Thursday, December 10, 2009

தனியாருக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்!

ஒரு நாட்டின் கொள்கைகள் அந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல கொள்கைகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.

இந்தியாவின் அணுசக்தி வரலாறு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்குகிறது. சர். சி. வி. ராமன், ஜகதீஸ சந்திரபோஸ், மெஹ்நாத் ஸாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னோடிகள். பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்-ன் முதல் இந்திய இயக்குநராக சர். சி. வி. ராமன் பதவி வகித்தார். மெஹ்நாத் ஸாகா, கொல்கத்தாவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் பிஃசிக்ஸ் என்ற அமைப்பை நிறுவினார். இவரது மாணவரான நாக் சவுத்ரி 1942ம் ஆண்டில், அணுக்கருவை பிளக்க உதவும் கருவியான சைக்ளோட்ரானை இந்தியாவிற்கு முதன்முதலாக கொண்டு வந்தார்.

இந்த முயற்சிகள் அனைத்திற்கு பின்புலமாக இருந்தவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. இவர் இந்தியாவின் பெருமுதலாளிகளுள் ஒருவரான ஜே.ஆர்.டி. டாடாவின் சகோதரர் மகன்.

இவருடைய தலைமையில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்திய அணுசக்தி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகள் அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆணையம் கேட்டுக்கொண்டபடி 1954ம் ஆண்டில் இந்திய அணுசக்தித்துறை நிர்மாணிக்கப்பட்டது.

முதல் அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டு 10வது ஆண்டில் அதே ஆணையம் மேலும் கூடுதல் அதிகாரங்களுடன் இரண்டாவது அணுசக்தி ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் மீண்டும் டாக்டர் ஹோமி ஜே. பாபா-வே பதவி ஏற்றார்.

இவர் பிரதமர் நேருவுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். வேறு யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மறுக்க தலைவருக்கு முழு உரிமை உண்டு. இந்த ஆணையம், தனக்கு தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.

இத்தகைய ஜனநாயகத்தன்மை வாய்ந்த இந்திய அணுசக்தி ஆணையத்தில் தலைவரான டாக்டர் ஹோமி ஜே.பாபாவின் உறவினரும், இந்தியாவின் பெருமுதலாளிகளில் முதன்மையானவருமான ஜே.ஆர்.டி. டாடா இந்திய அணுசக்தி ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்திய அணுசக்தி சட்டம்

இந்தியாவின் முதல் அணுசக்தி சட்டம் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டில் அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய அணுசக்தி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் இந்திய அணுசக்தி ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

சில உதாரணங்களை பார்ப்போம்...

அணுசக்தி சட்டத்தின் பிரிவு 3 (சி) தடை செய்யப்பட்ட தகவல்களைப் பற்றிக்கூறுகிறது. அணுசக்தி ஆணையத்தால் முன்னரே வெளியிடப்பட்ட அல்லது பதிப்பிக்கப்பட்ட தகவல்களைத்தவிர

(1) கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த இடம், தரம் மற்றும் அளவு

(2) அந்தப் பொருட்களை தயாரிக்கும் அல்லது பயன்படுத்தும் முறை

(3) ஐசோடோப்புகளையோ அல்லது வேறெந்த பொரு ளையோ தயாரிப்பதற்கு - பயன்படுத்துவதற்கான கோட்பாட்டு முறை, வடிவம், கட்டமைப்பு மற்றும் இயக்கம் குறித்த தகவல்கள்

(4) அணு உலைகள் குறித்த கோட்பாடுகள், வடிவம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த தகவல்கள்

(5) மேற்கூறப்பட்ட அம்சங்களிலிருந்து பெறப்படும், ஆய்வு செய்யபடும் தகவல்கள்

.........ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்ட தகவல்களாகும்.

அணுசக்தி சட்டத்தின் பிரிவு 18 தகவல் வெளிப்படுவதை தடுப்பது குறித்து கூறுகிறது.

18. தகவல் வெளிப்படுவதை தடுத்தல்

(1) மத்திய அரசு கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்த ஆவணங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், திட்ட வரைபடங்கள், மாதிரிகள் ஆகியவை வெளியாவதை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்

(a) அணுசக்தியை உற்பத்தி செய்தல், மேம்படுத்தல், பயன்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடும், ஈடுபட திட்டமிட்டுள்ள அமைப்புகள், அல்லது

(b) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகள் தேவைகள் மற்றும் செயல்முறைகள், அல்லது

(c) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகளின் இயங்குமுறைகள்

(2) எந்த ஒரு நபரும் கீழ்க்கண்டவற்றை செய்யக்கூடாது.

(a)மேற்கூறப்பட்ட 18ம் பிரிவின் முதல் துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள தகவல்களை பெறுவதற்கோ, பெற முயற்சிக்கவோ, அதனை வெளிப்படுத்தவோ கூடாது.

(b) இந்த சட்டத்தின்படி பணியாற்றுபவரோ, வேறு எந்த செயல்களை செய்பவரோ மத்திய அரசின் உத்தரவின்றி மேற்கூறப்பட்டவை தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.

இந்திய அணுசக்தி சட்டத்தின் பிரிவு 24 மேற்கூறிய குற்றங்களை செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று கூறுகிறது.

மேலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கவும், அணுசக்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை பதிவு செய்யவும் தடைகள் இருந்தன. இவ்வாறு மத்திய அரசுக்கும், அதன் அதிகார மையங்களுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை கொடுத்த இந்திய அணுசக்தி சட்டம், இந்திய மக்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அணுசக்தி திட்டங்கள் குறித்த எந்த தகவலையும் பெற முடியாத நிலையிலேயே வைத்திருந்தது. வேறு வகையில் இந்த தகவலை பெறுவதையும் கடும் குற்றமாக நிர்ணயித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்க வழிவகுத்த இந்திய அணு சக்தி சட்டம், 1962-ஐ மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

குறிப்பாக இந்திய தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry), நாட்டின் மிக முக்கியமான அணுசக்தி திட்டத்தில் தனியார் துறை பங்கேற்பதற்கு தற்போதைய அணுசக்தி சட்டம் பெருந்தடையாக இருப்பதாகவும், எனவே அந்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என்பதும், இந்தியக்கூட்டாளிகளின் மூலம் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பிரபல அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா தலைமையில், அணு சக்தி சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு 1997ல் அமைக்கப்பட்டது. இந்த குழு 1998ம் ஆண்டில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அணுசக்தி சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து பணியாற்றி வருகிறது. டாடா, ரிலையன்ஸ், எல் அன்ட் ட்டி போன்ற இந்திய நிறுவனங்களும், பிரான்ஸ் நாட்டின் அரெவா போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் இந்திய அணுசக்தி துறையில் படிப்படியாக பங்கேற்க வழியேற்படுத்துவற்கே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.

அதாவது தமது உழைப்பின் மூலம் அரசுக்கு வரி செலுத்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட விவரங்கள், இந்தியாவில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கும், அதன் இந்திய ஏஜென்ட்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இந்தியாவின் அணுசக்தி கொள்கைகளை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் இந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கப் போகின்றன.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட ரகசியங்கள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தவணைமுறையில், மலிவு விலையில் தாரை வார்க்கப்படவிருக்கிறது.

மின் ஆற்றலுக்கான ஒரே வழி அணு சக்திதான் என்று நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால் அரசின் செயல்பாடுகளும், சட்ட நடைமுறைகளும் அந்த கருத்தில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இந்நிலையில் தனியார் நிறுவனங்களை அணுசக்தித் துறையில் பங்கேற்ப அனுமதிப்பது மென்மேலும் கேள்விகளை எழுப்பினாலும் பதில் சொல்லத்தான் ஆளில்லை.

- சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

மரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்


மரபணு மாற்றுப் பயிர்களை நிலத்தில் பயிரிட்டு கள ஆய்வு செய்யும்போது மற்ற பயிர்களிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளிவிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் Aruna Rodrigues & others V/s Union of India என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மரபணு மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பாசில்லஸ் துரெஞ்சரிஸ் என்ற நச்சுத்தன்மை கொண்ட புரதத்தை தாவரத்தின் மரபணுவுக்குள் புகுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அருகாமைப் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் மற்றப் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக மரபணு மாசு பரவ வாய்ப்பிருப்பதால் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இப்படி மரபணுமாற்று பயிர்கள் மற்ற பயிர்களோடு கலப்பதால் நம் பாரம்பரிய பயிர் வகைகள் அதன் தன்மையை இழந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையும் மாசுபடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே மரபணுமாற்று பயிர்களை பிற பயிர்களிடம் இருந்து உரிய அளவில் பாதுகாப்பான தொலைவில் பயிரிடவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. ஆனால் மரபணுமாற்று தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்களும் கண்காணிப்பு அமைப்புகளும் அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியாகவே இருக்கிறது.
மரபணுமாற்று தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் அமைப்புகள்
மரபணுமாற்று தொழில் நுட்பத்தை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் மரபணு மாற்று உயிர்கள் உற்பத்தி - பயன்படுத்தல் - இறக்குமதி - ஏற்றுமதி - சேமித்தல் தொடர்பான விதிமுறைகள் (Rules for the Manufacture Use Import Export And Storage of Hazardous Micro-Organism and Genetic Engineered Organisms or Cell 19890), என்கிற சட்ட விதியை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உயிரியல் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அரசின் கீழாக இயங்கும் மரபணு மாற்று தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (Recombinant DNA Advisory Committee - RDAC).மரபணுமாற்று ஆராய்ச்சிகளை கண்காணிக்க மற்றும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப சீராய்வுக் குழு (Review Committee on Genetic Manipulation - RCGM). ஆராய்ச்சி நிறுவனங்களில் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் ஆய்வுமைய உயிரிப்பாதுகாப்புக் குழு (Institutional Bio-Safety Committee - IBSC). மரபணுமாற்று ஆராய்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கண்காணிக்கும் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee - GEAC). மாநில அளவில் இயங்கக் கூடிய மாநில உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு (State Biotechnology Co-Ordination Committee -SBCC) மற்றும் மாவட்ட அளவில் இயங்கூடிய மாவட்ட உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழு. இந்த இரண்டு குழு க்களும் மாநில அரசின் கீழ் இயங்குபவை.
மரபணுமாற்று ஆராய்ச்சிக்கான விதிமுறைகள்
மரபணுமாற்று பயிர்கள் ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்யப்படுவது முதல், திறந்த வெளியில் பயிர் செய்யப்படும் வரை பின்பற்ற வேண்டிய விதிகளும் மேற்கூறிய அமைப்புகளால் வகுக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி கூடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள் (Recombinant DNA Safety Guidelines, 1990)மரபணுமாற்று பயிர்களின் நச்சுத் தன்மையை கண்டறியும் சோதனையில் பின்பற்ற வேண்டிய மரபணுத் தாவரங்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை மதிப்பிடுதல் விதிமுறைகள் (Revised Guidelines for Research in Transgenic Plants & Guidelines for Toxicity and Allergenicity Evaluation of Transgenic Seeds, Plants and Plant Parts, 1998) மரபணுமாற்று பயிர்களை திறந்தவெளியில் அல்லாமல் மூடிய பாதுகாப்பான ஆய்வு கூடத்தில் சோதனை முறையாக பயிர் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய மரபணு களப்பரிசோதனையை நெறிப்படுத்தும் விதிமுறைகள் (Standard Operating Procedures (SOPs) for Confined Field Trials of Regulated, GE Plants), மரபணுமாற்று பயிர்களின் இருந்து பெறப்படும் உணவுகளை ஆராயும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் (Guidelines for the Safety Assessment of Foods Derived from Genetically Engineered Plants), மரபணுமாற்று உணவுக்கான பொதுவான ஆய்வு முறைகள்(Protocols for Food and Feed Safety Assessment of GE crops) போன்றவை மேற்குறிப்பிட்ட குழுக்களால் இயற்றப்பட்டுள்ளன.
மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கண்காணிக்க மேற்கூறப்பட்ட அதிகார அமைப்புகளும், விதிமுறைகளும் இருந்தாலும் அவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் அனுமதித்தே தீருவது என்று அரசு முடிவு மேற்கொண்டுள்ளதால் இந்த அமைப்புகள் அனைத்தும் அரசின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப துறையின் முன்னோடியும், உச்ச நீதிமன்றத்தால் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவில் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணுமாற்று பயிர்கள் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் ஆய்வறிக்கைகளை GEAC கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உணவு குறித்த கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி கேரளம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், தங்களுக்கு மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் தேவையில்லை என்று கூறியுள்ளன.
மரபணு மாற்றத்தொழில் நுட்பத்திற்கு அனுமதி வழங்குவதில், பலமுனை முடிவுகள் மேற்கொள்ளப்படுவதால் தேவையற்ற காலதாமதம் ஆவதாக கருதும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க ஒற்றை அதிகார அமைப்பு தேவை என்று வலியுறுத்தி வந்தன.
இதை ஏற்று மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராகவும் வழக்கம்போல் திருவாளர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களே நியமிக்கப்பட்டார். இக்குழுவின் பரிந்துரையின்படி, மரபணு மாற்று அங்கீகாரக்குழுவிற்கு பதிலாக தேசிய உயிர்த்தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (National Bio-technology Regulatory Authority) என்று புதிய அதிகார மையம் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட ஒரு அறிவியல் நிபுணர் இருப்பார். சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பே மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் உள்ளிட்ட உயிர்த்தொழில்நுட்ப விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும். இந்த முடிவு நாடு முழுவதற்கும் விதிவிலக்கில்லாமல் பொருந்தும். அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றே ஆகவேண்டும். இந்த அமைப்பின் முடிவை ஏற்க முடியாது எந்த மாநிலமும் புறக்கணிக்க முடியாது. இந்த முடிவுகளில் மத்திய சுகாதார அமைச்சகமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோகூட தலையிட முடியாது. மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தோ, மரபணு மாற்றம் தொடர்பான சூழல் சீர்கேட்டிற்கு காரணமான வர்த்தக நிறுவனங்களை விசாரிக்கும் அதிகாரமோ இந்த அமைப்பிற்கு இல்லை.
- வழக்குரைஞர் மு.வெற்றிச்செல்வன்

Sunday, October 18, 2009

நீதிமன்றத்தில் “மை லார்ட்” என்று சொல்ல வேண்டாம்! -நீதிபதி சந்துரு

நீதிமன்றங்கள் என்றாலே கருப்பு கோட்டும், கவுனும் அணிந்த வழக்ககறிஞர்கள் "மை லார்ட்" என்று கூவும் காட்சியே நமது நினைவுக்கு வரும். இவ்வாறுதான் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட காட்சி அல்ல.

ஒரு வாக்கியத்தை பேசுவதற்குள் ஏழெட்டுமுறை "மைலார்ட்" என்று சொல்லும் வழக்கறிஞர்களை உயர்நீதிமன்றத்தில் பார்க்கலாம்.

"லார்ட்" என்பது இங்கிலாந்து நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். பிரபுக்கள் நீதி வழங்கியபோது உருவாக்கப்பட்ட நடைமுறை. நீதி என்பது குடிமக்களுக்கு பிரபுக்கள் வழங்கும் சலுகையாக கருதப்பட்ட காலத்தில் உருவாகிய பழக்கம். ஆனால் தற்போது நீதி என்பது சலுகையாக அல்லாமல், உரிமையாக மாறியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று அந்த சுதந்திரத்திற்கு பொன்விழா கொண்டாடும் நேரத்தில் சுயமரியாதை கொண்ட சில வழக்கறிஞர்கள், நீதிபதிகளை "மை லார்ட்" என்று அழைக்கும் அடிமைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய வழக்குரைஞர் மன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை "யுவர் ஹானர்" அல்லது "ஹானரபிள் கோர்ட்" என்று அழைத்தால் போதும்; "மை லார்ட்" என்று அழைக்கத் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை, "ஐயா" என்று அழைத்தால் போதும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இதை செயல்படுத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பலகாலமாக மைலார்ட் என்று சொல்லிப்பழகியவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதை மாற்ற விரும்பிய இளம் வழக்கறிஞர்களுக்கோ நடைமுறையில் பெரும் தயக்கம். எதிர் தரப்பில் இருப்பவர்கள் "மை லார்ட்" என்று அழைக்கும்போது தாம் அவ்வாறு அழைக்காவிட்டால் நீதிபதி என்ன நினைத்துக் கொள்வாரோ? தீர்ப்பு என்னவாகுமோ? நமது கருத்துகளை நிலைநிறுத்துவதற்காக கட்சிக்காரரின் நலனை பலி கொடுப்பதா? என்பது போன்ற குழப்பங்கள் இருப்பதால் யாரும் இதனை செயல்படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில்தான் நீதிபதி சந்துரு கடந்த 15-10-2009 அன்று ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். அவரது நீதிமன்றத்தில் யாரும் தம்மை 'மை லார்ட்' என்று அழைக்கக்கூடாது என்று அறிவிக்கையை தமது நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

அனைவரும் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது. இதை மற்ற நீதிபதிகளும் பின்பற்றினால் நீதித்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.

இந்திய வழக்கறிஞர்கள் அணியும் சீருடையும்கூட இங்கிலாந்து நீதித்துறையின் வழக்கம்தான். இன்று இங்கிலாந்திலும், இங்கிலாந்திடம் அடிமையாக இருந்த நாடுகளிலும் மட்டுமே கருப்பு கோட் மற்றும் கவுனை வழக்கறிஞர்கள் அணியும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மற்ற நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. அடிமைச்சின்னமாக உள்ள இந்த சீருடையை புறக்கணிப்பது குறித்தும் விவாதங்கள் உருவாக வேண்டும்.

இதேபோல நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும்போது நீதி வேண்டி பிரார்த்திப்பதாக மனு கொடுக்கப்படுகிறது. உரிமைகளை கோருவதில் தவறில்லை. ஆனால் நீதி வழங்குமாறு பிரார்த்திக்க வேண்டும் என்பதை ஏற்கக்கூடாது. உரிமைகளை கோருவதும் ஒரு அடிப்படை உரிமையே. அதைக்கோருவதில் சுயமரியாதை இழக்கும் நிலை இருக்கக்கூடாது. நீதி என்பது அதை வழங்குவோரின் விருப்புரிமையாகவும் இருக்கக்கூடாது. எனவே இதற்கும் வேறு வார்த்தைகளை பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் உருவாக வேண்டும்.

இந்த விவாதங்களை சட்டத்துறையினர்தான் முன்னெடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியர்களின் இறையாண்மை குறித்து அக்கறை கொண்ட யாரும் இந்த விவாதங்களை அவர்களுக்கு வாய்ப்புள்ள களங்களில் உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் முன்வரவேண்டும்.

ஏனெனில் சட்டம் என்பது சட்டத்துறையினரும், வழக்கறிஞர்களும் மட்டும் தொடர்புடைய ஒரு அம்சம் அல்ல. அது அவ்வாறு இருக்கவும் கூடாது.

-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Saturday, October 10, 2009

கிராம நீதிமன்றங்கள் தேவைதானா? -ஒரு பார்வை


விரைவான நீதி என்பது அடிப்படையான மனித உரிமைகளில் முக்கியமானது. காலத்தில் வழங்காமல் தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பது புகழ்வாய்ந்த சட்ட முதுமொழி. இந்தியாவின் நீதித்துறை என்பது ஆமை வேகத்தில் பயணி்ப்பது உலகறிந்த ரகசியம்தான்.
.
விரைவான நீதியை வழங்கச் செய்வதில் அரசு, நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய நான்கு தரப்பினரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
.
நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப்பணியிடங்களை நிரப்புவதும், அதிகரிப்பதுமே வழக்குகளை குவியவிடாமல் தடு்க்கும் என்பது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்ட கருத்து. ஆனால், இந்த கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசோ, நீதிமன்ற நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சொல்லாமலே புரியும்.
.
இந்த நிலையில், விரைவான நீதியை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, கிராம நீதிமன்றங்களை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்த செலவு, விரைவான நீதி என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
.
இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்த தண்டனை விதிக்கத்தக்க குற்றவியல் வழக்குகளையும், அதற்கு சமமான சிவில் வழக்குகளையும் இந்த நீதிமன்றங்கள் விசாரிக்கும். இந்த நீதிமன்றங்கள் கிராமப் பஞ்சாயத்து அளவிலும், தேவைப்படும் இடங்களில் நடமாடும் நீதிமன்றமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
.
முதல்வகுப்பு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் அந்தஸ்துள்ள கிராம நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். சிவில் வழக்குகளில் வழக்கின் இரு தரப்பினரும் பேசித்தீர்க்கும் இசைவுத்தீர்ப்பு முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
.
இந்த கிராம நீதிமன்றங்களின் ஆள்வரைக்குள் வரக்கூடிய வழக்குகள் வேறு நீதிமன்றங்களில் இருந்தால், அந்த வழக்குகளை உரிய அறிவிப்புக்கு பின்னர் இந்த கிராம நீதிமன்றங்களுக்கு மாற்றி உத்தரவிடப்படும்.
.
இதன் மூலம் நீதிமன்றங்களி்ல் வழக்குகள் தேங்கி கிடக்கும் நிலை மாறும் என்று அரசு நம்புகிறது.
.
ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் பிரசினைகள் இருக்கும் நிலையில், அந்த பிரசினைகளை திருத்தியமைப்பதைவிட புதிய அமைப்புகளை நிர்மாணிப்பதில் ஆட்சித்தலைமைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த புதிய அமைப்புகள் சீரிய முறையில் செயல்படுமா என்று ஆய்வு செய்வதைவிட, புதிய அமைப்புகள் நிர்மாணிப்பதை தங்கள் ஆட்சியின் சாதனைகளாக விளம்பரம் செய்வதில் ஆட்சியாளர்கள் காட்டும் அதீத ஆர்வமே இதற்கு காரணம்.
.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப்புகள் புதிய திட்டங்களை வடிவமைக்கும்போது பங்காளிகளாக கருத வேண்டிய பொதுமக்களை பயனாளிகளாக சுருக்குவதும், அரசின் கடமையாகவும், மக்களின் உரிமையாகவும் கருதவேண்டிய அம்சங்களை சலுகையாகவும் செய்யும் போக்கு நிலவுகிறது. எனவே எந்த பிரச்சினையிலும் (உலக வங்கி போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக) யாரையும் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக திட்டங்களை அறிவிக்கின்றன. நீதித்துறையின் முக்கிய இயங்கு சக்திகளான வழக்குரைஞர் சமூகத்தை ஆலோசிப்பது குறித்து இந்திய அரசோ, சட்ட அமைச்சகமோ யோசிப்பதே இல்லை.
.
நீதிமன்ற நிர்வாகம் என்பது நீதிபதிகளின் கையில் உள்ளதாலும், அவர்களின் கருத்து என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாததாலும் இந்த பிரசினையில் அவர்களின் நிலை கருத்து கூற முடியவில்லை.
.
வழக்கறிஞர்கள் மத்தியில் கிராம நீதிமன்றங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பே நிலவுகிறது. கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்துவோருக்கு எதிரான வழக்குகளில், ஆதிக்கசக்தியினருக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படும் நிலையில் நீதித்துறை அலுவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய சாட்சிச் சட்டத்தை உறுதியாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஆதிக்க சக்தியினருக்கு சாதகமாக பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதைவிட முக்கியமாக இந்த கிராம நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக ஒருமுறை மட்டுமே மேல்முறையீடு செய்யலாம் என்ற வரையறை வழக்கிடும் மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
.
இதற்கு மாற்றாக வழக்கறிஞர்கள் தரப்பில், ஏற்கனவே உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப் பணியிடங்களை நிரப்பினாலே வழக்குகள் விரைவில் நடத்த முடியும் என்று கூறுகின்றனர். அந்த காலியிடங்களை நிரப்பாமல் அங்கு தேங்கியுள்ள வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றுவது என்பது நடைமுறையில் பயன்தராது: வழக்கு தேங்கி நிற்குமிடம் மாறுமே தவிர, வழக்கு முடிவுக்கு வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
.
இந்த கிராம நீதிமன்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற புறக்கணிப்பு என்ற வழக்கமான போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
.
எந்த நியாயமான காரணத்துக்காகவும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சமூகத்தின் எந்த பிரிவும் மருத்துவர்களை மன்னிக்காது. மருத்துவத்துறைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நீதித்துறையில் ஏற்கனவே ஏராளமான விடுமுறைகள் இருக்கும்போது, வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களும் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தும். எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
.
மேலும் சட்டத்துறையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மக்களை எவ்விதமாக பாதிக்கும் என்பதையும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துறைக்கும் பணியும் வழக்கறிஞர்களிடமே உள்ளது. ஆனால் வழக்கறிஞர்கள் இந்த அணுகுமுறையை இதுவரை உரிய முறையில் கையாண்டதில்லை.
.
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு பதிலாக வழக்கறிஞர் மன்றங்(BAR COUNCIL)களையும், வழக்கறிஞர் சங்கங்(BAR ASSOCIATION)களையும் வலுப்படுத்தி புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தும்போதும், புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தும்போதும் வழக்கறிஞர் சமூகத்திடம் அரசு அது குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுப்பதை நிர்பந்திக்கலாம்.
அரசியலிலும், ஆட்சித்துறையிலும் சட்டம் படித்தவர்கள் நிறைந்துள்ள இன்றைய நிலையில், இதுபோன்ற திட்டங்கள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
.
சட்டம் என்பது இனியும் வழக்கறிஞர்களும், சட்டத்துறையினரும் மட்டுமே தொடர்புடைய அம்சமாக இருக்க முடியாது. அனைத்துத் துறை சட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய அம்சங்கள் மிகுந்த சர்ச்சைக்குரியவைகளாக இருக்கின்றன. உதாரணமாக அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் அறிமுகமாகும் சட்டங்கள் நமது வேளாண்மை, மருத்துவம், கல்வி என அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமிக்கின்றன. நமது பாரம்பரிய அறிவுச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தும் நோக்கத்தில் இவை இருக்கின்றன.
.
வழக்கறிஞர் சட்டத்தில் திட்டமிடப்படும் திருத்தங்களும் மிக ஆபத்தானவை. வெளிநாட்டு வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் குழுமங்களையும் இந்தியாவில் தொழில் செய்வதற்கு அனுமதிப்பதற்கான நேரத்திற்காக அரசு காத்துக்கொண்டுள்ளது.
.
இந்த பிரசினைகள் குறித்து மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டியதே வழக்கறிஞர்களின் முக்கியமான பணி. இது போன்ற மக்கள் சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், மக்களுக்கான திட்டங்களை தீட்டுமாறு அரசு அமைப்புகளை வலியுறுத்துவதுமே வழக்கறிஞர்களின் நிலையை மட்டுமல்லாது, நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகளையும் செம்மைப்படுத்த உதவும்.
-சுந்தரராஜன்
(புதிய தலைமுறை [15-10-2009] வார இதழில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்)

Tuesday, August 18, 2009

சட்டமெனும் இருட்டறை! (நன்றி: தினமணி)

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.



ஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.


இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் "மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே? இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?


தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?


பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.


இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.


அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.


இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.


இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.


விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.

நன்றி: தினமணி, 18-08-2009

Monday, August 17, 2009

ரயில் விபத்து – நிவாரணங்களும்,வழிமுறைகளும்

சாலையில் மோட்டார் வாகன விபத்து அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகின்றன.

ஆனால் ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அதனைப் பெறும் முறை குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.

இரண்டு ரயில்கள் மோதிக்கொள்வதோ, அல்லது ஒரு ரயில் தடம்புரள்வதோ ரயில் விபத்து ஆகும். இந்த விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழப்போருக்கும், உடல் பாகங்களை இழப்போருக்கும்கூட நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த செயல் தற்கொலை முயற்சியாகவோ, வேறு காரணங்களுக்காக தானாகவே மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. இவ்வாறு தவறி விழுவோர் குடிபோதையில் விழுந்திருக்கக்கூடாது. மேலும் சட்டவிரோதமான குற்றச்செயலில் ஈடுபடும்போது தவறி விழுந்தாலும் இழப்பீடு கோரமுடியாது.

இதேபோல ரயில் பயணத்தின்போது நடக்கும் பயங்கரவாத செயல்கள், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பாதிக்கபோபடுவோரும் இழப்பீடு பெறலாம்.

இதற்காக மாநில அளவில் ரயில் (பயணிகள்) உரிமைத் தீர்ப்பாயம் [Railway Claims Tribunal} இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கான ரயில் பயணிகள் உரிமைத் தீர்ப்பாயம் சென்னையில் இயங்கி வருகிறது.

விபத்து நடந்த ஓராண்டு காலத்திற்குள் இழப்பீடு கோரும் மனுவை பதிவு செய்யலாம்.

உயிர் இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். அதேபோல உடல் உறுப்பு இழப்புக்கும் அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். பொருள் இழப்புக்கும், இழப்பின் தன்மைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது.

ரயில் பாதையில் அத்துமீறி பிரவேசித்து, கவனக்குறைவாக நடந்துகொண்டு ஏற்படும் இழப்புகளுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.

பயணச்சீட்டு பெற்று முறைப்படி பயணம் செய்யும் பயணிகளே இந்த நிவாரணங்களை பெற தகுதி உடையவர்கள். அதே போல முறைப்படி ரயில் பெட்டியின் உட்புறத்தில் பயணம் செய்பவர்கள்தான் சட்டரீதியான பயணிகளாக கருதப்படுவார்கள். ரயில் பெட்டியின் கூரைமேல் அமர்ந்து செல்பவர்களுக்கு இந்த நிவாரணங்கள் கிடைக்காது. மேலும் கூரை அமர்ந்து செல்பவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ரயில்வே நிர்வாகம் அளிக்கும் இந்த நிவாரணங்களை முறைகேடாக பெறமுயற்சி செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் பரிசாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

முகவரி:

Railway Claims Tribunal,

“Freshford”

50, McNichols Road,

Chetpet,

Chennai – 600 031

Website: http://www.rctchennai.org.in

Wednesday, August 12, 2009

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா?

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் (Tamil Nadu Agricultural Council Act) என்ற பெயரிலான சட்டத்தி்ற்கான முன்வடிவு ஒன்றை 23 ஜூன் 2009 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், "தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்" என்ற அமைப்பு நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை, மனையியல், உயிர்தொழில் நுட்பம், வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை தகவல் தொழில் நுட்பம், உயிர் தகவலியல், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்தும் பொறியியல், வேளாண் வர்த்தக மேலாண்மை ஆகியதுறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மன்றத்தில் பதிவு செய்ய முடியும்.

.

வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இத்தகைய பட்டம் பெற்றவர்கள் உரிய ஆலோசனைக்குப்பின்னர் இந்த மன்றத்தில் உறுப்பினராக அனுமதிக்கப்படுவர்.

.

இந்த மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள், சட்ட முன்வடிவின் 29வது அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி:

.

29. பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர் ஒருவர் நீங்கலாக வேறு நபர் எவரும், தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளாக வேளாண்மை ஆலோசகராக தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப்பணிகளை ஆற்றுவதோ கூடாது.

.

விளக்கம்:- வேளாண்மைப் பணி என்றால்,-

(அ) பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழி்ல்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்திகள், களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலான பரிந்துரைக்குறிப்பு வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பம், வேளாண்மை உயிரியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேளாண்மைப் பணிகளைச் செய்தல்;

.

(ஆ) தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வேளாண்மைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் வேளாண்மைத் திட்டங்களில் கையொப்பமிடுவது, அல்லது அதிகாரச் சான்றளித்தல் மற்றும் உரிய முறையில் தகுதி பெற்ற வேளாண்மை தொழிலாற்றுநர் ஒருவரால் சட்டத்தின்படி கையொப்பமிடப்பட வேண்டியதான அல்லது அதிகாரச் சான்றளிக்கப்பட வேண்டியதான மதிப்பீட்டுச் சான்றிதழை வழங்குதல்;

.

(இ) மண் மற்றும் நீரின் பண்புகளையும், இயற்கை மற்றும் இரசாயன உரங்களின் அளவையும் கணிப்பதிலும், பயிர்களுக்கு அழிவு செய்யும் பூச்சிகளையும், நோய்களையும் இனங்கண்டு தீர்வழி நடவடிக்கைகளை வகுத்துரைப்பதிலும் பல்வேறு மண் தரநிலைகளுக்கும், வேளாண் தட்பவெப்ப கூறுகளுக்கும் ஏற்ற வகையில், பயிரிடுதல் தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதை முறைப்படுத்தி உதவி செய்வதிலும், சிறு தோட்டம் அமைத்தல், மலர்செடி வளர்த்தல் மற்றும் நெடுநாள் இருக்கிற தோப்புகளை மேம்பாடு செய்தல் ஆகிய வற்றில் உயரிய தொழி்ல்நுட்ப பண்ணை முறைகளை மேற்கொள்வதிலும் குடியானவர்களுக்கு உதவுவதற்கு வேளாண்மைப்பணிமனைகளையும் ஆய்வுக்கூடங்களையும் நடத்துதல்;

என பொருள்படும்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், தம்மை இம்மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரித்து பணியாற்றினால் அவர் முதல் முறை சிக்கும்போது ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை சிக்கினால் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் தண்டனையும் வழங்க வகை செய்கிறது மேற்கூறிய சட்டம்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளை செய்யக்கூடாது என்று இந்த சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் இந்த மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரிக்காமல், மேற்கூறப்பட்ட இந்தப்பணிகளை எவரேனும் செய்தால் அவருக்கு என்ன தண்டனை என்பது தெரியவில்லை.

.

மருத்துவத் தொழிலையும், சட்டத் தொழிலையும் நெறிப்படுத்த இந்திய மருத்துவ மன்றமும், இந்திய வழக்குரைஞர் மன்றமும் இருப்பதுபோல வேளாண்மைத் தொழிலை நெறிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

.

மருத்துவம் படித்தவர்களில் ஏறக்குறைய அனைவருமே மருத்துவத் தொழிலையே செய்து வருகின்றனர். சட்டம் படித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால் வேளாண்மை படித்தவர்களில் எத்தனைப் பேர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர் என்று கேள்வி எழுப்பினால் பதிலைக் காணோம். வேளாண் பட்டதாரிகள் அனைவரும் அரசுப்பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்தான் பணியாற்ற விரும்புகின்றனர். யாரும் சொந்தமாக விவசாயம் செய்யத் துணிவதில்லை. ஏனெனில் அவர்கள் பெற்ற கல்வியின் மீது அவ்வளவு நம்பிக்கை!

.

சரி! ஏன் இந்த சட்டம்?

.

இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவும், இந்தியாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், அமெரிக்க வேளாண் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது.

.

இந்த ஒப்பந்தத்தின் பயனாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களோடு, இந்தியாவின் உணவு இறையாண்மைக்கு எதிரான சட்டங்களும் இந்தியாவில் அமல்படுத்தப் படுகின்றன.

.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருமளவில் பரவி வருகிறது. முன்னோடி விவசாயிகளும், சில பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபடுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

.

சொந்த நாட்டுக்குடிமகன் தொழில் தொடங்கினால் ஆயிரம் தடங்கல்களை ஏற்படுத்தும் மத்திய மாநில அரசுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் சலுகை விலையில் நிலம், மின்சாரம், மனிதவளம் ஆகியவற்றைத் தருகின்றன. இந்த வரிசையில் இந்திய வேளாண்மையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

.

பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், ஆய்வு உதவித் தொகை என்ற பெயரில் வழங்கும் நிதியால் இயங்கும் வேளாண்மை பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற மாணவர்கள்தான் அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக, மிக விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் அமைக்கப்படுவதாக இயற்கை வேளாண் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

.

கேரளா போன்ற அண்டை மாநிலங்கள், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கு மட்டுமல்ல: அனைத்து சமூகத்திற்கும் எதிரானதாக இருக்கிறது.

.

பல்லாயிரமாக ஆண்டுகளாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனுபவத்தில் வளர்த்தெடுத்த, சமூகத்தில் லாப நோக்கற்று பகிர்ந்து கொண்ட தமிழர்களின் வேளாண் அறிவை புறக்கணிக்கும் சட்டம் இது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

.

தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மை என்பது ஒரு தொழிலாக பார்க்கப்பட்டதில்லை. அது சமூகத்திற்கு உணவளிக்கும் ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் தவறான கொள்கைகள் காரணமாகவே வேளாண்மை என்பது லாபமற்ற அம்சமாக மாறியது. இதனால்தான் விவசாயிகள் பலரும் அந்த தொழிலை விட்டு விலகினர்.

.

வேளாண்மை பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகள் மூலமாகதான் எண்ணெய்ப் பனை, எண்ணெய் ஆமணக்கு எனப்படும் ஜாட்ரோஃபா போன்ற பயிர்களை இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தின பல தனியார் நிறுவனங்கள். அந்த நிறுவனங்களையும் தற்போது காணவில்லை. அதில் பணியாற்றிய வேளாண்மை பட்டதாரிகளையும் தற்போது காணவில்லை. அந்த பயிர்களை விளைவித்து ஓட்டாண்டிகளான விவசாயிகள்தான் இப்போது பெருநகரங்களில் பிச்சைக்காரர்களாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.

.

இந்த நிலையில்தான் மீதமுள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவும், விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றுவதற்கும் ஏற்ற ஒரு ஏற்பாட்டை தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் என்ற பெயரில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

.

இந்த மன்றம் வேளாண் நிலங்களை மட்டும் குறிவைக்கவில்லை. உங்கள் வீட்டுத் தொட்டத்தையும், பூச்செடிகளையும்கூட குறிவைக்கிறது. நீண்டகாலமாக இருக்கும் தோப்புகளையும் இந்த சட்டம் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்த தோட்டங்களும், தோப்புகளும்கூட இனி இந்த மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும்.

.

தமிழர்களின் பாரம்பரிய அறிவுச் சொத்துகளை திட்டமிட்டு அவமானப்படுத்தி புறக்கணிக்கும் இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன?

.

தமிழ்நாட்டின் வேளாண் துறையை பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் வீழ்த்துவதை தவிர வேறென்ன இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும்!

.

வேளாண்துறையை நெறிப்படுத்த(!) இருக்கும் இந்த அமைப்பில் ஒரு விவசாயிகூட இருக்க மாட்டார்.

.

இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவதற்கு பல்வேறு தரப்பினரரும் தயாராகி வருகின்றனர்.

.

உங்களிடம் ஆதரவு கேட்டு போராட்டக்காரர்கள் வரக்கூடும். வழக்கம் போல சலிப்படையாதீர்கள்.

.

ஏனென்றால் நாம் உட்கொள்ளும் உணவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யமுடியாது. கம்யூட்டரின் சாப்ட்வேர் எழுதியும் தயாரிக்க முடியாது. விளைநிலங்களில் விவசாயிகளின் உழைப்பினால் மட்டுமே அது சாத்தியம். இதுவரை விவசாயிகள் குறித்து மற்றவர்களின் அக்கறையின்மையே ஆண்டுக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலை நோக்கி தள்ளியது. இந்த நிலை தொடர்ந்தால் உணவிற்காக போரிட்டு நாமும் அழிய நேரிடும்.

.

விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவளித்து நன்றி செலுத்த இது தக்க தருணம். பயன்படுத்துவோம்!