Tuesday, December 7, 2010

காவல்நிலையத்தில் எந்தப் புகாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்?

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்துப் புகார்களையும் சமமாக விசாரிக்க மாட்டார்கள். உடனே கொடுப்பதை கொடுத்தால்தான் விசாரிப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.

காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரிப்பது குறித்து சட்டரீதியான நெறிமுறைகளே உள்ளன. சட்ட ரீதியாக குற்றச்செயல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எளிமையாக கூறவேண்டுமானால், உடனடியாக பிணையில் விடக்கூடிய சிறு குற்றங்கள், பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்கள். கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பாலியல் வன்முறை, பயங்கரவாத செயல்பாடுகள் போன்றவை பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்களாக கருதப்படுகிறது. சட்டவிரோதமாக கூடுவது, வாய்ச்சண்டை, சிறு காயங்களை உண்டாக்குதல் போன்றவை சிறு குற்றங்களாக கருதப்படுகிறது. 


இவற்றில் பெருங்குற்றங்களை பிடியாணை வேண்டாக் குற்றங்கள் (Cognizable offences) என்று சட்டவியல் வார்த்தையில் கூறுவர். இத்தகைய குற்றங்களை செய்ததாக கருதப்படுபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலேயே ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்யமுடியும். இவ்வளவு தீவிரத்தன்மை இல்லாத சிறு குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்கள் (Non- Cognizable offences)  என்று அழைக்கப்படும். பிடியாணை என்பதை அரெஸ்ட் வாரன்ட் என்றால் சுலபமாக புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்களாகவும், மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்களாகவும் பிரிக்கப்படுகிறது எனக்கூறலாம்.

இதில் பிடியாணை வேண்டாக்குற்றங்களை விசாரிப்பதற்கு காவல்துறையினருக்கு நீதிமன்றத்தின் முன் அனுமதி தேவையில்லை. எனவே காவல்துறை அதிகாரியே விசாரணையை தொடங்கலாம். குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்யலாம்.

பிடியாணை வேண்டும் குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது. ஆனால் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்க முடியும்.

***

காவல்நிலையத்திற்கு வரும் புகார்களில் குற்றத்தன்மையில் தீவிரத்தன்மை வாய்ந்த புகார்களுக்கே முன்னுரிமை கிடைக்கும். அது நியாயமானதும்கூட! அதே நேரம் தீவிரத்தன்மை குறைந்த புகார்களை விசாரிப்பதில் காவல்துறை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாமே தவிர அவற்றை விசாரிக்க மறுக்கக்கூடாது.

தீவிரத்தன்மை வாய்ந்த கொடுங்குற்றங்களில் காவல்துறையினர் உடனடியாக தலையிடாவிட்டால் இழப்புகள் அதிகரிக்கலாம்: குற்றவாளி தப்பிவிடலாம்: சாட்சிகளும், சான்றுகளும் கலைக்கப்படலாம். இதனால் சமூக ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும். எனவே தீவிரத்தன்மை வாய்ந்த குற்றங்களில் காவல்துறையினர் கவனம் செலுத்தும்போது அதற்கு இடையூறு செய்யாமல் இருப்பதுடன் அந்த விசாரணைகளுக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டியதும் நம் கடமையாகும்.

***

பிடியாணை வேண்டாக் குற்றம் குறித்தப் புகார் ஒன்று காவல் நிலையத்தில் பெறப்பட்டால் உடனடியாக அதை முதல் தகவல் அறிக்கை(First Information Report)யாக பதிவு செய்ய வேண்டும். இந்த முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகல் புகார்தாரருக்கும், மற்றொரு நகல் அந்தப் பகுதியின் குற்றவியல் நடுவருக்கும் (Judicial Magistrate), மற்றொரு நகல் மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும் அனுப்பப்படவேண்டும்.

இதையடுத்து காவல்துறையின் புலன் விசாரணை தொடங்கும். ஒரு காவல்துறை அதிகாரி குற்ற நிகழ்வு குறித்த சாட்சியத்தை திரட்டுவதே புலனாய்வு என்று குற்றவியல் நடைமுறை சட்டம் வரையறை செய்கிறது.

ஒரு குற்றம் குறித்த புலன்விசாரணை என்பது (1) குற்ற நிகழ்விடம் சென்றடைவது (2) வழக்கின் பொருண்மைகளையும், சூழ்நிலைகளையும் உறுதி செய்வது (3) குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல், கைது செய்தல் (4) குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது (5) குற்றம் நிகழ்ந்த இடத்தையும், அது தொடர்பான மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல் (6) சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது எனில், அதற்குரிய குற்றப்பத்திரிகை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது போன்றவற்றை உள்ளடக்கியது.  

மேற்கூறியவற்றை புலன் விசாரணை அதிகாரி செய்யத் தவறும்போது, அது குற்றமிழைத்தவருக்குச் சாதகமாக அமைகிறது. எனவே, ஒரு குற்றவியல் வழக்கில் புலன் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

(வாசகர்களின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கேற்றபடி அடுத்த அத்தியாயங்கள்....
...தொடரும்)

2 comments:

Anonymous said...

முன்ஜாமீன் குறித்து விவரம் வேண்டும்.

abdul said...

அப்துல் கலாம் :
//குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது// குற்றம் செய்பவர்களுக்கு எதிராக சாட்சிகளை தயார் செய்ய வேண்டுவது புகார் அளிப்பவரது கடமையா? அல்லது காவல் துறையினரின் வேலையா விவரிக்கவும்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!