-காயங்கள் தொடரும்
Monday, July 28, 2008
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 6
-காயங்கள் தொடரும்
Friday, July 18, 2008
தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!
இந்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நமக்கு புகார்கள் வரவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதற்காக மருத்துவக்கல்லூரியின் இணையதளத்தை தேடினோம்.
அவ்வாறு இணையதளம் எதுவும் நமக்கு புலப்படாத நிலையில் நமது முதல் கேள்வியே மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் இணையதளம் குறித்ததாக அமைந்தது. கேள்விகள் 25-06-2008 அன்று அனுப்பப்பட்டது. அதற்கான பதில் 11-07-2008 அன்று கையெழுத்தாகி 18-07-2008 அன்று நம்மை வந்தடைந்தது. இந்த பதில்கள் அடங்கிய கடிதத்தில் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், பொது தகவல் அதிகாரியுமான Dr. S.கீதாலட்சுமி , MD அவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்.
இனி கேள்வியும், பதில்களும்.
கேள்வி 1. தங்களது கல்வி நிறுவனத்திற்கு இணையதளம் ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதன் பெயரை தெரிவிக்கவும். இணையதளம் இல்லையென்றால் அவ்வாறு இணையதளத்தை அண்மையில் ஆரம்பிக்கும் உத்தேசம் உள்ளதா?
பதில் : இணையதளம் உள்ளது! http://www.mmc.org/
(தவறான தகவல்! இந்த இணைய தளம் இங்கிலாந்திலுள்ள Maine Medical Centre என்ற அமைப்பினுடையது)
கேள்வி 2. தங்கள் துறைக்கு பொதுத்தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகள் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்த விவரங்கள் அந்த இணையதளத்தில் இடம்பெறச் செய்வீர்களா?
பதில் : இணையதளம் இல்லாததால் இந்த பிரசினை எழவில்லை!
(முதல் கேள்வியில் இணையதளத்தின் பெயரை எவ்வாறு கொடுத்தார்கள்?
அடுத்த கேள்வியிலேயே இணையதளம் இல்லை என்பதை எவ்வாறு உணர்ந்தார்கள்? தலை சுற்றுகிறது!)
கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எத்தனைப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன? எந்தெந்த பிரிவுகளில் அவை நடத்தப்படுகின்றன? அவை அனைத்தும் இந்திய மருத்தவுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளனவா?
பதில் : பட்டமேற்படிப்பு கல்விகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவை – 34 எண்ணிக்கை. (M.D)
( M.S. என்ற பெயரில் நடத்தப்படும் படிப்புகள் குறித்து துணை முதல்வருக்கே தெரியாது போலும். அவை எந்தெந்த துறைகளில் நடத்தப்படுகிறது என்ற தகவலை எங்கே, யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் தெரியவில்லை)
கேள்வி 4 . பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்? அவர்களது பெயர், கல்வித்தகுதி, பதவி ஆகியவற்றை வழங்கவும். இவற்றில் எத்தனை நிரப்பப்படாமல் உள்ளன? அந்த காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? துறைவாரியான தகவல்களை தரவும்.
பதில் : 586. பணிமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் மருத்துவ கல்வித்துறை இயக்குனரிடமும் உள்ளது.
(கேள்வியை முழுமையாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் அளவுக்கு துணை முதல்வருக்கு கல்வி அறிவு இல்லை போலுள்ளது!)
கேள்வி 5. பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? துறை வாரியான தகவல்களை தரவும்.
பதில் : 439 தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
(துறை வாரியாக கணக்கெடுக்கும் அளவிற்கு ... என்னத்தை சொல்றது..போங்க!)
கேள்வி 6. மருத்துவ பட்ட மேற்படிப்பு எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? வகுப்பறை கல்வி, செய்முறை கல்வி, மருத்துவமனை கல்வி வழங்கப்படுவதற்கான கால அட்டவணையை வழங்கவும்.
பதில் : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது.
(அந்த விதியைதாங்க கேட்டோம். அதைச் சொல்லுங்க!)
கேள்வி 7 முதல் 18 வரை உள்ள கேள்விகளை முதல்வர், அரசு பொது மருத்துவமனை, சென்னை-3 என்ற முகவரிக்கு அனுப்பவும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
(தகவல் உரிமைச் சட்டம், பிரிவு 6(3)ன் படி கோரப்படும் தகவல் வேறொரு அதிகார அமைப்பிடம் இருக்கும்போது தகவல் கோரும் விண்ணப்பத்தை , அது எந்த துறைக்கு செல்லவேண்டுமோ அந்தத்துறைக்கு 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இந்த தகவலை மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த சட்டவிதிகள் பின்பற்றப் படாததோடு, மனுவைப் பெற்று சுமார் 15 நாட்களுக்கு பிறகு பதில் தயாரிக்கப்பட்டு ,கையெழுத்தாகி அதன்பிறகு ஒரு வாரம் கழித்தே அந்த பதில் நம்மை வந்தடைந்தது)
மேற்கண்ட விவகாரங்களை விளக்குமாறு மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பப் பட்டுள்ளது. அதற்கான பதில்களும், தொடர் நடவடிக்கைகளும் இங்கு வெளியிடப்படும்.
Friday, July 11, 2008
பளபளா சூப்பர் மார்க்கெட்களும், பல்லிளிக்கும் தொழிலாளர் - நுகர்வோர் நலன்களும்...!
இந்த மாற்றத்தில் காணாமல் போய்விட்ட மூதாட்டிகளும், வயசாளிகளும் எங்கு போனார்கள் என்ற கேள்வி நம்முள் எழுவதில்லை.
இதுபோன்ற நவீனமயமான சில்லறை விற்பனை நிலையங்களில் உள்ள காய்கனிகள் ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக தோன்றினாலும் அங்கு பணியாற்றும் விற்பனையாளர்கள் மிகவும் புழுக்கத்துடனே இருப்பதை நம்மில் பலரும் உணருவதில்லை. ஒரு உதாரணத்திற்காக மோர் ஃபார் யூ (MORE for you) என்ற பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தும் ஆதித்ய பிர்லா குழும (ADITYA BIRLA GROUP) த்தை பார்ப்போம். சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள, பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான இந்த குழுமத்தில் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணி புரிவதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் பெருமிதம் கொள்கிறது. மேலும் பணியாளர்களை நல்ல முறையில் நிர்வகிப்பதில் ஆசியாவிலேயே முதல் 20 நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் கூறுகிறது.
இந்த நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவான “மோர்” நவீன விற்பனை நிலையங்களில் அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. அதற்கேற்ப சுமார் 15 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைக்கப்படுகின்றன.
இங்கு பணியாற்றும் அடிப்படை பணியாளர்கள், வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சுமாராக 2,500 முதல் 3,500 ரூபாய் வரையே மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்களோ காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை இடைவெளியின்றி இயங்குகின்றன. பணியாளர்கள் ஷிப்ட் முறைப்படி பணியாற்றுவதாக தொழிலாளர் நலத்துறைக்கு கணக்கு காட்டப்பட்டாலும் உண்மை அதுவல்ல.
பல சிறிய கிளைகளில் மேற்பார்வையாளர், மேலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை.
இந்த விற்பனை நிலையங்களுக்கு தேவையான விற்பனைப் பொருட்கள் அந்தந்த நகரின் மைய கிட்டங்கி(Warehouse)யிலிருந்து, தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தப் பொருட்கள் பட்டியல்படி இருக்கிறதா என்பதை சரி பார்ப்பதற்கான முறையே பல இடங்களில் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு தேவையான ஆட்களும் இருப்பதில்லை; நேரமும் இருப்பதில்லை என்று பணியாளர்கள் கூறுகின்றனர். எப்போதும் பணியாளர் பற்றாக்குறையிலேயே இருக்கும் இந்த விற்பனை நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், கடை திறக்கும் நேரத்தில் அல்லது மூடும் நேரத்தில் வரும் இந்த சரக்குகள் பட்டியல்படி இருக்கிறதா என்பதை பார்க்காமலேயே அவை அலமாரிகளில் ஏற்றிவிடுகின்றனர்.
எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டத்தில் தத்தளிக்கும் இந்த விற்பனை நிலையங்களில் தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாததால், நாளின் முடிவின்போது காசாளரிடம் இருக்க வேண்டிய தொகை குறைந்து அதற்கு காசாளர் பொறுப்பேற்கும் நிலை மிகச்சாதாரணமாக ஏற்படுகிறது. சுமார் 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் எந்த ஒரு காசாளரும் முழு சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
அதைபோல கடையில் உள்ள சரக்குகள் அனைத்தையும் மாதம் ஒரு நாளில் கணக்கு சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. அன்று மொத்த வரவிலிருந்து, விற்பனை போக மீதியுள்ள மதிப்பிற்கு சரக்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை.
குறைபடும் மதிப்பு குறைவாக இருக்கும் நிலையில், நிறுவன நிர்வாகமே பணியாளர்களை உடல்ரீதியாக தாக்கியோ, வேறுவிதமாக மிரட்டியோ எழுதி வாங்கிக்கொண்டு ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனர்.
குறைபடும் பொருட்களின் மதிப்பு அதிகரிக்கும் நிலையில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் விற்பனை பணியாளர்கள் மீது புகார் செய்யப்படுகிறது.
முதலாளிகள், காரில் வருபவர்கள், வெள்ளைத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலத்தை கோர்வையாக பேசுபவர்கள் நல்லவர்கள்; தொழிலாளிகள், பஸ்ஸிலோ, சைக்கிளிலிலோ வருபவர்கள், கருப்புத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் கெட்டவர்கள் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனவே இதுபோன்ற எந்த ஒரு சில்லறை விற்பனை நிலையத்திலும். எந்த ஒரு பணியாளரும் ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்ற முடிவதில்லை.
இத்தகைய பிரசினைகள் காரணமாகவே சுபிக்ஷா என்ற பெயரில் மிக ஆடம்பரமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சங்கிலித்தொடர் விற்பனை நிறுவனம், மிகவும் நலிந்துபோய் இப்போது வேறொரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது.
இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு எந்த விதமான சட்டரீதியான உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. எப்போதோ இயற்றப்பட்ட குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுவிடுவதால் அவர்கள் இந்த நிறுவனங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
இந்த அவலம், வாடிக்கையாளர்களின் புலன்களை அடைவதேயில்லை. அப்படியே அவர்கள் உணர்ந்தாலும் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.
ஆனால் இந்த நிறுவனங்கள் பணியாட்களை மட்டுமல்ல, வாடிக்கையாளரையும் மோசடி செய்கின்றன என்பதை பலரும் உணருவதில்லை.
குறிப்பாக இதுபோன்ற பல நிறுவனங்களும் ஆட்டா மாவு, சர்க்கரை, எண்ணெய் வகைகள், நூடுல்ஸ் போன்றவற்றை சொந்த தயாரிப்பாக விற்பனை செய்து வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் டிடர்ஜன்ட் சோப், ஷாம்பூ போன்ற சொந்த தயாரிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன.
ஆனால் இந்தப்பொருட்களின் கவர்கள் இருக்கும் அளவுக்கு பொருட்கள் தரமாக, சரியான அளவில் இருக்கிறதா என்பதை பலரும் கவனிப்பதில்லை. உணவுப் பொருட்களில் அவற்றின் காலம் காலாவதியான பின்னரும் அவை விற்பனை செய்யப்படுகின்றன. சுட்டிக்காட்டி கேட்பவருக்கு மட்டுமே புதிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆக இந்த நிறுவனங்கள் பணியாளர்களை மட்டுமல்ல; வாடிக்கையாளர்களையும் ஏமாற்றியே லாபம் ஈட்டி வருகின்றன.
ஆனால் இந்த நிறுவனங்களின் இத்தகைய அறமற்ற போக்குகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படாமல், லாபம் ஒன்றே குறி என்ற அடிப்படையில் அதன் பங்குதாரர்களும் இருக்கின்றனர். பங்குச்சந்தையில் இந்த நிறுவனங்களின் மதிப்பே இந்த நிறுவனங்களின் தகுதியாக விளங்குகிறது.
மொத்தத்தில் காணாமல் போனது காய்கறி விற்று பிழைத்துக்கொண்டிருந்த மூதாட்டிகளும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும்தான். இனி இவர்களை கீழே உள்ளதுபோன்ற கலைப்படைப்புகளில்தான் பார்க்கமுடியும்.இவர்களோடு தொழிலாளர் நலன், நுகர்வோர் நலன் போன்ற அடிப்படை உரிமைகளும் காணாமல் போய்விடுவதை நாம் கவனிக்கத்தவறி விடுகிறோம்.
இந்த சமூக அவலங்களை கண்டும் காணாமல் காலம் கழிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் உண்மையான அபாயம் காத்திருக்கிறது.
இதுபோன்ற சமூக அவலத்திற்கு எதிராக சாமானியனான நான் என்ன செய்யமுடியும்? என்ற கேள்வி எழலாம். ஏராளமாக செய்ய முடியும்! முதல் கட்டமாக இதுபோன்று சில்லறை விற்பனை மூலம் நுகர்வோர் சந்தையை தனதாக்க முயலும் உள்நாட்டு, பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை புறக்கணிக்க முடியும். இதை வெற்றிகரமாக செய்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்லாமலே புரிந்துவிடும்.
-மக்கள் சட்டம் குழு
Tuesday, July 8, 2008
சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...
.
சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
-என்ற திருக்குறளே பழந்தமிழர், சுற்றுச்சூழல் குறித்து கொண்டிருந்த பரந்த பார்வையை விளக்கும்.
.
சுதந்திரத்திற்கு பிந்தைய சட்டங்களே நாட்டின் இன்றைய நிலையை நிர்ணயிப்பதால், தற்போதைய சட்டங்களை குறித்து பார்ப்போம்.
.
இந்தியாவில் உள்ள சட்டங்களில் முதன்மையானது, இந்திய அரசியலமைப்புச் சட்டமே! இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுக்கும் (உறுப்பு 48A) , குடிமக்களுக்குமான (உறுப்பு 51A[g]) சுற்றுச்சூழல் குறித்த கடமைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் குறித்த அரசுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் “அரசுக்கு வழி காட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, “அரசு அமைப்புகள் தேசத்திலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்”.
.
சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது (A) பகுதியில், குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, “இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு விலங்குகள் மற்ற உயிரினங்கள் உள்பட உள்ள இயற்கைச் சுற்றுச் சார்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில் பரிவு காட்டவும் ஆவன புரிவதை கடமையாக கொள்ள வேண்டும்”.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்து மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சுற்றுச்சூழல் குறித்த அரசு மற்றும் குடிமக்களின் கவனம் தேவையான அளவு இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
.
ஆனால் அதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் செயல்படா தன்மையுடையதாகவும் இருக்கின்றன. அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் உள்ள அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை செயல்படுத்த வலியுறுத்தி நீதிமன்றங்களை நாடமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 37ன் படி, அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவையாகும். சட்டங்களை இயற்றும்போது, இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை, எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.
.
இவ்வாறு நீதிமன்றங்களின் மூலம் வலியுறுத்த இயலாத பிரிவுகளின் கீழ்தான் மேலேக் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
.
எனினும் அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, இந்திய நீதித்துறையையும் ஓரளவு நல்லவிதத்தில் பாதிக்கவே செய்துள்ளது. நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஏ. எம். அஹமதி மற்றும் மூத்த வழக்கறிஞர் எம். சி. மேத்தா போன்றவர்களின் உழைப்பாலும், ஈடுபாட்டாலும் சுற்றுச்சூழல் குறித்த இந்திய நீதித்துறையின் பார்வை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
.
இந்திய அரசியல் சட்டத்தின் செயல்படும் பிரிவில் அமைந்துள்ள உறுப்பு 21ல் குறிப்பிடப்பட்டுள்ள, சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது என்ற சட்ட வாசகத்திற்கு மிகவிரிந்த பொருளை நீதிபதிகள் கொடுத்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்ற புரிதலில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது அடிப்படை உரிமை மீறலாக பொருள் கொள்ளப்பட்டு பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
.
இந்த அடிப்படையில் இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் கீழ் கீழ்க்கண்ட கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
.
5. “முன்னெச்சரிக்கை குறிக்கோள்”(Precautionary principle) –படி அரசு அதிகார அமைப்பு, சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்கான காரணங்களை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். புதிய மேம்பாட்டு பணிகளும், தொழில் அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றின் உரிமையாளர்களுக்கே உடையது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அரசு அமைப்புகள் கொள்கை முடிவுகளை மேற்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்த தேவையான சட்டங்கள் போதுமான அளவில் இல்லாமையே இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணமாகும். மேலும் இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு அமைப்பு சீரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதும். அந்த சட்டங்களை செயலிழக்க செய்வதில் அரசு மற்றும் தனியார் தொழில் துறைகளும் முனைப்புடன் நிற்பதும் இந்த பிரச்சினைக்கான மிகமுக்கியமான காரணமாகும்.
Wednesday, July 2, 2008
தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!
.
இந்தப் பல்கலை கழகத்தில் பல ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், மற்ற பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவதாகவும், பணி உத்தரவாதம் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும் செய்திகள் வந்ததை அடுத்து, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அதிகாரி குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், பொதுத்தகவல் அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு, 01-04-2008 அன்று கேள்விப் பட்டியல் அனுப்பப்பட்டது.
ஏப்ரல் முதல் தினத்தன்று அனுப்பப்பட்ட கேள்விப்பட்டியலுக்கு, 15-05-2008வரை பதில் வராத நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கு மேல்முறையீட்டு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து 26-05-2008 அன்று பதில் அனுப்பினார்கள்.
நமது கேள்விகளும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதில்களும்...
கேள்வி 1: அண்ணா பல்கலைக் கழகத்தில் எத்தனை ஆசிரியர்களும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணி புரிகின்றனர்?
பதில் : பேராசிரியர்கள் - 115, துணைப் பேராசிரியர்கள் – 137, விரிவுரையாளர்கள் – 220
அமைச்சுப்பணியாளர்கள் – 297, தினக்கூலி அடிப்படையில் – 260, தொகுப்பூதியம் அடிப்படையில் – 52.
தொழில்நுட்ப பணியாளர்கள் – 661, தினக்கூலி அடிப்படையில் – 4.
(கேள்வியைவிட கூடுதல் தகவல்கள் தரப்பட்டுள்ளன)
கேள்வி 2: முழு நேரம் மற்றும் பகுதி நேர அடிப்படையில் எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் எந்த அடிப்படையில் (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) பணியமர்த்தப்பட்டனர்?
பதில்: 1 துணைப் பேராசிரியரும், 100 விரிவுரையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். மேலும் 40 பேர் விசிட்டிங் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர்.
அமைச்சுப் பணியாளர் பணியிடங்களில் 177 நிரப்பப்படாமல் உள்ளது.
தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களில் 361 நிரப்பப்படாமல் உள்ளது.
(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை. நிரந்தர ஆசிரியர்கள் குறித்த தகவலோ, நிரந்தர ஆசிரியரல்லாத பணியாளர்கள் குறித்த தகவலோ இல்லை)
கேள்வி 3: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எத்தனை பேர் பணி புரிகின்றனர்? அவர்கள் பணியமர்த்தப்பட்ட தன்மையை (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) கூறவும்?
பதில்: பொருந்தாது.
(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை.)
கேள்வி 4: அண்ணா பல்கலைத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் எவ்வளவு?
பதில்: 128 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
( இந்த கேள்விக்கான பதிலின் சில பகுதிகள் 2ம் கேள்விக்கான பதிலில் இடம் பெற்றுள்ளன. அதை நீங்கள்தான் தேடிப்படித்து புரிந்து கொள்ள வேண்டும்)
கேள்வி 5: இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை தரவும்?
பதில்: (பதில் அளிக்கப்படவில்லை)
கேள்வி 6: தொழிலாளர் நலத்திட்டங்களான சேமநலநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டங்களின்கீழ் எத்தனை ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்?
பதில்: 1-4-2003க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பொதுசேமநல நிதி மற்றும் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள். அந்த தேதிக்கு பின் சேர்ந்தவர்கள் பொதுசேமநலநிதி திட்டத்தில் பயன்பெறும் தகுதி அற்றவர்கள்.
(பல்கலைக் கழகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிக்கை தெரியாது போலிருக்கிறது.)
கேள்வி 7: ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களில் சிலர் பொது சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி போன்ற திட்டங்களில் பயன் பெறுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தால் எந்த சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் விலக்கப்பட்டனர்?
பதில்: 01-04-2003க்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்கள் பங்கீட்டு ஒய்வூதிய திட்ட(Contributory Pension Scheme)த்திற்கு மட்டுமே தகுதி பெற்றவர்கள்.
கேள்வி 8: ஆசிரியர்களில் எவருக்கேனும் பல்கலைமானியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லையாயின், அவர்களுக்கு சேமநலநிதி திட்டம் பொருந்துமா?
பதில்: அனைத்து ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆசிரியரல்லாத அமைச்சுப்பணியாளர்களுக்கு மாநில அரசு ஊதிய விகிதங்களின் கீழ் ஊதியம் வழங்கப்படுகிறது.
(நிரந்தர பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படலாம். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவோருக்கு எந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை.)
பல்லாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தையும், அதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் ஒரு முக்கிய பல்கலைக்கழகத்தின் செயல்பாடு இந்த அளவில்தான் உள்ளது.
மேலும் விளக்கம் கேட்டு மீண்டும் ஒரு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு வரும் பதில்களும் வெளியிடப்படும்.