Wednesday, July 25, 2007

பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்தியாவின் இறையாண்மை !

நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் ஆகிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.

நாடாளுமன்றம் – சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் வருடக்கணக்கில் விவாதம் (மட்டுமே) நடத்திவரும் நமது அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலோ, வேறு எந்த அவையிலோ எந்த விதமான விவாதமும் நடத்தாமல் உலக வர்த்த கழகத்தில் இந்தியாவை உறுப்பு நாடாக பதிவு செய்தனர். உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எம்.பி.க்களுக்கே தெரியாமல், அதிகாரிகளே இதற்கான (டங்கல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான அனுமதியை அளித்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்.

இந்த கொள்கைகளுக்கு அன்று எதிர்ப்புகளும் இருந்தன. ஆனாலும் இதிலிருந்து விலகினால் பொருளாதார ரீதியாக பேரழிவுகள் ஏற்படும் என்றும், நாட்கள் செல்லச்செல்ல இந்த புதிய பொருளாதார கொள்கைகள் நல்ல பலன்களை கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சமாதானம் கூறினர்.

இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதி-இறக்குமதி, வரிச்சட்டங்கள், வங்கிச்சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் உள்ள மக்கள் சார்பு அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன.

இவை இந்தியர்களின் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது. எந்தத் தொழிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதையே இலக்காக கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஆக்கிரமித்ததால் இந்தியர்களின் நல்வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் என்ற மருந்தை கிளிவெக் (GLIVEC, GLEEVEC) என்ற வணிகப்பெயரில் தயாரித்து வருகிறது.

இம்மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக சந்தை உரிமை (EXCLUSIVE MARKETING RIGHT)யை காப்புரிமை சட்டம் மூலம் இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு பெற்றது. ஆனால் இம்மருந்தை வேறு செய்முறைகளில், வேறு பெயர்களில் சில நிறுவனங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தன.

இதை தடை செய்யக்கோரி சென்னை மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் நோவார்டிஸ் வழக்கு தொடர்ந்தது. அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்த நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நோவார்டிஸ் நிறுவனத்தை தவிர வேறு யாரும் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுபாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள காப்புரிமை சட்டவிதிகளின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த மேல் முறையீட்டில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மெஸிலேட் மருந்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதை பின்பற்றி காப்புரிமை கேட்பதற்கு ஏற்கனவே சுமார் 9,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

எனவே இந்த வழக்கை நோவார்டிஸ் நிறுவனம் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்திய மக்களைப்பற்றி இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அக்கறை இல்லாதபோது, கொள்ளை லாபமே இலக்காகக் கொண்ட நோவார்டிஸ் நிறுவனம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.

---
மேற்கண்ட செய்திகள் அரசின் கொள்கைகளை மட்டுமே நமக்கு உணர்த்தவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்ற சில நபர்களின் தன்மைகளையும் உணர்த்துகிறது.
காப்புரிமை சட்டத்தில் ஒரு பொருள் தயாரிக்கும் முறைக்கு மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னர் வர்த்தகம் சார்ந்த அறிவுச்சொத்துரிமைக்கான ஒப்பந்தத்தில் (Trade Related Intellectual Property RightS Agreement) இந்தியா கையொப்பம் இட்டதை தொடர்ந்து பொருள் செய்யும் முறைக்கு மட்டும் அல்லாமல் மருந்துப் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
இதன்படிதான் நோவார்டிஸ் நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்துக்கு காப்புரிமை கோருகிறது. இதற்காக நம் நாட்டின் காப்புரிமை சட்டம் – 1970 ல் திருத்தம் செய்து ஒரு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அது கொண்டு வரப்பட்ட நாள்: 2004 டிசம்பர் 26! ஆம். சுனாமி பேரலை தாக்கி உலகின் பல பகுதிகளும் சோகத்தில் மூழ்கியிருந்தது.





இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய உலகின் பல நாடுகள் முன்வந்தன. அந்த நாளில்தான் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் விரோதமான/ பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான அந்த அவசர சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கையெழுத்திட்டார். அவரைத்தான் நமது நகைச்சுவை நடிகர்கள் முதல் நாடோடிகள்வரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.
---
அடுத்து இந்த விவகாரத்தில் மிக முக்கிய நபர் டாக்டர் மஷேல்கர் என்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் பிறந்த உயர் குலம் காரணமாக இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்.
காப்புரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் (காலம்கடந்து) நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, அறிவாளிகளின் குலத்தில் பிறந்த டாக்டர் மஷேல்கர் தலைமையில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே இந்த அறிக்கையின்படி தமது மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம் வாதாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள இன்டலக்சுவல் பிராபர்டி இன்ஸ்டிடியூட்-ல் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஷாம்நாத் பஷீர் என்ற மாணவரின் கட்டுரையை திருடி அதனையே அறிக்கையாக தயாரித்து டாக்டர் மஷேல்கர் அளித்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் ஷாம்நாத் பஷீர், நோவார்டிஸ் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த கட்டுரையை எழுதியதாகவும், அதை டாக்டர் மஷேல்கர் வார்த்தைக்கு வார்த்தை திருடி விட்டதாகவும் கூறியுள்ளார். மாணவரின் அறிவைத்திருடி பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையை பாதுகாக்க டாக்டர் மஷேல்கர் மேற்கொண்ட முயற்சி அம்பலமானதை தொடர்ந்து அந்த “வல்லுனர்(!) குழு அறிக்கை” திரும்ப பெறப்பட்டது.
மாணவரின் அறிவுச்சொத்தை “வல்லுனர் மஷேல்கர்” திருடியது உலக அரங்கில் அம்பலமானாலும், அவருக்கு தண்டனையோ கண்டனமோ கிடையாது. அவாளுக்கெல்லாம் தண்டனை கொடுக்க கருட புராணத்திற்கு அதிகாரம் கிடையாது. மனுதர்மம்தான்!


---

இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யுமா? என்று எதிர்பார்ப்பவர்கள், இதுபோன்ற விவகாரங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர்களே உலக வங்கியின் ஏஜென்டுகளான மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த விவகாரத்தில் ஏதும் செய்யமுடியுமா? என்று வேண்டுமானால் கேட்டுப்பார்க்கலாம்.

---

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. டங்கல் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.

“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”

“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராகவும், சிதம்பரம் நிதித்துறை இணையமைச்சராகவும் இருந்தபோதுதான் இத்தகைய மாற்றங்கள் தொடங்கின. மாநில சுயாட்சி முழக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் துணையுடன்தான் இந்த மாற்றங்கள் முழுவேகத்தில் நடைபெறுகின்றன.

இதற்கு என்ன தீர்வு என்பது தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் இல்லை. இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்பாடுகளும்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் சந்ததிகள் வாழ்க்கையை பாதுகாக்கும்.









-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

14 comments:

Anonymous said...

புகழ்பெற்ற மனிதர்கள் மீது சேறு வாரி பூசுவது இப்போது வழக்கமாகி வருகிறது. மக்களின் அபிமானத்துக்குரிய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மீது இப்படி அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்களே. என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்?

Anonymous said...

ஆய்வுக்கென கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் நிறுவனங்கள் அதற்கான காப்புரிமையை என்ன தவறு

எந்த செலவும் செய்யாமல் அதை மற்ற நிறுவனங்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்வதை ஆதரிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அதேபோல தலைவர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானவர்கள் என்பது போல சித்தரிப்பதும் சரியல்ல.

எந்த விஷயத்தையும் ஆரோக்கியமாக அணுகுங்கள். அல்லது நல்ல மனநோய் நிபுணரை அணுகுங்கள்.

K.R.அதியமான் said...

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

nellikkani.blogspot.com

Anonymous said...

சிந்தனைக்கு விருந்தளிக்கும் மிக நல்ல பதிவு. எதிர்தரப்பு கருத்துகளையும் அனுமதிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் மாற்றுக்குரல் எழுப்புபவர்கள் யாரும் உங்கள் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகளை வைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

While your activities are praiseworthy, making public interest issues into needless political or caste issues will reduce your credibility.
Example: "ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் பிறந்த உயர் குலம் காரணமாக இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்...................
, அறிவாளிகளின் குலத்தில் பிறந்த டாக்டர் மஷேல்கர் தலைமையில் வல்லுனர் குழு ........... "

Who cares who 'blessed' Maleshkar? Your opinion raises more questions than it answers. How are you going to prove Maleshkar was blessed by RSS? and what does 'blessing' mean?. You are accepting caste hierarchy by saying "இவர் பிறந்த உயர் குலம் காரணமாக..." Avoid needless and unproductive comments and continue your work.

cheers

மக்கள் சட்டம் said...

நன்றி பெயரிலி அவர்களே,

உங்கள் ஐயம் தீர்க்க புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளோம்.

மேலும் விவரங்களுக்கு பிப்ரவரி 5, தேதியிட்ட அவுட்லுக் இதழைப் பார்க்கவும்.
http://www.outlookindia.com/full.asp?fodname=20070205&fname=Mashelkar&sid=1


ஜாதியும், அரசியலும் மிக முக்கிய இடம் வகிக்கும் இந்திய சமூகத்தில், ஜாதி பார்த்தே நீதித்துறையும் இயங்கும் அவல நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியவில்லை, நண்பரே.

அடுத்த முறை பெயருடன் பின்னூட்டமிடவும்.

நன்றி.

-சுந்தரராஜன்

மாசிலா said...

மிக நல்ல பதிவு. நிறைய புது விசயங்கள் தெரிந்துகொண்டேன்.

அறிவாளியின் அழகையும் தெரிந்துகொண்டேன்.

//இதற்கு என்ன தீர்வு என்பது தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் இல்லை. இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்பாடுகளும்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் சந்ததிகள் வாழ்க்கையை பாதுகாக்கும்.//

நல்ல முடிவுரை. ஆம் சனநாயக நாட்டில் மக்கள் வைப்பதுதான் சட்டம். மக்களின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உழைக்கவேண்டும். அத்தனை கோடி மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால், ஒரு சில மனிதர்களே எடுத்த முடிவுகளை சுக்குநூறாக உடைத்து எறியலாம். மக்கள் சக்திக்கு எதிரில் எதுவும் நிலைக்காது.

முக்கிய பதவிகள் வகிக்கும் முடிவெடுக்கும் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்கள் என்ன நினைத்து கொண்டு அவசரத்தில் மக்கள் பிரதிநிதிகள் யாரையும் கலக்காமல் ஏந்தான் இந்த மாதிரியான பாழாய்ப்போன முடிவுகள் எடுக்கிறார்களோ?

Anonymous said...

மிக நல்ல பதிவு. பொதுவாக புதிய துறைகளில் துவக்க காலத்தில் நுழைபவர்கள் அந்த துறை மீதான காதலில் அந்த துறையை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக கருதுவதே வழக்கம்.
ஆனால் இந்தியாவில் அறிமுகமாகி வரும் அறிவுச்சொத்துரிமை சட்டங்களை அறிமுக நிலையிலேயே விமரிசனம் செய்யும் போக்கு வரவேற்கத் தக்கது.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி. பாராட்டுகள்.

(தங்கள் பிளாக் குறித்து ஆனந்தவிகடன் இதழ் மூலம் அறிந்தேன். மிக மகிழ்ந்தேன்.)

Anonymous said...

அடுத்து இந்த விவகாரத்தில் மிக முக்கிய நபர் டாக்டர் மஷேல்கர் என்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் பிறந்த உயர் குலம் காரணமாக இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்

Do you atleast know that he was a director of NCL, Pune.You cant use one mistake by him to deny his credibility and expertise as a
scientist. He has many scientific publications and awards to his credit besides being member of many scientific academies.Caste plays no role there. Your blog is
an example of yellow journalism.

Anonymous said...

அந்த நாளில்தான் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் விரோதமான/ பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான அந்த அவசர சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கையெழுத்திட்டார். அவரைத்தான் நமது நகைச்சுவை நடிகர்கள் முதல் நாடோடிகள்வரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.

what were the options before him.
How could he refuse to sign the
ordinance when the cabinet had
decided to amend Patents Act so that India could meet the deadline
set by TRIPS - Jan 1, 2005. Your ignorance is evident in the blogs.
You sound more like a third rate
speaker than like a lawyer. It is
shameful that ignorant fellows
write as if they are out there
to protect public interest. May
god save your clients from you.
You want cheap publicity.Perhaps
you are using the blog to indirectly solicit clients.

சீனு said...

மிக அவசியமான பதிவு. நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

//புகழ்பெற்ற மனிதர்கள் மீது சேறு வாரி பூசுவது இப்போது வழக்கமாகி வருகிறது. மக்களின் அபிமானத்துக்குரிய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மீது இப்படி அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்களே.//

ஏன்? அவர் என்ன விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா? இப்படிப்பட்ட விமரிசனங்கள் வரும்பொழுது தான் அவரை பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொள்ளமுடியும் (நல்லவிதமாகவோ / கெட்டவிதமாகவோ) என்று நம்புகிறேன்.

Anonymous said...

நல்ல பதிவு. ஆனால் மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட ஜாதியை 'கட்டம் கட்டி' இருப்பது, நெருடலாக உள்ளது. அது கட்டுரையுன் போக்கை திசை திருப்புவதுடன், நம்பகத்தன்மையையும் குறைக்கிறது.

அந்த 'பெரிய மனிதரைப்' பற்றி தங்களின் கருத்துக்களை வெளியிட வேண்டுமானால் தாங்கள் தனியாகவொரு கட்டுரை எழுதலாமே!

மற்றபடி இதுபோன்ற ஆய்வு கட்டுரைகள் தமிழிலில் வெளி வருவது சிறப்பானதே!

Anonymous said...

Does anyone know where I can find free online grant applications?

rH3uYcBX

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!