Friday, July 6, 2007

கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை!“இந்திய காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு அவர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுவதே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சர் ஜேம்ஸ் ஸ்டீஃபன் என்பவர் கடந்த 1883ம் ஆண்டில் எழுதிய “குற்றவியல் சட்ட வரலாறு” என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நிலையில் ஏதேனும் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால், நிலைமை மிக மோசமாக பின்னடைந்துள்ளதாகவே தெரிகிறது. மிளகாய்ப்பொடியை தூவியாவது விசாரிப்பதைவிட போலிமோதல்களில் சுட்டுக்கொல்வதே எளிது என்று தற்போதைய காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சுட்டுக் கொலை செய்யப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருந்தால் நாட்டின் உயர்மட்ட பதவியில் இருப்பவர்களும்கூட சிக்கலாம் என்ற நிலையில் இந்த என்கவுன்டர் கொலைகள் நடப்பதையே, சந்தனக்கடத்தல் வீரப்பன் படுகொலை உள்ளிட்ட பல்வேறு போலிஎன்கவுன்டர் கொலைகளும் நிரூபிக்கின்றன.

இந்நிலையில், ஐ.நா. அவையில் சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை நிறைவேற்றப்பட்ட தினமான ஜூன் 26ம் நாள் “சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமா”க மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில் மும்பை நகரில் கருத்தரங்கு நடைபெற்றது.

மும்பை உய்ர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மனித உரிமை ஆர்வலர்களும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை!


பயங்கரவாதிகள், கூலிப்படையினர், கிரிமினல் குற்றவாளிகள் ஆகிய யாரையும் கொலை செய்வதற்கு இந்தியாவில் எந்த ஒரு சட்டமும் காவல்துறையினருக்கோ, ராணுவத்துக்கோ, வேறு எவருக்குமோ அதிகாரம் அளிக்கவில்லை என்று தமது உரையை தொடங்கிய நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ், தடா-பொடா போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களில் கூட இத்தகைய கொலைகள் அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

காவல்துறையினர் நடத்தும் (போலி) என்கவுன்டர் கொலைகளை கொலை வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதி சுரேஷ், எந்த சட்டத்தின் கீழும் இந்த நடைமுறையிலிருந்து காவல்துறைக்கு விலக்களிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இத்தகைய என்கவுன்டர்களில் அதிக அளவில் சிறுபான்மை மதத்தினரும். தலித் மக்களுமே கொல்லப்படுகின்றனர் என்று அவர் வருத்தம் தெரிவித்தார். எனினும் காவல்துறையினரும், பத்திரிகை-செய்தித் துறையினரும் என்கவுன்டர் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

இத்தகைய முறைகேடுகளை கொள்கையளவில் கண்டிக்கும் நீதிமன்றங்களே, உண்மை அறியும் சோதனை என்ற பெயரில் – இந்திய குடிமகனுக்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1984ம் ஆண்டு நிறைவேற்றிய சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்று அமல் படுத்தவேண்டும் என்று மத்திய அரசை, பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் வற்புறுத்துவதே, இத்தகைய பிரசினைகளை அகற்றும் வழியாகும் என்றும் நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ் தெரிவித்தார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் அர்ஷி கான், நாட்டில் ஒற்றுமையாக வாழும் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கான உளவியல் ரீதியான பணியில் காவல்துறை-ராணுவம் போன்ற அரசு அமைப்புகளும், செய்தி ஊடகங்களும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

கடந்த 1970ம் ஆண்டுவாக்கில் நாட்டின் சில பகுதிகளில் தொடங்கிய என்கவுன்டர் கலாசாரம், தற்போது நாடு முழுவதும் பரவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். காஷ்மீர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேரும், பஞ்சாபில் சுமார் 2 ஆயிரத்து 500 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் பேசும்போது, இது போன்ற மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்படும் மதச்சிறுபான்மையினர், தலித் மக்கள் ஆகியோர் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தனித்து செயல்படுவதும், பரந்த மனப்பான்மையற்று இருப்பதும் அனைவரது எதிர்காலத்துக்கும் ஆபத்தாக விளையும் என்று அவர் எச்சரித்தார்.

கொல்லப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்க வேண்டும்

அனைத்திந்திய கிறிஸ்தவ காங்கிரஸின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜான் தயாள், அனைத்திந்திய அளவில் காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியர் நகரி பாபையா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி போன்றவர்களை கொலை சதித்திட்டம் தீட்டியதாக கூறி சிலர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளுக்கு எதிரான மனுதர்மவாதிகள் இந்துக்களுக்கும், மனித குலத்திற்கும் எதிரானவர்கள் என்று கூறிய அவர், இந்துத்துவ சக்திகள் அரசு, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊடுருவி வருவதாக தெரிவித்தார்.

அரசோடு முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்களை என்கவுன்டரில் கொலை செய்வது அதிகரித்து வருவதாக கூறிய பேராசிரியர் பாபையா, இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைளும் கேள்விக்குறியாவதை கோடிட்டு காட்டினார்.

ஆந்திர பிரதேச சிவில் உரிமைக்கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பேசுகையில், நாடாளுமன்ற அரசியலின் செயல்பாடுகள் தோல்வி அடையும்போது நக்ஸல்பாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். அந்த கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாதபோது கேள்வி எழுப்புபவர்கள் என்கவுன்டர்களில் படுகொலை செய்யப் படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்கவுன்டர் கொலைகளை இந்திய தண்டனை சட்டம் பிரிவின் 302ன் படி கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு, ஆந்திர பிரதேச சிவில் உரிமைக்கழகத்தால் பெறப்பட்டது என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் சுரேஷ், ஆனால் அந்த உத்தரவை அரசோ, காவல்துறையோ இதுவரை மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல்கள் !
தமிழ்நாடு மக்கள் உரிமை கூட்டமைப்பின் தலைவர் புதுவை கோ. சுகுமாரன், தமிழகத்தில் நடந்த என்கவுன்டர் படுகொலைகளை பட்டியலிட்டார். இந்த என்கவுன்டர் கொலைகளை முறைப்படி கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைத்து ஆட்சியாளர்களும் திட்டமிட்டு புறக்கணிப்பதை சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பேசும் போது, வீரப்பனை போன்றவர்களை உருவாக்குவதில் அரசியல்வாதிகளே பெரும் பங்கு வகிப்பதாக கூறினார். எனினும் அந்த அரசியல்வாதிகள் எந்த விசாரணைக்கும் உட்படாமல் தப்பிவிடுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

என்கவுன்டர் கொலைகளை செயல்படுத்துவதில் கட்சிபேதம் இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசு மற்றும் காவல்துறையினரின் முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்களும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களும் இந்த முறைகேடுகளுக்கு அதிக அளவில் என்கவுன்டர் கொலைகளுக்கு பலியாவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குறிப்பிட்டார்.

முத்துலட்சுமியைத் தொடர்ந்து அகமதாபாத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரானேஷ் குமார் என்ற ஜாவேத்-இன் ஜாவேத்தின் மனைவி சஜிதா, பெங்களூரு காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட அப்துல் ரவூஃப்-இன் மனைவி நூரி ஆகியோர் பர்தா உடைக்குள்ளிருந்தவாறை மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல் எழுப்பினர். பிரானேஷ் குமார் என்ற ஜாவேத்-இன் தந்தை கோபிநாத பிள்ளை, மங்களூர் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட சுதீரின் தாய் பிலோமினா ஆகியோர் தங்கள் மகன்களின் வாழ்க்கையை காவல்துறை சட்டவிரோதமாக சூறையாடியதை உருக்கமாக எடுத்துரைத்தனர்.

தீர்மானங்கள்

நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களை வலுப்படுத்தும் சட்டங்களை இயற்ற வேண்டும்; காவல் துறையினர் மற்றும் படையினர் நடத்தும் என்கவுன்டர் படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; அதற்கேற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்; காவல்துறை மற்றும் ஆயுதப்படையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை தேசிய அளவில் தயாரித்து வெளியிட வேண்டும்; அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்; ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1984ம் ஆண்டு நிறைவேற்றிய சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்று அமல் படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நிகழ்ச்சியின் முடிவில் மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் செயலாளர்களில் ஒருவரான அக்னி சுப்ரமணியம் நன்றி கூறினார்.

அடுத்தது என்ன?

இந்த கட்டுரையின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ளவாறு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு காவலர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுகின்றனர் என்று சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதை விட, நிலைமை மிகவும் மோசமாக பின்னடைந்துள்ளது என்று தெரிகிறது.

இந்நிலையை மாற்றும் பொறுப்பு நீதித்துறை, காவல்துறை, அரசியல் – சமூகத் தலைவர்களைவிட வேறொரு தரப்பினருக்கே அதிகம் உள்ளது. அந்த தரப்பினர் வேறு யாருமல்ல. இதை படிக்கும் நீங்கள்தான்.

இந்திய அரசியல் சட்டம், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்த குறைந்த பட்ச அறிவும், தெளிவும் பெறுவதோடு – அதை அனைவருக்கும் பரப்பி சமூக அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மனித குல விடுதலைக்கு உடனடித் தேவையாகும்.


-சுந்தரராஜன்

(sundar@LawyerSundar.net)

1 comment:

Anonymous said...

வனத்துறை அதிகாரிகள் பலரையும் படுகொலை செய்த வீரப்பனின் மனைவி மனித உரிமைகள் குறித்து பேசுகிறார். அதை பதிவு செய்யவும் ஒரு வலைப்பதிவு. ம்ம்ம்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!