Monday, July 2, 2007

சித்ரவதையால் அமையாது சட்டம்-ஒழுங்கு!

(ஜூன் 26 – சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. ஆதரவு தினம்)


“இந்தியாவின் காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு அவர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுவதே மகிழ்ச்சி அளிக்கிறது”.
-சர் ஜேம்ஸ் ஸ்டீஃபன்,
குற்றவியல் சட்ட வரலாறு(1883) என்ற புத்தகத்தில்...

1991ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் புழுக்கம் மிகுந்த ஒரு நாள். மதுரை மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிமன்ற வளாகம். விருதுநகர் அருகில் வாய்ப்பூட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவர் வேலுச்சாமி ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட வழக்கின் தீர்ப்புநாளான அன்று, நீதிமன்றம் வழக்கத்திற்கு அதிகமான பரபரப்புடன் இருந்தது.

“ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக புலனாய்வில் புகழ் பெற்ற தமிழ்நாடு காவல்துறை”யினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக பாண்டியம்மாளை அவரது கணவர் வேலுச்சாமியும், அவரது இரு நண்பர்களும் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, பாண்டியம்மாளின் சடலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

நீதிமன்றம் கூடியவுடன் புலனாய்வு இதழ் ஒன்றின் சார்பில், அந்த வழக்கு தொடர்பான ஒரு முக்கிய சாட்சியை முன்னிலைப் படுத்த அனுமதி கோரப்பட்டது. அதையடுத்து நீதிமன்றத்திற்கு வந்த அந்த முக்கிய சாட்சியை பார்த்து ஒட்டுமொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியில் உறைந்தது.

நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த முக்கிய சாட்சி கொலையானதாக கூறப்பட்ட பாண்டியம்மாளேதான்!

சிறிய மனவருத்தம் காரணமாக கணவரிடம் சொல்லாமல் பாண்டியம்மாள் உறவினர் வீட்டுக்கு சென்ற நேரத்தில், ஊர்க்குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்துள்ளது.

யாரோ சிலருக்கு எழுந்த சந்தேகம் காவல்துறையையும் பற்றிக்கொள்ள, பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி கைது செய்யப்பட்டு தமிழக காவல் துறையினரின் “விசேஷ” கவனிப்பில் அனைத்து “உண்மை”களையும் “கக்கினார்”. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளன்றுதான் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பாண்டியம்மாளே நீதிமன்றத்தில் நேரில் தோன்றினார். காவல்துறையின் சித்ரவதை தாங்காமல், தான் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி கூறினார்.

ஒருவேளை தீர்ப்பு நாளன்று பாண்டியம்மாள் வந்திருக்காவிட்டால், வேலுச்சாமியின் கதி...? இது ஏதோ விதிவிலக்காக நடக்கும் நிகழ்ச்சியல்ல ! காவல் நிலையங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சிதான். பாண்டியம்மாளின் கணவருக்கு இருந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் இருப்பதில்லை என்பதுதான் துயரமான தகவல்.

இதேபோல அண்மையில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

ராமனாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா. கடந்த 6-4-97 அன்று இவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது.

புலனாய்வு புலிகளான நமது காவல்துறை அப்போது நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம் என்பவருடன் மேலும் இருவர் சேர்ந்து, சுஜாதாவை பாலியல் வன்புணர்ச்சிக்குப்பின் கொலை செய்து, சடலத்தை எரித்தது ‘கண்டுபிடிக்க’ப்பட்டது.

இந்த வழக்கு மதுரையில் உள்ள 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 11-10-2006 அன்று, பாலியல் வன்புணர்ச்சிக்கு பின் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட சுஜாதா, நீதிமன்றத்தில் நேரில் தோன்றி தான் இன்னும் உயிரோடு இருப்பதாகவும், தான் எந்தவிதமான வன்முறையாலும் பாதிக்கப்படவில்லை என்றும் சாட்சியம் அளித்தார்.

மாண்டதாக கூறப்பட்ட பெண் உயிரோடு மீண்டு வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்! ஆனால் காவல்துறையின் சித்ரவதை கொடுமைக்கு உட்பட்டு செய்யாத கொலையை - செய்ததாக ஒப்புக்கொண்டு காவல்துறையினர் தொடர்ந்த பொய்வழக்கில் சிக்கி 10 ஆண்டுகளாக வாழ்வை தொலைத்து நிற்கும் கார்மேகத்திற்கு, அவர் இழந்த வாழ்க்கை மீண்டும் வருமா? அவரை சித்ரவதை செய்து நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லத்தூண்டிய காவல்துறை அதிகாரிகளை யார் தண்டிப்பது?

சித்ரவதை – ஒரு உலகளாவிய பிரசினை
மனித வரலாற்றில் தனியுடைமை பொருளாதாரமும், அது சார்ந்த கலாசாரமும் உருவான நாளிலிருந்து சித்ரவதைகளும் பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு வடிவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.



இரண்டாம் உலகப்போரே மனித உரிமைகள் குறித்த கவனத்தை ஒரு வடிவமாக்கி ஐக்கிய நாடுகள் அவை மூலம் 1948ம் ஆண்டில் அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தை ஏற்படுத்தியது. அதன் 5ம் பிரிவு, “யாரும் யாரையும் சித்ரவதை செய்யக்கூடாது; கொடூரமாக, மனித தன்மையற்று, கேவலமாக நடத்தக்கூடாது; கொடூரமான, மனித தன்மையற்ற, கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது” என்று கூறுகிறது.

இதையடுத்து, 1987ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் ஐ.நா. சபையின் சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை அமலுக்கு வந்தது. சித்ரவதை என்ற சொல்லுக்கான பொருள், அந்த உடன்படிக்கையில் வரையறை செய்யப்பட்டது.
அதன்படி, “ஒரு நபரிடமிருந்தோ அல்லது மூன்றாவது நபரிடமிருந்தோ, ஏதேனும் ஒரு தகவலையோ அல்லது ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெறுவதற்காக, உடலின் மீதோ அல்லது உளவியல் ரீதியாகவோ கடும் வலியை அல்லது கொடிய துன்பத்தை உண்டாக்கும் நடவடிக்கையே சித்ரவதையாகும்”.

இதைத்தொடர்ந்து ஐ.நா. அவை சார்பில் சித்ரவதையை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் வழக்கம்போல அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த முயற்சிகளை முறியடித்து வருகின்றன. மனித உரிமைகளின் பாதுகாவலனாக தம்மை காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, ஆப்கனின் அபு கிரைப், கியூபா அருகே உள்ள குவான்டனமோ தீவு ஆகிய இடங்களில் உள்ள சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலையே, மனித உரிமை கோட்பாடு மீது அமெரிக்க அரசு வைத்துள்ள நம்பிக்கை(!)யை பறைசாற்றுகிறது.

பல்வேறு உலக நாடுகளும், சித்ரவதை தொடர்பான அம்சங்களில் அமெரிக்காவையே பின்பற்றுகின்றன. அமெரிக்காவில் அந்நாட்டு குடிமகனுக்கு தேவையான முழு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. (அமெரிக்க குடிமகனுக்கு இந்தியா போன்ற நாடுகளிலும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் நூறில் ஒரு பங்காவது இந்தியாவில், இந்திய மக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியே!)

இந்தியாவில் சித்ரவதைஇந்தியாவிலும் சித்ரவதையின் வரலாறு மிகவும் பழமையானதே! மனுநீதி நூலில் ஏராளமான சித்ரவதை முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்து மதத்திற்கு சவாலாக விளங்கிய புத்த, சமணர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

தற்போதைய நிலையில், காவல்துறையினரின் விசாரணை என்பது, விசாரணைக்கு உட்படுபவரை சித்ரவதை செய்யும் ஒன்றாகவே உள்ளது. இதை சட்டம் அனுமதிப்பதாகவே, நீதிபதிகள் உட்பட பலரும் (தவறாக) நினைக்கின்றனர். அண்மையில் கட்சி தொடங்கி, சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகியுள்ள பிரபல நடிகர், கல்லூரி பேராசிரியராக நடிக்கும் (புரட்சிகரமான) படம் ஒன்றில், “பொதுமக்களை அடிக்கும் அதிகாரம்” காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாயகனே வசனம் பேசுவார். போலி என்கவுன்டர்களை நியாயப்படுத்தி புகழும் திரைப்படங்களும் வந்து கொண்டுள்ளன.

மனைவி பெயரில் எழுதும் பிரபல “விஞ்ஞானி” எழுத்தாளரோ, பொய்பேசுவதை கண்டறியும் கருவியை(Lie Detector)ப் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அந்த கேள்விக்கு தொடர்பே இல்லாமல் இந்தியா போன்ற நாடுகளுக்கு காவல்துறையின் வழக்கமான சித்ரவதை முறையே பொருத்தமானது என்று பிரகடனம் செய்திருப்பார். இந்த பிரகடனத்திற்கு ஏற்ற நகைச்சுவை கார்ட்டூன் ஒன்றை வரலாற்று ஆர்வம் கொண்டவரான எழுத்தாளர் –கம்- கார்ட்டூனிஸ்ட் படம் வரைந்து விளக்கியிருப்பார். மற்ற செய்தி வெளியீடுகளும் காவல் நிலைய சித்ரவதைகளை இயல்பான ஒன்றாகவே சித்தரிக்கின்றன. இவ்வாறு தமிழகத்தின் கலை, இலக்கிய வடிவங்கள் மூலமாக சித்ரவதையை நியாயப்படுத்தும் போக்கு உளவியல் ரீதியாக உருவாக்கப்படுகிறது.

ஆனால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 46(2), காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்ய முயற்சி செய்யும்போது, கைது செய்யப்பட வேண்டிய நபர், அதை தடுத்தாலோ, தப்பியோட முயற்சித்தாலோ அதனை தடுப்பதற்கு தேவையான அளவில் பலப்பிரயோகம் செய்யலாம் என்று கூறுகிறது.

ஒரு கைதி தப்பியோடும் நிலையில்கூட, மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனைக்குரிய குற்றம் சாட்டப்பட்டவரை தவிர மற்ற கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அதிகாரம் காவல்துறையினருக்கு கிடையாது.

கைது செய்யப்பட்ட ஒருநபரை எந்த ஒரு வகையிலும் சித்ரவதை செய்ய இந்திய சட்டத்தின் எந்த ஒரு பிரிவும் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் உலகம் முழுவதும் நடைபெறுவதுபோல இந்தியாவிலும் ஒரு நபருக்கு எதிரான அல்லது அவருக்கு தெரிந்து-சொல்ல விரும்பாத தகவல்களைப் பெறுவதற்காக பெரும்பாலான நேரங்களில் சித்ரவதை நடைபெறுகிறது. ஆனால் சட்டம் இவ்வாறான சித்ரவதைகளை எதிர்க்கவே செய்கிறது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 20(3), குற்றம் சாட்டப்பட்ட எவரையும், அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறுகிறது. அதாவது, தன்னுடைய சொந்த விருப்பத்திற்கு மாறாக ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கத் தேவையில்லை.

குற்றவியல் விசாரணைமுறைச் சட்டத்தின் பிரிவு 163(1), காவல் அதிகாரியோ, அரசாங்கத்தில் உள்ள வேறெவருமோ, குற்றம் சாட்டப்பட்டவரிடம் தூண்டுதல், மிரட்டுதல் அல்லது வாக்கு கொடுத்தல் மூலமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சி செய்யக்கூடாது என்று கூறுகிறது.

இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 25, ஒரு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறது. அதேபோல காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஏற்க முடியாது என்று பிரிவு 26 கூறுகிறது.

ஆனால், ஒரு குற்றவியல் நடுவர் முன் குற்றம் சாட்டப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலத்தை சட்டம் ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில் குற்றவியல் நடுவர் முன் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம், சுதந்திரமாகவும்-அச்சுறுத்தல் இன்றியும் கொடுக்கப்படுவதாக சட்டம் கருதுகிறது. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நபர், குற்றவியல் நடுவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தபின் மீண்டும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் செல்லவேண்டிய அந்நபர், அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக வாக்குமூலம் கொடுக்கமுடியுமா? என்ற நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல யாருமில்லை.

இதேபோல கைது செய்யப்பட்ட நபர், காவல்துறை அதிகாரியிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொருள்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பொருளை சாட்சியமாக ஏற்கும் அளவிற்கு ஒப்புதல் வாக்குமூலம் செல்லும் தன்மை பெறுகிறது. எனவே கைது செய்யப்பட்டவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டதாக ஒரு ஆயுதத்தையோ அல்லது வேறு எந்த பொருளையோ காவல்துறையினர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டால் ஏறத்தாழ முழு ஒப்புதல் வாக்குமூலமும் செல்லுந்தன்மை பெற்றுவிடுகிறது. அந்தப்பொருள் போலியானது என்றோ, காவல்துறையினரே ஏற்பாடு செய்தது என்றோ வாதிடும் குற்றம் சாட்டப்பட்டவர், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பையும் ஏற்கிறார்.

சட்டத்தில் உள்ள இந்த அம்சங்கள் காவல்துறையினருக்கு மிகவும் வசதியான ஒன்றாகிவிடுகிறது. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவரை சட்டம் அனுமதி வழங்காத அனைத்து சித்ரவதை முறைகளையும் பயன்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து, தாங்கள் விரும்பியதுபோல், குற்றவியல் நடுவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்படி செய்யமுடிகிறது. இந்த கட்டுரையின் துவக்கத்தில் உள்ளதைப்போல உயிரோடு இருப்பவர்களை கொன்றதாக, அவர்களுடைய உறவினர்களையே நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ள வைக்கவும் முடிகிறது.

சித்ரவதை முறைகள்
தாலிபன் தீவிரவாதிகள் என்று சந்தேகத்தின்பேரில் கைது செய்யப் பட்டவர்களுக்கு ஆப்கனின் அபுகிரைப் சிறையிலும், கியூபா அருகே உள்ள குவான்டனமோ சிறையிலும் நடந்த சித்ரவதை கொடுமைகளை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

அதற்கு சற்றும் குறைவில்லாத சித்ரவதைகள் இந்தியாவிலுள்ள காவல் நிலையங்களிலும், சிறைக்கூடங்களிலும் நடப்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே!

குறிப்பாக சந்தனமர கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை பிடிப்பதற்காக சென்ற தமிழக-கர்னாடக கூட்டு அதிரடிப்படையினர் மலைவாழ் மக்களை சித்ரவதை செய்வதற்காக “ஒர்க்-ஷாப்” என்ற பெயரில் ஒரு சித்ரவதைக்கான (R & D) ஆய்வுக்கூடமே நடத்தி வந்ததை, மத்திய அரசு நியமித்த நீதிபதி சதாசிவா விசாரணை ஆணையமே அம்பலப்படுத்தியது.

மலைப்பகுதி மக்களை மாதக்கணக்கில் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி அடைத்து வைப்பது, மனிதக் கேடயமாக பயன்படுத்துவது, உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, பல்வேறு முறைகளிலான சித்ரவதைகளை செய்வது, பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உடல் நலிவடைவோரை வீரப்பனின் கூட்டாளிகள் எனக்கூறி படுகொலை செய்வது என அத்துமீறலையே அன்றாட வாழ்வாக கொண்டு அதிரடிப்படையினர் வாழ்ந்துள்ளனர்.










வீரப்பன் யானைத்தந்தங்களையும், சந்தன மரங்களையும் யார் மூலம், யாருக்காக கடத்தினான்? இதில் பயனடைந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் யார்? என்பது வெளி உலகிற்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே சர்ச்சைக்கிடமான முறையில் வீரப்பனை தீர்த்துக் கட்டியதற்காக அதிரடிப்படை வீரர்(!)களுக்கு பரிசுகளும், பாராட்டும் வழங்கப்பட்டன.

சந்தன மரக்கடத்தல் வீரப்பனை பிடிக்கச் செல்வதாக கூறி, மலைவாழ் மக்களின் வாழ்வை சூறையாடிய அதிரடிப்படை குற்றவாளிகளுக்கு மனிதர்கள் உருவாக்கிய சட்டம் தண்டனை வழங்கத் தவறிவிட்டாலும், “எய்ட்ஸ்” நோய் மூலம் இயற்கை தண்டனை வழங்கி வருவதாக தெரிகிறது.

இதையடுத்து “என்கவுன்டர்” என்ற “போலி மோதல் கொலை”களும் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய அரசியல்-சமூக சூழ்நிலையில் அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை தங்களது சுயலாபத்திற்காக தொடர் குற்றங்களில் ஈடுபடத் தூண்டுகின்றனர் என்பதே உண்மை. இவ்வாறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் உருவாகும் சமூகவிரோதிகள், அரசியல்வாதிகள்/ அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும்போது போலி என்கவுன்டர்களில் தீர்த்துக் கட்டப்படுகின்றனர். ஆனால் அந்த சமூக விரோதிகளை உருவாக்கி, வளர்த்துவிட்டு பலன் அனுபவித்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தப்பிவிடுகின்றனர்.

இவற்றோடு காவல்துறை அதிகாரிகளே, ரவுடிக் கூட்டங்களின் கூலிப்படையினராக செயல்பட்டதாக மும்பையின் பிரபல “என்கவுன்டர் ஹீரோ” தயா நாயக் விவகாரத்திலும், அரசியல்வாதிகளின் கூலிப்படையினராக செயல்பட்டதாக குஜராத் மாநில டி ஐ ஜி வன்சாரா வழக்கிலும் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ராஜ்குமார் பாண்டியன் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அனைத்து என்கவுன்டர் வழக்குகளையும் சட்டப்படி கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஆனால் வருவாய் கோட்டாட்சியர் என்ற நீதித்துறை சாராத அரசு அலுவலர் விசாரணையோடு இந்த வழக்குகள் திட்டமிட்டு மூடப்படுகின்றன.

இது தவிர நீதிமன்றங்களின் அனுமதியோடும் சில சித்ரவதைகள் நடைபெறுகின்றன. கைதிகளிடம் நடத்தப்படும் உண்மையறியும் சோதனையே அது. அறிவியலின் பெயரால் இத்தகைய சித்ரவதைகள் மேற்கொள்ளப் படுகின்றன. உண்மை அறியும் சோதனை என்ற பெயரில் மூன்று வித சோதனைகள் நடைபெறுகின்றன.

1. பாலிகிராஃப் அல்லது லை டிடக்டர் டெஸ்ட்.

ஒரு நபரின் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சுவிடும் கால அளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யும் கருவி மூலம் அந்த நபர் உண்மை பேசுகிறாரா என்பதை கண்டறிவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு உட்படும் நபரின் உடலில் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஈ.சி.ஜி. கருவி போன்ற கருவி இணைக்கப்படும். பின் அவரிடம் சாதாரண கேள்விகள் கேட்கப்பட்டு அப்போது அவரது உடல் இயல்பு பதிவு செய்யப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட குற்ற செயல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு அப்போது அவரது உடல் இயல்பு பதிவு செய்யப்படுகிறது. இந்த இரு பதிவுகளுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால் அந்த நபர் பொய் பேசுவதாக கருதப்படுகிறது.

2. பிரைன் மேப்பிங் அல்லது பிரைன் பிங்கர் பிரிண்டிங் டெஸ்ட்

மூளை அதிர்வுகளை பதிவு செய்யும் கருவியை ஒரு நபரின் தலையில் பொருத்தி, குற்ற சம்பவம் தொடர்பான படங்களை அந்த நபரிடம் காட்டும் போது, அவருடைய மூளை அதிர்வுகளை பதிவு செய்வதன்மூலம் அந்த சம்பவம் குறித்து அவர் உண்மைகளை கூறுகிறாரா என்று கண்டறியப்படுவதாக கூறப்படுகிறது.

3. மயக்க மருந்து அல்லது உண்மைத் திரவம்
சோடியம் பென்டதால் போன்ற சர்ச்சைக்குரிய திரவ மருந்துகளை, விசாரணைக்கு உட்படுபவரின் நரம்புகளில் செலுத்தி, அந்த நபரை அரைத்தூக்க நிலைக்கு ஆட்படுத்தி விசாரிக்கும் முறை. பேச்சை கட்டுப்படுத்தும் மூளை பாகத்தை முடக்கிவைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபர் மறைக்க முயலும் உண்மைகளை கண்டறிந்து விட முடியும் என்று காவல்துறையினரும், அத்துறையில் பணியாற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகின்றனர்.


இந்த அனைத்து முறைகளிலும் சோதனை நடத்தும்போது உளவியல் நிபுணர் ஒருவரும் உடனிருப்பது வழக்கம். இதன் மூலம் அந்த சோதனை அறிவியல் பூர்வமான சோதனை என்று நிறுவப்படுகிறது.

ஆனால் இந்த சோதனைகள் அறிவியல் பூர்வமானது அல்ல என்ற குரலும் எழுகிறது. அமெரிக்க உளவியல் மருத்துவ இதழில்(American Journal of Psychiatry) கடந்த 1954ம் ஆண்டில் மயக்க மருந்துகள் மூலம் உண்மை அறிதலும், சட்டமும் (Narcoanalysis and Crinimal Law) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், மயக்க மருந்தின் ஆதிக்கத்தில் உள்ள நபர், உண்மையான தகவல்களை வெளியிட மறுப்பதோ/ உண்மையல்லாத தகவல்களை வெளியிடுவதோ/ செய்யாத குற்றங்களை ஒப்புக்கொள்வதோ சாத்தியம்தான் என்று கூறப்பட்டுள்ளது. மயக்க மருந்துகள் மூலம் உண்மை அறியும் முறையின்படி பெறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் மதிப்பு கேள்விக்குறியதே என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. குற்ற விசாரணையின்போது நடைபெறும், மயக்க மருந்துகள் மூலம் உண்மை அறியும் சோதனைகளில் மருத்துவர்கள் பங்கெடுப்பது ‘மருத்துவ தொழில் நெறிமுறை’களுக்கு எதிரானது; எனவே மருத்துவர்கள் இதுபோன்ற சோதனைகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. இதுபோன்ற உண்மை அறியும் சோதனைகளுக்கு ஆதரவாக அமெரிக்க உளவியல் மருத்துவ இதழில்(American Journal of Psychiatry) இதுவரை எந்த கட்டுரையும் வெளியாகவில்லை என்பது சிறப்புச் செய்தி.

சோதனைக்கு உட்படுபவருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று தெரியாத நிலையில், அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படாத ஒரு பரிசோதனை முறையை, குற்றம் செய்ததாக சந்தேகப்படும் ஒரு நபரின் உடலில்-அவரது உடன்பாடு இல்லாமல் மேற்கொள்வதை, அச்சோதனை அது நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்றாலும், சித்ரவதை என்றே கருதவேண்டும்.

இத்தகைய சித்ரவதையில் உயிர்காக்கும் மருத்துவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கேற்பது தொழில் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலும் இதை பின்பற்றி 2002ம் ஆண்டு கொண்டுவந்த, மருத்துவ தொழில் நெறிமுறை (Indian Medical Council[Professional conduct, etiquettes and ethics] Regulations ,2002) யில், “மனித உரிமைகளுக்கு எதிரான விதத்தில், ஒரு நபரை சித்ரவதை செய்வதற்கு உதவியாகவோ, உடந்தையாகவோ மருத்துவர்கள் இருக்கக் கூடாது; ஒரு நபருக்கு உடல்ரீதியாகவோ, உளரீதியாகவோ பாதிப்பை ஏற்படுத்துவதில் மருத்துவர்கள் பங்கேற்கக் கூடாது; தனி நபர்களோ, ஏதேனும் துறையினரோ யாருக்கேனும் எந்தவித சித்ரவதையை தூண்டினாலும், மருத்துவர்கள் பங்கேற்கவோ, அந்த நிகழ்வை திட்டமிட்டு மறைக்கவோ கூடாது” என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் பரவலாக காவல்துறையினர் நடத்தும் உண்மை அறியும் சோதனைகளில் மருத்துவர்கள் பங்கேற்பதும், பின் தேசப்பற்றோடு அந்த சோதனையில் கலந்து கொண்டதை செய்தி தொலைக்காட்சிகளில் கலந்து கொண்டு விலாவாரியாக அலசுவதும் நமக்கு ஒரு செய்தியை கூறுகிறது: அந்த மருத்துவர்களுக்கு ‘அறிவியல்’ முழுமையாக தெரியவில்லை! “அறவியல்” சுத்தமாக தெரியவில்லை!!
இவ்வாறான விசாரணைகளில் சிக்குவோரை செய்தி நிறுவனங்கள் சித்தரிக்கும் விதம், சம்பந்தப்பட்டோருக்கு மட்டும் அல்லாமல் அவர்களது சுற்றத்தினர் அனைவருக்குமான உச்சக்கட்ட சித்ரவதையாகும்.

சித்ரவதையின் பாதிப்புகள்
ஒரு நபர் மீது ஏவப்படும் சித்ரவதை அந்நபருக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும். காவல்துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்யும்போது அதன் அடையாளங்கள் வெளியே தெரியாத வகையில் சித்ரவதை செய்யும் கலையில் கைதேர்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக வெளியே தெரியும் காயங்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், உள்காயங்கள் மிக அதிக அளவில் ஏற்படுத்தும் வகையிலும், நிரந்தர ஊனங்களை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு சித்ரவதை மேற்கொள்ளப் படுகிறது. இவை பல்வேறு விதமான உடற்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

இந்த வகையான சித்ரவதைக்கு ஆட்படுபவர்கள் உள்ளாகும் மனநல பிரசினைகள் அளவிட முடியாதவை. மனவலிவற்றோர் தற்கொலைக்கு முயற்சித்தலும், மனவலிவு உடையோர் சித்ரவதை குறித்த அச்சம் நீங்கி நிரந்தர குற்ற வாழ்வுக்கு தயாராதலுமே சித்ரவதையின் விளைவுகளாக உள்ளன.

இவ்வாறு நிரந்தர குற்றவாழ்வுக்கு தயாராகுபவர்களை அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் தேவையான அளவிற்கு பயன்படுத்தியபின் அவர்களை, என்கவுன்டர் என்ற போலிமோதல்களில் சுட்டு படுகொலை செய்வது, சித்ரவதையின் உச்சகட்டமாக அமைகிறது.


தீர்வுகள்
மேலை நாடுகளில் உள்ளதுபோல, தவறிழைக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும்.

அறிவியல் முறையிலான புலனாய்வு மற்றும் மனித உரிமைகள் குறித்த முறையான கல்வியை காவல் மற்றும் நீதித்துறையினருக்கு புகட்ட வேண்டும். நீதித்துறை ஒரு சுயேட்சையான அமைப்பு என்பதையும், காவல்துறை செய்யும் அனைத்து செயல்களையும் நீதித்துறை அங்கீகரிக்க அவசியமில்லை; நீதிமன்றம் நிறைவடையும் வகையில் பணியாற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதித்துறையினர் உணரச் செய்யவேண்டும்.

‘காவல்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது’ என்ற நிலையை மாற்றி, பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும். இதற்காக பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய காவல்துறை கண்காணிப்பு குழு(Centre for Police Accountability)க்களை அமைக்க வேண்டும்.

இதற்கேற்ற வகையில் குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. ஆனால், சித்ரவதையை தடை செய்வதற்காக ஐ.நா. அவையில் 1987ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி கொண்டுவரப்பட்ட “சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை”(Convention Against Torture)யில் கையெழுத்திடாமலே கடந்த 20 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. இந்நிலை மாறி மனித உரிமைகள் தொடர்பான அனைத்து பன்னாட்டு சட்டங்களையும் இந்திய அரசு அங்கீகரித்து அமல் நடத்தவேண்டும்.

இது அனைத்திற்கும் மேலாக மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சொந்த பிரசினைக்காக மட்டும் அல்லாமல், நியாயமான பொதுப்பிரசினையை தீர்க்கவும் பொதுமக்கள் திரண்டுவரும் வகையில் பொதுக்கருத்துகளை உருவாக்க வேண்டும்.

இதற்கேற்ற வகையில் மனித உரிமைப் பார்வையிலான அரசமைப்பு சட்டக்கல்வி, அனைத்து கல்வித் திட்டங்களிலும் கட்டாயமாக இடம் பெற வேண்டும். அப்போதுதான் விலங்குகளிடம் கூட இல்லாத, சொந்த இன உயிரிகளையே சித்ரவதை செய்யும் கொடிய வழக்கத்தை மனிதன் கைவிட்டு முழுமை பெற்ற மனிதனாக வாழ முடியும்.





-சுந்தரராஜன்

(sundar@LawyerSundar.net)










9 comments:

Anonymous said...

சபாஷ்! Blog உலகில் இது ஒன்றுதான் இல்லாமல் இருந்தது.

ஆனாலும் புதுவரவு நன்றாகத்தான் உள்ளது. என்ன சிறிது சுருக்கமாக இருக்கலாம்.

வாழ்த்துக்கள்!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பயனுள்ள பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

Anonymous said...

மிக அருமையான பதிவு.

ஏதோ ஒரு காரணத்திற்காக காவல் நிலையம் போனால்தான் உங்கள் பதிவின் அருமை புரியும்.

காவல் நிலையத்திற்கு குற்றவாளியாகத்தான் போகவேண்டும் என்பதில்லை. புகார் அளிக்கப்போனாலே மனம் வெதும்பிவிடும்.

இதுபோன்ற பதிவுகளை அதிகம் உள்ளிடுங்கள்.

நாங்களும் எங்கள் கருத்துகளை பதிவு செய்யலாமா?

நன்றிகள்.

Anonymous said...

When hundreds of our soldiers sacrificed their lives in the border areas, there is no cry from human rights activists.

When lot of policement killed by the criminals and thugs there is no cry from the human rights activists.

When a large number of common people killed by the atrocities of terrorists there is no cry from the human rights activists.

But when a thug like Vellai Ravi and Bunk Kumar were killed all the human rights activists are crying.

Is it the human rights principle?
Please think about the comman man. Lot of issues and problems are waiting to be addressed. Don't waste your time and energy in supporting the criminals.

Anonymous said...

Dear Patriot,
Thanks for conceding that Policemen are like criminals and terrorist.

kuppusamy said...

நல்ல பதிவு யாவரும் தெரிந்து கொள்ள வேண்டியது பல நிகள்வுகள் தேரில் பார்த்துள்ளேன். நன்றி.

Anonymous said...

I expected a new post on this day. But you had not posted any article today.

So I would like to re-present your article for the readers of Tamil Blogs on this notorious day.

And I request you to write more on this area.

Anonymous said...

emu8086 keygen
dream suite crack
download norton ghost 9.0 warez
airnav suite crack
backdrop gc crack




winoptimizer platinum crack
systran professional premium 5.0 crack
clone cd 4.3.3.1 crack
ghostsurf platinum crack
download protel warez
flashfxp download warez
fruityloops studio 5 crack
adobe acrobat 7 crack tryout
advanced wma workshop crack 2.09.8b
coffee cup html editor 2005 crack
ace video workshop 1.4.32 crack
dimex crack
win ftp server crack
crystal button keygen
download cool edit pro 2.1 crack

Anonymous said...

trials construction yard crack
shadowplan keygen
acdsee 7.0 crack
adobe photo album crack
circuitmaker 2000 trial crack




workspace macro pro keygen
dragon bane 2 crack
cycore fx demo crack
paint shop pro 6.0 crack
1click dvd to mpeg mpg crack
true launch bar v3.2 keygen
supreme snowboarding crack
login password crack
collage creator crack
antares auto tune 4 warez
xilinx ise 6.3i crack
microsoft office xp download warez
advanced vba password recovery crack
starwars battlefront cd keygen
business translator crack
accent office password recovery v2.12 crack
b296-us-06b1 garmin crack codes
vcdeasy 2.1.1 crack
aoe2 crack nocd
ip mailer 2004d crack

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!