Wednesday, December 1, 2010

காவல் நிலையத்தில் புகார் – குற்ற விசாரணையின் முதல் படி!

ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப்புள்ளியாகும். 



சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.

எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம்.

புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல்நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல படிநிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுகலாம். அதை பிறகு பார்ப்போம்)

குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ வேறுவகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது. தாக்குதல் நடந்திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்படவேண்டும்.

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.

தாக்குதல் போன்ற சம்பவங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியம். எனவே அவர்களை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம்.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.

இவ்வாறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரித்து தகுதியுடைய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நேர்வுகளில் நீதிமன்றம் இந்தமுறையை ஏற்றுக் கொள்கிறது.

***

புகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடைய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசாரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது.

ஆனால் நடைமுறையில் காவல்துறையில், காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நன்மை செய்யும் புகார்களைத் தவிர வேறு புகார்களை ஏற்க மறுக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.  குறிப்பாக தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் குறிப்பிட்ட குற்ற நிகழ்வு நடக்கவில்லை என்பது போன்ற புறக்கணிக்கத்தக்க காரணங்களைக் கூறி புகார்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் என்ன செய்வது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(வாசகர்களின் கருத்துகளும், கேள்விகளும், அனுபவப் பகிர்வுகளுமே இந்த தொடரின் நோக்கத்தை வெற்றியடையச் செய்யும். எனவே உங்கள் எதிர்வினை மூலமே நாங்கள் உங்களுக்கு அதிக அளவில் பயன்தரத்தக்க தகவல்களை வழங்க முடியும் மக்கள் சட்டம் குழு)

8 comments:

மக்கள் சட்டம் said...

தொலைபேசி மூலம் ஆலோசனை கேட்கும் நண்பர்களுக்கு,

தங்கள் சந்தேகங்களை பின்னூட்டமாகவோ, மின்னஞ்சலாகவோ அனுப்பினால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். ஏனெனில் தாங்கள் அழைக்கும் நேரத்தில் ஆசிரியர் குழுவினர் பதில் அளிக்க தயாராக இருப்பது கடினம். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

-ஆசிரியர் குழு.

தமிழ்மலர் said...

நல்ல முயற்சி...
மனமார்ந்த் பராட்டுக்கள்...

சீ.பிரபாகரன் said...

சட்டம் தொடர்பான தங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது. எங்களைப் போன்ற சமூகப்பணியாளர்களுக்கு தங்களின் பதிவுகள் உதவி செய்யும் என நம்புகிறேன்.

Sundararajan P said...

தங்கள் கருத்துக்கு நன்றி பிரபாகரன். தங்களைப் போன்ற சமூகப்பணியாளர்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம். ஆனால் எவ்வழியில் உதவ வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளும், கேள்விகளுமே மென்மேலும் மக்களுக்கு பயனுள்ள பதிவுகளை உருவாக்கத் தேவை.

manlkandan B.E said...

your work in my mail id always accepted your details your work this society useful for and many members continue my friends and my6support for your work will be continue love is god

Anitha Manohar said...

நன்மை தரும் பதிவு. நன்றி.

Manobet.89@gmail.com said...

போலீஸ் தனமனிதன் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றால் போலீஸ் அடித்தால் என்ன பண்ணலாம் எந்த ஒரு ஆதரமும் இல்லை என்றால் என்னபன்றது

Unknown said...

மிகவும் பயனுள்ள தகவல்...நன்றி

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!