நக்சல்பாரிகள் பிறக்கும்போதே ஆயுதங்களோடு பிறந்ததுபோலவும், அவர்களை அவ்வாறு உருவாக்கியதில் தங்களுக்கு எந்த தொடர்புமே இல்லை என்பது போலவும் அனைத்து துறையினரும் ஒதுங்கியபோது, மனிதாபிமானமுள்ள வழக்கறிஞராக அந்த நக்சல்பாரிகளுக்காக வாதாடியவர் பி.வி. பக்தவச்சலம்(71).
பி.வி.பக்தவச்சலம் 1936ம் ஆண்டு அக்டோபர் 13ந் தேதி வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பொன்னேரியில் பிறந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான மோகன் குமாரமங்கலத்திடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர் திருப்பத்தூரில் வழக்கறிஞராக தொழில் புரிந்தார். பீடி தொழிலாளர்கள், டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவராக பணியாற்றினார்.
1971/72 ஆம் ஆண்டுகளில் நிலமீட்சி போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். மிசா சட்டத்தின் கீழும் அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
75ஆம் ஆண்டு மக்கள் உரிமை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அகில இந்திய அளவில் மனித உரிமை மாநாட்டையும் புதுடெல்லியில் நடத்தினார். 78ஆம் ஆண்டுகளில் வட ஆற்காட்டில் நக்சலைட்டுகள் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து அவர் இயக்கம் நடத்தினார்.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகளாக இருந்த நூற்றுக் கணக்கானோரை வழக்கு மூலம் மீட்டார். அவருடைய இந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் கொத்தடிமை மீட்புக் குழுவில் உயர்நீதிமன்றத்தின் சார்பில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட போது, அவருக்கு ஆதரவாக வழக்காட உலகம் முழுவதும் வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்த போது, இந்தியாவின் சார்பில் பி.வி.பக்தவச்சலம் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நக்சல்பாரி இயக்கத்தில் பங்கேற்று செயல்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி வந்தார். 1965 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர் 1975 இல் மக்கள் உரிமைக் கழகத்தில் தீவிரப் பங்கெடுத்து செயல்பட்டார்.
1980 இல் காவல்துறையுடன் மோதல் என்று இளைஞர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்ததால், தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து ஈழத் தமிழர் அகதிகள் மீது அன்றைய ஜெயலலிதா ஆட்சி கட்டவிழ்த்துவிட்ட உரிமை பறிப்புகளை எதிர்த்ததற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவரைவிட தகுதியும், திறமையும் குறைந்தவர்கள் எல்லாம் அரசு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர், நீதிபதி உள்ளிட்ட பல உயர்வுகளை பெற்றபோதும் அதுகுறித்து சிறிதும் கவலையின்றி “மக்கள் பணிக்கு அந்த பதவிகளால் எந்த பயனும் இல்லை” என்பதை தமது சேவைகள் மூலம் நிரூபித்தார்.
மனித உரிமை – சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தார். இந்த அமைப்பின் சார்பில் 2007 ஜனவரி மாதத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு நடத்திய விவாத அரங்கத்தில் கலந்து கொண்டு வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன் எழுதிய, "மாறும் சட்டங்களும் பறிபோகும் விவசாயிகளின் உரிமைகளும்" என்ற நூலை வெளியிட்டார்.
மார்ச் மாதம் 18ம் தேதி நுகர்வோர் தினத்தை முன்னிட்டு "சமூக-பொருளாதார நீதிக்கான மையம்" நடத்திய "கிரெடிட் கார்டு பயன்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கான பொதுவிசாரணை"யிலும் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை கூறினார். வழக்கறிஞர் சுந்தரராஜன் எழுதிய, "கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பு சட்டங்கள்" என்ற நூலை வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தினார்.
வயது முதிர்ந்த காலத்திலும் மக்கள்பணியில் அயராது ஈடுபட்ட அவர் 02-09-2007 மாலை இயற்கை எய்தினார். அவரது மறைவால் ஏற்படும் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் விட்டுச்சென்ற பணிகள் ஏராளம் இருப்பதால் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து செயல்பட மனித உரிமை-சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு உறுதி ஏற்கிறது.
5 comments:
அன்னாரின் இழப்பையிட்டு நான் மனம் வருந்துகிறேன்!அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.
எங்கள் ஊரான திருப்பத்தூரைச் சார்ந்தவர். குடும்பம் அறிந்த நண்பர். அன்னாருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும் அனுதாபங்களும். - பி.கே. சிவகுமார்
மக்கள் உரிமைப் போராளி பக்தவச்சலம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஒரு செயலூக்கமிக்க வழக்கறிஞராக.. தனது வாழ்வை மக்களின் அடிப்படை சட்ட உரிமைகளுக்காகவும் சாமான்ய மனிதனுக்கும் சட்ட பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஜனநாயகப்போராளியாக இருந்தவர். எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணம் அவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மனித உரிமைப்போராளி திருமிகு பொ.வே.பக்தவச்சலம் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது முன்னிலையில் மனித உரிமை-சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு நடத்திய உழவர் திருநாள் விவாத அரங்கம் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை குறித்த செய்திகளையும் பதிவுகளாக எதிர்பார்க்கிறோம்.
Hi ggreat reading your blog
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!