Tuesday, September 4, 2007

கிரெடிட் கார்டு - தமிழக அரசுத்துறை நடத்திய (கருத்தரங்க) கேலிக்கூத்து.

தமிழ் நாடு நுகர் பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் கடந்த 29-08-2007 அன்று, கடன் அட்டை: நுகர்வோருக்கு பயனா? அல்லது சுமையா? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு தெரிவிக்க உருப்படியான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. சில தினசரிகளின் இன்றைய நிகழ்ச்சி பகுதியில் இலவசமாக செய்தி வெளியிடப்பட்டதைத்தவிர. சென்னையில் தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் சொந்தமான பல இடங்கள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள மெரினா டவர்ஸ் என்ற தனியார் ஓட்டலின் குளிரூட்டப்பட்ட அரங்கில் நடந்தது.


அரங்கில் நுழைந்த உடன் பெயர் பதிவு செய்தவுடன், கையில் பிளாஸ்டிக் பைல் ஒன்று வழங்கப்பட்டது. அதில் கிரெடிட் கார்டு சேவை குறித்த நுகர்வோர் அமைப்புகளின் புகார்கள், அவற்றை களைய வேண்டிய முறைகள், வாடிக்கையாளருக்கான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை கூறியபின் ஆலோசனை செய்து தயாரிக்க வேண்டிய பரிந்துரைகள் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டது யாருக்கும் முரண்பாடாக தெரியவில்லை.


அந்த பைலில், கிரெடிட் கார்டு வணிகம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை (2005ம் வருடத்தியது) ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதே ரிசர்வ் வங்கி 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இதைவிட மேம்பட்ட சுற்றறிக்கைகளை முதன்மை சுற்றறிக்கை என்ற பெயரில் வெளியிட்டது பற்றியோ, அது ஏன் வழங்கப்படவில்லை? என்றோ ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உட்பட யாரும் கேள்வி எழுப்பவில்லை.


அரங்கம் ஓரளவு நிறைந்தே இருந்தது. சரியான விளம்பரம் இல்லாமலே இவ்வளவு கூட்டமா? என்று விசாரித்தபோதுதான், தமிழ் நாடு நுகர் பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் பணியாளர்களால் அரங்கு நிறைந்திருந்த ரகசியம் தெரியவந்தது.


முதலில் சிறப்புரையாற்ற வந்த ரிசர்வங்கியின் மக்கள் குறைகேட்பு அதிகாரி (ஆம்புட்ஸ்மேன்) ஹர்மேஷ் கண்ணா, “கடன்அட்டை குறித்தான ரிசர்வங்கியின் வழிகாட்டுதல், மக்கள் குறைகேட்பு ஆணையத்தில் உள்ள கடன் அட்டை குறித்தான வழக்குகள்” போன்றவற்றை குறிப்பிட்டு பேசினார். பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது போலவே, “கிரெடிட் கார்டு வணிகம் குறித்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலை மீறும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ‘உறுதிபட’ தெரிவித்தார். ஆனால் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்ட அம்சங்களில் ஒன்றைக்கூட தனியார் வங்கிகள் அமல்படுத்தவில்லை என்பதையும், அதற்காக ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட மறந்து விட்டார்.

மிகக்குறைந்த அளவிலேயே நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள், வங்கிகளின் பிரநிதிகளை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர். அவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுக்கான வழியை கூறமுடியாமல் விழி பிதுங்கிய வங்கிகளின் பிரநிதிகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகக்கழக ஆணையர் விஜயராகவன், தாமாக முன்வந்து மக்களை சமாதானப்படுத்தி காப்பாற்றினார். சிட்டி பேங்க் (CITI BANK) சார்பாக வந்திருந்த பட்டிமன்ற புகழ் பாரதிபாஸ்கர், வங்கி பணியாளர்கள் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போடும் மக்களின் அறிவின்மையே பிரச்சனைகளுக்கு காரணம் என வங்கிகளுக்கு வக்காலத்து வாங்கினார். வந்திருந்த எல்லா வங்கி பிரநிதிகளும் தங்களுடைய இணையதளத்தில் எல்லா தகவல்களும் உள்ளது என ஒன்று போல (பொய்) கூறினர்.


ஆங்காங்கே சில நுகர்வோர் அமைப்புகளும் தென்பட்டன. அரசின் சிறப்பு அழைப்பால் வந்திருந்த இவர்கள், “ஏன் வங்கிகள் கடன்அட்டை குறித்தான ரிசர்வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை” ? என்னும் கேள்வியை தவிர்த்து மற்றதெல்லாம் கேட்டனர்.


முதியவர் ஒருவர் பேசும்போது, எல்லா வங்கிகளும் நுகர்வோர்களை கடனாளிகளாக மாற்றவே விரும்புகின்றன என உண்மையை போட்டு உடைத்தது சற்று ஆறுதலாக இருந்தது.


இறுதியாக மேடையெறிய, கடன் அட்டை தொடர்பாக வங்கிகளுக்கு எதிராக பொது நல வழக்கை தொடர்ந்துள்ள நாம் மேடையேறி, “கடன் அட்டை பொறுத்தவரை வங்கிகளே மக்களை மோசடி செய்கின்றன என்பதையும், நுகர்வோர் தங்கள் குறைகளை கூற எந்த வங்கியிலும் குறைதீர்ப்பு அமைப்புகள் இல்லை என்பதையும், கடன் வசூலில் சட்டத்திற்கு உட்பட்டு எந்த வங்கிகளும் செயல்படுவதில்லை என்பதையும், பிரச்சனைகளுக்கான மூலக்காரணங்களையும்” கூறவே பேச்சை விரைவில் முடிக்கச் சொல்லி துண்டுசீட்டு வந்தது.

இந்த கருத்தரங்கிற்கு பின் இயற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் காலையிலேயே அச்சிடப்பட்டு நமக்கு தரப்பட்டுவிட்டதால் நாம் அரங்கை விட்டு வெளியேறினோம்.


மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுத்துறை ஒன்று, மக்களுடைய பிரசினை குறித்து - மக்களுக்கு உரிய முறையில் தகவல் தராமல், தனியார் ஓட்டல் ஒன்றில் கருத்தரங்கு நடத்தியுள்ளது. இது குறித்து எந்த பத்திரிகையிலும் கேள்வி எழுப்பப்படவில்லை. வாழ்க ஜனநாயகம்! வளர்க பத்திரிகை சுதந்திரம்!!

-மக்கள் சட்டம் குழு

3 comments:

வெங்கட்ராமன் said...

*************************************
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுத்துறை ஒன்று, மக்களுடைய பிரசினை குறித்து - மக்களுக்கு உரிய முறையில் தகவல் தராமல், தனியார் ஓட்டல் ஒன்றில் கருத்தரங்கு நடத்தியுள்ளது. இது குறித்து எந்த பத்திரிகையிலும் கேள்வி எழுப்பப்படவில்லை. வாழ்க ஜனநாயகம்! வளர்க பத்திரிகை சுதந்திரம்!!
*************************************

சபாஷ்.

ஜயராமன் said...

அய்யா,

தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

இது குறித்து நான் முன்னமே அறியாததால் இதை இன்னும் விளம்பரப்படுத்த இயலவில்லை. நான் கடந்த பல வருஷங்களாக consumer_voice_india என்ற யாகூ குழுமம் ஒன்று ஆங்கிலத்தில் பிரபலாமாக நடத்தி வருகிறேன். அதில் பெரும்பான்மையான கிரெடிட் கார்ட் சம்பந்தப்பட்ட பல புகார்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில சில பிரமுகர்களின் தலையீட்டால் தீர்த்தும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து தங்கள் சேவையை மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். பதிவு இருந்தால் அதன் தொடர்பை வழங்கவும்.

நன்றி

அகராதி said...

வெங்கட்ராமன் said...
*************************************
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுத்துறை ஒன்று, மக்களுடைய பிரசினை குறித்து - மக்களுக்கு உரிய முறையில் தகவல் தராமல், தனியார் ஓட்டல் ஒன்றில் கருத்தரங்கு நடத்தியுள்ளது. இது குறித்து எந்த பத்திரிகையிலும் கேள்வி எழுப்பப்படவில்லை. வாழ்க ஜனநாயகம்! வளர்க பத்திரிகை சுதந்திரம்!!
*************************************

சபாஷ்.


ரிப்பீட்டேய்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!