Monday, July 2, 2007

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-1)மான்சான்டோ (Man Santo) என்ற பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனம், பெர்சி ஷ்மெய்சர் என்ற கனடா நாட்டு விவசாயி மீது கடந்த 1998ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்த ரவுண்டப் ரெடி கனோலா என்ற மரபணு கொண்ட தானியங்களை விவசாயி பெர்சி ஷ்மெய்சர், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தாம் விரும்பி அவ்வாறு செய்யவில்லை என்றும், அருகே உள்ள வயலில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்களில் இருந்து காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ அந்த மரபணு தமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்றும் பெர்சி ஷ்மெய்சர் பதில் அளித்தார்.
மேலும் தமது நிலத்தில் அனுமதி பெறாமல், அத்துமீறி ஊடுருவிய மான்சான்டோ நிறுவனம்தான் குற்றவாளி என்றும், தமது நிலத்தில் உள்ள பயிர்கள் மீது மரபணு தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக அந்த நிறுவனம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கனடா நாட்டின் நவீன காப்புரிமை சட்டங்களின் அடிப்படையில் மான் சான்டோ நிறுவனத்தின் காப்புரிமையை மீறிய விவசாயி பெர்சி ஷ்மெய்சர், அந்த நிறுவனத்திற்கு பலகோடி டாலர் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மான் சான்டோ நிறுவனம், உலகின் பல நாடுகளிலும், அந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிரான பலநூறு வழக்குகளை தொடுத்து பல நூறு கோடி டாலர்களை அபராதமாக பெற்றுள்ளது.
மான் சான்டோ (Man Santo), பாயர் (Bayer), டு பாண்ட் (Du Pont) போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கைகள் கனடா போன்ற முன்னேறிய நாடுகளோடு முடிந்து விடுவதில்லை. ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற ஏழை நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்தியாவில் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வரும் விவசாயி ஒருவர், இத்தகைய பிரசினைகள் தம்மை பாதிக்காது என்று அமைதியாக இருந்து விட முடியாது.
கனடா நாட்டு விவசாயி பெர்சி ஷ்மெய்சர்-ஐப்போல நம் நாட்டு இயற்கை விவசாயிகளும் அவர்கள் செய்யாத தவறுக்கு (நிறுவனங்களின் அத்துமீறலுக்கு) தண்டனை அனுபவிக்கும் நிலை உருவாகி வருகிறது.
இந்தியாவின் பிரபல வேளாண்மை விஞ்ஞானி என்று அறியப்படுபவரும், இந்திய அரசின் வேளாண்மை கொள்கை குறித்த முக்கிய ஆலோசகருமான எம். எஸ். சுவாமிநாதன் உட்பட மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்றனர்.
இந்திய சட்டங்கள் அனைத்தும் உலக வங்கியின் கட்டளைக்கேற்ப மாற்றப்படும் இன்றைய சூழலில் நமது விவசாயிகளும் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள். வணிகம் மற்றும் வரிக்கட்டணம் குறித்த பொது ஒப்பந்தமான காட்(GATT)டின் பரிணாம வளர்ச்சியான உலக வர்த்தக நிறுவன(WTO)த்தின் செயல்பாடுகள் இந்தியாவில் தொடர அனுமதிக்கப்பட்டால், இதுபோன்ற செய்திகளை வெகு விரைவில் நாமும் படிக்க நேரிடும்.

WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா உறுப்பு நாடானதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பு ஏற்படுத்தும் அனைத்து ஒப்பந்தங்களையும் கட்டாயமாக ஏற்றாக வேண்டிய அவல நிலையில் இந்தியா உள்ளது. இவ்வாறு உலக வர்த்தக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அறிவுச் சொத்துரிமை குறித்த TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதை தொடர்ந்து, அறிவு சொத்துரிமை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பல புதிய சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இந்தியாவின் விவசாயம், வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இவற்றில் குறிப்பாக வேளாண்மைத்துறை மற்றும் விவசாயிகளின் வாழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்டங்களைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்...
-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!