(25-10-2010 முதல் 1-11-2010 வரை ஊழல் ஒழிப்பு வாரம்..!!??)
இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஊழல்களில் சுமாராக எவ்வளது தொகை புரளும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?
ஒரு ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் ஊழல்களில் கையாளப்படும் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டிவிட்டதாக ஒரு அண்மை புள்ளிவிவரம் கூறுகிறது!
எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் அல்ல. எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறவில்லை என்று கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கும்.
நாட்டின் முக முக்கியமான துறையாக கருதப்படும் ராணுவத்தில் பணியாற்றி போரில் மரணம் அடையும் வீரர்களை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டியைகூட சொந்தமாக செய்வதற்கு திறனின்றி, அதையும் வெளி நாடுகளில் வாங்கி அதிலும் ஊழல் செய்த நாடு பாரத நாடு! சவப்பெட்டி வாங்குவதில்கூட ஊழல் என்றால் ஆயுதங்கள் உள்ளிட்ட மற்றவற்றில் எவ்வளவு ஊழல் நடக்கும்?
தமிழ்நாடோ சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில்கூட ஊழல் செய்து அரசியல் பண்பாட்டை பாதுகாத்த நாடு. அதற்கு காரணமாக கூறப்பட்ட நபர், கட்சி மாறிவிட்டால் அவரது பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கி புனிதர் பட்டமும் தருவதற்கு தயங்காத அரசியல் சூழல்!
இந்தியாவில் ஒரு குடிமகன் பிறப்பது முதல் அவன் இறப்பது வரை லஞ்சத்தின் நிழல் படாமல் அவன் வாழவே முடியாது.
***
சத்யேந்திர குமார் துபே என்ற இளைஞருக்கு வயது 30. பிஹார் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்த துபே எம்.டெக். பட்டம் பெற்றவர். மத்திய அரசு நிறுவனமான இந்திய தேசிய நெடுங்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றினார்.
பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் அவர் பணியாற்றினார். பிஹாரில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்க நாற்கரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கான ஒப்பந்தம் புகழ்பெற்ற லார்சன் அன்ட் டோப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இதில் நடந்த ஊழல்களை சத்யேந்திர குமார் துபே, அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேய்-க்கு அனுப்பி வைத்தார். அந்தப் புகாரை சத்யேந்திர குமார் துபே பணியாற்றிய துறையின் உயர் அதிகாரிகளுக்கே அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். இதைத் தொடர்ந்து அவர் உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி சத்யேந்திர குமார் துபே சர்ச்சைக்குரிய வகையில் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. விசாரணை வளையத்துக்குள் இருந்த இருவர் மர்மமான முறையில் இறந்தனர். சுமார் 6 வருட விசாரணைக்குப் பிறகு சத்யேந்திர குமார் துபேவிடம் வழிப்பறி செய்யும் போது கொலை செய்ததாக 4 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.
***
உலக அரசியலின் நாடி- நரம்புகளாக லஞ்சமும், ஊழலுமே ஓடிக் கொண்டிருக்கின்றன. எனினும் ஊழலுக்கு எதிராகவே சாமானிய மக்களின் மனநிலை இருக்கிறது. இதில் சற்றுத் துணிச்சல் மிகுந்தவர்கள் இந்த ஊழலுக்கு எதிரான குரல்களை எழுப்புகின்றனர், சத்யேந்திர குமார் துபேவைப் போல! சத்யேந்திர குமார் துபேக்கள் அரசுப் பணிகளில் மட்டும் இருப்பதில்லை! பத்திரிகையுலகில், சமூக ஆர்வலர்களில், வழக்கறிஞர்களில், ஏனைய துறைகளில் எத்தனையோ சத்யேந்திர குமார் துபேக்கள் இருக்கின்றனர்.
பல நாடுகளில் ஊழலுக்கு எதிரான அமைப்புகள் மிகுந்த வலிமையோடும், நேர்மையோடும் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையிலும் ஊழலுக்கு எதிரான விருப்ப உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஊழலில் ஈடுபடுவர்களை தண்டிக்கவும், அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யவும் ஐ.நா.வின் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை இந்தியா கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு கையெட்டுள்ள போதிலும், இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை நிறைவேற்ற இதுவரை முன்வரவில்லை.
ஆனாலும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் முன்னிலை வகிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான நிலையே! குறிப்பாக சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களின் வலியுறுத்தலுக்கும், ஐக்கிய நாடுகள் அவையின் அழுத்தத்திற்கு இணங்கியும் ஊழல் குறித்து தகவல் கொடுப்பவர்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்த சட்டத்திற்கு, “பொதுநலனுக்காக அம்பலப்படுத்தல் மற்றும் அம்பலப்படுத்துபவரை பாதுகாப்பதற்கான சட்டம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் விசில் புளோயர்ஸ் ஆக்ட் என்று சொல்கின்றனர்.
இந்த சட்டத்திற்கான முன் வடிவம் பொதுமக்களின் கருத்துகளுக்காக அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த சட்டம் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு படைகள், சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகள், தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்கு பொருந்தாது. அதாவது இந்த துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.
இந்தச் சட்டத்தின்படி ஊழல் குறித்த புகார்களை விசாரிக்கும் பொறுப்பு மத்திய கண்காணிப்பு ஆணையரிடமோ அல்லது இந்தப்பணிக்காக மத்திய அரசு நியமிக்கும் அதிகாரியிடமோ இருக்கும்.
அரசுத்துறைகளில், அல்லது அரசுடைமையான நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அவற்றின் பணியாளர்கள் புகார் செய்ய விரும்பினால் இந்த சட்டத்தின்படி மேற்கண்ட அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களும் அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. அதை மீறி புகார் அளிப்பவர் குறித்த ரகசியங்கள் வெளியானால் அதற்கு காரணமானவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் மீதான விசாரணை நடைபெறத்தேவையான கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி, புகார்தாரரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்வார். மேல் அதிகாரிகள் மீது புகார் கொடு்த்ததற்காக, புகார் கொடுத்தவர்மீது அவரது துறை சார்ந்த அதிகாரிகள் அலுவல்ரீதியான தொல்லைகளையோ, தண்டனையோ வழங்கக்கூடாது என்று இந்த சட்ட முன் வடிவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் புகார் உண்மையிலேயே பொதுநலன் கருதி அளிக்கப்பட்டுள்ளதா அல்லது தனிப்பட்ட விரோதம் அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரணை அதிகாரி விசாரித்து முடிவு எடுத்தபின்னரே புகார் மீதான விசாரணை நடைபெறும். குறிப்பிட்ட ஒரு புகார் உரிய ஆதாரம் இன்றி தவறாகவோ, சித்தரிக்கப்பட்டதாகவோ இருந்தால் அந்தப் புகாரை அளித்தவருக்கு இரண்டு ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
புகார் விசாரணைக்கு ஏற்கப்பட்டாலும்கூட சில குறிப்பிட்ட சூழல்களில் புகார் அளித்தவரின் விவரத்தை வெளியிடுவது அவசியம் என தலைமை கண்காணிப்பு ஆணையரோ அல்லது அரசால் இதற்காக நியமிக்கப்படு்ம் அலுவலரோ கருதினால் புகார் தாரரின் விவரம் வெளியிடப்படலாம். அப்போது புகார்தாரரின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது புரியவில்லை.
***
இந்தியாவில் நடைபெறும் ஊழல்களின் நடைமுறை குறித்தோ, அதை தவிர்க்கும் முறை குறித்தோ எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஊழல்கள் குறித்த புகார்களை விசாரிப்பது குறித்தும், புகார் அளிப்பவரை பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கும் இந்த சட்டமுன் வடிவும் ஒரு கண்துடைப்பு அம்சமாகவே தோன்றுகிறது.
ஏனெனில் ஊழல் குறித்த செய்திகளை வெளிக்கொணர்வதில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பங்கேற்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்பது முதல் பலவகையான செயல்பாடுகள் ஊழலை கண்டுபிடிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் கையாளப்படுகின்றன. இவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த இந்த சட்டத்தில் ஏதுமில்லை.
நடைமுறையில் அரசியல்வாதிகள்மீது ஊழல்புகார்கள் ஏராளமாக கூறப்பட்டாலும்கூட, ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் குறிப்பிடத்தக்க அளவில் யாருமில்லை. ஊழல் குறித்து விசாரிக்க வேண்டிய சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளும், மத்திய கண்காணிப்பு ஆணையம் போன்ற அதிகார மையங்களும் ஆளுங்கட்சிக்கு இடுக்கண் ஏற்படாவண்ணம் நடந்து கொள்வதையே நடைமுறையாக வைத்திருக்கின்றன. நீதிமன்றங்களும்கூட சாமானிய மனிதர்களுக்கு கண்டிப்பான அணுகுமுறைகளையும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வேறுமாதிரியான அணுகுமுறைகளையும் கையாள்கின்றன.
இந்த நிலையில் ஊழலை ஒழிப்பதற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்துவதும், ஊழல் குறித்த விசாரணைகளை நியாயமாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை வழங்குவதுமே மிக அவசியமான நடவடிக்கைகளாகும். இதை சரியாக செய்தாலே ஊழல் குறித்த தகவல் தெரிவிப்பவருக்கு தேவையான பாதுகாப்பு தானாகவே கிடைத்துவிடும்.
ஆனால் இதைச் செய்ய மனமில்லாமல், “பொதுநலனுக்காக அம்பலப்படுத்தல் மற்றும் அம்பலப்படுத்துபவரை பாதுகாப்பதற்கான சட்டம்” போன்ற கண்துடைப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை.
உண்மையில் அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற மக்களை ஏமாற்றும் அணுகுமுறைகளே, சாமானிய மக்களை தீவிரவாதத்தின் பாதையில் செலுத்தும் மிகவும் ஆபத்தான பணியை செய்கின்றன.
-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)
3 comments:
நலல் கட்டுரை.
பொது மக்களின் சொத்தான திறைசேரியை திருடர்கள் திருடாது பாதுகாக்க வேண்டியவர்கள்தாம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்
நல்லையா தயாபரன்
1950mundera 1966nagarwalla 67darmateja 72mujipers property74 meivalihsali teanbooooobers exe exe nowragulvinci arrested fbi in basten airfort 1,60,000doolers with colompiyu mappiya veronikacardelhi
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!