Friday, July 11, 2008

பளபளா சூப்பர் மார்க்கெட்களும், பல்லிளிக்கும் தொழிலாளர் - நுகர்வோர் நலன்களும்...!

உலகமயமாதல் கொள்கை இந்தியாவிற்கு கொண்டுவந்த புதிய அம்சங்களுள் முக்கியமான ஒன்று நவீனமயமாக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள்! பேருந்து நிலையங்களுக்கு அருகிலும், மற்ற முக்கிய பகுதிகளிலும் விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ செய்து வந்த சில்லறை விற்பனையை இன்று ஸ்பென்சர்ஸ் டெய்லி, ரிலையன்ஸ் ப்ரெஷ், மோர் போன்ற வர்த்தக கழகங்கள் கையில் எடுத்து விட்டன. இந்த மாற்றத்தில் நேரடியாக சில்லறை விற்பனை செய்து வந்த விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் அவர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லாமல் அழிந்து வருகின்றனர். குளிர்பதனம் செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் சீருடை அணிந்த பணியாளர்கள் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி, கணிணியில் பில் வழங்கி, பளபளவென்று மாசுபடாமல் இருக்கும் காய்கனிகளை வாங்கிச்செல்வது நம்மில் பலருக்கும் சுக அனுபவமாக இருக்கிறது.

இந்த மாற்றத்தில் காணாமல் போய்விட்ட மூதாட்டிகளும், வயசாளிகளும் எங்கு போனார்கள் என்ற கேள்வி நம்முள் எழுவதில்லை.
இதுபோன்ற நவீனமயமான சில்லறை விற்பனை நிலையங்களில் உள்ள காய்கனிகள் ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக தோன்றினாலும் அங்கு பணியாற்றும் விற்பனையாளர்கள் மிகவும் புழுக்கத்துடனே இருப்பதை நம்மில் பலரும் உணருவதில்லை. ஒரு உதாரணத்திற்காக மோர் ஃபார் யூ (MORE for you) என்ற பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தும் ஆதித்ய பிர்லா குழும (ADITYA BIRLA GROUP) த்தை பார்ப்போம். சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள, பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான இந்த குழுமத்தில் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணி புரிவதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் பெருமிதம் கொள்கிறது. மேலும் பணியாளர்களை நல்ல முறையில் நிர்வகிப்பதில் ஆசியாவிலேயே முதல் 20 நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் கூறுகிறது.

இந்த நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவான “மோர்” நவீன விற்பனை நிலையங்களில் அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. அதற்கேற்ப சுமார் 15 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைக்கப்படுகின்றன.
இங்கு பணியாற்றும் அடிப்படை பணியாளர்கள், வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சுமாராக 2,500 முதல் 3,500 ரூபாய் வரையே மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்களோ காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை இடைவெளியின்றி இயங்குகின்றன. பணியாளர்கள் ஷிப்ட் முறைப்படி பணியாற்றுவதாக தொழிலாளர் நலத்துறைக்கு கணக்கு காட்டப்பட்டாலும் உண்மை அதுவல்ல.

பல சிறிய கிளைகளில் மேற்பார்வையாளர், மேலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை.

இந்த விற்பனை நிலையங்களுக்கு தேவையான விற்பனைப் பொருட்கள் அந்தந்த நகரின் மைய கிட்டங்கி(Warehouse)யிலிருந்து, தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தப் பொருட்கள் பட்டியல்படி இருக்கிறதா என்பதை சரி பார்ப்பதற்கான முறையே பல இடங்களில் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு தேவையான ஆட்களும் இருப்பதில்லை; நேரமும் இருப்பதில்லை என்று பணியாளர்கள் கூறுகின்றனர். எப்போதும் பணியாளர் பற்றாக்குறையிலேயே இருக்கும் இந்த விற்பனை நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், கடை திறக்கும் நேரத்தில் அல்லது மூடும் நேரத்தில் வரும் இந்த சரக்குகள் பட்டியல்படி இருக்கிறதா என்பதை பார்க்காமலேயே அவை அலமாரிகளில் ஏற்றிவிடுகின்றனர்.

எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டத்தில் தத்தளிக்கும் இந்த விற்பனை நிலையங்களில் தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாததால், நாளின் முடிவின்போது காசாளரிடம் இருக்க வேண்டிய தொகை குறைந்து அதற்கு காசாளர் பொறுப்பேற்கும் நிலை மிகச்சாதாரணமாக ஏற்படுகிறது. சுமார் 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் எந்த ஒரு காசாளரும் முழு சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

அதைபோல கடையில் உள்ள சரக்குகள் அனைத்தையும் மாதம் ஒரு நாளில் கணக்கு சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. அன்று மொத்த வரவிலிருந்து, விற்பனை போக மீதியுள்ள மதிப்பிற்கு சரக்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை.
குறைவான ஆட்களே இருப்பதால் பொருட்களை பாதுகாப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து நிறுவன நிர்வாகம் கவலைப்படுவதில்லை. சரக்கை விற்பனை நிலையத்துக்கு கொண்டுவரும் நிலையில் அதை அந்த கிளையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் சரிபார்ப்பதில்லை என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இவ்வாறு போக்குவரத்தின்போது அந்த சரக்குகளை “வேறுவித”மாக கையாளும் உயர் பதவியினர் தப்பிவிடுகின்றனர். அதற்கு மாறாக குறையும் மதிப்பிற்கு அந்த கிளையில் பணியாற்றும் பணியாளர்களை பொறுப்பாக்குகின்றன. கிளையில் உள்ள விற்பனைப்பொருட்கள் அனைத்தும் கணிணி மூலமாகவே கணக்கிடப்படுகிறது. கணிணிகள் அனைத்தும் நிறுவனத்தின் மையஅலுவலகத்தின் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. விற்பனையாளர்கள் பலருக்கும் கணிணி குறித்து குறைந்த பட்ச அறிவே இருப்பதுடன், நிர்வாகமோ, உயர் அதிகாரிகளோ முறைகேடுகள் செய்தால் அதைக்கண்டுபிடிக்கும் திறன் இருப்பதில்லை. அவ்வாறான பணியாளர்களை நிறுவனமோ, நிர்வாகிகளோ விரும்புவதில்லை.

குறைபடும் மதிப்பு குறைவாக இருக்கும் நிலையில், நிறுவன நிர்வாகமே பணியாளர்களை உடல்ரீதியாக தாக்கியோ, வேறுவிதமாக மிரட்டியோ எழுதி வாங்கிக்கொண்டு ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

குறைபடும் பொருட்களின் மதிப்பு அதிகரிக்கும் நிலையில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் விற்பனை பணியாளர்கள் மீது புகார் செய்யப்படுகிறது.
முதலாளிகள், காரில் வருபவர்கள், வெள்ளைத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலத்தை கோர்வையாக பேசுபவர்கள் நல்லவர்கள்; தொழிலாளிகள், பஸ்ஸிலோ, சைக்கிளிலிலோ வருபவர்கள், கருப்புத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் கெட்டவர்கள் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே இதுபோன்ற எந்த ஒரு சில்லறை விற்பனை நிலையத்திலும். எந்த ஒரு பணியாளரும் ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்ற முடிவதில்லை.


இத்தகைய பிரசினைகள் காரணமாகவே சுபிக்ஷா என்ற பெயரில் மிக ஆடம்பரமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சங்கிலித்தொடர் விற்பனை நிறுவனம், மிகவும் நலிந்துபோய் இப்போது வேறொரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு எந்த விதமான சட்டரீதியான உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. எப்போதோ இயற்றப்பட்ட குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுவிடுவதால் அவர்கள் இந்த நிறுவனங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

இந்த அவலம், வாடிக்கையாளர்களின் புலன்களை அடைவதேயில்லை. அப்படியே அவர்கள் உணர்ந்தாலும் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்த நிறுவனங்கள் பணியாட்களை மட்டுமல்ல, வாடிக்கையாளரையும் மோசடி செய்கின்றன என்பதை பலரும் உணருவதில்லை.

குறிப்பாக இதுபோன்ற பல நிறுவனங்களும் ஆட்டா மாவு, சர்க்கரை, எண்ணெய் வகைகள், நூடுல்ஸ் போன்றவற்றை சொந்த தயாரிப்பாக விற்பனை செய்து வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் டிடர்ஜன்ட் சோப், ஷாம்பூ போன்ற சொந்த தயாரிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன.

ஆனால் இந்தப்பொருட்களின் கவர்கள் இருக்கும் அளவுக்கு பொருட்கள் தரமாக, சரியான அளவில் இருக்கிறதா என்பதை பலரும் கவனிப்பதில்லை. உணவுப் பொருட்களில் அவற்றின் காலம் காலாவதியான பின்னரும் அவை விற்பனை செய்யப்படுகின்றன. சுட்டிக்காட்டி கேட்பவருக்கு மட்டுமே புதிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆக இந்த நிறுவனங்கள் பணியாளர்களை மட்டுமல்ல; வாடிக்கையாளர்களையும் ஏமாற்றியே லாபம் ஈட்டி வருகின்றன.

ஆனால் இந்த நிறுவனங்களின் இத்தகைய அறமற்ற போக்குகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படாமல், லாபம் ஒன்றே குறி என்ற அடிப்படையில் அதன் பங்குதாரர்களும் இருக்கின்றனர். பங்குச்சந்தையில் இந்த நிறுவனங்களின் மதிப்பே இந்த நிறுவனங்களின் தகுதியாக விளங்குகிறது.

மொத்தத்தில் காணாமல் போனது காய்கறி விற்று பிழைத்துக்கொண்டிருந்த மூதாட்டிகளும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும்தான். இனி இவர்களை கீழே உள்ளதுபோன்ற கலைப்படைப்புகளில்தான் பார்க்கமுடியும்.இவர்களோடு தொழிலாளர் நலன், நுகர்வோர் நலன் போன்ற அடிப்படை உரிமைகளும் காணாமல் போய்விடுவதை நாம் கவனிக்கத்தவறி விடுகிறோம்.
இவ்வாறு வாழ்க்கையை இழக்கும் மக்கள் சமூகத்தில் எந்த விதமான எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை கணிக்க முடியாது. இவர்கள் ஒருவேளை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறினாலும் மிகப்பெரும் வர்த்தகப்புள்ளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எந்த ஆபத்தும் இருக்கப்போவதில்லை.

இந்த சமூக அவலங்களை கண்டும் காணாமல் காலம் கழிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் உண்மையான அபாயம் காத்திருக்கிறது.

இதுபோன்ற சமூக அவலத்திற்கு எதிராக சாமானியனான நான் என்ன செய்யமுடியும்? என்ற கேள்வி எழலாம். ஏராளமாக செய்ய முடியும்! முதல் கட்டமாக இதுபோன்று சில்லறை விற்பனை மூலம் நுகர்வோர் சந்தையை தனதாக்க முயலும் உள்நாட்டு, பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை புறக்கணிக்க முடியும். இதை வெற்றிகரமாக செய்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்லாமலே புரிந்துவிடும்.

-மக்கள் சட்டம் குழு

9 comments:

மாசிலா said...

மிகவும் உபயோகரமான பதிவு. இருப்பினும்... மின்னல் வேகத்தில் மாறிக் கொண்டு போகிற இக்காலத்தில் இது போன்ற சிறப்பு அங்காடிகளின் உருவாக்கங்கள் தவிர்க்க முடியாதது. தங்களது வசதிகளையும் அதனூடே வரும் அதிகப் பட்ட பிரச்சினைகளையும் தலைக்குமேல் ஏற்றி சமந்துகொண்டு அல்லல்படும் இன்றை சமூகங்கள் கடை செலவுகள் செய்வதற்கு அதிக நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. எனவே, இது போன்ற அங்காடிகள் ஒரு வகையில் புது அனுபவமாகவும் அதே வேளையில் நேர சிக்கனமாகவும் அமைய வழி செய்கிறது. உங்களது பதிவின் கருத்தாழத்தை சுலபமாக விளக்க சினிமா துரையை ஒப்பிட்டு காட்டலாம். முன்னொரு காலத்தில் கூத்தாடிகள், நாடகக்காரர்கள், பாடகர்க‌கள் என தெருவுக்குக்குத்தெரு கலைஞர்கள் தம் வசதிக்கு தகுந்தாற்போல் ஏதோ தம்மால் முடிந்ததை செய்து வயிற்றை கழுவி வந்தனர். இப்போதோ... இத்துரையானது இப்பொதைய பெரும் பணப் புலிகளின் பசிக்கு இரையாகிவிட்டிருக்கிறதைத்தான் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது. பழைய கலைஞர்கள் அனைவரும் மடிந்தே போய்விட்டனர். என்ன செய்வது? கூழுக்கும் ஆசை, மீசை ஆசை! யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய போகிறோம்? பழையன கழிதலும், புதியப புகுதலும் என நினைத்து விட்டு சும்மாவென இருந்து விடலாமா? என்னை பொறுத்தவரை, உங்களது அலோசனை நடந்தேரக்கூடியதாக தெரியவில்லை. ஏனென்றால, பொதுமக்கள் அதிக சுகத்தையும், சுயநலத்தையும், கனவுலத்தையும், தற்பெருமைகளையுமே விரும்பும் இனமாக மாறிவிட்டார்கள். சிறு வியாபாரிகள் அனைவரும் ஒன்றுபட்டு சங்கம் (cooperatiவெ) அமைத்து அதனூடே ஏதாவதொரு வழி தேடவேண்டும்.

மாசிலா said...

சிறு வியாபாரிகள் அழிந்துவிடாமல் இருக்க "HOLDING" முறையில் வழி தேடலாம். அனால், இதிலும் சில அடிமைத்தனம் இருக்கவே செய்கிறது. சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம். இல்லையேல், முதலுக்கே முக்காடு போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அதிஷா said...

மிக நல்ல பதிவு ,
அந்த வரலாற்று படம் அருமை

இந்த பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிப்பதை தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய இயலாதா?

செந்தழல் ரவி said...

முன்பெல்லாம் காய்கறி கடைக்கு / மளிககக்கடைக்கு போனால் செலவை நுறு இருநூறில் முடித்துவிட்டு வருவார்கள்..

சூப்பர்மார்க்கெட்டுகள் பாக்கெட்டில் இருந்து 2000 ரூபாயை சாதாரனமாக இழுக்கின்றன..

இந்த மாற்றம் தவிர்க்க இயலாதது என்பதுபோல் தோற்றம் தருகிறது...

Anonymous said...

இத்தகைய பிரசினைகள் காரணமாகவே சுபிக்ஷா என்ற பெயரில் மிக ஆடம்பரமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சங்கிலித்தொடர் விற்பனை நிறுவனம், மிகவும் நலிந்துபோய் இப்போது வேறொரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

----------------------------------
சுபிச்க்‌ஷா இன்னொரு நிறுவனத்தை
வாங்கியுள்ளது.அது நலியவில்லை,
நன்றாக இயங்குகிறது.

தொழிலாளர்களைப் பொறுத்த வரை
சிறிய கடைகளில் இந்த அளவு கூட
ஊதியம் கிடைக்காது என்பதுதான்
உண்மை.அங்கும் யாரும் 8 மணி
நேரம் மட்டும் வேலை பார்த்தால்
போதும் என்று இல்லை. சுரண்டல்
என்று பார்த்தால் அங்கும் சுரண்டல்
இருக்கிறது, வேலை பாதுகாப்பில்லை.
எனவே பெரிய கடைகளை தொழிலாளர் எதிரி போல் சித்தரிக்கும்
நீங்கள், தொழிலாளருக்கு சிறு/னடுத்தர
கடைகளில் ஊதியம் குறைவு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
+2 அல்லது பள்ளிப் படிப்பு படித்தவர்களுக்கு பெரிய கடைகளில்
கிடைக்கும் சம்பளம் சிறிய கடைகளில்
நிச்சயம் கிடைக்காது.வேறு எங்காவது இதைவிட இதே வேலைக்கு அதிகம்
கிடைக்குமா என்று கேட்டுப் பாருங்கள்.

மக்கள் சட்டம் said...

கருத்து தெரிவித்த மாசிலா (கொஞ்ச நாளா ஆளையே காணோம்!), அதிஷா, செந்தழல் ரவி ஆகியோருக்கு நன்றி.

முகம் காட்ட திராணியின்றி அனானியாக திரியும் நண்பருக்கும் சிறப்பு நன்றி.

சிறிய கடைகளிலும் தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.

ஆனால் அந்த தொழிலாளர்கள் சில ஆண்டுகளில் ஒரு தொழிலை கற்றுக்கொண்டு சுயதொழில் முயற்சியில் ஈடுபட வாய்ப்பிருந்தது.

எனவே சில ஆண்டுகள் சிரமப்பட்டாலும், பிறகு வாழ்க்கையில் சுயமாக செட்டில் ஆனவர்கள் பலர்.

தற்போதைய நவீன சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றுவோர் அவர்களின் இறுதிக்காலம் வரை கூலித்தொழிலாளிகளாகவே வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.

அதிஷா, பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிப்பதில் உங்களுக்கு ஏன் வருத்தம் வருகிறது?

Anonymous said...

//முதலாளிகள், காரில் வருபவர்கள், வெள்ளைத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலத்தை கோர்வையாக பேசுபவர்கள் நல்லவர்கள்; தொழிலாளிகள், பஸ்ஸிலோ, சைக்கிளிலிலோ வருபவர்கள், கருப்புத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் கெட்டவர்கள் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.//

Good Comment.

Anonymous said...

'ஆனால் அந்த தொழிலாளர்கள் சில ஆண்டுகளில் ஒரு தொழிலை கற்றுக்கொண்டு சுயதொழில் முயற்சியில் ஈடுபட வாய்ப்பிருந்தது.

எனவே சில ஆண்டுகள் சிரமப்பட்டாலும், பிறகு வாழ்க்கையில் சுயமாக செட்டில் ஆனவர்கள் பலர்.

தற்போதைய நவீன சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றுவோர் அவர்களின் இறுதிக்காலம் வரை கூலித்தொழிலாளிகளாகவே வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.'

உங்கள் குதர்க்கம் மிக அருமை :(.
நவீன சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றுவோர்
நாளை தனியே தொழில் செய்ய
முடியாது, மாட்டார்கள் என்று
நீங்களே இன்று முடிவு செய்து
விட்டீர்கள், என்னே உங்கள்
பகுத்தறிவு. ஒப்பிட்டிட்டால்
நவீன சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றுவோர்
அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதை
வைத்துக் கொண்டு அவர்களில்
பலர் தொலைகல்வி மூலம் கல்வியை
தொடர்கிறார்கள்.சிறு கடைகளில் 50,
60 வயதுகளில் பணியாளர்களாக
இருப்பவர்களே இல்லையா.
சரவணா ஸ்டோர் போன்றவை
கிராமங்களிலிருந்து சிறு வயது
பையன்களை வேலைக்கு எடுத்து
சென்னையில் அவர்களை
எப்படி நடத்துகிறார்கள் என்று
உங்களுக்கு தெரியுமா. அவர்களுடன்
ஒப்பிட்டால் அம்பானிகளும்,
டாட்டாக்களும், கோயங்காக்களும்
பல மடங்கு பரவாயில்லை. முன்னதில் நிலபிரபுத்துவ,
சாதியத்தின் தொடர்ச்சி உண்டு.
பின்னதில் இல்லை.நீங்கள் என்னாதான்
எதிர்த்தாலும் ரிலையன்ஸ்,வால்மார்ட்
போன்றவை இவ்வணிகத்தில் ஈடுபடுவதை தடுக்க முடியாது. அது
காலத்தின் தேவை.

ad825 said...


_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ :)

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!