எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.
ஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.
இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் "மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே? இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?
தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?
பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.
இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.
இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.
விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.
நன்றி: தினமணி, 18-08-2009
1 comment:
தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.
Is it not possible for the lawyer of the client to take necessary steps to release ?
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!