Showing posts with label மரபணு மாற்று வேளாண்மை. Show all posts
Showing posts with label மரபணு மாற்று வேளாண்மை. Show all posts

Tuesday, February 15, 2011

விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர் கட்சிகளின் நடவடிக்கை காரணமாக பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் முடிவடைந்தது. அப்படி சட்டமாக நிறைவேறாமல் போன ஒரு சட்ட மசோதா –விதை சட்ட மசோதா 2010 (Seed Bill 2010). பசுமைப் புரட்சியை தொடர்ந்து புதிய வகை விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு 1966-ம் ஆண்டு விதைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் உலகமய-பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர எண்ணிய மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு விதைகள் சட்ட மசோதாவை   (Seed Bill 2004) கொண்டு வந்தது. இச்சட்டம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விதைகள் அனைத்தும் மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென கட்டாயப்படுத்தியது. அப்படி பதிவு செய்தவர் மட்டுமே விதைகளை விற்பனை செய்ய முடியும் என்றும் கூறியது. மேலும் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருந்த இச்சட்ட மசோதா, பலத்த எதிர்ப்பின் காரணமாக, தேவையான மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பட்டது.

அதன்பின் இந்த சட்ட மசோதா பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்பொழுது விதைகள் சட்ட மசோதா 2010 (Seed Bill 2010) என மறு உருவெடுத்துள்ளது. ஆனாலும் இந்த மசோதா பழைய அபாயமிக்க பிரிவுகளுடனேயே வந்துள்ளது. உதாரணமாக, விவசாயிகளுக்கு இச்சட்டத்தின் கீழ் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

விவசாயிகளின் பாரம்பரிய விதைகளை இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஒரு பயிரின் மூலத்தை (Parentage) தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விவசாய விதைகளை மரபணுமாற்றம் (Genetic Engineering) செய்து புதிய வகை விதை என்னும் பெயரில் அவற்றை பதிவு செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.

மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு (Seed Inspector) ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.

முன்பு இருந்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு புதிய சட்டத்தின்  கீழ் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கான பிரதிநிதித்துவமாக வழங்கப்பட்டுள்ளதது. இது மாநிலங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும்.

தாவரங்களுக்கு காப்புரிமை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தாவர ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2001, கூட விவசாயிகளுக்கு உழவர்களின் உரிமைகள் என்னும் பிரிவு இப்படி கூறுகிறது: “இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகத்தை சேமிக்கவும், பயன்படுத்தவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாற்றம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் அல்லது நிலத்தில் விளைவிக்கப்பட்ட விதை உள்ளிட்ட விளைபொருட்களை விற்கவும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்குமுன் ஒரு உழவருக்கு இருந்த அனைத்து உரிமைகளுக்கும் உடையவராகக் கருதப்படுவார்.” ஆனால் இந்த உரிமைகளை பறிக்கின்ற வகையில் விதை சட்ட மசோதா அமைந்துள்ளது. மேலும்  இச்சட்டம் தாவர வகை பயிர்களுக்கு 15 ஆண்டு கால காப்புரிமையும், மரவகைகளுக்கு 18 ஆண்டு கால காப்புரிமையும் கொடுக்கிறது. இதனை மிஞ்சும் வகையில் விதைச் சட்ட மசோதா தாவர வகைகளுக்கு 30 ஆண்டு கால பதிவு உரிமையும் மரம் வகைகளுக்கு 36 ஆண்டு கால பதிவு உரிமையும் வழங்குகிறது. அதாவது, இந்த பதிவு உரிமை காலகட்டத்தில் பதிவு பெற்றவரை தவிர்த்து வேறு யாரும் இந்த விதை வகைகளை விற்பனை செய்ய முடியாது.  

 இந்தியாவில் சுமார் 70 சதவித விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்பட்டால், விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் விவசாயிகளின் அடிப்படை உரிமையான விதை சேமிக்கும் உரிமை  கூட தண்டனைக்குரிய குற்றமாக மாறுகின்ற ஆபத்து உள்ளது. மேலும் விதைகள் உற்பத்தி விநியோகம் அனைத்தும் நிறுவனமயமாக்கப்படும்.  

நிறுவனமயமாகும் வேளாண்மை

விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் சட்டங்களை இயற்றும் இதே மத்திய அரசு பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. இதன் ஒரு அம்சமாக மத்திய அரசின் கீழ் இயங்கும் உயிரி-தொழில்நுட்ப துறையின் தலைமையில் தனியார்-பொதுத்துறை கூட்டுத்திட்டங்கள் Biotechnology Industry partnership Programme (BIPP)  அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி மரபணுமாற்று தொழில்நுட்பம் போன்ற உயிரி-தொழில்நுட்பம் சார்ந்த மரபணுமாற்று விவசாய உற்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு செலவிடப்படும் தொகையை, திட்டதிற்கு ஏற்றவாறு, மத்திய அரசிடம்இருந்து மானியமாக பெறலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழாக மரபணுமாற்று பயிர்களை உற்பத்தி செய்வதற்காக மான்சான்டோவின் இந்திய நிறுவனமான Maharashtra Hybrid Seeds Company, Metahelix Life Science Private Limited மற்றும் Bejo Sheetal Seed Private Limited போன்றவை மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றன. 

விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு போகும் நிலையில் விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் இந்திய அரசு, நிறுவனங்களின் உரிமை காக்கும் சட்டங்களை இயற்றுவதும் மானியங்களை வாரி வழங்குவதும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். 

-மு.வெற்றிச் செல்வன்

Monday, April 19, 2010

மரபணுத் தொழில் நுட்ப ஒழுங்கு முறை ஆணையம் – தொடரும் சட்ட பயங்கரவாதம் !


மரபணு மாற்று கத்தரிக்காய் விவகாரத்தில் நடந்த விவகாரங்கள் அனைவருக்கும் தெரியும். பன்னாட்டு நிறுவனங்களும், அவற்றின் உதவி பெறும் அறிவியலாளர்களும் மரபணுத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் இந்தியாவே பட்டினியால் மூழ்கிவிடும் என்ற தவறான கருத்தைப் பரப்பினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் காரணமாக, சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரம் - அரசியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் பலத்த பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர். தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள், மரபணு தொழில்நுட்பம் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தமது மாநிலத்திற்குள் மரபணுமாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தன. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து நாட்டின் சில நகரங்களில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்டறிந்து மரபணு மாற்று கத்தரிக்கு தற்காலிக தடை விதித்தார்.

இந்தியாவில் மரபணுத் தொழில்நுட்பத்தை ஒழுங்கு படுத்துவதற்காக மரபணுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் மீதும் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை செய்த அறிவியலாளர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக செயல்பட்டு, மரபணு மாற்றுக் கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்தக்குழுவை மரபணு மாற்றுத் தொழில்நுட்ப நெறிப்படுத்துதல் மற்றும் உயிரிப்பாதுகாப்பு அமைப்பு என்று சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

(இந்திய நாடாளுமன்றம் - ஏரியல் வியூ)

இதற்காக The Bio-Technology Regulatory Authority of India Bill, 2009 என்ற சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்துகிறது. வேளாண்மை, சுற்றுச்சூழல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தை நெறிப்படுத்துவதற்கான இந்த அமைப்பு, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சரவையின் ஆளுகையின் கீழ் செயல்படும் விதத்தில் உருவாக்கப்படுகிறது.

ஏன் இந்த சட்டம்?

இந்த சட்ட முன்வடிவானது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இந்தியர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட அலுவல் ரகசியங்கள் சட்ட (Official Secrets Act) த்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த சட்ட முன்வடிவு குறித்து விவாதங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகவே தகவல் உரிமைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்திலும் கருப்புச்சட்டமான அலுவல் ரகசிய
சட்ட வரம்புக்குள் இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் பல வட இந்திய ஊடகங்கள் இந்த சர்ச்சைக்குரிய சட்ட முன்வடிவு குறித்து ஏராளமான சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.

சுற்றுச்சூழல் சட்டவியலில் முக்கியமான இரு அம்சங்களாக இருப்பவை: 1. வருமுன் காக்கும் கோட்பாடு, 2. சீரழிப்பவரே இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆனால் இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு-இல் இந்த முக்கிய அம்சங்கள் இல்லை என்பதோடு, இதற்கு எதிரான அம்சங்களும் ஏராளமாக உள்ளன. இந்தியாவின் குடிமக்களை பாதுகாப்பதைவிட, மரபணு மாற்று உணவுப்பொருட்களை தயாரிக்கும் மான்சான்டோ, சின்ஜென்டா, டோவ் கெமிக்கல்ஸ், பேயர், டூ பான்ட் போன்ற நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதே முக்கியமானது என்று மத்திய ஆட்சியாளர்கள் முடிவெடுத்து செயல்படுவதாக தோன்றுகிறது.

குறிப்பாக மரபணு மாற்றுப்பயிரை அறிமுகப்படுத்தும், சந்தைப்படுத்தும், ஆய்வு செய்யும் நிறுவனங்களுக்கான கடப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மரபணு மாற்றுப்பயிர்கள் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும், கால்நடை உள்ளிட்ட ஏனைய உயிர்களுக்கும் எந்தவிதமான ஆபத்துகளையும் ஏற்படுத்தாது என்ற உத்தரவாதத்தை வழங்க வழிவகை செய்யவில்லை. மேலும், இந்த பயிர்கள் சூழலியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ ஏதேனும் ஆபத்துகளை கொண்டுவந்தால் அந்த விவகாரங்களை எதிர்கொள்வது குறித்து ஏதுமில்லை.

மரபணு மாற்றுப்பயிர்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள், அந்தப் பயிர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கோ, நுகர்வோர்களுக்கோ இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யும் எந்த அம்சங்களும் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் அரசுத்துறையினரின் கடமை என்ன? தனியார் நிறுவனங்களின் பொறுப்பு என்ன? என்பது போன்ற எந்த சிந்தனைகளும் இல்லை.

இவற்றிற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பன்னாட்டு நிறுவனங்களை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்களை தண்டிக்கும் அம்சங்களை மட்டுமே இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு கொண்டுள்ளது.

நவீன வாய்ப்பூட்டு சட்டம்!

மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யவேண்டும் என்று வணிக நிறுவனங்களை நிர்பந்தப்படுத்த முடியாத அரசு, மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவோரை சிறையில் அடைக்கவும், அபராதம் விதிக்கவும் துடிக்கிறது.

இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு-இன் பிரிவு 63ன்படி மரபணுத் தொழில்நுட்பம் குறித்து உரிய ஆதாரங்களோ, சான்றுகளோ, அறிவியல்ரீதியான ஆய்வறிக்கைகளோ இல்லாமல், மரபணு மாற்று உணவின் ஆபத்து குறித்து எச்சரித்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருட சிறைத்தண்டனை, அல்லது இரண்டு லட்ச ரூபாய் வரையிலான அபராதம், அல்லது ஒரு வருட சிறைத்தண்டனையோடு கூடிய இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்ட முன்வடிவு வழிவகுக்கிறது.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது சுதந்தர வேட்கையை தணிக்க வாய்ப்பூட்டு சட்டங்கள் அமலில் இருந்ததாக நம்மில் பலரும் வரலாற்றுப் பாடங்களில் படித்திருப்போம். ஆனால் அந்த நிலையை நாம் கற்பனையில் கூட சிந்திருக்க மாட்டோம். அந்த கருப்புச் சட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது. இந்த புதிய மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு அமலுக்கு வந்தால், மரபணுத் தொழில்நுட்பத்தை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், ஊடகத்துறையினர் ஆகிய அனைவரையும் ஒருசேர முடக்கிவிட முடியும்.

சரி! ஆதாரம் இல்லாமல் கேள்வி எழுப்பினால்தானே சிறையில் அடைப்பார்கள்! ஆதாரங்களை சேகரிக்கலாம் என்று யாரும் முயற்சிக்க முடியாது. ஏனெனில் இந்த மரபணுமாற்று தொழில்நுட்ப ஆய்வுகளின் அனைத்து தகவல்களும் அறிவுச் சொத்துரிமை சட்டங்களின் அடிப்படையில் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ரகசிய வணிக தகவல்களாக வரையறை செய்யப்படும். இந்த தகவல்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் யாரும் கோர முடியாது. எனவே மரபணு மாற்று உணவுப் பொருட்கள் குறித்து, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் கூறும் தகவல்களே இறுதியானவை. இவற்றை யாரும் சரிபார்க்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது!

இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 246வது பிரிவின் ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியல் மாநில அரசின் அதிகார வரம்பின்கீழ் வரும் துறைகளை கூறுகிறது. இந்த பட்டியலின் 14வது அம்சம், வேளாண்மை, வேளாண்மை கல்வி, ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்களை தாக்கும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கிறது. அதாவது வேளாண்மை, வேளாண் கல்வி ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்நோய்கள் குறித்த அனைத்து பிரசினைகளுக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிரை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகள் முடிவுகளை மேற்கொண்டன. ஆனால் இந்த புதிய மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு மாநிலங்களுக்கான இந்த அதிகாரத்தை சத்தமின்றி ரத்து செய்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் இந்திய தொழில்-வணிக-அரசியல் பங்காளிகளுக்கும் லாபத்தையும் - இந்திய விவசாயிகளுக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும்கூட கேடு விளைவிக்கக்கூடிய இந்த மரபணுத்தொழில் நுட்பம் இந்தியாவிற்கு ஏன் தேவை என்ற சாதாரண கேள்விக்கு பதில் கூறுவதற்கு யாருமில்லை.

சுதந்திரமான நாட்டின் சட்டம் என்பது மக்களுக்கு தரமான வாழ்க்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நவீனகால இந்தியாவின் சட்டங்கள் இந்தியர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைப்பதாகவே உள்ளது.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த சட்டக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாம் தற்போது வேறு கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடாது! என்று எச்சரித்தார். ஆனால் நடக்கும் சம்பவங்களும், உருவாகும் புதிய சட்டங்களும் நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களின் எச்சரிக்கையை உதாசீனம் செய்வதாகவே உள்ளன.

சட்டம் என்பது சட்டத்தை உருவாக்கும் அரசியல்வாதிகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும், சட்டத்தை விவாதிக்கும் சட்டத் துறையினருக்கும் மட்டுமே உரியது என்ற தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் இந்த சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைவரது வாழ்க்கையையும் பாதிக்கிறது.

மேலும், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியே இந்த சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. எனவே தேர்தலில் பங்கெடுத்து வாக்களிக்கும் அனைத்து குடிமக்களும் இந்த சட்டங்களை உருவாக்குவதில் பங்கெடுப்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே இது போன்ற மக்கள் விரோத சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்போது, உரிய முறையில் எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டியது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

-சுந்தரராஜன்

நன்றி: பூவுலகு, மார்ச் 2010

Thursday, January 14, 2010

மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்

பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.



webdunia photo
WD

சென்னையில் மனித உரிமை, சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் ஏற்பாடு செய்த ‘மரபணு மாற்ற விதைகளும் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் சட்டச் சிக்கல்களும்’ என்ற கலந்தாய்வில் பங்கேற்றுப் பேசிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நமது நாட்டின் மீதான இரண்டாவது காலனி ஆதிக்கம் என்றும், அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் கூறினார்.



எந்த ஒரு பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளைவிக்கப்படும் மண்தான் என்றும், அதனால்தான் நமது நாட்டில் விளைவிக்கப்படும் சிறப்பான பயிர்கள் பலவும் அது விளையும் இடத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நம்மாழ்வார், அப்படிப்பட்ட பயிரின் இயற்கையான பன்முகத் தன்மையை பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகள் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.



“ஒரு இடத்தில் விளையும் பயிர் அந்தச் சமூகத்தின் சொத்து, அதனை இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பதன் மூலம் அழிப்பது, இயற்கையின் அடிப்படையான உயிரியல் பரவலை திட்டமிட்டு அழிக்கும் செயலே” என்று கூறிய நம்மாழ்வார், நாகை மாவட்டத்தில் பரவலாக மக்கள் வாங்கும் பொய்யூர் கத்திரிக்காய், அந்த ஊரில் பயிரிட்டால் மட்டுமே அந்த சுவையை அளிக்கும் என்றும், அதனை வேறிடத்தில் பயிரிட்டால் அந்தத் தனிச் சுவை இல்லாமல் போகும் என்றும், வேலூர் எண்ணெய்க் கத்திரிக்காய் (முள்ளு கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்) அவ்விடச் சிறப்பின் விளைவே என்றும், இதுவே உயிர்ப் பரவலின் உன்னதமான சிறப்பு என்றும் கூறினார்.



நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்படி சிறப்பாகப் பயிரிடப் பொருட்களை அனைத்தையும் அழிக்கும் திட்டத்துடனேயே மரபணு மாற்ற விதைகள் வேகமான திணிக்கப்படுகின்றன என்றும், அதற்கு அரசுகள் மாத்திரமின்றி, வேளாண் பல்கலைக் கழகங்களும் அறமின்றித் துணை போகின்றன என்றார் நம்மாழ்வார்.



இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விவசாயத்தை வணிகமயமாக்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஏக போக உரிமையாக்கும் வழிமுறையே காப்புரிமை சட்டம் என்று சாடிய நம்மாழ்வார், இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு நமது நாட்டின் அரசுகள் கதவு திறந்துவிட்டால் நமது உணவுப் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார்.



WD

பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.



பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.



1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.



“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate Agriculture) உதவுவதே என்றார்.

நன்றி: WEBDUNIAதமிழ்