கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர் கட்சிகளின் நடவடிக்கை காரணமாக பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் முடிவடைந்தது. அப்படி சட்டமாக நிறைவேறாமல் போன ஒரு சட்ட மசோதா –விதை சட்ட மசோதா 2010 (Seed Bill 2010). பசுமைப் புரட்சியை தொடர்ந்து புதிய வகை விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு 1966-ம் ஆண்டு விதைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் உலகமய-பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர எண்ணிய மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு விதைகள் சட்ட மசோதாவை (Seed Bill 2004) கொண்டு வந்தது. இச்சட்டம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விதைகள் அனைத்தும் மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென கட்டாயப்படுத்தியது. அப்படி பதிவு செய்தவர் மட்டுமே விதைகளை விற்பனை செய்ய முடியும் என்றும் கூறியது. மேலும் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருந்த இச்சட்ட மசோதா, பலத்த எதிர்ப்பின் காரணமாக, தேவையான மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பட்டது.
அதன்பின் இந்த சட்ட மசோதா பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்பொழுது விதைகள் சட்ட மசோதா 2010 (Seed Bill 2010) என மறு உருவெடுத்துள்ளது. ஆனாலும் இந்த மசோதா பழைய அபாயமிக்க பிரிவுகளுடனேயே வந்துள்ளது. உதாரணமாக, விவசாயிகளுக்கு இச்சட்டத்தின் கீழ் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.
விவசாயிகளின் பாரம்பரிய விதைகளை இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஒரு பயிரின் மூலத்தை (Parentage) தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விவசாய விதைகளை மரபணுமாற்றம் (Genetic Engineering) செய்து புதிய வகை விதை என்னும் பெயரில் அவற்றை பதிவு செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.
மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு (Seed Inspector) ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.
முன்பு இருந்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு புதிய சட்டத்தின் கீழ் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கான பிரதிநிதித்துவமாக வழங்கப்பட்டுள்ளதது. இது மாநிலங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும்.
தாவரங்களுக்கு காப்புரிமை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தாவர ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2001, கூட விவசாயிகளுக்கு உழவர்களின் உரிமைகள் என்னும் பிரிவு இப்படி கூறுகிறது: “இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகத்தை சேமிக்கவும், பயன்படுத்தவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாற்றம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் அல்லது நிலத்தில் விளைவிக்கப்பட்ட விதை உள்ளிட்ட விளைபொருட்களை விற்கவும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்குமுன் ஒரு உழவருக்கு இருந்த அனைத்து உரிமைகளுக்கும் உடையவராகக் கருதப்படுவார்.” ஆனால் இந்த உரிமைகளை பறிக்கின்ற வகையில் விதை சட்ட மசோதா அமைந்துள்ளது. மேலும் இச்சட்டம் தாவர வகை பயிர்களுக்கு 15 ஆண்டு கால காப்புரிமையும், மரவகைகளுக்கு 18 ஆண்டு கால காப்புரிமையும் கொடுக்கிறது. இதனை மிஞ்சும் வகையில் விதைச் சட்ட மசோதா தாவர வகைகளுக்கு 30 ஆண்டு கால பதிவு உரிமையும் மரம் வகைகளுக்கு 36 ஆண்டு கால பதிவு உரிமையும் வழங்குகிறது. அதாவது, இந்த பதிவு உரிமை காலகட்டத்தில் பதிவு பெற்றவரை தவிர்த்து வேறு யாரும் இந்த விதை வகைகளை விற்பனை செய்ய முடியாது.
இந்தியாவில் சுமார் 70 சதவித விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்பட்டால், விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் விவசாயிகளின் அடிப்படை உரிமையான விதை சேமிக்கும் உரிமை கூட தண்டனைக்குரிய குற்றமாக மாறுகின்ற ஆபத்து உள்ளது. மேலும் விதைகள் உற்பத்தி விநியோகம் அனைத்தும் நிறுவனமயமாக்கப்படும்.
நிறுவனமயமாகும் வேளாண்மை
விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் சட்டங்களை இயற்றும் இதே மத்திய அரசு பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. இதன் ஒரு அம்சமாக மத்திய அரசின் கீழ் இயங்கும் உயிரி-தொழில்நுட்ப துறையின் தலைமையில் தனியார்-பொதுத்துறை கூட்டுத்திட்டங்கள் Biotechnology Industry partnership Programme (BIPP) அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி மரபணுமாற்று தொழில்நுட்பம் போன்ற உயிரி-தொழில்நுட்பம் சார்ந்த மரபணுமாற்று விவசாய உற்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு செலவிடப்படும் தொகையை, திட்டதிற்கு ஏற்றவாறு, மத்திய அரசிடம்இருந்து மானியமாக பெறலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழாக மரபணுமாற்று பயிர்களை உற்பத்தி செய்வதற்காக மான்சான்டோவின் இந்திய நிறுவனமான Maharashtra Hybrid Seeds Company, Metahelix Life Science Private Limited மற்றும் Bejo Sheetal Seed Private Limited போன்றவை மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றன.
விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு போகும் நிலையில் விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் இந்திய அரசு, நிறுவனங்களின் உரிமை காக்கும் சட்டங்களை இயற்றுவதும் மானியங்களை வாரி வழங்குவதும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
-மு.வெற்றிச் செல்வன்
1 comment:
ஐயா உங்களின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.சட்டம் மற்றும் மனிதஉரிமைகள் பற்றிய விபரங்கள் தெறியாத எங்களை போன்றோருக்கும் உங்களின் இந்த சேவைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் தொடற வாழ்த்துக்கள் ஐயா.
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!