தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் ஒரே ஆண்டில் சித்தமருத்துவம், "சமையல் கலைக்கல்லூரிகள்" மூலமாக கற்றுத்தர இருப்பதாக வந்த செய்தி நம்மை திகைப்பில் ஆழ்த்தியது.

சித்தமருத்துவம் என்றாலே காட்டுவாசிகளின் மருத்துவமுறை என்று சிலர் கருதி புறக்கணிக்கும் நிலை பரவலாக உள்ளது. வேறு சிலரோ உரிய கல்வித்தகுதி இல்லாத நபர்களிடம் சிகிச்சை பெற்று பணத்தையும், உடல் நலத்தையும் இழக்கும் நிலையும் நிலவுகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் இன்னும் அதிக போலி மருத்துவர்கள் உருவாகிவிடக்கூடும் என்று அஞ்சினோம். எனவே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பும், ஆரம்பிக்க உள்ள சித்தமருத்துவ பட்டய படிப்பும் சட்டவிரோதம் என்று பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பினோம்.

இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வராத நிலையில், அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நாளேடுகளிலும், தொலைபேசி குறுந்தகவல் சேவை (SMS) யிலும் விளம்பரங்கள் அதிகரித்தன.

இந்நிலையில் வேறு வழியின்றி, உரிய அனுமதியின்றி தொடங்க உள்ள அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினோம். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. தனபாலன், இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழு ஆகிய அமைப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


சித்தமருத்துவத்தை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் கடந்த பல வருடங்களாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல், நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் செயலற்று உள்ளது.

இதன் விளைவாகவே தொலைக்காட்சிகளிலும், செய்தி பத்திரிகைகள், நாளேடுகளிலும் உரிய கல்வித்தகுதி பெறாத பல போலி மருத்துவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகின்றனர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஊடகங்கள், பத்திரிகை சுதந்திரம் பற்றி உரிமையுடன் பேசும் பத்திரிகை ஆசிரியர்கள், சமூகப்பொறுப்போ - அடிப்படை சட்ட அறிவோ இன்றி இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். 

அவற்றில் சில விளம்பரங்கள், சாமானியரின் சாதாரண அறிவால் கூட ஏற்க முடியாதவை. கீழே உள்ள விளம்பரத்தில் 7 தலைமுறைகளாக வைத்தியம் செய்து வருவதாக ஒரு குடும்பம் ஏழாவது தலைமுறை வைத்தியராக பச்சிளம் பாலகன் ஒருவன் படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த சிறுவன் வைத்தியம் பார்ப்பது உண்மை என்றால் அது பகுத்தறிவுக்கும், மருத்துவ நெறிமுறைகளுக்கும், சட்டத்திற்கும் எதிரானது.


இந்த சின்ன விஷயத்தைக்கூட ஆராயாமல் ஏறக்குறைய அனைத்து பத்திரிகைகளும் இந்த விளம்பரத்தை வெளியிட்டு வருகின்றன.

கொள்ளை லாபமே குறிக்கோளாக உள்ள இந்த போலி மருத்துவர்களிடமோ, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அதிபர்/ஆசிரியர்களிடமோ இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இது போன்ற சமூக அவலங்களை அகற்ற உதவும்.
-மக்கள் சட்டம் குழு