Thursday, October 23, 2008

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழி சித்த மருத்துவ கல்விக்கு நீதிமன்றம் தடை!



தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம், பத்தாம் வகுப்பு தேறியவர்களுக்கு அஞ்சல் வழியில் ஓராண்டில் சித்த மருத்துவம் கற்றுத்தந்து டிப்ளமோ வழங்குவதாக கடந்த ஆண்டு விளம்பரம் செய்தது.

இந்நிலையில்...

மருத்துவ கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் மருத்துவ பயிற்சி அளிக்க முடியும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் (INDIAN MEDICAL COUNCIL).

சித்த மருத்துவ கல்வியை அங்கிகரிக்க இருக்கிறது இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE).

தமிழகத்தில் மருத்துவ கல்வியை அங்கிகரிக்க வேண்டியது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் (DR. MGR MEDICAL UNIVERSITY).

தொலைநிலை கல்வியை அங்கிகரிக்க வேண்டியது மத்திய அரசின் தொலைநிலை கல்விக்குழு (DISTANCE EDUCATION COUNCIL).

இந்த அமைப்புகளின் அங்கீகாரம் இல்லாமல் தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவ கல்வியை "தொலைநிலை கல்வி"யில் வழங்குகிறது

என்றும், இந்த கல்வி தமிழ் மக்களின் மருத்துவ நலனில் பேராபத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டு, இந்த படிப்புக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 13-10-2008 அன்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதன்மை ஆயம் முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நமது மனுவில் உள்ள வாதங்களை ஏற்றுக்கொண்டு, தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவ டிப்ளமோ படிப்பை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை தொடர்வதற்கு ஆலோசனை வழங்கிய சித்த மருத்துவர்கள், எதிர் வழக்காடிய தமிழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்தினர், பல்கலைக் கழகத்திற்கு ஆதரவாக வாதாடிய பரம்பரை சித்த மருத்துவர்கள், செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள், தாமதமாக வழங்கினாலும் நல்ல தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்த வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.


இந்த வெற்றியை சமூக செயல்பாட்டுக்கான வலைப்பூவான மக்கள் சட்டம் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

சமூகத்தில் தீயவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை, சட்டத்தின் துணையுடன் எதிர்த்து நின்று தொடர்ந்து போராடவும், வெற்றி பெறவும் உங்கள் உதவியை நாடுகிறோம்.

1 comment:

வெங்கட்ராமன் said...

வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!