Monday, January 2, 2012

தற்கொலை - சட்டத்தின் பார்வையில்...

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது உடலுக்கு தீ வைத்தல் அல்லது தூக்கில் தொங்குதல் அல்லது உயரமான இடத்திலிருந்து குதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வதாகவும், 1980லிருந்த தற்கொலை விகிதத்தை விட 2006இல் பதிவான தற்கொலை விகிதம் 67% அதிகமாகும் என்றும், அதிகப்படியான தற்கொலைகள் ஆண்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்வதாகவும், அதே போல 2006ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 41% சுய தொழில் செய்பவர்கள், 21.2% இல்லத்தரசிகள், 11.5% பணியில் இருப்பவர்கள், 7.5% வேலையற்றோர், 5% மாணாக்கர்கள், 0.9% பணியிலிருந்து ஒய்வுபெற்றோர், 12.8% இதர பிரிவினர்கள் என்றும், மேலும் 2006இல் இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் 2.5 விழுக்காடு தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைகள் ஆகும் என்றும் “தேசிய குற்ற பதிவுகள் கழகம்” (National Crime Record Bureau) தனது அறிக்கையில் கூறுகிறது. 
 
தற்கொலைக்கான காரணங்கள்:

மன அழுத்தம், மன சிதைவு, உளவியல் நோய்கள், சமூக கலாச்சார அழுத்தங்கள், காதல் தோல்வி, வறுமை, கடன், அளவுகடந்த பேரச்சம், ஈடு செய்யமுடியாத இழப்பு, தாங்கிக்கொள்ள முடியாத வலி, பெருந்துயரம், கடுமையான சித்திரவதைகள், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், பிடித்தமானவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு குற்ற மனப்பான்மையை உண்டாக்கவும், தேர்வில் தோல்வி, நம்பிக்கையற்ற நிச்சயமற்ற தன்மையை உணர்தல், வாழத் தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குதல், பொது பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடலுக்குத் தீவைத்தல், தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைமைக்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக, வகுப்பறை வன்முறை, ஒதுக்கி வைத்தல் மற்றும் குற்ற உணர்ச்சி என்பது போன்ற பல்வேறு காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக பொதுவாக தற்கொலைகள் நிகழ்கின்றன. 


மதங்களும் தற்கொலைகளும்:

அகித்தொப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம் பண்ணினார்கள்.” என்று புனித வேதாகமத்தின், 2 சாமுவேல் அதிகாரம் 17, வசனம் 23லும், “அப்பொழுது அவன் (யூதாஸ்) அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்து விட்டு, புறப்பட்டுபோய், நான்று கொண்டு செத்தான்” என்று மத்தேயு அதிகாரம் 27, வசனம் 5ல் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் கிறித்தவம், இந்து, இசுலாம், சீக்கியம், யூதம் மற்றும் புத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களுமே தற்கொலைகளை கண்டிக்கின்றன.

வரலாற்றில் தற்கொலைகள்:

சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த குயிலி என்பவரும், அதை ஒட்டிய காலகட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் என்பவரும், நாட்டின் விடுதலைப்போரில் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மன்னர் சேதுபதி இறந்தபோது அவரது தகனத்தின் போது, அவரது மனைவிகள் 56 பேரும் அந்த நெருப்பில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வரலாறு. ஈழ மக்கள் தங்களின் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தற்கொலைப் படையை உருவாக்கினார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம்,1860:

பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்: 

“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி  அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலை செய்துகொள்ளப்படுவதற்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.   

பிரிவு:306. தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்: 

“ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற்கொலை செய்து கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும்  பத்து ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.

பிரிவு:309. தற்கொலை செய்துகொள்ள முயற்சி: 

“தற்கொலை செய்துகொள்ள முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய ஏதாவது ஒரு செயலைச் செய்கிற எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்க்கு மெய்காவல் தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து  தண்டிக்கப்படுதல் வேண்டும்”.


இந்திய அரசியல் சாசனம்,1950:

சரத்து:21. “சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது”.

இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கை:

1971ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கையானது,   “தன்னளவில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவருக்கு அளிக்கப்பட வேண்டியது ஆற்றுப்படுத்துதலே தவிர தண்டனை அல்ல. அப்படியாக தண்டனை அளிப்பதென்பது ஒருவருக்கு இருமுறை தண்டனை அளிப்பது போன்றதாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309 நீக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது. 


தற்கொலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:

1986ஆம் ஆண்டு, ‘தற்கொலை செய்துகொள்வதும் அடிப்படை உரிமையே’ என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்முறையாக ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 

மும்பை நகர காவல்படையைச் சேர்ந்த காவலரும், மனநலம் பாதிக்கப்பட்டவருமான  ‘மாருதி ஸ்ரீபதி துபால்’ என்பவர், தனது வாழ்வாதாரத் தேவைக்காக ஒரு கடை வைத்துக்கொள்ளக் கோரியிருந்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட மன அழுத்ததின் விளைவாக,  மாநகராட்சி அலுவலக அறைக்குள் தனக்குத்தானே நெருப்பு வைத்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அவர் மீது, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்ற குற்றத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.

அவரது தர்ப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ‘தற்கொலை செய்து கொள்வதற்கான விருப்பமானது இயற்கையானதல்ல, ஆனால்  அதேவேளையில்  அது சாதாரணமானதோ, பொதுவானதோ அல்ல. மேலும் நோய், வாழ்வில் தாங்கிக் கொள்ளமுடியாத நிலைகள், கொடுமைகள், அவமானமான சூழல்கள் மற்றும் புத்தி சுவாதீனமில்லா நிலை போன்ற பல்வேறு நிலைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணம் கொள்கிறார். எனவே இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள, உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கான உரிமையும் உள்ளடங்கும் என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்றும் அறிவித்தது.

ஆனால் 1987ஆம் ஆண்டு, இதற்கு முற்றிலும் புறம்பாக ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றமானது, ‘சென்னா ஜெகதீஸ்வர்’ என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தற்கொலை செய்துகொள்வது உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ளவதற்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல என்றும் தீர்ப்பிட்டது.
    
தற்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்:

மேற்கண்ட தீர்ப்பினை 1994ஆம் ஆண்டில் பி.ரத்தினம் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச  நீதிமன்றமும் உறுதி செய்தது.

தற்கொலை செய்து கொள்வது உரிமை என்றும், உரிமை இல்லை என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளினால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து இறுதியாக, 1996ஆம் ஆண்டு, ‘கியான் கவுர்’ என்பார் தொடர்ந்த வழக்கில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலதிற்கெதிராக தொடரப்பட்டிருந்த 6 வழக்குகளை ஒன்றாக இணைத்து, “தற்கொலை செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதற்கான உரிமை உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல” என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஆயம் விரிவாக விவாதித்து, தீர்ப்பிட்டது. இதே தீர்ப்பினை கடந்த 2011 மார்ச் மாதத்தில், கருணைக் கொலை தொடர்பான, பரவலாகப் பேசப்பட்ட ‘அருணா ராமசந்திரா ஷன்பக்’ என்ற வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தற்கொலையைத் தவிர்க்க சில வழிகள்:

வறுமை மற்றும் பெரும்கடன் சுமைகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாக தலையீடு செய்து, தொடரும் இந்த அவலநிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் தனிமையை தவிர்த்தல் வேண்டும். பிடித்தமானவர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் அதிகமாக பகிர்ந்துகொள்ளுதல், பிரச்சனைகளின் போது தனக்குப்பிடித்தமான பொம்மைகள் அல்லது கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிக்கொள்வது போன்ற வழிகளில் கவனத்தை தனக்குத்தானே மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். 

தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம், எந்த காரணத்தை கொண்டும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுதலை தவிர்த்தல் மற்றும் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்குதல், அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் தவிர்க்கப்படல் வேண்டும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வு அல்ல என்ற திடமான கருத்தை கல்வி, பாட திட்டங்கள், விளம்பரங்கள், குறும்படங்கள், பயிற்சிகள் என்பது போன்ற பல்வேறு வழிகளில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து உறுதிபடுத்துதல். போராட்டமே வாழ்க்கை என்பதைப் புரியவைத்தல், ஆற்றுப்படுத்துதல் மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். 

ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும் அதன் மூலமாக ஒரே ஒரு மனித உயிரைக்கூட உருவாக்கம் செய்யவோ, விலைக்கு வாங்கவோ முடியாது என்பது பட்டவர்த்தமான உண்மை. எனவே, மத்திய மாநில அரசுகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டில் பகிர்வுக்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் சரியான துணையில்லை என்ற காரணத்தால் நிகழும் தற்கொலைகளை என்ன சொல்லி நியாயபடுத்தப்போகிறோம். ஒருவருக்கு வேறு எதைக் கொடுப்பதைவிடவும், ஏதோ ஒரு வகையில் அவரது வாழ்வின் மீதான பிடிப்பையும், நம்பிக்கையையும் கொடுப்பதே மிகச்சிறந்த ஈகையாகும். இது போன்றவைகளின்  வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.  


-இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

2 comments:

PERIYA PATTINAM said...

நன்றி தோழரே ..அருமையான பதிப்பு

Unknown said...

பயன்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!