Thursday, February 10, 2011

பார் கவுன்சில் தேர்தல் – வாக்களிக்கும் முன் சிந்திப்போம்...!

சட்டத்தொழில் குறித்த நெறிகளை வகுக்கும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சிலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர்ந்து ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து வேட்பாளர்களும் தத்தம் வசதிக்கு ஏற்ப பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். சீருடைத் துணி முதல் அலுவலகத்திற்கு குளிர்சாதனப் பெட்டிவரை ஏராளமான அன்பளிப்புகள் உலா வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இவ்வாறெல்லாம் அன்பளிப்புகளை அளித்து பதவிக்கு வரும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் என்ன செய்யப்போகின்றனர்? எதற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடமும் இந்த கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்றாலும், அந்த தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. எனவே பாமரரும் வாக்களிக்கும் தேர்தலில் முட்டாள்தனமாக வாக்களிப்பவர்களைப் பார்த்து கோபப்படாமல் பரிதாபப்படலாம்.

ஆனால் பார் கவுன்சில் தேர்தலோ குறைந்த பட்சம் இரண்டு பட்டங்களைப் பெற்று கற்றுணர்ந்த வழக்கறிஞர்கள் வாக்களித்து, தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல். இந்த தேர்தலிலும் கேள்விகள் கேட்கப்படாமல் வாக்களிப்பதை ஏற்க முடியாது: ஏற்கக்கூடாது!

சமூகப் பொறுப்புள்ள ஒரு நல்ல வழக்கறிஞர், தமது வாழ்க்கையில், மக்களுக்கு பிரசினைகள் இல்லாத சமூகத்தை வடிவமைக்கும் பொறியாளனாக சமூக நோய் தீர்க்கும் மருத்துவனாக புதிய அம்சங்களை சோதித்துப் பார்க்கும்  ஆராய்ச்சியாளனாக அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆசிரியனாக வாழ முடியும்.

            அரசு அமைப்பின் மக்கள் விரோத செயல்பாடுகள், அதிகாரிகளின் செயலற்ற நிலை, சமூகத்தின் அவலம் குறித்து பேசுவதற்கான சுதந்திரம் மருத்துவர்களுக்கோ, பொறியாளர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ, பிற துறை சார்ந்தர்களுக்கோ முழுமையாக இல்லை. ஆனால் இது குறித்து பேசுவதற்கான உரிமையும், தளமும் வழக்கறிஞர்களுக்கு உள்ளது.

உதாரணமாக இந்திய சுற்றுச்சூழல் சட்டவியலில் சரித்திரம் படைத்த எம்.சி. மேத்தா என்று அழைக்கப்படும் மகேஷ் சந்தர் மேத்தாவைக் கூறலாம். இன்று இந்தியாவின் அரசியல் சட்டத்தை படிக்கும் எந்த மாணவரும் எம். சி. மேத்தாவை புறக்கணித்துவிட்டு அரசியல் சட்டத்தில் தேர்வு பெற முடியாது.

ஒரு தனிப்பட்ட வழக்கறிஞரே இவ்வாறு பொருள் பொதிந்த வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்றால், இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சில் என்னென்ன செய்ய முடியும்?

சட்டக்கல்வியையும், வழக்கறிஞர் தொழில் நடத்தைகளையும் இன்றைய நிலையில் பார் கவுன்சிலே முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

ஆனால் சட்டக்கல்வியின் தரமோ, வழக்கறிஞர்களின் தொழில் திறனோ நடத்தை நெறிமுறைகளோ பாராட்டத்தக்க அளவில் இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பினால் ஏமாற்றமே மிஞ்சும்!

எந்தவிதமான அடிப்படைத்தகுதிகளும் இல்லாதவர்களுக்கு சட்டக்கல்லூரி ஆரம்பிப்பதற்கு சர்ச்சைக்குரிய விதத்தில் அனுமதி அளிப்பது; அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய சட்ட அறிவு இல்லை எனக்கூறி பார் கவுன்சில் சார்பாக தனித்தேர்வு நடத்துவது போன்ற இரட்டை வேடத்தையே பார்கவுன்சில் போடுவதாக தோன்றுகிறது.

கல்லூரி செயல்படும் மாநிலத்திலேயே வசிக்காமல், வேறு மாநிலங்களில் வசித்துக் கொண்டு பட்டம் பெறும் வழக்கறிஞர்கள் நேர்மையாக வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

            சட்டக்கல்வி, வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகளை கட்டுப்படுத்துவதோடு பார் கவுன்சிலின் பணிகள் நிறைவடைவதில்லை.

            புதிய சட்டங்கள் இயற்றுவதிலும், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதிலும், நீதித்துறையில் செய்யப்படும் மாற்றங்களிலும் பார் கவுன்சில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

            உலகமய பொருளாதாரச் சூழலில் இந்தியர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் விதத்திலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் பல்வேறு சட்டங்கள் அறிவுச் சொத்துரிமை உள்ளிட்ட துறைகளில் இயற்றப்படுகின்றன.

மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் குடிமக்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை மீறும் பல்வேறு கருப்புச் சட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

            இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சிற்பி மாமேதை அம்பேத்கரின் நோக்கங்களுக்கும், அரசியல் அமைப்புச் சட்ட கருதுகோள்களுக்கும் எதிராக இந்திய அரசு பலமுனைகளிலும் செயல்படுவதாலேயே வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் பரவி வருகிறது. இது குறித்து விரிவான விவாதங்களை முன்னெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பார் கவுன்சிலுக்கு உள்ளது. ஆனால் இது போன்ற விவகாரங்களில் பார்கவுன்சில் அமைப்புகள் எந்த கருத்தையும் கூறியதாக தெரியவில்லை.

            இது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதங்களை முன்னெடுத்து, மக்கள் நலன்களை பாதுகாப்பதும் பார் கவுன்சிலின் கடமையே. உலகில் பல்வேறு முன்னேறிய நாடுகளில் உள்ள பார் கவுன்சில் அமைப்புகள் இது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

            ஆனால் இந்தியாவிலோ இந்திய பார் கவுன்சிலின் தலைவரே, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும் இருக்கும் விநோதமான நிலை நிலவுகிறது. மக்கள் விரோத சட்டங்களை அரசு நிறைவேற்றினாலும் அதை ஆதரிக்கும் கடமை கொண்ட இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரே, இந்திய பார் கவுன்சிலுக்கும் தலைவராக இருப்பதால், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்படும்போது,  அது குறித்து நடுநிலையாக விமர்சிக்கவோ, விவாதிக்கவோ பார் கவுன்சில் முன் வருவதில்லை.

            இந்திய பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும், சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010 போன்ற சட்டங்களின் மூலம் சுயேச்சையாக தொழில் புரிய வேண்டிய வழக்கறிஞர்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சித்தாலும், இந்திய பார் கவுன்சில் செயலற்று இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

            எந்த ஒரு உயிரோ, அமைப்போ தனது இயக்கம் மூலமாகவே தான் செயல்படும் தளத்தை விரிவு படுத்தும். ஆனால் பார் கவுன்சில் அமைப்போ செயலற்று இருப்பதன் மூலமாகவே செயல்படும் தளத்தை சுருக்கிக்கொள்கிறது.

            இந்தச் சூழலில்தான் தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் மேற்கூறப்பட்ட அம்சங்கள் குறித்து எந்த விவாதமும் நடத்தாமலேயே வாக்கு கேட்கும் பணி உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெறுகின்றன.      

உலகின் பல நாடுகளிலும் சமூக ரீதியான மாற்றங்களும், அரசியல் ரீதியான மாற்றங்களும் அந்தந்த நாட்டு வழக்கறிஞர்களால்தான் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரப்போரை முன்னெடுத்தவர்களிலும் பலர் சட்டம் பயின்று, சட்டத்தொழில் புரிந்தவர்களே!

ஆனால் இன்று நாடு இரண்டாவது சுதந்திரப் போரை முன்னெடுக்க வேண்டிய சூழலில், அதற்குரிய அரசியல் விழிப்புணர்வு இல்லாமலோ, அல்லது வேறு காரணங்களாலோ வழக்கறிஞர்கள் பின்னடைந்து இருந்துவிடக்கூடாது. ஒரு சமூகத்தில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சூழலை கணக்கிட்டு முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டிய சமூகக்கடமை சட்டத்தொழில் புரிவோருக்கே உள்ளது.

இவ்வாறு சமூகமாற்றத்தின் ஊக்கியாக செயல்படவேண்டிய வழக்கறிஞர் சமூகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சில், மேற்கூறிய அம்சங்கள் குறித்து எந்த கொள்கையும் இல்லாதவர்களின் கைகளில் சிக்குவது சமூகத்தை சீரழிக்கவே உதவும்.

எனவே பார் கவுன்சில் தேர்தல் வேட்பாளர்களிடம் மேற்குறிப்பிட்ட அம்சங்களில் அவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்புவோம்! வேட்பாளர்களின் தகுதி அறிந்து வாக்களிப்போம்!! சட்டத்தொழிலின் மேன்மை காத்து, சமூக மாற்றத்தை முன்னெடுப்போம்!!!

-சுந்தரராஜன்
(Email: sundar@LawyerSundar.net)

1 comment:

Gunasekaran, Advocate said...

Healthy thoughts. Congrats.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!