Showing posts with label அறிவுச் சொத்துரிமை. Show all posts
Showing posts with label அறிவுச் சொத்துரிமை. Show all posts

Thursday, October 28, 2010

உயிர் காக்கும் மருந்துகள் மீதான காப்புரிமை கட்டுப்பாடுகள்

ரோச் (Roche) என்கிற பன்னாட்டு நிறுவனம் Erlotinib Hydrochloride (இதன் வணிக பெயர் Tarceva) என்னும் புற்று நோய்க்கான மருந்தை காப்புரிமை பெற்று விற்பனை செய்து வருகிறது. எனவே இம்மருந்தை மேட்ரிக்ஸ் (Matrix) என்ற நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யக்கூடாது  என்று செப்டம்பர் 2010-இல் சென்னை  உயர் நீதிமன்றதில் வழக்கு தொடுத்துள்ளது.[1] இந்த வழக்கில் ரோச் நிறுவனத்திற்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜேஸ்வரன், ரோச் நிறுவனத்தின் வழக்கிற்கு முகாந்திரம் (Prima Facie) உள்ளதாக கூறி மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் பதிலைக்கூட கேட்டறியாமல் ஒருதலையான (Ex-Parte) இடைக்கால தடைவிதித்துள்ளார். இதுபோன்ற ஆணைகள் ஜெனிரிக் (Generic)  மருந்துகள் என்று அழைக்கப்படுகின்ற மலிவுவிலை உயிர்காக்கும் மருந்துகளின் உற்பத்தியை தடை செய்யும் என்கிற அச்சம் சமூக ஆர்வலர்களிடத்தே ஏழுந்துள்ளது. 

மருந்துகள் தொடர்பான காப்புரிமை சட்ட  பிரிவுகள்  :  

மனித உயிர்காக்கும் மருந்துகள் இந்திய காப்புரிமை சட்டப்படி கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன. எனவே எல்லாவித மருந்துகளும் காப்புரிமை (Patent) பெற தக்கவையே. காப்புரிமை என்பது காப்புரிமை பெற்ற பொருளை, அந்த உரிமையை பெற்றவர்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஏகபோக (Monopoly) உரிமையாகும்.   

இன்று நடைமுறையில் உள்ள இந்திய காப்புரிமை சட்டம் 1970, காலனி கால காப்புரிமை சட்டம் 1911-இல் உள்ள மக்களுக்கு எதிரான பல அம்சங்களை அகற்றிவிட்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் முடிவுபொருளுக்கான காப்புரிமை (Product Patent), செய்முறைக்கான காப்புரிமை (Process Patent) என இரண்டு காப்புரிமைகளை வழங்குகிறது. 

 இச்சட்டம்,  காலனிய சட்டம் போல் இல்லாமல், மருந்து மற்றும் உணவு தொடர்பான பொருட்களுக்கு செய்முறைக்கான காப்புரிமை (Process Patent) மட்டுமே வழங்கியது.[2] காரணம் மருந்துகளுக்கு முடிவுபொருளுக்கான காப்புரிமை வழங்குகின்ற போது அது மருந்து உற்பத்தியையே தடை செய்யும் விதமாக அமைந்துவிடுவதுதான். மருந்துகளின் செய்முறைக்கான காப்புரிமை வழங்குகின்ற போது அது வேறு செய்முறையில் அதே மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கின்றது. ஆனால் முடிவுப்பொருளுக்கான காப்புரிமை என்பது எந்த செய்முறையிலும் காப்புரிமை பெற்ற நபர்/ நிறுவனம் தவிர்த்து வேறு யாரும் உற்பத்தி/விற்பனை செய்வதை முழுவதுமாக தடை செய்கின்றது. 

விளக்கமாக கூற வேண்டும் என்றால், செய்முறைக்கான காப்புரிமை என்பது காப்புரிமை பெற்ற ஒரு மருந்தை வேறு ஒருவர், அதே முறையில் தயாரிப்பதை மட்டுமே தடைசெய்கின்றது. அதே பொருளை வேறு முறைகளில் அதே தன்மையுடன் (Bioequivalent)  தயாரித்து விற்பதையோ/பயன்படுத்துவதையோ தடுக்கவில்லை. இதன் காரணமாக விலை உயர்ந்த வெளிநாட்டு மருந்துகளை உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் பல்வேறு முறைகளில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பை பெற்றனர். ஒரே மருந்தை பல நிறுவனங்கள் தயாரிக்கும் நிலை பெருகியது. இத்தகைய மருந்துகளே ஜெனிரிக் மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை மருந்துகளும் தரத்துக்கான பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தான் விற்பனைக்கு வருகின்றன. 

மேலும் இச்சட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் உணவு பொருட்கள் மீதான காப்புரிமை காலம் 7 ஆண்டுகள் மட்டுமே. அதன் பின்னர் வேறு யாரும் அந்த மருந்தை உற்பத்தி செய்யலாம். இதன் காரணமாகவே இந்திய மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் பிற நாடுகளை ஒப்பிடும் போது மலிவாக கிடைத்து வந்தது. மேலும் இச்சட்டத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் தேவை அதிகம் உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததால் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஏழை மக்களும் பெருத்த அளவில் பயன்பெற்றுவந்தனர். 

உலகமயமாக்கலுக்கு பின் காப்புரிமை சட்டம் : 

உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organisation) ஒரு பகுதியான TRIPS (Trade  Related Intellectual Property Rights Agreement)  ஒப்பந்தத்தில் 1995-இல் இந்தியா கையொப்பம் இட்டது. TRIPS ஒப்பந்தம் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசனைப்படி அமெரிக்க அரசால் 1987-இல் நடந்த “காட்” (GATT) மாநாட்டில் கொண்டு வரப்பட்ட ஒன்று. 

TRIPS ஒப்பந்தம் இந்திய காப்புரிமை சட்டத்திற்கு எதிராக இருந்தது. மருந்துகளுக்கு முடிவுப்பொருளுக்கான காப்புரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்று TRIPS ஒப்பந்தம் கூறியது.[3] TRIPS ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இந்தியா காப்புரிமை சட்டத்தை மாற்றி மருந்துகளுக்கு முடிவுபொருளுக்கான காப்புரிமை வழங்கலாம் என்கிற சட்ட திருத்தத்தை (Patent Amendment Act 2005) கொண்டுவந்தது.  இந்த சட்ட மாற்றங்கள் 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய காலத்தில் நடந்தது. மேலும் மருந்துகளுக்கான காப்புரிமை ஆண்டு காலமும் 7 ஆண்டிலிருந்து 20 ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டது.[4] 

1995- ஆம் ஆண்டில் TRIPS ஒப்பந்தம் கையெழுத்தான போதே இந்த ஒப்பந்த   சரத்துகளை உறுப்பு நாடுகள் அமல்படுத்த 10 ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டது.[5] TRIPS ஒப்பந்தம் மீது மக்களிடம் இருந்த எதிர்ப்பு உணர்வு காரணமாகவே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது.  இந்த 10 ஆண்டு கால இடைவெளியில் முடிவுபொருளுக்கான காப்புரிமைக்கு நிகரான பிரத்யேக சந்தைப்படுத்தும் உரிமை (Exclusive Marketing Right)யை வழங்க வேண்டும் என்றும் முடிவானது. இந்த பிரத்யேக சந்தை உரிமை காப்புரிமையை விட பலமான ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கியது. உதாரணமாக நோவார்டிஸ் நிறுவனம் இந்த உரிமையின் கீழாக பதிவு செய்த வழக்கை பற்றி பார்ப்போம். 

நோவார்டிஸ் நிறுவன வழக்கு : 

 2004 ஆம் ஆண்டு நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் (Imatinib Mesylate) இதன் வணிகப்பெயர் கிளிவெக் (Glivec, Gleevec) என்ற மருந்திற்கான பிரத்யேக சந்தை உரிமையை தாம் மட்டுமே பெற்றிருப்பதாக கூறி  ஆதர்ஸ்  (Adarsh Pharma) என்கிற இந்திய நிறுவனம் உற்பத்தி செய்வதற்கு எதிராக  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் மேற்படி மருந்தை ஆதர்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய தடை விதித்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி பாலசுப்ரமணியம்.[6] நோவார்டிஸ் நிறுவனத்திற்காக அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வாதிட்டார். 

ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. மெகர் (Mehar Pharma) என்கிற நிறுவனத்திற்கு எதிராக மேற்கூறிய காரணங்களில் இமாடினிப் மெஸிலேட் மருந்தை உற்பத்தி செய்வதை தடை விதிக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கிட்டது நோவார்டிஸ். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு  சரியாக ஆராயாமல் (not properly considered) கொடுக்கப்பட்டுள்ளது என்று கருந்து கூறிய மும்பை நீதிமன்றம், மெகர் நிறுவனம் இமாடினிப் மெஸிலேட்   மருந்தை உற்பத்தி செய்வதற்கு தடைவிதிக்க மறுத்தது.  மேலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.[7] 

இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுப்பாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால்  காப்புரிமை சட்டவிதி 3(d) யின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டில் தங்களுக்கு காப்புரிமை மறுக்கப்பட காரணமாக இருந்த காப்புரிமை சட்ட பிரிவு 3(d) அரசியல் அமைப்புச் சட்டதிற்கு எதிரானது என்று கூறியது. காரணம் இந்த சட்ட பிரிவு TRIPS ஒப்பந்திற்கு எதிரானது என்று விளக்கம் கூறியது. மேல் முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[8] இதுவும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் உள்ளது. சட்ட பிரிவு 3(d)  காப்புரிமை பெற்ற ஒருபொருளை சிறிய மாற்றம் அல்லது புதிய பயன்பாடு என்னும் காரணம் கூறி மீண்டும் காப்புரிமை கொடுக்கப்படுவதை தடை செய்கிறது. இதன் மூலம் காப்புரிமை காலம் தொடர்ந்து நீடிக்கப்படுவது தடை செய்யப்படுகிறது. 

இமாடினிப் மெஸிலேட் மருந்து மீதான நோவார்டிஸ் நிறுவனத்தின் காப்புரிமை கோரிக்கை பலத்த ஏதிர்ப்புக்குள்ளானதன் காரணம் தற்போதைய நிலையில் பல இந்திய நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும். நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1000 விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.1,20,000 தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

ரோச் நிறுவன வழக்கு :  

இந்த பின்னணியில்தான் ரோச் இப்பொழுது பதிவு செய்துள்ள வழக்கை ஆராய வேண்டியுள்ளது. ரோச் நிறுவனம் மேற்கூறிய Erlotinib Hydrochloride மருந்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது.  ரோச் நிறுவனம் சிப்லா (Cipla) என்னும் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு  எதிராக  டில்லி உயர் நீதிமன்றத்தில்  மேட்டிரிக்ஸ் எதிரான வழக்கு போலவே காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிப்லாவிற்கு எதிராக இடைக்கால தடைவிதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் மீது மேல் முறையீடு செய்தது ரோச். இந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த டில்லி உயர்நீதிமன்றம் அபராதமாக 5,00,000 ரூபாயை சிப்லாவிற்கு வழங்க உத்தரவிட்டது. ரோச்சின் காப்புரிமையே விதி மீறலானது என்ற சிப்லாவின் வாதத்தை ஏற்றுக் கொண்ட டில்லி உயர்நீதிமன்றம், ரோச் நிறுவனத்தின்  Erlotinib Hydrochloride ஒரு மாத்திரையின் விலை ரூ.4,800 என்றும் அதே மருந்தை சிப்லா நிறுவனம் ரூ.1,600 என்று விலை நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளது. ஒரு நோயாளி சிப்லாவிடம் ரூபாய் 46,000 செலுத்தி பெரும் அதே மருந்திற்கு ரோச்சிடம் ரூ.1,40,000 செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்நிலையில் ரோச்சின் வழக்கு அனுமதிக்கப்பட்டால் அது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளை தடுக்கும் விதமாக அமைந்துவிடும் என்றும் கூறியுள்ளது.[9] இந்த தீர்ப்புக்கு ஏதிராக மேல்முறையீடு செய்த ரோச் உச்ச நீதி மன்றத்திலும் தோல்வியையே தழுவியது.[10] 

இந்த பின்னணியில் சென்னை உயர் நிதீமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். மேலும் டில்லி உயர் நீதிமன்றம் பொதுமக்களின் நலன் இந்த வழக்கில் அவசியம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ரோச் நிறுவன கூற்றுப்படியே மேட்டிரிக்ஸ் நிறுவனம் Erlotinib Hydrochloride மருந்திற்கான  ஜெனிரிக் மருந்தின் தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக மட்டுமே கூறியுள்ளது. அதாவது மேட்டிரிக்ஸ் நிறுவனம் இன்னும் மருந்து உற்பத்தியில் இறங்கவே இல்லை. வெறும் ஜெனிரிக் மருந்தை தயாரிக்கும் எண்ணத்திற்கே இடைக்கால தடை என்பது உள்நாட்டு ஜெனிரிக் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இறுதியாக சில பகிர்வுகள் :              

            2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை சுமார்  3488  முடிவுபொருளுக்கான காப்புரிமை பல்வேறு மருந்துகளுக்கு கொடுக்கப்பட்டதாக காப்புரிமை அலுவலகம் கூறுகிறது.[11] இதன் பொருள் இவற்றுக்கான ஜெனிரிக் மருந்துகளை வேறு யாரும் இனி தயாரிக்க முடியாது என்பதுதான். இத்தகைய காப்புரிமையை பெற்றிருப்பது சில நிறுவனங்கள் மட்டுமே. இந்த சட்ட நெருக்கடிக்கள் பல இந்திய நிறுவனங்களை மூடச் செய்துள்ளது அல்லது பன்னாட்டு நிறுவனங்களோடு இணைய செய்துள்ளது. இதன் விளைவு மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

-மு.வெற்றிச்செல்வன்
குறிப்புகள்:
[1] The Economic Times, dated 23.09.2010
[2] Section 5, Patent Act ,1970
[3] Article 27.1, TRPIS Agreement
[4] Section 53, Patent Act, 1970
[5] Article 65, TRIPS Agreement
[6] 2004 (29) PTC 108 (Mad)
[7] 2005 (30) PTC 160 (Bom)
[8] (2007) 4 MLJ 1153
[9] FAO (OS) 188/2008
[10] SLP (Civil) No.20111/2008
[11] www.patentoffice.nic.in

Monday, June 14, 2010

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் ‘தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்’ மற்றும் ‘மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம்’ ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் ‘பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை’ அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் .

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing) என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009 என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது.

-மு.வெற்றிச் செல்வன்
(Vetri @Lawyer.Com)

Thursday, January 14, 2010

மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்

பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.



webdunia photo
WD

சென்னையில் மனித உரிமை, சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் ஏற்பாடு செய்த ‘மரபணு மாற்ற விதைகளும் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் சட்டச் சிக்கல்களும்’ என்ற கலந்தாய்வில் பங்கேற்றுப் பேசிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நமது நாட்டின் மீதான இரண்டாவது காலனி ஆதிக்கம் என்றும், அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் கூறினார்.



எந்த ஒரு பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளைவிக்கப்படும் மண்தான் என்றும், அதனால்தான் நமது நாட்டில் விளைவிக்கப்படும் சிறப்பான பயிர்கள் பலவும் அது விளையும் இடத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நம்மாழ்வார், அப்படிப்பட்ட பயிரின் இயற்கையான பன்முகத் தன்மையை பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகள் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.



“ஒரு இடத்தில் விளையும் பயிர் அந்தச் சமூகத்தின் சொத்து, அதனை இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பதன் மூலம் அழிப்பது, இயற்கையின் அடிப்படையான உயிரியல் பரவலை திட்டமிட்டு அழிக்கும் செயலே” என்று கூறிய நம்மாழ்வார், நாகை மாவட்டத்தில் பரவலாக மக்கள் வாங்கும் பொய்யூர் கத்திரிக்காய், அந்த ஊரில் பயிரிட்டால் மட்டுமே அந்த சுவையை அளிக்கும் என்றும், அதனை வேறிடத்தில் பயிரிட்டால் அந்தத் தனிச் சுவை இல்லாமல் போகும் என்றும், வேலூர் எண்ணெய்க் கத்திரிக்காய் (முள்ளு கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்) அவ்விடச் சிறப்பின் விளைவே என்றும், இதுவே உயிர்ப் பரவலின் உன்னதமான சிறப்பு என்றும் கூறினார்.



நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்படி சிறப்பாகப் பயிரிடப் பொருட்களை அனைத்தையும் அழிக்கும் திட்டத்துடனேயே மரபணு மாற்ற விதைகள் வேகமான திணிக்கப்படுகின்றன என்றும், அதற்கு அரசுகள் மாத்திரமின்றி, வேளாண் பல்கலைக் கழகங்களும் அறமின்றித் துணை போகின்றன என்றார் நம்மாழ்வார்.



இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விவசாயத்தை வணிகமயமாக்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஏக போக உரிமையாக்கும் வழிமுறையே காப்புரிமை சட்டம் என்று சாடிய நம்மாழ்வார், இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு நமது நாட்டின் அரசுகள் கதவு திறந்துவிட்டால் நமது உணவுப் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார்.



WD

பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.



பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.



1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.



“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate Agriculture) உதவுவதே என்றார்.

நன்றி: WEBDUNIAதமிழ்

Sunday, September 28, 2008

அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...!

அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை; கல்வி பயிலாதவர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம்: தோழர் பெரியார்!


அறிவு என்பதே உண்மையான சொத்து என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பி்ல்லை. ஆனால், இந்த அறிவு எந்த ஒரு மனிதருக்கும் தாமாகவே வந்து விடுவதில்லை. மனிதன் வளரும் சமூகமே அறிவையும் அள்ளித்தருகிறது. கற்கும் திறன் உள்ளவர்கள் விரைவாக கற்கின்றனர். மற்றவர்கள் சற்று பின்தங்குகின்றனர். எனவே ஒரு மனிதன் பெறும் அறிவு, உண்மையில் அவன் வாழும், வளரும் சமூகம் அவனுக்கு கற்றுக் கொடுத்ததே.


எனவே சமூகத்திலிருந்து பெற்ற அறிவை ஒருவன் தனியுடைமையாக கருதுவானாயின், அவன் பெரியாரின் வார்த்தைகளில், அவன் அறிவு-நாணயம் அற்றவனாவான்.


எந்த ஒரு அறிஞனும் உலகத்தில் இல்லாத ஒரு பொருளை புதிதாக கண்டுபிடித்தில்லை. ஏற்கனவே உள்ள பொருளுக்கு ஒரு புதிய பயன்பாடு மட்டுமே கண்டுபிடிக்கப்படுகிறது. இதில் பலரும் முயற்சி செய்தாலும் சமூக அங்கீகாரம் சிலருக்கே கிடைக்கிறது.


உதாரணமாக கம்ப்யூட்டர் ஒரு நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை. அது அபாகஸ் எனப்படும் மணிச்சட்டத்திலிருந்து படிப்படியாக மேம்பாடு அடைந்தே அதன் இன்றைய நிலையை அடைந்தது.


எனவே அறிவைச் சொத்துரிமை என்ற கருத்தாக்கத்தை ஆதரிப்பதே, பெரியார் கொள்கைகளுக்கு எதிரான திசையில் நின்று பார்ப்பனியத்தை ஆதரிப்பதாகும்.


இயற்றப்பட்ட சட்டம் என்ற நிலையிலும் அறிவுச்சொத்துரிமை சட்டங்களை ஆதரிக்க முடியாது. தடா, பொடா போன்ற கருப்புச்சட்டங்களைப்போல இந்த அறிவுச் சொத்துரிமை சட்டங்களும் விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


அறிவு சொத்துரிமை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்குமா ?


அறிவு சொத்துரிமையில் முதன்மையான காப்புரிமை சட்டம் 1474ல், வீனிஸ் நாட்டியில் முதல் முறையாக இயற்றப்பட்டது. பின் இங்கிலாந்தில் 1623ல் காப்புரிமை சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. பின் பதிப்புரிமைக்கான சட்டம் 1710ல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது. இருந்த போதிலும் சுமார் 150 கடந்து 18 ஆம் நூற்றாண்டில்தான் தொழிற் புரட்சி உண்டானது. ஆக அறிவு சொத்துரிமை மூலம் அறிவியல் வளர்ச்சி அடைந்தது என்பது மிகப்பெரிய மோசடி.


மேலும் எவ்வித அறிவு சொத்துரிமை சட்டங்களும் இல்லாத, அனைத்து கண்டுப்பிடிப்புகளும் தேசத்திற்கே என்று கூறிய முன்னாள் சோசலிச நாடுகள், கடுமையான அறிவு சொத்துரிமை சட்டங்கள் உடைய பணக்கார நாடுகளுக்கு ஈடாக அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடையவே செய்தன. எவ்வித அறிவு சொத்துரிமை சட்டங்களும் இல்லாத முன்னாள் சோவியத் ரசியாதான் விண்வெளியில் அமெரிக்காவை வென்றது.


இன்றைய சீனா கூட போதிய அறிவு சொத்துரிமை சட்டங்கள் இல்லாத நிலையில் (அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி!) அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்தே விளங்கிறது.


இவ்வளவு ஏன்? அரம்ப கால அமெரிக்க காப்புரிமை சட்டம்கூட அதிக அதிகாரம் படைத்ததாக அல்லாமல் எல்லோருக்கும் பயன்படும் வகையிலேதான் இருந்தது.


ஆக அறிவு சொத்துரிமை சட்டங்கள் இல்லாமலே பல நாடுகள் அறிவியல் வளர்ச்சி அடைந்திருப்பதை கண்டபின் அறிவியல் வளர்ச்சிக்கும் அறிவு சொத்துரிமைக்கும் எந்த வகையில் தொடர்பும் இல்லை என்பதை நாம் உறுதியாக கூறலாம்.



கண்டுபிடிப்பாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு அறிவு சொத்துரிமை அவசியமானது ?


உழைத்தவனுக்கு பலன் வேண்டாமா? என்றும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகளுக்கும் அறிவு சொத்துரிமை கொடுப்பது அவசியமானது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.


உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கக் கூடாது என்று நாம் கூறவில்லை. உண்மையிலேயே உழைத்தவர்களுக்குத்தான் அறிவு சொத்துரிமை பயனளித்துள்ளதா? என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம், இன்று உலகெங்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுச்சொத்துரிமையில் 90% பன்னாட்டு நிறுவனங்களிடமே உள்ளன என்பதுதான்.


அறிவு சொத்துரிமையை விற்க முடியும் என்ற அம்சத்தை பயன்படுத்தி கண்டுபிடிப்பாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் சிறிய தொகையை கொடுத்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உரிமைகளை வாங்கி விடுகின்றன.


மிகச்சிறந்த உதாரணமாக மைக்கேல் ஜாக்சனின் (MICHEAL JACKSON) இன்றைய நிலையை கூறலாம். இன்றளவிலும் உலகெங்கும் ஜாக்சனின் பாடல்கள் கேசட்கள் பல லட்சம் விற்பனையானாலும் அவர் கடனாளியாகதான் உள்ளார். காரணம் இவருடைய பாடல்களுக்கான பதிப்புரை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருப்பதுதான். கொள்ளை லாபத்தில் சிறிய அளவு ராயல்ட்டிதான் படைப்பாளிகளுக்கு பல நாடுகளில் கொடுக்கப்படுகின்றன.


ஹேரி பாட்டர் (HARRY POTTER) கதாசிரியர் ரோலிங்(J.K.ROWLING)தான் இதுவரை கொடுக்கப்பட்ட ராயல்ட்டி தொகையில் அதிகம் பெற்றவர். ஆனால் அவரை போல எல்லா படைப்பாளிக்கும் உரிய பங்கு கிடைப்பதில்லை.


இந்தியாவில் நிலைமை இன்னும் மோசம். சினிமா இசை, பாடல் போன்ற எல்லா கலைகளுக்குமான உரிமைகளும் பதிப்புரிமை சட்டப்படி தயாரிப்பாளருக்கே சொந்தம். இந்தியாவில் புத்தக ஆசிரியர்களுக்கு பதிப்புரிமை என்பது இன்று வரை எட்டாக்கனியாகவே உள்ளது.


அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி கேட்கவே வேண்டாம். இவை அனைத்தும் நிறுவனங்களிடமே உள்ளன.


ஆக கண்டுபிடிப்பாளருக்கு காப்புரிமை இல்லை, கலைஞர்களுக்கு பதிப்புரிமை இல்லை. இதுதான் உழைத்தவர்களுக்கு அறிவு சொத்துரிமை செய்யும் நன்மை.



அறிவு சொத்துரிமை எதிர்ப்பது அறிவியலை எதிர்ப்பதாகுமா ?


அறிவியலுக்கு அறிவு சொத்துரிமை யாரும் வாங்க முடியாது, காரணம் அவை எப்பொழுதும் பொதுவானது. அறிவியல் அடிப்படையிலான தொழில் நுட்பங்களுக்குதான் அறிவு சொத்துரிமை வழங்கப்படுகிறது. எல்லா தொழில் நுட்பங்களும் மனிதர்களுக்கு நன்மை அளிக்கும் என்று இல்லை. அறிவியல் அடிப்படையில் அணுஆற்றல் அமைந்தாலும் மக்களின் உயிருக்கு கேடானது என்றவகையில் நாம் அதை எதிர்க்க வேண்டியுள்ளது. மதத்திற்கு எதிராக அறிவியலை முன்வைக்கும் போது, அறிவியலையே மதமாக சிலர் மாற்றிவிடுகின்றனர். இந்த போக்கு இடதுசாரிகள், பெரியாரியவாதிகள் போன்ற முற்போக்கு பிரிவினரிடையேயும் உள்ளது. அறிவியலுக்கும் அரசியல் உண்டு. அந்த அடிப்படையில் இது யாருக்கானது என்பதைப் பொருத்தே நாம் அறிவியல் தொழில் நுட்பங்களை ஆதரிக்க வேண்டும்.

-மு. வெற்றிச்செல்வன்

(vetri@lawyer.com)

பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2

அமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை

1980 - களில் IBM, PFIZER, MICROSOFT, BRISTOL-MYERS, DU PONT, GENERAL ELECTRIC, GENERAL MOTORS, MONSANTO, ROCKWELL INTERNATIONAL, WARNER COMMUNICATION, JOHNSON & JOHNSON, MERCK, FMC CORPORATION போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS (ACTN) என்ற குழுவை எற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை சட்டங்களை நிறுவ இந்த குழு அலோசித்தது. 1981 இருந்து இக்குழுவுக்கு பில்ஸ்சர் (PFIZER) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட் பிராட் (ED PRATT) தலைவர் பொறுப்பில் இருந்தார். இவருடைய நிறுவனத்தின் மருத்துவ பொருட்களை காப்பி அடித்து பல நிறுவனங்கள் மருந்துகள் செய்வதாக இவர் எண்ணினார். MICROSOFT நிறுவனத்தின் கணினி மென் பொருள் (SOFTWARE PROGRAM)களை பலர் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதை தடுக்க உலகெங்கும் பதிப்புரிமை சட்டம் வலுப்படுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கருதியது. குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த அறிவுச் சொத்துரிமை சட்டம் அவசியம் என்று இந்த குழு எண்ணியது.

உலகெங்கும் இத்தகைய சட்டங்களை பரப்ப “காட்” (GATT) கூட்டத் தொடரில் அறிவுச் சொத்துரிமை குறித்தான ஒப்பந்தை முன்வைக்க வேண்டும் என்று USTR என்கிற அமெரிக்க வணிக துறையிடம், இவ்வமைப்பு ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசு 1987 நடந்த GATT மாநாட்டில் வணிகம் தொடர்பான அறிவு சொத்துரிமைக்கான ஒப்பந்தம் (TRADE - RELATED INTELLECTUAL PROPERTY RIGHTS AGREEMENT) என்கிற புதிய ஒப்பந்தத்தை முன் வைத்தது.

1987ல் துவங்கிய இந்த உருகுவே சுற்று (URUGUAY ROUND) என்று அழைக்கப்படும் காட் ஒப்பந்த (GATT) பேச்சுவார்த்தையில் தான், சில மாற்றங்களுடன் அறிவு சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என 1994ல் முடிவானது. மேலும் இந்த காட் (GATT) கூட்டத்தொடரில் தான் WTO - உலக வர்த்தக நிறுவனம் என்னும் புதிய அமைப்பை ஏற்படுத்தவும் முடிவானது. இதன் பயனாக உலக வர்த்தக நிறுவனம் 1995ல் உதயமானது.

இவ்வாறு திட்டமிட்டு அறிவு சொத்துரிமை சட்டங்கள் ஏழை நாடுகள் மீது காட் மாநாட்டின் மூலமாக அமெரிக்காவால் திணிக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வணிக சட்டம் 1974 (TRADE ACT 1974) என்று ஒரு சட்டம் உள்ளது. இச்சட்டத்தில் பிரிவு 301 அறிவு சொத்துரிமை சட்டங்களை சரியாக நடைமுறை படுத்தாத நாடுகளுடன் வர்த்தகம் செய்துக் கொள்ள தடை விதிக்கிறது. ஆக அறிவு சொத்துரிமை சட்டங்களை அமெரிக்க அளவுகோள்படி இயற்றியிருந்தால் மட்டும் அமெரிக்காவுடன் இந்திய வர்த்தக உறவு சாத்தியம். 90-களின் பின் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு தேசிய கட்சிகளுமே அமெரிக்காவுடனான நட்பை விரும்பின. அதன்படி அறிவு சொத்துரிமை சட்டத்தில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்தன.

அறிவுச் சொத்துரிமை யாருக்கானது ?

இப்படி பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்கள் அறிவு சொத்துரிமை ஆவசியத்தை வழியுறுத்துவதின் நோக்கம் என்ன? வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் ஏகபோக உரிமை தருவதுதான்.

TRIPS ஒப்பந்திற்கு பின் எல்லா துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை 20 ஆண்டுகளுக்கு கொடுக்கும் வகையில் இந்திய காப்புரிமை சட்டம் மாற்றப்பட்டது. இதன்படி மருந்து முதல் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, பூச்சி மருந்து வரை அனைத்திற்கும் காப்புரிமை கொடுக்கப்படுகின்றன. இதனால் மருந்துக்கும், உணவுக்கும், அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கும் நாம் பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

கணினி மென்பொருளுக்கான 90 சதவித பதிப்புரிமையை பெற்றுள்ள MICROSOFT நிறுவனம், தன்னுடைய அனுமதி இல்லாமல் உலகில் கணினி இயங்காது என்று கூறுகிறது. பல மென்பொருளுக்கு பதிப்புரிமை பெற்ற இந்நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந்த மென்பொருள்களை ஆய்வு செய்ய முடியாது. இதன்படி இந்நிறுவனத்தின் மென்பொருளை நாம் பயன்படுத்த முடியுமே தவிர அவற்றை மாற்றுவதையோ மேம்படுத்துவதையோ பதிப்புரிமை சட்டம் தடை செய்கிறது.

இதற்கு மாற்றாக COPYLEFT என்கிற அடிப்படையில் LINUX என்கிற பொது மக்களுக்கான மென்பொருள் இன்று பரவலாக அறிமுகமாகியுள்ளது. இந்த வகை மென்பொருள் பயன்படுத்துவோரே, தங்கள் தேவைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த மென்பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பெரியாரிய பார்வை கொண்ட யாரும் இதுபோன்ற COPYLEFT மக்கள் இயக்கத்தை தான் வலுப்படுத்த எண்ணுவர். கேரள அரசு கூட LINUX மென்பொருளை மட்டுமே அரசு அலுவலகத்தில் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

TRIPS ஒப்பந்திற்கு பின் இந்திய பதிப்புரிமை சட்டத்தில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கும் பதிப்புரி்மை சட்டப்படி ஒளிப்பரப்பு உரிமை (BROADCASTING RIGHT) கொடுக்கப்பட்டது. அதன் பயன் இன்று கிரிக்கெட் விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு பல ஆயிரம் கோடிகள் விலை நிர்ணயிக்கப்படுவதை நாம் அறிவோம்.

இப்படி நம்மை சுற்றியுள்ள எல்லா கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமையும், கலை சார்ந்த படைப்புகளுக்கு பதிப்புரிமையும் பெற்றுள்ள நிறுவனங்கள் தன் கட்டுப்பாட்டில் உலகத்தையே வைத்துள்ளன. தங்களுக்கு உரிமையான பொருட்களை வேறுயாரும் தயாரிப்பதை தடுக்க தங்கள் பொருட்களின் மீது வணிக குறியீடு இடுகின்றனர். இவ் வணிக குறியீடும் ஒரு அறிவு சொத்துரிமை தான், இதற்கான சட்டம் TRADE MARK ACT 1999 (TRIPS ஒப்பந்திற்கு பின் பலவாறு மாற்றப்பட்டது). இச்சட்டம் ஒரு நிறுவனத்தில் வணிக குறியீட்டை வேறுயாரும் பயன்படுத்த தடை விதிக்கிறது.

பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதைவிட அவற்றை விற்பனை செய்வதற்கான விளம்பரத்திற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்கின்றன. மக்கள் மனதில் இந்நிறுவனங்களின் வணிக குறியீடு (TRADE MARK) பதிவு செய்யப்படுகிறது. இத்தகைய வணிக குறியீடுகளை கொண்டு அப்பொருளின் தரத்தை நாம் உயர்வானதாக கருதுகிறோம்.

தரத்தை நிர்ணயம் செய்வதற்கு இந்திய அரசு தரநிர்ணய சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் வணிக பொருட்களுக்கு ISI / BIS என்கிற முத்திரையை இட்டுக்கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் எல்லா வணிகபொருட்களும் இந்த முத்திரையை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால்தான் பூச்சி மருந்துகள் உடைய பெப்சி - கோக் எவ்வித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. பெப்சி - கோக் நிறுவனங்களின் வணிக குறியீடு நம் மனதில் பதிய வைக்க பலநூறு ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்படுகின்றன. இதில் இவை பூச்சி மருந்தை கொண்டது என்பது யார் காதுக்கும் எட்டாமல் போய்விடுகிறது.

பெப்சி - கோக் மட்டும் அல்ல இந்தியாவில் விற்பனையாகும் எந்த பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களும் ISI முத்திரை இல்லாததைக் கொண்டு இந்திய தரநிர்ணய சட்டப்படி இவை தயாரிக்கப் படுவதில்லை என்பதை நாம் அறியலாம். தொடர் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்களின் வணிக குறியீட்டை நம் மனதில் பதியவைப்பது மூலம், ஒருவித நுகர்வு கலாச்சாரம் வளர்க்கப்படுகிறது.

இதை தவிர உலக வர்த்தக நிறுவனத்திற்கு பின் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள புதிய அறிவு சொத்துரிமை சட்டம்

• பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாரம்பரிய பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிக் கொடுக்கும் GEOGRAPHICAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999.
• பொருட்களின் வடிவமைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கும் DESIGNS ACT, 2000.
• மின் பொருள் வடிவமைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கும் SEMICONDUCTOR INTEGRATED CIRCUITS LAYOUT-DESIGN ACT, 2000.
• தாவரம், விதை, மரம் போன்றவற்றுக்கு காப்புரிமை கொடுக்கும் PROTECTION OF PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT, 2001.

ஆக நம்மை சுற்றியுள்ள யாவும் அறிவு சொத்துரிமை சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப் படுகின்றன. அக்கட்டுப்பாட்டை நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆக நிறுவனமயமாவதற்கே இந்த அறிவு சொத்துரிமை பயன்படும்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூக மேம்பாட்டிற்கு எதிராக இருந்த அனைத்து மதக்கோட்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உள்பட பல சட்டங்களையும் எதிர்த்தவர் பெரியார். அத்தகைய பெரியாரை, மக்களை சுரண்டுவதற்கான அறிவு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு நிறுவனமயமாக்குவது, பெரியாருக்கு இரண்டாவதாக கட்டப்படும் கல்லறை என்றே சொல்ல வேண்டும்.

-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)