Saturday, September 8, 2007

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவப்படிப்பு – கிணறு தோண்ட பூதம்.

மருத்துவ பல்கலைக்கழகமும், மருத்துவ கல்லூரிகளும் மட்டுமே தொடங்க வேண்டிய மருத்துவம் தொடர்பான கல்வியை தொலைதூரக்கல்வி மையம் மூலம் வழங்குவதாக தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் போலிமருத்துவர்கள் அதிகரித்து, மக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் அஞ்சல் வழி மருத்துவ கல்விக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையம், பாடத்திட்டங்கள் குறித்த கையேட்டை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மூலிகை அறிவியல், மருத்துவ மூலிகை அழகுக்கலை, மரபு மருத்துவ உணவு முறைகள் ஆகிய பாடத்திட்டங்களும் உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய மூலிகை, இயற்கை உணவு, இவற்றின் மூலமான அழகுக்கலை ஆகியவற்றை மீட்டெடுக்க தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

ஆனால் இந்த ஆர்வம் எல்லை மீறி சித்த மருத்துவ பட்டயப் படிப்புவரை செல்லக்கூடாது என்பதே நமது கவலை. இந்த பட்டய படிப்பில் (1) சித்த மருந்தறிவியல் அறிமுகம், (2) மருந்தியல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துகளின் தரநிர்ணயம் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடங்களை மட்டுமே கொண்ட கல்வித்திட்டம் மருத்துவ கல்வி ஆகிவிடாது.
மருத்துவ கல்வியில் உடற் செயலியல், நோய்க்குறி ஆய்வியல், மருந்தியல் ஆகிய அனைத்து பாடங்களும் அடங்கும். சித்த மருந்துகளைப்பற்றி மட்டுமே பயிற்றுவிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்திற்கு சித்த மருந்தாளுனர் (SIDDHA PHARMACY) போன்ற பெயரில் தமிழ்ப்பலைக்கழகம் சான்றிதழோ, பட்டயமோ வழங்குவதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை. அதையும் இந்திய மருந்தாளுனர்களுக்கான கவுன்சிலில் (Pharmacy Council of India) பதிவு செய்து வேலைவாய்ப்புக்கான முழுமையான தகுதியாக வழங்கலாம்.


சித்த மருத்தவத்துறையில் தற்போதைய சித்த மருத்துவ (Bachelor of Siddha Medicine and Surgery) இளங்கலை பட்டப்படிப்பு, சில காலம் முன்பு வரை Bachelor of Indian Medicine என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரை ஒட்டியுள்ள Diploma in Siddha Medicine என்ற பெயர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த பட்டயப்படிப்பில் படிப்பவர்கள் மருத்துவம் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


ஏழாவது தலைமுறையாக சித்தமருத்துவம் செய்வதாக கூறி ஒரு சிறுவனையும் மருத்துவராக முன்னிலைப்படுத்தும் நிறுவனங்களும்,. அதையும் கேள்வி கேட்காமல் விளம்பரம் செய்யும் பத்திரிகைகளும் உள்ள நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் Diploma in Siddha Medicine கல்வி பெரும் கேடுகளையே விளைவிக்கும்.

இந்த விவகாரம் குறித்த ஆய்வில் நாம் ஈடுபட்டபோது, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களும் வழங்கப்படுவதாக தெரியவந்தது.
இந்தப் பட்டங்களையாவது இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழுவோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமோ அங்கீகரித்துள்ளதா எனப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த பட்டங்களை அங்கீகரிக்கவோ, இந்த பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் அல்லது விரிவுரையாளராக பணியில் அமர்த்தவோ மேற்கண்ட அமைப்புகள் இதுவரை முன்வரவில்லை. எனவே இந்த பட்டங்களும் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டதைப்போன்ற பொருளற்ற அலங்கார பட்டங்களாகவே உள்ளதாக தோன்றுகிறது.



எனவே இந்த ஆய்வு முனைவர் மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.



05-09-2007
சென்னை


அனுப்புனர்,


பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.

பெறுனர்,


பதிவாளர்,
(பொதுத்தகவல் அதிகாரி)
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.

ஐயா,

பொருள்: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 6ன் படி
தகவல் கோருதல்.
---
தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ துறையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெறுவதாக அறிகிறேன். ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய பட்டங்களுக்கான ஆய்வுகளும் நடைபெறுவதாக அறிகிறேன். இதுகுறித்த கீழ்க்கண்ட தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?

2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?


3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?

4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?

5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?

அரசுத்துறை அலுவலகங்களில் பொதுத்தகவல் அலுவலர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும், அது குறித்து இணையதளம் உள்ளிட்ட வழிகளில் பொது அறிவிப்புகள் கொடுக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 4 வலியுறுத்துகிறது. எனினும் தங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அலுவலர் குறித்த அறிவிப்பு இல்லை என்பதால், பதிவாளரான தங்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது.

மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.

நன்றி.




தங்கள் உண்மையுள்ள,



(பி. சுந்தரராஜன்)






இந்த மனு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வினைகளும் பதிவு செய்யப்படும்.


-மக்கள் சட்டம் குழு




3 comments:

Anonymous said...

சித்த மருத்துவ துறையில் போலிகள் அதிகரிப்பதும், அதற்கு ஒரு பல்கலைக்கழகமே துணைபோவதும் வருந்தத்தக்க செய்திதான்.

ஆனால், ஆங்கில மருத்துவர்களின் கொள்ளை லாபத்தை அடிப்படையாக கொண்ட வணிகப்போக்கும், தகுதி பெற்ற சித்த மருத்துவர்களும் ஆங்கில மருத்துவர்களுக்கு இணையாக நடந்து கொள்ளும் போக்குமே - போலி மருத்துவர்கள்பால் மக்களை தள்ளுகிறது என்பதை மறுக்க முடியாது.

மக்கள் நலனை முன்னிறுத்திய சேவைத்துறையாக மருத்துவத்துறை மாறினால் மட்டுமே இதுபோன்ற சமூக அவலங்களை தவிர்க்க முடியும்.

-நான் அவன் இல்லை

Anonymous said...

ம்ம்ம்...ஒரு முடிவோட இருக்கீங்கன்னு தெரியுது. நடத்துங்க.

மாசிலா said...

உங்களது சமூக நலனுக்காக போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும். இடைவிடாத முயற்சியுடன் போராட வாழ்த்துகிறேன்.

இந்தியாவில் ஒரு தனிமனிதன் நினைத்தால், கேடு விளைவிக்கும் எந்த பெரிய அமைப்புகளையும் கூட சுக்கு நூறாக உடைத்து நியாயம் கேட்க முடியும் என்பதை உங்களை போன்றவர்களின் செயல்களில் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என பொது உலகிற்கு தெரியவரும்.

நன்றி.

நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!