Wednesday, December 1, 2010

இதுதாண்டா போலிஸ்..!

சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ். பட்டதாரி. ஒரு தனியார் விடுதியில் பணியாற்றுகிறார்.

அன்று பணிமுடிந்து மிகவும் அசதியுடன் வீடு திரும்பியவர், இரவு உணவு முடித்துவிட்டு இலவச வண்ணத் தொலைக்காட்சியில் பொது அறிவை வளர்க்கும் ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் கதவருகில் இரு நபர்கள் நின்று அவருடைய தங்கையிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரென்று பார்ப்பதற்காக ரமேஷ் வெளியே சென்றார். அவர்கள் இருவரும் ரமேஷிடம் கேட்டனர்: நீதான் கணேசனின் அண்ணனா?”

ஆமாம்! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று சொல்ல வந்த ரமேஷ், "ஆமாம்!" என்பதை மட்டுமே சொல்ல முடிந்தது. அடுத்த கணத்தில் அவர் உடல் முழுவதும் மூங்கில் தடியால் தாக்கினர், அவ்விருவரும். 

வலி தாங்க முடியாத நிலையிலும், அவர்களிடம் எதற்காக தாக்குகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் நேரடியாக பதில் தராவிட்டாலும் அவர்கள் இருவரும் காவல்துறை துணை ஆய்வாளர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவ்விருவரும் மதுபோதையில் இருந்தனர். "எதற்காக இந்த தாக்குதல்? என்ன எதிர்பார்க்கிறார்கள்?" என்பது போன்ற எந்த தகவலும் தெரியாத நிலையில், நடக்கும் சம்பவத்தை பார்த்த ரமேஷின் தாயும், தங்கையும் அலறியவாறு ரமேஷின் மேல் விழுந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அவர்கள் மீதும் விழுந்த தடியடியில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அதற்குள் அக்கம் பக்கத்தவர்கள் அங்கே கூடிவிட்டாலும் யாருக்கும், நடக்கும் சம்பவத்தை தட்டிக்கேட்கும் தைரியம் வரவில்லை. இதற்குள் அவ்விருவரும் வைத்திருந்த மூங்கில் தடி முறிந்திருந்தது. தடியே முறிந்திருந்தால் ரமேஷின் உடலில் எவ்வளவு காயம் பட்டிருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

இதற்குள் ரமேஷின் தம்பி கணேசன் வீட்டிற்கு வந்தார். தம் அண்ணன் ரமேஷ் யாராலோ மிகக்கொடுரமாக வீட்டிலேயே தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ந்துபோய் ஓடி வந்து விசாரித்தார். ரமேஷை தாக்கியவர்கள் நீ யார் என்று கேட்டபோது, நான் ரமேஷின் தம்பி. என் பெயர் கணேசன்! என்று அவர் கூறினார்.

இதைக் கேட்ட அவ்விருவரிடமும் ஒரு கணம் அதிர்ச்சி ஏற்பட்டது. தாக்குதல் நிறுத்தப்பட்டது. நாம் தேடி வந்த கணேசன் இவன் இல்லை! என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் ரமேஷை வேறு உடை அணியச்சொல்லி ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த யாருக்கும் அந்த இருவரிடமும் எதுவும் கேட்கும் தைரியம் வரவில்லை. இதற்குள் ஆட்டோ கிளம்பிவிட்டது.

காவல் நிலையம்! ரமேஷ் எங்கு வேலை செய்கிறார் போன்ற விசாரணைகள் நடந்தன. பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் தவறுதலாய் தாக்கிவிட்டதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, அதற்கான கட்டணத்தை ரமேஷே செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டார். பிறகு சில அன்பான வார்த்தைகளுடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிகாலை நேரத்தில் வீடு திரும்பிய ரமேஷை அவர் வீட்டார் எதிர் கொண்டனர். வீடே மிகப்பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. தாயும், தங்கையும் அழுது கொண்டிருந்தனர். தம்பி குழப்பத்தில் அமர்ந்திருந்தார். உடல் வலி பொறுக்கமுடியாத ரமேஷ், தாயாரிடம் சுடுதண்ணீர் போடுமாறு கூறிவிட்டு அதில் குளித்தார். பின்னர் படுத்தனர். ஆனாலும் யாருக்கும் தூக்கம் வரவில்லை.

அடுத்தநாள் காலையில் ரமேஷ் ஒரு நண்பர் ஒருவரிடம் தமக்கு ஏற்பட்ட அவலத்தை பகிர்ந்து கொண்டார். ரமேஷூக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் சில நாட்கள் படுக்கையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டது.

இதற்கிடையில் ரமேஷ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமக்கு ஏற்பட்ட துர்சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்தப் புகார் முறைப்படி சம்பவம் நடந்த காவல்நிலையத்திற்கு வந்தது.
காவல்துறை உயர் அதிகார்கள் விசாரணைக்காக ரமேஷை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். ரமேஷ் அங்கு சென்றபோது தவறாக நடந்த ஒரு செயலை பெரிதுபடுத்த வேண்டாம்! என்று அவருக்கு அறிவுரை கூறப்பட்டது.

இதற்கிடையில் ரமேஷிற்கு நடைபெற்ற திருமண ஏற்பாடுகள், காவல்துறையில் ரமேஷ் சிக்கியதன் காரணமாக நின்று போயிற்று.

காவல்துறை அதிகாரிகளின் மெத்தனத்தை உணர்ந்த ரமேஷு்க்கு உதவ முன்வந்தார் மனித உரிமை அமைப்பை சேர்ந்த நண்பர் ஒருவர். அவரது வழிகாட்டுதலின்படி ரமேஷை காரணமின்றி தாக்கிய இரு துணை ஆய்வாளர்கள் மீதும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற மனு பதிவுத்தபால் மூலமாக உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, ரமேஷ் பணியாற்றிய நிறுவனத்தில் காவல்துறையின் தலையீடு காரணமாக அவர் சற்று அச்சுறுத்தப்பட்டார். உரிய சட்ட ஆலோசனைக்கு பின் அந்த பிரசினை தீர்க்கப்பட்டது.

எனினும் ரமேஷை தாக்கிய அந்த காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

எனவே ரமேஷ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரித்து தவறு செய்த காவல் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்றும், காரணமில்லாமல் தாக்கப்பட்டு உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்பட்ட இளைஞர் ரமேஷுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

---

இது யாரோ ஒரு ரமேஷுக்கு நடக்கும் அசாதாரண சம்பவம் அல்ல. 

தமிழ்நாட்டில் படிப்பறிவோ, சமூக அந்தஸ்தோ இல்லாத சாமானிய பொதுமக்கள் யாருக்கும் நிகழக்கூடிய சம்பவமே.

ஆனால், இதனால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களது விதியை நொந்தபடியோ, காவல்துறையை எதிர்த்து நிற்க பயந்தோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவே காவல்துறையின் அராஜகத்திற்கு மேலும் ஆதரவளிக்கிறது.

இதையெல்லாம் மீறி காவல்துறை மீது புகார் கொடு்த்தால் அந்தப் புகாரையும் காவல்துறைதான் விசாரிக்க வேண்டும். (மனித உரிமை ஆணையத்தில்கூட காவல்துறையின் மீதான புகாரை காவல்துறையினரே விசாரிக்கும் குரூர நகைச்சுவைதான் நடக்கிறது) அவ்வாறு காவல்துறை மீது புகார் கொடுக்கும் ஒரு நபரை, காவல்துறையினர் வேறு வழக்குகளில் சிக்கவைத்து சின்னாபின்னப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதையெல்லாம் மீறி இளைஞர் ரமேஷ் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளின் விளைவாக அவரைத் தாக்கிய துணை ஆய்வாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அரசுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ளது. ரமேஷுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன் மாதிரியாக ஏராளமான உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

திரைப்படங்களை பார்த்துவிட்டு, அதில் உள்ள மலிவான காட்சிகளையும், வசனங்களையும் ரசித்துவிட்டு என்கவுண்டர் படுகொலைகாரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் சூழலில் நாட்டில் உள்ள பெரும்பாலோர் இருக்கின்றனர். இந்நிலையிலும் இளைஞர் ரமேஷைப் போன்ற ஒரு சிலர் காவல்துறைக்கு எதிராக நியாயமான சட்டரீதியான செயற்பாடுகளை செய்ய துணிவதற்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். மக்கள் சட்டம் குழு, இளைஞர் ரமேஷுக்கு சட்டரீதியான ஆதரவு அளிப்பதோடு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


(இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது. வழக்கு முடிவடையும்போது புகைப்படங்களுடன் அனைத்து விவரங்களும் வெளியாகும்)

5 comments:

மக்கள் சட்டம் said...

வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், அந்நாடுகளில் காவல்துறையை கண்காணிக்கும் அமைப்புகள் (உ-ம்: Centre for Police Accountability; Police Watch) குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம். இணையச்சுட்டிகளையும் கொடுக்கலாம்.

அப்துல் ஹசீஸ், தோஹா said...

மிகவும் நல்ல பதிவு.

இவ்வாறு நடந்தால் என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதனையும் தயவு செய்து விளக்கவும்.

guna said...

மிகவும் நல்ல பதிவு.

இவ்வாறு நடந்தால் என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதனையும் தயவு செய்து விளக்கவும்.

சீ.பிரபாகரன் said...

காவல்துறையின் அடக்குமுறைக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக குரல் கொடுப்பது நாட்டுமக்களின் கடமை. இவருக்கு நேர்ந்த இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

மாசிலா said...

சமூக சேவை செய்யும் மக்கள் ச்ட்டம் குழுவினருக்கும் மற்றும் உங்களின் சட்ட ஆலோசனை, உதவியுடன் தன்னை தாக்கிய போலீசை எதிர்த்து துணிச்சலுடன் வழக்கு தொடர்ந்திருக்கும் ரமேஷுக்கும் எனது ஊக்குவிப்புகள் உரித்தாகுக.

நிற்க,

சமூக அந்தஸ்து இல்லாதவர் என்பதை வாசகர்கள் சுலபமாக் புரிந்துகொள்ள வேண்டி 'மீனவர்' என்ற அடைச் சொல் உபயோகித்ததை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். மீனவர் தொழில் செய்பவர் மட்டும்தான் மீனவர் ஆவர் என்பது என் கருத்து. இவர்தான் படித்து பட்டாதாரி ஆகிவிட்டாரே. இன்னும் எதற்கு அந்த மீனவர் பட்டம் கூடவே தொற்றிக் கொண்டு வரவேன்டும்?

நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!