Friday, July 20, 2007

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் - பகுதி 4

விதைச்சட்டம் (SEED ACT) 1966



விதைகளை பதிவு செய்வதற்காக 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதைச்சட்டம் TRIPS ஒப்பந்தத்திற்கு பின்பு பல மாற்றங்கள் அடைந்து நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக SEED BILL 2004 என்ற பெயரில் காத்திருக்கிறது.

புதிதாக மாற்றம் பெற்றுள்ள இந்த விதைச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் விதைகளை பதிவு செய்தவர் மட்டுமே அந்த விதைகளை விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு இச்சட்டம் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைவிட கொடியதாக விதைச்சட்டம் உள்ளது. ஏனெனில் இச்சட்டத்தின் கீழ் ஒருவர் விதைகளை பதிவு செய்ய அந்த விதையின் மூலக்கரு எங்கிருந்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்க தேவையில்லை.

இதன்மூலம் நம்முடைய பாரம்பரியமிக்க விதைகள் சில தனியார்களின் உடைமையாக மாறக்கூடும். விவசாயிகளின் பாரம்பரிய விதைகளுக்கு இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தாலும், ஒரு பயிரின் மூலத்தை தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விதைகள் பறிபோவதற்கு இச்சட்டம் உதவி செய்கிறது.

மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைப்போல விதைச்சட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உரிமையை அளிப்பதில்லை. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒருவர் மீண்டும், மீண்டும் பதிவு செய்து கொண்டு விதைகளை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு காப்புரிமை மற்றும் விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.

லஞ்சம், ஊழல் இவற்றையே முதன்மைப்பணியாக கொண்டு இயங்கும் இந்திய அதிகார வர்க்கம், பணபலம் படைத்த விதை தயாரிப்பு நிறுவனங்களிடம் சரணடைந்து, விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படும் என்பதையும் கூறத்தேவையில்லை.








-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)

2 comments:

Anonymous said...

நாதியற்றுப்போன விவசாயிகளுக்கு உதவி செய்யவும் ஒரு வழக்கறிஞர் அமைப்பு இருக்கிறது என்ற செய்தியே மகிழ்ச்சி அளிக்கிறது.

மொழியை எளிமைப்படுத்தலாம். படங்கள் தேர்வு அருமை.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

சட்டத்தில் ஆய்வு செய்தாலும் ஆசிரியர்கள் காட்டிய வழியிலேயே செயல்படும் எனக்கு, உண்மையான ஆய்வு மனப்பான்மை என்ன என்பதை விளக்கி உள்ளீர்கள். நன்றி.

தமிழ் தட்டச்சு தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு உதவ எழில்நிலா இணையத்தொடுப்பும் வரவேற்கத்தக்கது.

இனி உங்கள் சீரிய பணியில் நானும் இணைந்து பணியாற்றுவேன்.

நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!