ஒரு நாட்டின் கொள்கைகள் அந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல கொள்கைகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.
இந்தியாவின் அணுசக்தி வரலாறு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்குகிறது. சர். சி. வி. ராமன், ஜகதீஸ சந்திரபோஸ், மெஹ்நாத் ஸாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னோடிகள். பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்-ன் முதல் இந்திய இயக்குநராக சர். சி. வி. ராமன் பதவி வகித்தார். மெஹ்நாத் ஸாகா, கொல்கத்தாவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் பிஃசிக்ஸ் என்ற அமைப்பை நிறுவினார். இவரது மாணவரான நாக் சவுத்ரி 1942ம் ஆண்டில், அணுக்கருவை பிளக்க உதவும் கருவியான சைக்ளோட்ரானை இந்தியாவிற்கு முதன்முதலாக கொண்டு வந்தார்.
இந்த முயற்சிகள் அனைத்திற்கு பின்புலமாக இருந்தவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. இவர் இந்தியாவின் பெருமுதலாளிகளுள் ஒருவரான ஜே.ஆர்.டி. டாடாவின் சகோதரர் மகன்.
இவருடைய தலைமையில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்திய அணுசக்தி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகள் அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆணையம் கேட்டுக்கொண்டபடி 1954ம் ஆண்டில் இந்திய அணுசக்தித்துறை நிர்மாணிக்கப்பட்டது.
முதல் அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டு 10வது ஆண்டில் அதே ஆணையம் மேலும் கூடுதல் அதிகாரங்களுடன் இரண்டாவது அணுசக்தி ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் மீண்டும் டாக்டர் ஹோமி ஜே. பாபா-வே பதவி ஏற்றார்.
இவர் பிரதமர் நேருவுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். வேறு யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மறுக்க தலைவருக்கு முழு உரிமை உண்டு. இந்த ஆணையம், தனக்கு தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.
இத்தகைய ஜனநாயகத்தன்மை வாய்ந்த இந்திய அணுசக்தி ஆணையத்தில் தலைவரான டாக்டர் ஹோமி ஜே.பாபாவின் உறவினரும், இந்தியாவின் பெருமுதலாளிகளில் முதன்மையானவருமான ஜே.ஆர்.டி. டாடா இந்திய அணுசக்தி ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்திய அணுசக்தி சட்டம்
இந்தியாவின் முதல் அணுசக்தி சட்டம் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டில் அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய அணுசக்தி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் இந்திய அணுசக்தி ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
சில உதாரணங்களை பார்ப்போம்...
அணுசக்தி சட்டத்தின் பிரிவு 3 (சி) தடை செய்யப்பட்ட தகவல்களைப் பற்றிக்கூறுகிறது. அணுசக்தி ஆணையத்தால் முன்னரே வெளியிடப்பட்ட அல்லது பதிப்பிக்கப்பட்ட தகவல்களைத்தவிர
(1) கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த இடம், தரம் மற்றும் அளவு
(2) அந்தப் பொருட்களை தயாரிக்கும் அல்லது பயன்படுத்தும் முறை
(3) ஐசோடோப்புகளையோ அல்லது வேறெந்த பொரு ளையோ தயாரிப்பதற்கு - பயன்படுத்துவதற்கான கோட்பாட்டு முறை, வடிவம், கட்டமைப்பு மற்றும் இயக்கம் குறித்த தகவல்கள்
(4) அணு உலைகள் குறித்த கோட்பாடுகள், வடிவம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த தகவல்கள்
(5) மேற்கூறப்பட்ட அம்சங்களிலிருந்து பெறப்படும், ஆய்வு செய்யபடும் தகவல்கள்
.........ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்ட தகவல்களாகும்.
அணுசக்தி சட்டத்தின் பிரிவு 18 தகவல் வெளிப்படுவதை தடுப்பது குறித்து கூறுகிறது.
18. தகவல் வெளிப்படுவதை தடுத்தல்
(1) மத்திய அரசு கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்த ஆவணங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், திட்ட வரைபடங்கள், மாதிரிகள் ஆகியவை வெளியாவதை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்
(a) அணுசக்தியை உற்பத்தி செய்தல், மேம்படுத்தல், பயன்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடும், ஈடுபட திட்டமிட்டுள்ள அமைப்புகள், அல்லது
(b) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகள் தேவைகள் மற்றும் செயல்முறைகள், அல்லது
(c) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகளின் இயங்குமுறைகள்
(2) எந்த ஒரு நபரும் கீழ்க்கண்டவற்றை செய்யக்கூடாது.
(a)மேற்கூறப்பட்ட 18ம் பிரிவின் முதல் துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள தகவல்களை பெறுவதற்கோ, பெற முயற்சிக்கவோ, அதனை வெளிப்படுத்தவோ கூடாது.
(b) இந்த சட்டத்தின்படி பணியாற்றுபவரோ, வேறு எந்த செயல்களை செய்பவரோ மத்திய அரசின் உத்தரவின்றி மேற்கூறப்பட்டவை தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.
இந்திய அணுசக்தி சட்டத்தின் பிரிவு 24 மேற்கூறிய குற்றங்களை செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று கூறுகிறது.
மேலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கவும், அணுசக்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை பதிவு செய்யவும் தடைகள் இருந்தன. இவ்வாறு மத்திய அரசுக்கும், அதன் அதிகார மையங்களுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை கொடுத்த இந்திய அணுசக்தி சட்டம், இந்திய மக்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அணுசக்தி திட்டங்கள் குறித்த எந்த தகவலையும் பெற முடியாத நிலையிலேயே வைத்திருந்தது. வேறு வகையில் இந்த தகவலை பெறுவதையும் கடும் குற்றமாக நிர்ணயித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்க வழிவகுத்த இந்திய அணு சக்தி சட்டம், 1962-ஐ மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
குறிப்பாக இந்திய தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry), நாட்டின் மிக முக்கியமான அணுசக்தி திட்டத்தில் தனியார் துறை பங்கேற்பதற்கு தற்போதைய அணுசக்தி சட்டம் பெருந்தடையாக இருப்பதாகவும், எனவே அந்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என்பதும், இந்தியக்கூட்டாளிகளின் மூலம் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பிரபல அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா தலைமையில், அணு சக்தி சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு 1997ல் அமைக்கப்பட்டது. இந்த குழு 1998ம் ஆண்டில் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அணுசக்தி சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து பணியாற்றி வருகிறது. டாடா, ரிலையன்ஸ், எல் அன்ட் ட்டி போன்ற இந்திய நிறுவனங்களும், பிரான்ஸ் நாட்டின் அரெவா போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் இந்திய அணுசக்தி துறையில் படிப்படியாக பங்கேற்க வழியேற்படுத்துவற்கே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.
அதாவது தமது உழைப்பின் மூலம் அரசுக்கு வரி செலுத்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட விவரங்கள், இந்தியாவில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கும், அதன் இந்திய ஏஜென்ட்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இந்தியாவின் அணுசக்தி கொள்கைகளை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் இந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கப் போகின்றன.
நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட ரகசியங்கள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தவணைமுறையில், மலிவு விலையில் தாரை வார்க்கப்படவிருக்கிறது.
மின் ஆற்றலுக்கான ஒரே வழி அணு சக்திதான் என்று நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால் அரசின் செயல்பாடுகளும், சட்ட நடைமுறைகளும் அந்த கருத்தில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இந்நிலையில் தனியார் நிறுவனங்களை அணுசக்தித் துறையில் பங்கேற்ப அனுமதிப்பது மென்மேலும் கேள்விகளை எழுப்பினாலும் பதில் சொல்லத்தான் ஆளில்லை.
- சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
1 comment:
இப்படி எல்லாம் பாடம் நடத்தாமல் சாதாரண மக்களுக்கு புரியும், பயன்படும் பதிவுகளை எழுதவும்.
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!