Wednesday, July 2, 2008

தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில் நடத்தப்படுகின்றன.
.
இந்தப் பல்கலை கழகத்தில் பல ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், மற்ற பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவதாகவும், பணி உத்தரவாதம் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும் செய்திகள் வந்ததை அடுத்து, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அதிகாரி குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், பொதுத்தகவல் அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு, 01-04-2008 அன்று கேள்விப் பட்டியல் அனுப்பப்பட்டது.

ஏப்ரல் முதல் தினத்தன்று அனுப்பப்பட்ட கேள்விப்பட்டியலுக்கு, 15-05-2008வரை பதில் வராத நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கு மேல்முறையீட்டு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து 26-05-2008 அன்று பதில் அனுப்பினார்கள்.
நமது கேள்விகளும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதில்களும்...

கேள்வி 1: அண்ணா பல்கலைக் கழகத்தில் எத்தனை ஆசிரியர்களும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணி புரிகின்றனர்?

பதில் :
பேராசிரியர்கள் - 115, துணைப் பேராசிரியர்கள் – 137, விரிவுரையாளர்கள் – 220
அமைச்சுப்பணியாளர்கள் – 297, தினக்கூலி அடிப்படையில் – 260, தொகுப்பூதியம் அடிப்படையில் – 52.

தொழில்நுட்ப பணியாளர்கள் – 661, தினக்கூலி அடிப்படையில் – 4.

(கேள்வியைவிட கூடுதல் தகவல்கள் தரப்பட்டுள்ளன)

கேள்வி 2: முழு நேரம் மற்றும் பகுதி நேர அடிப்படையில் எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் எந்த அடிப்படையில் (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) பணியமர்த்தப்பட்டனர்?

பதில்: 1 துணைப் பேராசிரியரும், 100 விரிவுரையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். மேலும் 40 பேர் விசிட்டிங் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர்.

அமைச்சுப் பணியாளர் பணியிடங்களில் 177 நிரப்பப்படாமல் உள்ளது.
தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களில் 361 நிரப்பப்படாமல் உள்ளது.

(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை. நிரந்தர ஆசிரியர்கள் குறித்த தகவலோ, நிரந்தர ஆசிரியரல்லாத பணியாளர்கள் குறித்த தகவலோ இல்லை)

கேள்வி 3: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எத்தனை பேர் பணி புரிகின்றனர்? அவர்கள் பணியமர்த்தப்பட்ட தன்மையை (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) கூறவும்?

பதில்: பொருந்தாது.
(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை.)

கேள்வி 4: அண்ணா பல்கலைத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் எவ்வளவு?

பதில்: 128 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

( இந்த கேள்விக்கான பதிலின் சில பகுதிகள் 2ம் கேள்விக்கான பதிலில் இடம் பெற்றுள்ளன. அதை நீங்கள்தான் தேடிப்படித்து புரிந்து கொள்ள வேண்டும்)

கேள்வி 5: இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை தரவும்?

பதில்: (பதில் அளிக்கப்படவில்லை)

(சமூக நீதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை போலுள்ளது. மாணவர்கள் தேர்வில் சில கேள்விகளை Choice-ல் விடுவது போல பல்கலைக்கழகம் இந்த கேள்வியை தவிர்த்துள்ளது)

கேள்வி 6: தொழிலாளர் நலத்திட்டங்களான சேமநலநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டங்களின்கீழ் எத்தனை ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்?

பதில்:
1-4-2003க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பொதுசேமநல நிதி மற்றும் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள். அந்த தேதிக்கு பின் சேர்ந்தவர்கள் பொதுசேமநலநிதி திட்டத்தில் பயன்பெறும் தகுதி அற்றவர்கள்.

(பல்கலைக் கழகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிக்கை தெரியாது போலிருக்கிறது.)

கேள்வி 7: ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களில் சிலர் பொது சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி போன்ற திட்டங்களில் பயன் பெறுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தால் எந்த சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் விலக்கப்பட்டனர்?

பதில்: 01-04-2003க்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்கள் பங்கீட்டு ஒய்வூதிய திட்ட(Contributory Pension Scheme)த்திற்கு மட்டுமே தகுதி பெற்றவர்கள்.

(கேள்வியை படித்து புரிந்து கொள்ளவோ அல்லது உரியமுறையில் பதில் அளிக்கவோ தேவையான கல்வித்தகுதி பொதுத்தகவல் அதிகாரிக்கு இல்லை என்பது புரிகிறது)

கேள்வி 8: ஆசிரியர்களில் எவருக்கேனும் பல்கலைமானியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லையாயின், அவர்களுக்கு சேமநலநிதி திட்டம் பொருந்துமா?

பதில்:
அனைத்து ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆசிரியரல்லாத அமைச்சுப்பணியாளர்களுக்கு மாநில அரசு ஊதிய விகிதங்களின் கீழ் ஊதியம் வழங்கப்படுகிறது.

(நிரந்தர பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படலாம். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவோருக்கு எந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை.)


பல்லாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தையும், அதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் ஒரு முக்கிய பல்கலைக்கழகத்தின் செயல்பாடு இந்த அளவில்தான் உள்ளது.


மேலும் விளக்கம் கேட்டு மீண்டும் ஒரு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு வரும் பதில்களும் வெளியிடப்படும்.
-சுந்தரராஜன்

10 comments:

DHANS said...

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து அண்ணா பல்கலைகலகத்திற்கு மாற்றப்பட்டவுடன் முதலில் தெளிவாக தெரிந்தது அண்ணா பல்கலைக்கழகம் எந்த விதத்திலெல்லாம் சிக்கன நடவடிக்கையில் இருக்கும் என்று.

எடுத்துக்காட்டு :

கேள்வித்தாளின் அளவை குறைத்தது.

எத்தனை பக்கம் வேண்டும் என்றாலும் எழுதலாம் என்ற விதியை மாற்றி விடைப்புத்தகம் என்று கொடுத்து 42 பக்கங்களுக்கு மிகாமல் எழுத சொல்லியது.

மறு திருத்தத்திற்கு 120 ரூபாய் என்று இருந்தது 400 ரூபாய் என்று மாற்றப்பட்டது.

இன்னும் பல....

Anonymous said...

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்பவர்களின் குடும்பத்தையே அதிகாரிகள் சபிக்கும் நிலைதான் உள்ளது.

மேலும் பல துறைகளிலும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு திசை திருப்பும் வகையில்தான் பதில்கள் அளிக்கப்படுகி்ன்றன.

தவறான தகவல்களை அளித்தாலோ, தகவல் அளிக்க மறுத்தாலோ அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் எச்சரித்தாலும் அதிகாரிகளின் போக்கு நாய் வாலாகவே உள்ளது.

அரசு அமைப்பின் அத்துமீறலால் பாதிக்கப்படும் அனைவரும் இந்த சட்டத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால்தான் இதுபோன்ற அவலநிலை மாறும்.

தங்கள் முயற்சி தொடர, சிறக்க வாழ்த்துகள்.

Anonymous said...

சுந்தரராசன் அண்ணே முயற்சிக்கு வாழ்த்துகள் ,இடஒதிக்கீடு கேள்விக்கு மட்டும் பதிலையே காணோம், வாழ்க சமூக நீதி

வெங்கட்ராமன் said...

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

//கேள்வி 5: இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை தரவும்?

பதில்: (பதில் அளிக்கப்படவில்லை)


(சமூக நீதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை போலுள்ளது. மாணவர்கள் தேர்வில் சில கேள்விகளை Choice-ல் விடுவது போல பல்கலைக்கழகம் இந்த கேள்வியை தவிர்த்துள்ளது)//

இவர்கள் சாய்ஸில் இதுபோன்ற முக்கிய கேள்விகளை மட்டும் தவிர்த்துவிடுவதில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்தையும் தவிர்த்துவிடுகின்றனர் என்பது வேதனைக்குரியது.

வினோத் said...

தகவல் உரிமைச் சட்டம் மூலம் நீங்கள் பல உண்மைகளை வெளிக் கொணர முயல்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தெளிவான பதில் கிடைக்காத கேள்விகளுக்கு பதில் பெற என்ன செய்வதாக உள்ளீர்கள்?

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சில தகவல்களைக் கேட்டு பதிவுத்தபால் அனுப்பியிருந்தேன்.இணைத்திருந்த Ackowledgent Cardஐ கூட அவர்கள் திருப்பி அனுப்பவில்லை.நான் விண்ணப்பித்ததற்கு எதை ஆதாரமாகக் கொள்வது?
இன்னும் ஒரு சில சந்தேகங்கள் எனக்கு உள்ளது.தங்களிடம் மின்னஞ்சலில் கேட்கலாமா?

யாத்ரீகன் said...

நல்ல முயற்சி .. இதை மேலும் எடுத்துச்சென்று உரிய தகவல்கள் பெற முயற்சிப்பீர்களா ?!

மக்கள் சட்டம் said...

// வினோத் said...

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தெளிவான பதில் கிடைக்காத கேள்விகளுக்கு பதில் பெற என்ன செய்வதாக உள்ளீர்கள்?//

தொடர்ந்து தகவல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும். அதற்கும் பலனில்லையேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

//ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சில தகவல்களைக் கேட்டு பதிவுத்தபால் அனுப்பியிருந்தேன்.இணைத்திருந்த Ackowledgent Cardஐ கூட அவர்கள் திருப்பி அனுப்பவில்லை.நான் விண்ணப்பித்ததற்கு எதை ஆதாரமாகக் கொள்வது?//
பதிவு அஞ்சல் அனுப்பி ஒரு மாத காலத்திற்குள் ஒப்புதல் அட்டை வராவிட்டால், அஞ்சல் அனுப்பியபோது வழங்கப்பட்ட ரசீதுடன் மனுச்செய்தால் நகல் ஒப்புதல் வழங்கப்படும். பதிவு அஞ்சல் அனுப்பும்போது வழங்கப்படும் ரசீதே அஞ்சல் அனுப்பியதற்கான சான்றாக ஏற்கப்படுகிறது.

//இன்னும் ஒரு சில சந்தேகங்கள் எனக்கு உள்ளது.தங்களிடம் மின்னஞ்சலில் கேட்கலாமா?//

"வரவேற்கிறோம்."


------------------------------

//யாத்திரீகன் said...
நல்ல முயற்சி .. இதை மேலும் எடுத்துச்சென்று உரிய தகவல்கள் பெற முயற்சிப்பீர்களா ?!//

நிச்சயமாக...

duriarasanblogpsot.com said...

தமிழகத்தின் தலை சிறந்த தொழில் நுட்பப் பலகையின் நிலையே இப்படி உள்ளது. இந்த நிலையில் அரசு கல்லூரிகள் சிலவற்றைப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் என்று அரசு அறிவித்துள்ளது. நினைக்கவே அச்சமாக உள்ளது.

துரை

சவுக்கு said...

அண்ணா பல்கலைகழகத்தில் தோண்டத் தோண்ட இன்னும் பல பூதங்கள் வெளிவரும். வெளியில் Single Window System என்று பெயருக்கு அட்மிஷன்கள் போட்டாலும், தொடர்ந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாகவே அண்ணா பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. தொடர்ந்து தோண்டுவோம். பூதங்களை வெளிக்கொணர்வோம்.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!