Friday, May 6, 2011

அமலுக்கு வராமலே அராஜகம் செய்யும் தவணைக் கொள்முதல் சட்டம்

அதிக மதிப்புடைய சரக்கு வாகனங்கள், மகிழுந்து இருசக்கர, மூன்று சக்கர வாகனம், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் மடிக்கனினி என்பன உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, அதன் மொத்த விலையில், ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை முன்பணமாக கட்டிவிட்டு மீதுமுள்ள தொகையை தவணை முறையில் வாரக் கணக்கிலோ, மாதக்கணக்கிலோ செலுத்தும் முறையே தவணைக் கொள்முதல் முறையாகும். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த முறையானது பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
 
தங்களது கனவுகள் நனவாவதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதே நேரத்தில் பல ஏழை குடும்பங்களை சிறிது சிறிதாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி கொன்று கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
தவணை கொள்முதல் (HIRE PURCHASE SCHEME) திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் :-

 சமீபத்தில் சென்னையில் புகழ் பெற்ற பட்டியலின தலைவரான அமரர் எம்.சி.ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது. அவர்கள் தவணைக் கொள்முதல் முறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாங்கிய பொருட்களுக்கான தவணையைத் திரும்ப செலுத்த முடியாததால் அந்த நிறுவனத்தினர் கொடுத்த சித்ரவதைகளின் காரணமாக ஏற்பட்ட‌ மன அழுத்தத்தின் விளைவாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறப்பட்டது. இது போன்ற தற்கொலைகள் தமிழகத்தில் இன்று பரவ‌லாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

24 மாத ஒப்பந்தத்தில் குறிப்பாக 20 மாதங்கள் இருசக்கர வாகனத்திற்கு முறையாக தவணை தொகை செலுத்திவிட்டு, மீதமுள்ள நான்கு மாத தவணையினை செலுத்த தாமதமான காரணத்திற்காக அமுலுக்கே வராத தவணை கொள்முதல் சட்டத்தினை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக ‘வங்கி குண்டர்களால்’ வீடு புகுந்து களவாடப்படும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதிலும் குறிப்பாக ஓரளவிற்கு பண வசதி கொண்டவர்களையெல்லாம் கண்டும் காணாமல் விட்டு விட்டு சாமானியர்களையும், விவசாய பணி மற்றும் பலசரக்கு சாமான்கள் கொண்டு செல்வதற்காக இரு சக்கர வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களை கடன்பட்டு வாங்கியிருக்கும் கிராமத்து ஏழைகளைத்தான் ஆட்டுவித்தும், மிரட்டி வருகிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.

இன்னும் குறிப்பாக இப்படியொரு சட்டமே அமுலில் இல்லையென்றும், வங்கி, நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் அமைப்புகள் போன்றவற்றிற்கு தவணை தொகையினை செலுத்த தாமதிக்கும் ஒருவரின் உடமையை அத்துமீறி திருட்டுத்தனமாக பறிமுதல் என்ற ‘நவீன திருட்டுத்தனம்’ செய்வதற்கு துளியும் உரிமையில்லை என்ற செய்தி பெரும்பாலான காவல் நிலையங்களுக்கு தெரியவில்லை என்பதும் இவ்வாறு வங்கிகளால் சட்டத்திற்கு முரணாக அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்களால் பறிமுதல் நடக்கும் போது பாதிக்கப்பட்டோருக்கு எதிராகத்தான் காவல்துறையின் போக்கும் இருந்து வருகிறது என்பது அப்பட்டமான உண்மை. இதற்கான காரணம் காவல்நிலையங்களுக்கு இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சென்றடையவில்லை என்பது தான் நிதர்சனம்.

உலகமயமாக்கல் சூழலால் சமீப காலமாக கிராமங்கள் காலியாகி நகரங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு மற்றும் பெரு நகரங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் துவங்கப்படுகின்றன. தொலைக்காட்சி, செய்தித்தாள் உள்ளிட்ட ஊடகங்கள் விளம்பரங்கள், செய்திகள் மூலமாக பொதுமக்களிடையே அதிக அளவில் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வு காலச்சாரத்தை திட்டமிட்டு தொடர்ந்து உருவாக்குகின்றன. 

இதன் விளைவாக நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையிலுள்ள குடும்பங்கள் தங்களது பொருளாதார தகுதிக்கும் கூடுதலான மதிப்புடைய பொருட்களை வாங்கிட வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த மனநிலையை தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனிநபரின் வாங்கும் சக்திக்கும் அதிக மதிப்பிலான பொருட்களுக்கு, முன் தொகையாக ஒரு குறிப்பிட் அளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள தொகையை தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் என்று வசீகர திட்டங்களை அறிவித்து எண்ணிக்கையிலான குடும்பங்களை கடன் சுமைக்குள் தள்ளுகிறது.

தவணைக் கொள்முதல் முறையின் பின்ன‌ணி:

 உலகின் காலனியாதிக்கத்தை உருவாக்கிய இங்கிலாந்தில் 1846 ஆம் ஆண்டில் முதன் முதலாக‌ இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும் தளத்தில் அரியதொரு கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. சிங்கார் எனும் நிறுவனம் தையல் இயந்திர பணிகளில் அறிமுகம் செய்தது ஒப்பந்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சரக்குகள் கொண்டு செல்வதற்கான குதிரை வண்டிகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் மெல்ல மெல்ல பரவிய இந்த திட்டமானது, தானியங்கி கருவிகள் கண்டறியப்பட்ட காலத்தில் இன்னும் அதிகமாய் பரவத் தொடங்கியது.

 துவக்க காலங்களில் பொருட்களின் உற்பத்தியாளர்கள் பொருட்களை வாங்குபவர்களுடன் நேரடியாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். நிதி உதவி செய்து விற்பனை செய்தார்கள். முதலாம் உலகப் போருக்கு பிறகு நீண்ட கால ஒப்பந்த முறை அமலுக்கு வந்தது. இந்த சமயத்தில் தான் உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே தரகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதே கால கட்டத்தில் தான் இங்கிலாந்திடம் காலனி நாடாகயிருந்த இந்தியாவிலும் இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களின் இதர பொருட்களுக்காக தானியங்கி பொருட்களும், அதற்குத் தேவையான உதிரி பாகங்களும் ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆன போதிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் இந்தமுறை நாடு முழுவதும் விரிந்து பரவத் தொடங்கியது. 1960களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்தது ஆனாலும் ஆழமாக வேரூன்றவில்லை.

வர்த்தக ரீதியாக செயல்பட்ட வங்கிகளும் இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்தன. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி செய்ய முடியாத காரணத்தால் தவணை கொள்முதல் மூலம் பொருட்களை விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தவணை முறையில் கடன் வழங்கும் திட்டங்களை வங்கிகள் மேற்கொள்ளத் துவங்கின. இப்படியாக தவணைக் கொள்முதல் முறை இந்தியாவில் வேரூன்றி வளர துவங்கியது.

தவணைக் கொள்முதல் சட்டம் 1972, இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, பொருட்கள் விற்பனைச் சட்டம் 1830 போன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்தாலும் இவைகளின் சரத்துகள், நிபந்தனைகள் விதிகளை உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டில் தவணைக் கொள்முதல் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் அமலுக்கு வரும் நாள் குறித்து மூன்று முறை அரசிதழில் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் இறுதியாக எந்த தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று நாள் குறிப்பிடப்படாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியாக ஒரே ஒரு நாள் கூட அமலுக்கு வராத இந்த சட்டம் இறுதியில் கடந்த 2005 ஜூன் மாதம் 23ம் நாள் இரத்து செய்யப்பட்டது.

அமலுக்கே வராமல் இறுதியில் இரத்தும் செய்யப்பட்டுவிட்ட இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தான் தற்போது வரையிலும் தவணைக் கொள்முதல் முறையில் பொருட்களை வாங்கியவர்கள் தவணைகளைச் சரியாக திருப்பிச் செலுத்தாதபோது அந்த பொருளையோ, வாகன‌த்தையோ குண்டர்கள், அடியாட்கள் மூலமாக சட்டத்துக்குப் புறம்பாக தாக்கிச் செல்லும் அடாவடி நிலை நடந்தேறி வருகிறது.

தவணையை சரியாகத் திருப்பிச் செலுத்தாதபோது ஒப்பந்த மீறுகை ஏற்படுவதால் இந்திய ஒப்பந்தச் சட்டம் பொருட்கள் விற்பனை சட்டம் போன்ற சட்டங்களின் மூலமாக உரிமையியல் நீதிமன்றத்திலும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மூலமாக நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும், முறையாக அறிவிப்பு செய்து தவணை தொகையினை கட்டத்தவறுவோர் மீது வழக்கு தொடர்ந்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தவணை முறையில் பொருட்கள் வாங்குபவர் பின்னர் வேண்டுமென்றே கட்ட மறுத்தாலோ அல்லது கட்ட இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அவர் ஜாமீன் சொத்தாக சமர்ப்பித்துள்ள ஆவணங்களை அல்லது உடைமைகளை முறைப்படி அறிவிப்பு வழங்கி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து மீட்டுக் கொள்ளலாம். அதனை விடுத்து குண்டர்களை பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை கையாளக்கூடாது என்று பல்வேறு மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடர்ந்து தீர்ப்புகள் பகரப்பட்டு வருகின்றன.

அரசின் கடமையும் - பொது மக்களின் விழிப்புணர்வும் :-

தவணைக் கொள்முதல் வழங்கும் நிதி நிறுவனங்களினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடங்கள் உருவாக்கப்படுகிறது என்றும் அது போன்ற சூழ்நிலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 20வது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “கனா கண்டேன், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா” போன்ற தமிழ்த் திரைபடங்களில் தகுதிக்கு மீறி தவணைக் கொள்முதலில் பணம் வாங்கிய குடும்பங்கள் எப்படியெல்லாம் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவாகக் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. ஆக பொது மக்களும், தங்களுக்கு தாங்களே சுய பரிசோதனை செய்து கொண்டு விழிப்புடன் இருத்தல் அவசியமாகும்.

இப்படியாக அமலுக்கே வராமல் இரத்து செய்யப்பட்டுவிட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இன்று சமூகத்தில் தனியார் நிதி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்புறம்பான செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த சட்டப்புறம்பான செயல்கள் தொடர்பான நிகழ்வுகளில் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு முறையான பாதுகாப்பினையும் வழங்கி, சட்டபுறம்பான நிகழ்வுகளில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும். 

இ. இ. இராபர்ட் சந்திரகுமார்
(robertckumar@gmail.com)

2 comments:

மோகனன் said...

மிகவும் அருமையான விழிப்புணர்வு கட்டுரை...

தற்போதைய சூழலில், இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதேனும் நிவாரண வழிகளை சுட்டிக் காட்டி இருக்கலாம்.

புதிதாய் இந்த மாதிரி தவணை திட்டத்தை தேர்வு செய்வோர் என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியிருக்கலாம்..

இதை அடுத்த கட்டுரையில் எதிர்பார்க்கிறேன்

saarvaakan said...

அருமையான முயற்சி பாராட்டுகள்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!