Tuesday, October 12, 2010

கல்வி உரிமைச் சட்டம் – உண்மையில் கல்விக் கண்ணை திறக்குமா?

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் சுமார் 18 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து சுதந்திரப் பொன்விழாவை கொண்டாடிய 1997ம் ஆண்டில் 50 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். அதாவது இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்திய மக்கள் தொகையில் சரிபாதியினருக்கு தொடக்கக் கல்விகூட கிடைக்காத நிலையில்தான் இந்தியா இருந்தது.  இந்த புள்ளிவிவரங்கள் கூறும் கல்வி அறிவு என்பது பல்கலைக்கழக பட்டம் போன்ற உயர்கல்வி அல்ல. பத்து வருட பள்ளிக்கல்வி நிறைவு பெற்றவர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65.38 சதவீத இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர். ஆண்களில் 75.85 சதவீதத்தினரும், பெண்களில் 54.16 சதவீதத்தினரும் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர். இந்த நிலையிலும் கடந்த 2009 ம் ஆண்டில், இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையான 8 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்று அரசின் புள்ளி விவரங்களே மதிப்பிட்டிருக்கிறது.

கல்வி உரிமைச் சட்டம் 2009

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்கான  கல்வி உரிமைச் சட்டம் 2009இந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டம் உண்மையிலேயே மக்களுக்கு பயன் அளிக்குமா? அல்லது வழக்கம் போல, மக்களிடம் கனவுகளை விதைத்து அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அறுவடை செய்யும் மலிவான யுக்திதானா? என்பதை பார்க்கும் முன் இந்த சட்டம் குறித்த வேறு சில அம்சங்களை பார்ப்போம்.

இந்த சட்டத்திற்கான முயற்சிகளில் பல்வேறு தரப்பினரும் இந்தியா சுதந்திரம் பெற்றதுமுதல் 60 ஆண்டுகாலமாக ஈடுபட்டிருந்தனர். அரசுத்தரப்பில் கடந்த 2002ம் ஆண்டு அலுவல்ரீதியான பணிகள் தொடங்கின.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 3 திருத்தங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, பல தரப்பினரிடமும் ஆலோசனைகளும், மக்கள் கருத்தறியும் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கல்வி உரிமைக்கான சட்டம் 2005ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது மொத்தம் 250 உறுப்பினர்களில் 54 பேர்தான் அவையில் இருந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு, தங்களை தேர்ந்தெடுத்த மக்கள் மீது அந்தளவுக்கு அக்கறை! எந்த விவாதமும் இன்றிக் குரல் வாக்கு (voice vote) மூலம் கல்வி உரிமைச் சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவசக்கல்வியை கட்டாயமாக வழங்குவது மத்திய மாநில அரசுகளின் கடமையாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும். தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இலவச கட்டாய ஆரம்ப கல்வி என்பதை இந்த சட்டம் கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறது:  

6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள்.

ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும். 

இந்த திட்டத்திற்கு சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மற்ற கட்டமைப்புகளுக்கான மதிப்பீடுகள் குறித்து செய்திகள் இல்லை. 

இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 

இந்தியாவில் இருக்கும், இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் எளிய, சாமானிய மக்களை மட்டுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அதிகாரத்தில் இருப்பவர்கள், வசதி மிக்கவர்களை இந்த சட்டம் எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறது என்பது அன்றாட செய்திகளிலேயே பதிவு செய்யப்படுகிறது. 

இதற்கு உதாரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை கூறலாம். நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் இயற்றும் சட்டங்களை அரசுத்துறைகளே போட்டிபோட்டு மீறுவது அன்றாட நடவடிக்கையே. இது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படும்போது நீதிமன்றமும், வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் சூழல் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் விடுகிறது. இதுபோன்ற பிரசினைகளில், சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய அரசு சட்டத்தை மீறினால் அதனால் பாதிக்கப்படுபவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கேள்விக்கு இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள்கூட பதில் அளிக்க முடியாது. 

இந்த நிலையில்தான் இந்திய அரசு குடிமக்களின் தொடக்கக்கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 

கனவுகள் நனவாகுமா?

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கனவுகள் நனவாகுமா என்பது கேள்விக்குறியே! ஏனெனில் கல்வி என்பது பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர் சாரந்த விவகாரம் மட்டும் அல்ல என்றும், ஒட்டுமொத்த சமூகச்சூழலுமே அந்த சமூகத்தின் கல்வி நிலையை தீர்மானிக்கும். 

இவற்றில் முதன்மையானது கல்வி பயில வேண்டிய குழந்தைகளின் குடும்பச்சூழலே அந்த குழந்தையின் கல்வியை தீர்மானிக்கும் பிரதான அம்சமாகும். உயர் மட்ட குடும்பங்களும், மேல் நடுத்தர குடும்பங்களுக்கும் கல்வி என்பது எந்த விலை கொடுத்தேனும் வாங்கப்படும் ஒரு அம்சமாக மாறிவிடுகிறது. இதில் பிரசினைகளை சந்திப்போர் கீழ் நடுத்தர குடும்பங்களும், வறுமையில் வாழ்வோரும்தான். இவர்களது குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத்தான் கல்வி என்பது எட்டாக்கனவாகிறது. 

இந்தியாவில் தொடக்கக்கல்வியில் சேரும் குழந்தைகளில் சுமார் 35 சதவீதம் பேர் தொடக்கக்கல்வியை பாதியிலேயே நிறுத்திவிடுவதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் வறுமையில் வாழ்வோர் மற்றும் கீழ்நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். 

இந்தப் பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்வியை தீர்மானிப்பதில் அக்குழந்தைகளின் பெற்றோர்களின் தொழில், கல்விநிலை, உடல்நலம், மதுப்பழக்கம், போக்குவரத்து வசதிகள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற எண்ணற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன. 

இந்திய அரசு இன்று நடைமுறைப்படுத்தி வரும் சமூக, பொருளாதார கொள்கைகளோ வறுமையில் வாழும் குடும்பங்களையும், கீழ் நடுத்தர வர்க்க மக்களையுமே குறிவைத்து தாக்கும் வகையில் உள்ளன. இம்மக்களின் வேலைவாய்ப்பை பறித்து, அவர்களின் இருப்பிடங்களை பறித்து, உடல்நலத்தையும் பொருளாதார வளத்தையும் சூறையாடி, மதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமையாக்கி அவர்களை சின்னாபின்னப்படுத்துவதில் அரசின் கொள்கை முடிவுகளே முக்கிய இடம் வகிக்கின்றன. 

இயற்கை விவசாயத்தை முடக்கி வணிகமயப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் விவசாயத்தை ஊக்குவித்தல், சிறு தொழில்களை திட்டமிட்டு நசுக்கி பெருந்தொழில்களின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்தல், கிராமங்களையும் வனப்பகுதிகளையும் திட்டமிட்டு அழித்து நகரமயமாக்குதல் போன்றவற்றையே நவீன பொருளாதாரக் கொள்கையாக மத்திய, மாநில அரசுகள் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் நகரங்களை அலங்கரித்தல் என்ற பெயரில் குடிசைப்பகுதிகளை அப்புறப்படுத்தல்: அங்கு வாழ்வோரை நகரிலிருந்து வெகு தொலைவிற்கு துரத்துதல் போன்றவை அம்மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக் குறியாக்குகின்றன.

இது போன்ற அனைத்து சமூக அவலங்களுக்கும் முதல் பலியாவது அச்சமூக சிறுவர்களின் கல்விதான். 

இதை உணராமல், உணர்ந்தாலும் அதை ஏற்காமல் கல்வி உரிமைச் சட்டம் 2009போன்ற நடைமுறைக்கு உதவாத, கவர்ச்சித் திட்டங்களை சட்டமாக அறிவித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது. 

இந்த நிலையில் சிறுவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதே, தொடக்க கல்வியை பரவலாக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக இருக்கமுடியும். அதை செய்ய விரும்பாத அரசு, தேர்தல் வாக்குறுதி போன்ற, நடைமுறைப்படுத்த சாத்தியமற்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி மக்களை ஏமாற்ற முனைகிறது. 

இது அரசு மற்றும் பாதிக்கப்படும் மக்களின் பிரசினை என்று மற்றவர்கள் சும்மா இருந்துவிட முடியாது. உரிய கல்விக்கு வழியற்ற இளைஞர்களே, வேலைவாய்ப்பிற்கும் லாயக்கற்று சமூகவிரோதிகளிடம் சிக்குகின்றனர். அனைத்து சட்டவிரோத செயல்பாடுகளிலும் இந்த இளைஞர்களே முக்கிய பங்கு வகுக்கின்றனர். இந்த போக்கு அதிகரித்துவரும் நிலையில் சமூகத்தில் பாதுகாப்பு என்பது எட்டாக்கனியாகிவிடும். எனவே சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கான ஒரு பிரசினை அந்த பிரிவை மட்டுமே பாதிக்கப்போவதில்லை. முழு சமூகத்தையுமே இந்த பிரசினை பாதிக்கும் என்பதை சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும் சிந்திக்க வேண்டும். 

தீர்வுதான் என்ன?

இதுபோன்ற கண்துடைப்பு சட்டங்களை நிறைவேற்றி மக்களை ஏமாற்றுவதைவிட இந்திய அரசியல் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அரசு நடைமுறைப்படுத்தினாலே கல்வி மட்டுமல்ல மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் மக்கள் தாமாகவே பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். 

இதை வலியுறுத்தும் அரசியல் செயல்பாடுகளே காலம் நமக்கு இடும் கட்டளையாகும்!

-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)

4 comments:

Chandran said...

இந்திய அரசியல் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.... இதை நாங்கள் எங்க போய் அறிவது... அந்த புத்தகத்தை (அரசியல் சட்ட நகல்) தொட வேண்டாம்னு நெனைச்சா விட மாட்டீங்க போலிருக்கே! - சந்திரன்

மக்கள் சட்டம் said...

இந்தியர்கள் அனைவரும் பள்ளிக்கல்வியிலேயே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பகுதிகளை படித்துவிடுகிறோம். ஆனால் நமக்குத் தேவையான பகுதிகளை படிக்கத்தவறிவிடுகிறோம்.

அரசு இயந்திரம் செய்ய வேண்டிய கடமைகளே நமது உரிமைகளாகும். அரசு இயந்திரம் அதன் கடமையை சரியாக செய்கிறதா என்பதை கண்காணிப்பது நமது கடமை. அதாவது நமது கடமையை சரியாகச் செய்தால், உரிமைகள் தானாகவே வரும்.

எனவே நண்பர் சந்திரன் போன்ற எழுத்தாளர் - பத்திரிகையாளர்கள் அரசியல் சட்டத்தை அவ்வப்போது படிப்பதோடு அதை தங்கள் எழுத்துகளிலும் பதிவு செய்தால் வாசகர்களையும் அந்த அம்சங்கள் சென்றடையும்.

sakthi said...

வணக்கம் சார் ,
சட்டங்கள் வெறும் எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது .இன்றைய நடை முறைக்கு தக்க சட்டங்கள் மாற்றப்படவேண்டிஉள்ளது .கோவிந்தராஜன் ஐயா -வின் பள்ளி கட்டண அறிவிப்பு என்ன ஆயிற்று தடை ஆணை பெற்றாகிவிட்டது அல்லவா.எல்லா சட்டங்களுக்கும் ஓட்டைகள் அதிகம் .சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் .
அன்புடன் ,
கோவை சக்தி .
http://kovaisakthi.blogspot.com/
படித்து கருத்துகள் கூறவும் .

நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் said...

வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!