோவார்டிஸ் வழக்கு தொடர்ந்தது. அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்த நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நோவார்டிஸ் நிறுவனத்தை தவிர வேறு யாரும் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுபாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள காப்புரிமை சட்டவிதிகளின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த மேல் முறையீட்டில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மெஸிலேட் மருந்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதை பின்பற்றி காப்புரிமை கேட்பதற்கு ஏற்கனவே சுமார் 9,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

எனவே இந்த வழக்கை நோவார்டிஸ் நிறுவனம் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்திய மக்களைப்பற்றி இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அக்கறை இல்லாதபோது, கொள்ளை லாபமே இலக்காகக் கொண்ட நோவார்டிஸ் நிறுவனம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.

---
மேற்கண்ட செய்திகள் அரசின் கொள்கைகளை மட்டுமே நமக்கு உணர்த்தவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்ற சில நபர்களின் தன்மைகளையும் உணர்த்துகிறது.
காப்புரிமை சட்டத்தில் ஒரு பொருள் தயாரிக்கும் முறைக்கு மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னர் வர்த்தகம் சார்ந்த அறிவுச்சொத்துரிமைக்கான ஒப்பந்தத்தில் (Trade Related Intellectual Property RightS Agreement) இந்தியா கையொப்பம் இட்டதை தொடர்ந்து பொருள் செய்யும் முறைக்கு மட்டும் அல்லாமல் மருந்துப் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
இதன்படிதான் நோவார்டிஸ் நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்துக்கு காப்புரிமை கோருகிறது. இதற்காக நம் நாட்டின் காப்புரிமை சட்டம் – 1970 ல் திருத்தம் செய்து ஒரு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அது கொண்டு வரப்பட்ட நாள்: 2004 டிசம்பர் 26! ஆம். சுனாமி பேரலை தாக்கி உலகின் பல பகுதிகளும் சோகத்தில் மூழ்கியிருந்தது.

இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய உலகின் பல நாடுகள் முன்வந்தன. அந்த நாளில்தான் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் விரோதமான/ பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான அந்த அவசர சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கையெழுத்திட்டார். அவரைத்தான் நமது நகைச்சுவை நடிகர்கள் முதல் நாடோடிகள்வரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.
---
அடுத்து இந்த விவகாரத்தில் மிக முக்கிய நபர் டாக்டர் மஷேல்கர் என்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் பிறந்த உயர் குலம் காரணமாக இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்.
காப்புரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் (காலம்கடந்து) நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, அறிவாளிகளின் குலத்தில் பிறந்த டாக்டர் மஷேல்கர் தலைமையில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே இந்த அறிக்கையின்படி தமது மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம் வாதாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள இன்டலக்சுவல் பிராபர்டி இன்ஸ்டிடியூட்-ல் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஷாம்நாத் பஷீர் என்ற மாணவரின் கட்டுரையை திருடி அதனையே அறிக்கையாக தயாரித்து டாக்டர் மஷேல்கர் அளித்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் ஷாம்நாத் பஷீர், நோவார்டிஸ் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த கட்டுரையை எழுதியதாகவும், அதை டாக்டர் மஷேல்கர் வார்த்தைக்கு வார்த்தை திருடி விட்டதாகவும் கூறியுள்ளார். மாணவரின் அறிவைத்திருடி பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையை பாதுகாக்க டாக்டர் மஷேல்கர் மேற்கொண்ட முயற்சி அம்பலமானதை தொடர்ந்து அந்த “வல்லுனர்(!) குழு அறிக்கை” திரும்ப பெறப்பட்டது.
மாணவரின் அறிவுச்சொத்தை “வல்லுனர் மஷேல்கர்” திருடியது உலக அரங்கில் அம்பலமானாலும், அவருக்கு தண்டனையோ கண்டனமோ கிடையாது. அவாளுக்கெல்லாம் தண்டனை கொடுக்க கருட புராணத்திற்கு அதிகாரம் கிடையாது. மனுதர்மம்தான்!


---

இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யுமா? என்று எதிர்பார்ப்பவர்கள், இதுபோன்ற விவகாரங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர்களே உலக வங்கியின் ஏஜென்டுகளான மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த விவகாரத்தில் ஏதும் செய்யமுடியுமா? என்று வேண்டுமானால் கேட்டுப்பார்க்கலாம்.

---

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. டங்கல் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.

“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”

“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராகவும், சிதம்பரம் நிதித்துறை இணையமைச்சராகவும் இருந்தபோதுதான் இத்தகைய மாற்றங்கள் தொடங்கின. மாநில சுயாட்சி முழக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் துணையுடன்தான் இந்த மாற்றங்கள் முழுவேகத்தில் நடைபெறுகின்றன.

இதற்கு என்ன தீர்வு என்பது தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் இல்லை. இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்பாடுகளும்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் சந்ததிகள் வாழ்க்கையை பாதுகாக்கும்.

-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Sunday, July 22, 2007

வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையும்...!


நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. நமது வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமாக இதை உணர்ந்திருப்போம். காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால், நடைமுறையில் உள்ள சாதாரண சொற்களை பயன்படுத்தினால்கூட, அது சட்டத்தின்முன் குற்றச்செயலாக கருதப்படும் நிலை வந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக, சர்க்கரை இல்லாத என்பதை 'சுகர்-ப்ரீ' (SUGAR FREE) என்று நாம் கூறுவண்டு. 'சுகர்-ப்ரீ'யாக ஒரு காப்பி கொண்டு வா! என்று இனி நீங்கள் இதுபோல் 'ப்ரீ'யாக பேசமுடியாது. ஏனெனில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பால்பொருள் நிறுவனமான 'அமுல்' தயாரிக்கும் ஐஸ்கிரீமிற்கு, 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' (PROLIFE SUGAR FREE) என்ற பெயரில் உள்ள 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது என்ன கலாட்டா? என்று ஆச்சரியப்படாதீர்கள்!

புதிதாக அமல்படுத்தப்படும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின்படிதான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கான செயற்கை இனிப்பான்கள தயாரிக்கும் ஜைடஸ் காடிலா (ZYDUS CADILA) என்ற நிறுவனம், அதன் தயாரிப்புகளை 'சுகர்-ப்ரீ' என்ற பெயரில் விற்பன செய்து வருகிறது. மக்கள் சாதாரணமாக உபயோகிக்கும் சொற்களை வணிகப்பெயராக பயன்படுத்தி வந்த அந்த நிறுவனம், கடந்த 1988ம் ஆண்டு முதல் அந்த சொல்லை தான் பயன்படுத்தி வருவதாகவும், எனவே 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை தமது டிரேட் மார்க்-ஆக பதிவு செய்து தரவேண்டும் என்று மனு செய்துள்ளது. இந்த மனு பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' ஐஸ்கிரீம் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி சந்தைக்கு வந்தது. இதையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவில், 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை தாம் கடந்த 1988ம் ஆண்டு முதல் வணிகப்பெயராக பயன்படுத்தி வருவதாகவும், அந்த சொற்களுக்கு டிரேட் மார்க் பதிவு கோரி மனு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்கு 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' என்று பெயர் வைப்பதால், தமது பொருளின் நற்பெயருக்கு இழப்பு ஏற்படுவதாகவும் இதனை ஈடு செய்ய, அமுல் நிறுவனம் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் அமுல் நிறுவனம், 'சுகர்-ப்ரீ' என்ற பெயரில் எந்த பொருட்களையும் விற்பனை செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிஸ்டானி, அமுல் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜர் ஆகாத நிலையிலேயே வழக்கை விசாரித்து, இந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளதைப்போல தடை வழங்காவிட்டால் ஜைடஸ் காடிலா நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்ற வாதத்தில் தாம் திருப்தி அடைவதாக கூறி, அமுல் நிறுவனம் மே 3ம் தேதிவரை 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளார்.

காப்பிரைட் சட்டம் உட்பட, காப்புரிமை சட்டங்களில் மக்கள் பொதுவாக பயன்படுத்தும் சொற்களையோ, ஒரு பொருளின் இயல்பை குறிக்கும் சொற்களையோ பதிவு செய்யமுடியாது. அப்படிப் பார்த்தால் 'சுகர்-ப்ரீ' என்ற சொல்லும் உலகம் முழுவதும் சாதாரணமாக பயன்படுத்தும் சொல்தான். இந்த சொல்லை அமுல் நிறுவனம் பயன்படுத்தியதால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ள ஜைடஸ் காடிலா நிறுவனம், பல ஆண்டுகாலமாக மக்கள் மிகச்சாதாரணமாக பயன்படுத்தி வரும் 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை யார்,யாருக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்து உரிமையாக்கி கொண்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இந்த வழக்கின் முடிவு எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் மாறிவரும் சட்டங்களின் நிலைக்கு இது ஒரு எளிமையான எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாம் வாழ்வின் பல முனைகளிலும் பாதிக்கப்படுவோம். குறிப்பாக உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்பட தேவைகளை ஈடு செய்வது மிகக்கடினம் ஆகிவிடும்.

உதாரணமாக, கனடா நாட்டின் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் என்பவரின் அனுபவத்தை பார்க்கலாம். இயற்கை விவசாயியான அவரது நிலத்தில் உள்நாட்டு பயிர்வகைகளை பயிரிட்டிருந்தார். அருகே உள்ள மற்றொரு விவசாயியோ மான் சான்டோ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகளை பயிரிட்டிருந்தார். அந்த நிலத்தில் விளைந்திருந்த பயிர்களில் இருந்த மகரந்த தூள்கள் காற்றின் மூலமாகவும், பூச்சிகளின் மூலமாகவும் பெர்சி ஷ்மேய்சரின் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களிலும் ஊடுருவி இருந்தது. இயற்கை வேளாண்மை செய்து
வரும் தனது நிலத்தில் மரபணு மாற்றக்கூறுகள் என்ற மாசு படிவது குறித்து கவலை கொண்ட பெர்சி ஷ்மேய்சர், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆலோசித்து கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு மான் சான்டோ நிறுவனத்தில் இருந்து, அந்த நிறுவனம் காப்புரிமை பதிவு செய்திருந்த மரபணுமாற்றக் கூறுகளை உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி சட்டரீதியான நோட்டிஸ் வந்தது.

தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், மான்சான்டோ நிறுவனம்தான் தன் நிலத்தில் அத்துமீறி, மாற்றப்பட்ட மரபணு கூறுகளை பரப்பி மாசுபடுத்தி விட்டதாக பெர்சி ஷ்மேய்சர் பதில் அளித்தார். ஆனால் அவரது வாதம் மறுக்கப்பட்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் கீழ் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் குற்றவாளி என்றும், மான்சான்டோ நிறுவனத்திற்கு அவர் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்நாட்டு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் தவறிழைத்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் விவரங்களுக்கு: http://www.percyschmeiser.com/


பெர்சி ஷ்மேய்சர் மனித குலமேம்பாட்டிற்காக சிறந்த முறையில் செயல்பட்டதற்காக கடந்த 2000ம் ஆண்டில் மகாத்மா காந்தி விருது வாங்கியவர் என்பது கூடுதல் செய்தி...!

உலகமயமாக்கல் காரணமாக, அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்த சட்டங்கள் முழுமையாக அமல் செய்யப்படும்போது, இந்திய விவசாயிகளுக்கும் 'திருட்டுப்பட்டம்' கிடைக்கும். அதை சட்டமும் அங்கீகரிக்கும். இது விவசாயிகள் மட்டும் சார்ந்த பிரசினை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோல மருத்துவத்துறையிலும், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு தமிழகத்தில் நடைபெற்றுவரும் வழக்கு ஒன்றையே பார்க்கலாம்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த 'நோவார்டிஸ்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. 'இமாடினிப் மெஸிலேட்' என்ற பெயருடய மருந்துப்பொருளை 'க்ளிவெக்' என்ற வணிகப்பெயரில் தயாரித்து அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதே மருந்தை வேறு பெயர்களில், வேறு பல நிறுவனங்களும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில் 'க்ளிவெக்' என்ற பெயரில் விற்கப்படும் மருந்து பொருளுக்கு காப்புரிமை கேட்டு 'நோவார்டிஸ்' நிறுவனம் மத்திய அரசிடம் மனு செய்தது. அவ்வாறு காப்புரிமை அளிக்கப்பட்டால், 'இமாடினிப் மெஸிலேட்' என்ற மருந்தை வேறு யாரும் எந்த பெயரிலும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. எனவே அம்மருந்திற்கு அதை தயாரிக்கும் உரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் விலை.

ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளுக்கு 4 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தின் தற்போதைய விலை சுமார் 50 ரூபாய். காப்புரிமை பதிவு செய்யப்பட்ட நாடுகளில் இம்மருந்தின் விலை சுமார் 1000 ரூபாய். எனவே இந்தியாவில் இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால், ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மருந்துக்கு செலவழிக்க வேண்டும்.

இதுவரை இந்த மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை வழங்கப்படவில்ல. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அனைத்து மருந்து தயாரிப்பாளர்களும், தங்கள் தயாரிப்புகளுக்கு காப்புரிமை கோருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அனைத்து மருந்துகளுக்கும் காப்புரிமை கொடுக்கப்பட்டால் மருத்துவம் என்பதே பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும்.

இவை அனைத்தும் சட்டத்தின் பெயரால் நடபெறுகின்றன! உலகையே குலுக்கிய சுனாமி பேரலை இந்தியாவின் பெரும்பகுதியை சூறையாடிய டிசம்பர் 26, 2004 அன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால் சோகமயமான அன்றய தினத்தில் காப்புரிமை சட்டதிருத்த மசோதாவில் குடியரசுத்தலைவர் சத்தமின்றி கையொப்பம் இட்டார். அந்த திருத்தம் அனைத்தும் மக்களுக்கு எதிரானதாகவும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே இருந்தது என்பதை கூறத்தேவையில்லை.

சமூக அநீதிகளிலிருந்து சட்டத்தின் துணை கொண்டு மக்களை காப்பது வழக்கறிஞர்களின் முதன்மை பணி என்பதே பொதுக்கருத்து. ஆனால், உலகமயமாக்கல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற பெயர்களில் அமலுக்கு வரும் இதுபோன்ற மக்கள் விரோத சட்டங்களிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதே மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களின் கவலையாக உள்ளது.


-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Friday, July 20, 2007

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் - பகுதி 4

விதைச்சட்டம் (SEED ACT) 1966விதைகளை பதிவு செய்வதற்காக 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதைச்சட்டம் TRIPS ஒப்பந்தத்திற்கு பின்பு பல மாற்றங்கள் அடைந்து நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக SEED BILL 2004 என்ற பெயரில் காத்திருக்கிறது.

புதிதாக மாற்றம் பெற்றுள்ள இந்த விதைச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் விதைகளை பதிவு செய்தவர் மட்டுமே அந்த விதைகளை விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு இச்சட்டம் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைவிட கொடியதாக விதைச்சட்டம் உள்ளது. ஏனெனில் இச்சட்டத்தின் கீழ் ஒருவர் விதைகளை பதிவு செய்ய அந்த விதையின் மூலக்கரு எங்கிருந்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்க தேவையில்லை.

இதன்மூலம் நம்முடைய பாரம்பரியமிக்க விதைகள் சில தனியார்களின் உடைமையாக மாறக்கூடும். விவசாயிகளின் பாரம்பரிய விதைகளுக்கு இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தாலும், ஒரு பயிரின் மூலத்தை தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விதைகள் பறிபோவதற்கு இச்சட்டம் உதவி செய்கிறது.

மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைப்போல விதைச்சட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உரிமையை அளிப்பதில்லை. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒருவர் மீண்டும், மீண்டும் பதிவு செய்து கொண்டு விதைகளை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு காப்புரிமை மற்றும் விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.

லஞ்சம், ஊழல் இவற்றையே முதன்மைப்பணியாக கொண்டு இயங்கும் இந்திய அதிகார வர்க்கம், பணபலம் படைத்த விதை தயாரிப்பு நிறுவனங்களிடம் சரணடைந்து, விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படும் என்பதையும் கூறத்தேவையில்லை.
-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)

Thursday, July 12, 2007

கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.
அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...

கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பது கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)

நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது.

நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.

கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

குண்டர்கள் மூலம் மிரட்டுதல், வீடு மற்றும் தொழில்புரியும் இடங்களில் வாடிக்கையாளரை இழிவு செய்யும் நோக்கில் பேசுதல், நடத்தல் ஆகிய அனைத்தும் சட்டப்படி தவறானவை.

அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடன் வசூல் பணிகளை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் கண்ணியம் குறையும் வகையில் நடக்கும் வசூல் முகவர்களை (குண்டர்களை) ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்க முடியும்.

காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)

கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.

அந்தப்புகாரில் வசூல் முகவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.

காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.

மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள்.

கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு நீங்கள் கையெழுத்திட்டாலும் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது.

கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்வையிடவும் )

Friday, July 6, 2007

கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை!“இந்திய காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு அவர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுவதே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சர் ஜேம்ஸ் ஸ்டீஃபன் என்பவர் கடந்த 1883ம் ஆண்டில் எழுதிய “குற்றவியல் சட்ட வரலாறு” என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நிலையில் ஏதேனும் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால், நிலைமை மிக மோசமாக பின்னடைந்துள்ளதாகவே தெரிகிறது. மிளகாய்ப்பொடியை தூவியாவது விசாரிப்பதைவிட போலிமோதல்களில் சுட்டுக்கொல்வதே எளிது என்று தற்போதைய காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சுட்டுக் கொலை செய்யப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருந்தால் நாட்டின் உயர்மட்ட பதவியில் இருப்பவர்களும்கூட சிக்கலாம் என்ற நிலையில் இந்த என்கவுன்டர் கொலைகள் நடப்பதையே, சந்தனக்கடத்தல் வீரப்பன் படுகொலை உள்ளிட்ட பல்வேறு போலிஎன்கவுன்டர் கொலைகளும் நிரூபிக்கின்றன.

இந்நிலையில், ஐ.நா. அவையில் சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை நிறைவேற்றப்பட்ட தினமான ஜூன் 26ம் நாள் “சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமா”க மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில் மும்பை நகரில் கருத்தரங்கு நடைபெற்றது.

மும்பை உய்ர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மனித உரிமை ஆர்வலர்களும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை!


பயங்கரவாதிகள், கூலிப்படையினர், கிரிமினல் குற்றவாளிகள் ஆகிய யாரையும் கொலை செய்வதற்கு இந்தியாவில் எந்த ஒரு சட்டமும் காவல்துறையினருக்கோ, ராணுவத்துக்கோ, வேறு எவருக்குமோ அதிகாரம் அளிக்கவில்லை என்று தமது உரையை தொடங்கிய நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ், தடா-பொடா போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களில் கூட இத்தகைய கொலைகள் அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

காவல்துறையினர் நடத்தும் (போலி) என்கவுன்டர் கொலைகளை கொலை வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதி சுரேஷ், எந்த சட்டத்தின் கீழும் இந்த நடைமுறையிலிருந்து காவல்துறைக்கு விலக்களிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இத்தகைய என்கவுன்டர்களில் அதிக அளவில் சிறுபான்மை மதத்தினரும். தலித் மக்களுமே கொல்லப்படுகின்றனர் என்று அவர் வருத்தம் தெரிவித்தார். எனினும் காவல்துறையினரும், பத்திரிகை-செய்தித் துறையினரும் என்கவுன்டர் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

இத்தகைய முறைகேடுகளை கொள்கையளவில் கண்டிக்கும் நீதிமன்றங்களே, உண்மை அறியும் சோதனை என்ற பெயரில் – இந்திய குடிமகனுக்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1984ம் ஆண்டு நிறைவேற்றிய சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்று அமல் படுத்தவேண்டும் என்று மத்திய அரசை, பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் வற்புறுத்துவதே, இத்தகைய பிரசினைகளை அகற்றும் வழியாகும் என்றும் நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ் தெரிவித்தார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் அர்ஷி கான், நாட்டில் ஒற்றுமையாக வாழும் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கான உளவியல் ரீதியான பணியில் காவல்துறை-ராணுவம் போன்ற அரசு அமைப்புகளும், செய்தி ஊடகங்களும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

கடந்த 1970ம் ஆண்டுவாக்கில் நாட்டின் சில பகுதிகளில் தொடங்கிய என்கவுன்டர் கலாசாரம், தற்போது நாடு முழுவதும் பரவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். காஷ்மீர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேரும், பஞ்சாபில் சுமார் 2 ஆயிரத்து 500 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் பேசும்போது, இது போன்ற மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்படும் மதச்சிறுபான்மையினர், தலித் மக்கள் ஆகியோர் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தனித்து செயல்படுவதும், பரந்த மனப்பான்மையற்று இருப்பதும் அனைவரது எதிர்காலத்துக்கும் ஆபத்தாக விளையும் என்று அவர் எச்சரித்தார்.

கொல்லப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்க வேண்டும்

அனைத்திந்திய கிறிஸ்தவ காங்கிரஸின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜான் தயாள், அனைத்திந்திய அளவில் காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியர் நகரி பாபையா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி போன்றவர்களை கொலை சதித்திட்டம் தீட்டியதாக கூறி சிலர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளுக்கு எதிரான மனுதர்மவாதிகள் இந்துக்களுக்கும், மனித குலத்திற்கும் எதிரானவர்கள் என்று கூறிய அவர், இந்துத்துவ சக்திகள் அரசு, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊடுருவி வருவதாக தெரிவித்தார்.

அரசோடு முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்களை என்கவுன்டரில் கொலை செய்வது அதிகரித்து வருவதாக கூறிய பேராசிரியர் பாபையா, இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைளும் கேள்விக்குறியாவதை கோடிட்டு காட்டினார்.

ஆந்திர பிரதேச சிவில் உரிமைக்கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பேசுகையில், நாடாளுமன்ற அரசியலின் செயல்பாடுகள் தோல்வி அடையும்போது நக்ஸல்பாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். அந்த கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாதபோது கேள்வி எழுப்புபவர்கள் என்கவுன்டர்களில் படுகொலை செய்யப் படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்கவுன்டர் கொலைகளை இந்திய தண்டனை சட்டம் பிரிவின் 302ன் படி கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு, ஆந்திர பிரதேச சிவில் உரிமைக்கழகத்தால் பெறப்பட்டது என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் சுரேஷ், ஆனால் அந்த உத்தரவை அரசோ, காவல்துறையோ இதுவரை மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல்கள் !
தமிழ்நாடு மக்கள் உரிமை கூட்டமைப்பின் தலைவர் புதுவை கோ. சுகுமாரன், தமிழகத்தில் நடந்த என்கவுன்டர் படுகொலைகளை பட்டியலிட்டார். இந்த என்கவுன்டர் கொலைகளை முறைப்படி கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைத்து ஆட்சியாளர்களும் திட்டமிட்டு புறக்கணிப்பதை சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பேசும் போது, வீரப்பனை போன்றவர்களை உருவாக்குவதில் அரசியல்வாதிகளே பெரும் பங்கு வகிப்பதாக கூறினார். எனினும் அந்த அரசியல்வாதிகள் எந்த விசாரணைக்கும் உட்படாமல் தப்பிவிடுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

என்கவுன்டர் கொலைகளை செயல்படுத்துவதில் கட்சிபேதம் இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசு மற்றும் காவல்துறையினரின் முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்களும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களும் இந்த முறைகேடுகளுக்கு அதிக அளவில் என்கவுன்டர் கொலைகளுக்கு பலியாவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குறிப்பிட்டார்.

முத்துலட்சுமியைத் தொடர்ந்து அகமதாபாத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரானேஷ் குமார் என்ற ஜாவேத்-இன் ஜாவேத்தின் மனைவி சஜிதா, பெங்களூரு காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட அப்துல் ரவூஃப்-இன் மனைவி நூரி ஆகியோர் பர்தா உடைக்குள்ளிருந்தவாறை மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல் எழுப்பினர். பிரானேஷ் குமார் என்ற ஜாவேத்-இன் தந்தை கோபிநாத பிள்ளை, மங்களூர் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட சுதீரின் தாய் பிலோமினா ஆகியோர் தங்கள் மகன்களின் வாழ்க்கையை காவல்துறை சட்டவிரோதமாக சூறையாடியதை உருக்கமாக எடுத்துரைத்தனர்.

தீர்மானங்கள்

நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களை வலுப்படுத்தும் சட்டங்களை இயற்ற வேண்டும்; காவல் துறையினர் மற்றும் படையினர் நடத்தும் என்கவுன்டர் படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; அதற்கேற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்; காவல்துறை மற்றும் ஆயுதப்படையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை தேசிய அளவில் தயாரித்து வெளியிட வேண்டும்; அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்; ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1984ம் ஆண்டு நிறைவேற்றிய சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்று அமல் படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நிகழ்ச்சியின் முடிவில் மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் செயலாளர்களில் ஒருவரான அக்னி சுப்ரமணியம் நன்றி கூறினார்.

அடுத்தது என்ன?

இந்த கட்டுரையின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ளவாறு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு காவலர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுகின்றனர் என்று சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதை விட, நிலைமை மிகவும் மோசமாக பின்னடைந்துள்ளது என்று தெரிகிறது.

இந்நிலையை மாற்றும் பொறுப்பு நீதித்துறை, காவல்துறை, அரசியல் – சமூகத் தலைவர்களைவிட வேறொரு தரப்பினருக்கே அதிகம் உள்ளது. அந்த தரப்பினர் வேறு யாருமல்ல. இதை படிக்கும் நீங்கள்தான்.

இந்திய அரசியல் சட்டம், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்த குறைந்த பட்ச அறிவும், தெளிவும் பெறுவதோடு – அதை அனைவருக்கும் பரப்பி சமூக அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மனித குல விடுதலைக்கு உடனடித் தேவையாகும்.


-சுந்தரராஜன்

(sundar@LawyerSundar.net)

Wednesday, July 4, 2007

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...!(பகுதி 3)

மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு
(Genetic Engineering Approval Committee)

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவைக்கு கீழ் இயங்கும் ஒரு அமைப்பே, மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு(GEAC).

இந்தக்குழு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சோதித்து அனுமதி அளித்தபின்பே அவற்றை சந்தையில் விற்க முடியும். சோதனை முறையாக நான்கு ஆண்டுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகள் பயிரிடப்பட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து இக்குழு அவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதுபோன்ற சோதனைகளை தனியார் நிலங்களில் மேற்கொள்ளலாம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது.

ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற சோதனைகளை சாதாரண விவசாய நிலங்களில் சோதனை அடிப்படையில் பயிரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை நடத்தமுடியும்.

இந்தியாவிலோ, நில உரிமையாளருக்கும், விவசாயிக்குமகூட தெரியாமல் மரபணு மாற்றப்பயிர்கள் சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனைக்கூட எலி, முயலை வைத்து நடைபெறும் பரிசோதனைகள், இந்தியாவி்ல் மனிதர்களை வைத்து நடைபெறுகின்றன, அதுவும் அரசின் அனுமதியோடு.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய யூனியன் பல கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, அவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலங்களிலேயே சோதனை செய்யவேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை மக்களுக்கு விற்பனை செய்யும்போது மரபணு மாற்றப்பட்டது என்ற முத்திரையை (LABELLING) கட்டாயம் இடவேண்டும் என்று அந்நாட்டு சட்டம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உணவினை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன. இதுபோன்ற உரிமை இந்தியாவில் வழங்கப்பட வில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலக வர்த்தக நிறுவனம் ஆதரிப்பதால் இவற்றை தடைசெய்வது உறுப்பு நாடுகளுக்கு இயலாத காரியம். மரபணு மாற்றப்பட்ட உணவினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உலக வர்ததக கழகம், ஐரோப்பாவின் தடை நடவடிக்கைகள் உலக வர்ததக கழக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.

அமெரிக்காவில் உற்பத்தியான மரபணு மாற்றப்பயி்ர்களை தடை செய்ய ஐரோப்பிய நாடுகளாலேயே முடியவில்லை என்றபோது இந்தியா போன்ற ஏழை நாடுகளின் நிலையை சொல்லத் தேவையில்லை.


தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைக்கான சட்டம் (PROTECTION FOR PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT) 2001

இச்சட்டத்தின் பெயரிலேயே கூறப்பட்டுள்ளதைப்போல தாவரவகைகளையும், உழவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தாவரங்களுக்கு அவற்றின் இயல்பான தன்மையில் காப்புரிமை வழங்க முடியாத சூழ்நிலையில் அந்த தாவரங்களை பதிவு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், ஏறக்குறைய காப்புரிமை சட்டத்தின் மறு வடிவமாகவே உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரத்தை பதிவு செய்ய, அத்தாவரம் முன்பே தெரிந்த எந்த ஒரு தாவரத்தின் குணாதிசயங்களையும் பெற்றிருக்கக் கூடாது. ஒரே ஒரு மாறுபட்ட குணாதிசயத்தை அந்த தாவரம் பெற்றிருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் அந்த தாவரத்தை பதிவு செய்ய முடியும்.

முன்பே தெரிந்த ஒரு பயி்ர் வகையின் மூலக்கூறை அறிவியல் வளர்ச்சியின் மூலம் சிறிது மாற்றம் செய்தாலே அதை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து அந்த தாவரத்தை தனி உடைமை ஆக்கிக்கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரவகையை பதிவு செய்து கொண்டால் 15 ஆண்டுகாலம் அவரே அதற்கு முழு உரிமை பெறுகிறார். அவற்றின் உற்பத்தி, விற்பனை போன்றவை அந்த உரிமையில் அடங்கும்.காப்புரிமை சட்டம் போலவே இந்த சட்டத்தின் கீழும் COMPULSORY LICENSING முறை உள்ளது. ஆனால் இந்த சட்டம் விதைகளை வணிக நோக்கில் உற்பத்தி செய்யும் BREEDER எனப்படும் உற்பத்தியாளர்களுக்கே அதிக பாதுகாப்பு அளிக்கிறது. காப்புரிமை சட்டத்தைப்போலவே இந்த சட்டத்திலும் தாவரம் பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகே COMPULSORY LICENSING-ல் பதிவு அனுமதிக்கப்படுகிறது. மேலும் PLANT BREEDER விரும்பினால் இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக 12 மாத அவகாசம் பெற்றுக்கொள்ளலாம். காப்புரிமை சட்டத்தில் உள்ளது போலவே COMPULSORY LICENSING பெறுபவர் தாவரத்தை பதிவு செய்தவருக்கு அளி்க்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார்.-மு. வெற்றிச்செல்வன்

Tuesday, July 3, 2007

மாறும் சட்டங்களும், பறிபோகும் விவசாயிகளின் உரிமைகளும்...! (பகுதி-2)

காப்புரிமை சட்டம் (PATENT ACT)

இந்தியாவின் காப்புரிமை சட்ட வரலாறு 1856ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒரு பொருளையோ, அதன் பயன்பாட்டையோ முதன்முறையாக கண்டறியும் ஒருவர், உரிய அதிகார அமைப்புகளிடம் பதிவு செய்து பெறும் உரிமை, காப்புரிமை எனப்படுகிறது. இவ்வாறு காப்புரிமை பெற்ற அப்பொருளை பதிவு செய்தவர் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும். அவரைத்தவிர வேறு யாரும் அப்பொருளை 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது.

பழைய சட்டத்தின்படி, விவசாயம் மற்றும் மருத்துவத்துறை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கு இந்த சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள்வரை மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின்கீழ் விவசாயம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த புதிய பொருட்களை கண்டுபிடிப்பவர்கள், அப்பொருளை தயாரிக்கும் முறையை (மட்டுமே) PROCESS PATENT என்ற பெயரில் காப்புரிமை பதிவு செய்யலாம்.

இவ்வாறு காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு ஒருவர், அதே முறையில் தயாரிக்க முடியாது. ஆனால், அதே பொருளை வேறு முறைகளில் தயாரித்து விற்பதையோ, பயன்படுத்துவதையோ யாரும் தடுக்க முடியாது. இந்த முறையின் கீழ் விலை உயர்ந்த வெளிநாட்டு மருந்துப்பொருள் ஒன்றை உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் வேறு முறைகளில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு முன்னர் இருந்தது.

ஆனால், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒரு பகுதியான TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டதைத் தொடர்ந்து தற்போது PROCESS PATENT என்ற பொருள் தயாரிப்பு முறையோடு கூடுதலாக PRODUCT PATENT என்ற பெயரில் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய முறையின் கீழ் காப்புரிமை பதிவு பெற்ற மருந்து அல்லது விதை போன்ற ஒரு பொருளை காப்புரிமை பெறாத மற்றவர்கள் வேறெந்த முறையிலும் தயாரிப்பது தடை செய்யப்படுகிறது. இதனால் மருந்து அல்லது விதைப்பொருட்களுக்கு காப்புரிமை பெற்றவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெறுகின்றனர்.

மேலும், இயற்கையாக தோன்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு காப்புரிமை வழங்கத் தேவையில்லை என TRIPS ஒப்பந்தம் கூறுகிறது. ஆனாலும் இயற்கையில் அமையாத/ மனித முயற்சிகளால் மேற்கொள்ளப்படும் உயிரியல் சாராத முறை (NON-BIOLOGICAL) மற்றும், நுண்ணுயி்ர் முறை (MICRO-BIOLOGICAL) மூலம் இயற்கை பண்புகள் மாற்றி அமைக்கப்பட்ட தாவரம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.இதன்படி இந்தியாவும் தனது காப்புரிமை சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. உயிரியல் அற்ற முறை (NON-BIOLOGICAL) என்பது மறைமுகமாக GENETICALLY MODIFIED ORGANISM எனப்படும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு காப்புரிமை வழங்கவே உதவுகிறது. மேலும் TRIPS ஒப்பந்தத்தின்படி காப்புரிமை பதிவு செய்யப்பட்ட பயிர்களை 20 வருட காலத்திற்கு வேறு யாரும் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ இச்சட்டம் தடை விதிக்கிறது. (TRIPS ஒப்பந்தத்திற்கு முன் இது 7 வருடமாக இருந்தது)

இந்தியாவின் காப்புரிமை சட்டத்தின்கீழ் நேரடியாக தாவரம், விதைகள், பயிர்வகைகள், அவை இயற்கையாக விளையும் முறை போன்றவற்றிற்கு காப்புரிமை வழங்குவதில்லை. தாவரத்தின் இயற்கையான போக்கில் அமையாமல், மனித செயல்பாடுகள் மூலம் ஏற்படும் மாற்றங்களை NON-ESSENTIAL BIOLOGICAL PROCESS என்று வகைப்படுத்துகின்றனர். இது போன்ற செய்முறைகளுக்கு காப்புரிமை பெற முடியும். ஆக GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு காப்புரிமை பெற உதவுகிறது.

அடுத்தப்படியாக TRIPS ஒப்பந்தம், தாவரங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையையும் காப்புரிமை பெறத்தக்கதாக கூறியுள்ளது. இதன்படி நமது காப்புரிமை சட்டத்திலும் 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி தாவரங்களுக்கான சிகிச்சை முறைகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் தாவரங்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கான மருந்துகள், அதை பயன்படுத்தும் முறை, உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் காப்புரிமை பெற முடியும்.

பசுமைப்புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல தாவரங்களும் பூச்சிகளை எதிர்கொள்ளும் திறன் அற்றவையாக இருந்தன. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயிகளின் கூடுதல் சுமையாக இருந்தன. இதற்கு மாறாக பூச்சிகளை கொல்லும் திறன் பெற்றதாக கூறப்படும் பாக்டீரியம் துரெஞ்ஜெரிஸ் (BACTERIUM THURENGERIUS) என்ற நச்சுப்பொருளை தாவரத்தின் மரபணுவில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. Bt என்று பரவலாக அழைக்கப்படும் இந்த முறை பருத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது கத்தரிக்காய், பருத்தி, அரிசி உட்பட பல்வேறு பெயர்களில் இந்த உயிரிதொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நவீன சட்டங்களின் கீழ் இந்த பயிர்கள் அனைத்தும் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்தியாவில் மான் சான்டோ, பாயர், மஹிகோ உள்ளிட்ட நிறுவனங்களே இத்தகைய காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன.

இத்தகைய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்திய விவசாயம் சென்றுவிடாமல் கட்டாய உரிமைப்பதிவு (COMPULSORY LICENSING) முறை பாதுகாக்கும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இம்முறை மூலமாக, காப்புரிமை பெறப்பட்ட ஒரு பொருள் போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கும்போதோ, அல்லது அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ – மக்களின் நலன் கருதி – அதே பொருளை உற்பத்தி செய்யும் உரிமை, வேறு எவருக்கேனும் வழங்கப்படும். இதன் மூலமாக ஒரு பொருள் ஒருவரிடமே இருப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும், இதனால் இத்தகைய பயிர்கள் தனியார் சிலரின் ஏகபோக கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கமுடியும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெற்ற ஒரு பொருளை தயாரிக்க விரும்பி COMPULSORY LICENSING பெறும் ஒரு நபர், காப்புரிமை பெற்றவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார். எனவே அப்பொருளை தயாரித்து விற்பனை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்குமோ அத்தொகையையே COMPULSORY LICENSING க்கான இழப்பீடாக கேட்பார்கள் என்பதை உண்மை. எனவே இந்த COMPULSORY LICENSING முறை விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பயன்படாது என்பதே உண்மை.

ஒரு பயிர் வகைக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்ட உடனே அந்த பொருளுக்கான COMPULSORY LICENSING வழங்கலாம் என்றிருந்த நிலை TRIPS-க்கு பின் மாறியுள்ளது. இதன்படி காப்புரிமை பதிவு செய்து 3 ஆண்டுகள் கழிந்த பின்னரே COMPULSORY LICENSING வழங்கப்படும். இந்த 3 ஆண்டுக்காலத்தில் காப்புரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் சட்டம். சொல்வதுதான் விலை. இவற்றை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது.

TRIPS ஒப்பந்தத்தின் கீழ் காப்புரிமை சட்டம் அடைந்துள்ள மாற்றத்தின் பயனாக GMO போன்ற பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதிக லாபம் பெறமுடியும். இது போன்ற பயி்ர்கள் மலட்டுத்தன்மை மிக்கதாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் விதைப்பயிர் தேவைக்கு காப்புரிமை பெற்ற நிறுவனங்களையே சார்ந்திருக்கும் அவல நிலை ஏற்படும். மேலும் காப்புரிமை காலகட்டம் முடிந்த பின்னரும் இதுபோன்ற பயிர்கள் பொது உபயோகத்திற்கு மீண்டும் வராமல் தடுப்பதற்கு அந்த காப்புரிமை சட்டத்தின்படியே பல வழிமுறைகள் உள்ளன.

காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு முறையில் தயாரித்து மலிவு விலையில் அளிக்கும் GENERIC MANUFACTURERS-களுக்கு பழைய காப்புரிமை சட்டம் பாதுகாப்பு அளித்தது. ஆனால் புதிய சட்டதிருத்தங்கள் இந்த விவசாயிகளுக்கு பயிர்வகைகள், உரங்கள், ரசாயன உரங்கள் கிடைப்பதை தடுத்து நிறுத்தக் கூடும்.

இயற்கையில் விளையும் தாவரங்களை, மனித முயற்சி மூலம் குறுக்கீடு செய்து மரபணுவை மாற்றியமைக்கும் தாவரங்கள் அனைத்தும் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இவை மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தீமைகளும் செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு தோல் நோய்கள், ஆண்மை-பெண்மை குறைபடுதல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றை வேளாண் வி்ஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.

எதிர்காலத்தில் இந்த மரபணு மாற்ற பயிர்கள், என்னென்ன தீய விளைவுகளை கொண்டுவரும் என்பதற்கோ, அவற்றை தடுக்க என்ன வழி என்பதற்கோ யாரிடமும் பதில் இல்லை.
இத்தகைய குறைபாடுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீது உணவுப்பொருட்கள் கலப்பட தடைச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம், தீங்கியல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் மூலம் வழக்கு தொடரவும், பிரசினைக்கு தீர்வு காணவும் வழி இருந்தது. ஆனால் TRIPS ஒப்பந்தம் இந்திய குடிமக்களுக்கான இந்த உரிமைகளை பெருமளவில் குறைக்கின்றது. TRIPS ஒப்பந்தப்படி இத்தகைய பிரசினைகளை ஏற்படுத்தும் தாவரங்களின் பதிவுகளை ரத்து செய்ய மட்டுமே முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோர முடியாது.

காப்புரிமை போன்ற அறிவுச்சொத்துரிமை சட்டங்கள் விதைகளை தனிநபரின் உரிமையாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வழி காட்டுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் காப்புரிமை பதிவுபெற்ற எந்த பொருளும், எந்த தடையுமின்றி பொதுமக்கள் உபயோகத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதை அந்த சட்டத்தின் அடிப்படை விதி. இருப்பினும் புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள காப்புரிமை சட்டம் சில பின் வழிகளின் மூலம் காப்புரிமை பெற்ற பொருள், ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்வதற்கு உதவுகிறது. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் அதன் தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தியிருந்தாலோ, அல்லது பொருளாதார முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தாலோ அந்த கண்டுபிடிப்பிற்கு மீண்டும் காப்புரிமை பெறலாம். எனவே GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட தாவரப்பொருட்களின் காப்புரிமையை, பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் நீடித்துக் கொண்டே போகக்கூடும்.-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)

Monday, July 2, 2007

கிரெடிட் கார்டு - வெளியார் நடத்தும் மோசடிகள்! (வீடியோ காட்சிகளுடன்)

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் மட்டுமல்ல, வேறுபலரும் நம்மை கொள்ளையடித்து வருகின்றனர்.PHISHING மற்றும் SKIMMING ஆகிய பெயர்களில் இந்தக் கொள்ளைகள் நடைபெறுகின்றன.

PHISHING என்பது வங்கிகளின் இணையதளத்தை போன்ற போலிதளங்கள் மூலமும், SKIMMING என்பது கிரெடிட் கார்டையே சட்ட விரோதமாக நகலெடுத்தும் மோசடி செய்வதாகும். இணையம் மூலமாக வங்கிப்பணிகளை மேற்கொள்வோரே PHISHING என்ற முறைகேட்டால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

வங்கிகளில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, ஒரு (மர்ம) மின்னஞ்சல் வரும். அதில், அந்த நுகர்வோருக்கு பரிசு விழுந்துள்ளதாகவும் அதைப் பெற்றுக்கொள்ள, மின்னஞ்சலின் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். அந்த இணைப்பில் வங்கியின் இணையதளத்தைப் போன்ற ஒரு போலி இணையதளம் இருக்கும். அந்த இணையதளத்தில் உங்கள் கணக்கு எண், அதன் PIN நம்பர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த விவரங்களை நீங்கள் அளித்துவிட்டால், உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தொகையும் "அபேஸ்" ஆகிவிடும். அடுத்தவர் பணம் மீது பேராசை கொண்ட வாடிக்கையாளர்களே இதுபோன்ற மோசடிகளில் சிக்குவதாக வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், அவ்வாறு பேராசை கொண்ட வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எவ்வாறு மோசடிக்காரர்களுக்கு தெரிந்தது? என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மோசடிக்காரர்களுக்கு கிடைத்ததில் வங்கி அதிகாரிகளின் பங்கு என்ன? என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
இது எப்படி இருப்பினும், வங்கியின் இணையதளத்திற்குள் லாக்-இன் செய்ய தேடுபொறிகள் மூலம் நேரடியாகத்தான் செல்லவேண்டும். இதுபோன்ற மெயில்களில் உள்ள இணைப்பு மூலமாக திறக்கும் இணைய தளங்கள் போலியானவை என்பதை புரி்ந்து கொள்ள வேண்டும்.

SKIMMING என்ற பெயரில் கிரெடிட் கார்டையே நகலெடுக்கும் மோசடி மிகவும் நூதனமானது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் பின்புறமுள்ள கருப்பு நிற காந்தப்பட்டையில்தான் வாடிக்கையாளரின் அனைத்து ரகசிய விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரகசிய விவரங்களை நகலெடுக்கும் வெளிநாட்டுக்கருவிகள் சுமார் 19,000 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.


அமெரிக்காவில் கிடைக்கும் இந்த கருவிகளை ஆன்லைன் மூலமாக யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். இந்த கருவியை பயன்படுத்தி ஒரு கிரெடிட் கார்டின் ரகசிய தகவல்களை கவர்ந்தபின், ஒரு கம்ப்யூட்டருடன் அக்கருவியை இணைத்து குறிப்பிட்ட கிரெடிட் கார்டின் அனைத்து தகவல்களையும் அறிய முடியும். பின்னர் இந்த தகவல்களை வெற்று கார்டுகளில் பொருத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியும். இதற்கான வீடியோ காட்சியை காண கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
இவ்வாறு வாடிக்கையாளர் ஒருவரின் ரகசிய விவரங்களையும் திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டவர்கள், வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள அனைத்து தொகையையும் மோசடியாக கவர்ந்து விடுகின்றனர்.

இது போன்ற மோசடிகள் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்பு இத்தகைய மோசடியில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.

எனினும் இதுபோன்ற செய்திகள் வெளிவராமல் தடுப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதுபோன்ற செய்திகள் வெளியானால் கிரெடிட் கார்டு விற்பனையும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி நடைபெறும் வணிகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் இதுபோன்ற செய்திகள் புறக்கணிக்கப் படுகின்றன.

ஆக, வாடிக்கையாளர் நலனைவிட, வர்த்தகமும் (கொள்ளை) லாபமுமே கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக உள்ளதை அனைவரும் அறியலாம். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் வங்கிகளிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருந்தால் போதாது; கிரெடிட் கார்டை பயன்படுத்தும் அனைத்து தருணங்களிலும், அனைத்து நபர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் கண்பார்வையிலேயே கிரெடிட் கார்டுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதே பாதுகாப்பானது.


-சுந்தரராஜன்
கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

கிரெடிட் கார்டு - ஒரு அரசியல் பார்வைநாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது.

உதாரணமாக, இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த சுமார் 16 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் "உலகக் கோப்பை" போட்டி நடத்தி அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கலாம். "அழகிப்போட்டி" என்ற பெயரில் ஆபாச கூத்துகளை நடத்தி பெண்களை பாலியல் சின்னங்களாக வெளிப் படுத்தலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் பகுத்தறிவுக்கு எதிரான அனைத்து அம்சங்களையும் பரப்பலாம். இவற்றின் மூலம் எந்த நாட்டு மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு அம்சங்களுக்கு எதிராக சிந்திக்க, செயல்பட வைக்க முடியும். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி அந்நாட்டை சீர்குலைக்க முடியும்.

இந்த செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் நுகர்வு கலாசாரம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திட்டமிட்டு திணிக்கப் படுகிறது. நமக்கு தேவையோ/ இல்லையோ, விளம்பரம் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்க வேண்டும் என்ற கருத்து உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கப் படுகிறது.

நமது இன்றைய வருமானம், இந்த தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாக இல்லாவிட்டாலும், கடன் பெற்றாவது அந்த பொருட்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற வெறி நம்முள் எழுப்பப் படுகிறது. இதற்கான கடனும் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு என்பது போன்ற கவர்ச்சியான பெயர்களில் நம்மிடம் திணிக்கப் படுகிறது.

விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ தங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள், ஊதாரித்தனமான செலவுகளுக்கு பல்வேறு பெயர்களில் கடன்களை வாரிவாரி வழங்குகின்றன.

எனவே நியாயமான காரணங்களுக்கு பணம் தேவைப்படும் பலரும் நியாயமான வட்டியில் கடன் கிடைக்காத நிலையில், அநியாய வட்டி என்று தெரிந்தும் இத்தகைய பகல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க நேரிடுகிறது.

நேர்மையாக வாழ்ந்து வரும்/வாழ விரும்பும் எந்த ஒரு நபரும் இத்தகைய மாய (கடன்) வலையில் சிக்காத வரையில் தங்கள் நேர்மையை காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், எந்த காரணத்திற்காகவோ இந்த கடன் பொறியில் சிக்கிவிட்டால் அவர் விரும்பினாலும் நேர்மையுடன் வாழ முடியாது. இதற்கு காரணம், இந்த கடனுக்கு வங்கிகள் விதிக்கும் அநியாய வட்டியே காரணமாகும். வட்டியே அதிகம் என்ற நிலையில், இந்தக் கடன் தவணையை உரிய காலத்தில் கட்டத்தவறும் பொது மக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை, பகல் கொள்ளை என்ற வார்த்தையில் கூட அடக்க முடியாது.

இந்த விவகாரத்தில் அரசு என்ன கடமை ஆற்றுகிறது என்று பார்த்தால், வங்கிகள் அடிக்கும் கொள்ளைக்கும் 4 சதவீத சேவை வரி விதித்து, மத்திய அரசு தனது இறையாண்மையை பாதுகாத்துக் கொள்கிறது.இவ்வாறு அரசு அங்கீகாரத்துடன் மக்களை கொள்ளை அடிக்கும் வங்கிகள், மக்களிடம் கடன் வசூல் நடத்தும் விதம், வெள்ளையர் காலத்தில் நடந்த வரி வசூலே மேல் என்று கூறத்தக்க விதத்தில் உள்ளது. வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியோ கிரெடிட் கார்டு வணிகத்தில் வங்கிகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் கண்டறிந்து, அவற்றை தவிர்க்கக் கூடிய விதிமுறைகளையும் வகுத்துவிட்டு, அவற்றை நடைமுறைப் படுத்துவதோ, கண்காணிப்பதோ தனது வேலையில்லை என்று ஒதுங்கி விடுகிறது.

எனவே, இந்த விவகாரங்களை கையாள வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. அதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டு வணிகத்தின் பின்னுள்ள பொருளாதார அரசியல் விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் ஈடுபட்டாலும். இந்த வணிகத்திற்கான மூலதன நிதி அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீடாகவே உள்ளது. எனவே, இந்த முதலீட்டிற்கான (அநியாய) வட்டியும் அந்த நாடுகளுக்கே செல்கிறது.

மேலும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாங்கிக் குவிக்கும் பெரும்பாலான பொருட்களும் அந்நிய நாட்டுப் பொருட்களே!உலகமயம்! தனியார் மயம்! தாராள மயம்! என்ற பெயரில் உள்ளூர் கோலி சோடாவிலிருந்து, தொலைக்காட்சி/கம்ப்யூட்டர் வரையிலான அனைத்து உயர்நுட்ப தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு அந்நிய தயாரிப்புகளே இந்திய சந்தையில் விற்கப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலமாவும் அந்நிய தயாரிப்புகளே நமது தலையில் கட்டப்படுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை.

இதற்கேற்ற வகையிலேயே, செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களும் இந்திய மூளைகளை முடமாக்கி, இந்திய மக்களையே நுகர்வுப் பொறிகளாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உலக வங்கி என்ற பெயரில் வளரும் நாடுகளின் அரசுகளை கொள்ளையடிக்கும் சக்திகளே, அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிக்கவே இதுபோன்ற நூதன, மோசடித் திட்டங்களை வகுக்கின்றன.

போலிப்பகட்டற்ற எளிமையான வாழ்க்கை, யதாரத்த நிலையை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், எதையும் தெளிந்தறியும் அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட மனநிலையை பெறுவதே இத்தகைய சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் தாக்குதல்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும் அம்சங்களாகும். அதன் மூலமே சுயசிந்தனை, உண்மையான பகுத்தறிவு, சமூக நோக்கு உள்ளிட்ட குணாதிசயங்களை நாம் பெற முடியும்.

நம்மை அடிமைப் படுத்தும் சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் சீரழிவுகளுக்கான நுழைவுச் சீட்டே இந்த "கிரெடிட் கார்டு" என்பதை புரிந்து கொள்வதே இத்தகைய பிரசினைகளை தவிர்க்கும் வழியாகும்.இந்த புரிதல் மூலமாகத்தான் கிரெடிட் கார்டை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதா? அல்லது கிரெடிட் கார்டின் கட்டுப்பாட்டில் நாம் வாழ்வதா? என்ற கேள்விக்கு விடை காண முடியும். இது தனிநபர் பிரசினை அல்ல என்பதையும், இந்த விவகாரம் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதையும் புரிந்து கொண்டால்தான் இந்த மாயவலையை அறுத்தெரியும் பாதை அமைக்க முடியும்.

நன்றி: உண்மை ஏப்ரல் 16-30, 2007

-சுந்தரராஜன்


sundar@LawyerSundar.net)


மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-1)மான்சான்டோ (Man Santo) என்ற பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனம், பெர்சி ஷ்மெய்சர் என்ற கனடா நாட்டு விவசாயி மீது கடந்த 1998ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்த ரவுண்டப் ரெடி கனோலா என்ற மரபணு கொண்ட தானியங்களை விவசாயி பெர்சி ஷ்மெய்சர், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தாம் விரும்பி அவ்வாறு செய்யவில்லை என்றும், அருகே உள்ள வயலில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்களில் இருந்து காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ அந்த மரபணு தமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்றும் பெர்சி ஷ்மெய்சர் பதில் அளித்தார்.
மேலும் தமது நிலத்தில் அனுமதி பெறாமல், அத்துமீறி ஊடுருவிய மான்சான்டோ நிறுவனம்தான் குற்றவாளி என்றும், தமது நிலத்தில் உள்ள பயிர்கள் மீது மரபணு தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக அந்த நிறுவனம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கனடா நாட்டின் நவீன காப்புரிமை சட்டங்களின் அடிப்படையில் மான் சான்டோ நிறுவனத்தின் காப்புரிமையை மீறிய விவசாயி பெர்சி ஷ்மெய்சர், அந்த நிறுவனத்திற்கு பலகோடி டாலர் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மான் சான்டோ நிறுவனம், உலகின் பல நாடுகளிலும், அந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிரான பலநூறு வழக்குகளை தொடுத்து பல நூறு கோடி டாலர்களை அபராதமாக பெற்றுள்ளது.
மான் சான்டோ (Man Santo), பாயர் (Bayer), டு பாண்ட் (Du Pont) போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கைகள் கனடா போன்ற முன்னேறிய நாடுகளோடு முடிந்து விடுவதில்லை. ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற ஏழை நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்தியாவில் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வரும் விவசாயி ஒருவர், இத்தகைய பிரசினைகள் தம்மை பாதிக்காது என்று அமைதியாக இருந்து விட முடியாது.
கனடா நாட்டு விவசாயி பெர்சி ஷ்மெய்சர்-ஐப்போல நம் நாட்டு இயற்கை விவசாயிகளும் அவர்கள் செய்யாத தவறுக்கு (நிறுவனங்களின் அத்துமீறலுக்கு) தண்டனை அனுபவிக்கும் நிலை உருவாகி வருகிறது.
இந்தியாவின் பிரபல வேளாண்மை விஞ்ஞானி என்று அறியப்படுபவரும், இந்திய அரசின் வேளாண்மை கொள்கை குறித்த முக்கிய ஆலோசகருமான எம். எஸ். சுவாமிநாதன் உட்பட மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்றனர்.
இந்திய சட்டங்கள் அனைத்தும் உலக வங்கியின் கட்டளைக்கேற்ப மாற்றப்படும் இன்றைய சூழலில் நமது விவசாயிகளும் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள். வணிகம் மற்றும் வரிக்கட்டணம் குறித்த பொது ஒப்பந்தமான காட்(GATT)டின் பரிணாம வளர்ச்சியான உலக வர்த்தக நிறுவன(WTO)த்தின் செயல்பாடுகள் இந்தியாவில் தொடர அனுமதிக்கப்பட்டால், இதுபோன்ற செய்திகளை வெகு விரைவில் நாமும் படிக்க நேரிடும்.

WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா உறுப்பு நாடானதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பு ஏற்படுத்தும் அனைத்து ஒப்பந்தங்களையும் கட்டாயமாக ஏற்றாக வேண்டிய அவல நிலையில் இந்தியா உள்ளது. இவ்வாறு உலக வர்த்தக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அறிவுச் சொத்துரிமை குறித்த TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதை தொடர்ந்து, அறிவு சொத்துரிமை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பல புதிய சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இந்தியாவின் விவசாயம், வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இவற்றில் குறிப்பாக வேளாண்மைத்துறை மற்றும் விவசாயிகளின் வாழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்டங்களைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்...
-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)