விரைவான நீதி என்பது அடிப்படையான மனித உரிமைகளில் முக்கியமானது. காலத்தில் வழங்காமல் தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பது புகழ்வாய்ந்த சட்ட முதுமொழி. இந்தியாவின் நீதித்துறை என்பது ஆமை வேகத்தில் பயணி்ப்பது உலகறிந்த ரகசியம்தான்.
.
விரைவான நீதியை வழங்கச் செய்வதில் அரசு, நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய நான்கு தரப்பினரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
.
நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப்பணியிடங்களை நிரப்புவதும், அதிகரிப்பதுமே வழக்குகளை குவியவிடாமல் தடு்க்கும் என்பது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்ட கருத்து. ஆனால், இந்த கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசோ, நீதிமன்ற நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சொல்லாமலே புரியும்.
.
இந்த நிலையில், விரைவான நீதியை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, கிராம நீதிமன்றங்களை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்த செலவு, விரைவான நீதி என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
.
இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்த தண்டனை விதிக்கத்தக்க குற்றவியல் வழக்குகளையும், அதற்கு சமமான சிவில் வழக்குகளையும் இந்த நீதிமன்றங்கள் விசாரிக்கும். இந்த நீதிமன்றங்கள் கிராமப் பஞ்சாயத்து அளவிலும், தேவைப்படும் இடங்களில் நடமாடும் நீதிமன்றமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
.
முதல்வகுப்பு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் அந்தஸ்துள்ள கிராம நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். சிவில் வழக்குகளில் வழக்கின் இரு தரப்பினரும் பேசித்தீர்க்கும் இசைவுத்தீர்ப்பு முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
.
இந்த கிராம நீதிமன்றங்களின் ஆள்வரைக்குள் வரக்கூடிய வழக்குகள் வேறு நீதிமன்றங்களில் இருந்தால், அந்த வழக்குகளை உரிய அறிவிப்புக்கு பின்னர் இந்த கிராம நீதிமன்றங்களுக்கு மாற்றி உத்தரவிடப்படும்.
.
இதன் மூலம் நீதிமன்றங்களி்ல் வழக்குகள் தேங்கி கிடக்கும் நிலை மாறும் என்று அரசு நம்புகிறது.
.
ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் பிரசினைகள் இருக்கும் நிலையில், அந்த பிரசினைகளை திருத்தியமைப்பதைவிட புதிய அமைப்புகளை நிர்மாணிப்பதில் ஆட்சித்தலைமைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த புதிய அமைப்புகள் சீரிய முறையில் செயல்படுமா என்று ஆய்வு செய்வதைவிட, புதிய அமைப்புகள் நிர்மாணிப்பதை தங்கள் ஆட்சியின் சாதனைகளாக விளம்பரம் செய்வதில் ஆட்சியாளர்கள் காட்டும் அதீத ஆர்வமே இதற்கு காரணம்.
.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப்புகள் புதிய திட்டங்களை வடிவமைக்கும்போது பங்காளிகளாக கருத வேண்டிய பொதுமக்களை பயனாளிகளாக சுருக்குவதும், அரசின் கடமையாகவும், மக்களின் உரிமையாகவும் கருதவேண்டிய அம்சங்களை சலுகையாகவும் செய்யும் போக்கு நிலவுகிறது. எனவே எந்த பிரச்சினையிலும் (உலக வங்கி போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக) யாரையும் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக திட்டங்களை அறிவிக்கின்றன. நீதித்துறையின் முக்கிய இயங்கு சக்திகளான வழக்குரைஞர் சமூகத்தை ஆலோசிப்பது குறித்து இந்திய அரசோ, சட்ட அமைச்சகமோ யோசிப்பதே இல்லை.
.
நீதிமன்ற நிர்வாகம் என்பது நீதிபதிகளின் கையில் உள்ளதாலும், அவர்களின் கருத்து என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாததாலும் இந்த பிரசினையில் அவர்களின் நிலை கருத்து கூற முடியவில்லை.
.
வழக்கறிஞர்கள் மத்தியில் கிராம நீதிமன்றங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பே நிலவுகிறது. கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்துவோருக்கு எதிரான வழக்குகளில், ஆதிக்கசக்தியினருக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படும் நிலையில் நீதித்துறை அலுவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய சாட்சிச் சட்டத்தை உறுதியாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஆதிக்க சக்தியினருக்கு சாதகமாக பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதைவிட முக்கியமாக இந்த கிராம நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக ஒருமுறை மட்டுமே மேல்முறையீடு செய்யலாம் என்ற வரையறை வழக்கிடும் மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
.
இதற்கு மாற்றாக வழக்கறிஞர்கள் தரப்பில், “ஏற்கனவே உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப் பணியிடங்களை நிரப்பினாலே வழக்குகள் விரைவில் நடத்த முடியும்” என்று கூறுகின்றனர். அந்த காலியிடங்களை நிரப்பாமல் அங்கு தேங்கியுள்ள வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றுவது என்பது நடைமுறையில் பயன்தராது: வழக்கு தேங்கி நிற்குமிடம் மாறுமே தவிர, வழக்கு முடிவுக்கு வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
.
இந்த கிராம நீதிமன்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற புறக்கணிப்பு என்ற வழக்கமான போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
.
எந்த நியாயமான காரணத்துக்காகவும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சமூகத்தின் எந்த பிரிவும் மருத்துவர்களை மன்னிக்காது. மருத்துவத்துறைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நீதித்துறையில் ஏற்கனவே ஏராளமான விடுமுறைகள் இருக்கும்போது, வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களும் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தும். எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
.
மேலும் சட்டத்துறையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மக்களை எவ்விதமாக பாதிக்கும் என்பதையும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துறைக்கும் பணியும் வழக்கறிஞர்களிடமே உள்ளது. ஆனால் வழக்கறிஞர்கள் இந்த அணுகுமுறையை இதுவரை உரிய முறையில் கையாண்டதில்லை.
.
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு பதிலாக வழக்கறிஞர் மன்றங்(BAR COUNCIL)களையும், வழக்கறிஞர் சங்கங்(BAR ASSOCIATION)களையும் வலுப்படுத்தி புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தும்போதும், புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தும்போதும் வழக்கறிஞர் சமூகத்திடம் அரசு அது குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுப்பதை நிர்பந்திக்கலாம்.
அரசியலிலும், ஆட்சித்துறையிலும் சட்டம் படித்தவர்கள் நிறைந்துள்ள இன்றைய நிலையில், இதுபோன்ற திட்டங்கள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
.
சட்டம் என்பது இனியும் வழக்கறிஞர்களும், சட்டத்துறையினரும் மட்டுமே தொடர்புடைய அம்சமாக இருக்க முடியாது. அனைத்துத் துறை சட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய அம்சங்கள் மிகுந்த சர்ச்சைக்குரியவைகளாக இருக்கின்றன. உதாரணமாக அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் அறிமுகமாகும் சட்டங்கள் நமது வேளாண்மை, மருத்துவம், கல்வி என அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமிக்கின்றன. நமது பாரம்பரிய அறிவுச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தும் நோக்கத்தில் இவை இருக்கின்றன.
.
வழக்கறிஞர் சட்டத்தில் திட்டமிடப்படும் திருத்தங்களும் மிக ஆபத்தானவை. வெளிநாட்டு வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் குழுமங்களையும் இந்தியாவில் தொழில் செய்வதற்கு அனுமதிப்பதற்கான நேரத்திற்காக அரசு காத்துக்கொண்டுள்ளது.
.
இந்த பிரசினைகள் குறித்து மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டியதே வழக்கறிஞர்களின் முக்கியமான பணி. இது போன்ற மக்கள் சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், மக்களுக்கான திட்டங்களை தீட்டுமாறு அரசு அமைப்புகளை வலியுறுத்துவதுமே வழக்கறிஞர்களின் நிலையை மட்டுமல்லாது, நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகளையும் செம்மைப்படுத்த உதவும்.
-சுந்தரராஜன்
1 comment:
வழக்கறிஞர்கள் மத்தியில் கிராம நீதிமன்றங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பே நிலவுகிறது. கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்துவோருக்கு எதிரான வழக்குகளில், ஆதிக்கசக்தியினருக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படும் நிலையில் நீதித்துறை அலுவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.So the present law accept that the ordinary people of the villages are not yet got the safe life situations.
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!